தொல்லியல் பேரா. கா. ராஜன் பேட்டி, புதிய தலைமுறை இதழ்

2500 ஆண்டுகளுக்கு முன்பே நெல் பயிரிட்டவன் தமிழன் அந்த நெல்மணிகள் இப்போதும் இருக்கின்றன

நீங்கள் தினமும் உண்ணும் அரிசி எத்தனை ஆண்டுகளாக தமிழர்களின் உணவாக இருந்திருக்கும் என்று எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? அண்மையில் நான் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய நெல் மணிகளைப் பார்த்தேன். தொல்லியல் அறிஞரான பேராசிரியர் ராஜன் அவர்களிடம் அந்த நெல்மணிகள் உள்ளன
பேராசிரியர் ராஜன் உலக அளவில் மதிக்கப்படும் தொல்லியல் அறிஞர்களில் ஒருவர்.ஆழ்கடலுக்குக் கீழ் சென்று ஆய்வுகள் நடத்திய முதல் இந்தியத் தொல்லியல் வல்லுநர். கொடுமணல், பொருந்தல் போன்ற இடங்களில் அவர் மேற்கொண்ட ஆய்வுகள் தமிழர்களின் தொன்மை, சங்க காலம் இவற்றைப் பற்றிய புதிய செய்திகளையும் வெளிச்சங்களையும் அளித்துள்ளன.

தற்போது புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை தலைவராகப் பணியாற்றிவரும் பேராசிரியர் ராஜனுடன் புதிய தலைமுறை ஆசிரியர் மாலன் நிகழ்த்திய உரையாடலில் இருந்து…..


மாலன் (தலைமுறை): சங்க காலம் சங்க காலம் என்கிறார்களே சங்ககாலம் என்பது எந்தக் கால கட்டத்தைக் குறிக்கிறது?

பேராசிரியர் ராஜன்: மார்ட்டீமர் வீலர் (Mortimer Wheeler) என்ற தொல்லியலாளர் புதுச்சேரி அருகில் உள்ள அரிக்கமேடு என்ற இடத்தில் மிகப் பெரிய அகழ்வாராய்வு ஒன்றினை 1940களில் நடத்தினார்..தமிழர்களுக்கும் ரோமானியர்களுக்குமிடையே வர்த்தகம் நடைபெற்று வந்தது என்ற கருத்ததாக்கத்தை முதன்முதலில் அவர்தான் வெளியிட்டார்.முசிறி, தொண்டி, காவேரி பூம்பட்டினம், கொற்கை, அரிக்கமேடு இவையெல்லாம் சங்க காலத் துறைமுகங்கள் என்ற அடிப்படையில் அவர் அரிக்கமேடு ஆய்வை மேற்கொண்டார். அரிக்கமேட்டில் ரோமன் நாட்டிற்கு தொடர்பான பொருட்கள் கிடைத்ததனால், அந்தப் பொருட்கள் கி.மு.மு தலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும் இருப்பதால், சங்க காலம் என்பது கி.மு.முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று அவர் கருதினார். அதையொட்டி ரோமுடைய எழுச்சிக்குப் பிறகுதான் தமிழகம் எழுச்சி பெற்றது எனற் கருத்தாக்கம் உருவாகிவிட்டது.

இந்தியர்கள் ரோமானியர்களுக்கிடையேயான கடல் வழி வாணிபம் (Maritime Trade) தான்  தமிழகத்தில் அரசு என்ற உருவாக்கத்திற்கு பெரும் காரணமாக இருந்தது என்ற ஒரு கருத்து வேறு உள்ளது. கிளாரன்ஸ் மலோனி, செண்பகலட்சுமி, போன்றவர்கள் அந்தக் கருத்தாக்கத்தை உருவாக்கினார்கள்

இடையில அரிக்கமேட்டில் 3 மட்பாண்டங்கள கிடைத்தன. ரௌலட்டேட் வேர், (Rouletted Ware) என்ற பாண்டங்கள்,  அரிக்டேன் வேர், மது ஜாடி (amphora jar) ) என்பவை அவை. இந்த மூன்றுமே ரோமன் மட்பாண்டங்கள் என்று வீலர் சொல்கிறார். ஆனால் ரௌலட்டேட் வேர் ரோமன் மட்பாண்டம் கிடையாது. இந்த ரௌலட்டேட் வேர் இந்தியாவின் கீழக் கடற்கரை, தென்கிழக்கு ஆசியாவில் கிடைக்கிறது. ஆனால் ரோமன் பொருட்களோடு ரௌலட் வேரையும் ஒப்பிட்டு அதுவும் கி.மு.முதலாம் நுற்றாண்டு என்று உறுதி செய்துவிட்டார்கள்.

ராபர்ட் சுவெல் (Robert Sewell)  மதுரைக்கருகில் மாங்குளத்தில் சில கல்வெட்டுக்களைக் கண்டறிந்தார். அவற்றில் காணப்பட்டது அசோகர் காலத்து பிராமி எழுத்துக்கள் (கிமு மூன்றாம் நூற்றாண்டு) . என்று கருதினார்கள்.

ஜேம்ஸ் பிரின்ஸப் (James Prinsep) அசோகரது பிராமி கல்வெட்டுக்களை படித்தபோது இதனையும் படிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டார்கள். ஆனால் படிக்க முடியவில்லை. அதற்கு காரணம், அதிலிருந்த சில எழுத்துக்கள் அசோகர் கால எழுத்துக்கள போல இல்லை. அது பிராகிரதம் மொழி. இது பிராமி வரி வடிவம். அதே வரிவடிவமாக இருப்பதால் இதன் மொழியும் பிராகிரதமாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணினார்கள் அப்போது கே.சுப்ரமணிய ஐயர் மட்டும்தான் இது பிராகிரதம் இல்லை, தமிழ் என்று சொன்னார்.

தமிழ் வடிவங்களைப் பார்க்கிறபோது இதனுடைய காலம் முன்னோக்கி செல்லக் கூடும் என்று ஐராவதம் மகாதேவன் முடிவு செய்து கி.மு. 3ம் நூற்றாண்டு என்றார். அசோகரது பிராமி கிமு 3ம் நூற்றாண்டு. தமிழ் பிராமி அதற்கு 100 ஆண்டுகள் முந்தியதாக இருக்க வேண்டும் என்று கிமு 3லிருந்து 2ம் நூற்றாண்டு வைத்துக் கொள்கிறார். கிமு முதலாம் நூற்றாண்டு, என்று கருதிய மார்ட்டின் வீலரின் கருத்தாக்கம் 1980 வாக்கில் 200 ஆண்டுகள் மேலும் பழமையாகி கிமு 3ம் நூற்றாண்டு என்றானது  தமிழகத்தின் அனைத்து வரலாற்று நூல்களிலும் சங்க காலம் என்பது கிமு 3ம் நூற்றாண்டு முதல் கிபி 3ம் நூற்றாண்டு வரை என்று பதிவு செய்து விட்டார்கள்.

மாலன்: நீங்கள் ஈரோட்டிற்கு அருகில் உள்ள கொடுமணல் என்ற இடத்தில் நடத்திய ஆய்வுகள் சங்ககாலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கும் முன்னதாக இருந்திருக்கக் கூடும் எனக் காட்டுகின்றனவா? கொடுமணல் ஆய்வுகளின் முக்கியத்துவம் என்ன ?  

பேரா.ராஜன்: பொதுவாக தொல்லியல் அகழாய்வுகள் பெருங்கற்படைச் சின்னங்கள் எனக் கருதப்படும் ஈமக்காடுகளில் நடக்கும். பழங்காலங்களில்  மிகப் பெரிய கற்பலகைகளைக் கொண்டும், பெரிய கற்களைக் கொண்டும் அமைக்கப்பட்ட  ஈமக் குழிகளில் உடல்கள் புதைக்கப்பட்டன. ( Megalithic Culture) ஆதிச்சநல்லூர், குன்னத்தூர், கொடுமணல் என்று எல்லா அகழ்வாய்வுகளிலும் இந்த ஈமக்காடுகள் பற்றிய பதிவுகள் நிறைய இருக்கிறது. 1960களில் நடந்த தொல்லியல் ஆய்வு என்பது ஈமக்க்காடுகளை பதிவு செய்வது, ஆவணப்படுத்துவது என்பதாக மட்டுமே இருந்தது. ஈமக்காடுகளை ஆவணப்படுத்தியவர்கள் அதை சங்க காலத்தோடு தொடர்பு படுத்தியும் இருக்கிறார்கள். ஈமக் காடுகள் என்பது நீத்தார் நினைவாக உருவாக்கப்பட்டது என்பது சரி, ஆனால் அவர்களுக்கென்று ஒரு வாழ்விடம் இருந்திருக்குமல்லவா? அதை யாருமே ஆவணப்படுத்தவில்லை. இதனால் அந்த காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு (அல்லது அந்த காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு) வாழ்விடங்களே இல்லை என்ற நிலைப்பாடு உருவாகிவிட்டது. பதிவுகளில் ஏற்பட்ட இந்த பிரச்னைகளால் அந்த மக்கள் நாடோடிகளாக வாழ்ந்தார்கள் என்று சொல்கிறாரகள். லட்சுமி கிங்கல் என்பவர் [SOUTH INDIAN LEGACY A PANDUKKAL COMPLEX Lawrence S. Leshik, South Indian Megalithic Burials: ThePandukal Complex (Weisbaden: Franz Steiner Verlag GMBH, 1974)] என்ற புத்தகத்தில் அவர்கள் அந்த காலத்தில் நாடோடிகளாக இருந்தார்கள் என்பதை பதிவு செய்திருக்கிறார் (பெருங்கற்படைச் சின்னங்களைச் சங்க இலக்கியங்கள் 'பதுக்கை' எனக் குறிப்பிடுகின்றன).

நம்முடைய நொய்யல் ஆற்றங்கரை நாகரீகம் பற்றிய ஆய்வை புலவர் செ.ராசு ஈரோட்டில் உள்ள கலைமகள் பள்ளியோடு சேர்ந்து நடத்தினார். அவர், அந்தப் பகுதியில் உள்ள  கொடுமணல் முக்கியமான ஊராக இருக்க வேண்டும் என்றும், பதிற்றுப் பத்தில் வருகிற ‘கொடுமணம் பட்ட வினைமான் அருங்கலம்’ என்ற வரியில் உள்ள கொடுமணம்தான் இந்த கொடுமணலாக இருக்க வேண்டும் என்று ஒரு கருத்தை சிறிய அளவில் வெளியிட்டுக் கொண்டிருந்தார். அவர் தமிழ் பல்கலைகழகத்திற்கு இணைப் பேராசிரியராக அதன்பின் வந்து சேர்ந்தார். பேராசிரியர் சுப்புராயலு மதுரை பல்கலைகழகத்தில் இருந்து தமிழ் பல்கலைகழகத்தில் சேர்ந்தார்.

நான் கோவாவில் துவாரகை பற்றி கடல் அகழாய்வு செய்து கொண்டிருந்தேன். நீங்களும் நம்ம ஊருக்கு வந்து இந்த ஆய்வில் சேர்ந்து கொள்ளுங்கள் என்று என்னையும் அழைத்தார்கள். எனவே நானும் தமிழ் பல்கலைகழகத்தில் வந்து சேர்ந்தேன். நாங்கள மூவரும் முக்கியமான ஆய்வுக் குழுவாக மாறிவிட்டோம். புலவர் இலக்கிய அறிஞர். பேராசிரியர் சுப்பராயலு கல்வெட்டியலில் மிகவும் புலமை வாய்ந்தவர். நாங்கள் ஒரு குழுவாக கொடுமணல் அகழாய்வை எடுத்துக் கொண்டோம்.
நாங்கள் கொடுமணல் ஆய்வை எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஏழு முறை ஆய்வுசெய்தோம். (எங்களுக்கு கல்விப் பணி இருந்ததால் ஏழு ஆண்டுகள் என்று சொல்வதில்லை. ஏழு சீசன் என்று சொல்லுவோம், மே, ஜுன் என்று 2 விடுமுறை மாதங்களில் மட்டும்தான் போக முடியும். மற்ற மாதங்களில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டிய பணி இருக்கும்)
1980, 90களில் கொடுமணல் அகழாய்வை நாங்கள செய்தபோது மண் அடுக்கு அடிப்படையில் செய்தோம். அப்போது மத்தியில் ரௌலட்டேட் வேர் என்ற மட்பாண்டம் கிடைத்தது. அதேநேரம் வட இந்திய வெள்ளி முத்திரை நாணயங்களும் கிடைத்தன. ஆனால் இந்த நாணயங்கள ஆறாம் நூற்றாண்டில் இருந்து தொடர்ந்து நமக்குக் கிடைக்கிறது. அது கிமு முதலாம் நூற்றாண்டு வரை வருகிறது. இதை வைத்து ஆறாம் நூற்றாண்டு என்று முடிவு செய்வதா 2ம் நூற்றாண்டு என முடிவு செய்வதா என்ற கேள்வி எழுந்தது ,, ஏற்கனவே ரௌலட்டேட் வேர் ரோமன் மட்பாண்டத்தின் காலம் கிமு முதலாம் நூற்றாண்டு வரை என்று உலகம் முழுவதும் இருந்த கருத்து  அந்த நாணயம், மண் அடுக்கு இவற்றை வைத்து சங்க காலம் என்பது கிமு 3ம் நூற்றாண்டில் இருந்து கிபி 3ம் நூற்றாண்டு வரை இருக்கும் என்று நாஙகளும் முடிவு செய்தோம்.

ஆனால் நாங்கள் செய்த ஆய்வைத் தாண்டி வர முடியாத அளவிற்கு கருதுகோள்கள் இருந்ததால் அதைத் தாண்டி வர முடியவில்லை. ஆனாலும் அந்த நேரத்தில் அதை நாங்கள ஏற்றுக் கொள்ளவில்லை. சங்க காலத்தை இலக்கியவாதிகள், கல்வெட்டு ஆய்வாளர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் என்று மூன்று தரப்பினரும் 3 விதமாக காலக்கணிப்புச் செய்துள்ளோம். ஆனால் மூன்றுமே அறிவியல் ரீதியாக காலம் கணிக்கப்படவில்லை. எனவே ஏற்றுக் கொள்ளக் கூடிய காலக் கணிப்பு இல்லை.

இந்நிலையில் அனுராதபுரத்தில் ராபின் கன்னிங்ஹாம் என்ற பேராசிரியர்  அகழாய்வு செய்தபோது அங்கே கிடைத்த பிராமி வரி வடிவங்கள் கிமு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று காலக் கணிப்பு செய்திருந்தார். இது மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

மாலன்: கிறிஸ்துவிற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னரே அதாவது 2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் இந்தப் பகுதியில் வாழ்ந்திருந்தார்கள் என்பது பெருமைக்குரிய செய்திதான். ஆனால் அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டுமல்லவா?

பேரா.ராஜன்: அறிவியல்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும் என்றுதான் நானும் விரும்பினேன். அதற்கான வாய்ப்பு பழனிக்குப் பக்கத்தில் உள்ள பொருந்தலில் அகழாய்வு செய்தபோது கிடைத்தது. பொருந்தல் அகழ்வாய்வை 2010ல் செய்தோம். ஒரு கல்லறையை தோண்டும்போது வட்டமாக ஒரு தாங்கி (மட்பாண்டங்களை வைக்க ஸ்டாண்ட் போல் பயன்படும் மண் வளையம்) அந்த கல்லறையில் இருந்தது. அதற்கு வைரா என்று பெயர். அதில் பெரிய ஜாடியில் 2 கிலோ நெல் வைத்திருந்தார்கள். முதல் தடவையாக தமிழகத்தில் நெல் கிடைக்கிறது.

அறிவியல்பூர்வமாக கால கணிப்பு செய்தால் நன்றாக இருக்கும் என்று செய்தோம். தானியங்களை காலக் கணிப்பு செய்ய கார்பன் டேட்டிங்கை விட நவின முறையான ஆக்ஸ்சிலேட்டர் மாஸ் ஸ்பெக்ட்டேராமெட்ரி முறையில் செய்தபோது காலக் கணிப்பு கிமு 490 என்று வந்தது. உலகத்திலேயே பீட்டா அனலிட்டிக்கல் லேபாரட்டரி அமெரிக்காவில்தான் உள்ளது. அங்க அனுப்பியபோது இந்த காலக் கணிப்பு வந்தது..அதாவது இந்த நெல் கிறிஸ்து பிறப்பதற்கு 490 ஆண்டுகளுக்கு முன், இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முந்தையது.

மாலன்: இது வேளாண்மை செய்து பெறப்பட்ட நெல்லா? அப்படி இருந்தால் அந்தக் காலத்திலேயே தமிழர்கள் வேளாண்முறைகளை அறிந்திருந்தார்கள் என்பது உறுதியாகுமல்லவா, அதனால் கேட்கிறேன். அப்படி இருந்தால் தமிழர்களின் காலம் இன்னும் பழமையானதாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் வேட்டைச் சமூகம் வேளாண் சமூகமாக மாற சில நூறாண்டுகள் ஆகியிருக்குமல்லவா?

பேரா.ராஜன்: உண்மைதான் மூன்று வகையான நெல் இருக்கின்றன வேளாண்மை செய்து வளர்க்காமல் தானே விளையக்கூடிய காட்டு நெல் இதற்கு புழுதி நெல் என்ற பெயர்.இரண்டாவது விதைத்து வளர்க்கிற விளைச்சல் நெல் மற்றொன்று நாற்று விட்டுப் பறித்துநடுகின்ற ரீபிளான்டேஷன் நெல்.

காட்டு நெல்லாக இருந்தால் என்ன செய்வீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்கள். தவிர ஒரு ஆய்வுக் கூடத்தில் மட்டும் செய்யும்போது இந்தக் காலக் கணிப்பு அங்கு நடந்த சிறு தவறாக கூட இருக்கலாம். அப்படி என்றால் காட்டு நெல்லா, பயிர் செய்த நெல்லா என்று தெரிவதற்கு இதை உறுதி செய்ய இன்னொரு சோதனை வேண்டும். நம்முடைய அரசு சட்டப்படி  நெல்லை வெளியில் அனுப்பக் கூடாது என்பதால், Indian institute of advance archeological study  என்று இலங்கையில் உள்ள மையத்தில் இருந்து டாக்டர் பிரேம திலகர் என்பவரை இங்க வரச் சொன்னோம். அவரோடு பாண்டிச் சேரியில் உள்ள பிரஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆப் பாண்டிச்சேரி ஆய்வாளர்களும் சேர்ந்து இது விளைச்சல் நெல்தான். இதன் தாவரவியல் பெயர் ஒரைசா சட்டைவா இண்டிகா என்று உறுதி செய்தார்கள். இதேபோல 4 பெருங்கற்படை சின்னங்களை ஆய்வு செய்தோம். நான்கிலும் நெல் கிடைத்தது.

மாலன்: நான்கையும் ஆய்வு செய்தீர்களா?

ஒரு நெல்லை ஆய்வுக்கு அனுப்பியபோது அதன் காலம் கிமு 450 என்று வந்தது. நான்கையும் ஆய்வுக்கு யிருக்கலாம். ஒன்றை ஆய்வு செய்யவே 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவாகும் என்பதால் முடியவில்லை.

பொருந்தல் அகழாய்வில் நெல் மட்டுமல்ல, கார்னேலியன் மணிகள், தங்கப் பொருட்கள்,இவையும் கிடைத்தன. இவற்றை வைத்து அந்தக் கல்லறைகள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் மனிதர்களுக்காக எழுப்ப்ப்பட்டவை என்று நாங்கள நினைத்தோம். ‘பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி’ என்று புறநானுற்றில் வருகிறது அவர்கள் விவசாயத்தில் சிறந்த நிலையை அடைந்து அதன் மூலம் நிறையப் பொருட்களை வெளிநாட்டில், வெளி மாநிலத்தில் இருந்த வாங்கி இருக்கிறார்கள. விலை உயர்ந்த கல், மணிகள் எல்லாம் அவர்களிடம் இருந்தது.

இன்னொரு கேள்வியும் கேட்கப்பட்டது . நீங்கள செய்திருக்கும் ஆய்வுகள் எல்லாம் ஈமக்காட்டில் செய்யப்பட்டவை  வாழ்விடத்திலிருந்து செய்தால்தான் இன்னும் உறுதிதயாக ஏற்றுக் கொள்ள முடியும் என்றார்கள்.

இதையும் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டுதான் கொடுமணல் ஆய்விற்கு மிண்டும் இறங்கினோம் ஆய்வை தொடங்கும் முன்பே  மாதிரி எடுக்கும்போதே மண் அடுக்கின் ஒவ்வொரு ஆழத்திலும் 10 செ.மீ, 20 செ.மீ. 50 செ,மீ., என்று தனித்தனியாக எடுக்க வேண்டும் என்ற முடிவு செய்து விட்டோம். அப்படி நாங்கள் எடுத்த மாதிரியின் காலத்தைஅறிவியல் பூர்வமாக ஆராய்ந்தோம். அவை கிமு 2ம் நூற்றாண்டு முதல் கிமு ஆறாம்  நூற்றாண்டு வரை .சேர்ந்தவை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு ஆய்வுக் கூடமும் ஒவ்வொரு வழிமுறையை பின்பற்றுமே அதனால் இந்த கால கணிப்பு சரியாக இருக்குமா என்று. இன்னொரு கேள்வியும் எழுந்தது.

அதற்காக நாங்கள 10 செ.மீ., ஆழத்தில் எடுத்ததை பீட் அனலிட்டிகல் சோதனைக் கூடத்திற்கும் 20 செ., ஆழத்தில் எடுத்த்தை அரிசோனா பல்கலை கழகத்திற்கும் அனுப்பினோம். இரண்டு ஆய்வுகளும் முரண்படுகிறதா என்ற பார்த்தபோது கச்சிதமாக இரண்டும் ஒரே மாதிரி இருந்த்தது. அதனால் இதன் காலம் என்பது கி.மு 2 முதல் 6 வரை இருக்கும் என முடிவு செய்தோம்.

மாலன்: 2500 ஆண்டுகளுக்கு முன்னரே, அதாவது கிறிஸ்துவிற்கு 500 ஆண்டுகள் முன்னரே, தமிழர்கள் சிறப்போடு வாழ்ந்தார்கள், கொடுமணல் பகுதியில் கிடைத்த சான்றுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கும் முந்தியவையாக இருக்கலாம் என்று சொன்னீர்கள். பதிற்றுப் பத்தில் ‘கொடுமணம் பட்ட வினைமான் அருங்கலம்’  என்று கொடுமணல் பற்றிய குறிப்பு இருக்கிறது, ஆனால் பதிற்றுப் பத்து கடைச்சங்ககால நூல் என்று இலக்கிய ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் அதாவது கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. இந்த முரண்பாட்டை எப்படி விளக்குவீர்கள்?

பேரா. ராஜன்: இலக்கியம் என்பது சமகாலத்தின் பதிவாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒரு இடம் பற்றிய நினைவுகளைப் பிற்காலத்திலும் எழுதலாம்.  பதிற்று பத்து ஏற்கனவே இருக்கும் ஊரை நினைவில் வைத்துக் கொண்டு எழுதப்பட்டதா அல்லது அது எழுதப்பட்ட காலத்திய வாழ்வைச்  சொல்கிறதா என்ற கேள்வி இருக்கிறது.
கொடுமணலில்தான் இந்தியாவிலேயே அதிக அளவு மட்பாண்டங்கள் கிடைத்திருக்கின்றன. 500க்கும் மேற்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்டமட்பாண்டங்கள் கிடைத்திருக்கிறது. இந்தியாவின் மற்ற பகுதிகளில் 2, 3 இடங்களில் கிடைத்திருந்தாலும் தென் கிழக்கு ஆசியாவில் இந்த அளவிற்கு வேறு எங்குமே மட்பாண்டங்கள் கிடைத்த்தில்லை.  அதை வைத்தும் கிமு என்று கருதுகிறோம்

மாலன் அப்படியானால். கிமு 6 ஆம் நூற்றாண்டிலேயே இலக்கண சுத்தமாக தவறுகள் இல்லாமல் எழுதியிருக்கிறார்கள் எனக் கருதலாமா?

பேரா.ராஜன்: பிராகிரதம் இருந்திருக்கிறது. எங்களுடைய கணக்கின்படி, கிமு ஆயிரத்திற்கும் முன்பாகவே இந்தியா முழுவதும் ஒரு நல்ல பண்பாட்டிற்கு கீழ் வந்துவிட்டது. போக்குவரத்து எல்லாம் அப்போதே இருந்திருக்கிறது. கிமு ஆயிரத்தைச் சேர்ந்த பெருங்கற்படை சின்னங்களிலேயே வட இந்தியாவில் இருக்கிற அகேத், கார்னீலியம் போன்ற கல் மணிகள் கிடைத்துள்ளன.  இலங்கையில் இருக்கிற பொருட்களும் கிடைத்துள்ளன. கி.மு. 6ம் நூற்றாண்டில் வட இந்தியாவில் புத்த மதம். சமண மதம் தோன்றிய காலத்திலேயே தமிழகமும் மிகச் சிறந்த நிலையில் இருந்திருக்கிறது. கிமு 6ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே இரும்பு செய்தல், இரும்பை உருக்கி எஃகு செய்தல்,ஆகியவை நடந்திருக்கின்றன.இரும்பை உருக்கி எஃகு செய்வதற்கு 1300 டிகிரிசென்டிகிரேட் அளவிற்கு நிறைய வெப்பநிலை வேண்டும். அந்த அளவு வெப்பத்தை உருவாக்கவும், தாங்கவும் கூடிய உலைக்களன்கள் இருந்திருக்கின்றன.

உருக்கும் கலம், நெய்யப்பட்ட துணி, அரிய கல்மணிகளை மெருகூட்டுவதற்கானதொழிற்கூடங்கள, இருந்திருக்கின்றன. மொத்தத்தில் ஒரு தொழிற் நகரமாக இருந்திருக்கிறது. தொழில் நகரம் வர்த்தக நகரமாகவும் வளர்ந்திருக்கிறது.வெளியிலிருந்து மக்கள் வந்து வர்த்தகம் செய்திருக்கிறார்கள். அதனால்தான் பதிற்றுப் பத்து ‘கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்’ என்று கூறுகிறது. எஃகு, இரும்பு, துணி பற்றி சொல்லாமல் அருங்கலம் என்று semi precious stone பற்றி சொல்வதால் அப்போது இருந்த 4 தொழில்களுக்குள் இது முதன்மையான தொழிலாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால் அங்கு கிடைத்த சான்றுகளில் காணப்படும் பெயர்கள் சங்க இலக்கியத்தில் காணப்படவில்ல.. அதனால் சங்க இலக்கியம் என்பது தமிழ் சமூகத்தை முழுமையான வெளிப்படுத்துகிற இலக்கியமல்ல. அது  வணிகத்தைப் பற்றி சொல்கிறது. யவனர்கள் பற்றி சொல்கிறது. செங்கடல் பகுதியில் நம் மக்கள் இருந்திருக்கிறார்கள். அதைப் பற்றி அது சொல்லவே இல்லை. இப்போது ஓமனில் இளங்கீகரன் கீரன் என்ற பெயர் கொண்டஒரு மட்பாண்டம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுதான் முதன்முதலாக அரேபிய தீபகற்பத்தில் கிடைத்த தமிழ் வணிகர்களை பற்றிய குறிப்பு.

மாலன்: பிராகிருதம் என்பதை திராவிட மொழி என்று எடுத்துக் கொள்ளமுடியுமா? அல்லது சமஸ்கிருதம்தான் பிராகிருதமா?

பேரா.ராஜன்: மக்கள வழக்கு பிராகிரதம். உயர்ந்தோர் வழக்கு சமஸ்கிருதம். பிராகிரதம்தான் இந்தியா, உலகம் முழுவதும் இருந்திருக்கிறது. அசோகரது கல்வெட்டுக்கள், இலங்கையில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களில் பிராகிரதம்தான் உள்ளது..

மாலன்: பரவலாக பிராகிரதம் இருக்கிறது என்பதால் இடம் பெயர்வு இருந்தருக்கலாமோ?

பேரா.ராஜன். இருந்திருக்க வாய்ப்புகள உண்டு. அசோகரது கல்வெட்டுக்களை மறந்துவிடுங்கள. அதற்கு முன்பு பிராகிரதம், சமஸ்கிருதம் இருந்த்தற்கான சான்றுகளே இல்லை. அரசின் அலுவல்  மொழியை மக்கள் மொழியாக எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்வி எழுகிறது. இதைப் பற்றி யோசிக்கும் வரும்பொழுது தற்போது அரசின் அலுவல்மொழி ஆங்கிலம். அது குறிப்பிட்ட சில மக்கள் குறிப்பிட்ட நிர்வாகத்திற்காக வைத்திருப்பது பிராகிரதம் அதுபோல இருந்திருந்தால் ஏன் ஒழிந்தது?. இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்திய பிராகிரதம் ஏன் மக்கள் வழக்கிலிருந்து வெளியே போனது என்பதற்கு காரணம் சொல்ல முடியவில்லை. இதற்கு language replacement  காரணமாக இருக்கலாம். அதாவது ஏற்கனவே ஒரு மொழியை பேசிக் கொண்டிருந்தவர்கள இன்னொரு மொழியை கற்றுக் கொண்டு பழைய மொழியை விட்டு விடும் நிலைமை உள்ளது. இது சமூக, பொருளாதார, அரசியல் காரணங்களால் ஏற்படுகிறது. இதையும் அந்த நிலையில்தான் பார்க்க வேண்டும்

மாலன்: துவாரகை அகழாய்வைப் பற்றி சொல்லுங்கள். ஆழ்கடல் ஆய்வில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

பேரா.ராஜன்: மத்திய தொல்லியல் ஆய்வுத் துறையில் இருந்த எஸ்.ஆர்.ராவ் ஓய்வு பெற்ற பிறகு பெருமைமிகு பேராசிரியராக (Emeritus Professor) கோவாவில் உள்ள தேசிய கடலாய்வு மையத்திற்கு வந்தார்.. சிந்து சமவெளியில் கப்பல் கட்டும் இடம், கப்பல் நிற்கும் இடம் இருந்த லோத்தால் என்ற இடத்தை ஏற்கனவே இவர் கண்டுபிடித்திருந்ததால் கடல் சார்ந்த ஆய்விற்கான பொறுப்பை அவரிடம் கொடுத்தார்கள். அவர் கீழ் வேலை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் தொழில்நுட்ப அலுவலராகச் சேர்ந்தேன். எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணி ஒரு தறைமுகத்தை எடுத்து ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என்பது. அப்போது ஆழ் கடல் டைவிங், ஆழ்கடல் தொல்லியலாய்வு  இரண்டுமே எனக்குத் தெரியாது. அந்த சமயத்தில் கடல் தொல்லியல் அகழாய்வில் நான், எஸ்.ஆர்.ராவ், இன்னும் ஒருவர் என 3 பேர்தான் இந்தியாவில் இருந்தோம்.

அப்போது Indian national science academy ஒரு சிறிய தொகையை கொடுத்தது. அந்தப் பணம் ஒரு நாள் இரண்டு நாள் படகு செலவிற்கே சரியாகி விடும். அப்போது ஏ டி மித்ரா என்பவர்  இயக்குனர் ஜெனரலாக இருந்தார். அவர் கொஞ்சம் கூடுதலாக நிதி கொடுத்துஒரு புதிய துறையாக இதைச் செய்தார்., ‘இது புதிய துறையாக புது முயற்சியாக இருப்பதால் வெற்றி தோல்விகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு  செயல்பட முடியாது. நீங்கள் இறங்கி ஆய்வு செய்யுங்கள் என்று அவர் சொன்னார். உற்சாகமாக.துவாரகையில் ஆய்வைத் தொடங்கினோம்.

எஸ்.ஆர்.ராவ் பல ஆண்டுகள் காலம் குஜராத்தில் இருந்தவர். என்பதால் துவாரகையை எடுத்துக் கொண்டோம். குஜராத்தில் ஏழு துவாரகைகள்  இருக்கின்றன  கடலோரத்தில் இருக்கும் துவாரகையை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். நிலத்தில் இருக்கும் துவாரகையை விட்டு விடலாம் கொள்ளலாம் என்றார் ராவ். துவாரம் என்றால் வாயில். கேட் வே ஆப் இந்தியா என்பதும் ஒரு துவாரகைதான். நாங்கள 2 துவாரகைகளை மட்டும் எடுத்துக் கொண்டோம்.. முதல் நாள் ஆய்வின் போது ஓ என் ஜி சி,நிறுவனத்தைச் சேர்ந்த கடலுக்கடியில் கச்சா எண்ணை உள்ள இடங்களைத் தேடிக் கொண்டிருந்தவர்களை அழைத்து  வந்து டைவ் செய்யச் சொல்லுவோம். அப்போது எங்களுக்கு டைவிங் தெரியாது.

நானும் ராவும் மேலே உட்கார்ந்து கொண்டு பார்த்துக் கொண்டே இருப்போம். கீழே போனவர்கள் ஒரு 2 மணி நேரம் கிழித்து மேலே வந்து ஒண்ணும் கிடைக்கல சார் என்பார்கள். இது எங்களுக்கு பெரிய அதிர்ச்சி. எஸ் ஆர் ராவ் எல்லோருக்கும் தெரிந்த பெரிய அறிஞர். ஆய்வு செய்வதற்கு ஒன்றும் இல்லை என்றால் அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை. இந்த வேலை இல்லை என்றால் வேறு எங்காவது வேலையில் சேர்ந்து விடுவார். ஆனால் என் நிலைமை வேறு. எனக்கு வேலை போய்விட்டால் என்ன செய்வது? அப்போது நான் அவரிடம், சார் நான் டைவ் பணிணி பார்க்கிறேன் என்று சொன்னேன்.

ஏனென்றால் எனக்கு இது வாழ்வா சாவா என்பது மாதிரி ஆகிவிட்டது. அந்த சமயத்தில் நான் முனைவர் பட்டம் எல்லாம் வாங்கி விட்டேன். வயது 30க்கு மேல். ‘இந்த வயதிற்கு மேல் டைவ் செய் விதிகள் அனுமதிக்காது. தவிர, உங்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் நான்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கும்,’ என்று ராவ் தயங்கினார்.
‘சார் நீங்க உங்க சொந்த ஊர் பெங்களூரூக்கு கிளம்பி போயிடுங்க. அப்ப நான் டீம் லீடர் ஆகிவிடுவேன். நான் டைவ் அடித்தால் அதன்பின் என்னை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். ஏதாவது ஆனால் பதில் சொல்ல நானே இருக்க மாட்டேனே?’ என்றேன். முதல் நாள் டைவ் செய்தேன். அதுவரையிலும் சீனிவாஸ், மிஸ்ரா என்ற 2 பேர் எங்களுக்காக டைவ் செய்தார்கள். இதற்காக அவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் ரூபாய் கட்டணமாகக் கொடுப்போம். அவர்களை எனக்கு கற்றுக் கொடுக்கச் சொன்னேன். ‘இவன் கத்துகிட்டா அந்த காசு நமக்கு வராதே’ என்று நினைத்தார்களோ என்னவோ , ‘வேகமாக கீழே போங்க’ என்றார்கள்.

முதல் நாள் கைகளை கட்டி தொங்க விட்டார்கள். கடலடியில் போனால் காதெல்லாம் அடைத்து விட்டது. நெஞ்செல்லாம் ஒரு மாதிரியாக ஆயிற்று, நன்றாக நீச்சல் தெரிந்ததால் வேகமாக மேலே வந்து விட்டேன். அடுத்த இரண்டு நாட்கள் காதெல்லாம் வலி. நெஞ்செல்லாம் வலி. அதன்பின் இனி வேகமாக போக்க் கூடாது என்று மெதுவாக போனேன். 35 அடியில் முதலில் தரையைத் தொட்டேன்.

மேலே வந்தவுடன் எஸ்.ஆர்.ராவ்வை தொலைபேசியில் அழைதுது சொன்னேன். உடனே அடுத்த பிளைட்டை பிடித்து வந்துவிட்டார். வந்தவுடன், ‘இந்தியாவில் மெரைன் ஆர்க்யிலஜியை establish செய்றோம்,’ என்றார். அதன்பின் மற்றவர்களுக்குப் பயிற்சி அளித்தேன். தற்போது இந்தியாவின் பல்வேறு இடங்களில் நிலைகளில் இருக்கும் என் மாணவர்கள் ஏ.ஜே.கௌர், ஷீலா திரிபாதி, அலோக் திரிபாதி (அஸ்சாம்) போன்றவர்களை தயார் செய்தேன்.அவர்கள அனைவருக்கும் நானே பயிற்சி கொடுத்தேன்.

மாலன்:  துவாரகையில் ஏதாவது கண்டுபிடித்தீர்களா?

பேரா.ராஜன்: பெரிதாக சொல்வதற்கு இல்லை. அங்கு நகரங்கள் இருந்திருக்கின்றன .. அங்கிருந்த நகரங்கள்  வாழ்விடம் என்பது கி.பி. 5ம் நூற்றாண்டிற்கு முந்தையதாக இராது.

மாலன்: துவாரகையில் கடலுக்கடியில் சென்று ஆய்வு செய்த்து போல பூம்புகாரில் செய்ய முடியுமா?

பேரா.ராஜன்: முடியும் செய்திருக்கிறோம். கருணாநிதி முதல்வராக இருந்த்தபோது அந்த ஆய்விற்காக ரூ 50 லட்சம் நிதி ஒதுக்கினார் அந்த சமயத்தில் நடன காசிநாதன் தமிழக தொல்பொருள் துறை இயக்குனராக இருந்தார். பூம்புகாரில் ஆய்வு செய்ய நீங்கள் வந்து விடுங்கள் என்று கூப்பிட்டார். பேராசிரியர் சுப்புராயலுவும், ‘இந்தியாவிற்கு வேலை செய்ய நிறையப் பேர் இருப்பார்கள். தமிழத்திற்கு யாரும் இல்லை. என்று அழைத்தார். அதன்பின் பூம்புகார் அகழாய்விற்கு போனோம். 3 ஆண்டுகள் அங்க டைவ் செய்தோம்..

மாலன்:  பூம்புகாரில் நீங்களுக்கு என்ன கண்டுபிடித்தீர்கள்?

பேரா.ராஜன்: இரண்டரைக் கிலோ.மீட்டரில் துறைமுகம் பகுதி இருந்தது அதில் கலங்கரை விளக்கம் போல வட்டமாக ஒரு பகுதியைக் காண முடிந்தது. அந்தப் பகுதியில் ஆழம் மிக அதிகம். சுமார் 65 அடி ஆழம். அதனால் அங்கு அதிக நேரம் இருக்க முடியாது. 10 நிமிடங்கள்தான் எங்களால் உள்ளே இருக்க முடியும். அது எங்களுக்கு ஒரு பெரிய இடர்பாடாக இருந்த்து.. அதன்பின் பள்ளிக்கரணையில் இருக்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓஷன் டெக்னாலஜியுடன் இணைந்து பணி செய்தோம். எப்படி செய்தாலும் கால்வாயில் அதிகமாக நீர் வரத்து இருக்கும் காலகட்டத்தில் மண்ணை தோண்டினால் மண் தள்ளி தள்ளி மீண்டும் மீண்டும் மூடிக் கொள்ளும். முதல் நாள் ஆய்வு செய்த்தை அடுத்த நாள் மீண்டும் முதலிலிருந்து துவங்க வேண்டும். நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டால் தினமும் மண்ணைத் தோண்டிக் கொண்டிருந்தோம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அப்படியிருந்தும் அந்தப் பகுதியில் நிறைய கப்பல் கண்டுபிடித்தோம்.
புதுச்சேரியில் இருந்து பூம்புகார் வரை 10, 12 கப்பல் துறைமுகங்கள இருந்திருக்கின்றன. காசு அடிப்பதற்கான வெள்ளி, ஈயம் போன்ற உலோகங்கள் கப்பல் வழியாகக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. உலோக வணிகத்தில் தென்னகம் முன்னிலையில் இருந்திருக்கிறது
பிலினி என்பவர் ரோமன் நாட்டு நாடாளுமன்றத்தில் (செனட்டில்) ”‘நம் பெண்கள் சேர நாட்டில் இருந்து அரிய கல் மணிகளை இறக்குமதி செய்கிறாரகள். நம்முடைய தங்கம் மொத்தமும் அதற்காக அங்கே போகிறது. இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் கஜானா காலியாகிவிடும்,’ என்று புகார்.. தாக்கத்தை ஏற்படுத்தி இருந்திருக்கிறது.

மாலன்:: பொருந்தல், கொடுமணல், அகழாய்வுகள் ,மூலம் சங்க காலம் என்பது கி.மு.முதலாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை என அறிவியல் பூர்வமாக நிறுவியிருக்கிறீர்கள். அவர்களது வாழ்க்கை எப்படி இருந்தது என்பதற்கு வேறு சான்றுகள் உண்டா?

பேரா.ராஜன்: சங்ககாலச் சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று ஆநிரை கவர்தல். அதாவது பசுக் கூட்டங்களைக் கவர்ந்து செல்லுதல். அந்தக் காலத்தில் பசுக்கள் பெரும் செல்வமாகக் கருதப்பட்டன. இப்படிப் பசுக்களைக்  கவர்ந்து செல்வதை ஆகோள் என்ற சொல்லால் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.( ஊர் கொலை ஆகோள் பூசன் மாற்றே (தொல் 20:3))

அவற்றைக் கவர்ந்து செல்லுதல், கவர்ந்து செல்லப்பட்டவற்றை மீட்டு வருதல் என்பனவற்றிற்காக ஊர்களுக்கு நடுவே சண்டைகள் நடந்திருக்கின்றன. அந்தச் சண்டைகளில் இறந்து போனவர்கள் நினைவாக அவர்களது பெயரும் ஊரும், அவர்கள் எதற்காக மரணம் அடைந்தார்கள் என்ற விவரத்தையும் பொறித்த கல் ஒன்றை நடும் வழக்கம் இருந்ததாகச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன . அதை நடுகல் என்று சொல்வார்கள். '''பீடும் பெயரும் எழுதி "; ''எழுத்துடை நடுகல்'' போன்ற தொடர்களை சங்க இலக்கியத்தில் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் பல நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால அவை சங்காலத்தைச் சேர்ந்தவை அல்ல. பிற்காலத்தைச் சேர்ந்தவை. தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட நடுகற்கள்தான் சங்ககாலத்தைச் சேர்ந்தவையாக இருக்க முடியும். அப்படி இதுவரை 5 கற்களைக் கண்டுபிடித்திருக்கிறோம். தேனி மாவட்டத்தில் புலிமான் கோம்பை என்ற இடத்தில் 3 கற்களைக் கண்டு பிடித்தோம். அதில் ஒன்று ஆ கோள் தொடர்பாக கூடல் என்ற ஊரில் நடந்த பூசலில் இறந்த, அந்தவன் என்பவருடைய மகன், தீயன் என்பவருக்காக நடப்பட்ட கல் என்பதைத் தெளிவாக ஆக்கோலில் இறந்த தேடு தீயன் என்பவனுக்காக எழுதப்பட்டது. ''கல் பேடு தீயன் அந்தவன் கூடலூர் ஆகோள்'' என்பதைமூன்று வரிகளாகக்  கல்லில் பொறித்திருக்கிறார்கள். தொல்காப்பியத்தில் இடம்பெற்றிருக்கும் ஆகோள் என்ற சொல்  இக்கல்வெட்டிலும் இடம்பெற்றிக்கிறது இதைவிட அந்தத் தகவலைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எப்படி எழுத முடியும்?

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவிற்கு அருகில் உள்ள தாதப்பட்டியில் இன்னொரு கல் கிடைத்தது. அதன் தொடக்கப்பகுதி உடைந்திருந்ததால் அந்தத் தொடக்க எழுத்துக்களை அறியஇயலவில்லை. '' ...ன் அடியோன் பாகற்பாளிய் கல் ''என்று  அதில்பொறிக்கப்பட்டிருந்தது ஒரு தலைவனின் (தலைவனின் பெயர் உடைந்துள்ளது) அடியோன்ஆகிய பாகல் என்பவர்க்காக எடுக்கப்பெற்ற கல். என்பதே இதன் பொருள். ''அடி ஓன்''என்பது தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ள சொல்  ''அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்'' என்பது தொல்காப்பியம்
இவற்றில் கவனிக்கத் தக்க விஷயம் என்னவென்றால் எங்கேயும் தவறே இல்லாமல் எழுதியிருக்கிறார்கள. இலக்கண சுத்தமாக எழுதியிருக்கிறார்கள். தவறாக எழுதக் கூடாது என்பதில் கவனமாக இருந்தருக்கிறார்கள. கல்வெட்டு அடிக்கும்பொழுது ஏதாவது ஒரு எழுத்தை விட்டுவிட்டால் அதை இடை சேர்த்து (insert) எழுதியிருக்கிறார்கள் மொழிக்கு அந்த அளவு முக்கியத்துவமும் மரியாதையும் கொடுத்திருக்கிறார்கள். இதுபோல இடை சேர்த்து எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் மட்டும் கொடுமணலில் 500 கிடைத்துள்ளது.

மாலன்: இதுபோன்ற அகழாய்வுகளைச் செய்வதால் சமூகத்திற்கு என்ன பலன்?

பேரா.ராஜன்: இந்திய சுதந்திரப் போராட்டம் வலுவடைந்ததற்கு காலனி ஆதிக்கத்தின்போது இங்கிருந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வுப் பணிகள் ஒரு முக்கிய காரணமாக அமைந்தன.அந்த ஆய்வு பணிகளின் முடிவுகள் இந்திய மொழி, கலாசாரம், பண்பாடு எந்த அளவிற்கு தனித்தன்மை வாய்ந்தவை (பின்னாளில் ஆர்ய, திராவிட சண்மை வந்தாலும்) என்ற உண்மையை சொல்லின. இது ஒரு நம்பிக்கையையும் இந்தியா, இந்தியர்கள் என்றால் நமக்கென்று தனித் தன்மையை தந்தது. பொருளாதார, சமூக, அறிவு நிலையில் நாங்கள உயர்ந்தவர்கள் யாருக்கும் அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை எங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற தெம்பைக்கொடுத்தது,.இதுபோன்ற தொல்லியல் அகழாய்வுகள்தான் (heritage studies). இவற்றின் மூலம்தான் நம் பாரம்பரியம் குறித்த அறிவியல்பூர்வமான வரலாற்று சான்றுகளைக் காண முடியும்.

மாலன்: தொல்லியல் ஆய்வுத் துறைக்கு எப்படி வந்தீர்கள்?

என்னுடைய சொந்த ஊர் கோயம்புத்தூர். கோயம்புத்தூர் கலைக் கல்லூரியில் இளங்கலை வரலாறு படித்ததே தற்செயலாக நடந்த விஷயம்.  விவசாயப் பின்னணி கொண்ட என் குடும்பத்தில் முதலில் கல்லூரி சென்று படித்தவர் என் சகோதரர். கணிதம் படித்தார். நான் பள்ளி இறுதி படிப்பை பொள்ளாச்சி எம்ஜிஎம் பள்ளியில் முடித்தபோது எந்த பாடத்தில் 60 சதவீதம் மதிப்பெண் எடுக்கிறோமோ கல்லூரியில் அந்தப் பிரிவில் நேரடியாக சேர்ந்து படிக்கலாம் என்று இருந்தது. எனக்கு இயற்பியலில் அந்த மதிப்பெண் இருந்தது. ஏற்கனவே என் குடும்பத்தில் அண்ணன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்ததால் , ‘விவசாயத்தை யார் பார்ப்பார்கள் நீ செய்’ என்று என்  அப்பா சொல்லிவிட்டார்.

அப்போது மு.மேத்தா. என்னுடைய ஆசிரியர்.ஒரு துக்கம் விசாரிக்க வந்த மு.மேத்தா, அப்பாவிடம், ‘இவன் கல்லூரியில் சேர்ந்து படிக்கட்டுமே மாமா’ என்றார்.விவசாயத்தை யார் பார்ப்பாங்க என்று கேட்ட அப்பாவிடம் படிச்சிக்கிட்டே விவசாயம் பார்க்கட்டும் என்றார். அப்பாவை விடாமல் என்னை காலேஜில் சேர்த்து விடுங்க என்று நச்சரித்தேன். நான் விண்ணப்பித்தபோது எல்லா பிரிவுகளிலும் அட்மிஷன் முடிந்து விட்டது. காலி இடங்களே இல்லை. பேராசிரியர் கருப்பசாமி என்பவர் வரலாற்று பிரிவில் மட்டும் இடம் உள்ளது. சேர்ந்து படிக்கிறியா என்று கேட்டார். ஊருக்குப் போனால் விவசாயம் பார்க்க சொல்லி விடுவார்கள் என்று சேர்ந்து  விட்டேன். பின் தில்லியில் படித்தேன் அங்க பத்மஸ்ரீ விருது பெற்ற கே.ஆர்.சீனிவாசன் என்ற தொல்லியல் அறிஞர் தமிழகத்தில் பெருங்கற்படை சின்னங்கள் அதிகம். நீ அதில் ஆராய்ச்சி படிப்பை தொடர் என்று வழிகாட்டினார். அவரே மைசூரில் இருந்த பி.கே. திரிபாத ராவ் என்ற தொல்லியல் அறிஞரை சிபாரிசும் செய்தார். ஆராய்ச்சி படிப்பை முடித்த பின் கேம்ப்ரிஜ்ட் பல்கலை கழகத்தில் 3  ஆண்டுகள் யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் லண்டனில் உள்ள தெற்காசிய வளர்ச்சி மையத்தில் கற்பித்தேன் . அதன் பின் பாரசில் மைஸ் ஆப் தி சயின்ஸ் மையத்தில், birth of Indian civilization  என்ற புத்தம் எழுதிய ஆல்சின் என்பவரிடம் பணி செய்தேன். ஜப்பானில் டோக்கியோவில் சுஷமு என்பவரிடம் பணி செய்தேன்.

மாலன்: கடந்த ஆண்டு கொடுமணல் ஆராய்ச்சிக்காக உலக அளவில் சிறந்த கண்டுபிடிப்பு என்று உங்களுக்கு விருது கொடுத்தார்கள். அதைப் போல பல விருதுகளை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் பெற்ற விருதுகளிலேயே ஆகச் சிறந்தது என்று எதைக் கருதுகிறீர்கள்?

பேரா.ராஜன்: நானும் பி.எஸ்.நேகி என்ற பேராசிரியரும் ராஜஸ்தானில் ஆய்வு செய்தோம். 1982 என்று நினைவு. கையில் இருந்த வரைபடத்தைக் கொண்டு ஒருஎல்லைப்புற கிராமத்திற்குப் போய்விட்டோம். அங்கிருந்த ஒரு கிராமவாசியிடம் பழைய பொருட்கள எதுவும் இங்க கிடைக்குமா என்று கேட்டோம். அவர், ‘அதை ஏன் பாகிஸ்தானில் வந்து தேடுகிறீர்கள்? இந்தியாவிலேயே தேடலாமே?’ என்றார். இது பாகிஸ்தானா என்று வியப்போடு கேட்க, ஆமா, அங்க ஒரு வாய்க்கால் போகுது பாருங்க. அதுக்கு அந்தப் பக்கம். பாகிஸ்தான். இந்தப் பக்கம் இந்தியா,’ என்றார். இப்போ என் மாடுகள் உங்க ஊர்லதான் மேய்ந்து கண்டிருக்கிறது,’ என்று அவர் சொன்னபோது ஆச்சரியமாக இருந்த்து. ‘என் பொண்ணையே உங்க ஊர்லதான் கொடுத்திருக்கிறேன்’, என்றார் அவர்.அப்போது எல்லையில் இதுபோன்ற வேலிகள் எல்லாம் கிடையாது.

ராஜஸ்தானில் இன்னொரு முறை பாலைவனத்தில் வெகுதூரம் போய்க் கொண்டிருந்தோம். நா வறண்டு தண்ணீர் தாகம் எடுத்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீர் நிலைகளோ விடுதிகளோ ஏதும் இல்லை.  அப்போது சற்றுத் தொலைவில் பெண்கள் தலையில் தண்ணீர் குடத்துடன் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தோம். அவர்கள் நிச்சயம் பல மைல் நடந்து, வீட்டிற்காகத் தண்ணீர் எடுத்துக் கொண்டு போகிறார்கள் என்பது புரிந்தது. அவ்வளவு சிரமப்பட்டு தண்ணீர் கொண்டு போகிறவர்களிடம் போய் நாம் எப்படிக் கேட்பது என்று தயக்கமாக இருந்தது. ஆனால் வேறு வழியில்லை. போய் தயங்கித் தயங்கித் தண்ணீர் கேட்டோம்.அதற்கென்ன நல்லா குடிங்க என்று அந்தப் பெண்கள் தங்கள் பானையிலிருந்து தண்ணீர் சரித்துக் கொடுத்தார்கள். எங்களை யாரென்றே தெரியாமல் தண்ணீர் கொடுத்தார்கள் பாருங்கள், அதுதான் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய விருது

நன்றி : புதிய தலைமுறை வார இதழ், அக்டோபர் 2014