P. Nachimuthu Gounder with his son, N. Mahalingam |
-------------
பிஸினஸ் சமூகம் - கவுண்டர்கள்!
கொங்கு மண்டலம் இன்றைக்கு தமிழகத்தில் தலைசிறந்த தொழிற் கூடாரமாக மாற ஒரு காரணம், கவுண்டர் சமூகத்து மக்கள். உழைப்புக்கு அஞ்சாத இந்த மக்கள் பல புதுமையான தொழில்களை தமிழகத்திற்குக் கொண்டு வந்ததன் மூலம் இந்த பகுதியில் இருந்த பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை கிடைத்ததோடு, பொருளாதாரத்தில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமும் கண்டனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
கொங்கு மண்டலத்தில் தொழிற் துறை வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள் பலராக இருந்தாலும், அவர்களுக் கெல்லாம் தலைமகனாக விளங்கியவர் நாச்சிமுத்து கவுண்டர். அன்றைக்கு அவர் ஆரம்பித்த ஏ.பி.டி. நிறுவனம் இன்று மூன்று தலைமுறைகளைக் கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது.
இன்றைக்கு இருப்பது மாதிரி இல்லாமல், நூறு ஆண்டுகளுக்கு முன்பு மிகச் சிறிய ஊராகவே இருந்தது பொள்ளாச்சி. இந்த ஊரில் பழனி கவுண்டருக்கும் செல்லம்மாளுக்கும் செல்லக் குழந்தையாக 1902-ல் பிறந்தார் நாச்சிமுத்து. பழனி கவுண்டர், சுந்தரராஜ அய்யங்காருடன் இணைந்து குதிரை வண்டிப் போக்குவரத்தை நடத்தி வந்தார். பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு, பொள்ளாச்சியிலிருந்து பழநிக்கு ஆட்களையும், பொருட்களையும் ஏற்றிச் செல்வது இந்த குதிரை வண்டிப் போக்குவரத்தின் முக்கிய வேலை. பஸ்களும், ரயில்களும் வராத அந்த காலத்தில் மக்கள் நம்பி இருந்தது இந்த குதிரை வண்டிப் போக்குவரத்தைதான். அரசாங்கம் நடத்திய தபால் துறையும் இந்த குதிரை வண்டிப் போக்குவரத்தையே நம்பி இருந்தது. இதனால் பழனி கவுண்டருக்கு ஓரளவுக்கு நல்ல வருமானம் கிடைத்தது.
பழனி கவுண்டரின் மகன் நாச்சிமுத்து பொள்ளாச்சியிலேயே பள்ளியில் படித்தார். படிப்பு அவருக்கு இயற்கையிலேயே நன்றாக வந்தது. ஆனாலும் பள்ளிப்படிப்பை அவரால் தொடர முடியவில்லை. காரணம், பழனி கவுண்டருக்கு சொந்தமாக இருந்த நிலத்தில் விவசாயம் செய்யும் வேலையை நாச்சிமுத்துவிடம் அவர் தந்தை பழனி கவுண்டர் ஒப்படைத்தார். பதினைந்து வயதுகூட நிரம்பாத நாச்சிமுத்துவை நம்பி, பத்து ஏக்கர் நிலத்தைத் தந்தார். தந்தையின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல், நல்லபடியாக விவசாயம் செய்து அள்ளித் தந்தார் நாச்சிமுத்து.
அப்போதுதான் வால்பாறை என்கிற மலைப் பிரதேசம் தேயிலை தோட்டங்களாக மாறி இருந்தது. வெள்ளைக்காரர்கள் நடத்திவந்த இந்த தேயிலைத் தோட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை பார்த்து வந்தனர். இந்த மக்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு முதல் அனைத்து உணவுப் பொருட்களும் பொள்ளாச்சியிலிருந்து சென்றாக வேண்டிய கட்டாயம்.
இப்போது இருக்கிற மாதிரி வால்பாறைக்கு அப்போது ஒழுங்காக சாலை வசதி இல்லை. கரடுமுரடான காட்டுப்பாதையில் மாட்டு வண்டிகள் மூலமாகத்தான் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்றார்கள். குதிரை வண்டிப் போக்குவரத்தை சிறு வயதிலிருந்து பார்த்துப் பழகிய நாச்சிமுத்துவுக்கு இந்த மாட்டு வண்டிப் போக்குவரத்தின் முக்கியத்துவம் புரியாமல் போகுமா என்ன?
தானும் மாட்டு வண்டிப் போக்குவரத்தை நடத்த முடிவு செய்தார் நாச்சிமுத்து. அவரிடம் ஏற்கெனவே பல மாடுகள் இருந்தன. விவசாயம் நடக்காத நேரத்தில் இந்த மாடுகளை பயன்படுத்திக்கொண்ட மாதிரியும் ஆச்சு. விவசாயத்தோடு இன்னொரு தொழிலும் செய்த மாதிரியும் ஆச்சு என்று வண்டிப் போக்குவரத்தை ஆரம்பித்தார். கடுமையான உழைப்பு, எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பதில் உறுதி, நேர்மையான அணுகுமுறை இந்த மூன்றும் நாச்சிமுத்துவுக்கு இருந்ததால் வண்டிப் போக்குவரத்தில் தனிப் பெயர் பெற்றார்.
1920-களின் ஆரம்பத்தில் கொங்கு மண்டலத்திற்கு அறிமுகமானது பஸ் போக்குவரத்து. வெள்ளைக்காரரான ஸ்டேன்ஸ் கொங்கு மண்டலத்திற்கு பஸ் போக்குவரத்தை அறிமுகம் செய்தார். அவரிடமிருந்து பஸ் வாங்கி, கோவையில் முதன் முதலில் பஸ் கம்பெனியைத் தொடங்கியவர் பிறவி விஞ்ஞானி என அழைக்கப்படும் ஜி.டி.நாயுடு. இவரைத் தொடர்ந்து எல்.ஆர்.கோவிந்தசாமி நாயுடு திருப்பூரிலும், கோவை - மேட்டுப்பாளையத்துக்கும் பஸ் போக்குவரத்தை நடத்திய காட்டேறிச் செட்டியாரின் கம்பெனியும், வீராசாமி செட்டியார் திருப்பூரில் தொடங்கிய கோபால்டு மோட்டார் சர்வீஸும் செயல்பட ஆரம்பித்தன.
குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டிப் போக்குவரத்தை வெற்றிகரமாக நடத்திய நாச்சிமுத்துவுக்கு இந்த பஸ் போக்குவரத்தின் முக்கியத்துவம் சட்டென புரிந்தது. இனி பஸ் போக்குவரத்துக்குத்தான் எதிர்காலம் என்பதை உணர்ந்தார். 1926-ல் லாரி வாங்கி, அதன் மூலம் பொருட்களை ஏற்றிச் செல்ல ஆரம்பித்தார். 1927-ல் நான்கு பஸ்களை வாங்கி, பஸ் கம்பெனி ஒன்றை ஆரம்பித்தார் நாச்சிமுத்து. இப்படி மெள்ள மெள்ள வளர்ந்த பஸ் கம்பெனி, 1932-ல் ஆனைமலை பஸ் டிரான்ஸ்போர்ட் (சுருக்கமாக, ஏ.பி.டி.) என்கிற பெயரில் தனி நிறுவனமாக உதயமானது. பத்தொன்பதாயிரம் ரூபாய் முதலீட்டில் உருவான ஏ.பி.டி. நிறுவனத்தின் மொத்த பங்குதாரர்கள் 25 பேர்.
ஆட்டோமொபைல் துறை பற்றி அவருக்கு இருக்கும் அறிவு அபாரமானது. அவர் அமெரிக்காவில் தயாரான ஃபோர்டு கார் ஒன்றை வைத்திருந்தார். இந்த காரை பயன்படுத்திய நாச்சிமுத்து, இதில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகிறது, இந்த பிரச்னைகளுக்கு எப்படி தீர்வு காணலாம் என ஃபோர்டு நிறுவனத்தினருக்கு ஒரு கடிதம் எழுதினார். இந்த கடிதத்தைப் படித்துப் பார்த்த ஃபோர்டு நிறுவனத்தினர், நாச்சிமுத்துவின் தொழில்நுட்ப அறிவைப் பாராட்டி கடிதம் எழுதினார்கள்.
இப்படி வளர்ந்த ஏ.பி.டி. நிறுவனம் 1937-ல் உடுமலைப்பேட்டையில் நடந்துவந்த யு.பி.எஸ். பஸ் கம்பெனியை வாங்கி தன்னோடு இணைத்துக் கொண்டது. பஸ் பாடி பில்டிங், பெட்ரோல் பங்க், டயர்களை புதுப்பிப்பது என பஸ் போக்குவரத்துக்கு துணைபுரியும் தொழில்களிலும் கவனம் செலுத்தினார் நாச்சிமுத்து. கார் பேட்டரிகளுக்குத் தேவையான டிஸ்டில்டு வாட்டரையும் ஏ.பி.டி. நிறுவனத்திலேயே தயாரித்தார். 1927-ல் வெறும் நான்கு பஸ்களுடன் கம்பெனியை ஆரம்பித்த நாச்சிமுத்து கவுண்டரிடம் அடுத்த பதிமூன்று ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் இருந்தன.
தொழிற் துறையில் சாதனை படைத்ததோடு, அரசியலிலும் ஆர்வதோடு செயல்பட்டார் நாச்சிமுத்து கவுண்டர். சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாக கலந்துகொண்டு போராடினார். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான போராட்ட அறிக்கைகளை ஏ.பி.டி. பஸ்களில் ரகசியமாக கொண்டு சென்றார் நாச்சிமுத்து கவுண்டர். 1932- ஒத்துழையாமை இயக்கத்திலும் 1941, 42 ஆண்டுகளில் அரசுக்கு எதிரான பிரசுரங்களை வைத்திருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டார்.
அரசியலோடு மக்கள் நலன் காக்க அரசியலிலும் ஈடுபட்டார் நாச்சிமுத்து கவுண்டர். 1932-35 வரை பொள்ளாச்சி நகரசபைத் தலைவராக பதவி வகித்தார். பைகாரா மின் திட்டம் செயல்படத் தொடங்கியவுடன் பொள்ளாச்சி மக்களுக்கும் மின்சாரம் வேண்டும் என போராடி பெற்றுக் கொடுத்தார் அவர்.
நாச்சிமுத்துவின் ஒரே மகன், மகாலிங்கம். பொள்ளாச்சி மகாலிங்கம் என எல்லோராலும் அழைக்கப்படும் மகாலிங்கம், 1923-ல் பிறந்தார். சென்னையில் இன்ஜினீயரிங் படித்த இவர், 1946-ல் ஏ.பி.டி. நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அப்பாவின் கம்பெனி என்றாலும் எல்லா பணியாளர்களையும் போல அவரும் ஒரு சாதாரண ஊழியராக எல்லா வேலைகளையும் கற்றுக்கொண்டார். நாச்சிமுத்து கவுண்டரின் மறைவுக்குப் பிறகு ஏ.பி.டி. நிறுவனத்தைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தினார். 1961-ல் சக்தி சுகர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி, சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டார். இந்நிறுவனத்திற்கு தமிழகத்தில் மூன்று சர்க்கரை ஆலைகளும், ஒடிஷாவில் ஒரு சர்க்கரை ஆலையும் உள்ளது. சக்தி சுகர்ஸ் நிறுவனத்திலிருந்து சக்தி சோயா என்கிற நிறுவனமும் பிறந்தது.
இன்றைக்கு, பொள்ளாச்சி மகாலிங்கத்தின் மகன்களான மாணிக்கம், பாலசுப்பிரமணியம், சீனிவாசன் ஆகியோர் நாச்சிமுத்து கவுண்டர் உருவாக்கிய பிஸினஸ் சாம்ராஜ்ஜியத்தை மேன்மேலும் விரிவுபடுத்தி, வெற்றிநடை போட்டு வருகின்றனர். பொள்ளாச்சி மகாலிங்கத்தின் ஒரே மகள் கருணாம்பாள். இவரது கணவர் வானவராயர் டெக்ஸ்டைல் தொழிலில் சிறந்து விளங்குகிறார். இரண்டு பொறியியல் கல்லூரிகள், இரண்டு பாலிடெக்னிக்குகள், ஒரு கலைக் கல்லூரி என கல்விச் சேவையிலும் பெருஞ்சேவை புரிந்து வருகின்றனர் நாச்சிமுத்து - மகாலிங்கத்தின் வாரிசுகள். (நன்றி, குமுதம், 2012)
-கவியன்பன் கே.ஆர்.பாபு
இன்று அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் என்று அழைக்கப்படும் தொழிலதிபர், 50 ஆண்டுகளுக்கு முன் ஏபிடி மகாலிங்கம் என்றுதான் அறியப்பட்டார். ஏபிடி என்பது ஆனைமலை பஸ் ட்ரான்ஸ்போர்ட்.
அந்த பார்ஸல் சர்வீஸ் கம்பனி இந்த அளவு பல கிளைகள் விரித்து வளர்ந்துள்ளது என்றால் அதை விதைபோட்டு வளர்த்தவர், அவரது தந்தையார் நாச்சிமுத்துக் கவுண்டர்தான்.சிறுவயது முதலே தம் சிந்தையெல்லாம் நிறைந்திருக்கும் தொழில் எதுவோ அதிலேயே வெற்றி பெறவேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்ததுதான் பார்ஸல் சர்வீஸில் அவர் மகத்தான வெற்றிபெறக் காரணமாயிற்று.
9. 11. 1902 ஆம் ஆண்டு பழனிக்கவுண்டர் செல்லம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். வாரந்தோறும் வியாழனன்று பொள்ளாச்சி சந்தைக்கு வரும் பொதிசுமந்த மாட்டு வண்டிகளையும் குதிரை வண்டிகளையும் பார்த்துக் கொண்டிருப்பார். தாமும் இது போல் சரக்குகளை ஏற்றி நீண்ட தூரம் கொண்டுபோய் சந்தைகளுக்குப் போட்டு வரவேண்டும் என்று தான் நினைப்பார்.
1920க்கு முன் பஸ்கள், லாரிகள் கிடையாது. அரசாங்கத்தின் தபால் போக்குவரத்தே குதிரை வண்டி மூலம்தான் நடக்கும். அந்த வண்டிக்குக் ‘கெடிவண்டி’ என்று பெயர். அவரது தந்தையார் பழனிக்கவுண்டர் கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு, பொள்ளாச்சியிலிருந்து பழனிக்கு என குதிரைவண்டிப் போக்குவரத்தில் சம்பாதித்துத் தான் பாப்பங்காடு என்னும் இடத்தை வாங்கினார். அந்தக் காடுதான் இன்றைய மகாலிங்கபுரம்.
அதுபோலவே போக்குவரத்தில் சாதனை புரிய வேண்டும் என்று நினைப்பார் நாச்சிமுத்து.மாட்டு வண்டிகளில் பொதிகளை ஏற்றி வால்பாறைக்கு போக்குவரத்தை நடத்தினார் அவர். இவரைப்போல் கையில் ஓரளவு காசுள்ள குடும்பத்தினர் எல்லாம் அன்றைக்கு நெசவாலை தொடங்கினார்கள். இவரையும் தொடங்கச் சொன்னார்கள். இன்னும் சிலரோ பூமி வாங்கிப் போடலாம் என்றார்கள்.பஸ்களும் லாரிகளும் அப்போதுதான் வரத் தொடங்கியிருந்தன. எனவே மற்ற யோசனைகளை மறுத்துவிட்டு அந்த சமயத்தில் அவர் அஆப பார்ஸல் சர்வீஸ் தொடங்கினார்.
1931 ஆகஸ்டு 28ஆம் தேதி, 25 பங்குதாரர்களோடு 19 ஆயிரம் ரூபாயைக் கொண்டு தொடங்கிய அஆப பஸ் போக்குவரத்துக் கம்பனிக்கு 1940 ஆம் ஆண்டுக்குள் 100 பஸ்களும் லாரிகளும் சொந்தமாகின.பஸ் கட்டுமானப்பணி, பெட்ரோல் சப்ளை, பயிர்களைப் புதுப்பித்தல், கார் பாட்டரிகளுக்கு டிஸ்டில் வாட்டர் தயாரித்தல் எனப் பல்வேறு தொழில்களாகப் பெருகி அவரது நிறுவனங்கள் இன்றும் விரிவடைந்து கொண்டே வருகின்றன.
கடுமையான உழைப்பாளியான அந்த முதலாளி, மிகுந்த பொறுமைசாலியும் கூட. ஒரு முறை தமது நெருங்கிய நண்பர் ஒருவரின் வீட்டுக்கு ஒரு முக்கியமான விஷயமாகக் காரில் போனார். அவர் போன நேரம் நள்ளிரவு. நண்பர் தூங்கிக் கொண்டிருப்பதாகவும் இப்போது எழுப்ப முடியாது எனவும் கூறி வாட்ச்மேன் அவரை உள்ளே விட மறுத்துவிட்டார். ’நான் யார் தெரியுமா?’ என்று ஆவேசப்படாமல், காரை கேட் ஒரமாக நிறுத்தி விட்டு அதில் படுத்துக் கொண்டார், நாச்சிமுத்து.
பனி பெய்யும் இரவில் சினிமா முடிந்து வந்த நண்பரின் தம்பி, இவர் காரில் தூங்கும் காட்சியைப் பார்த்து பதைபதைத்துப் போனார். நடந்ததைச் சொன்ன நாச்சிமுத்துக் கவுண்டர் வாட்ச்மேன் மீது தவறில்லை, அவரை தண்டிக்க வேண்டாம் எனக் கூறிவிட்டார். வெள்ளையர் காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரரும் பின்னாளில் கம்யூனிஸ்ட் தலைவருமான ஜீவானந்தத்தை கையில் விலங்குமாட்டி போலீஸார் அழைத்துப் போனதைக் கண்ட அவர், போலீஸைத் தடுத்து தமது வீட்டுக்குள் அழைத்துப் போனார்.
ஜீவானந்தத்துக்குக் கைவிலங்கு போடுவது சரியல்ல. விலங்கைக் கழற்றி அழைத்துப் போங்கள் என்று நிதானமாகப் பேசி விலங்கைக் கழற்றச் செய்தார்.
1950 ஆம் ஆண்டில் ஒருநாள் அவரது மைத்துனர் அழகப்பன் மரணமடைந்தார். அந்தத் துயரம் மறையும் முன்பு அந்த நாளிலேயே அவரது தாயார் செல்லம்மாளும் காலமானார். அதிர்ச்சி தாளாமல் ஒரே நாளில் இரண்டாவது முறையாக சுடுகாட்டுக்கு நடந்தார் நாச்சிமுத்து. அதன் விளைவாக ரத்தக் கொதிப்புக்கு ஆளானார்.
சிறுவயதில் தாம் வால்பாறைக்கு ஓட்டிப் போன மாட்டுவண்டியிலிருந்து சரிந்த கனமான மூட்டை ஒன்றுக்கு முதுகைக் கொடுத்து பாரம் வாங்கிக் கொண்டபோது முதுகுவலி ஏற்பட்டது. அது தொடர்ந்து அவரை இம்சித்துக் கொண்டே தான் இருந்தது.
விஞ்ஞானி ஆர்க்கிமிடீஸ் முகம்பார்க்கும் கண்ணாடியைக் கண்டு பிடித்தது 75 ஆவது வயதில். தத்துவஞானி பிளாட்டோ கிரேக்க மொழி கற்றுக் கொண்ட போது அவருக்கு வயது 80. எந்த வயதிலும் எதையும் சாதிக்கலாம் என்பவர் நாச்சிமுத்துக் கவுண்டர்.
புதியதைக் கற்றுக் கொள்வதில் தீராத ஆர்வமுடைய அவர் காலமானபோது வயது 52. ரத்தக் கொதிப்பும் முதுகுவலியுமே அவரை மரணத்தின் அருகே இழுத்துச் சென்றது.எத்தகைய பாதிப்பு வந்தபோதும் நாம் தேர்வு செய்த லட்சியப்பாதையிலிருந்து விலகாமல் நடந்தால் வெற்றிமேல் வெற்றி வரும் என்பதில் உறுதியாய் இருந்த நாச்சிமுத்துக்கவுண்டர் வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
-----------
கேசிஎஸ் அருணாசலம் கவிஞர், கம்யூனிஸ்ட் கட்சிக்காரர். பல புகழ்பெற்ற சினிமாப் பாடல்கள் இயற்றியவர்.
https://groups.google.com/forum/#!msg/santhavasantham/ppCyjZVwsCM/doJyUhd3FAAJஅவர் தன்கடைசிக் காலத்தில் ப. நாச்சிமுத்து சரித்திரத்தை எழுதிக்கொண்டிருந்தபோது சந்தித்தேன். ஆனால் அந்த முயற்சி பூர்த்தியாவதன் முன்னமே காலமானார்.
கீழ்வரும் வாழ்த்துப்பா கேசிஎஸ் அருணாசலம் இயற்றியது (1993). மாரியம்மா என்பது இருபொருள் தொனிக்க எழுதியுள்ளார். ஓட்டுவில்லைக் குடிசை ஆக இருந்த பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலை கற்றளி ஆகக் கட்டியவர் ப. நாச்சிமுத்துக் கவுண்டர். அவர் தன் தங்கை மகளை அருட்செல்வர் நா. ம. அவர்களுக்குக் கட்டிவைத்தார். மருமகள் பெயரும் மாரியம்மா தான்!
0 comments:
Post a Comment