தமிழ்மரபு அறக்கட்டளை முனைவர் நா. கண்ணன் மின்தமிழ் கூகுள்குழுவில் Twitter(http://twitter.com/) பற்றி அறிமுகம் ஒன்றை எழுதினார். அங்கே, 'மைக்ரோப்லாக்கிங்', ’ட்விட்டர்’ - இணையான தமிழ்ச் சொற்கள் பற்றி ஒரு சுவையான திரி இழைக்கப்படுகிறது.
நா. கண்ணன்: ட்விட்டர் என்பது மிகப் பிரபலமாகி வரும் ஒரு இணையப் போக்கு. இதுவொரு குறுஞ்சேதி யோடை. சின்னச் சின்ன தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் ஊடகம். சும்மா உட்கார்ந்து கதையளக்க முடியாது. 140 அட்சரம். அவ்வளவு தான். வள்ளுவருக்குப் பிடிக்கும். இதை 'நான் என்ன செய்கிறேன்?' எனும் கேள்விக்கு விடையாக அறிமுகப் படுத்தினாலும், இது சும்மா, 'நான் மதிய உணவிற்குப் போகிறேன்' 'குட்நைட், தூங்கப் போகிறேன்' என்று சொல்ல வந்ததல்ல என்று தோன்றுகிறது. ஈரான் தேர்தல் விவரம் சுடச்சுட இவ்வோடையில் பரிமாறி யிருக்கிறது.
சின்னதாக அழகாக டிவிட்டர் என்பதுடன் ஒத்திசைவாக (rhyme with twitter) ஒரு சொல் வேண்டும்!
ஆம். ட்விட்டர் நுண்பதிவுலகை (microblogging) தோன்றச் செய்துள்ளது! twitter அனுப்பும் tweet தமிழில் ”சிட்டி” என்றாலே போதுமே. twitter-er = சிட்டு மடல் ”சிட்டி” அனுப்புபவர் “சிட்டர்” . சிட்டர் என்னும் சொல்லைத் திருவாசகத்தில் கூடக் காணலாம்: ’சிட்டாய சிட்டற்கே’ (திருவாசகம் 10, 7). வள்ளுவரின் வழித்தோன்றல்கள் நம் கணினிச் சிட்டர்கள்!
பூஞ்சிட்டு = சிறுகுருவி, தேன்சிட்டு = அமெரிக்காவின் சிறப்புகளில் ஒன்றாகிய ’ஹம்மிங்’ சிட்டுப்பறவைகள். இந்த ‘ஹம்மிங்’ இசை தேன்சிட்டின் சிறகுகள் வேகமாகக் காற்றில் அதிர்வதனால் ஏற்படும் இசை. சிட்டு = சிறு பறவை. சிட்டுக்குருவி, ...
சிட்டி/சிட்டுரை = நுண்பதிவில் இடும் சிறுமடல்/சிறுகடிதம்.
சிட்டுக்குருவி/சிட்டர் அனுப்பும் சிட்டுமடல் = “சிட்டி” இடுகை.
சிட்டி யென்பது நுண்பதிவின் இடுகை; அதுவொரு குறட்பதிவு. எண்ணச் சிக்கனம், நேரச் சிக்கனம் அங்கே இன்றியமையாதது.
நுணாக் காய் = சிறிய காய்வகையில் ஒன்று. இலந்தை வகை. அப்பெயர் பெற்ற ஊர், திரு-நுணா - திரு-நணா (தேவாரம்). வானி நதி காவிரியை வவ்வும் வவ்வானி/பவானி்யின் இடத்தில் பழைய ஊர்ப்பெயர் திருநணா. எழுத்தாளர் “சிட்டி”யில் இருந்து பாடகருக்கு வருவோம் :)
‘மைக்ரோப்லாக்’ நுண்மடல் இடுகை = நுண்ணி/உண்ணி. (ஈரம் < நீர்-. அதுபோல் உண்ணி < நுண்ணி). குருவாயூர் குழந்தைக் கண்ணன் உண்ணிக் கிருஷ்ணனை அறிவீர்கள்தானே.
‘மைக்ரோப்லாக்’ = நுண்பதிவு. செழுந்தமிழ் இலக்கியச் சொல்லாக, ’மைக்ரோபிலாக்’ நுண்மடல் இடுகையை நுணா/நுணல்/உண்ணி என்றும் அழைக்கலாம்.
யூனிகோட் நிறுவனம் தமிழில் ஒருங்குறி நிறுவனம் ஆவதுபோல் (அ) ஃபையர்பாக்ஸை நெருப்புநரி என அன்பாய் விளிப்பதுபோல்! ட்விட்டர் கம்பனிச் சேவையைப் பயனிக்கும் சிட்டுகள்/சிட்டர் அனுப்பும் நுண்மடல்கள் ”சிட்டிகள்”!
twitter-er (one who sends tweet messages) = சிட்டு (அ) சிட்டர்
twitter "tweet" message = சிட்டி (அ) சிட்டுரை
ட்விட்டர் சிட்டிகளுக்கு உதாரணமாக,
http://twitter.com/nchokkan
http://twitter.com/ksnagarajan
தமிழ்மணம் அன்பர்கள்,
http://twitter.com/thamizhsasi
http://twitter.com/rselvaraj
நுண்பதிவுலகின் ஒளிமயமான வருங்காலம்!
பழைய பனையோலைகள் போல நகர்கணிகளில் (மொபைல் கருவிகள்) தமிழ் வாசிக்கும் நாள் வந்துவிட்டது. கணிஞர்கள் எல்லோரும் சேர்ந்து இண்பிட் கருத்தரங்கு (http://www.infitt.org/ti2009/) போன்றவை நடாத்திப் பெரிய கம்பெனிகளை அணுகினால் எல்லாச் செல்பேசிகளிலும் தமிழ் தெரிய வைத்துவிடலாம்,
மேசைக்கணி, மடிக்கணி ~ இந்தியாவில் எல்லோரும் வாங்குவது என்பது எட்டாக் கனியாக உள்ளது. அரசாங்கம் எல்லாப் பள்ளி, நூலகம், பஞ்சாயத்து அலுவங்கள், ... இணைய வசதி தந்தாலொழிய இணையம் பல கோடி மக்களை எட்டவே எட்டாது. இதுபற்றிய என்பதிவு இங்கே.
இணையமும், இணையத் தொடுப்புகளும் செல்பேசிகளின் வழியாகத்தான் பல லட்சம் பேருக்கு இந்தியாவில் சென்றடையும். நுண்பதிவுச் சிட்டிகளில் குறுந்தொடுப்புகளாய்
(உ-ம்: http://bit.ly) செல்பேசிகளில் தமிழ் வலைப்பதிவுத் தொடுப்புகள் மக்களைச் சென்று சேரும். அரசாங்கம் பொது இடங்களில் உருவாக்கப்போகும் வலையேந்தல் (infrastructure) கூடங்களை நாடிச் சென்று விரும்புவோர் சிட்டர்கள் தரும் bit.ly தொடுப்புகளை வாசித்துக் கொள்வர்.
சிட்டிகளுக்குத் துழாவிகளும் உருவாகி வருகின்றன. கலெக்டா இன்னும் தமிழ்ச்சிட்டிகளைத் தேடமாட்டேன் என்கிறது :)
http://cybersimman.wordpress.com/2009/06/22/search-4/
தமிழ் நுண்பதிவுச் சிட்டிகளைத் திரட்டும் ”தமிழ்ச்சிட்டு” திரட்டியைத் தமிழ்மணம் விரைவில் தரலாமே.
நா. கணேசன்
மேலும் உசாவ,
ட்விட்டர்: எளிய அறிமுகம் - பாஸ்டன் பாலா
http://bit.ly/ljA9K
உங்கள் ட்விட்டர் தகவல்களை அப்படியே தரவிறக்க
http://www.tamilnenjam.org/2009/06/blog-post_5046.html
அடிக்கடி பதியும் சிட்டர்:
http://snapjudge.com/2009/06/12/top-16-tamil-twitter-users-by-influence/
நெருப்புநரி உலாவியில் ஒரு சிட்டிக் கும்மி
http://maruthanayagam.blogspot.com/2008/09/twitterfox-firefox.html
நுண்பதிவுலகம் (microblogs), சிட்டி (twits), சிட்டர் (twitter-er), தமிழ்ச்சிட்டு
Posted by நா. கணேசன் at 7 comments
Labels: microblogs , twits , twitter-er , சிட்டர் , சிட்டி , தமிழ்ச்சிட்டு திரட்டி , நுண்பதிவுலகம்
தமிழ் விக்கிப்பீடியா: இ. மயூரநாதனுடன் நேர்காணல்
தமிழ் விக்கிபீடியா - சென்னைக் கூட்டம்
தமிழ் வலைப்பதிவர்கள் விக்கிப்பீடியாவுக்கு ஆற்றக்கூடிய பங்களிப்புகளை விளக்கி சென்னையில் சூன் 13, 2009 அன்று கூட்டம் நடைபெறுகிறது. விவரங்களுக்கு விக்கிப்பீடியா: சூன் 13, 2009 சென்னை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை பார்க்கவும்.
நாள்: சூன் 13, 2009 சனிக்கிழமை மாலை 6 மணி.
இடம்: கிழக்குப் பதிப்பகம் மொட்டை மாடி
முகவரி: நியூ ஹொரைஃசான் மீடியா,
எண்.33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018
தமிழ் விக்கிப்பீடியா: இ.மயூரநாதன் உடன் இ-நேர்காணல்.
நன்றி: அண்ணாகண்ணன், சென்னை ஆன்லைன், மே 30, 2009
தமிழ் விக்கிப்பீடியா, இன்று இந்திய மொழிகளில், பல தர அளவீடுகளில் முன்னணியில் நிற்கும் ஒரு கட்டற்ற கலைக் களஞ்சியம். இதில் 2009 மே 30 அன்று வரை 18,226 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. 2003இல் இதனை முறையாக உருவாக்கியதிலிருந்து இன்றைய வளர்ச்சி நிலை வரை இதற்குத் துணை நிற்பவர், இ. மயூரநாதன்; இவர், இது வரை பல்வேறு தலைப்புகளில் 2760 கட்டுரைகளை தொடங்கி எழுதியுள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கிறார்; கட்டடவியல் கலைஞர். தம் ஓய்வு நேரத்தைத் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்காக, ஆக்கபூர்வமாகச் செலவிட்டு வருகிறார். இவருடன் சென்னை ஆன்லைன் தமிழ்த் தளத்தின் ஆசிரியர் அண்ணா கண்ணன் மின் அரட்டை வழியே உரையாடினார். அந்த இ-நேர்காணல் வருமாறு:
அண்ணா: விக்கிபீடியாவைப் பற்றி ஒரு பொதுவான அறிமுகத்தைத் தாருங்கள்.
மயூரநாதன்: இது ஒரு கட்டற்ற பன்மொழிக் கலைக் களஞ்சியத் திட்டம். பல மொழிகளில் இயங்கும் இந்த விக்கிப்பீடியாக்களில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் பங்களிப்புச் செய்து வருகின்றனர். இதில் எவரும் கட்டுரைகளைப் புதிதாக எழுதவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும், திருத்தவும் முடியும். இதற்காகப் பதிவு செய்து கொள்வது கூட அவசியம் இல்லை. விக்கிப்பீடியா ஐந்து அடிப்படைகளைக் கொண்டது. 1) கலைக் களஞ்சியம் வடிவில் அமைதல், 2) கட்டுரைகள் நடுநிலை நோக்கோடு அமைதல், 3) கட்டற்ற உள்ளடக்கம், 4) அடிப்படையான சில நடத்தை நெறிமுறைகள், 5) இறுக்கமான சட்ட திட்டங்கள் இல்லாமை.
அண்ணா: விக்சனரி, விக்கி செய்திகள், விக்கி பல்கலைக்கழகம், விக்கி மேற்கோள்கள், விக்கி மூலம், விக்கி நூல்கள், விக்கி இனங்கள், விக்கி பொது... எனப் பல பிரிவுகளைக் கண்டேன். இந்த விக்கி என்பதை விவரியுங்கள்.
மயூரநாதன்: விக்சனரி என்பது ஒரு அகரமுதலி. விக்கிச் செய்திகள், செய்திகளைத் தரும் ஒரு விக்கி மீடியாத் தளம். விக்கி மேற்கோள் என்பதில் பல்வேறு வகையான மேற்கோள்கள் தொகுக்கப்படுகின்றன. விக்கி மூலம் என்பது ஒரு முக்கியமான ஒரு விக்கித் திட்டம் இதில் பல மூல ஆவணங்களின் பிரதிகள் உள்ளன. விக்கி இனங்கள் பலவகையான உயிரினங்கள் தொடர்பான தகவல்களைத் தருவது. விக்கி பொது என்பது, பொது உரிமைப் பரப்பில் உள்ள படிமங்களைக் சேகரித்து வைக்கும் ஒரு விக்கித் திட்டம்.
அண்ணா: விக்கி என்பது ஒருவரின் பெயரா?
மயூரநாதன்: இல்லை. விக்கி என்பது ஹவாய் மொழியில் "விரைவு" என்னும் பொருள் கொண்டதாம்.
அண்ணா: இதை யார், எப்போது, ஏன் தொடங்கினார்கள்?
மயூரநாதன்: விக்கிமீடியா பவுண்டேசன் என்னும் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் இத் திட்டம் 2001ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டது. ஜிம்மி வேல்ஸ் (அமெரிக்க இணையத் தொழில்முனைவர் - American Internet Entrepreneur), லாரி சாங்கர் (அமெரிக்க மெய்யியலாளர் - American Philosopher) என்போர் இணைந்து விக்கிப்பீடியாவை நிறுவினர். உண்மையில் இதற்கு முன்னர் "நூப்பீடியா" என்னும் ஒரு கலைக்களஞ்சியத் திட்டத்தை ஜிம்மி வேல்ஸ் தனது தனியார் நிறுவனத்தின் மூலம் நடத்தி வந்தார். அது இதைப் போல யாரும் பங்களிக்கத்தக்க ஒரு கலைக் களஞ்சியம் அல்ல. ஏன் விக்கிப்பீடியாவைத் தொடங்கினார் என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை.
அண்ணா: என்சைக்ளோபீடியா என்பதை நினைவூட்டும் வகையில்தான் விக்கிப்பீடியா எனத் தலைப்பு இடப்பட்டதா?
மயூரநாதன்: ஆம். இது "விக்கி" ,"என்சைக்கிளோப்பீடியா என்னும் இரு சொற்களின் சேர்க்கையினால் உருவானது.
அண்ணா: 267 மொழிகளில் இயங்கும் விக்கிப்பீடியாவில் ஆங்கில மொழி 28,97,231 கட்டுரைகளுடன் முதல் இடத்தில் உள்ளது. தமிழ், 18,226 கட்டுரைகளுடன் 68ஆம் இடத்தில் உள்ளது. தமிழ் விக்கிபீடியா எப்போது தோன்றியது? அதற்கு முன்முயற்சிகள் எடுத்தோர் யார் எவர்?
மயூரநாதன்: தமிழ் விக்கிப்பீடியா 2003ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டதாகப் பதிவுகள் காட்டுகின்றன. ஆனால் இது தமிழ் விக்கிப்பீடியாவுக்காக ஒரு இடம் ஒதுக்கப்பட்டதையே குறிக்கிறது. அப்போது ஆங்கில இடைமுகத்துடன் கூடிய ஒரு வெற்றுப் பக்கமே இருந்தது. அவ்வாண்டு நவம்பர் மாதத்திலேயே தமிழ் இடைமுகத்துடன் கூடிய முறையான தமிழ் விக்கிப்பீடியா உருவானது. செப்டெம்பர் 2003இல் ஒரு தமிழ் அன்பர் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான ஒரு பக்கத்தைத் திறந்துவிட்டார். இது ஆங்கில இடைமுகத்தோடு கூடிய ஒரு பக்கம். இதில் இருந்த ஓரிரு சொற்கள் தமிழ் விக்கிப்பீடியா தொடர்பானவை அல்ல. இது ஒரு சோதனை முயற்சியாக இருக்கலாம். பின்னர் நான் நவம்பர் முதல் பகுதியில் தமிழ் இடைமுகத்தை உருவாக்குவதற்கான மென்பொருளை மொழிபெயர்க்கத் தொடங்கி அம்மாத இறுதியில் முடித்தேன். அத்துடன் அக்காலத்தில் இருந்த ஆங்கில விக்கியின் முதல் பக்கத்தைத் தழுவி ஒரு தமிழ் முதல் பக்கத்தையும் உருவாக்கினேன். அது முதல் முறையான தமிழ் விக்கிப்பீடியா உருவானது எனலாம்.
அண்ணா: இந்திய மொழிகளில் தெலுங்கு (42,918), இந்தி (32,681), மணிப்புரி (23,414), மராத்தி (23,211), பெங்காலி (19,674) ஆகியவை தமிழைக் காட்டிலும் அதிகக் கட்டுரைகளுடன் உள்ளன. அவர்களுக்கு அதிக விழிப்புணர்வு இருப்பதாகக் கொள்ளலாமா?
மயூரநாதன்: அப்படிச் சொல்வதற்கு இல்லை. சில இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் உட்படப் பல விக்கிப்பீடியாக்களில் புள்ளி விபரங்களில் கட்டுரை எண்ணிக்கைகளைக் கூடுதலாகக் காட்டும் நோக்கில் மிக மிகச் சிறிய அல்லது வெற்றுக் கட்டுரைகளை ஆயிரக்கணக்கில் தானியங்கிகள் மூலம் உருவாக்கியுள்ளனர். இந்த விடயத்தில் நாம் தொடக்கம் முதலே கட்டுப்பாட்டுடன் நடந்து வருகிறோம். கூடியவரை கட்டுரைகள் பயனுள்ள தகவல்களைக் கொண்டவையாக இருக்கவேண்டும் என்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகின்றோம்.
இதனால், முன்னர் கூறியது போல் பொதுவான கட்டுரை எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியா இந்திய மொழிகளுள் ஆறாவது இடத்தில் இருந்தாலும், பல முக்கியமான தர அளவீடுகளில் முன்னணியிலேயே உள்ளது. விக்கிப்பீடியாவில் இரண்டு முறைகளில் கட்டுரை எண்ணிக்கை கணக்கிடப்படுகின்றது. ஒரு முறையில் கட்டுரையின் அளவைக் கவனிக்காமல் எல்லாக் கட்டுரைகளையுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள் இன்னொரு முறையில் 200க்கும் குறைந்த எழுத்துகளைக் கொண்ட மிகச் சிறிய கட்டுரைகளைத் தவிர்த்து விட்டுக் கணக்கெடுக்கிறார்கள். இந்த இரண்டாம் முறையின் அடிப்படையில் பார்க்கும்போது தமிழ் விக்கிப்பீடியா இந்திய மொழிகளில் முதல் நிலையில் உள்ளதைக் காணலாம். இதில் 3.4 மில்லியன் சொற்களுக்கு மேல் உள்ளன. அத்துடன் தொடர்ச்சியாக மிகவும் முனைப்பாக இயங்கும், இந்திய மொழிகளில் உள்ள மிகச் சில விக்கிப்பீடியாக்களில் தமிழும் ஒன்று.
அண்ணா: தமிழ் விக்கிப்பீடியாவின் முக்கியத்துவம் என்ன?
மயூரநாதன்: ஆங்கில மொழி பேசுவோருக்கு ஆங்கில விக்கிப்பீடியாவின் முக்கியத்துவத்தையும் அது அவர்களுக்கு ஆற்றும் பங்கையும் விட, தமிழ் விக்கிப்பீடியா தமிழ் மக்களுக்குக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதும் அவர்களுடைய வளர்ச்சிக்குக் கூடிய பங்காற்றக் கூடியது என்பதும் எனது கருத்து.
உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களுக்கு, உலகின் பல்வேறு அறிவுத் துறைகள் தொடர்பிலான, தமிழ் மொழி மூலமான, முதன்மையான, பொது உசாத்துணை வளமாக இருப்பதற்கான வாய்ப்பு, விக்கிப்பீடியாவுக்கு உண்டு. எண்ணற்ற கட்டுரைகளை உள்ளிடுவதற்கான இடவசதிக்குப் பஞ்சம் இல்லை. பல்வேறு மொழி விக்கிப்பீடியாக்களிலும் காணப்படும் கோடிக்கணக்கான தகவல்களையும் படிமங்களையும் காப்புரிமைப் பிரச்சினைகள் இன்றிப் பகிர்ந்து கொள்ளக்கூடிய வசதி; உலகின் எந்த மூலையிலும் இருந்து இலகுவாக அணுகக்கூடிய வசதி; உலகின் எப்பகுதியிலுமிருந்து, எவரும் இலகுவாகப் பங்களிப்புச் செய்யக்கூடிய வசதி; இவற்றுக்கான தொழில் நுட்பத் திறன்களையும், நிதித் தேவைகளையும் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு இனங்களையும் சேர்ந்த ஆர்வலர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி என்பன தமிழ் மக்களுக்கு மிகப் பயன் தரக்கூடியவை ஆகும்.
உலகின் எல்லாப் பகுதிகளிலும் குறிப்பாக இந்தியா, இலங்கை போன்ற தாயகப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்காகப் பொதுவான கலைச்சொற்களை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு தளம் இதுவரை கிடையாது. இதனால் ஒரு பகுதியினருடைய நூல்களை மற்றவர்கள் புரிந்து கொள்ளும் வாய்ப்புக் குறைகிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் எதுவும் குறிப்பிடத்தக்க வெற்றி எதையும் பெற்றதாகத் தெரியவில்லை. இவ்விடயத்தில் தமிழ் விக்கிப்பீடியாவை மிகத் திறமையாகப் பயன்படுத்த முடியும். இந்த வகையில் விக்கிப்பீடியாவின் இணைத் திட்டங்களில் ஒன்றான விக்சனரியுடன் இணைந்து பணியாற்ற முடியும்.
பிற முன்னேறிய நாடுகளில் வழங்கும் மொழிகளைப் போலன்றித் தமிழ் மொழியில் விபரமான கலைக் களஞ்சியங்களை வெளியிடக்கூடிய வசதிகளோ, அப்படி வெளியிட்டாலும் குறிப்பிட்ட கால இடைவெளிகளிலாவது அவற்றை இற்றைப்படுத்தித் திருத்தி வெளியிடக்கூடிய வசதியோ நமக்கு இல்லை. வாதத்துக்காக இது முடியும் என்று வைத்துக் கொண்டாலும்கூட அவற்றை வாங்கிப் பயன்படுத்தக்கூடிய வசதி நம்மில் மிக மிகப் பலருக்குக் கிடைக்காது. இந்தப் பின்னணியில் விக்கிப்பீடியா தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ள ஒரு பெரும் கொடை எனலாம். மிகக் குறைந்த பணம் மற்றும் நேரச் செலவுகளுடன் மிகப் பெரிய கலைக் களஞ்சியம் ஒன்றை உருவாக்கக்கூடிய வாய்ப்பு நம் கையில் உள்ளது. இதனை உணர்ந்துகொண்டு பயன்படுத்திப் பயனடைய நாம் முயல வேண்டும்.
தமிழ் அனைத்து உயர் அறிவுத் துறைகளையும் தழுவிய மொழியாக வளர வேண்டும். இது தொடர்பில் முக்கியமான பணி, நமது தாய்மொழி மீது நம்மவர்களுக்கே உள்ள நம்பிக்கையின்மையை இல்லாமலாக்க உதவுவதுதான். தமிழ் விக்கிப்பீடியாவை ஒரு சாதாரண கலைக் களஞ்சியமாக மட்டுமன்றித் தமிழ் மொழி மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் சின்னமாகவும் வளர்த்து எடுக்க முடியும். இதனால் எல்லோருக்கும் தமிழ் மொழியின் வல்லமை குறித்த நம்பிக்கை இன்மையைப் போக்க முடியும்.
தமிழில் எழுதக்கூடிய வல்லமை கொண்ட துறை வல்லுனர்களும், பிற அறிஞர்களும் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க முன்வர வேண்டும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் முதலியவற்றைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் போன்றவர்கள் இக் கலைக் களஞ்சியத்தை நம்பகத்தன்மை கொண்ட முழுமையான ஒன்றாக வளர்த்தெடுக்க தங்கள் பங்கைச் செலுத்த வேண்டும்.
அண்ணா: தமிழ் விக்கியில் கட்டுரைகள் என்ற சொல் பயன்பாட்டினை விளக்குங்கள். குறிப்புகள், செய்திகள், மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றிலிருந்து இங்குள்ள கட்டுரைகளை வேறுபடுத்த முடியுமா?
மயூரநாதன்: இங்கே கட்டுரை என்பது கலைக்களஞ்சிய வடிவில் அமைந்த ஒரு ஆக்கத்தைக் குறிக்கும். இது பிற மொழிக் கட்டுரைகளிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டதாகவும் இருக்கலாம். ஆனால், செய்திகள், குறிப்புகள் என்பதில் இருந்து இது வேறுபட்டது. விக்கிப்பீடியாவில், கட்டுரைகள் என்பதைத் தவிர மேலும் பல விதமான பக்கங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, படிமப் பக்கங்கள், வழிமாற்றுப் பக்கங்கள், உதவிப் பக்கங்கள், உரையாடல் பக்கங்கள், தொகுப்பு வரலாற்றுப் பக்கங்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
அண்ணா: ஓரிரு வரிகள் கொண்ட சிறு குறிப்புகளைக் குறுங்கட்டுரைகள் என்ற தலைப்பில் கண்டேன். இது பொருந்துமா?
மயூரநாதன்: இவ்வாறான கட்டுரைகளை ஆங்கில விக்கியில் Stub என்பார்கள். இதையே தமிழில் குறுங்கட்டுரை எனத் தமிழில் குறிப்பிடுகின்றோம். பொது விதிகளின் படி இதை ஒரு கட்டுரை என்று கூறமுடியாவிட்டாலும் மேலும் விரிவாக்குவதற்கான ஒரு ஆரம்ப நிலைக் கட்டுரையாக இதைக் கொள்ளலாம்.
அண்ணா: ஒலிபெயர்ப்புகளில் தமிழ் விக்கியின் கொள்கை என்ன? ஆலன் பார்டர் எனத் தமிழகத் தமிழ் நாளிதழ்கள் எழுதும் பெயர், அலன் போடர் என இருக்கக் கண்டேன்?
மயூரநாதன்: இது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு இருக்கக்கூடிய முக்கியமான ஒரு பிரச்சினை. தமிழ் விக்கிப்பீடியாவில் உலகின் பல பாகங்களிலும் இருந்து தமிழர்கள் பங்களிக்கிறார்கள். இவர்களில் பலர், இலங்கைத் தமிழர்கள். இலங்கையில் தமிழ்நாட்டில் எழுதுவது போல் ஆலன் பார்டர் என்று எழுதுவதில்லை. அலன் போடர் என்றுதான் எழுதுவார்கள். இது ஆங்கிலப் பெயர்களை ஒலிபெயர்க்கும் பல சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய பிரச்சினை. இது பற்றி ஒரு முடிவான கொள்கை எதுவும் வகுக்கப்படவில்லை. ஆனால், ஒரு முறையில் யாராவது எழுதும்போது, மற்ற முறையையும் அடைப்புக் குறிக்குள் தரலாம் என்று பரிந்துரை செய்கிறோம்.
அண்ணா: மணித்தியாலங்கள், திகதி.. என இலங்கைத் தமிழின் மணம் அதிகமாக வீசுகிறது?
மயூரநாதன்: இருக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் கூடிய தொகுப்புகளைச் செய்தவர்களில் பெரும்பாலோர் இலங்கைத் தமிழராக இருப்பதைக் காணலாம். இதனால் இந்தத் "தமிழ் மணம்" தவிர்க்க முடியாததே. ஆனால், இந் நிலை இப்போது முன்னரிலும் குறைவாகவே உள்ளது. மேலும் பல பங்களிப்பாளர்கள் தமிழ்நாட்டிலிருந்து வரும்போது இந்தச் சமமின்மை நீங்கிவிடும்.
அண்ணா: தமிழ் விக்கியில் ஆங்கிலத்தைத் தவிர்க்கும் முயற்சி இருப்பினும் வடசொற்கள் நிறைய கலந்திருக்கின்றன. இதில் மொழித் தூய்மை பேணும் முயற்சி ஏதும் உண்டா?
மயூரநாதன்: ஆம். இயன்ற அளவு வட மொழி தவிர்த்து எழுதுவது என்பதே எமது குறிக்கோள். ஆனால், பல சொற்கள் தமிழ் போலவே மாறிவிட்டதனால், எழுதும் எல்லோருக்குமே அது வட சொல் எனத் தெரியாது. தெரிந்தாலும் அதற்கு ஈடான தமிழ்ச் சொல் தெரிவதில்லை. இதை விட புழக்கத்திலுள்ள வட சொற்களை நீக்குவது சரியில்லை என்று வாதிடும் பங்களிப்பாளர்களும் இருக்கின்றனர். இதனால், படிப்படியாகத்தான் ஏதாவது செய்ய முடியும்.
அண்ணா: கட்டிடம் என்பதை விட, கட்டடம் எனக் கூறுவதே சரி. எண்ணிணால், நூல்கலை எனப் பல தட்டச்சுப் பிழைகளையும் கண்டேன். தமிழ் விக்கிபீடியாவில் இலக்கணம், மொழி நடை ஆகியவற்றைச் சீரமைக்க வழியுண்டா?
மயூரநாதன்: நீங்கள் சொல்வது சரிதான். இத்தகைய பிழைகளை விக்கிப்பீடியாவில் மிகச் சுலபமாகவே திருத்த முடியும் ஆனால், இதற்குப் பல பங்களிப்பாளர்கள் வேண்டும். கட்டுரைகளாக எழுதாவிட்டாலும், தமிழ் அறிவு உள்ளவர்கள் இத்தகைய பிழைகளைத் திருத்தவாவது உதவி செய்யலாம்.
அண்ணா: ஒருவர் உள்ளிடும் ஆக்கம், அவருடைய சொந்த ஆக்கம் என்பதை எப்படி கண்டறிவீர்கள்? காப்புரிமையைப் பொறுத்த அளவில் விக்கிபீடியாவின் நிலை என்ன?
மயூரநாதன்: விக்கிப்பீடியாவைப் பொறுத்தவரை ஒருவருடைய ஆக்கம் அவருடைய சொந்த ஆக்கமாக ஆகாது. ஒவ்வொரு கட்டுரையின் உருவாக்கத்திலும் பலர் பங்கு பெறுவதால் இதில் எவருக்கும் தனியுரிமை கிடையாது. விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகள் அனைத்துமே குனூ கட்டற்ற ஆவண உரிமம் என்னும் உரிமத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. இதன்படி எவரும் இக்கட்டுரைகளைப் பிரதி செய்யவோ, மாற்றவோ, விநியோகிக்கவோ முடியும்.
அண்ணா: கட்டுரையை எழுதியவர் / திருத்தியவரின் பெயரை அந்தந்தக் கட்டுரைகளில் காட்டுவது அவர்களை ஊக்குவிக்கும்தானே? இப்படி பெயர்கூட இல்லாமல் எப்படி தன்னார்வலர்கள் முன்வருகிறார்கள்?
மயூரநாதன்: கட்டுரைகளைத் தொடங்கியவர்கள், விரிவாக்கியவர்கள், திருத்தியவர்கள், என்ன திருத்தம் செய்தார்கள், எவ்வளவு தகவல்களைச் சேர்த்தார்கள் போன்ற எல்லா விபரங்களும் திருத்த வரலாற்றுப் பக்கங்களில் பதியப்பட்டுள்ளன. உள்ளிடப்படும் எந்த விபரமுமே அழிந்து போவதில்லை. ஐந்து வருடத்துக்கு முன் நான் தொடங்கிய கட்டுரை ஒன்றின் அக்கால வடிவத்தை இன்றும் பார்க்க முடியும். ஒவ்வொரு கட்டுரைப் பக்கத்தின் மேற்பகுதியிலும் காணப்படும் "வரலாறு" என்னும் பொத்தானை அழுத்தினால் போதும்.
அண்ணா: அருமை.
ஒரு செய்தியை இருவர் இரு கோணத்தில் எழுதினால் அதில் விக்கிப்பீடியாவின் நிலை என்ன? உதாரணத்திற்குப் பிரபாகரனைப் போராளி என ஒருவரும் தீவிரவாதி என ஒருவரும் எழுதினால் விக்கிப்பீடியா எதை ஏற்கும்?
மயூரநாதன்: நடுநிலை நோக்கு என்பது விக்கிப்பீடியாவின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. இதனால், கட்டுரைகளை எழுதும் எவரும் தமது சொந்தக் கருத்துகளைக் கட்டுரைகளில் சொல்ல முடியாது. ஒருவரை உலகத்தில் உள்ள அனைவருமே தீவிரவாதி என்பார்களானால், அவரைத் தீவிரவாதி என எழுதலாம். ஆனால் இன்னொரு பகுதியினர் அவரைப் போராளி என்பார்களானால், இரு கருத்துகளையும் கட்டுரையில் குறிப்பிட வேண்டும். "ஒரு பகுதியினர் தீவிரவாதி என்கின்றனர்; ஆனால் வேறு சிலரோ அவரைப் போராளி என்கின்றனர்" என்பது போல் எழுதுவதே முறை.
அண்ணா: கட்டுரைகளின் கீழ் அடிக்குறிப்புகள், சுட்டிகள், விளக்கங்கள் ஆகியவற்றைத் தருவது, ஆய்வாளர்களின் பாணி ஆயிற்றே! நம் கட்டுரையாளர்கள், இந்தப் பயிற்சியை எப்படிப் பெறுகிறார்கள்?
மயூரநாதன்: இப்போதுள்ள பெரும்பாலான பங்களிப்பாளர்கள் இது தொடர்பில் பழக்கம் உள்ளவர்கள் தான். அப்படியான பழக்கங்கள் இல்லாதவரும் கூட பங்களிக்கும் போது பழகிவிடலாம். பிற பயனர்களின் உதவியைப் பெறவும் முடியும். நிற்க! இவற்றை உரிய முறையில் அமைப்பதற்கான வார்ப்புருக்களும் உள்ளன.
அண்ணா: கூகுள் தேடுபொறியில் தமிழில் தேடினால், விக்கிபீடியாவின் தரவுகள் முதலில் இடம் பெறுகின்றன. இதற்கு ஏற்ப, தகுந்த குறிச் சொற்கள் இடுகிறீர்களா?
மயூரநாதன்: இதற்கு நாங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. கூகுள், விக்கிப்பீடியாவுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் தேடு பொறியை அமைத்துள்ளதாகக் கருதுகிறேன்.
அண்ணா: பொதுவாகத் தலைப்புகள் நீல நிறத்தில் இருக்க, சில தலைப்புகள் சிவப்பு நிறத்தில் உள்ளன. அவை முக்கியம் எனக் காட்டுவதற்காகவா? புதியவை எனக் காட்டுவதற்காகவா?
மயூரநாதன்: விக்கிப்பீடியாவில் நீலம் அல்லது சிவப்பு நிறத்தில் உள்ள சொற்கள் உள்ளிணைப்புக்களைக் குறிக்கின்றன. நீல இணைப்புகள் அச் சொற்கள் குறிக்கும் தலைப்பில் கட்டுரைகள் இருப்பதைக் குறிக்கின்றன. அவற்றை அழுத்திக் குறிப்பிட்ட கட்டுரைப் பக்கத்துக்குச் செல்ல முடியும். சிவப்பு இணைப்புகள் அத்தலைப்புகளில் இன்னும் கட்டுரைகள் எழுதப்படவில்லை என்பதைக் காட்டுகின்றன. அந்த இணைப்புகளின் மீது அழுத்தும்போது அத்தலைப்புகளில் புதிய கட்டுரைகளை எழுதுவதற்கான தொகுப்புப் பக்கம் கிடைக்கும். அங்கே புதிய கட்டுரைகளை எழுதத் தொடங்கலாம்.
அண்ணா: விக்கிப்பீடியாவில் உள்ள 'மணல் தொட்டி' வசதி குறித்துச் சொல்லுங்கள். இந்தப் பெயரைச் சூட்டியவர் யார்?
மயூரநாதன்: இது புதிய பங்களிப்பாளர்கள் பயிற்சி செய்வதற்கான இடம். இங்கே ஏற்கெனவே உள்ள கட்டுரைகளைக் குழப்பிவிடுவோமோ என்ற பயமின்றி விரும்பியபடி பயிற்சி செய்யலாம். ஆங்கிலத்தில் " sand box" என்று இருப்பதை நான் தான் "மணல் தொட்டி" என்று மொழி பெயர்த்தேன். இது ஆங்கிலச் சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பாக இருக்கிறதே என்று சிலர் கேட்டார்கள். ஆனாலும், நமக்கும் இது பொருந்தி வருவதால்தான் அச் சொல்லைத் தொடக்கத்தில் நான் பயன்படுத்தினேன். சிறுவயதில் எழுத்துகளை மணல் மீது எழுதிப் பழகுவது உண்டல்லவா? பல பங்களிப்பாளர்களும் இதனை ஏற்றுக்கொண்டதால் இது நிலைத்துவிட்டது.
அண்ணா: விக்கிப்பீடியா பக்கங்களில் விளம்பரங்கள் வெளியிடாதது ஏன்?
மயூரநாதன்: ஒரு கலைக் களஞ்சியத்தில் விளம்பரங்கள் இருப்பது பொருந்தாது என்பதனாலாக இருக்கலாம். விளம்பரங்கள் இல்லாமல் இருப்பது நல்லது என்றே நினைக்கிறேன். ஆனால், இதன் விளம்பரப் பெறுமானம் ஆண்டுக்கு 600 மில்லியன் டாலர்கள் வரை இருக்கக்கூடும் எனக் கூறுகிறார்கள்.
அண்ணா: தமிழ் விக்கியில் உள்ள ஒலிப்பதிவுகள் 'ஆக்' (ogg) வடிவில் இருக்கின்றன. இதை எப்படி கேட்பது? விக்கியில் பயன்படுத்தும் அனைத்துமே கட்டற்ற மென்பொருள்கள்தானா?
மயூரநாதன்: இது எனக்கும் பிரச்சினையாகத்தான் உள்ளது. 'ஆக்' (ogg) வடிவிலான ஒலிப்பதிவு எதையும் என்னால் கேட்க முடியவில்லை. இவையெல்லாம் கட்டற்ற மென்பொருள்களே.
அண்ணா: தமிழ் விக்கியில் உள்ள தரவுகள், தொடர்ந்து இற்றைப்படுத்தப்படுகின்றனவா?
மயூரநாதன்: முடிந்தவரை செய்கிறோம். நான் முன்னர் குறிப்பிட்டதுபோல பங்களிப்பவர்கள் கூடுதலாக வரும்போது இதனை மேலும் சிறப்பாகச் செய்ய முடியும்.
அண்ணா: தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டமைப்பு எவ்வாறு உள்ளது? தள நிர்வாகிகள், கட்டுரையாளர்கள், பயனாளர்கள் எவ்வளவு பேர் உள்ளனர்?
மயூரநாதன்: தமிழ் விக்கிப்பீடியாவில் ஏறத்தாழ 9,000 பதிவு செய்யப்பட்ட பயனர்கள் உள்ளனர். பங்களிப்பவர்களை ஒப்பிடும்போது மிகவும் குறைவே. கடந்த ஐந்து வருட காலத்தில் ஐந்து தொகுப்பாவது செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 250 வரையில் இருக்கும். குறிப்பிடத்தக்க அளவில் பங்களித்தவர்கள் சுமார் 60 பேர். தற்போது ஓரளவு தீவிரமாகச் செயற்படுபவர்கள் 20 -25 பேர் இருக்கலாம். இவர்களில் 17 நிர்வாகிகளும், அதிகாரி தரத்தில் நால்வரும் உள்ளனர்.
அண்ணா: இவர்கள் அனைவரும் பகுதி நேரத் தன்னார்வலர்களா?
மயூரநாதன்: அனைவரும் ஓய்வு நேரங்களின் பங்களிப்புச் செய்பவர்களே.
அண்ணா: நிர்வாகிகள் / அதிகாரிகள் தர நிலை குறித்துச் சொன்னீர்கள். இந்த நிலைகளுக்கு வருவதற்கு வேண்டிய தகுதிகள் என்னென்ன?
மயூரநாதன்: இவற்றுக்குச் சிறப்புத் தகுதிகள் என்று எதுவும் கிடையாது அதே போல் சிறப்புச் சலுகைகளும் இல்லை. பொதுவாக ஒருவருடைய பெயரை நிர்வாகி பதவிக்கோ, அதிகாரி பதவிக்கோ இன்னொருவர் நியமனம் செய்யலாம் அல்லது தானே தன்னை நியமித்துக் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இது தொடர்பாக விரும்பும் பயனர்கள் வாக்களிப்பர். அக்கால முடிவில் அவருக்கு இருக்கும் ஆதரவைப் பொறுத்து அதிகாரி நிலையில் உள்ள ஒருவர் அவருக்கு நிர்வாகி அல்லது அதிகாரி அணுக்கத்தை வழங்கலாம். நிர்வாகி தரத்தில் உள்ள ஒருவர் தொகுப்புகளின்போது கட்டுரைகளை நீக்குதல் போன்ற சில கூடுதல் பணிகளைச் செய்ய முடியும். நிர்வாகி அல்லது அதிகாரிகளுக்கான அணுக்கம் அளித்தல், அதிகாரி தரத்தில் உள்ளவர்களுக்கான மேலதிக அணுக்க வசதி ஆகும்.
அண்ணா: தீவிரமாகச் செயலாற்றும் சிலரின் பெயர்களைக் குறிப்பிடலாமா?
மயூரநாதன்: தமிழ் விக்கிப்பீடியாவில் தற்போது தீவிரமாகச் செயலாற்றுபவர்களில், சுந்தர், நற்கீரன், ரவிசங்கர், சிவகுமார், உமாபதி, கனக சிறீதரன், பேராசிரியர் செல்வக்குமார், பேராசிரியர் வி.கே, குறும்பன், கார்த்திக்பாலா, டானியேல் பாண்டியன், தேனி. எம். சுப்பிரமணி, அருண், செல்வம், பரிதிமதி ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்களைவிட தற்போது குறைவாகவே பங்களித்தாலும் முன்னர் குறிப்பிடத்தக்க பங்களித்தவர்களாகப் பின் வருபவர்களையும் குறிப்பிட முடியும்: சந்தோஷ்குரு, கலாநிதி, மயூரேசன், மு. மயூரன், சிறீனிவாசன், கோபி, நிரஞ்சன் சக்திவேல், டெரென்ஸ், சந்திரவதனா, வினோத், சிந்து, விஜய ஷண்முகம், பாலாஜி, வைகுண்டராஜா, பாலச்சந்திரன், வேர்க்லோரம்.
அண்ணா: இவர்கள் அனைவருக்கும் எமது பாராட்டுகள்.
மயூரநாதன்: நன்றிகள்.
அண்ணா: உங்கள் பணி / தொழில் குறித்துச் சொல்லுங்கள்.
மயூரநாதன்: நான் கடந்த 30 ஆண்டுகளாகக் கட்டடக் கலைஞராகப் பணியாற்றி வருகிறேன். இலங்கையில் கட்டடக் கலையில் முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர் 15 ஆண்டுகள் இலங்கையிலேயே பணியாற்றினேன். பின்னர் 1993ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்து பணி செய்யத் தொடங்கினேன். கடந்த 15 ஆண்டுகளாக இங்கே பணி புரிந்து வருகிறேன்.
அண்ணா: உங்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியாவில் ஆர்வம் பிறந்தது எப்படி?
மயூரநாதன்: பொதுவாகவே தமிழில் அறிவுத் துறைகளை வளர்க்க வேண்டும் என்னும் ஆர்வம் எனக்கு சிறு வயது முதற்கொண்டே உள்ளது. 2003ஆம் ஆண்டில் ஒரு வலைத்தளம் மூலம் விக்கிப்பீடியா பற்றி அறிந்தேன். அங்கே ஒரு அன்பர் தமிழிலும் இதனைத் தொடங்க முடியும் என்று குறிப்பொன்றை விட்டிருந்தார். அன்றிலிருந்து இத்திட்டத்தில் ஈடுபடத் தொடங்கிக் கடந்த 5 1/2 ஆண்டுகளாகத் தொடர்ந்து பங்களித்து வருகிறேன்.
அண்ணா: தனி நபராக 2760க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதிய அனுபவத்தை விவரியுங்கள். உங்களுக்கு விருப்பமான துறைகள், தலைப்புகள் என்னென்ன? உங்கள் கட்டுரைகளின் மூலம் எவை? விவரங்களை எவ்வாறு திரட்டுகிறீர்கள்?
மயூரநாதன்: நான் எழுதிய கட்டுரைகள் என்பதிலும் நான் தொடங்கிய கட்டுரைகள் என்று சொல்வது தான் பொருத்தமானது. நான் தொடங்கிய கட்டுரைகள் பலவற்றை வேறு பலர் விரிவாக்கி உள்ளனர். அது போலவே நானும் பிற பங்களிப்பாளர்கள் தொடங்கிய நூற்றுக்கணக்கான கட்டுரைகளை விரிவாக்கி உள்ளேன். நான் தொடங்கிய பெரும்பாலான கட்டுரைகள் ஆங்கில விக்கியில் இருந்து மொழிபெயர்த்தவையே. இவற்றைச் செய்ததில் உள்ள அனுபவம் என்பதிலும், என்ன அடிப்படையில் இவற்றைச் செய்தேன் என்று சொல்கிறேன். பெரும்பாலும் நான் கட்டுரைகளை எழுதும்போது தனித் தனிக் கட்டுரைகளாக அன்றி ஒரு தொகுதியாகவே எழுதுவதுண்டு. இதனால் ஒரு குறிப்பிட்ட தலைப்பைத் தெரிவு செய்து கொண்டு அது தொடர்பாக 25, 50 எனக் கட்டுரைகளை எழுதுவது உண்டு. எடுத்துக்காட்டாக, சோழர்களைப் பற்றி ஒரு தொகுதியாகக் கட்டுரைகள் எழுதினேன் அண்மையில் முடிச்சுகள் என்னும் தலைப்பிலும் பல கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினேன். இதனால், ஒரு கட்டுரையில் இருந்து இன்னொரு கட்டுரைக்கு இணைப்புகள் கொடுத்து ஒன்றிலிருந்து ஒன்றுக்குச் செல்லும் வாய்ப்பை அதிகரிக்க முடிகிறது. அத்துடன் ஒரே விடயத்தில் எழுதும்போது, தகவல்கள் சேகரிப்பதும், எழுதுவதும் இலகுவாகவும் அமைகின்றது. நாம் பல துறைகளில் கட்டுரைகளைத் தொடங்கியுள்ளேன். முக்கியமாகக் கட்டடக் கலை, பிற கலைகள், தமிழ், மொழியியல், சூழலியல், வரலாறு, அறிவியல் போன்ற பல்வேறு துறைகள் இவற்றுள் அடங்கும். பல தகவல்களை நான் ஆங்கில விக்கியில் இருந்து பெறுவதுண்டு. இவை தவிர என்னிடமும் ஓரளவு நூல்கள் உள்ளன, இவற்றிலிருந்தும் தகவல்கள் எனக்குக் கிடைக்கின்றன.
அண்ணா: கிலோமீட்டர், கனமீட்டர் எனப் பலவற்றை அப்படியே பயன்படுத்தும் நிலையில் இருக்கிறோம். அறிவியல், தொழில்நுட்பச் சொற்களுக்கும் இதே நிலைதான். மொழிபெயர்ப்பிலும் ஒலிபெயர்ப்பிலும் நீங்கள் சந்தித்த சவால்கள் என்னென்ன?
மயூரநாதன்: மொழிபெயர்ப்பிலும், ஒலி பெயர்ப்பிலும் வரக்கூடிய முக்கிய சவால்கள் பெரும்பாலும் கலைச்சொற்கள் தொடர்பானவையும், ஆங்கிலப் பெயர்களை ஒலிபெயர்த்தல் தொடர்பானவையும் ஆகும். இவை தவிர அண்மைக் காலத்தில் கிரந்த எழுத்துப் பயன்பாடு தொடர்பிலும் சவால்கள் உள்ளன. கலைச் சொற்கள் தொடர்பில் பெரும்பாலான கலைச்சொற்களுக்கு ஏற்கெனவே இருக்கும் கலைச்சொல் தொகுப்புகளில் உள்ள கலைச் சொற்களையே பயன்படுத்தி வருகிறேன். இதில் உள்ள முக்கிய பிரச்சினை இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் பயன்படுத்தப்படும் கலைச் சொற்களுக்கு இடையிலான வேறுபாடுகள் ஆகும். எனக்கு இலங்கையில் பயன்படுத்தப்படும் கலைச் சொற்கள் பழக்கமானவை. ஆனால், இவற்றைப் பெரும்பாலான தமிழ்நாட்டுத் தமிழர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்பதனால் பல அகராதிகளிலும் தேடி உரிய சொற்களைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. ஆங்கிலச் சொற்களின் ஒலி பெயர்ப்பிலும் முக்கியமான சிக்கல் தமிழ் நாட்டவர், இலங்கைத் தமிழர் இடையிலான உச்சரிப்பு வேறுபாடுகள் ஆகும். இது தொடர்பில் பல கலந்துரையாடல்கள் விக்கிப்பீடியாவின் உரையாடல் பக்கங்களில் இருப்பதைக் காணலாம். எனினும் கலந்துரையாடல்கள் மூலம் இணக்கத்துக்கு வர முடிகிறது.
அண்ணா: நீங்கள் உருவாக்கிய புதிய சொற்கள் எவை?
மயூரநாதன்: நான் பொதுவாகப் புதிய சொற்களை உருவாக்குவதில் ஈடுபடுவதில்லை. எனினும் அவ்வப்போது தேவை ஏற்பட்டால் ஓரிரு சொற்களை உருவாக்குவது உண்டு. இப்பொழுது ஞாபகம் இல்லை.
அண்ணா: தமிழ் விக்கிபீடியாவில் என்னென்ன துறைகளில் பங்களிப்பாளர்கள் இருக்கிறார்கள்? இன்னும் என்னென்ன துறைகளில் பங்களிப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள்?
மயூரநாதன்: பங்களிப்பவர்களில், பெரும்பாலோர் தகவல் தொழில்நுட்பம், கணினித் துறைகளைச் சேர்ந்தவர்களே. இவர்களைத் தவிரக் கணிதம், மின்னியல், கட்டடக் கலை, உயிரித் தொழில்நுட்பம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். எனினும் இவர்களிற் பலர் பல்துறை ஆர்வம் கொண்டவர்கள். பல துறைகள் தொடர்பான கட்டுரைகளை எழுதக் கூடியவர்கள். எனினும் பல முக்கிய துறைகளில் ஆர்வலர்கள் வேண்டும். எடுத்துக்காட்டாக, மருத்துவம், சட்டம், பொருளியல் போன்ற பல துறைகளில் நுணுக்கமாகக் கட்டுரைகளை எழுதக் கூடியவர்களின் பங்களிப்புத் தேவை.
அண்ணா: புதிதாகப் பங்களிக்க விரும்புவோருக்கு உங்கள் குறிப்புகள் என்னென்ன?
மயூரநாதன்: தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் புதிதாகப் பங்களிக்க வருவோர், தமிழில் உள்ளீடு செய்யத் தெரிந்திருப்பது அடிப்படையானது. இதற்கான வழிகாட்டிகளை விக்கிப்பீடியாவிலே பார்க்க முடியும். தவிர ஏற்கெனவே அனுபவம் பெற்ற பயனர்களிடம் இது தொடர்பில் உதவி பெற்றுக்கொள்ளவும் முடியும். தற்போது சில இடங்களில் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க விரும்புவோருக்கான பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்று வருகின்றன. இவ்விடங்களுக்குச் செல்ல முடிந்தவர்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ள முடியும்.
முக்கியமாக விக்கிப்பீடியாவின் தன்மையைப் புரிந்துகொள்வது அவசியம். இது பலர் கூடி உருவாக்கும் ஒரு கலைக் களஞ்சியம். ஒருவர் எழுதும் கட்டுரையில் இன்னொருவர் திருத்தங்களைச் செய்ய முடியும். புதிய கருத்துகளைச் சேர்க்க முடியும். கட்டுரையின் அமைப்பே மாறிவிடக்கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு. இவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பாங்கு அவசியம். ஆனால், இவ்வாறான மாற்றங்கள் எழுந்தமானமாக நடைபெறுவது இல்லை. சர்ச்சைக்கு உரிய மாற்றங்கள் எனில், முதலில் உரையாடல் பக்கத்தில் கலந்துரையாடல் நிகழும். நான் கட்டுரைகளை எழுதுகிறேன் என்றில்லாமல், பலருடன் நானும் கூட்டாக ஒரு கலைக் களஞ்சியத்தை உருவாக்குகிறேன் என்னும் மனப்பாங்கு இருக்க வேண்டியது அவசியம்.
அண்ணா: தமிழ் விக்கியின் எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?
மயூரநாதன்: தனித்தனி மொழிகளுக்கான விக்கிப்பீடியாக்களின் வளர்ச்சியைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கான பதவிகளோ அல்லது குழுக்களோ எதுவும் கிடையாது. முறைப்படியாகச் சேர்ந்து இயங்குவதற்கான அமைப்பு முறைகளும் கிடையாது. ஆனாலும், கலந்துரையாடல்களின் மூலம் விக்கிப்பீடியாக்களின் வளர்ச்சி குறித்த இலக்குகளையும் நடைமுறைகளையும் ஓரளவுக்கு வகுத்துக்கொள்ள முடியும். தமிழ் விக்கிப்பீடியாவிலும் இத்தகைய கலந்துரையாடல்கள் மூலம் சில திட்டங்கள் உருவாகின்றன.
எங்களுடைய அடிப்படை நோக்கம் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், அக் கட்டுரைகள் முழுமையானவையாகவும், தரமுள்ளவையாகவும் அமைவதை உறுதி செய்வதுமே. இதற்கான முதன்மைத் தேவை, பங்களிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஆகும்.
தற்போது பங்களித்து வரும் பயனர்களின் புவியியற் பரம்பலைக் கவனித்தால் இப் பரம்பலில் உள்ள சில குறைபாடுகளைக் கவனிக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பவர்கள் சுமார் 10 நாடுகளிலிருந்து பங்களிப்புச் செய்கின்றனர். இவர்களில் இந்தியா, இலங்கை ஆகிய தாயகப் பகுதிகளில் வாழ்வோர் அரைப் பங்கினருக்கும் குறைவே. பெரும்பாலோர் தாயகப் பகுதிகளுக்கு வெளியே வாழும் தமிழர்களே. உலகத் தமிழர்களில் 95% மக்கள் வாழும் தமிழ்நாட்டிலிருந்து பங்களிப்பவர்கள் சுமார் ஐந்தில் ஒரு பங்கினர் மட்டுமே. இந் நிலையை மாற்றுவதற்குத் தாயகப் பகுதிகளிலிருந்து, குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்து பல புதிய பங்களிப்பாளர்களை உருவாக்க வேண்டும்.
இதனால் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இணையத்துக்கு வெளியில் தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்துவதற்கும், ஆர்வமுள்ளவர்களுக்கு இது குறித்த பயிற்சிகளை அளிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர்கள் சிலர் விக்கிப்பீடியா ஆர்வலர்கள் சிலருடன் இணைந்து இவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இதுவரை பெங்களூரிலும், சென்னையிலும் பயிற்சிப் பட்டறைகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன.
தரத்தைப் பொறுத்தவரை தமிழ் விக்கிப்பீடியாக் கட்டுரைகள் பெருமளவில் முன்னேற இடம் உண்டு. கூடியமட்டிலும் சான்றுகளுக்கு முன்னுரிமை தந்து சுட்டுகிறோம். எனினும் பல கட்டுரைகளில் மேற்கோள்கள் சுட்டப்பட வேண்டியுள்ளது. பொதுவான தமிழ் நடை பற்றிய குறைபாடுகளும் உண்டு. இவற்றைக் கவனித்து உரிய திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியம். வரும் நாட்களில் இது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். இப்போதுள்ள குறைந்த எண்ணிக்கையிலான பங்களிப்பாளர்களுடன் இவ்வாறான பணிகளைச் செய்து முடித்தல் கடினம். பல புதியவர்கள் பங்களிக்க முன்வந்தால் தான் இவற்றைத் திறம்படச் செய்யலாம்.
இவை தவிர தமிழ் விக்கிப்பீடியாவின் எதிர்காலத் திட்டங்கள் பற்றிச் சிந்திக்கும் போது, தமிழ் மக்களுக்குத் தனித்துவமாக இருக்கக்கூடிய தேவைகள், அவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள், சாதக பாதக நிலைமைகள் என்பன பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. முக்கியமாக புதிய அறிவுத் துறைகளில் உருவாகும் அறிவுச் செல்வங்களைத் தமிழில் கொண்டு வருவதில் உள்ள பிரச்சினைகள் பற்றித் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதன் மூலம் தான் விக்கிப்பீடியாவைத் தமிழில் மக்களுக்குப் பயன் தரத்தக்க வகையில் வளர்த்தெடுக்கலாம்.
ஆங்கிலம் போன்ற மொழிகளிலுள்ள விக்கிப்பீடியாக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுடன் நமது பிரச்சினைகளை ஒப்பிட முடியாது. உலக மொழி என்ற அளவில் ஆங்கில மொழிக்கு உலக அளவில் பெரும் சாதக நிலை உண்டு. உயர்கல்விக்கு உரிய மொழியாகத் தமிழை நாங்கள் பயன்படுத்தாமை காரணமாக தமிழர்களான அறிஞர்கள் பலர், தமிழ் மூலம் தங்கள் அறிவை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல முடியாதவர்களாக இருக்கின்றனர் என்பது ஒருபுறம் இருக்க, உயரறிவுத் தரம் கொண்ட கட்டுரைகளைத் தமிழில் யார் பயன் படுத்துவார்கள் என்ற கேள்வியும் எழுகின்றது. எனவே எவ்வாறான கட்டுரைகள் தமிழ் மக்களுக்குப் பயன்படும், உயரறிவுத் தரம் கொண்ட கட்டுரைகளின் தேவை எத்தகையது போன்ற விடயங்களைச் சீர் தூக்கிப் பார்த்துத் தமிழ் விக்கிப்பீடியா வளர்த்து எடுக்கப்பட வேண்டும்.
அண்ணா: இவ்வளவு நேரம் பொறுமையாகப் பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி. தங்கள் பணியும் விக்கிப்பீடியாவின் வீச்சும் மேலும் சிறக்க வாழ்த்துகள்.
மயூரநாதன்: என்னை உங்களுடன் உரையாட அழைத்தமைக்காகவும், தமிழ் விக்கிப்பீடியா பற்றிக் கூறுவதற்கு வாய்ப்புத் தந்தமைக்காகவும் நன்றி.
----------------
13 ஜூன் 2009, சனிக்கிழமை, மாலை 6.00 மணிக்கு, கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் தமிழ் விக்கிபீடியா பற்றி ரவிசங்கர் பேசுகிறார். அவர் எழுதிய குறிப்பு:
இந்திய மொழிகளில் இந்திக்கு அடுத்து தமிழ்தான் இணையத்தில் அதிக அளவு இடம் பெற்றிருக்கிறது. 5,000-க்கும் மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன. ஆனால், இந்தத் தமிழ் உள்ளடக்கம் பெருமளவு பக்கச் சார்புடையதாகவும், கருத்து சார்ந்ததாகவும், அரசியல்-திரைப்படம்-சமையல்-ஆன்மிகம்-கிரிக்கெட் என்று குறுகிய வட்டத்தில் உழல்வதாகவும் உள்ளது. கல்வி நோக்கில் ஒரு தலைப்பு குறித்துத் தேடினால், தகவலை முன்வைத்து நடுநிலையுடன் எழுதப்பட்ட விரிவான கட்டுரைகள் குறைவே.
ஆங்கிலத்தில் இந்தத் தேவையை நிறைவு செய்ய ஏராளமான தளங்கள் உள்ளன. அவற்றில் முதன்மையானது ஆங்கில விக்கிபீடியா. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு கலைக்களஞ்சிய ஆங்கிலக் கட்டுரையைப் புரிந்து பயன்படுத்தும் மக்கள் 30 விழுக்காடாவது இருப்பார்களா என்பது கேள்விக்குரியது.
ஆங்கிலம் போல் தமிழில் ஏராளமான தகவல் தளங்கள் இல்லை. தமிழ் விக்கிபீடியா மட்டுமே ஒரே ஒருங்கிணைந்த தகவல் தளமாக இருப்பதால், தமிழ் விக்கிபீடியாவை வளர்க்க வேண்டியது முக்கியம். கடந்த 5 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தமிழ் விக்கிபீடியாவில் 18,000+ கட்டுரைகளே உள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்க அளவு குறுங்கட்டுரைகள். இன்னும் பல முக்கிய துறைகளைக் குறித்து அடிப்படைக் கட்டுரைகள்கூட இல்லை. குறைந்தது ஒரு இலட்சம் கட்டுரைகளாவது இருந்தாலே ஒரு குறைந்தபட்ச பயனை நல்க இயலும்.
தமிழ் விக்கிபீடியாவுக்குப் பங்களிக்க இருக்கும் மிகப் பெரிய தடைகள்:
* கணினியில் தமிழில் எழுதத் தெரியாமை.
* தமிழில் கோர்வையாகக் கட்டுரை எழுத இயலாமை.
* இணையம் குறித்த அடிப்படை அறிவின்மை. வலையில் எழுதும் பழக்கமின்மை.
* சரியான கணினி, இணைய வசதிகள் இல்லாமை.
தமிழ் வலைப்பதிவர்கள், இந்தத் தடைகளைக் கடந்தவர்கள். பல நாடுகளில் இருந்து பல துறைகள் குறித்து எழுதக்கூடியவர்கள். எனவே, வலைப்பதிவர்களிடம் இருந்து பெரிய அளவில் பங்களிப்புகளை எதிர்ப்பார்க்கிறோம். இருப்பினும், ஏறத்தாழ பத்து தமிழ் வலைப்பதிவர்கள் மட்டுமே தமிழ் விக்கிபீடியாவுக்கு பங்களித்து வருகிறார்கள். வலைப்பதிவர்கள் பங்களிப்பதற்கான தடைகள்:
* பிளாகர், வேர்டுபிரெசு போல மீடியாவிக்கி மென்பொருள் பயன்படுத்த இலகுவாக இல்லாமை.
* வலைப்பதிந்தால் மறுமொழிகள், நண்பர்கள், ஊடக வாய்ப்புகள் என்று பயன்கள் கிட்டுவது போல விக்கிபீடியாவுக்குப் பங்களிப்பதால் தனக்கு என்ன நன்மை கிடைக்கும் என்ற கேள்வி.
* விக்கிபீடியா செயல்படும் தன்மை பற்றி தெளிவின்மை. (நான் எழுதும் கட்டுரையை இன்னொருவர் எப்படித் திருத்தலாம், திருத்தினால் நான் எழுதியது வீணாகாதா, விக்கிபீடியா நடுநிலையானதா, மற்ற பங்களிப்பாளர்களிடம் மல்லுக்கட்டி நேரம் போகுமா, ஆங்கில விக்கிபீடியா போல் இங்கும் பிரச்னை வருமா... போன்ற கேள்விகள்.)
வலைப்பதிவர்கள் மனத்தில் இருக்கும் இக்கேள்விகளுக்கு விடை அளிக்கும் முகமாகவும், கூடிய பங்களிப்புகளை வேண்டியும் இந்தக் கூட்டம் நடைபெறும். கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்:
* விக்கிமீடியா திட்டங்கள் அறிமுகம்.
* விக்கிபீடியாவில் கட்டுரை எழுதுவது எப்படி? ஒரு பத்து நிமிட அறிமுகம்.
* விக்கிபீடியாவுக்கு வலைப்பதிவர்கள் எப்படிப் பங்களிக்கலாம்?
* கேள்வி-பதில், கலந்துரையாடல்.
Posted by நா. கணேசன் at 2 comments
கணித்தமிழ் – கடந்து வந்த பாதையும், தற்போதைய நிலையும் (ஃபெட்னா மாநாடு, 2008)
ஜெ.சௌந்தர் (வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மாநாடு, ஆர்லாண்டோ, ஃப்ளாரிடா. ஜூலை 2008 விழாமலரில் வெளியான கட்டுரை).
இந்திய மொழிகளிலேயே முதன் முதலில் கம்ப்யூட்டரிலும், பின்னர் இணையத்திலும் ஏறிய மொழி - தமிழ் மொழி. இத்தகைய பெருமைமிகு வரலாற்றுப் பின்னணியோடு கணித்தமிழ் கடந்து வந்த பாதைகளையும், ஏற்பட்ட தடைகளையும், தீர்வுகளையும், சாதனைகளையும், தற்போது உள்ள நிலைமை மற்றும் எதிர்நோக்கி உள்ள சவால்களையும் இங்குப் பார்ப்போம்.
கடந்து வந்த பாதை:
கணித்தமிழின் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால், அதன் கால கட்டத்தை நாம் இரு பிரிவுகளில் பிரிக்கலாம்.
ஒன்று: 1980 முதல் 1995 வரை.
இரண்டு:. 1996 முதல் 2007 வரை.
இன்னும் விளக்கிச் சொல்லப்போனால், இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் இணையம் அறிமுகமாகி வேகமாக வளர ஆரம்பித்தது 1995 முதல் 1997 ஆண்டுகளில் தான். அதனால், கணித்தமிழ் வரலாற்றையும் இணையத்திற்கு முன்பு, இணையத்திற்கு பின்பு என இரு வகையாகப் பிரித்துப் பார்ப்பது நல்லது. அப்படிப் பார்த்தால் தான் சூழ்நிலைகளுக்கேற்ப ( இணையத்தின் வருகைக்கு முன்பு , பின்பு ), அந்தந்தக் காலகட்டத்திற்கேற்ப உண்டான சவால்களையும், சிக்கல்களையும், தீர்வுகளையும் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
1980 முதல் 1995 வரை (இணையத்தின் வருகைக்கு முன்பு)
கம்ப்யூட்டரில் தமிழ் என்பது 1980களின் ஆரம்பத்திலேயே தொடங்கிவிட்டது. இந்த முதல் நிலை காலகட்டத்தில் உழைத்தவர்களை நன்றியோடு நினைத்துப் பார்ப்பதற்கு இந்தக் கணித்தமிழ் உலகம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது. ஏனென்றால், கம்யூட்டரில் தமிழைத் தெரியவைப்பதற்கு அன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் , தன்னார்வலர்கள், கல்வி அறிஞர்கள், பேராசிரியர்கள் என்று பலர் நேரம் காலம் பார்க்காமல், எதையும் எதிர்பார்க்காமல் உழைத்துள்ளனர்.
இப்படி, பல்வேறு நபர்களின் உழைப்பால், தமிழ் மொழிக்கென்று ஏராளமான எழுத்துருக்களும், மென்பொருட்களும் இலவசமாகவே கிடைக்கத் தொடங்கின. அவற்றில் முக்கியமான சில:
• திரு, ஆதமி, திருவின், மயிலை-ஸ்ரீ எழுத்துருக்கள் - திரு. K. ஸ்ரீனிவாசன், கனடா
http://www.geocities.com/athens/7444/ , http://www.thiruwin.com/
• மயிலை எழுத்துரு – முனைவர். கல்யாணசுந்தரம்.
http://www.geocities.com/Athens/5180/index.html , http://www.projectmadurai.org
• பிசி தமிழ் மென்பொருள் – முனைவர். வாசு ரெங்கநாதன்
http://www.sas.upenn.edu/~vasur/project.html
• நளினம் செயலி – திரு. சிவகுருநாதன் செல்லையா
http://www.nalinam.com/
• கம்பன் செயலி – திரு. வாசுதேவன்
http://www.kamban.com.au/
• அணங்கு எழுத்துரு – திரு.குப்புசாமி
http://www.kalvi.com/
• துணைவன் செயலி – திரு. ரவீந்திரன் பால்
http://www.thunaivan.com/
• அஞ்சல் எழுத்துருக்கள், முரசு செயலி– திரு. முத்து நெடுமாறன்
http://www.murasu.com/
இத்தகைய எழுத்துருக்களும் (fonts), மென்பொருட்களும் பெரும்பாலும் ஆரம்பகால டாஸ், விண்டோஸ் இயங்குதளத்திலேயே (DOS, Window 92) பயன்படுத்தக் கூடியதாக இருந்தது. ஆனாலும், யுனிக்ஸ் இயங்குதளத்திற்கான தமிழ் எழுத்துருக்கள் மற்றும் மென்பொருட்கள் உருவாக்குவதற்கான முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தானிருந்தன.
இவ்வாறு, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான எழுத்துருக்களும், செயலிகளும் வரத் தொடங்கிய பிறகு தான் பிரச்சனைகளும், சவால்களும் வரத்தொடங்கின. மிக முக்கிய பிரச்சனையாக இருந்தவை: தமிழ் படிக்கக் கண்டிப்பாக ஏதெனும் ஒரு தமிழ் எழுத்துருவையாவது கம்ப்யூட்டரில் நிறுவியாக வேண்டும். ஒரு எழுத்துருவில் எழுதப்பட்ட தரவை (file) மற்றொரு எழுத்துரு கொண்டு படிக்க முடியவில்லை. ஒரு எழுத்துருவைப் பயன்படுத்தி பழகியவர்களால் மற்ற எழுத்துருக்களைப் பயன்படுத்த முடியவில்லை. ஏனென்றால், ஒவ்வொரு எழுத்துருவும் வெவ்வேறான விசைப்பலகை வடிவமைப்பையும் (keyboard layout), குறியீட்டு முறையையும் (encoding) கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இத்தகைய பிரச்சனைகள் இருந்தாலும் தொடர்ந்து நிறைய எழுத்துருக்களும், செயலிகளும் வந்து கொண்டுதான் இருந்தன.
அன்றைய காலகட்டத்தில் கம்ப்யூட்டரின் பரவல் மற்றும் பொது மக்களுக்கான கம்ப்யூட்டர் பயன்பாடுகள் இன்று போல் பெரிதாக இல்லை. பெரும்பாலும் தினப்பத்திரிக்கைகள், வார, மாத இதழ்கள் போன்றவற்றை வெளியிடும் ஊடக நிறுவனங்கள் மற்றும் பதிப்புத் தொழிலில் உள்ளவர்கள் மட்டுமே தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தி வந்தனர். அவர்களும் புதுப்புது வடிவ எழுத்துருக்களை மட்டுமே எதிர்பார்த்தார்களே தவிர பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முன் வரவில்லை. அதனால், ஒவ்வொருவரும் தனக்குப் பிடித்த, வசதியான ஒரு விசைப்பலகை வடிவமைப்பு மற்றும் குறியீட்டு முறை கொண்டவற்றை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
கடைசியாகப் பார்த்தால், இந்த காலகட்டத்தின் இறுதியில் அதாவது 1990களின் மத்தியில் ஏராளமான எழுத்துருக்களும், செயலிகளும், மென்பொருட்களும் ஓர் ஒழுங்கு முறையின்றி வெவ்வேறு விசைப்பலகை வடிவமைப்புகள், குறியீட்டு முறைகள் கொண்டு ஒரு குழப்பமான நிலையிலேயே தொடர்ந்து வந்தன.
1996 முதல் 2007 வரை (இணையத்தின் வருகைக்கு பின்பு)
இணையத்தின் வருகை மற்றும் அதன் பரவலுக்குப் பிறகு தகவல் தொழில்நுட்பத் துறை மட்டுமில்லாமல் அனைத்து துறைகளிலும் அதன் தாக்கம், ஆளுமை இருந்தது. அது ஒரு வகையான பரட்சியையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை. இணையத்தின் மூலம் தகவல் பரிமாற்றம் எளிதாக்கப்பட்டது மற்றும் விரைவாக்கப்பட்டது. மின்னஞ்சல், அரட்டை, குழுமங்கள், பல்வேறு வகையான இணைய தளங்கள் என்று அதன் வீச்சு பலமாகத் தொடங்கி வளர்ந்து கொண்டே இருந்தது. அத்தகைய வளர்ச்சி கணித்தமிழிலும் ஏற்பட்டது. ஏற்கனவே இருந்த ஏராளமான எழுத்துருக்கள் மற்றும் மென்பொருள்களுடன் இணையத்திலும் தமிழ் தன் பயணத்தைத் தொடங்கியது.
உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் தங்களுக்கென சொந்த இணையப் பக்கங்களை உருவாக்கினர். அதில் பழந்தமிழ் இலக்கியங்கள் உட்பட பல்வேறு விதமான தகவகளைப் பதிவு செய்யத் தொடங்கினர். அப்படி அன்று சிறு அளவில் தொடங்கி இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்பது தான் ”மதுரைத் திட்டம்” (http://www.projectmadurai.org) ஆகும். தனி மனிதர்களின் இணைய பக்கங்கள் தவிர , தமிழகத்தின் அனைத்து முன்னணி தினசரிப் பத்திரிக்கைகளும் தங்கள் பதிப்பை இணையத்தில் வெளியிடத் தொடங்கின. அதோடு ”தமிழர் பக்கங்கள்” என்ற தனிப்பகுதி கொண்ட சிஸ் இண்டியா – http://www.sysindia.com (தமிழ் மேட்ரிமோனியல் இணையத்தின் நிறுவனர் முருகவேல் ஜானகிராமன் முதலில் தொடங்கி நடத்தியது.) ஆறாம்திணை – http://www.aaraamthinai.com , இன்தாம் – http://www.intamm.com , திண்ணை – http://www.thinnai.com , மின்னம்பலம் – http://www.ambalam.com போன்ற மின் இதழ்களும் வந்தன. இங்கே, “தமிழ்.நெட்” (http://www.tamil.net) என்கிற குழுமத்தினைப் பற்றிக் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். இந்த “தமிழ்.நெட்” குழுமம் தான் இன்றைய யாஹூ மற்றும் கூகுள் தமிழ் குழுமங்களுக்கு முன்னோடியானது. இந்தக் குழுமத்திலே அன்று ஆரோக்கியமான விவாதங்கள் பல நடைபெற்றன.
இவ்வாறு, பல்வேறு வகையான இணையத்தளங்கள் தமிழில் வரத் தொடங்கினாலும் ஏற்கனவே இருந்த பிரச்சனைகளான பல வித விசைப்பலகை வடிவமைப்புகள், குறியீட்டு முறைகள் என்பதோடு இன்னும் புதிய வகை விசைப்பலகை வடிவமைப்புகள், குறியீட்டு முறைகள் என்று அதுவும் வளரத் தொடங்கியது. ஒவ்வொரு தமிழ் இணையத்தளத்தையும் பார்ப்பதற்கு அதெற்கென்ற ஒரு எழுத்துருவும், குறியீட்டு முறையும் தேவைப்பட்டது.
இத்தகைய சமயத்தில் தான் தமிழுக்கென ஒர் ஒழுங்குமுறை , தரக் கட்டுப்பாடு அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் சிங்கை. நா. கோவிந்தசாமி அவர்களின் முயற்சியால் சிங்கப்பூரில் முதல் தமிழ் தகவல் தொழில்நுட்ப மாநாடு 1997ல் நடந்தது. இதுவே, பின்னர் உலகத் தமிழ் இணைய மாநாடு என்று வருடம் தோறும் தொடர்ந்து 5 முறை நடப்பதற்கு முன்னோடியாக இருந்தது. இந்த மாநாடுகளில் உலகம் முழுவதிலும் இருந்து கணித்தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இந்த 5 வருட மாநாடுகளின் முடிவில் கூட ஒரே ஒரு விசைப்பலகை வடிவமைப்பையும், குறியீட்டு முறையையும் அறிவிக்க முடியாதது தான் கணித்தமிழுக்கும், தமிழர்களுக்கும் நேர்ந்த கொடுமை எனலாம். இப்போது கூட குறைந்தது 16 வகை விசைப்பலகை வடிவமைப்புகளும், 5 வகை குறியீட்டு முறைகளும் புழக்கத்தில் உள்ளன.
இதற்கிடையில், தமிழைக் கம்ப்யூட்டரில் எளிதாக உள்ளீடு செய்வதற்கென்று பல்வேறு வகையான புதிய செலிகளும் வரத் தொடங்கின. அதில், முக்கியமானது திரு.முகுந்த் (http://www.thamizha.com) தலைமையில் உருவான இ-கலப்பை எனும் மென்பொருள். இதன் மூலம் தமிழை கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்வது எளிதாக்கப்பட்டது. இவ்வாறு உள்ளீடு செய்யப்படும் முறை எளிதாக்கப்பட்டதால் இன்னும் நிறைய வலைத்தளங்கள், யாஹூ குழுமங்கள் என்று இணையத்தில் தமிழ்ப் பக்கங்கள் அதிகமாயின. அத்தகைய யாஹு குழுமங்களிம் முக்கியமானது அகத்தியர் குழுமம், ராயர் காபி கிளப் ஆகியவை.
அதோடு , ஒவ்வொரு இணைய தளத்திற்கும் தேவையான எழுத்துருவைத் தானே தரவிறக்கம் செய்யக்கூடிய தொழில்நுட்பமும் உருவானது. ஏராளமான எழுத்துரு வகைகளைக் கொண்டிருந்த தமிழுக்கு இது வரப்பிரசாதமாக இருந்தது. அத்தகைய, தானே தரவிறக்கம் செய்யக்கூடிய ( தேனீ என்கிற ஒரு இலவச தமிழ் எழுத்துரு இணைப்புடன்) – இயங்கு எழுத்துருவை (http://www.geocities.com/csd_one/umar/THENEE.eot) அனைவருக்கும் இலவசமாக அளித்தவர் அமரர். திரு. உமர் அவர்கள் (http://www.pudhucherry.com/pages/umar.html ). அதோடு இன்னுமொரு சாதனையையும் அவர் செய்தார். அது – ஒரே எழுத்துருவில் TSC, Unicode என்கிற இரண்டு குறியீட்டு முறைகளைப் புகுத்தியது. இவ்வாறு, பல்வேறு நபர்களின் தன்னலமற்ற முயற்சியால் தமிழ் இணையத்திலும் வேகமாக வளர்ந்தது.
அதோடு, பிரபலமான விகடன், குமுதம் போன்ற வார இதழ்களும், மாத இதழ்களும் ஏதோ ஒரு வகை எழுத்துருவோடு இணையத்தில் வரத் தொடங்கின. தட்ஸ்தமிழ்.காம்,. வெப் உலகம்.காம் போன்ற மின்னிதழ்களும் வரத்தொடங்கின.
இந்த சமயத்தில் தான் 2003ம் ஆண்டுவாக்கில் வலைப்பதிவு (Blog) எனும் புது வரவு இணையத்தில் வந்தது. இந்த வலைப்பதிவின் மூலம் யார் வேண்டுமானாலும், அதிகம் கம்ப்யூட்டர் பற்றி தெரியாதவர்களும் கூட தங்களுக்கென ஒரு வலைப்பதிவைத் தொடங்கி எழுதலாம் என்ற நிலை ஏற்பட்டது. இதன் மூலம் ஏற்கனவே இருந்த பல்வகை எழுத்துருக்கள், செயலிகள், இயங்கு எழுத்துருக்கள் என்கிற வசதிகளோடு எந்த இந்திய மொழிகளையும் விட தமிழில் தான் அதிக வலைப்பதிவுகள் என்று அதிக எண்னிக்கையில் தமிழ் வலைப்பதிவுகள் வரத்தொடங்கின. அத்தகைய வலைப்பதிவுகள், ஒரு குறுகிய வட்டத்திலேயே இருந்தது. ஒருவர் எழுதிய வலைபதிவை அவரது நண்பர்களோ, அவரது வலைப்பதிவைத் தெரிந்தவர்களோ என மிகச் சிலரே படிக்க முடிந்தது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ”தமிழ்மணம்” (http://www.thamizmanam.com) என்கிற ஒரு வலைப் பதிவுத் திரட்டியை உருவாக்கினார் , திரு. காசி ஆறுமுகம். இந்த தமிழ்மணம் இணையத் தமிழ் உலகில் ஒரு புதிய பாய்ச்சலை உண்டாக்கியது எனலாம். இந்த ‘தமிழ்மணம்’ பல்வேறு மட்டங்களில் பல்வேறு தாக்கங்களை உண்டாக்கியது. ஒரு வலைப்பதிவர்க்கான வாசகர் அளவை அதிகரித்ததது முதல் ஒரு மாற்று ஊடகமாக தமிழ் இணையத்தை நிறுத்தியது வரை என சொல்லலாம். கருத்துத் திணிப்புகளையே செய்திகளாகக் கொண்ட அதிகாரமிக்க பத்திரிக்கை உலகில், தடைகளற்ற செய்திகளையும், தகவல்களையும், கருத்துக்களையும் கொண்ட வலைப்பதிவுகளை ஒருங்கிணைத்துத் தந்தது. மேலும், புதுப்புது வலைப்பதிவுகள் தொடங்கிட ஓர் ஆர்வத்தையும் கொடுத்தது.
இத்தகைய, புதுப்புது தமிழ் வலைப்பதிவுகள் மற்றும் இணைய தளங்களின் வருகை நல்ல தகவல்களை தமிழில் ஒரே ஒரு குறியீட்டு முறையில் ஓரிடத்தில் சேர்த்து வைக்க வேண்டும், அத்தகவல்களை தேடுவதற்கு வசதி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை எற்படுத்தியது. அதன் விளைவு தான், தமிழ் விக்கிபீடியா. ( http://ta.wikipedia.com ) . இப்போதி தமிழ் விக்கிபீடியாவில் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் விதவிதமான தலைப்புகளில் கிடைக்கிண்றன. ஆனாலும், மற்ற மொழிகளைக் காட்டிலும் தமிழில் கட்டுரைகள் குறைவாகவே உள்ளன.
தற்போதைய நிலை:
இன்றைய இணைய உலகில் கணித்தமிழின் அடுத்த கட்ட நகர்வாக இருக்கவேண்டியது யுனிகோட் எனும் ஒருங்குறியைப் பயன்படுத்துவது தான். ஆனால், கிட்டத்தட்ட கால் நூற்றாண்டைக் கடந்து விட்ட பிறகும், உலக மொழிகள் எல்லாம் யுனிகோட் பயன்படுத்த தொடங்கிய பிறகும், நாம் இன்னும் பழைய குறியீட்டு முறைகளையே பின்பற்றிக் கொண்டிருந்தால் கணித்தமிழ் வளர்ச்சி பாதிக்கப்பட்டு ஒரே இடத்திலேயே தேங்கி விடக்கூடிய நிலை உருவாகும். யுனிகோட் குறியீட்டு முறைக்கு மாறுவது மிகவும் அவசியம். ஏனென்றால் அதன் பயன்கள் அளப்பரியது. மிக முக்கியமானது அதன் தேடுதல் வசதி. அதனால் தான், தொடங்கப்பட்ட நாளிலிருந்து கூகுள் தனது சேவைகள் அனைத்தையும் யுனிகோட் குறியூட்டு முறையில் வழங்கத் தொடங்கியது. அதானலேயே, அதன் சேவைகளை மற்ற போட்டி நிறுவனங்களை விட எளிதாகவும், விரைவாகவும் மற்ற உலக மொழிகளிலும் வெளியிட முடிந்தது. தேடும் வசதி மட்டுமல்ல, யுனிகோட் பயன்படுத்தினால் தமிழ் மொழியில் இருக்கும் ஒரு தகவலை மற்ற இந்திய மொழிகளுக்கோ அல்லது உலக மொழிகளுக்கோ ஒலிபெயர்ப்பு (transliteration) செய்யலாம். மொழிபெயர்ப்பு (translation) செய்யலாம். ஒரு வடிவத்தில் சேர்த்து வைத்த தகவல்களை வெவ்வேறு வடிவங்களில் மாற்றலாம். (xml to text, html, PDF, flash ).
பன்னாட்டு நிறுவனங்களான யாஹூ (http://in.tamil.yahoo.com) , மைக்ரோசாப்ட் (http://tamil.in.msn.com), AOL (http://www.aol.co.in/tamil )ஆகியவை எல்லாம் தங்களது தமிழ்ப் பதிப்பு இணைய தளங்களை யுனிகோட் முறையில் வெளியிடும் போது , இந்தியாவில் இருந்து வெளிவரும் இணையதளங்கள் பெரும்பாலும் யுனிகோட் முறையில் வருவதில்லை. அந்த நிலை மாறவேண்டும்.
இந்தியாவில், 5% ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக இருந்த கம்ப்யூட்டர் மற்றும் இணையம் இன்று எல்லோரும் பயன்படுத்தும் வகையில் நகர்ப்புறம் மற்றும் கிராமங்களில் பரவி வருகிறது. அதிலும் இணையம் பயன்படுத்துபவர்களில் 60 % பேர் தங்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் தங்கள் தாய் மொழியில் தகவல்களைக் காணவே விரும்புகிறார்கள் என்று ஓர் ஆய்வு சொல்கிறது. அப்படியே தமிழ் மொழியில் தகவல்களைப் பெற விரும்புகிறவர்களுக்குத் தேவையான தகவல்கள் இணையத்திலே கிடைக்கிறதா என்றால் இல்லை என்றே கூறலாம். ஒன்று திருக்குறள், ஆத்திசூடி, கம்ப ராமாயனம் என்று பழந்தமிழ் இலக்கியங்கள் கிடைக்கிறது. அல்லது சினிமா, அரசியல், மதம் மற்றும் சாதி சண்டைகள் போன்ற குப்பைகள் தான் இருக்கிறது. கலை, சுற்றுச்சூழல், அறிவியல், மருதுவம், வணிகம், வர்த்தகம் பற்றிய நல்ல தகவல்களையோ, ஆய்வுக் கட்டுரைகளையோ காண்பது மிக அரிது, அப்படியே இருந்தாலும் தேடுபவர்களுக்கு கிடைக்காத வைகையில் ஏதோ ஒரு குறியீட்டு முறையில் எங்கோ இருக்கும்.
அந்த நிலை மாற நாம் எல்லோரும் கணித்தமிழ் பழக வேண்டும். யுனிகோட் பயன்படுத்த வேண்டும். இன்னும் நிறைய பயனுள்ள ஆக்கங்களைக் கொண்டு வரவேண்டும். வருடக்கணக்கில் கம்ப்யூட்டர் பயன்படுத்தி வரும் நாம், என்றைக்காவது தமிழில் தமது பெயரையாவது கம்ப்யூட்டரில் பார்க்க நினைத்தது உண்டா? இந்த சின்ன முயற்சியோடு , கணித்தமிழில் நாம் நுழைவோம். அந்த சின்ன முயற்சிக்கு உங்களுக்கு உதவுவதற்காகவே ”FETNA” அமைப்பானது ”தமிழ்மணம்” மற்றும் ”INFITT” அமைப்புகளுடன் சேர்ந்து ”கணித்தமிழ் பயிற்சிப் பட்டறை”யை இந்த தமிழ் திருவிழாவில் நடத்துகிறது. நீங்களும் கண்டிப்பாக கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.
Posted by நா. கணேசன் at 7 comments