நாடாளுமன்றத்தில் இந்தியில் பேசினால் தமிழில் கேட்க வசதி

இந்தியில் பேசினால் தமிழில் கேட்க வசதி
பதிவு செய்த நாள் 2/6/2010 1:22:52 AM
நன்றி: தினகரன்

[இவ்வசதி கிடைக்குமானால் தமிழ்நாட்டு எம்பிகளுக்கு நன்றி!]

மதுரை : நாடாளுமன்றத்தில் ஆங்கிலம், இந்தியை மொழிபெயர்த்து ஹெட்போன் மூலம் அளிக்கப்படும் வசதி தமிழுக்கும் தேவை. இதற்காக சபாநாயகரை விரைவில் சந்திப்பேன் என மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார். மதுரையில் அவர் கூறியதாவது:
இந்தோனேசியா நாட்டுக்கு சென்று அங்குள்ள தொழில் அதிபர்களை அழைத்தின் பேரில், மதுரை மாவட்டத்தில் பெரிய அளவில் டிராக்டர் தொழிற்சாலை அமைய உள்ளது. விரைவில் ஆஸ்திரேலியா போகிறேன்.

நாடாளுமன்றத்தில் தமிழில் தான் பதில் கூறுவேன் என்று நான் சொன்னதாக சிலர் தவறாக கூறுகின்றனர். அமைச்சரோ, எம்பியோ நாடாளுமன்றத்தில் ஆங்கிலம், இந்தியில் பேசினால், அது மொழிபெயர்க்கப்பட்டு ஹெட்போன் மூலம் கேட்கும் வசதி உள்ளது. மேஜையில் 8 வரை பட்டன் உள்ளது. இதில் முதல் பட்டன் ஆங்கிலம், 2வது பட்டன் இந்தி. இதில் ஆங்கிலத்தில் பேசினால் இந்தியிலும், இந்தியில் பேசினால் ஆங்கிலத்திலும் உடனுக்குடன் மொழி பெயர்த்து ஹெட்போன் மூலம் அளிக்கப்படுகிறது. இதே போல் தமிழ் பேச்சு ஆங்கிலம், இந்தியிலும், ஆங்கிலம், இந்தி பேச்சு தமிழிலும், மொழிபெயர்த்து அளிக்கும் வசதி தேவை. தமிழுக்கு அந்த வசதியை அளிக்க வேண்டும் என்று தான் கூறுகிறேன். இதை நான் மட்டுமல்ல, திமுக மற்றும் விடுதலை சிறுத்தை, இந்திய யூனியன் மு.லீக் கட்சியினரும் கேட்டுள்ளனர்.

இது குறித்து நாடாளுமன்ற திமுக குழு தலைவர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதன்பிறகு சபாநாயகர் தன்னை சந்தித்து பேசும்படி எனக்கு அழைப்பு விடுத்தார். விரைவில் டெல்லியில் சபாநாயகரை சந்தித்து எனது கருத்தை கூறுவேன்.

4 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

முதலில், இவர்களுடைய ஹிந்தி எதிர்ப்பு அரசியல் பிசுபிசுத்துப்போய் விட்டதையே, இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

அடுத்ததாக, எந்த மொழியில் இருந்தால் என்ன, தன்னுடைய தொகுதி மேம்பாட்டிற்காக, பொதுப் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு பேசுவது அல்லவா எல்லாவற்றையும் விட முக்கியம்?

மக்கள் பிரதிநிதிகளாகச் சென்றவர்கள் எத்தனை பேர் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுடைய பிரச்சினைகளைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள்?

கேள்விநேரத்தில், கேள்வி கேட்டவரே சபையில் இல்லாமல் இருக்கிற நிலைமை நிறையத் தரம் பதிவாகியிருக்கிறது.

இவர்களுக்கு எதற்காக நன்றி சொள்ளவேண்டுமேன்பது, உண்மையிலேயே எனக்குப் புரியவில்லை!

Anonymous said...

அய்யா கிருஷ்ணமூர்த்தி ,

தமிழ் நாட்டு சட்ட சபையில் வரும் டெல்லிவாலாக்கள் தமிழா பேசுகிறார்கள்> உதாரணம் ஆளுநர்......

டில்லிக்காரனுக்கு அல்லக்கையாய் இருப்பது தங்கள் குடும்பத்தில் வழக்கம் போலும்!

கிருஷ்ண மூர்த்தி S said...

அன்புள்ள அனானி, நேர்மையோடு ஒரு கருத்தை எதிர்கொள்ளத் தெரியாத உங்களுக்கு பதில் சொல்வது அவசியமே இல்லை தான்!

இருந்தாலும் கூட, காரணமே இல்லாமல் வெளிப்படும் உங்கள் காழ்ப்புணர்வே கேள்வியை நியாயப் படுத்துவது போல ஒப்புதல் வாக்குமூலமாகி விட்டதே!

Nimal said...

இணைந்த இந்தியாவை விட இணைந்த இலங்கை எவ்வளவோ மேல் போல இலங்கைக்காரனான எனக்கு தெரிகிறது...

என்னதான் தமிழ்/தமிழன்/ஈழ/தமிழீழ பிரச்சினைகள் இருந்தாலும் இன்றுவரை இங்கு பாராளுமன்றத்தில் தமிழிலும் உரையாற்றலாம், சிங்களம் இங்கு அவசியமாவதைவிட இணைந்த இந்தியாவில் ஹிந்தி அவசியமாவதை பார்க்க சிரிப்பாக இருக்கிறது எங்களுக்கு... :-)