கவிதை வடிவத்தில் கடிதம் எழுதுவதைச் சீட்டுக்கவி எனத் தமிழ் இலக்கியம் பேசுகிறது. சீட்டுக் கவிதையில் ஆணையோ, வேண்டுகோளோ இருக்கும். சுப்பிரமணிய பாரதியார் எட்டையபுரம் ஃசமீந்தாருக்கு 1919-ல் எழுதிய சீட்டுக் கவிதையை ஓலைத் தூக்கு என்று குறித்துள்ளார் [1]. சிறுகுறிப்பு எழுதி வைக்கும் காகிதத்தைச் சிட்டை என்பதுண்டு. லேபிள் என்பதற்கும் சிட்டை பொருந்தும். கடன்-சிட்டை = credit card. டிவிட்டர் சிட்டு அனுப்பும் சிற்றஞ்சலைச் சிட்டி என்று அழைக்கலாம் தானே:
நுண்பதிவுலகம் (microblogs), சிட்டி (twits), சிட்டர் (twitter-er), தமிழ்ச்சிட்டு திரட்டி
200 ஆண்டுகளுக்கு முன் ஒரு கவிஞர் எழுதிய சீட்டுக்கவியைத் தருகிறேன். மடவளாகம் இலக்குமண பாரதியார் இப்போது புகழ்பெற்றுள்ள கந்தசஷ்டிக் கவசத்தின் ஆசிரியர் தேவராய சாமிகளின் வழிவந்த சிவாச்சாரியர் குருக்கள். 15 - 20ஆம் நூற்றாண்டுவரை பாரதி அந்தணர் மரபில் இசை, கல்வி, கேள்வியில் சிறந்தவர்களுக்குக் கிடைத்த பட்டம் ஆகும். லட்சுமண பாரதியின் இரண்டு நூல்கள் மடவளாகத் தலபுராணம், சிவமலை முருகன் மயில் விடுதூது அழிந்துபட்டன. ஆனால், அவர் பாடிய அழகான சிவமலைக் குறவஞ்சி அச்சாகியுள்ளது, என்னிடமும் இருக்கிறது. மடவளாகத்தில் பச்சோடநாதர் - பாற்பதி பச்சைநாயகி சந்நிதியில் கிடைத்த தமிழிசைக் கருவூலம்தான் “பஞ்சமரபு” என்னும் நூல். பச்சோடு, சித்தோடு, பேரோடு, ஈரோடு போன்ற ஊர்ப்பெயர்கள் சைவ உட்சமயங்களான காபாலிக, காளாமுகர்களின் தாக்கத்தைக் குறிப்பவை என்று தமிழறிஞர் காட்டியுள்ளனர்.
அவர் விண்ணப்பிக்கும் வள்ளியம்மாள் கொங்குநாட்டில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வெள்ளையர்களால் சங்ககிரி துர்க்கத்தில் தூக்கிலிடப்பட்ட 'தீரன்' சின்னமலையின் குடும்பத்து முன்னோர். பாட்டுடைத் தலைவி பழயகோட்டை வள்ளியம்மன் சின்னமலைக்குப் பெரிய தாயார். திப்பு சுல்தானின் தோழனான தீரன் சின்னமலையின் காலம்: ஏப்ரல் 17, 1756 – ஜூலை 31, 1805.
சிவராத்திரித் தேவையிதெனச் சீட்டுக்கவி:
திருமருவு பழநிமலை முருகேசர் அரவிந்த
செங்கமல பாத தியானம்
திரிகின்ற தண்டுமிண் டுகள்கொண்ட கவிமலை
செகுத்திடச் செய்வச் சிரம்
செய்யகார் காலமழை என்னவே மதுரித
செழுந்தமிழ் கொழிக்கும் மேகம்
தென்பரவு மங்கைபுர இலட்சுமண பாரதி
தெளிந்தெழுதி விட்ட நிருபம்,
தருவுலவு காரையூர் நல்லசே னாபதிச்
சர்க்கரைமன் றாடி ராசன்
தனதுமனை யாள்இனிய கற்பினில் அருந்ததி
சமானசற் குணபூ டணி
சந்ததி நிரம்பிவளர் சிவமலைப் பல்லவன்
தந்தசீ மந்த புத்ரி
தருமமிகு பயிறகுல வள்ளிநா யகியெனும்
தாய்மனம் மகிழ்ந்து காண்க,
அருள்பரவு சிவன்உமைக் குத்திருக் கல்யாணம்
ஆனசுப தினம்நா ளையே
ஆகையால் மாங்கலிய விரதபூ சனைசெய்ய
ஆரும்ஆ தரவ றிகிலேன்
ஐந்துவள் ளப்பச்சை அரிசிபா சிப்பயறு
அதற்குள்ள மேல்முஸ் திதி
ஆவின்நெய் வெல்லம் உழுந்துபால் தயிர்வெண்ணெய்
அரியதயிர் எண்ணு கறிகாய்
மருவுலவு சந்தனம் குங்குமம் புனுகுசவ்
வாதுபரி மளமும் உனது
மருமகட் கோர்புடவை பாக்குவெற் றிலைநல்ல
வாழையிலை இவையா வுமே
வாணருக் கார்அனுப் பினதெனக் கேட்பவர்
மனதுமென் மேலும் மெச்ச
மன்னர்புகழ் சர்க்கரைத் துரைராசி தந்ததென
வரவனுப் பிடவேண் டுமே!
~ மடவளாகம்
இலக்குமண பாரதி (1767 -1859)
இன்னொரு சமயம் வேறு சில நல்ல சீட்டுக்கவிகளைக் காண்போம்!
நா. கணேசன்
[1] மகாகவி பாரதியார் 2 மே 1919 அன்று எட்டையபுரத்தில் எழுதிய சீட்டுக்கவி:
ராஜமகா ராஜேந்த்ர ராஜகுல
சேகரன் ஸ்ரீராஜ ராஜன்
தேசமெலாம் புகழ்விளங்கும் இளசைவெங்க
டேசுரெட்ட சிங்கன் காண்க!
வாசமிகு துழாய்த் தாரன் கண்ணனடி
மறவாத மனத்தான் சக்தி
தாசனெனப் புகழ்விளங்கும் சுப்ரமண்ய
பாரதிதான் சமைத்த தூக்கு!
மன்னவனே தமிழ்நாட்டில் தமிழறிந்த
மன்னரிலை என்று மாந்தர்
இன்னலுறப் புகன்றவசை நீமகுடம்
புனைந்தபொழு திருந்த தன்றே!
சொன்னலமும் பொருணலமும் சுவைகண்டு
சுவைகண்டு துய்த்துத் துய்த்துக்
கன்னலிலே சுவையறியுங் குழந்தைகள்போல்
தமிழ்ச்சுவைநீ களித்தாய் அன்றே!
புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
தமிழ்மொழியைப் புகழி லேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டிற் கில்லையெனும்
வசையென்னாற் கழிந்த தன்றே!
சுவைபுதிது! பொருள்புதிது! வளம்புதிது!
சொற்புதிது! சோதி மிக்க
நவகவிதை எந்நாளும் அழியாத
மாகவிதை என்று நன்கு!
பிரான்ஸென்னும் சிறந்தபுகழ் நாட்டிலுயர்
புலவோரும் பிறகு மாங்கே
விராவுபுகழ் ஆங்கிலத்தீங் கவியரசர்
தாமுமிக வியந்து கூறிப்
பராவியென்றன் தமிழ்க்கவியை மொழிபெயர்த்துப்
போற்றுகின்றார் பாரோ ரேத்துந்
தராதிபனே! இளசைவெங்க டேசுரெட்டா!
நின்பால்அத் தமிழ்கொ ணர்ந்தேன்!
வியப்புமிகும் புத்திசையில் வியத்தகுமென்
கவிதையினை வேந்த னே!நின்
நயப்படுசந் நிதிதனிலே நான்பாட
நீகேட்டு நன்கு போற்றி
ஜயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள்
பொற்பைகள் ஜதிபல் லக்கு
வயப்பரிவா ரங்கள்முதற் பரிசளித்துப்
பல்லூழி வாழ்க நீயே!
12 comments:
Thanks for the nice poems!
Ram
அன்பு கணேசன் அவர்களே,
சீட்டுக்கவியை மீட்டு எமக்குக் காட்டி இனிமைக் கூட்டி இலக்குமண, சுப்ரமணிய பாரதிகளைத் தமிழால் தீட்டி கவிதைகளைப் போற்றி, பதிவை நாட்டி பங்கு அளிப்புக்கு மிக மிக நன்றி.
அன்புடன்
ராதாகிருட்டிணன்
சூலை 17, 2009
நிறைய பழைய சொற்களைப் புதிதாய்த் தெரிந்து கொண்டேன்! நன்றி!!
தருமமிகு பயிறகுல.., கல்யாணம், சுபதினம், மாங்கலிய விரதபூசனை, மேல்முஸ் திதி ... என்று சரளமாக வடமொழிச் சொற்ளைக் கையாண்டிருகிறார் மடவளாகம் இலக்குமண பாரதியார். இருப்பினும் சுவையான சிட்டுக்கவி தான். அடுத்து வரும் சுப்பிரமணிய பாரதியார் தொடக்கதிலிருந்தே மணிப்ப்ரவாளம் தான்.
வடமொழி எழுத்துக்கள் எப்பொழுது தமிழுக்கு வந்தன? இப்படி வடமொழிச் சொற்ககளின் பயன்பாடு எப்பொழுது ஒத்துக்கொள்ளப் பட்டதான ஒன்றானது?
நல்ல பதிவு கணேசன்.
Thank you NG!
சீட்டுக்கவியை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி
சீட்டுக்கவியை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி
//சுப்ரமண்ய
பாரதிதான் சமைத்த தூக்கு!//
பாரதி சீட்டுக் கவியைத் "தூக்கு" என்றும் குறிப்பிடுகிறாரே கணேசன் ஐயா? சீட்டும் தூக்கும் ஒன்றேவா? வெவ்வேறா? விளக்க வேண்டுகிறேன்!
சீட்டில் இன்னதை அனுப்பி வைக்கச் சொல்கிறார்
தூக்கில் பாரதி அப்படி எதுவும் கேட்பதாகத் தெரியவில்லை! புகழ்வதோடு முடித்து விடுகிறார்!
அருமையான செய்தி.தங்களுக்கு நன்றி.
கோவலனுக்கு மாதவி வரைந்த மடல்கள்,சேரமானுக்குச் சிவபெருமான் வரைந்த மடல் என்னும் பட்டியல் இன்னும் நீண்டுகொண்டே போவது மகிழ்ச்சியளிக்கிறது.
மடல் வரையும் கலை தமிழனின் தொன்மைச் சொத்து எனத் தாங்கள்
மெய்ப்பிக்கிறீர்கள்.
தங்கள் ஆய்வு தொடர்க.
இன்னும் பல புதையல்களை எதிர்நோக்கும்,
தங்கள் அன்பன்,
மறைமலை இலக்குவனார்
பச்சோடு, சித்தோடு, பேரோடு, ஈரோடு போன்ற ஊர்ப்பெயர்கள் சைவ உட்சமயங்களான காபாலிக, காளாமுகர்களின் தாக்கத்தைக் குறிப்பவை என்று தமிழறிஞர் காட்டியுள்ளனர்.//
ஈரோடு ஆலயத்தின் ஈசனாரின் நாமம்
‘ஆர்த்ர கபாலீச்வரர்’
ஆர்த்ர கபாலம் - ஈர ஓடு.
ஆருத்ர கபாலீசுவரர் என்று தவறாகக் கூறுவர்;
நல்ல பதிவு.
தேவ்
நல்லதொரு வலைத்தளத்தைச் சுட்டியதற்கு நன்றி ஐயா,
ஜயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள் பொற்பைகள் ஜதிபல் லக்குவயப்பரிவா ரங்கள்முதற் பரிசளித்துப் பல்லூழி வாழ்க நீயே!
அன்பன்
கி.காளைராசன்
மிகவும் அழகான பதிவு. மனம் ஒன்றிப் படிக்கப் பொருள் விளங்குகிறது; மனம் ஆனந்தம் அடைகிறது. நன்றி.
குமாரசாமி.கு,
பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி.
Post a Comment