சுஜாதா பற்றிப் பல விமரிசனங்களைப் பதிவுகளில் பார்க்கிறேன். 70களில் பள்ளி மாணவனாக இருந்தபோது வைரங்கள் என்ற கதையில் வடநாட்டான் வந்து கோவையில் தலைமுறைகளாக வைத்திருந்த தன் குறுநிலத்தை வாங்கும்போது ஏற்படும் மனஉளைச்சலைச் சொல்லும். இன்று கோயம்புத்தூரில் வீட்டுவிலை எங்கோ எகிறிவிட்டது. என் பக்கத்து வீட்டு மருத்துவத் தம்பதியர்
(முத்துக்குமாரசாமி - கனகவல்லி) கரையெல்லாம் செண்பகப்பூவைத் திரைப்படம் எடுத்துச் சம்பாதித்த காசைக் கரைத்தனர். அவர்களுக்குப் பரிச்சயம் இல்லாப் புலம் அது. கலை, பணம் - இருநோக்கிலும் தோல்வியே. புனைகதைகளையும், சினிமாவையும் தெரியாததால், சுஜாதாவை அதிகம் நான் படிக்க நேர்ந்ததில்லை. அவர் வாராவாரம் மின்னரட்டைக்கு அம்பலம்.காம் என்ற தளத்துக்கு வருவாராம் என்று பதிவுகளில் நேற்றுக் கண்டேன். கணினி முன்னேற்றங்களுக்கு ஜார்ஜ் ஹார்ட் எழுத்துரு, பாலா சாமிநாதனின் எழுதி, முத்தெழிலன் நெடுமாறன் (முத்துவின் முரசு அஞ்சல்), சுரதாவின் பொங்குதமிழ், இ-கலப்பை முகுந்த், இணையம், தமிழ்மணம் போன்ற வளர்ச்சிகளை நேரில் கண்டதால், சுஜாதா இணையம் பற்றி எழுதியவை தமிழ்நாட்டில் புதுமை, ஆனால் வெளிநாடுகளில் அல்ல எனும் உண்மையை உணரமுடிகிறது. அவரது நல்ல கட்டுரைகளைத் தேடியெடுத்து, மதுரை முன்னியம், முனைவர் நா. கண்ணன் தொடங்கி நடத்தும் முதுசொம் போன்ற தரவுத்தளங்களில் வலையேற்ற சுஜாதா அன்பர்கள் முன்வரவேண்டும். அது அன்னாருக்குச் செய்யும் நெடுநாள் அஞ்சலியாக அமையும்.
தமிழன்னை அழுத தருணங்கள் சில. சென்னையிலே கலெக்டராயிருந்த பிரான்சிஸ் வைட் எல்லிசு திருவள்ளுவனாரைச் சமணத் துற்வியாகத் தங்கக் காசுகள் வெளியிட்டவர். திராவிட மொழிக் குடும்பம் சமற்கிருத்தினின்று வேறுபட்ட மூலத்தில் தோன்றியது என்று உலகுக்கு அறிவித்தவர் எல்லீசனே. 35 ஆண்டு கழித்து 1856-ல் நூலாக விரித்தவர் கால்டுவெல் பாதிரியார். எல்லிஸ் இராமநாதபுரஞ் சென்றபோது நஞ்சுண்டு இளவயதில் மாண்டார். அடுத்து வந்த வெள்ளை ஆட்சியருக்குத் தமிழின்பால் நாட்டமில்லை. எல்லிஸ் அகாலத்தில் அகன்றதால், புலவர்கள் அவரிடம் ஒப்படைத்த பொக்கிசங்களைக் கலெக்டர் மாளிகை 'பட்லர்' சுடுதண்ணீர் அடுப்பெரிக்கப் பயன்படுத்தினான். அத்தனை ஓலைச்சுவடிகளும் ஒன்றில்லாமல் ஒழிந்தன, சமணக் காவியங்கள் (உ-ம்: வளையாபதி), பௌத்தப் பொத்தகங்கள், .... 1820களில் தீக்கிரையாயின.
ஏராளமான பழந்தமிழ்ப் புலவர்கள் சேதுபதி, பாலவநத்தம் பொன்னுசாமித் தேவர், பெத்தாச்சி வள்ளல் போன்ற புரவலர்களை நாடித் தஙகியிருந்த சோலை மதுரைத் தமிழ்ச் சங்கம். அன்றைய தாழ்நிலையில் தமிழ்த் திறமையைக் கொண்டு சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சி என்றெல்லாம் சந்தைப்படுத்திக் காசுபார்க்க முடியாது. 20 - சனவரி - 1920ல் மதுரைத் தமிழ்ச் சங்க நூலகம் தீப்பற்றி எரிந்தது, எண்ணிறந்த கருவூலங்களைத் (எ-டு: குறளின் பழைய உரைகள் பல) தமிழ் அன்றும் இழந்துபட்டது. பின்னர் சிங்களக் காடையர்கள் 31- மே- 1981ல் கொளுத்திய யாழ்ப்பாணப் பொது நூல்நிலைய இழப்பு. இத் தீயழிப்பு பற்றிச் சுஜாதா 'ஒரு லட்சம் புத்தகங்கள்' என்னும் சிறுகதை எழுதியுள்ளாராம். இதைத் தேடி அனுப்புங்கள், வலைமலரிலோ, குழுமம் ஒன்றிலோ இடுங்கள். படித்துப் பார்கக ஆசை.
சுஜாதா நவீன இலக்கியத்திற்கு முன்தோன்றிய தமிழ் இலக்கியங்களைப் பலருக்கும் அறிமுகப்படுத்தியும் இருக்கிறார். பிரதமர் மொரார்ஜி தேசாய் அமெரிக்க அதிபர் கொடுத்த விருந்தில்கூட அவரது சிறுநீர் வைத்தியத்தை விளக்கத்தான் வெகுநேரம் செலவிட்டார்(தளைதட்டுகிற) வெண்பாவில் சுஜாதா குறிப்பிடுவார்:
மீசா மறைந்து எமர்ஜென்ஸி விட்டுப்போய்
தேசாயின் ஆட்சியில் சந்தோஷம் - பேசாமல்
பாத்திரம் ஒன்றை எடுத்துக்கொண் டெல்லாரும்
மூத்திரம் குடிக்க வாரும்!
விமானம் பேசுகிறது (வானமென்னும் வீதியிலே)
என்னை அடைந்தே எனக்குள் நுழைந்துவிட்டீர்!
சென்னைக்குச் செல்கின்ற சிந்தனையோ? - என்னைப்
பறக்கவைக்கும் சக்தி சிலசமயம் உன்னை
இறக்கவைக்கும் எச்சரிக் கை.
சுஜாதாவின் பழந்தமிழ் இலக்கியப் புரிந்துணர்வு பற்றி நியாயமான ஐயப்பாடுகள் பேராசிரியர்களிடம் உண்டு. இப்போது வரும் பல பதிவுகளின் ஒற்றுச் சந்திப் பிழைகளைக் கண்ணுறுங்கால் வெகுஜனப் பத்திரிகைகளில் சுஜாதா போன்றவர்கள் வளர்த்த இலக்கணப்பாடுகளும் க், ச், த், ப் ஒற்றுகள் மிக வேண்டும் இடத்தில் மிகாமைக்கும், தேவையில்லாமல் மிகுதற்கும் காரணம் என்பதை உணரமுடிகிறது. ஆயிரக் கணக்கான காட்டுகளுடன் புத்தகம் தொகுத்து இணையத்தில் வைத்தால் பலருக்கும் பயன்படும்,
சொல்திருத்தி (spell checker) நிரலெழுதத் துணைவகுக்கும்.
சுஜாதா நினைவலைகளை அப்துல் ஜப்பார், ஜெயமோகன், வெங்கட், லக்கிலுக், எல்லே ராம், கண்ணன், கானா பிரபா, இராகவன், பாலா, ... எழுதியனவற்றைத் தமிழ்மணத்தில் கண்டேன். காசி தன்பதிவில் சுஜாதாவை வாரஆசிரியர் என்னும் பகுதியைத் தமிழ்ப்பதிவர்களுக்கு அறிமுகஞ்செய்ய அழைத்தால் வாராரோ என எண்ணிக் கைவிட்டாராம். இணையத்தில் ஒரே எழுத்துக் குறியீட்டில் தமிழர் பலரும் எழுத வேண்டும், இலக்கியங்களை வகைப்படுத்தி வளர்க்க வேண்டும் என்று விரும்பிய சுஜாதா நிச்சயம் வந்திருப்பார் (Note 1), அவர் செந்தமிழ், யூனிக்கோடு, இணையப் பயன்கள் குறித்த கட்டுரை என்னிடம் உளது. 2005ல் தமிழ்நாடு அறக்கட்டளை (TNF), ஃபெட்னா (FeTNA) சேர்ந்து டெக்சாஸ் டல்லஸ் நகரில் நடத்திய மாநாட்டு மலர்க்கட்டுரையாக வெளியானது. தமிழறிவர்கள் படித்துச் சிந்திக்க வேண்டிய அக்கட்டுரை அடுத்த மடலில்.
சுஜாதா தமிழை விளித்து 'மிஸ் தமிழ்த்தாயே! நமஸ்காரம்" சொல்லியவர். தமிழ்த்தாய் தன்னிடம் வந்துசேர்ந்த அம்மகனை மடிநீழலில் இருத்தி இளைப்பாற்றி அருளுவாளாக!
~ நா. கணேசன்
Note 1: http://agaramuthala.blogspot.com/2005/12/adieu-amigos.html
வலைப்பதிவு வந்த புதிதில் சுஜாதா அவற்றை 'டைரிக்குறிப்புகள் / கையெழுத்துப் பிரதிகள் போன்றவை' என்று குறிப்பிட்டதோடு நில்லாமல், 'யார் யார் எப்போ என்னென்ன எழுதிருக்காங்கன்னு ஒவ்வொண்ணா போய் தேட முடியாது. எழுதியிருப்பவற்றைத் தேடி எடுக்கவும் முடியாது. ஆனா வலைப்பதிவுகளை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வரிசைப்படுத்தினால் அது நிறைய விஷயங்களைச் சுலபமாக்கிவிடும். அப்படி யாராவது ஒருங்கிணைக்க முயற்சிப்பார்களா என்று தெரியலை' என்று சொல்லி சில வாரங்களிலேயே தமிழ்மணம் வந்துவிட்டது. இன்று வரை வளர்ந்துகொண்டும் இருக்கிறது. தமிழ் இணைய உலகிற்கு தமிழ் மணத்தின் இந்தப் பங்களிப்பு சிறந்த ஒன்று என்றும் குறிப்பிட விரும்புகிறேன்.
மிஸ் தமிழ்த்தாயே! நமஸ்காரம்
Posted by நா. கணேசன் at 2 comments
அமரர் சுஜாதா
இளைஞர்களை அறிவியலுக்கும், கணினிகளுக்கும் உந்திய கவர்ச்சியான தமிழின் சொந்தக்காரர் சுஜாதா (ஸ்ரீரங்கம் ரங்கராஜன்) திருநாட்டுக்கு இன்று எழுந்தருளினார். அன்னாரின் திருமதி அவர்களுக்கும், மக்கள் கேசவபிரசாத், ரங்கபிரசாத் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
எழுத்தாளர் சுஜாதா வாழ்க்கைக் குறிப்பு காண்க.
வணக்கத்துடன்,
நா. கணேசன்
Posted by நா. கணேசன் at 2 comments
மிகமெல்லிய மடிக்கணி
ஆப்பிள் நிறுவனம் உலகின் மிக மெல்லிசான மடிக்கணியை அறிமுகம் செய்தது. சந்தவசந்தம் மரபுக்கவிதைக் குழுவினர் இயற்றிய வெண்பாக்கள்:
காற்றைப்போல் தூக்கக் கனமின்றிக் காகிதப்பை |
சொக்கவைக்குஞ் சீருறத் தோற்றியவுன் னைக்காணும் |
முதலில் மேக்கிண்டாஷ் கணினியை உருவாக்கியவர் இருவர். இடப்புறத்தில் பொறியாளர், வலப்புறம் வணிகச் சந்தைப்படுத்தியவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அவரது ஸ்டான்போர்ட் பல்கலைப் பட்டமளிப்பு விழா உரை இளைஞரை ஊக்குவிப்பது. தொழில் முனைப்பில் தூண்டும்.
A role model in business enterprise for all Tamils to follow!
கேட்டு மகிழுங்கள்! கருத்துக்களை அறியத் தாருங்கள்!
நா. கணேசன்
Posted by நா. கணேசன் at 1 comments
Labels: பட்டமளிப்பு விழாவுரை , மடிக்கணி , ஸ்டீவ் ஜாப்ஸ்
தமிழ் (யூனிக்கோட் 5.1-இலும் பிறகும்)
வரும் மார்ச் திங்களில் (2008) யூனிக்கோடு 5.1 இணையத்தில் இயங்கும். பல மொழிகளின் எழுத்துக்களும் வலையுலா முதன்முதலாய்க் காணும் வேளையிது. எ-டு: பல்லவ கிரந்தத்தின் கொடிவழித் தோன்றிய பாலித் தீவின் எழுத்துக்கள், சௌராஷ்ட்ர மொழிக்கு மதுரைக்காரர் நூறு ஆண்டுக்கு முன்னால் தோற்றிய எழுத்து (மொத்தம் அதைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஐம்பது ஆளுக்கும் குறைவே). மலையாளத்துக்கு நானளித்த 10, 100, 1000 சின்னங்களும், தமிழ் ஓம் சின்னமும் அத்தருணத்தில் தொழிற்படத் தொடங்கும். மலையாளப் பூச்சியம் என்று கால் (1/4) பின்னத்தைக் கொடுத்திருந்தனர்! முதலில் அடியேன் சுட்டியபோழ்து மறுத்தாலும், பின்னர் பிழையை இப்போது ஏற்றுச் சரி செய்துவிட்டனர்.
பாரதிதாசன் பல்கலைத் துணைவேந்தரும், தமிழ் அறிஞரும் ஆகிய முனைவர் பொன்னவைக்கோ போன்றோர் யூனிக்கோடை மாற்றிடப் பல்லாற்றானும் முயற்சிகள் எடுத்தமை தாங்கள் அறிந்ததே. இது சம்மந்தமாக, என் பழைய வலைப்பதிவுகள் இரண்டு:
(1) யூனிக்கோடில் மேலதிகமாகத் தமிழ்எழுத்துக்கள்
http://nganesan.blogspot.com/2008/01/blog-post.html
(2) யூனிக்கோடு அதிகாரிகள் சென்னைச் செலவு:
http://nganesan.blogspot.com/2008/01/unicode-chennai_7911.html
விளைவாக, தமிழ் பற்றிய விவரணங்கள் சற்றே மாறியிருக்கிறது.
http://www.unicode.org/versions/Unicode5.1.0/
அதிகாரபூர்வமாக, யூனிக்கோடு தமிழ் மெய்யெழுத்துக்கள் என்பவை தனிமெய்களே என்று அறிவித்துள்ளதற்கு மகிழ்ச்சி. அதே நேரத்தில், யுடிசி அடிப்படையான மாற்றங்கள் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நா. கணேசன்
Posted by நா. கணேசன் at 0 comments
இணையப் பல்கலைத் தலைவருக்கு முரசொலி விருது
முரசொலி விருதளிப்பு விழா - முனைவர் வா.செ.கு. மற்றும் மூவர் பெற்றனர்
செய்தி - thatstamil.oneindia.in
முதல்வர் உரை:
இந்த விருதுகளை வழங்கி கருணாநிதி பேசியதாவது:
திமுக பொதுக் கூட்டங்கள் பற்றி அண்ணா சிறப்பித்து கூறுகையில், 'எங்கள் பொதுக்கூட்டங்கள் மாலை நேரக் கல்லூரிகள்' என்று குறிப்பிடுவார். அந்த அளவுக்கு கல்லூரியிலே தரப்படுகின்ற கல்விச் செல்வம், அறிவுச் செல்வம், உலக வரலாற்றுச் செல்வம் இவைகளையெல்லாம் ஒரு பொதுக்கூட்டத்தில் அறிந்து கொள்ளும் வகையில் திராவிட இயக்கத்தவர்கள் தங்களுடைய பேச்சை அமைத்துக் கொள்வார்கள் என்பது அண்ணாவின் அந்த வர்ணனைக்கு பொருள்.
அந்த மாலை நேரக் கல்லூரியை நாம் சில காலம் நடத்தவில்லை. அந்த குறையை இன்று பேசிய வா.செ.குழந்தைசாமி போக்கி விட்டார். அவர் சொல்லிய, அறிவுறுத்திய அத்தனை அறிவுரைகளையும் ஏற்று, இன்னும் இயற்கை எவ்வளவு காலம் என்னை அனுமதிக்கிறதோ அந்தக்காலம் வரை தமிழர்களுக்காக, தமிழ்நாட்டுக்காக, தமிழகம் வளம் பெறுவதற்காக, வலிமை பெறுவதற்காக உழைப்பேன்.
ஏனென்றால் (சேது சமுத்திரத் திட்டம் குறித்து) அத்துணை வலிமை வாய்ந்த வாதங்களை அவர் இங்கே எடுத்து வைத்தார். இந்தியாவிலே மேலிடத்திலே கூட இன்றைக்கு குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். (சேது திட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் தலைமையை அமைச்சர் அம்பிகா சோனி குழப்பி வருவதாகக் கூறப்படுவது).
அதை நாம் நம்பியிருக்கின்ற, எதிர்பார்த்து இருக்கின்ற தம்பி டி.ஆர்.பாலுவால் கூட சரி செய்ய முடியுமா? என்கிற ஐயப்பாடு எழுந்துள்ள இந்த நேரத்தில், குழந்தை சாமி பேசிய பேச்சு மாத்திரம், போகவேண்டிய முறையிலே, போக வேண்டிய இடத்திற்கு போய்ச் சேருமேயானால் நிச்சயமாக சேது சமுத்திர திட்டம் வந்தே தீரும் என்ற நம்பிக்கையை நாம் பெறலாம். அப்படிப்பட்ட ஆதாரப்பூர்வமான விளக்கங்களை எல்லாம் அவர் இன்றைக்கு வழங்கியிருக்கிறார்.
வா.செ.குழந்தை சாமியின் புனைப்பெயர் குலோத்துங்கன். சிறந்த சோழ மன்னரான குலோத்துங்கன், கருணாகர தொண்டைமானை தளபதியாக கொண்டு போரை வென்று வெற்றிவாகை சூடினார். இங்கே குலோத்துங்கனாக வா.செ.குழந்தைசாமி உள்ளார். நான் கருணாகரன். அவர் எதிர்பார்க்கிற வெற்றி கிடைத்து-கலிங்கத்துப் பரணி கீதம் முழங்கும்.
இந்த நிகழ்ச்சி உவகையும், உருக்கமும் கலந்தது. முரசொலி மாறனை பற்றி யார் பேசினாலும் என்னால் உரையை கேட்டுக்கொண்டு உட்கார இயலாது. வேதனை வெள்ளத்தில் தள்ளப்படுவேன். சோதனை புயலால் தாக்கப்படுவேன்.
ஆனாலும் தவிர்க்க முடியாமல் இந்த நிகழ்ச்சியிலும் முரசொலி மாறன் பெயரை குறிப்பிட்டேதான் தீர வேண்டும் என்ற நிலையில் உரையாற்றிய ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட காரணத்தால் அவைகளையெல்லாம் நானும் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்.
இந்த தியாகத்தைக்கூட அந்த கண்மணிக்காக நான் செய்யாமல் இருக்க முடியுமா என்ற அந்தக் கேள்விக்கு பதிலாகத்தான் என்னை அறிந்தவர்கள் எல்லாம் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மாறனைபற்றி பேராசிரியர், வாகை சந்திரசேகர், நெப்போலியன் ஆகியோர் பேசும்போதும் என்னையே உற்றுப்பார்த்தனர். நான் அவர்களை அறியாமல் என் கண்களை துடைத்துக் கொண்டது எனக்குத்தான் தெரியும் என்று கருதினேன். அது அவர்களுக்கும் தெரிந்திருக்கும் என்பது எனக்குத் தெரியாமல் இல்லை.
மாறனை இழந்து பல வருடங்கள் ஆனாலும் துயரம் அடைகிறேன். அண்ணாவை இழந்து துயரம் அடைந்து வருவது போல, பெரியாரை இழந்து துயரம் அடைந்து வருவது போல, மாறனையும் இழந்து துயரம் அடைகிறேன். மாறனும் இப்போது இல்லை என்று என்னால் சொல்லமுடியவில்லை. அவன் என் உள்ளத்தில் குடி கொண்டுள்ளான். மாறன் என்னை எப்படி நேசித்தான் என்பதை நான் நண்பர்களிடத்தில் சொல்லியிருக்கிறேன்.
நம்முடைய இனம் வாழ, குலம் வாழ, மொழி வாழ சூளுரை மேற்கொள்ளவேண்டிய காலக்கட்டமாகும் இது.
10 ஆண்டுகளுக்கு முன் ஒரு புயல் எழும்பியது. அது இனமோதல் என்ற அளவிற்கு தமிழகத்தில் எழுந்தது. அதற்கான காலம் போர்க்களம் அல்ல. தேர்தல் களமாக அமைந்தது. அதில் திராவிட இயக்கம் வீழ்ந்துவிடும் என்றார்கள். ஆனால் நம்முடைய திராவிட இனத்திற்கு தான் வெற்றி கிடைத்தது.
நம்முடைய நாட்டை வாழ வைப்போம். தமிழர்களின் நாகரீகத்தை, கலாசாரத்தை பண்பாட்டை தரணியெங்கும் பரப்புவோம் என்றார் கருணாநிதி.
Posted by நா. கணேசன் at 2 comments
கட்டற்ற மென்கலன் மாநாடு
சென்னை எம்ஐடியில் கட்டற்ற மென்கலன் மாநாடு சென்ற மூன்று நாட்களாய் நடந்து முடிந்திருக்கிறது.
அதில் கலந்து கொண்டவர்கள் நிகழ்வுகளைப் பற்றி ஏதாவது வலைப்பதிவு (தமிழ் அல்லது ஆங்கிலம்) எழுதியிருக்கிறார்களா?
நன்றி,
நா. கணேசன்
--------------
http://groups.google.com/group/minTamil/msg/619317a204ea9781
*கட்டற்ற மென்பொருள் மாநாடு - அழைப்பிதழ்*
ம. ஸ்ரீ ராமதாஸ்
*கட்டற்ற மென்பொருள் என்றால் என்ன?*
இது மென்பொருளை பயன்படுத்தும் ஒருவருக்கு அம் மென்பொருளை இயக்க, படியெடுக்க, விநியோகிக்க, கற்க, மாற்றியமைத்து மேம்படுத்தக் கூடிய உரிமைகளைப் பற்றியது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமாயின் மென்பொருளொன்றைப் பயன்படுத்தும் ஒருவருக்கு அதன் மீதுள்ள நான்கு வகையான சுதந்தரத்தைப் பற்றியது:
- எப்பொருட்டும் நிரலினை இயக்கக் கூடிய சுதந்தரம். (முதலாவது சுதந்தரம்).
- நிரல் பணியாற்றும் விதத்தைக் கற்று தமது தேவைக்கேற்றாற் போல் ஆக்கிக்
கொள்ளக் கூடியச் சுதந்தரம். (இரண்டாவது சுதந்தரம்). முதற்கண் நிரலின் மூலத்தினை
அணுகக் கூடிய உரிமம் இதற்கு கொடுக்கப் பட்டிருத்தல் வேண்டும்.
- பிறரும் பயனுற வேண்டி படி யெடுத்து விநியோகிப்பதற்கான சுதந்தரம்.
(மூன்றாவது சுதந்தரம் )
- ஒட்டுமொத்த சமூகமும் பயனுற வேண்டி, நிரலினை மேம்படுத்தி, செய்த
மாற்றங்களைப் பொது மக்களுக்கு வெளியிடுவதற்கான சுதந்தரம். முதற்கண் நிரலின்
மூலத்தினை அணுகக் கூடிய உரிமம் இதற்கு கொடுக்கப் பட்டிருத்தல் வேண்டும்.
(நான்காவது சுதந்தரம்)
இச்சுதந்தரங்கள் அனைத்தையும் பயனொருவருக்குத் தரவல்ல மென்பொருள் கட்டற்ற மென்பொருள் ஆகும்.
*குனு திட்டம் என்றால் என்ன?*
யுனிக்ஸ் போன்றதொரு இயங்கு தளத்தினை உருவாக்கிட 1984 ம் ஆண்டு துவக்கப் பட்டத் திட்டம் குனுத் திட்டமாகும். இவ்வியங்கு தளம் கட்டற்ற மென்பொருளாகும். இதற்கு குனு அமைப்பென்று பெயர்.
குனுவின் கரு பூர்த்தியடையாததால் லினக்ஸ் கருவுடன் பயன்படுத்தப் படுகிறது. இன்று பலக் கோடிப் பேர் பயன்படுத்தும் இந்த குனு மற்றும் லினக்ஸின் கூட்டமைப்பிற்கு குனு/ லினக்ஸ் என்று பெயர்.
குனு/ வினக்ஸின் எண்ணற்ற வழங்கல்கள் கிடைக்கப் பெறுகின்றன. நூறு விழுக்காடு கட்டற்ற மென்பொருளாலான அதாவது பரிபூரண சுதந்தரத்தினை மதிக்கத்தக்க குனு/ லினக்ஸ் வழங்கல்களைப் பயன்படுத்துமாறு நாங்கள் பரிந்துரை செய்கின்றோம்.
"குனு யுனிக்ஸல்ல " என்பதன் பெயர்ச் சுருக்கமே குனு ஆகும். கு-நூ என இது உச்சரிக்கப் படுகிறது. விளங்'கு' எனும் போது எழும் குற்றியலுகரத்தைப் போல் இதிலுள்ள 'கு' ஒலிக்கும்.
*குனு/ லினக்ஸ் இயங்கு தளங்களில் தமிழ் வசதிகள்*
குனு/ லினக்ஸ் இயங்கு தளங்கள் பயனர்கள் தங்கள் பணியினை செவ்வனே செய்ய உதவும் பொருட்டு இடைமுகப்புகளைத் தாங்கி வருகின்றன. அவற்றுள் குநோம் எனப்படும் இடைமுகப்பும் கேடியீ எனப்படும் இடைமுகப்பும் பிரபலமாகப் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றுள் குநோம் பணிச்சூழலின் இடைமுகப்பு தமிழில் கிடைக்கப் பெறுகின்றது. கேடியீக்கான தமிழாக்கப் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. தமிழ் மொழியினை அதிக சிரமங்கள் எதுவும் இன்றி இயல்பிருப்பாகவே உள்ளிடக் கூடிய வசதிகளை குனு/ லினக்ஸ் இயங்கு தளங்கள் நமக்குத் தருகின்றன.
*குனு/ வினக்ஸ் வழங்கல்கள்*
குனு மற்றும் லினக்ஸினைக் கொண்டு இன்று பல இயங்கு தளங்கள் கிடைக்கப் பெறுகின்றன. அவற்றுள் டெபியன், ரெட்ஹாட், சூசே, மான்ரிவா, உபுண்டு முதலியன குறிப்பிடத் தக்கவை. பாரத அரசின் சிடாக் நிறுவனமும் தற்சமயம் பாஸ் எனப் பெயரிட்டு தமது குனு/ லினக்ஸினை வெளியிட்டு வருகிறது.
*குனு/ லினக்ஸ் பயனர் குழுக்கள்*
குனு/ லினக்ஸ் இயங்கு தளங்களின் சிறப்பம்சமே அவற்றின் பயனர் குழுக்கள் தான். சமூகம் சார்ந்த கூட்டுருவாக்கம் மற்றும் ஆதரவு முறைகளை அடிப்படையாகக்கொண்டு இத்தகைய குனு/ லினக்ஸ் பயனர் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. பாரதத்தில் இத்தகைய பயனர் குழுக்களுக்கு முன்னோடியாக சென்னை குனு/ லினக்ஸ் பயனர் குழு ( http://chennailug.org) பல ஆண்டுகளாக செயற்பட்டு வருகின்றது.
*என் ஆர் சி பாஃஸ்*
பாரத அரசின் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் வரும் *என் ஆர் சி பாஃஸ் *என்றழைக்கப்படும்* கட்டற்ற மற்றும் திறந்த மூல மென் வளத்துக்கான தேசிய மையம்* (http://nrcfoss.org.in) சென்னையினை மையமாக வைத்து கடந்த மூன்று ஆண்டுகளாக செயற்பட்டு வருகின்றது. கட்டற்ற மென்பொருள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டி கல்லூரிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்துவது, தேசிய அளவில் கட்டற்ற மென்பொருள் மாநாடுகளுக்கு ஆதரவு நல்குவது முதலியவை இந்நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பணிகளுள் சிலவாகும்.
*கட்டற்ற மென்பொருள் மாநாடு*
தேசத்தின் குனு/ லினக்ஸ் பயனர் குழுக்களுக்கு முன்னோடியாகத் திகழும் சென்னை பயனர் குழுவும் என் ஆர் சி பாஃஸ் நிறுவனமும் இணைந்து வரும் *பிப்ரவரி மாதம் ஒன்று, இரண்டு மற்றும் மூன்று தேதிகளில்* *சென்னை குரோம்பேட்டையில் அமைந்துள்ள எம் ஐ டி வளாகத்தில் கட்டற்ற மென்பொருள் மாநாட்டிற்கு* ஏற்பாடு செய்துள்ளன. கணினியினைப் பயன்படுத்த விரும்பும் எவரும் பங்கு கொள்ளும் விதத்தில் இந்நிகழ்வு வடிவமைக்கப் பட்டுள்ளது. அடிப்படை விடயங்கள் துவங்கி ஆழமான விடயங்களையும் அலசும் பல சொற்பொழிவுகளை பயனர்கள் மற்றும் அனுபவசாலிகள் நிகழ்த்தவுள்ளனர். மக்கள் தங்கள் கருத்துக்ளை வெளிப்படுத்த மொழித் தடையாக இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து அவரவர் விரும்பும் மொழியில் உரை நிகழ்த்தும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளமை இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்வு குறித்த விவரங்களுக்கு http://fossconf.in .
பதிவு செய்யப்பட்டுள்ள சொற்பொழிவுகள் குறித்தறிய
http://registration.fossconf.in/web/talks/
கலந்து கொண்டு பயனடைய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net
Posted by நா. கணேசன் at 2 comments
மலையாள டாக்டர்
கேரளாவில் பிறந்து நியூ யார்க் வந்த டாக்டர் சினேகாவின் வாழ்க்கை செப்டம்பர் 11, 2001-ல் உலக வணிக மையம் (World Trade Center)தாக்குற்றபோது இறந்தார் என்ற செய்தி
வெளியாகியுள்ளது.
http://www.charleyproject.org/cases/p/philip_sneha.html
http://www.msnbc.msn.com/id/22960745?GT1=10856
Posted by நா. கணேசன் at 0 comments