யுனித்தமிழே! இனிக்கும் மின்தமிழே! வணக்கம் (அன்புடன் புகாரி, 2005!)

யுனித்தமிழே! இனிக்கும் மின்தமிழே! வணக்கம்

கவிஞர் புகாரி, கனடா,
தமிழ்நாடு அறக்கட்டளை - ஃபெட்னா திருவிழா, டல்லஸ், டெக்சாஸ், 2005

[இன்று எல்லாப் பத்திரிகைகளும், இணையப் பல்கலையும்
(http://tamilvu.org), வலைப்பதிவுகளும், திரட்டிகளும், மடலாடு குழுமங்களும் ஒருங்குறி ஆகிவிட்டன. 2005 தொடக்கத்தில் நிலைமை அவ்வாறில்லை. அப்பொழுது, ஜிமெயில் கூடப் புத்தம் புதிது! தமிழ்மணம் விண்மீனாகச் சுடரும் ‘அன்புடன்’ புகாரி மடற்குழுக்களை மடைமாற்றி கூகுள்குழுக்கள் ஆக்கியதில் முன்னோடி. முதல் கூகுள்குழு அன்புடன் - இன்று ஒரு லட்சம் மடல்களைத் தாண்டி நடைபோடுவது கணிமை வரலாற்றில் ஒரு மைல்கல் - நா. கணேசன்]



யுனிகோடில் தமிழ் - ஓர் அறிமுகம்

அன்றுதொட்டு இன்றுவரை மாற்றங்களையே நாம் வாழ்வாய்ப் பெற்றிருக்கிறோம். இன்று நம் முன் ஓர் இனிப்பான மாற்றம் நம்மை மாறச் சொல்லி ‘அன்புடன்’ அழைக்கிறது. எந்த மாற்றமும் செய்யாமலேயே யுனிகோடுக்கு நாம் மாறலாம். வெறுமனே மாறும் அந்த மாற்றத்தையும் செய்யாதிருப்பது எப்படி சரி? தமிழ்த்தாய் புலம்பெயர்ந்து கொண்டே இருக்கிறாள். அவள் புலம்பெயரா விட்டால், அதன் மொத்த இழுக்கும் தமிழர்களாகிய நம்மையே வந்து சேரும்.

புலம்பெயர்ந்தாள் புலம்பெயர்ந்தாள் 
புலம்பெயர்ந்தாள் தமிழ்த்தாய்
இளமையோடும் புதுமையோடும்
தலைநிமிர்ந்தாள் தமிழ்த்தாய்
ஓசைகளாய் இருந்தவள்தான் 
ஓலைகளில் பெயர்ந்தாள்
ஓலைகளாய்ப் பெயர்ந்ததனால்
சங்ககாலம் கொண்டாள்
ஓலைகளில் வாழ்ந்தவள்தான் 
தாள்களுக்குள் பெயர்ந்தாள்
தாள்களுக்குள் பெயர்ந்ததனால்
தரணியெங்கும் நிறைந்தாள்
காகிதத்தில் கனிந்தவள்தான் 
கணினிக்குள் பெயர்ந்தாள்
கணினிக்குள் பெயர்ந்ததனால்
அண்டவெளி வென்றாள்
அழிந்திடுவாள் என்றோரின் 
நரம்பறுத்து நின்றாள்
இணையமென்ற மேடைதனில்
மின்நடனம் கண்டாள்
அயல்மொழியைக் கலந்தோரை 
வெட்கியோட வைத்தாள்
அழகுத்தமிழ் அமுதத்தமிழ்
ஆட்சிமீண்டும் பெற்றாள்

வலைப்பதிவு (blogs), வலைத் தளங்களெல்லாம் யுனிகோடுச் சிறகுகளைத் தனிவானில் உயர்த்தி வெற்றிச் சிறகுகளுடன் பறக்கின்றன. ஏன்?

எத்தனை எத்தனை எழுத்துக் குறியீடுகள் இப்போது? அஞ்சல், திஸ்கி, டாப்பு, டாம்மு, கீப்பு, டூப்பு, சோப்பு, வழவழா, கொழகொழா. போதுமடா சாமி. ஆளாளுக்கு ஒன்றை வைத்துக் கொண்டு அடித்துக் கொள்வது மலிந்துவிட்டது. எல்லோரும் ஒன்றாய் இணைய இன்று யுனித்தமிழ்தான் ஒரே வழி. இதில் மாற்றுக் கருத்து எவருக்கும் இருக்க முடியாது. ஆனால் மாறுவதில் கால தாமதப் படுத்துவோம் என்று சிலர் கூறுவதில் எனக்கு மாற்றுக் கருத்துண்டு.
      யுனித்தமிழ் நாம் கண்ட அருஞ்சாதனை - அதைக் 
குழுமங்களில் செய்வோம் பெருஞ்சோதனை
மாற்றுக்கருத்துக்களை மாற்றியெடுக்கும் பணியில் நான் முனைந்து செயல்பட்டு வெற்றியும் கண்டிருக்கிறேன். எனவே மிக விரைவில் யுனித்தமிழ்க் குழுமங்கள் தீபங்கள் ஏற்றித் தீபாவளியே கொண்டாடும் என்ற நம்பிக்கை எனக்குப் பூரணமாய் உண்டு. திஸ்கிதான் நரகாசுரன் என்று சொல்லும்போது மனம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால், மேலே ஏறுவதென்பது படிகளை மிதித்துத்தான். அஞ்சல், திஸ்கி 1.6, திஸ்கி 1.7 என்பதெல்லாம் படிகள், படிகள், படிகள். யுனிகோடு என்ற நாற்காலியை எட்டி விட்டால், பிறகெல்லாம் தமிழுக்குச் செங்கோல்தான்.
சிலிக்கான் பள்ளத்தாக்கும் 
சிலிர்க்கும் சிகரம் தொட்டு
மொழித்தேன் கூடு கட்டி
தழைக்கும் தமிழே வாழ்க
பழித்தோன் பணிந்தே போனான் 
பகைத்தோன் பதறிப் போனான்
இழித்தோன் கிழிந்தே போனான்
இறப்பிலாத் தமிழே வாழ்க
வலைக்குள் மொழிகளோ நூறு 
வனப்பாய்த் தமிழினைப் பாரு
நிலைப்பதில் அதுவும் ஒன்று
நெஞ்சமும் பூக்குது கண்டு
அழைப்பும் தொடுப்போ மின்று 
அன்புடன் ஒன்றுதல் நன்று
தழைப்பது தமிழ்தான் என்போம்
தரமென ஒன்றே கொள்வோம்
உலகத் தமிழ்தான் உயருது 
ஒன்றே தமிழென முழங்குது
வளங்கள் கொழிக்கும் வனமாய்
வளருது இணையத் தமிழும்
கலையும் தமிழரின் பண்பும் 
கடல்கள் தாண்டியே மலருது
சுழலும் கோள்களும் நின்றே
செந்தமிழ் கேட்டே ஆடுது
ஏழரைக் கோடித் தமிழரை 
ஈன்றவள் எத்தனைப் பெரியவள்
நாலரை நூறு ஆண்டுகள்
நூல்களில் அச்சாய் வாழ்பவள்
தோளுரம் கொண்ட மைந்தரால் 
தொல்லைகள் நீக்கப் பெற்றவள்
சாளரம் திறந்தே சிரிக்கிறாள்
சொக்கிடும் இணையச் செழுமையில்
பழமைக் கலைகளும் கொண்டவள் 
புதுமைக் கணியுகம் கண்டவள்
இளமை குன்றாத் தமிழ்த்தாய்
இணையப் பெருவெளி வென்றாள்
தமிழினி மெல்லச் சாவதோ 
தீப்பொறி தீர்ந்தே போவதோ
விழிகளை விரித்தே காண்பீர்
வெற்றியின் நெற்றியில் தமிழே

இனி நாம் மாறவேண்டிய மூன்று விசயங்களை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

அ. ஜிமெயில்

ஜிமெயில் யாருக்கு எதைத் தருகிறதோ இல்லையோ, தமிழனுக்குத் தங்கு தடையில்லாமல் யுனித்தமிழைத் தருகிறது. சரி இனி அதன் பலன்பட்டியலைப் பார்ப்போம். 1. யுனித்தமிழ் - Unicode Tamil: எந்த மாற்றமும் செய்யாமல், தரம்-encoding-ல் Unicode UTF(8)-டினை தேர்வு செய்தவுடன், மடைதிறந்த வெள்ளமாய் யுனித்தமிழினைத் தட்டச்ச முடியும். மேலும், 2. துரித அஞ்சல் தேடல் - Find any message instantly. 3. சில கிகாபைட்டுகளில் சேமிப்பு - 2+ GB storage. 4. உரையாடல்கள் - conversations. 5. மடல் வந்ததும் அறிவிப்பு - gmail Notifier. 6. வேண்டாத மடல் கழிப்பு - Spam control. 7. கோப்புகளும் வடிகட்டிகளும் - labels and Filters.

8. தமிழ்த்திரை - Tamil Interface 9. விசைப்பலகைக் குறுக்குவழிப் பொத்தான்கள் - keyboard shortcuts. 10. 'பாப்' எடுத்தல் மற்றும் திசைமாற்றல் - POP access and Forwarding.

பிறகென்ன தோழர்களே தோழியரே, இவற்றைவிட வேறு என்ன வேண்டும் ஜிமெயில் அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு? அழைப்பு இல்லாமல் யாரும் ஜிமெயில் பெற்றுவிடமுடியாது என்பதால், அழைப்பு வேண்டுவோர் buhari@gmail.com அல்லது naa.ganesan@gmail.com முகவரிக்கு எழுதினால், அழைப்புக்கு உடனே ஏற்பாடு செய்வோம்.

எகலப்பை 2.0: http://anbudanbuhari.com/xunicodetamil.html

ஜிமெயில் உதவி: http://gmail.google.com/gmail/help/tour/start.html
http://gmail.google.com/gmail/help/start.html
http://gmail.google.com/support/
http://gmail.google.com

ஆ. கூகுள் குழுமம்

அட, இதற்கு ஏன் 'ஆ' என்று கொடுத்தேன். தமிழர்களையெல்லாம் அப்படி ஆச்சரியப்படுத்தும் இந்தச் சேவை. தமிழுக்காகவே கூகுள் இதனைத் தொடங்கி இருக்கிறதோ என்ற சந்தேகம் நமக்கெல்லாம் நிச்சயம் வரும். அப்படி என்ன இருக்கிறது இதில். ஏன் நாம் நம் பழைய குழும சேவையை விட்டுவிட்டு இங்கே செல்லவேண்டும்?
நமக்கு வேண்டுவது அமுதம் - அதற்கான 
அட்சய பாத்திரமே கூகுள் குழுமம்.

மாலனின் திசைகள் - http://thisaigal.com/ எனது அன்புடன் புகாரி - http://anbudanbuhari.com/ மகேனின் எழில் நிலா - http://ezilnila.com/ என்று ஏராளமான வலைத்தளங்கள் தொடங்குவதெல்லாம் யுனித்தமிழில்தானே? வலைப்பூக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். மிக எளிதாக உருவாகக்கூடிய ஈசல் அது. அந்த ஈசலின் சிறகுகள் எல்லாம் யுனித்தமிழ்தான். எகலப்பை முன்பு திஸ்கி மட்டுமே எழுதும் நிரலியாக வந்தது. அது பின் எகலப்பை 2.0 ஐ வெளியிட்டு வருடம் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் யுனித்தமிழும் திஸ்கி தமிழும் ஒரு பொத்தானைக் குத்தி தரம் மாற்றித் தட்டெழுதிச் சாதனை புரியலாம், சமாய்த்து மகிழலாம்.

யுனிகோடுக்கு எழுத்துரு-font தேவையில்லை. ஏனெனில் விண்டோசின் பெரும்பாலான எழுத்துருக்களில் தமிழும் உண்டு. இன்றைய உலகமே யுனிகோடு உலகம்தான். இனி நாளைய உலகைப்பற்றிச் சொல்லத் தேவை இல்லை. கூகுளின் முகப்பிலிருந்து அனைத்தும் தமிழிலேயே வரும். பாதிக்குமேல் இப்போதே வருகிறது.

தமிழில் தகவல் தேடும் தொழில் நுட்பம் யுனிகோடில்தான் உள்ளது. அதாவது மாங்குமாங்கென்று நாம் இணையக் குழுமங்களில் எழுதித் தள்ளுகிறோம். ஆனால் பழையமடல் எதுவும் துழாவினால் கிடைப்பதில்லை. யுனிகோடாக இருந்தால், எந்தத் தமிழ்ச் சொல்லை இட்டுத் தேடினாலும், அந்தத் தமிழ்ச்சொல் நம் குழும மடல் ஏதோ ஒன்றில் இருந்தால், நச்சென்று வந்து விழுந்துவிடும். அதாவது உலகளாவி படைப்புகளின் விசயம் பரவும். தமிழும் ஆங்கிலத்தைப்போலத் தேடியதும் தட்டுப்பட்டு விடும். இது தமிழும் தமிழ் எழுதும் எழுத்தாளர்களும் வளர மிக மிக அவசியம். உதாரணமாக, "புகாரி" என்றோ "அன்புடன் புகாரி" என்றோ "வெளிச்ச அழைப்புகள்" என்றோ யுனிகோடில் கூகுளில் தட்டி, தேடு பொத்தானைச் சொடுக்கிப் பாருங்கள், நிறைய வாசிக்கக் கிடைக்கும்.
கூகுளு கூகுளு கூகுளு - அட 
குளுகுளு குளுகுளு கூகுளு
திஸ்கியும் பஸ்கிகள் எடுக்குது - மூச்சுத்
திணறியும் முனகியும் ஒடுங்குது.


இ. தமிழில் தட்டெழுத ...

http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
http://www.higopi.com/ucedit/Tamil.html

இங்கே சென்றால் விண்டோஸ் 98 பயன்படுத்துபவர்களும் மிக எளிதாக யுனிகோடு தமிழ் தட்டச்சு செய்யலாம்.

அன்புடன் - ஒரு கூகுள் தமிழ்க்குழுமம்

இதயம் மீறும் எண்ணங்களால் நாம் 
எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே


இந்த வாசகங்களோடு மார்ச் 2005ல் நான் தொடங்கிய யுனித்தமிழ்க் குழுமம். சுட்டியைச் சொடுக்கிப் பாருங்கள். மடல்கள் தேன் நயாகராவாய்க் கொட்டுகின்றன. ஏராளமான சோதனைகள் செய்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது உலகின் முதல் யுனித்தமிழ் குழுமமான எனது "அன்புடன்" குழுமம்.
http://groups.google.com/group/anbudan

என் 'அன்புடன்' உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது. பிரியம்போல் அங்கே உங்கள் சோதனை மடல்களை இட்டுக்கொள்ளலாம். அது உங்கள் குழுமம். அன்புடன் குழுமம்.
தமிழினி மெல்லச் சாவதோ 
தீப்பொறி தீர்ந்தே போவதோ
விழிகளை விரித்தே காண்பீர்
வெற்றியின் நெற்றியில் தமிழே

- அன்புடன் புகாரி

2 comments:

தமிழ் said...

அருமை

பகிர்வுக்கு நன்றிங்க‌

நா. கணேசன் said...

திகழ்,

உங்கள் இமெயில் முகவரி,
செல் எண் அனுப்பமுடியுமா?

நா. கணேசன்