அமரர் கல்கியின் இலக்கியக்
கச்சேரிகளுக்குப் பக்க வாத்தியம் இசைக்க அவர் அருகிலேயே ஒருவர் அமர்ந்திருந்தார்.
பாட்டுக்கு ஏற்ப வாத்தியம் தட்டி, கச்சேரியை ரஞ்சகமாகச் செய்து கொண்டிருந்தார்.
வித்வான், ராகம், தானம், பல்லவியைச்சேர்த்துப் பின்னிக் கொண்டிருந்தார். அருகில்
இருந்த கலைஞர் அந்த ராகத்தின் வர்ணத்தை, உயிரை, அப்படியே பிரதிபலித்து, வித்வானின்
கச்சேரிக்கு ஜீவ களையை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.
'பேஷ்... பேஷ்..பேஷ்!'' கல்கியின்
ஊக்குவிக்கும் புகழ்ச்சி, பக்கவாத்தியக் கலைஞருக்கு மேலும் குதூகலம்...கச்சேரி
முழுமை பெறுகிறது. அது அமரர் கல்கி செய்த சரித்திரப் புகழ் பெற்ற கச்சேரி. அருகே
அமர்ந்து இசைத்த கலைஞர் திரு. மணியம். இன்று திரு மணியமும் அமரர் ஆகிவிட்டார்.
கலைஞர் மணியம், கல்கி பத்திரிகையில்
இருபது ஆண்டுகளுக்கு மேல் ஒருங்கிசைத்த சேவையில் தனது உள்ளத்தையும்,
மனோதர்மத்தையும் கைத்திறனையும் வாரி வழங்கி, அந்தப் பத்திரிகையைக் கண்கவர் ஓவியச்
சிறப்பிதழ்களாகச் செய்து கொண்டிருந்தார்,
பல்லவ, சோழர் காலக் கலை மாட்சியின்
காம்பீர்யத்தைக் கைப்பிடித்து மீண்டும் நம் மனதில் புத்தொளி பிறக்கச்
சித்திரித்துக் காண்பித்தார்.
பல்லக்கில் ராணிகள் புடைசூழ வந்து
பல்லவ மல்லர் பேசினார். சிவகாமி ஆடினாள். சிற்றுளி நாதம் இசைத்தது. சதங்கை
கொஞ்சியது. வாத்தியம் முழங்கினார்கள். வானவர்கள் மேகத்தின் ஊடே பவனி வந்தனர்.
சிவநேசச் செல்வர்கள் திருநீறு பூசிய முகத்துடன் தேவாரம் இசைத்தனர். யாளிகள்
கூர்மையான பற்கள் தெரியச் சிரித்தன. தாமரை பூத்து மணம் சிந்தியது. யானைகள் நடை
போட்டன. அஜந்தா அழகிகள் தலைமுடியை வண்டுகள் அலங்கரித்தன. துந்துபிகள் முழங்கின.
வேல் கொண்டு வீரர்கள் மோதினர்.
நாவாய்களும், கலன்களும் நீர் மீது உழுது கொண்டு நகர்ந்தன. அணிகளும், படைகளும்
கொத்துக் கொத்தாக நின்றனர். முத்துக்களும், மணிகளும், ஆடை ஆபரணங்களும், பெட்டகம்
பெட்டகமாக எங்கும் நிறைந்தன. எங்கே, எல்லாம் எங்கே?
திரு. மணியத்தின் கருத்தில்
உதித்துக் கை வழி வந்து ரசிகர் கூட்டத்தின் கவனத்தை ஈர்க்கும் எழில் ஓவியங்களிலே,
வரை சித்திரங்களிலே!
மணியத்தின் சித்திரங்கள் காலம் வென்ற
கலைப்படைப்புகள். அவர் கைத்திறன் சரித்திர மணத்தையும், பழம் தமிழ்க் கலையையும்
சுகந்தமாகப் பரப்பியது தமிழ் அறிந்த நாட்டிலே.
திரு மணியத்தின் உழைப்புக்குக் கால
அளவே கிடையாது. இருபத்து நான்கு மணி நேரம், அவருக்காக நாற்பத்து எட்டு மணியாக
விரிந்து கொடுத்தது. காலை ஆறு மணி: மணியம் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
சித்திரம் எழுதிக்கொண் டிருக்கிறார்.
மாலை ஆறு மணி: மணியம் என்ன
செய்கிறார்? வர்ண ஓவியம் தீட்டிக் கொண்டிருக்கிறார்.
இரவு இரண்டு மணி: அவர் அறையில்
விளக்கு எரிகிறது. தூக்கமா இல்லை, சித்திரங்கள் படைத்துக் கொண்டிருக்கிறார்.
உழைப்பு, உழைப்பு.... உழைப்பு, அது ஒன்றைத் தான் அவர் அறிவார். கலைக்குக் காலம்
கிடையாது. இத்துணை இளம் வயதில், தன் காலம் முடிவடைந்து விடும் என்று திரு மணியம்
எண்ணினாரோ என்னமோ, அசுர வேகத்தில் அமர சித்திரங்களைப் படைத்து வாரி வழங்கிச்
சென்று விட்டார்.
விண்ணுலகில் இன்று அமரர் கல்கி புது
சரித்திரத் தொடரை எழுதிக் கொண்டிருக்கிறாரோ? அதற்கு அமரர் மணியம் உயிர்ச்
சித்திரங்கள் வரைய விரைந்து விட்டாரோ?
- கோபுலு
மங்கள நூலகம் ‘பொன்னியின் செல்வன்’
கதையை அற்புத அழகோடு புஸ்தகத்தை அமைத்து வெளியிட்டிருக்கிறார்கள். மணியம் வரைந்த
சித்திரங்கள் யோக்கியர்களைக்கூடத் திருடத் தூண்டும்.
சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி