வண்டா/வண்டான் என்னும் சொல்லின் வளர்ச்சி வண்டானம். Pelicans are so named due the pouch on their beaks which are used to drain fish from water. This filtering pouch action is called "vaNDu kaTTal" in Tamil. வண்டா/வண்டான், வண்டானம், வண்டாழ், வண்டுவாய் - பெலிக்கன் பறவைகளுக்கான தமிழ்ப்பெயர். உலகெங்கிலும் பல பெலிக்கன் குலங்கள் உள்ளன. வண்டான் பறவையின் அலகு போல இருத்தலால் ஒருவகை நாரைக்கும் (கொய்யடிநாரை) Pelican Ibis என்ற பெயர் உண்டு. தமிழிலும், Pelican Ibis-ஐ வண்டானம் என்பதுண்டு.
On Saturday, August 15, 2015 at 3:49:47 AM UTC-7, Suba.T. wrote:
ஓட்டப்பிடாரத்தில் இருக்கும் வ.உ.சி நினைவு இல்லத்திற்கு நான் சென்றிருந்த போது த.ம.அ விற்காகச் செய்த பதிவுகள் 3 பகுதிகளாக இங்குள்ளன.சுபா
Name
|
V.O.Chidambaram Pillai
|
Born
|
05.09.1872
Vandanam
Near Ottapidaram Thoothukudi District
|
- உணர்த்த லூட லுணர்ந்துடன் மேயும் மடவன்னங்காள்,
திணர்த்த வண்டல் கண்மேல்சங்கு சேரும் திருவண்வண்டூர்,
புணர்த்த பூந்தண் டுழாய்முடி நம்பெரு மானைக்கண்டு,
புணர்த்த கையினரா யடியேனுக்கும் போற்றுமினே
வெறித்த வேடன், வேலை நஞ்சம் உண்ட கண்டன்,
மறித்து மண்டு வண்டல் வாரி மிண்டு நீர் வயல் செந்நெல்
அறுத்த வாய் அசும்பு பாயும் அம் தண் ஆரூர் என்பதே.
கொண்ட லார்கொணர்ந் தங்குலவுந்திகழ் கோட்டாற்றில்
தொண்டெ லாந்துதி செய்ய நின்ற தொழில னேகழ லால ரக்கனை
மிண்டெ லாந்தவிர்த் தென்னுகந்திட்ட வெற்றிமையே. (தேவாரம்)
தண்டு ணர்க்கொன்றை பொன்சொரி வனதள வயற்பால்
வண்டல் முத்தநீர் மண்டுகால் சொரிவன வயற்பால்
கண்டல் முன்துறைக் கரிசொரி வனகலங் கடற்பால் (பெ.பு.)
அண்டமுற வங்கியுரு வாகிமிக நீண்டவர னாரதிடமாம்
கெண்டையிரை கொண்டுகெளி றாருட னிருந்துகிளர் வாயறுதல்சேர்
வண்டன்மணல் கெண்டிமட நாரைவிளை யாடுமயி லாடுதுறையே. (தேவாரம்)
2015-08-15 11:26 GMT+02:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
கோவைச் சிறையில் செக்கு இழுத்துச் சுற்றியபோது பாரதமாதா திருக்கோவிலைச் சுற்றிவருவதாக
எண்ணிச் செக்கிழுத்தவர் கப்பல் ஓட்டிய தமிழர் வ.உ.சி. வங்கத்தில் எழுந்த பாரதமாதா, வந்தேமாதரம் முழக்கம்இவற்றையெல்லாம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர்களில் முக்கியமானவர். சுதந்திர வேள்வியில்பொருள் இழந்த நிலையில் நண்பர்க்கு எழுதிய கடிதத்தில் வ.உ.சி. சொல்லிய வெண்பா:வந்த கவிஞர்க்கெலாம் மாரியெனப் பல்பொருளும்தந்த சிதம்பரன் தாழ்ந்தின்று - சந்தமில்வெண்பாச்சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகிறான்நாச்சொல்லும் தோலும் நலிந்து.
இன்று இந்தியா விடுதலை பெற்ற நாள்.நா. கணேசன்------------------------------------------------
வண்டானம் முத்துசாமி அய்யர் - தாக்ஷிணாத்யகலாநிதி உவேசா கட்டுரை.
தமிழ்த் தாத்தாவாகிய ஸ்ரீமான் உ.வே.சாமிநாதையரவர்கள் இலக்கியத்திற்குச்
செய்த மாபெருந் தொண்டு யாவரும் அறிந்ததே. இதைத் தவிர, அவர் நம்
தமிழ்நாட்டாருக்கு வேறொரு சேவையும் புரிந்துள்ளார். அதாவது,
முற்காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த சிறந்த அறிவாளிகள், வித்துவான்கள்,
இசை விற்பன்னர்கள் பற்றிய செய்திகளைப் பிற்காலத்தவருக்கு அறிவிக்கும்
பொருட்டு, ஐயரவர்கள் எளிய தமிழில், மனங் கவரும் வசன நடையில்,
இச்செய்திகளைக் கட்டுரைகளாகவும், புத்தகங்களாகவும் கொடுத்துள்ளார்.
இவ்வகையில் எழுந்த கட்டுரை ஒன்றை இங்கே இடுகிறேன். கட்டுரை
நீண்டதாதலின், சிறு பகுதிகளாகப் பிரித்து வைக்கிறேன். சந்தவசந்த
நேயர்கள் இதனை வாசித்து இன்புறுவர் என்பது திண்ணம்.
இந்தக் கட்டுரை, இதன் நாயகரின் சிறப்பை மட்டுமின்றி, மகாவித்துவான் ஸ்ரீ
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் உயர்ந்த குணத்தையும், திருவாவடுதுறை ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்களின் வள்ளன்மையையும் வெளிப்படுத்துகின்றது.
********************************
'வண்டானம் முத்துசாமி ஐயர்' - உ.வே. சாமிநாதையர்
*******************************************************
உண்மையான கல்விமான்கள் யாவரையும் உலகம் அறிந்துகொள்வதில்லை. உருவத்தைக் கண்டும் வெளி ஆடம்பரங்களைக் கண்டும் புலமையை வரையறுக்க முடியாது. ஏழைமை நிலையிலே பிறந்து வளர்ந்த புலவர்கள் பலர் பின்பு அரசரோடு அரியாசனத்தில் ஒருங்கு வீற்றிருக்கும் பேறு பெற்றார்களென்று பண்டை வரலாறுகளால் அறிகிறோம். வீண் ஆடம்பரத்தினாலும் அறிவுக்கு யாதோர் இயைபுமில்லாத உலகியற் பயிற்சியாலும் பலர் அறிவாளிகளாக மதிக்கப்படுகிறார்கள். அவ்விரண்டுமில்லாத பல உண்மையறிவாளிகள் ஏனைய மனிதர்களோடு ஒருங்கு எண்ணப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுட் சிலர் அறிவற்றவர்களாகவும் கருதப்படுவதுண்டு; சிலர் சிலகாலம் புறக்கணிக்கப்பட்டுப் பின்பு கல்விமான்களாக மதிக்கப்படுகிறார்கள்.
திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள வண்டானம் என்னும் ஒரு ஊரில் முத்துசாமி ஐயர் என்ற ஒரு ஸ்மார்த்தப் பிராமணர் இருந்தார். இவர் வடம வகுப்பைச்
சேர்ந்தவர்; குறிய வடிவினர்; சிவந்த மேனியர்; எப்போதும் குனிந்துகொண்டேயிருப்பார்; அகன்ற நெற்றியையும் விசாலமான கண்களையும் உடையவர்; எதிலும் உவப்பையாவது வெறுப்பையாவது காட்டமாட்டார். இவர் பிறரோடு அதிகமாகப் பேசுவதில்லை; பாடங் கேட்பதிலும் கேட்டவற்றைச் சிந்திப்பதிலுமே காலம் போக்குவார்; எப்போதும் தனித்தே இருப்பார்; பாடங் கேளாத சமயங்களில் தோட்டங்களிலும் மரத்தடியிலும் நீர்த் துறைகளிலும் ஆற்றுமணலிலும் தனியே அமர்ந்து மண்ணிலும் மணலிலும் எதையேனும் எழுதிக்கொண்டேயிருப்பார்.
ஏறக்குறைய அறுபது வருடங்களுக்கு முன் இவர் திருவாவடுதுறை மடத்துக்குப் பாடங்கேட்க வந்தார். அப்போது இவருக்குப் பிராயம் 22 இருக்கும்.
அக்காலத்தில் திருவாவடுதுறை மடத்தில் மேலகரம் ஸ்ரீ சுப்பிரமணிய
தேசிகரவர்கள் ஆதீனகர்த்தர்களாக இருந்தார்கள். திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் அந்த மடத்தில் ஆதீன வித்துவானாக இருந்து பல மாணாக்கர்களுக்குத் தமிழ்ப்பாடஞ் சொல்லி வந்தார்கள்; அப்போது பாடம் கேட்டவர்களுள் யானும் ஒருவன். மாணவர்களுக்கு
உரிய போஜன வசதி முதலியவைகளெல்லாம் திருவாவடுதுறையில் ஆதீனகர்த்தரவர்களால் நன்றாக அமைக்கப் பெற்றிருந்தன. இதனால் மாணாக்கர்கள் யாதொரு கவலையுமில்லாமல் ஊக்கத்தோடு பாடங் கேட்டு வந்தனர்.
புதியவர்களாகப் பாடங்கேட்க வருபவர்கள் பிள்ளையவர்களிடம் படிக்கும் பழைய மாணாக்கர்களிடம் கேட்டல் வழக்கம்.
ஆதி குமரகுருபர ஸ்வாமிகள் மரபினரும் பிற்காலத்தில் திருப்பனந்தாட்
காசிமடத்துத் தலைமையை வகித்தவருமான ஸ்ரீ குமாரசாமித் தம்பிரானென்பவர் அப்போது பிள்ளையவர்களிடம் பாடங் கேட்டுவந்தார். அவர் பிறந்த ஊர் வண்டானம். அவருக்கும் முத்துசாமி ஐயருக்கும் முன்னமே பழக்கம் இருந்தமையால் அவரிடமே முத்துசாமி ஐயர் படிக்கலானார். ஊரிலிருந்த பொழுதே நிகண்டையும் சில பிரபந்தங்களையும் படித்திருந்தவராதலின் தமிழ்ப் பயிற்சியில் இவர் சிறந்து விளங்கினார். இரவிலும் பகலிலும் யாவரும் உண்ட பின்பு உண்ணும் விடுதிக்கு இவர் தனியே சென்று பிறரோடு கலவாமல் உண்டு வருவார். இவர் உடுப்பது அழுக்கான வஸ்திரமே.
இவர் இவ்விதம் பரமசாதுவாகவும் நாகரிகமில்லாதவராகவும் இருத்தலைக் கண்ட மாணாக்கர்களுக்கும் பிறருக்கும் இவரிடம் நன்மதிப்பு உண்டாகவில்லை. இவரைக் கண்டால் யாவரும் பரிகாசம் செய்வார்கள்; 'வண்டானம் வந்தது; போயிற்று' என்று அக்றிணையாகவே இவரைப் பற்றிப் பேசுவார்கள். இப்படி ஒருவர் இருப்பது ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருக்கேனும் பிள்ளையவர்களுக்கேனும் தெரியாது.
எவரேனும் சிலேடையாகப் பேசினால் இவருக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாகும்;
அப்பொழுது தான் இவர் முகத்திற் சிறிது மலர்ச்சி காணப்படும். இவர் ஏதாவது
பேசின் அது சிலேடையாகவே இருக்கும். ஒருநாள் மாணாக்கராகிய தம்பிரானொருவர் இவரைப் பார்த்து, "வண்டானம் இப்பொழுது என்ன செய்கிறது?" என்று நகைப்புடன் கேட்டபொழுது, இவர் சினமுற்று, "நீங்கள் சிவப்புத்தேள்" என்று சிலேடையாகப் பேசியதைக் கேட்டிருக்கிறேன். சிவனாகிய தேவனெனவும், சிவப்பு நிறம் பொருந்திய தேளெனவும் அத்தொடர் இரண்டு பொருள்படும். இவர் வார்த்தையால் யாருக்கும் கோபம் உண்டாகாது. இவ்வாறு இவர் கூறிய சிலேடைகள் அளவிறந்தன.
ஒருநாள் இவரை நோக்கி, "வாரும், இரும், படியும்" என்றபோது, "வாரும்
இரும்பு அடியுமா!" என்றார் இவர். மற்றொரு நாள் ஒருவரை 'வேஷ்டியைத்
துவைக்கின்றீரோ' என்று கேட்க வந்த இவர், "கலையைச் சிலையிற் கலையாமல் தோயத்திற் றோய்த்துத் துவைக்கின்றீரோ?" என்றார். (ஆடையைக் கல்லில் கலையாமல் நீரில் தோய்த்துத் துவைக்கின்றீரோவென்பது இதன் பொருள்). வேறொரு நாள் ஒருவர், "உண்டு வந்தீரோ?" என்று வினவினபொழுது, "உண்டு உவந்தீரோவா?" என்று பிரித்துக் கூறிச் சிறிது மகிழ்ச்சி கொண்டார்.
ஒருநாள் சாப்பாட்டு விடுதியின் சுவரிற் பின்வரும் பாடல் மாக்கல்லால்
எழுதப்பட்டிருந்தது:
" இந்தவறச் சாலைதனி லேயிரவும் பகலும்
வந்தவரி முதன்மதிதம் வரைவாங்கிக் கொண்டே
அந்தணருக் கடிசிலிட யாதுமிலை யெனலாற்
சுந்தரசுப் பிரமணிய தேவனிடஞ் சொன்மின். "
[இதன் பொருள்:- இந்தத் தர்மவிடுதியில் இராத்திரியிலும் பகலிலும்
சமைத்துப் பிறருக்கு இடுவதற்காக மடத்திலிருந்து வரும் அரிசிமுதல்
மோர்வரையிலுள்ள பொருள்களைப் பெற்றுக்கொண்டு (உண்ண வருகின்ற)
பிராமணர்களுக்கு (உணவளிப்பதற்கு) ஒன்றுமில்லையென்று (இங்குள்ளோர்)
சொல்லுவதால், (இச்செய்தியை) அழகிய சுப்பிரமணிய தேசிகரிடம் சொல்லுங்கள். அரி=அரிசி, மதிதம்=மோர், அடிசில்=உணவு]
அங்கே சென்று உண்டுவந்த ஒரு மாணாக்கர், சுவரில் இச்செய்யுள் எழுதியிருப்பதைக் கண்டு ஞாபகப்படுத்திக்கொண்டு பிற்பகலிற்
பிள்ளையவர்கள்பாற் பாடங்கேட்பதற்காக வந்திருந்த தம் நண்பர்களிடம்
தனித்துச் சொல்லிக் காட்டிக்கொண்டிருந்தார். பிள்ளையவர்கள், "என்ன
பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்க, அதை அவர்களிடம் சொன்னார்.
கேட்ட அவர்கள், "இதனை யார் செய்திருக்கக் கூடும்?" என்று ஐயமுற்று
அவ்விடுதியில் உண்பவர்களுள் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு ஆராயத்
தொடங்கினார்கள். அப்பொழுது குமாரசாமித் தம்பிரான், "என்னிடம்
பாடங்கேட்டு வரும் வண்டானம் எழுதியிருக்கலாம்; அது பெரும்பாலும்
அகாலத்திலேதான் சென்று உண்ணுவது வழக்கம். தனக்கு ஆகாரம் சரியானபடி கிடைப்பதில்லையென்று சில சமயங்களில் என்னிடம் சொல்லியிருக்கிறது. அதை விசாரிக்க வேண்டும்" என்றார். "அவரைப் பார்க்கவேண்டும்; இங்கே வருவிக்கலாமே" என்று பிள்ளையவர்கள் சொன்னார்கள்.
உடனிருந்தவர்களுக்கு இவரை எப்படியேனும் கண்டுபிடித்து அழைத்துக்கொண்டு வரவேண்டுமென்ற ஊக்கம் உண்டாயிற்று. சிலர் விரைந்து சென்று பல இடங்களில் தேடியும் இவர் அகப்படவில்லை. அப்பால் ஊருக்கு வடபாலுள்ள தோட்டத்தில் ஒரு மரத்தடியில் இவர் ஏதோ யோசனை செய்து கொண்டிருத்தலை அவர்கள் கண்டார்கள். அப்பொழுது பிற்பகல் இரண்டு மணி இருக்கும். கண்டு அழைக்கையில் இவர் விரைவில் எழவில்லை. சென்றவர்கள், "ஓய்! உமக்கு நல்லகாலம் பிறந்துவிட்டது. வாரும். பிள்ளையவர்கள் அழைக்கிறார்கள்" என்று கூறி இவரைப் பிள்ளையவர்களிடம் அழைத்து வந்தார்கள்.
இவர் யாதுமறியாதவராகி அழைத்தது எதற்காகவோவென்று அஞ்சி
நடுங்கிக்கொண்டிருந்தார். பிள்ளையவர்கள் இவரை இருக்கச்செய்து, "இந்தப்
பாடலைச் செய்தவர் யார்?" என்று அன்புடன் கேட்டபொழுது இவர், "நான்
செய்யவில்லை" என்று கூறிவிட்டார். அப்பால் ஒருவரை உண்ணும் விடுதிக்கு அனுப்பி அப்பாடலை யாரெழுதியதென்று விசாரிக்கச் செய்ததில் அப்பாடலின் விஷயத்தை அறியாத சமையற்காரர், "ஏதோ ஒருநாள் வண்டானம் வந்து சிறிதுநேரம் நின்று எழுதிக்கொண்டிருந்தது" என்றார். விசாரித்தவர் வந்து அதனைப் பிள்ளையவர்களிடம் சொன்னார். சொன்னவுடன் அவர்கள் பின்னும் இவரை வற்புறுத்திக் கேட்கையில், "சரியாக நடந்துகொள்ளாமற் போனால் பின் என்ன செய்கிறது?" என்றார். குமாரசாமித் தம்பிரான், "அகாலத்தில் போனால் உனக்கு என்ன கிடைக்கும்? உன்னுடைய தவறு அது" என்று சினத்துடன் சொல்லவே பிள்ளையவர்கள், "சும்மா இருக்கவேண்டும்" என்று கையமர்த்திவிட்டு, "இதனால் இவரே இதனைச் செய்தவரென்று தெரிகின்றது. இந்தச் செய்யுளின் நடையைப் பார்க்கும்பொழுது இதற்குமுன் இவர் பல பாடல்கள் செய்து பழகியிருக்கவேண்டுமென்று தோற்றுகின்றது. அதைப்பற்றி விசாரிக்க வேண்டும்" என்றார்கள். பின்பு விசாரித்ததில் இவர் தாம் யாதொன்றும் செய்ததில்லையென அஞ்சிக் கூறினார். "உமக்குப் பாடுகிற பழக்கம் உண்டென்பதை இப்பாடலே தெரிவிக்கின்றது. செய்திருந்தாற் சொல்லும்" என்று பின்னும் பிள்ளையவர்கள் முதுகைத் தட்டிக் கொடுத்து வற்புறுத்திக் கேட்டார்கள். அப்போது தாம் முன்னமே செய்திருந்தவற்றுள் சாதாரணமான சில பாடல்களை ஒன்றன்பின் ஒன்றாக இவர் சொல்ல ஆரம்பித்தார்.
கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு உண்டான ஆச்சரியத்திற்கு அளவே இல்லை.
அப்பால் சிறிது ஊக்கமுற்ற இவர் தாம் இயற்றிய திரிபு, யமகம், சிலேடை
முதலியன அமைந்த சில செய்யுட்களைச் சொல்லிக் காட்டினார். தம்மூருக்கு
அருகிலுள்ள பசுவந்தனையென்னும் தலத்தைப் பற்றித் தாம் இயற்றிய
'பசுந்தையந்தாதி' என்பதிலுள்ள சில பாடல்களையும், அப்பால் சந்தங்கள்
வண்ணங்கள் முதலியவற்றையும் சொன்னார். அவை சுவையுடையனவாக இருந்தன.
பிள்ளையவர்கள் சுப்பிரமணிய தேசிகரவர்கள் மீது இயற்றியுள்ள 'துங்கஞ்சார்'
என்ற நோட்டின் மெட்டில் தம்மை ஆதரித்த பிச்சுவையரென்பவர்மேல் இயற்றிய கீர்த்தனம் ஒன்றையும் சொன்னார்; 'உச்சஞ்சார் வண்டா னத்துறை பிச்சுவைய தயாநிதியே' என்ற அதன் பல்லவி மட்டும் இப்போது என் ஞாபகத்தில் இருக்கிறது.
இவர் சொன்ன செய்யுட்களைக் கேட்ட பிள்ளையவர்கள் இவரைப் பார்த்து மிகவும்
வருந்தி, "இப்படி ஒருவர் இருப்பது இதுவரையில் நமக்குத் தெரியவில்லையே!
இவர் இவ்வளவு அழுக்கான வஸ்திரத்தைக் கட்டிக்கொண்டு தமிழ்ச்சுவையையறிந்த
இந்த ஊரில் ஏனென்று கேட்பாரில்லாமல் எல்லாரும் பரிகசிக்கும்படி இருப்பது
மிகுந்த வருத்தத்திற்கு இடமாக இருக்கிறது. உங்களுடைய அலட்சியத்துக்கு
இடையில் இவர் இவ்வளவு சுவையுள்ள செய்யுட்களைப் பாடியிருக்கிறார்; நீங்கள்
அன்புடன் ஆதரித்து வந்திருந்தால் இன்னும் எவ்வளவு பிரகாசிப்பார்? இவர்
சாதுவாக இருக்கிறாரென்று இவரை நீங்கள் புறக்கணித்ததால் தமிழையே
புறக்கணித்ததாக எண்ணவேண்டும். இனி இவருடைய அருமையை நன்கு அறிந்து
பாராட்டல் நல்லது. படித்தவர்களைப் படித்தவர்களே அறிந்துகொள்ளாவிட்டால்
வேறு யார் அறியப் போகிறார்கள்? சந்நிதானத்திற்கும் அறிவிக்கவேண்டும்"
என்று மனங்கனிந்து கூறினார்கள். அருகிலிருந்த மாணவர்களுக்கெல்லாம்
அப்பொழுதுதான் முத்துசாமி ஐயரின் கல்வித் திறன் நன்றாக விளங்கிற்று.
தாங்கள் அவர்பாற் காட்டிய அவமதிப்பை நினைந்து இரங்கினார்கள்.
பிள்ளையவர்கள், "சந்நிதானம் உமது செய்யுட்களைக் கேட்டால் மிக்க
திருப்தியையடையும். ஆதலின் வஸ்திரங் கொடுக்க வேண்டுமென்று அவர்கள்
விஷயமாக ஒரு செய்யுள் செய்யும்" என்றார்கள். அவ்வாறே ஐந்து நிமிஷத்தில்
இவர்,
"மாசாரக் கவிநுவல்வோர் குறைமடமை யடியோடே
...மாற்ற வெண்ணித்
தூசார நிதியமுண வடிகடர றெரிந்துபெறத்
...துணிந்து வந்தேன்
ஏசார வறுமையெனுங் கொடும்பிணியா னெடுந்துயருற்
...றிருக்கின் றேற்கின்
றாசார மளித்தருள்சுப் பிரமணிய தேசிகமெய்
...யறிஞ ரேறே"
என்னும் செய்யுளைச் சொல்லிக் காட்டினார்.
[இதன் பொருள்: சுப்பிரமணிய தேசிக! உண்மை அறிவுடையாருள் மேம்பட்டவ!
மிக்க சுவை பொருந்திய செய்யுட்களைக் கூறுபவர்களுடைய குறைகளை முற்றும்
ஒழிக்க நினைந்து உடை, ஹாரம், பொருள், உணவு என்பவற்றை அடிகள் வழங்குதலை
அறிந்து யானும் ஒன்றைப் பெறத் துணிந்து வந்தடைந்தேன். ஆதலின் வறுமை
என்னும் கொடிய நோயால் மிக்க துன்பத்தை அடைந்திருக்கும் எனக்கு இன்று ஆடை
வழங்கியருளல் வேண்டும். சாரக்கவி=சுவையுடைய் செய்யுள்; தூசு=ஆடை;
ஆரம்=ஹாரம்; ஏசு ஆர=ஏசுதல் பொருந்த; ஆசாரம்=ஆடை.]
இதனைக் கேட்ட பிள்ளையவர்கள் மிக மகிழ்ந்து "சந்நிதானத்திடம் இவரை
அழைத்துச் சென்று இப்பாடலைச் சொல்லிக் காட்டச் செய்து இங்கே
நிகழ்ந்தவற்றையும் தெரிவிக்கவேண்டும்" என்று என்னிடம் சொன்னார்கள்.
அப்படியே நான் இவரைத் தேசிகரவர்கள்பால் அழைத்துச் சென்று நிகழ்ந்தவற்றைக்
கூறி இச்செய்யுளைச் சொல்லச் செய்தேன். கேட்ட தேசிகரவர்கள் இப்பாடலின்
சுவையையறிந்து இன்புற்றதன்றிச் சரிகைக்கரையுள்ள இரண்டு ஜோடி வஸ்திரங்களை
அளித்து, "உடுத்துக்கொண்டு பிள்ளையவர்களிடம் செல்ல வேண்டும்" என்று
கட்டளையிட்டார்கள். அப்படியே இவர் பிள்ளையவர்களிடம் புதிய உடை தரித்து
வந்தார். அவர்களும் மற்றவர்களும் மகிழ்ந்தார்கள்.
அதுமுதல் மாணாக்கர்கள் இவரிடம் பிரியத்துடன் நடக்க ஆரம்பித்தனர்; இவரும்
எல்லாரோடும் பேசிப் பழகி வந்தார். நூல்களிலுள்ள பாடல்களைப் பற்றி
இவருடைய அபிப்பிராயத்தைக் கேட்டால், 'முதலாவது இது; இரண்டாவது இது; இதில்
இன்ன பாகம் சுவையுடையது' என்று கூறுவார். செய்யுட்களின் சுவையை அறிந்து
தரம் கூறுதலில் இவர் வல்லவராக இருத்தலை நான் பலமுறை
கேட்டறிந்திருக்கிறேன்.
பிள்ளையவர்கள் காலத்திற்குப் பின்னரும் சில காலம் இவர் மடத்திலிருந்து
பாடங்கேட்டு வந்தார்; பின்பு தம்மூருக்குச் சென்றார்; பிரபுக்களையும்
ஜமீன்தார்களையும் கண்டு அவர்கள் மீது பாடி அவர்களை உவப்பித்தும், பழைய
நூல்களில் உள்ள சுவையை எடுத்துக்காட்டியும் இவர் காலங்கழித்து வந்தார்;
இடையிடையே சில சமயம் திருவாவடுதுறைக்கு வந்து செல்வதுண்டு.
நான் கும்பகோணத்திற்கு வேலையாகச் சென்ற பின்பு ஒரு சமயம்
திருவாவடுதுறைக்கு வந்து தேசிகரிடம் செல்லும்போது உள்ளே செல்லச் சமயம்
பார்த்துக்கொண்டு வெளியே இவர் நின்றனர். நான் பார்த்து, "இன்னும்
கல்யாணம் இல்லையா?" என்றேன். இவர் "கல்யாணம் இல்லை" என்றார். அந்த
விடையில், 'மணமாகவில்லை' என்ற பொருளும், 'பணம் இல்லை' என்ற பொருளும்
சிலேடையாக அமைந்துள்ளன (கல்யாணம்=விவாகம், பணம்).
ஊற்றுமலை ஜமீன்தாராக இருந்த ஹ்ருதயாலய மருதப்பத் தேவரிடம் ஒரு சமயம் இவர்
சென்று அவர் விஷயமாகச் சில செய்யுட்களைப் பாடிக்காட்டித் தமக்கு விவாகம்
ஆகவேண்டியிருப்பதால் அதற்குரிய பொருளுதவி செய்யவேண்டுமென்று
கேட்டுக்கொண்டார். ஜமீன்தார், "நீர் முகூர்த்தம் வைத்துக் கொண்டு
வந்தால் நான் நூறு ரூபாய் தருவேன்" என்றார். இவர் தம்மூர் சென்று
சிலகாலங் கழித்து வந்து தமக்குக் கல்யாணம் நிச்சயமாகிவிட்டதென்றும்
பொருளுதவி செய்யவேண்டுமென்றும் கேட்டார்.
ஜமீன்தார்: எவ்வளவு தருவேனென்று முன்பு சொன்னேன்?
முத்துசாமி ஐயர்: நானூறு ரூபாய் தருவேனென்றீர்கள்.
ஜமீன்தார்: இராதே! அப்படிச் சொன்னதாக எனக்கு ஞாபகம் இல்லையே.்: இராதே!
அப்படிச் சொன்னதாக எனக்கு ஞாபகம் இல்லையே.
முத்துசாமி ஐயர்: (அச்சங்கொண்டவர்போல்) முந்நூறு தருவேனென்றீர்கள்.
ஜமீன்தார்: அப்படியும் சொல்லவில்லையே.
முத்துசாமி ஐயர்: இல்லை; இருநூறு தருவேனென்றீர்கள்.
ஜமீன்தார்: என்ன பொய் சொல்லுகிறீரே.
முத்துசாமி ஐயர்: இல்லை! நூறு ரூபாய் தருவதாகச் சொன்னீர்கள்.
ஜமீன்தார்: பின் எதற்காக நாநூறு, முந்நூறு, இருநூறென்று ஏமாற்றுகிறீர்?
முத்துசாமி ஐயர்: நான் உள்ளதைத் தானே சொன்னேன். நீங்கள், "நான் நூறு
தருவேன்" என்று சொல்லவில்லையா? முன் (நான் வந்தபொழுது) நூறு* தருவதாகச்
சொல்லவில்லையா? இரு (காத்திரு); நூறு தருகிறேனென்றதும் பொய்யா?
இவ்வாறு உடனுடன் சாதுரியமாக விடை பகர்ந்ததைக் கேட்ட ஜமீன்தார் வியந்து
தான் வாக்களித்த நூறு ரூபாயோடு மற்றொரு நூறு ரூபாயும் சேர்த்து இருநூறாக
அளித்தார்.
1887-ஆம் வருஷத்திற்குப் பின் இவரை நான் பார்க்கவில்லை.
அக்காலத்திற்கூடத் தாமாக ஒருவரிடம் பேசாமையும், வலிந்து ஒருவரிடம்
பழகாமையுமாகிய பழைய இயல்புகள் இவரிடம் காணப்பட்டன. இத்தகைய அறிஞரிடம்
உலகியலறிவு இல்லாமையே இவரைப் பிரகாசிக்கச் செய்யவில்லை; ஆனாலும்
தெரிந்தவர்கள் இவரைப் பாராட்டிக் கொண்டு தான் இருந்தார்கள்.
**********
*சிலேடையில் தந்நகர றன்னகர பேதம் இல்லை; அன்றியும் பேச்சில் அத்தகைய
பேதம் காணற்கரியது.
**********
(முற்றும்)
---------------------
தட்டெழுதியவர்: வெண்பாவிரும்பி, சந்தவசந்தம். நனிநன்றி.
வண்டா/வண்டான் என்னும் சொல்லின் வளர்ச்சி வண்டானம். Pelicans are so named due the pouch on their beaks which are used to drain fish from water. This filtering pouch action is called "vaNDu kaTTal" in Tamil. வண்டா/வண்டான், வண்டானம், வண்டாழ், வண்டுவாய் - பெலிக்கன் பறவைகளுக்கான தமிழ்ப்பெயர். உலகெங்கிலும் பல பெலிக்கன் குலங்கள் உள்ளன. வண்டான் பறவையின் அலகு போல இருத்தலால் ஒருவகை நாரைக்கும் (கொய்யடிநாரை) Pelican Ibis என்ற பெயர் உண்டு. தமிழிலும், Pelican Ibis-ஐ வண்டானம் என்பதுண்டு.
மேலும் ஆராய:
https://groups.google.com/forum/#!msg/santhavasantham/8MZbjfQ6GaM/HQ1a9VjyCgAJ
0 comments:
Post a Comment