தில்லைப் புதர்ச்செடியின் பெயரால் இந்தியாவின் தலைநகருக்குத் தில்லி (dhillika) என்னும் நகர்ப்பெயர் தோன்றியிருக்கலாம். தில்லைச் செடி (முனைவர் இராமகி). தென்தில்லை அம்பலத்தைத் திருமதி. கீதா சாம்பசிவம், குமரன், ஜி. இராகவன் முதலியோரும் நாக. இளங்கோவனின் தில்லையில் நடக்கும் ஆயிரங்காலத்து அடாவடி!, மற்றும் கண்ணபிரான் இரவிசங்கரின் சிவராத்திரி: தீட்சிதர்களுக்கும் ஆறுமுகச்சாமி ஐயாவுக்கும் ஒரு பகிரங்கக் கடிதம்! ... என்று பல பதிவர்கள் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள், அன்னாருக்கு நன்றிகள் கோடி. சிதம்பரம் தீக்கிதர்கள் பற்றிய விவரணப்படம் இங்கே முன்னர்க் கொடுத்தேன்.
பாரிஸ் நகரில் குய்மெ (Guimet) அருங்காட்சியகத்தில் உள்ள ஆடவல்லான் (சதாநிருத்த ஆனந்ததாண்டவ மூர்த்தி) சோழர் காலத்தவர். அகஸ்டி ரோடின் என்னும் புகழ்வாய்ந்த சிற்பி 1913-ல் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி அழைப்பினால் சென்னை மியூசியத்தில் திருவாலங்காடு நடராஜரைப் பார்த்தபின் பிரெஞ்சு மொழியில் எழுதிய கவிதை, குறிப்புகளே உலகக் கலைவரலாற்றில் இந்தியக் கலைப்படைப்புகளைப் படிக்கவும் சேர்க்கவும் வித்தாக அமைந்தன.
தொல்பொருள் ஆய்விலே சிவ வழிபாடு பற்றித் தெரியவரும் உண்மைகள் சில. பெருங்கல் மூதாதையர் ஈமச் சின்னங்கள் (Megalithic burials, பாண்டுக் குழிகள்) கி.மு. 1000க்குப் பின்னர் இரும்பூழியில் (Iron Age) தென்னாட்டிலும், இலங்கையிலும் கிடைக்கின்றன. இவற்றில் குதிரைகள், கடிவாளங்கள், திரிசூலங்கள், ... கிடைக்கின்றன. ஆனால் அவற்றில் லிங்கங்கள் காணோம். இதற்கு, சிந்து சமவெளி உயர்நாகரிகம் அமைத்தோர் திராவிட மக்கள் என்று ஆராய்ந்துவரும் நண்பர் பேரா. ஆஸ்கோ பார்ப்போலாவின் கட்டுரையைப் படிக்கலாம். A. Parpola, 2002, Jl. of American Oriental Society, Pandaie and Sita on the historical background of the Sanskrit epics, vol. 122 (2), 2002 pp. 361-373. இது வேண்டுவோர் naa.ganesan@gmail.com என்னும் முகவரிக்கு மின்மடல் அனுப்பவும்.
முதன்முதலில் இலிங்க வழிபாட்டைத் தெளிவாக இந்தியாவில் கிடைப்பது காளத்தி அருகேயுள்ள மௌரியர் காலத்தைய குடிமல்லம் இலிங்கம் ஆகும் (கி.மு. 3-2ஆம் நூற்றாண்டு). இலிங்க வழிபாடு தொல்லியலின் படி, வடமதுரை போன்ற இடங்களில் ஏராளமாகக் கிடைக்கின்றன. 2-ஆம் நூற்றாண்டின் பின்னர் வெகுவாகப் பரவி, சாளுக்கியர், பல்லவர் குகைகளில் காண்கிறோம். இலிங்கோத்பவர் புராணம் (அண்ணாமலை) கூறும் கார்த்திகை விளக்கீடு விழாவாகக் கொண்டாடப்பட்டதைப் பல பாடல்களில் சங்க இலக்கியம் குறிக்கிறது. 5-7 நூற்றாண்டுகள் தென்னாட்டில் முழுஉருவ வழிபாடாகவும் சிவ வழிபாடு இருந்திருக்கிறது. சங்க இலக்கியத்தில் இலிங்கம் என்ற வார்த்தை இல்லை, ஆனால் சிவபெருமானின் உருவ வடிவம் பலவாறு வருணிக்கப்படுகிறது. அய்யனார், சாஸ்தா/ஐயப்பனை ஆரியன் என்பதும் ஐயனாரைக் குதிரையில் ராஜலீலாசனத்தில் வழிபடலும் காண்க. ஆரியன் எனச் சிவபிரானைத் திருவாசகம் தேவாரம் போன்றன போற்றும். உதாரணமாக, பொதிகை மலையில் உள்ள தெய்வம் சைவர்களுக்குத் தட்சிணாமூர்த்தியாக உருவானார், பௌத்தர்கள் மலயம்/பொதியில் மலையில் வாழ்வது அவலோகிதர் என்றனர் (கண்டவியூக சூத்திரம் (முதல் நூற்றாண்டு), பின்னர் யுவான் சுவாங் (7-ம் நூற்.)). பொதிகை மலையில் ஆரியன்காவு உள்ளது, ஆரியங்காவுப்பிள்ளை போன்ற பெயர்களைச் சாதாரணமாக நெல்லைப் பகுதிகளில் கேட்க முடிந்தது. வடக்கே தட்சிணாமூர்த்தி இல்லை. கர்நாடகா, ஆந்திராவிலேயே கார்வான் (காரோணம்) லகுளீசர் தக்கிணரின் இடத்தில் இருப்பார். பௌத்த அவலோகிதர் - சைவத் தக்கிணாமூர்த்தி விளக்கங்களை சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி, தமிழ் செம்மொழி என்று அறிவித்தபின் இந்திய அரசு நடத்தும் 'நோக்கு' (2008) ஆராய்ச்சி இதழில் வெளிவந்திருக்கும் என் கட்டுரையில் காணலாம்:
http://indology2.googlepages.com/padmakottar.pdf
தொன்மையான திராவிட மக்களின் இசை, கூத்து இவற்றின் மொத்த உருவாக விளங்கும் கூத்தப்பிரான் vs. இலிங்க வழிபாடு இழுபறிகளைச் (tussles back and forth) சிதம்பரத்தில் காணமுடிகிறது. நடராசர் திருக்கூத்து எங்கே அருமையாகப் பேசப்படுகிறது என்றால் திருமங்கை ஆழ்வாரின் வளமடல்களைப் படிக்கலாம். சகலாகம பண்டிதர் உமாபதி சிவாச்சாரியார் 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவரது குஞ்சிதாங்க்ரிஸ்தவம், கோயிற்புராணத்திற்கும் வடமொழியில் ஏற்பட்ட சிதம்பர மாகாத்மியம் சொல்வதற்கும் வேறுபாடுகள் உள்ளன. தில்லைவாழ் அந்தணர்தான் திருச்சித்திரகூடத்தில் பெருமாளுக்கும் வழிபாடியற்றியுள்ளனர். ஸ்ரீவைஷ்ணவ பட்டாச்சாரியர்கள் தோற்றத்துக்கு (கி.பி. 1539) முன்னால் அப்படி. சோழர்கள் சிலரால் தில்லைப் பெருமாள் கடலுள் புகுந்தார், மீண்டும் விஜயநகர ஆட்சியில் புதிதாய்ப் பெருமாள் கோயில் ஏற்பட்டது. கீழ்த் திருப்பதியில் உள்ள உற்சவர் கோவிந்தராஜப் பெருமாள் தில்லையில் இருந்தவர்தான். புகலடைந்த அவருக்கு அதனால் தில்லைப் பாசுரங்களே திருப்பதியில் பாடப்படுகின்றன (வேங்கடவனின் அண்ணன் என்பது மரபு).
திருவாதிரை உற்சவத்தில் 'ககன கந்தர்வ கனக விமானத்தில்' ஆடல்வல்லபிரான் ஊருக்குள் (சென்னை) திருவீதி உலாப் போகும் காட்சி. பண்டை இலக்கியங்கள் கூறும் தில்லைவாழ் அந்தணர் என்பவர்கள் உமாபதி சிவாச்சாரியார் போன்ற ஆகம வழிபாடுள்ளோராக இருக்கலாம், தற்கால தீட்சிதர்கள் சிதம்பர மகாத்மியம் கூறும் வங்காளத்தில் இருந்து வந்தோராக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. காலங்காலமாக ஆட்சிகள் மாறும்போது, ஆகம வழிபாடுகள் தில்லையில் மங்கித் தாழ, வைதீக வழிபாடு மேலோங்கியிருக்கலாம். தமிழ்நாடு தமிழே தெரியாதோரால் சில நூற்றாண்டுகள் கைமாறியது வரலாற்றுண்மை. சீவைணவ சமயம் விசயநகர, பின்னர் நாயக்க மன்னருடன் சேர்ந்தமையாலும் காலத்திற்கேற்ப மாற்றியமைத்துக் கொண்டு வளர்ந்துள்ளது. ஆழ்வார்களின் நாலாயிரத்தைக் காட்டாறு என்று சொன்னால், அதன் ஈடுகளின் நீண்ட நெடிய பாரம்பரியத்தை ஆற்றுப் பிரவாகத்துக்கு வியாக்கியானச் சக்கிரவர்த்திகள் அமைத்தளித்த கரைகள் என்னலாம். ஆச்சார்யார்கள் வாழையடி வாழையாக வழிகாட்டியதால் வேத சாம்யம், உபய வேதாந்தம், கருவறையில் பாசுரம் அனுசந்தித்தல் எல்லாம் ஏற்பட்டுவிட்டன. ஆனால், சைவத் திருமுறைகளுக்கு உரைமரபு இல்லை. தேவாரத்திற்கு உரையே 1960களில் தானே தமிழர் எழுதத் தலைப்பட்டனர். சைவத்தின் தேக்கநிலைக்கு பிற்காலச் சோழ பாண்டியர் ஆட்சி மறைந்தபின் பல நூற்றாண்டுகள் தமிழர் தமிழ்நாட்டை ஆளாததும் ஒரு முக்கியக் காரணந்தான். இன்னும் சைவம் 12-14 நூற்றாண்டுகளிலே நிற்கிறது. உதாரணமாக, எந்தக் கோர்ட்டுக்குப் போனாலும், சைவ சித்தாந்த மடங்கள் சமற்கிருத அர்ச்சனைக்குத் தான் ஆதரவு என்று 'அபிடவிட்' அளிக்கின்றன. மேலும் சிதம்பரத்தை ஒரு தனியார் சொத்து என்றே சைவமடங்களும் நிற்பது ஜனநாயக எதிர்நிலைப்பாடு தானே.
மரபுத் தமிழ் இலக்கியத்தில் சிவபெருமான் எழுதியதாகச் சொல்லப்படுபவை மூன்றே மூன்று பாடல்களே: (1) தருமிக்காக எழுதிய 'கொங்குதேர் வாழ்க்கை' (குறுந்தொகை) (2) பாணனுக்குப் பரிந்து சேரமான் பெருமாளுக்கு அனுப்பிய சிபாரிசுக் கடிதம் (பதினோராந் திருமுறை) (3) கொற்றவன்குடி உமாபதி சிவத்திற்குப் பெற்றான் சாம்பானுக்குத் தீட்சை அளிக்கச்
சிவனார் சொன்ன வெண்பா. இங்கே முக்கியமாய்க் கவனிக்க வேண்டிய செய்தி: சிவன் கடிதம் எழுதியது விளிம்புநிலை மாந்தருக்கேயாம். உமாபதி சிவம் தீட்சை பெற்றான் சாம்பானுக்கு அளித்த தில்லைத் தலத்தில் நந்தனார் உருவம் 1940வரை இருந்துள்ளது. அச்சிலை இருந்தமைக்குச் சான்றாக உவேசாவின் 'நந்தன் சரித்திரக் கீர்த்தனை' கோபாலகிருஷ்ண பாரதி வரலாற்றிலே விரிவாகக் காணமுடிகிறது.கொண்டல் சு. மகாதேவன் 1930களில் பார்த்ததைத் தில்லைவிடங்கன் வ. மெய்கண்டார் நடத்தும் இளந்தமிழன் (2005) சிற்றிதழில் கட்டுரை எழுதியுள்ளார். ஆனால் தீட்சிதர்கள் நந்தனார் நாயனாரை 50-60 வருடம் முன்பு அகற்றியிருக்கிறார்கள் என்பது வருந்தத்தக்கது. அச்சிலையைத் தேடியெடுத்துப் பிரதிஷ்டை செய்வதும், தமிழ்ப் பாசுரங்களை யார் வேண்டுமானாலும் பாட வழிவகுப்பதும் அரசால் நிரந்தரமாக்கப்படல் வேண்டும்.
ஹூஸ்டன் மீனாட்சி திருக்கோயிலில் மதுரைச் சகோதரர்கள் இராஜரத்தின பட்டர் (வயது 81), தங்கம் பட்டர் (85 வயது) ஆகிய ஆகம விற்பன்னர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். சென்னை உயர்நீதி மன்றம், டெல்லி உச்ச நீதிமன்றம் போன்றவற்றில் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், வெங்கட்ராம சாஸ்திரி போன்றோர் முழுமுயற்சியின் விளைவாக 20-ஆம் நூற்றாண்டில் 'சிதம்பரம் கோயில் ஒரு 'ப்ரைவேட் ப்ராப்பர்ட்டி', அது மடம், கோயில் (temple) அல்ல' என்று சட்ட பூர்வமாக எழுதப்பட்டுள்ளது என்பதுதான் பிரச்சினை என்று விளக்கினர். அதற்கு ஆதரவைச் சைவமடங்கள் - தருமபுரம், திருவாவடுதுறை, ... போன்றவை தந்துள்ளன. எனவே, மெல்ல மெல்லத் தான் மக்களாட்சி அரசின் முயற்சிகள் நடைமுறைக்கு வரும். தீட்சிதர்களுக்கு வருமானம் பெருகவும், தனியாரிடம் விதவிதமாய் வசூல்கள் ஒழுங்கடையவும், கோயில் கட்டிடங்கள், மண்டபம், கோபுரம், விமானம் நல்லமுறையில் வெகுபணம் செலவிட்டு கும்பாபிஷேகம் நடந்து ஏனைக் கோவில்கள் போலச் செழிக்கவும் தில்லைத் திருத்தலம் ஒரு private property அன்று, அனைத்துச் சைவருக்கும் சொந்தமானது என்னும் நிலையை அரசு ஏற்படுத்தவேண்டும். 21-ஆம் நூற்றாண்டில் ஏற்படப்போகும் நீதிமன்றங்களும், சர்க்கார்களும் அந்நிலைக்குச் சரி செய்துவிடுவார்கள் என்று நம்புவோம். திருப்பதி, பழனி, மதுரை, ... போன்று வரும்படி சிதம்பரத்தில் மிகுங்காலத்தில் தமிழ்ப் பள்ளிகள், நுட்பக் கல்லூரிகள் தொடங்கி அரசாங்கம் நடத்தலாம். தென்னார்க்காடு மாவட்டத்தில் (உ-ம்: வள்ளலாரின் வடலூரில் ஒரு சர்வகலாசாலை), யாழ்ப்பாணத்திலுங் கூட, கல்லூரிகளுக்கு நிதி அளிக்கும் நிலை ஏற்பட வேண்டும்.
உசாத்துணை:
(1) மலர்மன்னன், நந்தன் இல்லாமல் நடராஜரா? திண்ணை வலையிதழ்,
http://groups.google.com/group/minTamil/msg/9199d189f81dc9ba
(2) அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், தீட்சிதர்கள் யார்?, ஆனந்த விகடன், மார்ச் 2008 http://unmaiudaiyaan.blogspot.com/2008/03/blog-post_4684.html
(3) Paul Younger, The Home of Dancing Sivan, The traditions of the Hindu temple in Citamparam, Oxford University Press, 1995.
(4) Kamil Zvelebil, Ananda Tandava of Siva-sadanrttamurti, Madras, 1985.
(5) Asko Parpola, Pandaie and Sita on the historical background of the Sanskrit epics, Journal of American Oriental Society, vol. 122 (2), 2002 pp. 361-373.
சிதம்பரத்தில் தமிழ் வழிபாட்டுரிமை
Subscribe to:
Post Comments (
Atom)
6 comments:
செறிவான தகவல்கள் அடங்கிய கட்டுரை ஐயா! நன்றி!
//தில்லைவாழ் அந்தணர்தான் திருச்சித்திரகூடத்தில் பெருமாளுக்கும் வழிபாடியற்றியுள்ளனர்//
"மூவாயிர" நான் மறையாளர் நாளும்
முறையால் வணங்க அணங்காய சோதி,
தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே
-இது தான் அந்தப் பாசுரம்.
//கீழ்த் திருப்பதியில் உள்ள உற்சவர் கோவிந்தராஜப் பெருமாள் தில்லையில் இருந்தவர்தான்//
ஆம்! இவருக்குத் தில்லைப் பாசுரங்கள், "திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே" என்று தான் இன்றும் சேவிக்கப்படுகிறது!
//நந்தனார் நாயனாரை 50-60 வருடம் முன்பு அகற்றியிருக்கிறார்கள் என்பது வருந்தத்தக்கது//
தனியார் சொத்தாயிற்றே! என்னன்னு கேட்க முடியும்? சைவ மடங்களும் அபிடவிட் போடுகின்றன என்று சொல்கிறீர்கள்! ஹூம்ம்ம்ம்ம்ம்! :-(
//'சிதம்பரம் கோயில் ஒரு 'ப்ரைவேட் ப்ராப்பர்ட்டி', அது மடம், கோயில் (temple) அல்ல'//
ஓ...இப்படி வராங்களா?
சரிங்க சாமீ...அடியேன் சொல்வதைக் கண்டு யாரும் கோவிச்சிக்காதீங்க!
லாஜிக் படி கோவில் இல்லை, மடம்-ன்னே வச்சிப்போம்!
மடத்துக்குண்டான வழிமுறைகள் எல்லாம் நடக்கின்றனவா?
மடம்-ன்னா மடத்தலைவரும் சீடரும் சாதுர்மாஸ்ய விரதம் இருக்கணும். சில மாதங்களில் ஒரே இடத்தில் தொடர்ந்து தங்கக் கூடாது! சில மாதங்களில் தங்கணும்! - இதெல்லாம் நடக்கலைன்னா மடமும் இல்லையே!
தில்லை பொதுச் சொத்தே! நிர்வாகம் யார் வேண்டுமானாலும் செய்யட்டும்! ஆனா ஆலயம் பொதுச் சொத்தே!
உப்புச் சத்தியாகரகம் நடந்த இடம் தனியார் சொத்தா இருக்கலாம்! ஆனால் சத்தியாகரகம் நடந்து நாடு விடுதலை பெற்றபின் நினைவுச் சின்னம் வைக்கும் நிலை வரும் போது, அது பொதுச் சொத்தே!
சார், word verificationஐத் தூக்கிடுங்களேன்.
பல பின்னூட்டம் போடுறேன்!
ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் பரிசு கொடுப்பதற்குப் பதிலா தண்டனை கொடுக்கறீங்களே? :-))
பல இடுகைகளாக எழுத வேண்டிய பற்பல தகவல்களை ஒரே இடுகையில் சேர்த்துச் சொல்லியிருக்கிறீர்கள் கணேசன் ஐயா. ஒவ்வொன்றாக மீண்டும் படித்து ஏதேனும் கேள்விகள் வந்தால் கேட்கிறேன். நோக்கு ஆராய்ச்சி இதழில் இருக்கும் கட்டுரையையும் படிக்கிறேன்.
நிறைந்த தகவலடங்கிய கட்டுரைக்கு மிக்க நன்றி!
கீமே அருங்காட்சியகம் சென்றுள்ளேன்.
Search in தமிழ் http://www.yanthram.com/ta/
Post a Comment