புலிக்கொடி வரைந்த தமிழ்நாட்டு ஓவியர் நடராஜன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடி உருவான வரலாற்றில் தமிழ்நாட்டு ஓவியருக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. சிவகாசியில் ஓவியராக ஆக இருந்தவர் திரு. நடராஜன். அவருக்குச் சொந்த ஊர் விருதுநகர் அருகே மல்லாங்கிணறு. 1977-ல் எல்டிடிஇ தலைவர் வே. பிரபாகரன் திறமையான சைத்ரிகர் நடராஜனைச் சிவகாசியில் சந்தித்து புலிக்கொடி உருவாக்க எண்ணக்கருவைப் கலந்துபேசி உருவானதுதான் புலிக்கொடி. பின்னாளில் பார்மசிஸ்ட் ஆக மதுரை அரசாங்க மருத்துவமனையில் வேலைபார்த்தார் என்று பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர்கள் தலைமையேற்ற நாகரிகம் என்ப. அதில் கொற்றவையின் சின்னமாகப் புலி இருக்கிறது. சிங்கம் சிந்து சமவெளியின் கலைகளில் 10,000 சதுர மைல் பரப்பில் கலைப் படைப்புகளில் கிடையாது. அண்டை நாடுகளில் (பாக்ட்ரியா, மெசொபொடோமியா) சிங்கம் கலையில் உன்னத இடம்பெற்றதால் சிந்து சமவெளியில் பாரதத்தின் சிறப்பு விலங்கான புலி தெரிவுசெய்து சிங்கம் விலக்கப்பட்டிருக்கிறது [1]. தமிழ் இலக்கியத்தை எடுப்போம். சிலப்பதிகாரத்தில் இமயமலையில் கரிகால் சோழன் புலிக்கொடியை நாட்டினான் என்ற குறிப்பு இருக்கிறது. ராஜராஜன், ராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் புலிக்கொடி இலங்கையில் பறந்திருக்கிறது. இதனால் சிங்களர் தமிழரைக் ‘கொட்டியா’ (புலி) என்று அழைக்கும் வழக்கம் உண்டு.

1972-ம் ஆண்டு தமிழரசுக் கட்சியாளர் ராஜரத்தினம் பிரபாகரனுக்கு தமிழ் வரலாற்றில் சோழர்களின் புலியின் முக்கியத்துவத்தைப் போதித்தார். ”இதே வேளை தமிழ் நாட்டில் தங்கியிருந்த தமிழரசுக் கட்சியைச் சார்ந்த ராஜரட்ணம் என்பவரின் தொடர்பு பிரபாகரனுக்கு ஏற்படுகிறது. குடியரசு தின எதிர்ப்புப் போராட்டங்களின் போதான வன்முறை நிகழ்வுகளில் தேடப்பட்டவர்களுள் ராஜரட்ணமும் ஒருவர். அவர்தான் பிரபாகரனுக்கு கரிகால் சோழன், புலிக் கொடி போன்ற சரித்திர நிகழ்வுகளைப் போதிக்கிறார். அவர் தான் இந்த அடிப்படைகளிலிருந்து தமிழ் புதிய புலிகள் என்ற பெயரை முன்வைத்து அமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்குகிறார். பிரபாகரன் இந்த ஆலோசனைகளால் ஆட்கொள்ளப்படுகிறார்.” (ஐயர், http://inioru.com/?p=9025. 1976-ல் பிரபாகரன் தமிழ்ப் புதிய புலிகள் என்ற பெயரைத் தமிழீழப் புலிகள் என்று மாற்றுகிறார்.

ஓவியர் நடராசன் சி. என். ராமகிருஷ்ணனுக்கு அளித்த பேட்டி, நக்கீரன், 2009: ""எனக்குத் தெரிந்த மாறன் என்ற இலங்கை மாணவர் இரண்டு யாழ்ப்பாண இளைஞர்களை அழைத்து வந்தார். அவர்களின் பெயர்கூட எனக்குத் தெரியாது. பேச்சுவாக்கில் மாறன் ஒருவரை "தம்பி' என்றும், மற்றொருவரை "பேபி' என்றும் அழைத்தார். ஆனால் பேபியோ, தம்பியை மணி என்றே கூப்பிட்டார். இவர்கள் யாராக இருந்தால் என்ன? இவர்களின் உண்மையான பெயர் என்னவாக இருக்கும் என்பதிலெல்லாம் நான் ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும் இலங்கைத் தமிழர்கள் மீதான பற்றால், "உங்களுக்கு நான் என்ன செய்யவேண்டும்' என்று கேட்டேன். அதற்கு அந்தத் தம்பி "நாங்கள் ஒரு இயக்கம் ஆரம்பித்திருக்கிறோம். அதற்கு "தமிழீழ விடுதலைப் புலிகள்' என்று பெயர்கூட வைத்துவிட்டோம். இந்த இயக்கமானது சிங்கள இனவெறி அரசுக்கும், அதன் அடக்குமுறைக்கும் எதிரானது. பண்டைய காலத்தில் தமிழன்தான் இலங்கையை ஆண்டான் என்பதற்குச் சான்றுகள் இருக்கிறது. அந்த சோழமன்னன் புலிக்கொடி பறக்க இலங்கையில் ஆட்சி நடத்தியிருக்கிறான். அதனால் எங்கள் இயக்கத்தின் சின்னத்திலும் புலி இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறோம். சிவகாசி பட்டாசு லேபிள்களில் வரையப்பட்டிருந்த புலிப்படங்கள் சிலவற்றைப் பார்த்தோம். எங்களுக்குப் பிடிக்கவில்லை. புலி என்றால் சீறவேண்டும். புலியின் முகத்தில் சீற்றம் பூரணமாக வெளிப்பட வேண்டும். இப்படி ஒரு படத்துக்காக பல இடங்களில் பல நாட்கள் அலைந்துவிட்டோம். எதுவும் மனநிறைவாக இல்லை. பிறகுதான் உங்களைப் பற்றி கேள்விப்பட்டு இங்கு வந்திருக்கிறோம்'' என்றார்.

அவர்களின் எண்ணத்துக்கேற்ப நான் வரைந்து கொடுத்த படத்தில் சீற்றம் கொண்ட புலியின் முகம் எதிர்பார்த்தபடியே அமைந்துவிட்டது. அவர்களுக்கும் திருப்தியாக இருந்தது. அப்போது நான், "வளையத்தைத் தாண்டி வெளியே வருவதுபோல் புலிகளின் நகங்கள் விரிந்த கால்கள் இருந்தால் நன்றாக இருக்குமே' என்று எனது அபிப்பிராயத்தைச் சொன்னேன். உடனே தம்பி "அப்படியே வரையுங்கள் அண்ணா' என்றார் ஆர்வத்தோடு. பிறகுதான் வளைவை மூன்றாகப் பிரித்து ஒவ்வொன்றிலும் 11 தோட்டாக்கள் என 33 தோட்டாக்களை வரைந்தேன். அவர்களின் விருப்பப்படியே நுனியில் குத்துக்கத்தி உள்ள இரண்டு துப்பாக்கிகள் ஒன்றுக்கொன்று குறுக்காக வளைவின் பின்புறம் இருக்கும்படி வரைந்தேன். இப்படித்தான் அந்த இயக்கத்துக்குப் புலிச்சின்னம் உருவாயிற்று.

இந்தச் சின்னத்துக்கு பிளாக் எடுத்துத்தரும்படி என்னிடம் கேட்டார் தம்பி. நானும் செய்து கொடுத்தேன். அந்த மூலப்படம் மற்றும் ஃபிலிம் நெகட்டிவ்கள் இப்போதும் என்னிடம் இருக்கின்றன. பிறகு புலிச்சின்னம் பொறித்த லெட்டர்பேடு, அடையாள அட்டைகள் அச்சடித்துத் தரவேண்டுமென்றார். அதையும் நிறைவேற்றிக் கொடுத்தேன்.” [விடுதலைப் புலிகளின் கொடி சின்னத்தில் புலி தலையை சுற்றி 33 குண்டு வைத்ததன் மூலம் 33 ஆண்டுகளில் ஈழம் மலர்ந்து விடும் என்பதாக நம்பிக்கை. நக்கீரன் பத்திரிகை வெளியிட்டுள்ள புத்தகம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்: ஓவியர் நடராசா, தம்பி, முதற்பதிப்பு: 2009.]பண்டார வன்னியன் கொடியாகக் கேடயமும் குறுக்கே இரண்டு வாளும் வைத்து சைத்ரிகர் ஒருவர் 1960களில் படம் வரைந்தார். அதனை அடிப்படையாய்க் கொண்டு, புலிக்கொடி உருவாக்க எண்ணம் திரு. பிரபாகரனுக்கு உதித்தது. வாளை எடுத்துவிட்டு மாற்றாக, கத்திமுனை கொண்ட இரண்டு ரைபிளாகவும், கேடயம் வட்டமாகவும் புலிக்கொடியில் வரைந்தளித்தவர் ஓவியர் நடராஜன். அதில் பாயும் புலி சீறி உறுமுவதாக வடிவமைத்தவர் அவரே. சிங்களரின் ஸ்ரீலங்கா கொடியில் வாளைப் பிடித்த சிங்கம் நிற்கிறது, அதனைப் பல்லவர் தொடர்பால் சிங்களர் பெற்றனர்.

உசாக் குறிப்புகள்:

(1) புலிச் சின்னம் சிந்துவெளி நாகரிகத்தில் உன்னத இடம் பெற்றமையை இந்த ஆய்வேட்டில் காணலாகும். Dr. N. Ganesan, Gharial god and Tiger goddess in the Indus valley: Some aspects of Bronze Age Indian Religion, 2007.

(2) வீணை வித்தகரை வைணிகர் என்பதும், சித்திர நிபுணரை சைத்ரிகர்
என்பதும் உண்டு. எ-டு: புதுமைப்பித்தன் சிறுகதை, கலியாணி:
http://www.tamilauthors.com/Puthumaipithan/014.html

(3) http://www.suriyakathir.com/issues/2009/dec01/pg12.php

பிரபாகரனும் நானும்... பழ. நெடுமாறன்
(மரக்காணம் பாலாவுக்கு அளித்த பேட்டி)

தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி ஒருபோதும் அவர் கருத்து சொன்னதில்லை. சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. எல்லாருடைய ஆதரவும் தேவை என்பதுதான் அவர்களுடைய எதிர்பார்ப்பு. அவர்களுக்கு எம்.ஜி.ஆர் எவ்வளவோ உதவிகள் செய்தபோதும், கலைஞரை அவர்கள் துளிகூட விமர்சித்ததில்லை.

''1982-ம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி. சென்னை பாண்டி பஜாரில் தம்பி பிரபாகரனும், பிளாட் அமைப்பின் தலைவர் முகுந்தனும் எதிர்பாராத விதமாக சந்தித்துக்கொண்டார்கள். அது துப்பாக்கிச் சண்டையில் முடிந்தது. இருவரும் கைது செய்யப்பட்டார்கள்.

அப்போது நான் மதுரையில் இருந்தேன். புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்த பேபி சுப்பிரமணியம் என்னை உடனடியாக சென்னைக்கு வரும்படி அழைத்தார். நான் இல்லாத வேளைகளில் மயிலாப்பூரில் உள்ள எனது அறையில்தான் பேபி தங்கியிருந்தார். அவரோடு வேறு சில புலிகளும்

இருந்தனர். கைது செய்யப் பட்ட பிரபாகரனையும் முகுந்தனையும் தங்களிடம் ஒப்படைக்கக் கோரி, சிங்களப் போலீஸ் உயரதிகாரிகள் சென்னை வந்திருந்தார்கள்.

நான் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினேன். 'பிரபாகரன், முகுந்தன் ஆகியோரை எவ்வித நிபந்தனையும் இன்றி விடுவிக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் சிங்கள போலீஸாரிடம் ஒப்படைக்கக்கூடாது' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருபது கட்சிகள் ஒன்றுகூடி நிறைவேற்றிய இத்தீர்மானம், தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, இருவரையும் நாடு கடத்துவது நிறுத்தப்பட்டது. இதன் பிறகு, நான் சிறையில் இருந்த பிரபாகரனையும் முகுந்தனையும் சந்திக்கச் சென்றேன்.

இந்த இடத்தில் ஓர் உண்மையைச் சொல்லியாக வேண்டும். அதுவரை நான் பிரபாகரனைச் சந்தித்தது இல்லை. எனது அறையில் தங்கும் பேபி மற்றும் அவரது தோழர்களிடம், 'பிரபாகரனை நான் சந்திக்க வேண்டும்' என்று பல முறை கேட்டிருக்கிறேன். ஏதேதோ சாக்குகள் கூறி வந்தார்களே தவிர, பிரபாகரனை அழைத்துவரவில்லை. சென்னைச் சிறையில் சிறை அதிகாரி அறையில் நான் அமர்ந்திருந்தேன். பிரபாகரன், முகுந்தன் மற்றும் இரு தோழர்கள் உள்ளே நுழைந்தார்கள். முகுந்தனை எனக்கு அடையாளம் தெரியும். எனவே, பிரபாகரன் யாரென்று தெரியாமல் நான் திகைத்தேன்.

பிரபாகரன் முன்வந்து, 'அண்ணா! நான்தான் பிரபாகரன்' என்றபோது..., அந்தக் காட்சியை பார்க்கவேண்டுமே! எனக்குப் பேரதிர்ச்சி. ஏனென்றால், பேபியோடு எனது அறையில் தங்கியிருந்தவர்களில் இவரும் ஒருவர். பலமுறை இவரை என் வீட்டில் பார்த்திருக்கிறேன். 'எங்கய்யா உங்க தலைவர்?' என்று கேட்டபோதெல்லாம், 'அவரும் உங்களை பார்க்கனும்னுதான் விரும்பறார்' என்று பதில் வரும். இவர் வாய் பேசாமல் உட்கார்ந்திருப்பார்.

புலிகளை மாதிரி ரகசியம் காப்பதற்கு இன்னொருவர் பிறந்துவர வேண்டும்.'' என்றபடி மலரும் நினைவுகளில் வியப்பில் ஆழ்கிறார், தடை செய்யப்பட்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவரான பழ.நெடுமாறன்.

''வழக்கறிஞர் என்.டி. வானமாமலைதான் பிரபாகரனுக்கு பிணை விடுதலை வாங்கிக் கொடுத்தார். 'அவர் மதுரையில் தங்கி கையெழுத்திடவேண்டும்' என்று உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைதான் பிரபாகரனை எனக்கு நெருக்கமாக்கியது. சுமார் ஏழு மாதங்கள் என் இல்லத்தில் அவர் தங்கியிருந்தார். அந்த காலகட்டத்தில், பிரபாகரனைப் பற்றியும் அவரது இயக்கத்தைப் பற்றியும் நிறையவே நான் அறிந்துகொண்டேன்.

மதுரையில் இருந்தபோதுதான் இயக்கத்துக்கான சின்னம் வடிவமைக்கப்பட்டது. ஓவியர் நடராசன் அதை வரைந்துகொடுத்தார். அவர் மதுரை அரசு மருத்துவமனையில் பார்மஸிஸ்ட்டாக பணியாற்றியவர்.

எங்கள் வீட்டில் குடியிருந்த டைலர் தங்கராசுதான் சீருடையை வடிவமைத்துக் கொடுத்தார். தொப்பி மட்டும் மதுரை புது மண்டபத்தில் இருந்த ஒரு கடையில் தேர்வு செய்தார்கள். சீருடையை பார்த்துவிட்டு, 'நூறு பேர் இந்த ராணுவ சீருடையோடு அணிவகுக்கவேண்டும். அதை நான் பார்க்கவேண்டும்' என்றார் பிரபாகரன். அது ஆயிரம், பல்லாயிரம் என்று பெருக்கெடுத்தது. இவ்வளவு பெரிய ராணுவத்தை கட்டமைத்து, அதற்கு திறம்பட பயிற்சியளித்த மாபெரும் தலைவன், யாரிடமும் பயிற்சி பெறவில்லை என்பதுதான் ஆச்சர்யமான விஷயம்.

கைத்துப்பாக்கி முதல் கனரக பீரங்கிகள் வரை தனக்குத்தானே பயிற்சி எடுத்துக்கொண்டார். நேதாஜியை மட்டும் அவர் ரோல் மாடலாக எடுத்துக்கொண்டார். மதுரையில், முன்னாள் இந்திய தேசிய ராணுவ வீரர்கள் மாவீரர் நேதாஜிக்காக ஒரு விழா எடுத்தார்கள். என்னோடு சேர்ந்து பிரபாகரனும் அந்த விழாவில் கல்ந்துகொண்டார். இந்திய தேசிய ராணுவ கீதம் பாடும்போது கேப்டன் லட்சுமிக்கு கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அங்கிருந்தவர்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதனர். வரும் வழியில் தம்பி சொன்னார், 'எத்தனை வருஷம் ஆச்சு? இவர்கள் நேதாஜியையும் மறக்கவில்லை. அந்த சம்பவங்கள்ளையும் மறக்கவில்லை.' நேதாஜி மீது தம்பி அளவு கடந்த மரியாதை வைத்திருந்தார். அவர்தான் தனக்கு வழிகாட்டி என்று தம்பியே என்னிடம் கூறியிருக்கிறார். புலிகளின் அலுவலகங்களில் நேதாஜி, பகத்சிங் ஆகிய இரண்டு பேரின் படங்களை நான் பார்த்திருக்கிறேன்.''

''முதன் முதலில் எப்போது இலங்கைக்குச் சென்றீர்கள்?''

''யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டபோது, 1982-ல் அரசுக்குத் தெரிந்து விமானப் பயணம் மேற்கொண்டேன். அதன் பிறகு 1985-ம் ஆண்டில் படகில் ரகசியப் பயணம் மேற்கொண்டேன். பிரபாகரனின் சொந்த மெய்க்காப்பாளர் படைத் தலைவர் கேப்டன் லிங்கம், இப்போதிருக்கும் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு இருவரும்தான் என்னைக் கூட்டிச் சென்றனர். என் பாதுகாப்புக்கு வந்தவர்களில் நான்கு பேரை சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்றுவிட்டது. அங்கே மக்கள் படும் அவலங்களை நான் வீடியோ படமாக எடுத்துவந்தேன். அதுதான் ஈழத் தமிழர்களின் நிலைமையை முதன் முதலில் உலகத்துக்குச் சொன்னது.

தமிழ்நாடு திரும்பியதும், ராஜீவ்காந்திக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவரும் சந்திப்பதற்கு நேரம் கொடுத்திருந்தார். ஆனால், மூப்பனாரும் இப்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரமும் அதைக் கெடுத்துவிட்டார்கள். அதன் பிறகு, வை.கோ.தான் அனைத்துக் கட்சி எம்பிக்களை சந்திக்க ஏற்பாடு செய்தார். எதிர்கட்சித் தலவைராக இருந்த சந்திரசேகர் இதைப் பார்த்துவிட்டு, 'நான் புலிகள்னா டெரரிஸ்ட்னு நெனச்சேன். பட் தே ஆர் லைக் சுபாஷ் போஸ், ஐ.என்.ஏ' என்று சொன்னார்.

1987-ம் ஆண்டு திலீபன் உண்ணாவிரதத்தின்போது மீண்டும் ரகசியப் பயணம் மேற் கொண்டேன். நான் பிரபாகர னோடு இருந்தபோது, இருநாட்டு ராணுவமும் என்னை வலை போட்டு தேடிக் கொண்டிருந்தது. அது ஐ.பி.கே.எஃபுக்கும் புலி களுக்கும் எப்போது வேண்டுமானாலும் மோதல் ஏற்படலாம் என்கிற காலகட்டம். யாழ் நகருக்கு ஒதுக்குப் புறத்தில் இருந்த ஒரு வீட்டில்தான் அவர் தங்கியிருந்தார். வீட்டைச் சுற்றி பங்கர்கள் இருக்கும். புலிகள் ஆயுதம் ஏந்தி காவல் காப்பார்கள்.

நானும் பிரபாகரனும் ஒரே அறையில்தான் படுத்து உறங்குவோம். அவர் சாதாரண பாயில்தான் படுப்பார். தலையணை பயன்படுத்தமாட்டார். ஒரு கையை தலைக்கு வைத்துக்கொண்டு, இன்னொரு கையில் கைத்துப்பாக்கியுடன் படுப்பார். ஒருநாள் இரவு, சிறுநீர் கழிப்பதற்காக நான் படுக்கையைவிட்டு எழுந்தேன். அவ்வளவுதான்! 'சடக்'கென எழுந்து கைத்துப்பாக்கியை எடுத்து நீட்டிவிட்டார். காரணம், அவரது எச்சரிக்கை உணர்வு. இலைகள் அசைந்தால்கூட அவர் உஷாராகிவிடுகிறார். பாய் அசைந்த ஓசைதான் அவரை எழுப்பிவிட்டது என்பதை புரிந்துகொண்டேன். அதன்பிறகு, இயற்கை உபாதைக்குகூட நான் இரவில் எழுந்திருக்கவில்லை.

காலையில் எழுந்ததும் உடற்பயிற்சிக்குப் பிறகு அலுவகம் செல்வார். அங்கே முக்கிய தளபதிகளுடன் ஆலோசனை நடத்துவார். அதன் பிறகுதான் குளியல், சாப்பாடு. மதிய வேளைகளில் பயிற்சிக் களத்துக்குச் சென்றுவிடுகிறார். அங்கே ஒரு மனித பொம்மை வைத்திருப்பார்கள். அதன்மீது துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடக்கும்.

நான் பார்த்தவரையில் மையப்புள்ளியில் சுடும் ஒரே நபர் பிரபாகரனாகவே இருந்தார். வலது கையில் துப்பாக்கியை பிடித்துக்கொண்டு இடது கையால் வலது கையை பிடித்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தோட்டா விசை காரணமாக கை அசைந்து குறி தவறிவிடும். பிரபாகரன் தன்னுடைய கைத்துப்பாக்கியைக் கொடுத்து, 'அண்ணா! நீங்க சுடுங்க...' என்றார். அப்போது காசி ஆனந்தன் பக்கத்தில் இருந்தார். நான் கையை பேலன்ஸ் செய்யவேண்டும் என்பதை மறந்து, ஒற்றைக் கையால் சுட்டுவிட்டேன். ஒரே கைத்தட்டல் ஆரவாரம்! மையப்புள்ளிக்கு அடுத்த வட்டத்தில் தோட்டா பாய்ந்ததுதான் அதற்குக் காரணம். தம்பி உடனே, 'என்னண்ணா! எடுத்த எடுப்பிலேயே அசத்திட்டீங்க. அதுவும் ஒரே கையால!' என்றார். 'இதுதான் தம்பி குருட்டுப் பூனை விட்டத்துல பாஞ்ச கதை. எனக்கென்ன தெரியும்? ஏதோ குருட்டாம்போக்குல சுட்டேன். அது சரியா பாஞ்சிருக்கு' என்றேன். 'ஆபத்துணா... உங்களுக்கு சொல்லிக்கொடுக்கிறதே ஆபத்து' என்று சொல்லி சிரித்தார்.

இன்னொரு ஆச்சர்யமான விஷயம் சொல்கிறேன். மேசை மீது விதவிதமான துப்பாக்கி ரவைகள் பரப்பி வைக்கப்பட்டு இருந்தது. போராளிகள், அவருடைய கண்களை இருக்கக் கட்டினர். அவர் ஒவ்வொரு ரவையாக தடவிப்பார்த்து, எது எது, எந்தெந்த துப்பாக்கிகளுக்கு உரியது என்பதை மிகச் சரியாக சொல்லிக்கொண்டு போனார். அதேபோல புதிய புதிய ஆயுதங்களை தயார் செய்வதிலும் புலிகள் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள்.

தளபதிகள் மீது மிகவும் பாசமாக இருப்பார் தம்பி. வெளிநாட்டிலிருந்து வரும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள், காமிரா, வாட்சுகள் என அனைத்தையுமே தளபதிகளுக்கு கொடுத்துவிடுவார். 'டே! நீ இதை எடுத்துட்டுப் போடா' என்பார். நான், 'வாட்சையாவது நீங்க கட்டலாமே!' என்றேன். 'நீங்க வேறண்ணா! என் மனைவி ஒரு கடிகாரம் கொடுத்திருக்கா. அதைத்தான் கட்டிட்டு இருக்கேன். வேற கட்டினா, அவ சண்டைக்கு வந்துடுவா!' என்றார். தனக்கென அவர் எதையும் வைத்துக்கொண்டதில்லை.

அவருடைய கைத்துப்பாக்கி இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டது. கிட்டுதான் அதை பரிசாக அளித்திருந்தார். தமிழ்நாட்டுத் தலைவர்களில் எம்.ஜி.ஆர்.மீதுதான் அவர் அளவுகடந்த பாசம் வைத்திருந்தார். அந்தளவுக்கு எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நிறைய உதவிகளைச் செய்திருக்கிறார். அதேபோல, புலவர் கலியபெருமாள், பெருஞ்சித்திரனார் ஆகியோர் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தார்.'' -சற்று இடைவெளிவிட்டு தொடர்கிறார் நெடுமாறன்.

''ஒருபோதும் அவர் மக்கள் வேறு குடும்பம் வேறு என்று பிரித்துப் பார்த்ததில்லை. ஒரு தடவை நாங்கள் காட்டில் உட்கார்ந்திருந்தோம். அவர் மகன் சார்லஸ் ஓடி வந்து அவர் மடி மீது ஏறி விளையாடிக்கொண்டிருந்தான். துவாரகாவும் இருந்தாள். 'இந்தக் குழந்தைகள் இன்றைக்குச் சிரித்து விளையாடுகிறார்கள். நான் இவர்கள் மீது பாசம் வைக்கவில்லை. எங்கள் நாட்டில் எத்தனையோ குழந்தைகள் செத்துப் போகிறார்கள். நாளைக்கு இவர்களுக்கும் அந்தச் சாவு வரலாம்.' என்றார். எதையும் தாங்கும் மனப்பக்குவத்தை நாங்கள் பெற்றுவிட்டோம். அதேபடிதான் சார்லஸுக்கு ஆகிவிட்டது.

''பெண் புலிகளைப் பற்றி?''

''பெண்களை அவர் ஆண்களுக்கு நிகராகக் கருதினார். நேதாஜி படையணியில் இருந்த மகளிர் பிரிவுகூட மருத்துவ உதவிப்படைதான். உலகிலேயே, ஆண்களுக்கு நிகராக ராணுவத்தில் பெண்களைப் பயன்படுத்தியது பிரபாகரன்தான். அதன்பிறகுதான் மற்ற நாடுகள் பெண்களைச் சேர்த்தன. 'ஈழத் தமிழினம் எண்ணிக்கையில் குறைவு. எனவே பெண்களின் பங்கு தவிர்க்க முடியாதது. சுதந்திரப் போராட்டத்தில் ஆயுதம் தாங்கிய பெண்களை ஈடுபடுத்துவதன் மூலம், பெண் அடிமைத் தனத்தையே நாம் உடைக்கிறோம்' என்று பெருமையுடன் என்னிடம் கூறினார்''.

''பிரபாகரன் கண்ணீர்விட்ட சம்பவம் ஏதாவது உண்டா?''

''நவம்பர் 27 மாவீரன் சங்கர் இறந்த நாள். கொரில்லா போரின்போது, குண்டடி பட்ட சங்கரை குற்றுயிரும் குலையுயிறுமாய் மதுரைக்குத் தூக்கி வந்தார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு அதிகமான தண்ணீர் தாகம் ஏற்படும். படகில் வரும்போது அவருக்கு நிறைய தண்ணீர் கொடுத்திருக்கிறார்கள். அவ்வாறு செய்திருக்கக்கூடாது. அதனால், ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தும் சங்கர் மரணம் அடைந்துவிட்டார். 'தம்பி, தம்பி' என்று அலறியபடியே பிரபாகரன் மடியில்தான் உயிரைவிட்டார். பிரபாகரன் அப்போது கண்ணீர்விட்டதை நான் பார்த்தேன். அதன் பிறகு திலீபன் இறந்தபோதும் கலங்கினார்.'' என்கிறவர், ''அங்கிருந்து நான் கிளம்பும்போது எல்லோரும் சேர்ந்து குதூகலமாக என்னை வழியனுப்பினார்கள். 'அண்ணா ஒவ்வொரு தடவையும் உங்களை அழைக்கிறப்போ, சரியான வசதிகளை செஞ்சு கொடுக்க முடியலை. அடுத்த தடவை நீங்க வரும்போது, சுதந்திரத் தமிழீழத்தில் உங்களுக்கு ராஜமரியாதையோடு வரவேற்பு கொடுப்போம்' என்றார்கள்'' சொல்லிக்கொண்டே கண்களை மூடி மீண்டும் நினைவுகளில் ஆழ்கிறார்.

''கடைசியாக எப்போது தொலைபேசியில் பேசினீர்கள்?''

''நான் எப்போது தொலைபேசியில் பேசினேன்? இதுவரை அப்படி பேசியதே கிடையாது. நான் மட்டும் அல்ல, யாருமே அவருடன் தொலைபேசியில் பேச முடியாது. காரணம், அவர் தொலைபேசியோ, கைபேசியோ பயன்படுத்துவது இல்லை.''

''அப்படியானால், பிரபாகரனுடைய செல்போன் என்று இலங்கை ராணுவம் காட்டியது?''

''பல கட்டுக்கதைகளில் அதுவும் ஒன்று. அப்படி அவர் செல்போன் பயன்படுத்தி இருந்தால், எப்போதோ அவரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து குண்டுவீசி இருப்பார்களே! இந்த நவீன யுகத்தில் செல்போன் என்பது இருப்பிடத்தை அறியும் ஒரு கருவி. சிங்களவர்களுக்கு பொய் சொல்வதில்கூட புத்திசாலித்தனம் இல்லை.''

''ஒலிப்பதிவு செய்யப்பட்ட பிரபாகரனின் பேச்சு ஒன்று இருக்கிறது. தமிழக தேர்தல் குறித்து அதில் பேசப்பட்டிருக்கிறது. இப்பேச்சு வெளியானால், தமிழகத்தில் கொந்தளிப்பான நிலை ஏற்படக்கூடும் என்பதால், உளவுத்துறை அதைக் கைப்பற்றி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறதே?''

''வேடிக்கையான கருத்து. தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி ஒருபோதும் அவர் கருத்து சொன்னதில்லை. சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. எல்லாருடைய ஆதரவும் தேவை என்பதுதான் அவர்களுடைய எதிர்பார்ப்பு. அவர்களுக்கு எம்.ஜி.ஆர் எவ்வளவோ உதவிகள் செய்தபோதும், கலைஞரை அவர்கள் துளிகூட விமர்சித்ததில்லை.

91-ல் பிரபாகரன் கை ஓங்கியிருந்த நேரம். கலைஞர் பேசி, முரசொலியில் ஒரு செய்தி வெளியாயிற்று. 'பிரபாகரன் யார்? எனக்காக சைதாப்பேட்டை தொகுதியில் தேர்தல் வேலை பார்த்த தம்பிதானே!' என்று எழுதப்பட்டிருந்தது. நான் பிரபாகரனைச் சந்தித்தபோது முரசொலியை எடுத்துக் காட்டினேன். தம்பி அதற்கு, 'வை.கோ.கூட தேர்தல்ல நின்னாரு. அப்போ நான் அங்கேதான் இருந்தேன். நானோ, எங்க ஆட்களோ உங்க தொகுதிகளுக்காவது வந்திருக்கிறோமா? இல்லையே! ஏதோ சொல்றாரு. சொல்லிட்டுப் போகட்டும்' என்றார். ஆக, தமிழ்நாடு பற்றியோ, அதன் தலைவர்கள் பற்றியோ தம்பி விமர்சனம் செய்யமாட்டார். 'மாவீரர் நாளில் அவருடைய பேச்சு வெளியாகுமா?' என்று எல்லோருமே எதிர்பார்க்கிறார்கள். நானும் அப்படித்தான்.'

0 comments: