Navalar Somasundara Bharathiyar (with Chozhavandan R. Srinivasavaradan and Madurai V. G. Srinivasan. Photo courtesy: R. A. Padmanabhan, Chithira Bharathi, Publisher: Pollachi N. Mahalingam).
In Tamil Nadu, there is a raging controversy between Jayalalitha and M. Karunanidhi about
Tiruvalluvar AaNDu. I wrote a piece in Vallamai e-zine giving some details on who gave the Thai Pongal date:
http://www.vallamai.com/literature/articles/19155/
Subsequently it was printed in Tamil Nadu in Viduthalai, a magzaine started by Periyar EVR, and Kalaignar M. Karunanidhi read the essay and quoted it in Kalaignar TV & he mentioned about it also in his daily letter to
UdanpiRappu in Murasoli paper (22-April-2012).
After the Vallamai article, "TiruvaLLuvar tirunAL tanta Naavalar Somasundara Bharathiyar" I wrote another in the series for Vadakkuvaasal, a print magazine from Delhi, suggesting a compromise: Tiruvalluvar TirunaaL on Pongal day, and Tolkaappiyar TirunaaL on Chitthirai 1 (traditional Tamil New Year day). Note that I mention extensively Jaina contributions to Tamil, and the North-South megalithic expansion into sites like KoDumaNam & Porunthal (Kongu), Adichanalluur (Porunai) etc.,
Next article I'm writing is about the Tamil month name, தை (tai) which is a word of pure Tamil/Dravidian origins. and is not a Sanskrit word as evidenced from Sangam literature.
Any learned comments welcome,
N. Ganesan
திருவள்ளுவர் பிறந்தநாள் தேர்வில் நாவலர் பாரதியார் பங்கு: தனித்தமிழ் இயக்கத்தைப் படைத்தவர்களில் இரு தமிழ்ப் பேராசிரியர்கள் முக்கியமானவர்கள். அவர்களில் முதல்வர் சென்னையில் வாழ்ந்த மறைமலை அடிகளார். இரண்டாமவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராய் வீற்றிருந்த பேராசிரியர் நாவலர் சோமசுந்தர பாரதியார் (1879 – 1959). நாவலர் பாரதியாரும், பாவலர் சுப்பிரமணிய பாரதியாரும் பள்ளித் தோழர்களாய் எட்டயபுரத்தில் வளர்ந்தபோது இருவருக்கும் பாரதி என்ற பட்டத்தை ஈழப்புலவர் வழங்கினார். கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரிடம் தூத்துக்குடியில் பணிபுரிந்து காந்தியடிகளைத் தென்தமிழ்நாட்டுக்கு அழைத்துவந்து சொற்பொழிவு நிகழ்த்தியவர் நாவலர். நெல்லையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்தார். ஆனால், இராஜாஜி அரசாங்கம் 1937-ல் பள்ளிகளில் இந்தியைப் புகுத்தியபோது காங்கிரசை விட்டு விலகி இந்தி எதிர்ப்புப் போருக்குத் தலைவரானார். சென்னையில் 1937-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்கு நாவலர் பாரதியார் தலைமை தாங்கினார். பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள் இவருக்கு ஆசிரியர். எனவே, தனித்தமிழில் அழகிய நூல்கள் பல எழுதினார், தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்துக்குப் புத்துரையும், கம்பன் திறனாய்விலும் புகழ்பெற்றவர். அறிஞர் அண்ணா கம்பன் காப்பியத்தை எரிக்க வேண்டும் என்றபோது அதை மறுதலித்து சேலத்தில் வாதாடியவர் நாவலரே. ’கம்பனிற் சிறந்த கவி தமிழில் இல்லை’ என்ற கொள்கையுடைய தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் சோமசுந்தர பாரதி ஆவார். ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் மன்றம் 1944-ல் நாவலர் என்ற பட்டத்தை வழங்கியது. ஈழத்துப் புலவர் சங்கத்தாரால் பாராட்டப்பெற்ற தமிழ்நாட்டுப் புலவர் முனைவர் சோமசுந்தர பாரதி ஒருவரே.
திருவள்ளுவர் தொடராண்டு தை முதல் நாள் என்றும், திருவள்ளுவர் பிறந்தநாள் எனத் தை இரண்டாம் தேதி என தமிழ்நாடு அரசாங்கம் 1971-லிருந்து செயல்படுத்தக் காரணம் நாவலர் சோமசுந்தர பாரதியாரின் தலைமையில் தனித்தமிழ் இயக்கத்தின் தமிழறிஞர்கள் முன்னெடுத்த முயற்சிகள் ஆகும். 1981-ல் எம்ஜிஆர் மதுரை உலகத் தமிழ் மாநாட்டின்போது அரசின் எல்லா அலுவல்களிலும் திருவள்ளுவர் ஆண்டைப் பயன்படுத்த ஆணையிட்டார். 2003-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்தியிலும் திருவள்ளுவர் திருநாள் இடம்பெறுகிறது:
“உழுவார் உலகத்தாருக்கு அச்சாணி என்பது உலக பொதுமறை தந்த வள்ளுவப் பெருமானின் வாக்கு. வள்ளுவரின் வாக்குக்கிணங்க உலகுக்கு உணவூட்டும் உன்னத தொழிலாம் உழவுத் தொழிலின் மேன்மையை உணர்ந்த தமிழ் மக்கள் திருவள்ளுவர் திருநாளையும், உழவர் திருநாளையும் ஒன்றன்பின் ஒன்றாக உவப்புடன் கொண்டாடி வருகிறார்கள். தை முதல் நாளை பொங்கல் திருநாளாகவும், தை 2-ம் நாளை திருவள்ளுவர் திருநாளாகவும், தை 3-ம் நாளை உழவர் திருநாளாகவும் கொண்டாடுகின்ற மரபு பொருள் பொதிந்த மரபாக விளங்குகின்றது. இந்த பொங்கல் திருநாளில் காவிரி நீரில் நமக்குரிய பங்கை நாம் பெற்றே தீருவோம் என உறுதி ஏற்போம்.”
”மறைமலை அடிகளார் தை மாதம் பற்றியோ, தமிழ்ப் புத்தாண்டைப் பற்றியோ குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. 1935-ல் இந்தக் கூட்டத்தில், திரு.வி.க. உட்பட மிகப் பெரிய தமிழ் சான்றோர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் எடுத்த முடிவு, திருவள்ளுவர் தினம் வைகாசி அனுஷம் என்பதுதான்.” என தமிழறிஞர்களைப் பாராட்டி விருதளித்த 2012 தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். வரலாறு.காம், தமிழ்ஹிந்து (பால. கௌதமன்) வானியல், பழந்தமிழ், கல்வெட்டுக்கள் துணையுடன் இணையதளங்களில் எது தமிழ்ப் புத்தாண்டு? என்ற வாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ”வள்ளுவர் பிறந்த மாதமாக மறைமலையடிகள் குறித்த வைகாசியை, திருவள்ளுவர் திருநாட்கழகத்தினர் கொண்டாடிய வைகாசியை, பக்தவத்சலம் தலைமையிலான தமிழக அரசு அறிவித்த வைகாசியை, அண்ணா உடன்பட்ட வைகாசியைக் கருணாநிதி மாற்றி, திருவள்ளுவர் தினமாகத் தை இரண்டாம் நாளை 1971-ஆம் ஆண்டு அறிவித்தார். கிறிஸ்துவுக்கு 31 ஆண்டுகள் முந்திப் பிறந்தவர் திருவள்ளுவர் என மறைமலையடிகள் சொல்லிய ஆண்டை மாற்றாத கருணாநிதி, அடிகள் குறித்த வைகாசி மாதத்தை மட்டும் மாற்றித் தை என அறிவித்தார்.” (சாமி. தியாகராசன், திராவிடச் சான்றோர் பேரவையின் தலைவர் கட்டுரை, தினமணி, 14 ஏப்ரல் 2012).[1]
ஆனால், தைப் புத்தாண்டு, திருவள்ளுவர் திருநாள் 20-ஆம் நூற்றாண்டுத் தேர்வில் நாவலர் பாரதியார் போன்ற தனித்தமிழ் இயக்கப் புலவர்களின் பங்களிப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் மறைமலை அடிகள் தந்தார். 1935-ல் அடிகள் திருவள்ளுவர் திருநாள் கழக மாநாட்டின் தமது தலைமை உரையில் “கிறித்துப் பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும்” எனக் குறிப்பிடுகின்றார். “தமிழர்க்கெனத் தனி ஆண்டுமுறை வேண்டும் என்றும், அவ்வாண்டு முறை உலகம் போற்றும் ஒப்பற்ற மறை நூலை ஆக்கிய தமிழ்ப் பேராசிரியர் திருவள்ளுவர் பெயரால் அமைதல் வேண்டும் என்று ஆராய்ந்த அடிகள் அதன் காலத்தை கி.மு. 31 எனத் தீர்மானித்தார். திருவள்ளுவர் திருநாள் வைகாசித்திங்கள் பனை (அனுஷம்) நாள் எனவும் திடப்படுத்தினார்” (அடிகளின் மகன் எழுதிய மறைமலை அடிகள் வரலாறு). இரண்டு ஆண்டுகள் கழிந்தபின்னர் 1937-ல் திருச்சியில் நடந்த மாநாட்டில் அடிகளின் மாணவர் ஆன நாவலர் சோமசுந்தர பாரதியார் திருவள்ளுவர் பிறந்தநாளையும், தொடராண்டின் முதல்நாளையும் தைப் பொங்கலுக்கு மாற்றுகிறார் என்பது இருக்கும் சான்றாதாரங்களால் தெரிய வருகிறது. நாவலர் மறைவின் பின் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் திருவள்ளுவர் ஆண்டு, திருவள்ளுவர் பிறந்தநாளாகத் தை இரண்டாம் நாள் தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டிய புலவர்களுள் தலைமை வகித்தவராய் விளங்குகின்றார்.
திருவள்ளுவர் பிறந்தநாள், திருவள்ளுவர் ஆண்டாகத் தைப் பொங்கல் ஆன 20-ஆம் நூற்றாண்டுச் சரிதம்: 1937 டிசம்பர் 26-இல் திருச்சியில் ‘அகில இந்தியத் தமிழர் மாநாடு’ நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதே ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நாவலர் பாரதியார் தலைமையில் சென்னையில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்தது நினைவுகூரலாம். திருச்சி மாநாட்டில் பெரியார் ஈவேரா, கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேரா. கா. சுப்பிரமணியம், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க. மறைமலை அடிகளார், மதுரை பி.டி. இராசன், ஆர்க்காடு இராமசாமி முதலியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக் கோட்டை அழகிரி உட்படப் பலரும் பங்கேற்றனர். மறைமலை அடிகளார் போன்றோர் கொண்ட தமிழறிஞர் அவையில் தை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு என்றும், திருவள்ளுவர் திருநாள் என மாட்டுப்பொங்கல் தினத்தைக் கொண்டாடவும் நாவலர் விழாவின் தலைமை உரையில் வலியுறுத்தினார். 1949 தைப் பொங்கலின் போது சென்னையில் திருக்குறள் மாநாடு பல தமிழறிஞர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடந்துள்ளது. திருவள்ளுவருடன் தைப்பொங்கல் பெரிய அளவில் தமிழறிஞர்களால் இணைக்கப்படுவது 1949-ஆம் ஆண்டிலேதான் தொடங்குகிறது [2]. பள்ளிக் கல்வி இல்லாத தமிழர்களுக்கும் தனித்தமிழ் இயக்கத் தேர்வாகிய தைப்பொங்கலுடன் திருவள்ளுவரைச் சேர்த்தலை 1949-ஆம் ஆண்டுப் பொங்கலின் திருக்குறள் மாநாடு ஆரம்பித்தது என்று கருதலாம்.
சங்க இலக்கியங்களை அழிவில் இருந்து காத்து அருமையாக அச்சிட்ட உ. வே. சாமிநாதய்யர் அவர்களும் தமிழ்ப் பேராசிரியர் நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களின் திருவள்ளுவர் வரலாற்றாராய்ச்சியைப் பாராட்டிய நிகழ்ச்சி 1939-ல் நடந்திருக்கிறது. அதைப் பற்றி விளக்கமாகப் பதிவு செய்துள்ளவர் கி. ஆ. பெ. விசுவநாதம் ஆவார். கோயம்புத்தூரில் ’திருவள்ளுவர் படிப்பகம்’ என்ற அமைப்பு அவரை அழைத்து நீண்ட சொற்பொழிவை பிப்ரவரி 1953 ஏற்பாடு செய்தனர். பிரபல விஞ்ஞானி ஜி. டி. நாயுடு அவ்விழாவில் முத்தமிழ்க் காவலரின் பேச்சை ஒலிநாடாக்கருவி (spool tape recorder) கொண்டு பதிவுசெய்துள்ளார். அப்பேச்சை ஒலிநாடாவில் கேட்டு எழுதி 1953 நவம்பரில் திருவள்ளுவர் படிப்பகத்தார் கோவை மாநகரில் அச்சுப் புத்தகமாகப் பிரசுரித்தனர். அது பின்னர் பாரி நிலையத்தாரால் பல பதிப்புகளாய் வெளியாயின. வள்ளுவர் திருநாள், ஆண்டு உருவாக்கத்தில் நாவலர் பாரதியாரின் பெரும்பங்கு இந்நூலால் பெரிதும் தெரிய வருகிறது. 2012-ல் நூற்றாண்டு காணும் மு.வ.வும், ஔவை துரைசாமிப் பிள்ளையும் நூலுக்கு முன்னுரை அளித்துள்ளனர். எனவே, விரிவாக கி. ஆ. பெ. விசுவநாதம், வள்ளுவரும் குறளும், (கோவை, 1953) இங்கே பதிவு செய்வதில் மகிழ்வெய்துகிறேன்:
வள்ளுவரும், குறளும் (முதற்பதிப்பு: 1953, கோவை. 8-ஆம் பதிப்பு 1966, சென்னை பாரிநிலையம்)
முதற்பதிப்புரை:
வள்ளுவன் வாய்மொழி குறளோடு நிற்கின்றது. அது வாழ்வோடு ஒன்ற வேண்டும் என்பது எங்கள் கருத்து. அறம் வளர, அமைதி நிலவ, இன்பம் பெருக, குறள்நெறி தழைக்க வேண்டும். வள்ளுவர் படிப்பகம் அதற்கென்றே தொண்டு செய்து வருகின்றது.
“வள்ளுவரும் குறளும்” என்ற இந்நூல் படிப்பகத்தின் ஆண்டுவிழாவில் அறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதம் பேசியது. அது ஓர் சிறந்த நூலாக அமைந்திருக்கிறது. சிறியர், பெரியர், செல்வர், வறியர், ஆண், பெண் ஆகிய அனைவருடைய வாழ்வுக்கும் வேண்டிய செய்திகள் பல இந்நூலில் குவிந்து கிடக்கின்றன. ஆண்டு விழாவுக்கு வந்திருந்து, விழாவைச் சிறப்பித்து, இப்பேச்சினை ஒலிப்பதிவு செய்து அச்சிட்டு வழங்கிய வள்ளல் தமிழகத்தின் அறிஞர், உலக விஞ்ஞானி, உயர்திரு. G. D. நாயுடு அவர்களின் அருந்தொண்டிற்கு எங்கள் அன்பு கலந்த நன்றி.
அணிந்துரையும் முன்னுரையும் வழங்கிய அறிஞர் பெருமக்களுக்கு வணக்கம்.
கோவை - தங்கள்,
1-11-1953 – திருவள்ளுவர் படிப்பகத்தார்
வள்ளுவரும் குறளும்
அன்பும் பிரியமும் உள்ள தாய்மார்களே! பெரியோர்களே! அன்பர்களே!
உங்கள் அனைவருக்கும் இந்த நல்ல நாளிலே எனது தாழ்மையான வணக்கம். கோவை அனுப்பர்பாளையம் திருவள்ளுவர் படிப்பகத்தின் மூன்றாவது ஆண்டு விழா, பெரியோர்களாகிய உங்கள் முன்பு இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விழாவிலே பங்குபெறும் பேறு எனக்குக் கிடைத்தமைக்காக உள்ளபடியே நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விழாவில் நான் கலந்து கொள்வதை ஒரு பெரும் பேறாகவும் கருதுகின்றேன். திருவள்ளுவர் படிப்பகம் மூன்று ஆண்டுகளாக இந்நகரில் நடந்து வருவதும், ஆங்கிலம் படித்து அலுவல்களிலே இருக்கின்ற நல்ல தமிழ் இளைஞர்கள் இதிற்பங்கு பெற்றுத் திருக்குறள் வகுப்பை நடத்தி அதிற் படித்து வருவதும், எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய செய்திகளாகும்.
திருவள்ளுவர் படிப்பகத்தையும், திருவாளர்கள் சி. கே. சுப்பிரமணிய முதலியார், சி. எம். இராமச்சந்திரன் செட்டியார், அ. கந்தசாமிப் பிள்ளை போன்ற பழம்பெரும் புலவர்களையும் கொண்டது இந்த நகரம். சிறந்த புலவர்களைக் கொண்டு திருக்குறள் வகுப்பை நடத்திக் கொண்டு வருகின்ற கழகத்தைச் சேர்ந்த நீங்கள் திருவள்ளுவரைப் பற்றியும் திருக்குறளைப் பற்றியும் தெரிந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன் என்றாலும் என்னை அழைத்து இதைச் சொல்லும்படி செய்ததைவிட, ஒரு புலவரை யழைத்துச் சொல்லச் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து. மற்றும் என்னை ஏன் அழைத்துச் சொல்லச் சொன்னீர்களென்றால், திருக்குறள் புலவர்களுக்கு மட்டுமே சொந்தமல்ல, புகையிலை வியாபாரிகளுக்கும் சொந்தம் என்று காட்டுவதற்காக அழைத்திருக்கின்றீர்கள் என்றே நான் கருதினேன். அது உண்மையானால், புலவர்களிடத்திலிருந்து திருக்குறளைக் கொள்முதல்செய்து பொதுமக்களிடம் விற்பதுதான் வியாபாரிகளின் கடமையாக இருக்கும்.
நான் அறிந்த மட்டில் சில ஆண்டுகள் ஆராய்ந்து கண்டுபிடித்த சில செய்திகளைக்கொண்டு எனது கருத்தை உங்கள் முன்பு கொட்டிக் குவிக்கலாம் என்று எண்ணுகிறேன். இங்கு பேச்சாளர் பலரைப் போடவில்லை. “பலரைப் போட்டால் ஒருவரிடமும் ஒன்றாவது சரியாகக் கேட்க முடிவதில்லை. ஆகவே, ஒருவன் தான் பேச வேண்டும். அதுவும் நெடுந்நேரம் பேசவேண்டும்” என்று படிப்பகத்தின் தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். அதன்படியே பேச ஒப்புகிறேன், பேச்சு முடிகிற நேரம் எதுவென்று எனக்குத் தெரியாது. யாராகிலும் ஒருவர் இருவர் அப்படி எழுந்திருந்து போகத் தலைகாட்டுவதுதான் நான் பேச்சை நிறுத்தும் நேரம் என்று முன்னதாகவே இப்பொழுது உங்களிடம் சொல்லிக் கொள்ளுகிறேன். பேச்சின் தலைப்பு “வள்ளுவரும் குறளும்” என்பது. பேச்சின் குறிக்கோள் ‘நீங்கள் அனைவரும் திருக்குறளைப் படிக்க வேண்டுமென்பது. பேசுவதின் கருத்து ‘வள்ளுவர் உயர்ந்தவர், குறள் சிறந்தது’ என்பது. பேச்சினுடைய பலன் இனிமேல் உங்களிடத்திலே நாங்களெல்லாம் கண்டு மகிழப் போவது.
முதலில் பேசவேண்டுவது வள்ளுவரைப்பற்றி. அவரைப்பற்றிச் சொல்லவேண்டியது சில சொற்கள்தான். வள்ளுவர் பலர்; திரு சேர்ந்த வள்ளுவர் ஒருவர். குறள் பல; ஆனால், திரு சேர்ந்த குறள் ஒன்றுதான் உண்டு. திரு அடைமொழியாகச் சேர்ந்து தனிச்சிறப்பை யளிக்கின்ற பெயர்கள் தமிழ் நாட்டிலே பல உள. பல கோவை உண்டு நூல்களிலே. திரு சேர்ந்த கோவை ஒன்றே ஒன்றுதான். அது திருக்கோவை. பதிகள் பல உண்டு தமிழ்நாட்டிலே; ஆனால் திரு சேர்ந்த பதி திருப்பதி ஒன்றுதான். வாசகம் பல; ஆனால் திரு சேர்ந்த வாசகம் ஒன்றே ஒன்று. அது திருவாசகம். வள்ளுவர் என்று சாதியாலும் பெயராலும் பலர் இருந்தார்கள். வள்ளுவர் என்றால் பலரைக் குறிக்கும். திரு சேர்ந்த அந்தப் பெயருக்கு உரியவர் ஒருவர்தான். ‘திரு’ தனிச் சிறப்பு. அதைப் பெற்ற வள்ளுவர் திருவள்ளுவர்.
அவர் நமது நாட்டிலே கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர். இன்று (15-2-1953) கிறிஸ்து பிறந்து ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்து மூன்று ஆண்டுகளாயின. அதற்கு முன்னே பிறந்தவர் வள்ளுவர். அவர் பிறந்து 1984 ஆண்டுகளாயின. அவரைப் பற்றிய கதைகள் தமிழ்நாட்டிலே பல. அவையனைத்தும் அறிஞர்களாலே வெறுத்து ஒதுக்கப் பெற்றவைகள். திருவள்ளுவரைப் பற்றித் தமிழ்நாட்டில் வழங்குகின்ற கதைகள் கணக்கற்றவை. மயிலாப்பூரில் பிறந்தார் என்பது ஒரு கதை; ஆதி என்ற புலைக்குடி மகளுக்கும் பகவன் என்ற உயர்குடி மகனுக்கும் பிறந்தார் என்பது மற்றொரு கதை. ஏலேலசிங்கனாலே எடுத்து வளர்க்கப் பெற்றார் என்பது இன்னொரு கதை. அவர் மயிலாப்பூரில் கோயில் கொண்டார் என்பது வேறொரு கதை. அவர் வாசுகி என்ற ஒரு பெண்ணை மணந்தார்; அந்த அம்மாள் கிணற்றிலே தண்ணீரை இறைத்தார்கள்;‘அடி!’ என்பார். குடத்தை விட்டுவிட்டு ஓடி வருவார்கள்; திரும்பிப் போய்த்தான் பாதியில் தொங்கும் குடத்தை இழுப்பார்கள் என்பது இன்னொரு கதை. எத்தனையோ கதைகளைத் தமிழ்நாட்டில் புகுத்தி வைத்தார்கள். இந்தக் கதைகளால் உங்களுக்கும் நமக்கும் ஆவதென்ன? “உண்மையான வரலாறு எது?” என்ற ஐயப்பாடு தமிழ்நாட்டிலே உள்ள புலவர் பெருமக்களுக்குத் தோன்றியது.
“வள்ளுவர் வரலாறு எது?” என்று அறியப் புலவர்கள் அனைவரும் கூடினார்கள். கூடிய நகரம் சென்னை; கூடிய இடம் பச்சையப்பன் கல்லூரி; கூடிய நாள் 1939 மார்ச் 31. தலைமை வகித்தவர் மகாம்கோபாத்தியாய உ. வே. சாமிநாதய்யர். வந்திருந்த புலவர்கள் 530-க்கு மேற்பட்டவர்கள். பேசியவர் 11 பேர். 10 பேர் பேசியும் கூட எவரும் சரி என்று ஒப்பவில்லை. பதினொன்றாவதாகப் பேசியவருடைய பேச்சுதான் வள்ளுவருடைய உண்மையான வரலாறாக இருக்கவேண்டுமென்று கூட்டத்தினர் ஒப்பினர். கூட்டத்தினர் என்ன? தலைமை வகித்திருந்த உ.வே. சாமிநாதய்யர் அவர்களே எழுந்திருந்து ‘இது தான் சரி’ என்று பேசியவரை நெஞ்சோடு நெஞ்சம் இறுகத் தழுவிக் கட்டிக்கொண்டு மக்களுக்கு அறிவித்தார். அப்புறம் வசிஷ்டரே இராஜரிஷி என்று ஒப்புக்கொண்ட பிறகு உங்களுக்கும் நமக்கும் அதிலே கருத்து வேறுபாடு எதுவும் இருக்க முடியுமா? ஒப்ப வேண்டியதுதான். அப்படிப் பேசிய பெருமகன் பசுமலைப் பேராசிரியர் சோமசுந்தர பாரதி. அந்தப் பேச்சினை, உடனே மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் குறித்துக்கொண்டு, மதுரைக்குச் சென்று அச்சடித்து வழங்கினார்கள். உரிமையைப் பெற்றுக் கொண்டுவிட்டார்கள். விலை நான்கணா விதிக்கப் பெற்றது. இப்படிச் சொன்னதனாலேயே நீங்கள் ஒரு கடிதம் எழுதிப் போட்டுவிடாதீர்கள், புத்தகம் வேண்டுமென்று. பதிலே வராது. நேரிலே போய்க் கேட்கலாம் என்று துணிந்து போனால் புத்தகம் அங்கு இருக்காது. நாங்கள் அச்சடிக்கிறோம் என்று கேட்டாலும் அச்சடிக்கிற உரிமையும் கொடுக்கமாட்டார்கள். இது இன்று அவர்கள் செய்யும் நல்ல தமிழ்த்தொண்டு!
அவ் வரலாற்றினுடைய தொகுப்பு இதுதான். “வள்ளுவர் ஒரு சிறந்த தமிழ் மகன். நல்ல வேளாண்குடி மரபினர். அவர் பிறந்தது, வாழ்ந்தது, இறந்தது அனைத்தும் மதுரை. அவர் பாண்டிய மன்னனுக்கு அரசனது உள்படு கருமத் தலைவராக (Private Secretary) இருந்தவர். அதாவது, அரசனது கருத்தை மக்களுக்கு அறிவிக்கும் தொழிலைப் பெற்றிருந்தவர். இந்தத் தொழில் காரணமாகவே வள்ளுவர் என்ற பட்டத்தைப் பாண்டியனால் பெற்றவர். நல்ல வேளாண்குடி மகளை மனைவியாய்ப் பெற்றவர். உலகத்தை நோக்கி ஒரே நூலை நன்றாகச் செய்து கொடுத்து நம்மை விட்டு மறைந்தவர்.” இதுதான் அந்நூலின் தொகுப்புக் கருத்து. வள்ளுவரைப்பற்றி அறிய இது போதும்.”'
————————————————————————————————————————————————————————–
நாவலர் 1959-ல் மறைந்துவிட்டார். அவர் தலைமையில் தனித்தமிழ் இயக்கத்தவர் திருவள்ளுவர் தொடராண்டு என எடுத்த முடிவுகளைக் கி. ஆ.பெ. விசுவநாதம், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பேரா. கா. சு. பிள்ளை, டாக்டர் மு.வ., முனைவர் சி. இலக்குவனார் போன்றோர் பரப்புரை இடையறாது 1960களில் செய்துவந்தனர். 49 தமிழ் அறிஞர்களும் புலவர்களும் சான்றோர்களும் [3] கொண்ட தமிழகப் புலவர் குழு 9.5.1971இல் திருச்சியில் நடந்த கி.ஆ.பெ. விசுவநாதம் தலைமையில் குழுவின் முப்பதாம் கூட்டத்தில் பொங்கல் பெருநாள் ஒரு வாரம் முழுதும் விழாவாகக் கொண்டாடல் வேண்டும் என்று முடிவு செய்தது. அதன்படி பொங்கல் பெருநாள். தமிழர் திருநாள் -பொங்கல் பெருநாள்: மார்கழி இறுதி நாள் : போகி விழா, தை 1 : தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா, தை 2 : திருவள்ளுவர் விழா, தை 3: உழவர் விழா, தை 4 : இயல்தமிழ் விழா, தை 5: இசைத்தமிழ் விழா, தை 6 : நாடகத் தமிழ் விழா.
1971-ல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பில் திருவள்ளுவராண்டு செயல்படத் தொடங்கியது. தமிழறிஞர் பலர் பாராட்டினர். டாக்டர் மு. வ. அவர்கள் புதிதாக பொங்கலில் பிறக்கும் திருவள்ளுவர் ஆண்டுப் புத்தாண்டு பற்றி எழுதினார்: ”இன்று பொங்கல் என்று திருவிழாவைக் கொண்டாடுகிறார்களே! என்ன காரணம் தெரியுமா? ஒருவாறு தெரியும். அறுவடை யெல்லாம் முடிந்துவிட்டது. இத்தனை மாதமாகப் பாடுபட்டு உழைத்த பயன் கிடைத்து விட்டது. வீடுகளில் தானியங்கள் நிரம்பிவிட்டன. புது வெல்லம், புதுக் காய்கறிகள் முதலானவை கிடைக்கின்றன. இவ்வளவு நன்மைக்குக் காரணம் யார்? சூரியனே அல்லவா? சூரியன் இல்லாவிட்டால் மழை ஏது? பசுமை ஏது? புல் ஏது? தழை ஏது? எல்லா அளியும், நிறமும், வளர்ச்சியும் சூரியனால்தானே உண்டாகின்றன.
சூரியனே பயிர்களுக்கு உயிர் கொடுத்து வளர்ப்பவன். குடியானவர்கள் வாழ்வுக்கே சூரியன்தான் முதல் காரணம். அவர்கள் சூரியனே கண்கண்ட தெய்வம் என்று கொண்டாடுகிறார்கள். சூரியனால் கிடைத்த புதிய பொருள்களைப் பொங்கிச் சமைத்து உண்பதற்கு முன், சூரியன் செய்த நன்றியை மறக்காமல் பொங்கல் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். நகரங்களிலும் பொங்கல் விழா செய்கிறார்களே; அது ஏன்? உழவுத் தொழில் செய்யும் கிராம மக்கள் நன்றாக வாழ்ந்தால்தான் நகரங்களில் இருப்பவர்களும் வாழமுடியும். ஆகையால், அவர்களும் பொங்கல் விழா கொண்டாடுகிறார்கள்.
இன்னொரு காரணமும் உண்டு. முன் காலத்தில் வருடப் பிறப்புச் சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாள்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள். அந்த நாள் முதல் எல்லோருடைய வாழ்வும் பல வகையிலும் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தினார்கள். உண்ணுவதில் புதுமை, உடுப்பதில் புதுமை, வீட்டில் புதுமை, தெருவில் புதுமை, ஊரெல்லாம் புதுமை, மனத்திலும் புதுமை. புதிய பச்சரிசியைப் பொங்குகிறார்கள். புதிய காய்கறிகளைச் சமைக்கிறார்கள். புதிய ஆடைகளை வாங்கி உடுக்கிறார்கள். வீட்டுக்கு வெள்ளை அடித்து அழகு செய்கிறார்கள். தெருவில் புதுமண் போட்டு, செம்மண் இட்டு ஒழுங்கு செய்கிறார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்துகிறார்கள். மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்கிறார்கள். எல்லாரோடும் அன்பாகக் கலந்து பேசுகிறார்கள்; மகிழ்கிறார்கள். இப்படி நகரங்களில் புது ஆண்டுப் பிறப்பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்.” (1988 ஆம் ஆண்டு கோலாலம்பூர் பொங்கல் சிறப்பு மலர்).
ஆய்வு உசாத்துணை:
[1] 2003-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் பொங்கல் வாழ்த்துச் செய்தி:
[2] 1949-ல் பொங்கலின் போது நடந்த திருக்குறள் மாநாடும், பங்கேற்ற தமிழறிஞர்களின் சொற்பொழிவுச் சுருக்கங்களும்:
[3] சங்கத் தமிழ்ப் புலவர்கள் 49 பேர் என்பது இடைக்காலச் சைவ இலக்கிய மரபு. முதலில் இம் மரபை திருவள்ளுவமாலையில் காண்கிறோம். 49 என்னும் எண் வடமொழியின் எழுத்தெண்ணிக்கை ஆகும். இந்த எண்ணைக் கொண்டு கற்பனையான புலவர் பெயர்களைத் தருகிறது திருவள்ளுவமாலை. இப் புராணக்கதையின் வளர்ச்சியைத் திருவிளையாடல் புராணத்தில் ‘சங்கப் பலகை அளித்த படலம்’ அழகாகப் பாடுகிறது. ந. மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா உரையுடன் மேலும் ஆராய விரும்புவோருக்காக என் வலைப்பதிவில் தந்துள்ளேன் – நா. கணேசன்
--------------
வல்லமை இணைய இதழிலும், பெரியார் தோற்றுவித்த விடுதலை (சென்னை) இதழிலும் அச்சான கட்டுரை.