1. கொங்குநாடும் பண்டைச் சைவமும்
கொங்குநாடு வழியாக வட இந்திய
சமயங்கள் சமணமும், சைவமும் சங்க காலத்தில் பரவின என்பதற்குத் தொல்லியல் ஆதாரங்கள்
கிடைத்துவருகின்றன. சங்க இலக்கியம் காட்டும் சேர நாட்டுத் தலைநகர் வஞ்சி என்பது
கரூர் என தொல்லியல் ஆய்வுகள் நிரூபித்துவிட்டன. இந்தியாவின் பழமையான இசைக்
கல்வெட்டு அறச்சலூரில் உள்ளது. அதைக்கண்டவர் புலவர் செ. இராசு ஆவார். அவர்
கொடுமணம் என்று அகநானூறு காட்டும் இடம் கொடுமணல் என அங்கே ஆய்வுகளைத் தொடக்கி, பேரா.
கா. ராஜன் தொடர்ந்தார். சேலம் மாவட்ட மாங்காட்டில் கிடைத்துள்ள மிகப்பழைய எஃகு
வாள் [Ref. 1, 2] தென்னிந்தியாவின் இரும்புக்காலத்தைக் கணிக்க உதவுகிறது. எஃகு
உளிகொண்டு செதுக்கிய மோட்டூர், உடையார்நத்தம் போன்ற இடங்களில் உள்ள ’மழுவாள் நெடியோன்’
(= Anthropomorphic Axe), அதன் சிந்து நாகரிகத் தொடர்பு பற்றி விரிவாகச் சொல்லியுள்ளேன் [Ref. 3].
ஐராவதம் மகாதேவன் தொல்காப்பியரின் முக்கியக் கோட்பாடான புள்ளி தமிழ் பிராமியில்
தோன்றும் காலத்தைக் கி.பி. 2-ம் நூற்றாண்டு என நிறுவி, தொல்காப்பியர் பழைய இலக்கணிகளின்
கருத்துக்களை உள்வாங்கி, வரிவடிவத்தைப் புள்ளியுடன் நிறுவினார் என்பதால் அவர்
காலம் இது என்றார் [Ref. 4, 5]. தமிழில் புள்ளி தோன்றும் காலம் கி.பி. 2-ம்
நூற்றாண்டு என்னும் கருத்தை அரண் செய்வதாக, ஐந்து புள்ளிகளுடன் – ஏகாரத்தின் உள்ளே
புள்ளி – மதுரை கிண்ணிமங்கலம் லிங்கத்தில் தமிழ்பிராமி எழுத்து
கண்டறியப்பட்டுள்ளது [Ref. 6,7]. பனம்பாரனார் தொல்காப்பியப் பாயிரம் அளித்தவர். அவர்
தொல்காப்பியர் கண்டுபிடிப்பாகிய புள்ளியை விதந்தோதுகிறார்: ‘மயங்கா மரபின் எழுத்து
முறை காட்டித் தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி”. கிண்ணிமங்கல முகலிங்கத்தில்
உள்ள “எகன்” என்னும் முதற்சொல், தலைவன் பெயர் எஃகன் என்பதின் சுருக்கம் ஆகலாம்,
ஏனெனில் அக்காலத்தில் ஆய்த எழுத்தை எழுதும் முறை உருப்பெறவில்லை. இக்ஷ்வாகு மன்னர்
பெயர்களிலும் எகு/எஹு (= எஃகம்) உண்டு. யமுனா நதிதீர வட மதுரையில் முகலிங்கம்
சிவப்பு நிறக்கல்லால் செதுக்கப்படுவது போலவே, கிண்ணிமங்கலத்திலும் ’செம்பவள
மேனியன்’ சிவபிரானுக்கு செம்மை நிறம்வாய்ந்த கல்லால் இலிங்கம் செதுக்கியமை
சிறப்பு. சங்ககால ஆரம்பத்திலே வருணன் குடிமல்லம் லிங்கமாக நிற்கிறான். சங்ககால
முடிவிலே, பாசுபத சைவத்தின் குறியீடாக கிண்ணிமங்கலப் பள்ளிப்படை இலிங்கம்
அமைந்துள்ளது.
கிண்ணிமட லிங்கத்தில் உள்ள எகன்,
ஆதன், கோட்டம் மூன்றுமே சிறப்பான சொற்கள். கோட்டம் = கோயில், இங்கே பள்ளிப்படை.
சேரர்களின் தலைநாடாகிய கொங்குநாட்டுக்குச் சங்க காலத்தில் கிண்ணிமங்கலம் மிகு தொடர்பு
உடையது. கொங்கர் புளியங்குளம் (சங்ககாலக் கல்வெட்டு) கிண்ணிமடத்தின் மிக அருகே இருக்கிறது.
சேரர் தலைநகர் வஞ்சி (இன்றைய கரூர்) நேர் வடக்கே உள்ளது. உதியன் சேரலாதன், நெடுஞ் சேரலாதன்,
செல்வக்கடுங்கோ வாழியாதன் என்ற சேர அரசர்களும், அவர்களோடு தொடர்புடைய சிற்றரசர், வேளிருக்கும்
ஆதன் என்ற பெயர் உண்டு. உ-ம்: சேரர் குலச்சின்னம் ஆகிய கொல்லிமலை (பாண்டியர்க்குப்
பொதியில் போல). பொதியில், பொதினி இரண்டிலும் ஆய் வேளிர். கொல்லித் தலைவன் வல்வில் ஓரியின்
தந்தை ஆதன். ஓய்மான் அரசர்க்குச் சேரருடன் தொடர்புண்டு: நல்லி ஆதன், வில்லி ஆதன். அதியமான்
வமிசத்து ஆதன் எழினி செல்லூர் என்னும் கேரளப் பட்டினத்தை ஆண்டான். அதேபோல, நெடுவேள்
ஆதன் போந்தைப் பட்டினத்தை ஆண்டான். போந்தை = பனை, சேரர் குலச்சின்னம் ஆதலால் போந்தைப்
பட்டினம் முசிறி, தொண்டி, பந்தர் போன்ற ஏதாவதோர் சேரர் பட்டினம் ஆகலாம். அதியர்கள்
சேரர் வமிசம் எனப் 12-ம் நூற்றாண்டு வரை கற்பொறித்தனர். அழகர்மலை , கொங்கர் புளியங்குளம்
, மேட்டுப்பட்டி, புகழூர், எடக்கல் கல்வெட்டுகளில் ஆதன் என்பதற்குப் பதிலாக அதன் என்ற
பெயர் வருகிறது. ஒருவேளை அது ஆதனாக இருக்கலாம். தை என்றால் தந்தை, இறை எனப் பொருள்.
12 மாதங்களில் மகர மாதம் ஒன்றனுக்கே தை எனத் தமிழ்ப் பெயர் நிலைத்தது. தை - தையல் தம்பதி.
கண்ணன்+தை = கண்ணந்தை, சாத்தன்+தை = சாத்தந்தை, கொற்றன்+தை = கொற்றந்தை, பூதன்+தை
= பூத்தந்தை (பூச்சந்தை என்பர் இப்போது), கீரன்+தை = கீரந்தை, ஆதன்+தை = ஆந்தை என்ற
குலப் பேர்களை இன்றும் லட்சக்கணக்கான குடும்பங்களில் கொங்குநாட்டில் கேட்கலாம். கண்ணந்தை
எனும் பேர் பானையோட்டில் -ணந்தை என்று மட்டும் அரபுநாட்டில்
தமிழ்க் கல்வெட்டாய்க் கிடைப்பது அறிவீர்கள். ராவண காவியம் பாடின புலவர் அ.மு.குழந்தை,
இணையப் பல்கலை நிறுவுநர் பேரா. வா.செ. குழந்தைசாமி போன்றோர் ஆந்தை குலத்தாரே. ஆதன்,
ஆந்தை என்பது பிராகிருத மரபில் முறையே அதன், அந்தை என முதல்நெடில் குறுகிப் பல சங்ககாலத்
தமிழ்க் கல்வெட்டுக்களில் வருகிறது. கிண்ணிமங்கலத்தின் பழம்பெயர் கிள்ளிமங்கலம் என்று
சொல்லின்செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை ‘ஊரும்பேரும்’ நூலில் விளக்கியுள்ளார். கிள்ளிமங்கலம்
(கிண்ணிமங்கலம்) கிழார் மகன் சேர கோவனார் பாடிய பாடல் நற்றிணையிலே இருக்கிறது. இங்கே
இப்போது கிடைத்துள்ள முகலிங்கம் அவரது உறவினர் ஒருவருக்கு எடுக்கப்பட்டது போலும். புறநானூற்றுப்
பாடல் 249 தும்பி சேரகீரனார் பாடியது. அப்பாடலில் தான் தலைவனை இழந்த தலைவி குங்குமம்
இழந்து, வரிநீறு ஒன்றையே தரிக்கும் 16-ம் நாள் ஈமச்சீர் பாடப்பட்டுள்ளது பாசுபத காபாலிகம்
கொங்கில் பரவியதைப் பாடும் பாடல் ஆகும். திரிபுண்டரம் அழகாக, தும்பி சேர கீரனாரால்
’வரிநீறு’ எனப்படுகிறது. தும்பி சேர கீரனார் பாடல், புறநானூறு 249, உரையுடன் படித்தருளுக:
http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/purananuru/purananuru249.html#.Xw2ulOdOnIW
ஈரோடு, பச்சோடு (பாப்பினி), பெரியோடு, சித்தோடு, வெள்ளோடு, ... போல ராசிகணத்தார் பரப்பிய
பாசுபத சைவம் பழனி-திண்டுக்கல் அருகே எரியோடு வந்து, கிண்ணிமங்கலம் சேர்ந்த வரலாற்றை
விளக்கும் ஆவணமாக, இப்போது கி.பி. 2-ம் நூற்றாண்டின் முகலிங்கம் “எகன் ஆதன் கோட்டம்”
என்ற எழுத்துடன் கிடைப்பது அருமை.
2. சென்னிமலையில் தோன்றிய கந்தசஷ்டிக் கவசம்
சங்க இலக்கியத்திலே சென்னிக்கோடு என்பது இன்றைய சென்னிமலை என்பார்
முனைவர் கொடுமுடி சண்முகம். சென்னிமலை அருகே கொடுமணலில் தான் தமிழின் முதல் எழுத்தாக
பிராமி கி.மு. நான்காம் நூற்றாண்டில் பெரிய பானைகளில் பெயர் எழுதிக் இடைக்கின்றன. இன்றும்
கொங்கு தொழிலில் சிறப்பதுபோல, தொழில்நகரமாக விளங்கியது. வெளிறு என்னும் Beryl (by
metathesis from வெளிறு) போன்றவை படியூரில் கிடைக்கின்றன. வேளூர் (உ-ம்: கொல்லி வேளுக்குறிச்சி)
கிடைக்கும் மணிக்கு வைடூர்யம் என ஸம்ஸ்கிருதத்தில் பெயர் அமைந்தது இங்கே. இங்கெல்லாம்
வந்த சமணம், சைவம் மதுரை நாட்டுக்குச் சென்றிருக்கிறது. சென்ற வாரம் பாசுபத மடமாகிய
கிண்ணிமங்கலத்தில் எழுத்துடை இலிங்கம் கிடைத்துள்ளது. திருப்புகழில் பல பாடல்கள் கொங்குநாட்டு
மலைகளில் உள்ள முருகன் கோவில்களின் மீது பாடப்பெற்றன. சைவசித்தாந்தத்தை முருக வழிபாட்டுடன்
குழைத்துச் சொல்பவை.
திருப்புகழ் தோன்றி இரண்டு நூற்றாண்டு சென்றபின் மந்திர உச்சாடனமாக,
சென்னிமலையிலே கந்தசஷ்டிக் கவசம் பிறந்தது. “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப” - செய்யுளியல், தொல்காப்பியம்.
மந்திராட்சரங்கள் அடங்கிய கந்தசஷ்டிக் கவசத்தைக் குருமுகமாக அறிதல் அவசியம். இப்பாடலில்
வடமொழிச் சொற்கள் அனேகம். சிவாச்சார்யர்கள் வாழ்வினில் இருமொழிகளும் சம அளவில் இடம்பெறுபவை.
மந்திரரூபப் பாக்களில் வடமொழி கலந்தே இருக்கும் என்பது ஒருதலை. அதே நூற்றாண்டில், அம்பாள்
துதிநூலாக, அபிராமி அந்தாதியை திருக்கடவூர் சுப்பிரமணிய பட்டர் என்னும் சிவாச்சாரியர்
பாடியருளினார். அபிராமி அந்தாதி லலிதா சகசிரநாமத்தையும், தென்காசிப் பாண்டியர் குலசேகரர்
செய்த மதுராபுரி அம்பிகை மாலையை முதல்நூலாகவும் வைத்துப் பாடினது. சுந்தரமூர்த்தி நாயனார்,
நம்பியாண்டார்நம்பி, உமாபதி சிவம், 20-ம் நூற்றாண்டில் கௌதம நீலாம்பரன் (வரலாற்றுக்கதைகள்),
… சிரகிரி (சென்னிமலை) தேவராய சுவாமிகளின் குலத்தார். முப்பொழுதும் லிங்கத் திருமேனி
தீண்டும் உரிமை பெற்றார் இவர்கள் (திருமந்திரம், திருத்தொண்டத்தொகை). தாம் வழிபடும்
சிரகிரி முருகனைக் கவசத்தில் முருகனைக் குறிப்பிடும் தேவராயர் வேறு சில முருகதலங்களைக்
கடைசியில் ஒன்றாகக் கூறுகிறார். வீரசைவ மடங்களில் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளின்
மைத்துனர் சாந்தலிங்க சுவாமிகள் பேரூரில் திருமடம் தாபித்தார். அவரது சீடர் திருப்போரூர்ச்
சிதம்பர சாமிகள். கந்தசஷ்டிக் கவசத்தில் வெகுசில தலங்களே குறிப்பிடும் தேவராயர் போரூரைச்
சமராபுரி என்கிறார். எனவே, கவசத் துதிநூல் போரூர்ச் சிதம்பர சுவாமிகளின் காலத்தை ஒட்டியது
~கி.பி. 17-ம் நூற்றாண்டு எனக் காட்டும் சான்று.
தமிழ்நாட்டில் பெண்கள் பலருக்கும் மனப்பாடமாக விளங்கும் நூல்.
எந்திரம் வாயிலாக, தமிழிசைப் பாக்கள் பரவியபோது இராகமாலிகையாக சூலமங்கலம் சகோதரியர்
பாடி லட்சக்கணக்கான இல்லங்களில் பூஜாவேளையில் பாடும் துதிநூலாக கந்தசஷ்டிக் கவசம் நிலைபெற்றது.
இது ஆதிசைவ சிவாச்சார்யர் மரபில், கொங்குநாட்டுப் பார்ப்பதி (பாப்பினி மடவிளாகம்),
சென்னிமலை, சிவன்மலை போன்ற கோவில்களில் பூஜை செய்யும் அந்தணர்கள் மரபில் மார்க்கண்டேய
கோத்திரத்தில் உதித்து, இளம்பிராயத்திலேயே பாடும் வரம்பெற்ற தேவராய பண்டிதர் என்னும்
புலவரால் பாடப்பெற்றதாகும். காலம் 17-ம் நூற்றாண்டு. அபிதான சிந்தாமணி தேவராயர் தமிழ்ப்
பண்டிதராக விளங்கினார் என்கிறது. திருச்சி பிஷப் கல்லூரி தமிழ் வித்வான் அமிர்தம் சுந்தரநாத
பிள்ளையவர்கள் கந்தசஷ்டிக் கவசத்திற்கு 1926-ல் செய்த உரை ஒன்றுண்டு. அது ப்ராஜெக்ட்
மதுரை திட்டத்தில் வெள்ளுரையாகத் தர ஆவல். பாரதியார்க்குப் ‘பசுமைக்கவிஞன்’ நிரஞ்சன்
பாரதிபோல, தேவராய பண்டிதர்க்குப் பேரன் முறையிலே ராமபாரதி, லட்சுமண பாரதி என்பார்கள்
வாழ்ந்தனர். மடவிளாகம் இலக்குமண பாரதி (1767-1859) பெரும்புலவர். சிவமலைக் குறவஞ்சி,
சிவமலை மயில் விடுதூது இன்னும் பல பிரபந்தங்கள், தமிழிசைக் கீர்த்தனங்கள் பாடியவர்.
சிவமலை மயில் விடுதூது அழிபட்டமையினால், கோவைக் கவியரசு கு. நடேசகவுண்டர் பழனி தண்டாயுதபாணி
மீது ‘மயில் விடுதூது’ பாடினார்கள். தேவராய பண்டிதர் மரபு வழிவந்த சிவாச்சார்யர்கள்
நன்முறையில் பல கொங்குத்தலங்களில் இன்றும் இருக்கின்றனர். இதில் மூத்தவர் கூறும் கைபீதை
இப்பதிவின் கடைசியில் இணைத்துள்ளேன்.
கோயம்புத்தூரில் கவியரசு கு. நடேச கவுண்டர் தென்மொழி, வடமொழி
இரண்டிலும் பெரும்புலமை உடையவர். பல பிரபந்தங்கள், கீர்த்தனைகளை முருகபிரான் மீது இயற்றியவர்.
பேரூர் சாந்தலிங்கர் தமிழ்க் கல்லூரி முதல்வராக இருந்தவர்கள். பின்னாளில் அவரது மகன்
டாக்டர் கோ. ந. முத்துக்குமாரசுவாமி பேரூர்க் கல்லூரி முதல்வராக இருந்தார்.
கவியரசர்
நடேசனார் கந்தசஷ்டி கவசம் தந்த தேவராய சுவாமிகளைச் சிரகிரியன் (சென்னிமலையன்) எனக்
குறிப்பிடுகிறார்:
பாம்பன் சுவாமிகள்
துதி
பொதியமலை மேவு குறுமுனிவ னின்று
புதியமணம் வீசு முருகுபுனை தொண்டன்
யதிகள்புகழ் துங்க அருணகிரி சங்கம்
எறிகடல் மருங்கு சமரபுரி அன்பன்
துதிசெய வுகந்த சிரகிரியன் என்று
சொலுமுனிகள் ஒன்று திரளுருவின் வந்து
குதிகொள் கலைமங்கை மகிழ்புலமை விஞ்சு
குமரகுருதாச குருவை நினைவோமே.
கவியரசு கு. நடேச
கவுண்டர்
உரை: பொதிகை மலையில் வாழும் அகத்தியர், ஓதுந்தோறும் புதியமணம் வீசும் திருமுருகாற்றுப்படை அருளிய நக்கீரர், துறவிகள்
புகழும் தூய அருணகிரிநாத முனீந்திரர், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள், துதி செய்ய கந்தசஷ்டிக் கவசம் அருளிய சென்னிமலை
தேவராய பண்டிதர் ஆகிய ஐவரும் கூடி ஒரு வடிவம் கொண்டால் அனையவரும் நாமகள் போற்றும் புலமையுடயவருமான பாம்பன் ஸ்ரீமத் குமர
குருதாச சுவாமிகளைச் சிந்திப்போமாக. இப்பாடலிலும் சமராபுரி (போரூர்) சிதம்பரசுவாமிகளும்,
அடுத்து சென்னிமலைக் குருக்களும் வருவது காண்க.
200 ஆண்டுகளுக்கு முன் தேவராய சுவாமிகளின் பேரன் முறையிலே மடவளாகம்
இலக்குமண பாரதியார் வாழ்ந்தார். அவர் சிவாச்சாரியர்
குருக்கள். 15 - 20ஆம் நூற்றாண்டுவரை பாரதி அந்தணர் மரபில் இசை, கல்வி, கேள்வியில்
சிறந்தவர்களுக்குக் கிடைத்த பட்டம் ஆகும். லட்சுமண பாரதியின் இரண்டு நூல்கள் மடவளாகத் தலபுராணம், சிவமலை
முருகன் மயில் விடுதூது
அழிந்துபட்டன. ஆனால், அவர் பாடிய அழகான சிவமலைக்
குறவஞ்சி அச்சாகியுள்ளது. மடவளாகத்தில் பச்சோடநாதர் - பாற்பதி பச்சைநாயகி
சந்நிதியில் கிடைத்த தமிழிசைக் கருவூலம்தான் “பஞ்சமரபு” என்னும் நூல். அவர் விண்ணப்பிக்கும் வள்ளியம்மாள் கொங்குநாட்டில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு
வெள்ளையர்களால் சங்ககிரி துர்க்கத்தில் தூக்கிலிடப்பட்ட 'தீரன்' சின்னமலையின் குடும்பத்து
முன்னோர். பாட்டுடைத் தலைவி பழயகோட்டை வள்ளியம்மன் சின்னமலைக்குப் பெரிய தாயார். திப்பு
சுல்தானின் தோழனான தீரன் சின்னமலையின் காலம்: ஏப்ரல்
17, 1756 – ஜூலை 31, 1805. http://nganesan.blogspot.com/2009/07/chittukkavi.html
சிவராத்திரித் தேவையிதெனச் சீட்டுக்கவி:
திருமருவு பழநிமலை முருகேசர் அரவிந்த
செங்கமல பாத தியானம்
திரிகின்ற தண்டுமிண் டுகள்கொண்ட கவிமலை
செகுத்திடச் செய்வச் சிரம்
செய்யகார் காலமழை என்னவே மதுரித
செழுந்தமிழ் கொழிக்கும் மேகம்
தென்பரவு மங்கைபுர இலட்சுமண பாரதி
தெளிந்தெழுதி விட்ட நிருபம்,
தருவுலவு காரையூர் நல்லசே னாபதிச்
சர்க்கரைமன் றாடி ராசன்
தனதுமனை யாள்இனிய கற்பினில் அருந்ததி
சமானசற் குணபூ டணி
சந்ததி நிரம்பிவளர் சிவமலைப் பல்லவன்
தந்தசீ மந்த புத்ரி
தருமமிகு பயிறகுல வள்ளிநா யகியெனும்
தாய்மனம் மகிழ்ந்து காண்க,
அருள்பரவு சிவன்உமைக் குத்திருக் கல்யாணம்
ஆனசுப தினம்நா ளையே
ஆகையால் மாங்கலிய விரதபூ சனைசெய்ய
ஆரும்ஆ தரவ றிகிலேன்
ஐந்துவள் ளப்பச்சை அரிசிபா சிப்பயறு
அதற்குள்ள மேல்முஸ் திதி
ஆவின்நெய் வெல்லம் உழுந்துபால் தயிர்வெண்ணெய்
அரியதயிர் எண்ணு கறிகாய்
மருவுலவு சந்தனம் குங்குமம் புனுகுசவ்
வாதுபரி மளமும் உனது
மருமகட் கோர்புடவை பாக்குவெற் றிலைநல்ல
வாழையிலை இவையா வுமே
வாணருக் கார்அனுப் பினதெனக் கேட்பவர்
மனதுமென் மேலும் மெச்ச
மன்னர்புகழ் சர்க்கரைத் துரைராசி தந்ததென
வரவனுப் பிடவேண் டுமே!
~ மடவளாகம்
இலக்குமண பாரதி (1767 -1859)
முக்கியக்
குறிப்பு: வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன் அவர்கள் விகடன் பிரசுரமாக, “முத்தமிழ் முருகனின்
அற்புதத் தொண்டர்கள்“ என்ற நூலை எழுதியுள்ளார். அதில் உ.வே. சாமிநாதையரின் ஆசிரியர்
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் நண்பர்/மாணவர், பென்களூர் வணிகர் தேவராசபிள்ளை
வரலாற்றை, இந்தச் சிவாச்சாரியர் தேவராயசுவாமிகள் எனக் கருதி எழுதிவிட்டார். இருவரும்
வெவ்வேறானவர்கள். கந்தசஷ்டிக் கவசம் வல்லூர் தேவராசபிள்ளைக்கு இரண்டு நூற்றாண்டு காலத்தால்
முற்பட்டது.
நன்றி,
நா. கணேசன்
References:
(1)
Rajan,
K., Ramesh, R., and Park, J. S., 2017, Recent evidence of ultrahigh carbon
steel from Thelunganur, Tamil Nadu, Man and Environment, 152(2), 52–9.
(2)
J.-S.
PARK, K. Rajan, R. RAMESH, High-Carbon Steel and Ancient Sword-Making as
observed in a double-edged sword from an Iron Age Megalithic burial in Tamil
Nadu, India, Archaeometry 62, 1 (2020) 68–80.
(4)
I.
Mahadevan, Pulli in the Tamil Brahmi script, in M. Lockwood (ed.), Indological
Essays, Commemorative Volume II for Gift Siromoney, pp. 141-167, 1992, Madras
Christian College.
(5)
I.
Mahadevan, Early Tamil Epigraphy, 2003, Harvard Oriental Series v. 62.
(6)
Ekamukha
Linga with Tamil Brahmi inscription in Kiṇṇimaṅkalam Ekanathan Mutt
கந்தர் சஷ்டிக்கவச ஆசிரியர் தேவராயர் வரலாற்றுச்சுவடு