அகத்தியரின் 12 மாணாக்கர் யார்? ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் “தமிழ்” என்னும் கட்டுரை (பாலபாடம்)

தமிழ்
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள், யாழ்ப்பாணம் நல்லூர்,
பாலபாடம்
சமஸ்கிருதம், தமிழ் என்னும் இரண்டு பாஷைக்கும் முதலாசிரியர் சிவபெருமான். சிவபெருமான், சமஸ்கிருதத்துக்கு இலக்கண நூல் பாணினி முனிவருக்கும், தமிழுக்கு இலக்கண நூல் அகத்திய முனிவருக்கும் அருளிச் செய்தார். அம்முனிவர்கள் இருவரும் முறையே அம்முதனூல்கள் இரண்டின் வழியாகப் பாணினீயம், அகத்தியம் என்னு நூல்களை அருளிச் செய்தார்கள். திரவிடமென்னும் வடமொழி தமிழென்றாயிற்று.
     தமிழ் வழங்குநிலம், பரத கண்டத்தில் வடக்கின் கண்ணே திருவேங்கடமும், தெற்கின் கண்ணே கன்னியாகுமரியும், கிழக்கின்கண்ணும் மேற்கின்கண்ணும் கடலும், எல்லையாக உடைய தென்னாடாம். இத்தென்னாடு திராவிடதேசமெனப் பெயர்பெறும். இத்தென்னாட்டில் வழங்குதல் பற்றித் தமிழ்மொழி தென்மொழி எனவும்படும். சமஸ்கிருதம் பொதுவாயினும், ஆதியிலே வடதிசையினின்றும் தென்றிசைக்கு வந்தமையால் வடமொழியெனப்படும்.
     அகத்தியமுனிவருக்குச் சிவபெருமானேயன்றி முருகக் கடவுளும் தமிழைச் செவியறிவுறுத்தருளினார். அவ்வகத்திய முனிவருக்கு மாணாக்கர் பன்னிருவர்: தொல்காப்பியர், அதங்கோட்டாசிரியர், துராலிங்கர், செம்பூட்சேய், வையாபிகர், வாய்ப்பியர், பனம்பாரனார், கழாரம்பனார், அவினயனார், காக்கைபாடினியர், நற்றத்தனார், வாமனர். அகத்தியமுனிவர் தாஞ்செய்த அகத்தியத்தை அப்பன்னிரண்டு மாணாக்கர்களுக்கும் கற்பித்தருளினார். அப்பன்னிருவர்களும் அவ்வகத்தியத்தை முதனூலாகக் கொண்டு, தனித்தனியே வழிநூல் செய்தார்கள். அவைகளுள்ளே, சமதக்கினி முனிவருடைய புத்திரரும் திரணதூமாக்கினியென்னும் பெயரையுடையவருமாகிய தொல்காப்பிய முனிவர் செய்தநூலே மிகச்சிறந்தது. தொல்காப்பியர் முதலிய பன்னிரு மாணாக்கர்களுங் கூடிப் புறப்பொருட் பன்னிருபடலம் என்னும் ஒரு நூல் செய்தார்கள்.
     அகத்தியத்துள்ளே இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் மூன்றுதமிழும் விரவிக் கூறப்பட்டன. அவற்றுள் இயற்றமிழை வேறு பிரித்து வழிப்படுத்தார் தொல்காப்பியர் முதலாயினோர்; இசைத்தமிழை வேறு பிரித்து வழிப்படுத்தார் பெருநாரை பெருங்குருகு முதலிய நூலுடையார்; நாடகத்தமிழை வேறு பிரித்து வழிப்படுத்தார் முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றிய முதலிய நூலுடையார்.
     தமிழ்மொழி தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்னும் மூன்று சங்கங்களாலும் ஆராயப்பட்டது. இச்சங்க மூன்றையுந் தாபித்தவர்கள் பாண்டிய ராசாக்கள்.
     தலைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தவர்கள் இறையனார். குமரவேள், அகத்தியமுனிவர் முதலாகிய ஐஞ்ஞூற்று நாற்பத்தொன்பதின்மர்கள். அவர்களுக்கு நூல் அகத்தியம்.
     இடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தவர்கள் அகத்தியர் தொல்காப்பியர் முதலாகிய ஐம்பத்தொன்பதின்மர்கள். அவர்களுக்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் மாபுராணமும் இசைநுணுக்கமும் பூதபுராணமுமாம்.
     கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தவர்கள் நக்கீரர், மருதனிளநாகனார், சிறுமேதாவியர் முதலாகிய நாற்பத்தொன்பதின்மர்கள். அவர்களுக்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமும். அவர்கள் சரசுவதியினுடைய திருவவதாரமாய் உள்ளவர்கள். சதுரமாய் இரண்டு சாணளவினதாகிய  சங்கப்பலகை ஒன்று அவர்களுக்குச் சிவபெருமானாலே கொடுத்தருளப்பட்டது. அது மெய்ப்புலவர்களுக்கெல்லாம் முழம் வளர்த்து இருந்தற்கு இடங்கொடுப்பது. அக்கடைச்சங்கத்துப் புலவர்கள் சுந்தரமூர்த்தி நாயனாராலே திருத்தொண்டத்தொகையிலெ பொய்யடிமை இல்லாப் புலவர்கள் என்று துதிக்கப்பட்டார்கள்.
     கடைச்சங்கத்தார் காலத்திலே இறையனார், பாண்டியன் பொருட்டு “அன்பினைந்திணை” என்பது முதலிய அறுபது சூத்திரங்களினால் ஒர் அகப்பொருள் நூல் செய்தருளினார். அது களவியலெனவும், இறையனாரகப்பொருளெனவும் பெயர் பெறும். அதற்குக் கடைச்சங்கத்துப் புலவர் நாற்பத்தொன்பதின்மரும் தனித்தனியே உரை செய்தார்கள். அவ்வுரைகளுள்ளே நக்கீரர் செய்த உரையே முருகக் கடவுளது திருவவதாரமாய் மதுரை வைசியர் மரபிற்றோன்றிய ஐந்து பிராயத்தையுடைய உருத்திரசன்மராலே மெய்யுரையெனக் கொள்ளப்பட்டது.
     பிரமதேவருடைய திருவவதாரமாய் விளங்கிய தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயனார் திருக்குறளென்னும் உத்தர வேதத்தைச் செய்து, மேற்கூறிய கடைச்சங்கத்தில் அரங்கேற்றியருளினார். அப்பொழுது அசரீரிவாக்கின்படியே சங்கப்பலகை அத்திருவள்ளுவநாயனாருக்கும் உருத்திரசன்மருக்கும் மாத்திரமே இடம் கொடுத்தது.
     சமஸ்கிருதமும் தமிழும், சிவபெருமானாலும் இருடிகளாலும் அருளிச்செய்யப்பட்ட இலக்கண நூல்களை உடைமையாலும், ஆன்றோர்களாலே தழுவப்பட்டமையாலும், தம்முள் சமத்துவமுடையனவேயாம்.

காஞ்சிப்புராணம்
வடமொழியைப்பாணினிக்கு வகுத்தருளியதற் கிணையாத்
தொடர்புடையதென்மொழியையுலகமெலாந்தொழு தேத்துங்
குடமுனிக்குவலியுறுத்தார்கொல்லெற்றுப்பாகரெனிற்
கடல்வரைப்பினிதன்பெருமையாவரேகணித்தறிவார்.

இருமொழிக்குங்கண்ணுதலாற்முதற்குரவரியல்வாய்ப்ப
விருமொழியும்வழிப்படுத்தார்முனிவேந்தரிசைபரப்பு
மிருமொழியுமான்றவரேதழீஇயினாரென்றாலிவ்
விருமொழியுநிகரென்னுமிதற்கையமுளதேயோ.

திருவிளையாடற்புராணம்

கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை
மண்ணி டைச்சில விலக்கண வரம்பிலா மொழிபொ
லெண்ணி டைப்படக் கிடந்ததா வெண்ணவும் படுமோ.

தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்தது முதலை
யுண்ட பாலனை யழைத்தது மெலும்புபெண் ணுருவாக்
கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததுங் கன்னித்
தண்ட மிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்.

0 comments: