திருவள்ளுவர் தூக்குத் தண்டனையை வலியுறுத்துகிறாரா? - நாமக்கல் கவிஞர் விளக்கம்

பாரதியார் மறைவுக்குப் பின்னர் பாரதியார் புகழைப் பாடிக்கொண்டே இருந்தவர்களுள் மிக முக்கியமானவர் நாமக்கல் கவிஞர் ஆவார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பலமுறை சிறை சென்றவர், தமிழ்நாட்டின்
அரசவைக் கவிஞராக விளங்கியவர். இன்று நாமக்கல் கவிஞரைப் பற்றிப் பேசுபவர்கள் மிகவும் அரிது. கம்பனையும், வால்மீகியையும் ஒப்பிட்டு நூல்கள் எழுதினார். திருக்குறளுக்கு ஓர் அரிய உரையை எழுதினார். கவிஞரின் உரை பலராலும் பாராட்டப்பட்ட உரை. அவரது ‘என்கதை’ தமிழின் தன்வரலாற்று நூல்களில் சிறந்த ஒன்று. உவேசா, கோவை அய்யாமுத்து போன்றோர் எழுதிய ஆட்டோ-பயாகிராபிகள் போல, ‘என் கதை’ படித்தால் நினைவில் என்றும் நிற்கும். பாரதியின் 90-ஆம் நினைவுதினம் இன்று. சென்னை பாரதி சங்க விழாவில் 1956-ல் தலைமையேற்றுப் பாரதியார் பற்றி நாமக்கல் கவிஞர் ஆற்றிய உரை கற்போம்:
http://ilakkiyapayilagam.blogspot.com/2011/08/90_26.html

தமிழ்நாட்டில் இப்பொழுது சூடு பறக்கும் விவாதங்களில் ஒன்று. அரசாங்கம் தூக்குதண்டனையை நிறைவேற்ற வேண்டுமா? நீக்கவேண்டுமா? என்பதாகும். சுப்ரீம் நீதிமன்ற நீதிபதிகள் - கிருஷ்ணையர், பகவதி போன்றோர், நாகரீகம் அடைந்த நாடுகளைப்போல இந்தியாவிலும் அரசாங்கம் தூக்குதண்டனையை முழுதுமாக ரத்து செய்தல் வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். ’ஒன்றாக நல்லது கொல்லாமை’ என்ற வள்ளுவர் உள்ளத்தை ’இது துறவிகளுக்கு மாத்திரம்’ என்று கொள்ளமுடியாது. ராஜநீதியில் மனிதர்களைக் கொல்லலாம் என்று துறவிகள் ஒருமித்து சிங்கள ராஜாங்கத்திற்கு அறிவுரை தந்துவந்ததால் பல லட்சம் தமிழர்கள் ஈழத் தீவில் உயிர்ப்பலி ஆன கொடுமையை அண்மையில் உலகம் கண்டது. உதாரணமாக, புதியதலைமுறை டிவியில் சுப்பிரமணியன் ஸ்வாமிக்கும், சுப. வீரபாண்டியற்கும் நடந்த தருக்கம் பாருங்கள்:


திருவள்ளுவர் சமண சமயம் சார்ந்தவர் என்று விளக்கி எழுதும்போது குறள் 550-ன் பொருளை உணர்ந்து எழுதியவர் நாமக்கல் கவிஞர் என்று பல ஆண்டுகளுக்கு முன்னமே குறிப்பிட்டுள்ளேன். குறள் 550 மரண தண்டனையை ஆதரிப்பதன்று. பரிமேலழகர் தரும் பொருளை விலக்கிவிட்டு, நாமக்கல்லார் போன்ற கவிஞர்கள் சொல்லும் உரையை நடைமுறையாக்க இந்தியா முன்வர வேண்டும். உலகுக்கே பிற உயிர்கட்கு தீங்கு செய்யாமையைப் போதித்த சமணர் வழிவந்த திருக்குறள் மரணதண்டனையை விலக்கும் வழியைக் காட்டும் ஒளிவிளக்கு. நாகரீகமான நாடுகள் யாவும் மரண தண்டனையை விலக்கி வருவது வள்ளுவருக்கு உவப்பான வளர்ச்சி.

குறள் 550
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்

பரிமேலழகர் கூற்றின்படி:
Couplet 550
By punishment of death the cruel to restrain,
Is as when farmer frees from weeds the tender grain

If this is the meaning by Valluvar, he would have written kuRaL 550 this way:
"கொலையில் கொடியாரை *வேந்துகொல்லல்* பைங்கூழ்
களைகொல் வதனொடு நேர்"

வள்ளுவர் உள்ளம் தெளிவிக்கும் நாமக்கல் கவிஞர் உரை:
"550. கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்
களைகட்டதனோடு நேர்.

பதவுரை: கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களை கட்டதனோடு நேர் = கொலை செய்யும் கொடியவர்களை அரசன் அப்புறப்படுத்துவது பயிர்களுக்குக் களை பறிப்பதோடு ஒத்தது.

பொழிப்புரை: கொலை செய்யும் பாதகர்களை அரசன் அகற்றி விடுவது, பயிர்களைக் களையெடுப்பதற்குச் சமானம்.

விளக்கம்: "வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்தல்" என்று வலிந்து பதங்களைச் சேர்த்து 'கொடியவர்களை எல்லாம் கொன்ற்விடவேண்டும்" என்று பொருள் கொள்ளுவது திருவள்ளுவர் கருத்துகளுக்கு முற்றிலும் விரோதமானது. மேலும் தீவைப்பவர் , விஷம் கொடுப்பவர், ஆயுதங்களால் கொலை செய்பவர், பிறர் மனைவியிடம் விபசாரம் செய்பவர் ஆகிய இவர்களெல்லாம் கொன்றுவிடத்தக்க கொடியார் என்று குறிப்பது திருக்குறளின் பெருமைக்குத் தீங்கானது. கொலை செய்தவனைக் கொன்றுவிடுவதில் குற்றமில்லை என்று சொல்லவும் கூசி 'கொன்றுவிடுதல்' என்பதைச் சொல்லாமல் 'ஒறுத்தல்' என்று சொல்லுகிறார். 'ஒறுத்தல்' என்பது 'கொல்லுவது' என்பது அல்ல. சமயோசிதம் போல் 'தண்டிப்பது' என்ற பொருளே தருவது. கொலைக்குக் கொலை சரியான தண்டனை என்று சொல்லவும் கூசினார் என்பதை அனுமானிக்க இடமிருக்கிறது. ஆதலால், 'வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்து' என்று பதங்களைக் கூட்டிக் கொன்றுவிடத்தான் வேண்டும் என்று பொருள் கொள்ளுவது திருவள்ளுவருடைய கருத்தாக இருக்க முடியாது. 'களையெடுப்பது' என்ற உவமானத்திலும்கூட, களைகளைப் பயிர்களுக்கிடையிலிருந்து அப்புறப்படுத்துவது காரியமேயல்லால் அவற்றை அழிக்க வேண்டுமென்பது காரியமல்ல. பிடுங்கி எறியப்பட்ட களை பயிரில்லாத வேறு இடத்தில் விழுந்து அங்கே உயிரோடிருந்து விடுவதைப் பற்றிக் களைபறித்தவன் கவலைப்பட மாட்டான்."
(பக். 290, திருக்குறள் - நாமக்கல் கவிஞர் உரை, 2004, பூம்புகார் பிரசுரம்).

இன்றும், பல உலக நாடுகள் கொலை தண்டனையை ரத்து செய்துவருகின்றன என்பது நல்ல செய்தி. நாமக்கல் கவிஞர் சொல்வதுபோல் கொலையிற் கொடியாரைத் தண்டிக்க/ஒறுத்தல் வேண்டும். மனிதகுல வளர்ச்சிக்கு அதுவே உதவும்.

கொல்லுதல், வன்முறை அரசாங்கம் கையில் எடுத்துவிட்டால் என்ன நடக்கும் என்று பல நாடுகளில் பார்க்கலாம். தனியாக புத்த பிக்ஷுக்கள் கொல்லமாட்டார்கள், ஆனால் அவர்கள் கூடி வழிநடத்தும் சிங்கள அரசு கொல்லலாம் என்ற கொள்கைதான் இலங்கையில் தமிழ் இனப்படுகொலைக்கு மூல காரணம்.

இக்குறளில், சூட்சுமமே கட்டுதல் என்ற சொல்லில் வள்ளுவர் வைத்துள்ளார் எனக் கருதுகிறேன்.

கட்டல் என்பதைத் தமிழ்ச் சொல்லாகப் பார்த்தால் நாமக்கல்லார் உரை பொருள் வருகிறது. கட்டு (மாடு கட்டுதல், தாலி கட்டுதல் (கால்கட்டு), கட்டுப்பாடு ... ) போல.

ஆனால், கட்டல் என்பதை இந்தோ-ஐரோப்பியச் சொல்லாக (VaLLuvar's word, kaTTa in KuRaL 550, as a cognate with IE words like "cut" in English) பார்த்தால் வெட்டு, நீக்கு, கொல் என்ற பொருள் வரும். கர்த்தரி (கத்தரி) -rt- will turn to -T- in Prakrit.

வள்ளுவர் கூறும் குறள் 550 வழி அரசாங்கம் நடக்கட்டும்,
நா. கணேசன்





அண்ணா, நாமக்கல் கவிஞர், கவிமணி தேவி, உடுமலை நாராயண கவி - கவிமணியின் இல்லத்தில்.

இன்றைய செய்தி:
”தமிழ்நாட்டில் மரண தண்டனையே தேவையில்லை என்றுதான் கோருகிறோம். உலகில்
147 நாடுகளில் 117 நாடுகளில் மரண தண்டனை அறவே ஒழிக்கப்பட்டுள்ளது. ”

”மரண தண்டனையை அடியோடு ஒழிக்க வேண்டும். அரசியல் சட்டத்தில் இருந்து மரண
தண்டனை என்பதையே நீக்க வேண்டும்” என்று பேசினார் பழ.நெடுமாறன்.

குறள் 550-உம் பிற திருக்குறள்களும் - ஓர் ஒப்பீட்டாய்வு:

குறள் 328:
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை

என்னும் வள்ளுவரா கொலைத்தண்டனை கொடுக்கச் சொல்வார்? செந்தமிழ் மரபில் வள்ளுவர் போல இன்னொரு பெரிய சமண ஆசிரியர் இளங்கோ அடிகள். இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில் குற்றம் ஒன்றும் செய்யாத கோவலன் அரசனது ஆணை மேற்கொண்டு பொற்கொல்லனால் கொலைத்தண்டனை அனுபவிப்பதில் நிரபராதிகள் கொல்லப்படுவதைக் காட்டி உள்ளார். தூக்குதண்டனைக்கு எதிராகக் குரலெழுப்பவே கோவலன் அநியாயமாகக் கொல்லப்படுவதாகத் தாம் எழுதிய காப்பியத்தில் படைத்துள்ளார். கொலைத்தண்டனை அக்காலத்தில் இருந்தது என்பதற்காக, இளங்கோ அடிகள், திருவள்ளுவர் போன்றவர்கள் அதனை ஆதரித்துப் பரிந்துரை செய்தார்கள் என்பது அவர்களில் மனிதநேயத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகும். இளங்கோவின் குரல் தூக்கு தண்டனையின் அபாயத்தைக் காட்ட எழுந்த குரல். கோறலை நீக்கி, கடுந்தண்டனை கொடுக்க வள்ளுவர் பரிந்துரைக்கிறார் என்றால்தான் மற்றத் திருக்குறள்களோடு பொருள் இயையும் என்பது வெள்ளிடைமலை.

குறள் 321:
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.

குறள் 325:
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

குறள் 327:
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.

குறள் 330:
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

கொலை தண்டனை ஒரு நாட்டில் கொலைகளைக் குறைப்பதில்லை, நிறுத்துவதுமில்லை. கனடா நாட்டில் கொலைதண்டனையை நீக்கிய பின்னர் கொலைகள் குறைந்துள்ளன என்று அரசாங்கப் புள்ளிவிவரங்கள் அறிவிக்கின்றன.

குறள் 202
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்

3 comments:

கல்விக்கோயில் said...

அய்யா வணக்கம், கவியரசர் வரிகளில் சொன்னால் தூக்கு தண்டனையையே தூக்கில் போட வேண்டும் என்பது அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளும் கருத்து. ஆனால் அதை வலியுறுத்தும் காலம்தான் பல நடுநிலையாளர்களை விலகி நிற்கச் செய்கிறது என்பதே உண்மை.
அன்று அப்பாவி மாணவிகள் பேருந்தில் எரித்து கொள்ளப்பட்ட நிகழ்வின் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அறிவித்தபோதும், இன்று ராஜீவ் கொலையாளிகளுக்கு உதவியவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களு தண்டனை அறிவிக்கும் போதும் மட்டுமே தலைதூக்கும் இப்பிரச்சனை மற்ற சாதாரனக் காலங்களில் வெளிப்படுவதில்லையே ஏன்.

Nanjil Peter said...

மரணதண்டனையின் அவசியமின்மை பற்றி ஓர் குறள் கண்ணோட்ட ஆய்வு:
http://www.thirukkural2005.org/researchpaper/Rex_and_Muthusamy_Special_Prize.pdf

cp said...

மிக்க மகிழ்ச்சி, நன்றி அண்ணா! தங்களின் இந்த பதிவில் மிகவும் அற்புதமான பல திருக்குறள்கள் மேற்கோள் காட்டப்பட்டு இருப்பது மிக மிகச் சிறப்பாக உள்ளது!🔥🔥🔥