2017 ஓம்சக்தி தீபாவளி மலர் (கோயம்புத்தூர்) அட்டைப்படம்:
சிவன் சிரசதனில் குட்டி நிலாக் கண்ட கணபதி செய்தது என்ன? புகழ்பெற்ற நைடதத்தின் கடவுள்வாழ்த்தில் காண்போம்.
நைடதம் புலவர்க்கு ஔடதம்
நைடதம் - அதிவீரராமபாண்டியர்
கடவுள் வாழ்த்து
தழைவிரி கடுக்கை மாலைத் தனிமுதல் சடையிற் சூடும்
குழவிவெண் திங்கள் இற்ற கோட்டது குறையென் றெண்ணிப்
புழைநெடுங் கரத்தாற் பற்றிப் பொற்புற இணைத்து நோக்கும்
மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்
என்ன அழகான கற்பனை! உவேசா, வாரியார், ஜெயபாரதி - மூவரும் இப்பாடலின் சிறப்பைக் கூறியுள்ளனர். பழைய பாண்டிய வம்சம் சிறுத்துக் குறுநில மன்னர்களாகியும் தமிழ்ப் புலமையைப் போற்றிதற்குச் சான்று மதுராபுரி அம்பிகை மாலை, நைடதம் போன்ற நூல்கள்.
அழகிய, அரிய இப் பாடலுக்கு ஓவியர் மாருதி சித்திரம் தீட்டியுள்ளார். முதல்முறையாகப் பாண்டிய மன்னரின் பாடலுக்கு ஓவியம்! அதன் விளக்கமும் ஓம்சக்தி தீபாவளி மலர் (2017) தருகிறது. படித்து அருள்க.
நா. கணேசன்
வாரியார் விருந்து..
திருக்கயிலாய மலையில் கருணைக் கடலாகிய சிவபெருானும் ஞானக் கொழுந்தாகிய உமா தேவியாரும் ஒளிமயமான நவரத்ன சிங்காதனத்தில் வீற்றிருந்தார்கள். விநாயக மூர்த்தியும் கந்தக் கடவுளும் ஒருபுறம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். விநாயகர் தம்பியைப் பார்த்து "ஆறுமுகம் "என்று அழைத்தார்.
முருகவேள் அண்ணன் நமது முகத்தை எண்ணி அழைக்கிறார் போலும் என்று கருதி "ஏன் ஏக தந்தரே" என்றார். விநாயகருக்கு ஒரு கொம்புதானே. கஜமுகனை வதைக்கும் பொருட்டு ஒரு கொம்பை ஒடித்து விட்டாரல்லவா?
இளம்பூரணன் ஏகதந்தரே என்றது விநாயகருக்கு சுருக்கென்றிருந்தது. தம்பி நம்மை ஒற்றைக் கொம்பன் என்று விகடமாக அழைக்கின்றான் போலும் என்று எண்ணி நாணினார். இந்த குறை தீர என்ன செய்யலாம் என்று சிந்தித்தார்.
விநாயகர் சிவ மூர்த்தியிடம் சென்று அவரை அடிமுதல் முடிவரை உற்று நோக்கினார். சிவ மூர்த்தியின் முடியில் உள்ள பிறைமதி தன் ஒடிந்த கொம்புக்கு நிகராகும் என்று கருதி நீண்ட தும்பிக்கையால் சடை முடியில் உள்ள பிறையை திருகி எடுத்து அங்குள்ள நிலைக் கண்ணாடிமுன் நின்று ஒடிந்த கொம்புள்ள இடத்தில் பிறைமதியைப் பொருத்தி அழகு பார்த்தார்.
இப்படி ஒரு அறிவுக் கனவு காண்கிறார் புலவர் சிகாமணி அதிராம பாண்டியர். அதை ஒரு பாட்டாகவே பாடினார்.
இதோ அது..
தழைவிரி கடுக்கை மாலை தனிமுதல் சடையில் சூடும்
குழவிவெண் திங்கள் இற்றக் கோட்டது குறையென் றெண்ணிப்
புழைநெடுங் கரத்தால் பற்றிப் பொற்புற இணைத்து நோக்கும்
மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்!
------------------
அன்பர்களே,
தழைவிரி கடுக்கை மாலைத் தனிமுதல் சடையிற் சூடும்
குழவிவெண் திங்கள் இற்ற கோட்டது குறையென் றெண்ணிப்
புழைநெடுங் கரத்தாற் பற்றிப் பொற்புற இணைத்து நோக்கும்
மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்
நைடதம்
அதிவீர ராம பாண்டியர்
பாண்டியர்கள் மதுரையை துருக்கரிடம் இழந்த பின்னர் அதை மீட்டவர்கள் விஜயநகரத்துக் கன்னடியர்கள். அவர்களின் தயவில் மதுரையைக் கொஞ்ச காலம் பாண்டியர்கள் வைத்திருந்தார்கள். ஆனால் வாணதிராயர் என்பவர் அவர்களை மதுரையைவிட்டு விரட்டிவிட்டார்.
அவர்கள் அனைவருமே தென்பாண்டி நாட்டிற்கு வந்து திருநெல்வேலி ஜில்லாவின் தென் பகுதியிலும் மேற்குப் பகுதியிலும் நிலை கொண்டனர்.
விஜயநகர ராயர்கள் நாட்டைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து அமரநாயக்கர்கள் என்னும் மிலிட்டரி தலைவர்களிடம் ஒப்படைத்தார்கள். மண்டலங்களாகப் பிரித்து மண்டலேஸ்வரர்கள் என்னும் பெருந்தன அதிகாரிகளிடம் விட்டனர்.
பாண்டியர்களின் நாடுகள் மிகவும் சுருங்கி நெல்லை மாவட்டத்தின் ஓர் ஓரத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டன. அங்கு அவர்கள் குறுநில மன்னர்களாக விளங்கினர்.
நாடு இருந்த நிலையிலும், அவர்களே இருந்த நிலையிலும் 'ஓஹோ' என்று எதையும் செய்யமுடியவில்லை. பராக்கிரம பாண்டியர் தென்காசியில் கோயிலைக் கட்டி, அதன் கோபுரத்தை முடிக்கமுடியாமல் விட்டார்.
அவர்களில் இன்னொரு பராக்கிரம பாண்டியர், அதிவீர ராம பாண்டியர் என்னும் சகோதரர்கள் பெரும் புலவர்களாக விளங்கினர். புலவர்களை தங்களின் குல வழக்கத்தின்படி ஆதரித்தனர்.
இளையவரான அதிவீர ராம பாண்டியர் ஒரு சிறந்த நூல் ஒன்றை இயற்றினார்.
வடநாட்டில் இருந்த நிஷதநாட்டு மன்னர் நள மஹாராஜா. சனியின் பாதிப்பால் மிகவும் சிரமப்பட்டு பிறகு நல்ல நிலைக்கு மீண்டவர். அவருடைய சரித்திரத்தை 'நைஷதம்' என்னும் பெயரால் வடமொழியில் நூலாக இயற்றியிருந்தார்கள்.
அந்த நூலை பாண்டியனார் தமிழில் இயற்றினார். தமிழில் அந்நூலுக்கு 'நைடதம்' என்ற பெயர். அந்த நூல் கடந்த முன்னூறு ஆண்டுகளாகப் புலவர்களால் கற்கப்பட்டு வந்தது. அவர்களின் பாடத்திட்டத்தில் - Syllabus-ஸில் அதுதான் முதல் நூலாக விளங்கியது. "நைடதம் புலவர்க்கு ஔடதம்' - உயிர் உடலைக் காக்கும் மருந்து போன்றது என்ற பழமொழியும் ஏற்படக்கூடிய அளவுக்கு அது சிறந்து விளங்கியது.
சனி கிரகம் சரியில்லாத பலன்களை ஏற்படுத்துவதைத் தடுப்பதற்காக மக்கள் நைடதத்தைப் படிப்பார்கள். குறிப்பாக ஏழரைச் சனி. நைடதத்தின் முதல் பாடல் - காப்புச் செய்யுள்தான் இது.
அன்புடன்
ஜெயபாரதி
------------
http://s-pasupathy.blogspot.com/2017/02/2.html
உ.வே.சா அவருடைய ஆசிரியரை முதன் முதலில் சந்தித்த போது நடந்ததை விவரிக்கிறார்.
பரீட்சை
இவ்வாறு எங்கள் வரலாற்றை அறிந்துகொண்ட பின்பு அக் கவிஞர்
பெருமான் என்னைப் பார்த்து, “நைடதத்தில் ஏதாவது ஒரு பாடலைச்
சொல்லும்” என்றார். அந்த மகா வித்துவானுக்கு முன், காட்டுப்
பிராந்தியங்களிலே தமிழறிவைச் சேகரித்துக் கொண்ட நான் எவ்வளவு
சிறியவன்! எனக்குப் பாடல் சொல்லத் தைரியம் உண்டாகவில்லை. மனம்
நடுங்கியது. உடல் பதறியது; வேர்வை உண்டாயிற்று. நாக்கு உள்ளே இழுத்தது.
இரண்டு மூன்று நிமிஷங்கள் இவ்வாறு நான் தடுமாறினேன். அப்பால் ஒருவாறு நைடதத்திலுள்ள, “தழைவிரி கடுக்கை மாலை” என்னும் காப்புச் செய்யுளைக் கல்யாணி ராகத்தில் மெல்லச் சொன்னேன்; முதலடியை,
“தழைவிரி கடுக்கை மாலைத் தனிமுதற் சடையிற் சூடும்” #
என்று நான் சொன்னேன். பிள்ளையவர்கள் இடைமறித்து, “தனி முதல்
சடையிற்சூடும்” என்று சொல்லித் திருத்தினார். பல காலமாகப் பிழைபட்ட
பாடத்தை உருவேற்றி இருந்த எனக்கு அந்தப் பாடமே முன் வந்தது. என்
நடுக்கம் அதிகமாயிற்று. ஆனாலும் பாடல் முழுவதையும் சொல்லி முடித்தேன்.
நான் அதைச் சொல்லும்போதே அவர் முகத்தையும் கவனித்தேன். “நான்
சொல்வதில் அவருக்கு வெறுப்பு உண்டாகுமோ” என்று பயந்தேன். நல்ல
வேளையாக அவர் முகத்தில் அத்தகைய குறிப்பு ஒன்றும் தோற்றவில்லை.
எனக்கும் சிறிது ஊக்கம் உண்டாயிற்று.
“இன்னும் ஒரு பாடல் சொல்லும்” என்றார் அவர். நான் நைடதத்தின்
சிறப்புப் பாயிரமாகிய, “நிலவு பொழி தனிக்கவிகை” % என்னும் பாடலைச்
சாவேரி ராகத்தில் சொன்னேன். அந்த இரண்டு செய்யுட்களையும் மீட்டும்
சொல்லிப் பொருள் கூறும்படி கூறினார். நான் பாடல்களைச் சொல்லிப்
பொருள் கூறத் தொடங்குகையில் நாக்குத் தழுதழுத்தது.
“தைரியமாகச் சொல்லும்” என்று அக்கவிஞர்பிரான் கூறினார். நான்
இரண்டு செய்யுட்களுக்கும் பொருள் கூறி முடித்தேன்.
“நிகண்டு பாடம் உண்டோ?” என்று அவர் கேட்டார். நான்
“பன்னிரண்டு தொகுதியும் பாடம் உண்டு” என்று கூறவே சில சில
பாடங்களைச் சொல்லச் சொல்லிக் கேட்டு விட்டு, “நிகண்டை மனனம்
செய்வது நல்லதே. இக்காலத்தில் அதை நெட்டுருப் பண்ணும் வழக்கமே போய் விட்டது. சொன்னால் யாரும் கேட்பதில்லை” என்றார்.