உலகச் செம்மொழிகள் பலவும் அறிந்த மிகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகப் பேராசிரியன்மார் (ஹார்வர்ட், யேல், பெர்க்கிலி, சிக்காகோ, ஆக்ஸ்போர்ட் (எருதந்துறை), கேம்பிரிட்ஞ், சார்போன் (பிரான்சு), ஹைடல்பர்க், ஜவகர்லால் (தில்லி), .... ) இயங்கும் இந்தாலஜி அறிஞர் அவையில் 1998, 1999 ஆண்டுகளில் தமிழ் ஒரு செம்மொழி என்று எழுதினேன். இணையத்தில் இந்திய மொழிகள் அறிந்த நிபுணர்கள் அவையில் தமிழைச் செம்மொழி என்று முதன்முதலாக எழுதியதில் அடியேனுக்கும் பங்குண்டு. தமிழ் செம்மொழி (Classical Language of India on par with Sanskrit) என்று எழுதியதைக் கேள்விக்குள்ளாக்கித் திராவிடவியல் பேராசிரியரும் உஸ்மானியா பல்கலை துணைவேந்தர் ஆக இருந்த ப⁴. கிருஷ்ணமூர்த்தி வினாக்கள் எழுப்பினார். உ-ம்: ப்⁴(Bh). கிருஷ்ணமூர்த்தி என்னைக் கேட்ட மடல்: “Some members make it their mission to sing the glory of one language and one culture (?), i.e. Tamil. The pathetic appeal of one list member to place Tamil on the same footing as the Classical languages-- Sanskrit, Persian and Arabic in India--sounds ridiculous. Tamil is a modern language and not a classical language. Classical lgs are not the mother tongues of any segment of natives in India.” (ஜனவரி 13, 1999). திராவிடவியலாளர் ப⁴த். கிருஷ்ணமூர்த்தி முழுமடலையும் பார்க்க:
http://nganesan.blogspot.com/2010/01/hart.html
இணையத்தில் 1998-ல் செம்மொழி விவாதம் எழுமுன்னரே, ஐஏஎஸ் அதிகாரிகள் ‘தமிழ் செம்மொழி ஆகாது. வாழும் மொழி எப்படி செம்மொழி ஆகும்?’ என்று ஏற்கெனவே கொடுத்திருந்த விளக்கம்தான் பேரா. ப்⁴.கி (BhK) மேலைநாடுகளின் அறிஞர் சபைக்கு அறிவிக்கிறார் என்று பின்னர் தெரியவந்தது. 1990களின் பிற்பகுதி தமிழ்நாட்டில் இணையம் பரவாக் காலம் அல்லவா அது? தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாய் பலரும் அரசியலில் செம்மொழிக் கோரிக்கையைச் சொல்லிவந்தாலும் பலன் ஏற்படாத நிலை நீடித்தது. மணவை முஸ்தபா 1981 மதுரை உலகத் தமிழ் மாநாட்டில் இவ் வேண்டுகோளை அந்நாள் முதல்வர் எம்ஜிஆரிடம் வைத்தார். 1995 தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டில் செல்வி. ஜெயலலிதாவிடம் மீண்டும் முன்வைத்தார் [1]. தமிழுக்கு உயராய்வு மையம் அமைத்து அரிய நூல்களை வெளியிட்டுவரும் முனைவர் ஜான் ஜி. சாமுவேல் அவர்கள் மிகச் சிறந்த ஆய்வு ஆவணத்தைத் ’செம்மொழிகளின் வரிசையில் தமிழ்’ என்று தயாரித்து வெளியிட்டார். பார்க்க: முனைவர் ஜான் ஜி. சாமுவேல்
(அ) செம்மொழிகளின் வரிசையில் தமிழ், 1995, 82 பக்கம்,
விற்பனை உரிமை: ஆசியவியல் ஆய்வு நிறுவனம்,
(ஆ) தமிழும் நானும், 1995, 1997, .. - 4 தொகுதிகள்.
எனக்கு 1980களின் கடைசியில் இருந்து ஆசியவியல் நிறுவனப் பணிகளில் ஈடுபாடும், தொடர்பும் ஜான் சாமுவேலால் கிடைத்தது. ப்ரெண்டா பெக் அவர்களின் அண்ணன்மார் சுவாமி கதை ஒலிப்பதிவுகளை ஒலிநாடாவில் இருந்து பெயர்த்து நூலாக்கவேண்டும் என்ற ஆசையை அவர் நிறைவேற்றினார். மேலும், கொங்குநாட்டின் சிறந்த ஒரு நொண்டி நாடகமாகிய “திங்களூர் நொண்டி” (அவிநாசிப் புலவர் பாடியது) மூலச் சுவடியை அளித்தேன். அதனை, ஆங்கில மொழிபெயர்ப்புடன் ஆசியவியல் ஆய்வு நிறுவனம் அழகுற வெளியிட்டுத் தந்தது. அச்சாகாத தமிழ்நூல்களில் ஓர் அரிய படைப்பது. 1998-ல் செயின்ட் லூயிஸ் (மிஸ்ஸௌரி) நகரில் நடந்த பெட்னா மாநாட்டுக்கு ஜான் சாமுவேலை அழைக்க எனக்கு வாய்ப்ப்மைந்தது. 1997-ல் ஆசியவியல் நிறுவனத்தில் கணித்தமிழ், தமிழ் ஆய்வில் சிற்றிலக்கியங்கள் பற்றி உரை ஆற்றியபோதும், 1998-ல் ஜானின் அமெரிக்க வருகையின் போதும் செம்மொழி ஆக்க அதிகாரபூர்வமான முயற்சிகள் பற்றிக் கலந்துரையாடினோம்.
1996-ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, முனைவர் ஜான் சாமுவேல் தயாரித்த வரைவு ஆவணத்தை தில்லியில் கலைஞர் அரசாங்கம் சமர்ப்பித்து வெற்றிகண்டது. ஜான் சாமுவேல் எழுதிய ஆவணம் தமிழைச் செம்மொழி ஆக்க உதவியமை பற்றிக் ‘செம்மொழி கொண்டான்’ கலைஞர் குறிப்பிட்டு, அதில் முக்கியமான பகுதிகளை மேற்கோள் காட்டி அண்மையில் பத்திரிகைகளில் எழுதியுள்ளார். கோவை செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கக் குழுவிலும் ஜான் சாமுவேல் அவர்கள் இடம்பெறுவது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி.
பேரா. ப்⁴கி இந்திய அரசின் செம்மொழி உயர்வாணைக் குழுவில் இடம் பெற்றார். ”செம்மொழி ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாய் இருக்கவேண்டும்” என்ற ப்⁴. கிருட்டிணமூர்த்தி குழுப் பரிந்துரை அரசாணை (G.O - Govt. Order) ஆனது. முதல்வர் கருணாநிதி பரிந்துரையால் தமிழ்நாட்டு அறிஞர் ஒருவர் அக்குழுவில் சேர்த்தப்பட வேண்டும் என்று முடிவானது. முனைவர் வா. செ. குழந்தைசாமி அக்குழுவில் இடம்பெற்ற பின்னர் “செம்மொழி 1500 ஆண்டுகளாவது முற்பட்டதாக விளங்கவேண்டும்” என்று பிற்சேர்க்கை (Amendment) சேர்க்கப்பட்டது. 1000 ஆண்டு என்று கன்னட, தெலுங்கு அறிஞர் செம்மொழி அரசாணையில் போட்டதன் நோக்கம் சில வருடம் கழித்து கன்னடம், தெலுங்கு என்று வரிசையாக ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் சேர்த்துவிடவே என்பதை அனுமானிக்கலாம். 1000 மாறி 1500 ஆண்டு என்று அதிகாரபூர்வமாக ’அமெண்ட்மெண்ட்’ திருந்தியது. பண்டை இந்திய ஆய்வறிஞர் பார்வையில், கன்னடம் கவிராஜமார்க்கம் (கி.பி. 850), தெலுங்கு நன்னய பட்டரின் மாபாரதம் (11-ஆம் நூற்.) பின்னீடாக உள்ளதால் செம்மொழிகள் சம்ஸ்க்ருதம், தமிழ் போல் ஆகுமா? என்ற கேள்வி உள்ளது: "Tamil is the only Indian language which has two levels — a classical level, which is more than 2,000-years-old and the modern spoken level. Sanskrit as a spoken language is virtually extinct. And in this sense Tamil shares a unique status with Greek and Latin since these too have these two components.” தமிழ் “Classical Antiquity" செம்மொழி, கன்னடம், தெலுங்கு “Middle Ages" செம்மொழிகள் என்று கொள்க. மலையாளம் “Modern Era" செம்மொழி என அரசு அறிக்கை தரலாம்.
நண்பர், அறிஞர் ஜி. ஜான் சாமுவேல் செம்மொழி ஆதற்கு ஆற்றிய பணி பரவலாக இணையத்தில் தெரியவில்லை. ’தி இந்து’ ஃப்ரண்ட்லைன் கட்டுரையிலே கூட இல்லை.
S. Viswanathan, Recognising a classic, Volume 21 - Issue 22, Oct. 23 - Nov. 05, 2004
http://www.hinduonnet.com/fline/fl2122/stories/20041105004310600.htm
எனவே, இந்நெடிய மடல் எழுத அவசியமாயிற்று.
இவ் வரலாற்றுச் செய்திகளையும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும், பிரான்சு பாரிஸ், ஜெர்மனி கொலோன் பல்கலையிலும், அமெரிக்காவில் சிக்காகோ (அல்லது) பென்சில்வேனியா பல்கலைகளிலும் தமிழ் ஆய்வுப் பேராசிரியர் பீடங்கள் உருவாக்கத் தமிழ் அமைப்புகளும், மன்றங்களும் நிதிதேடி, தமிழக அரசிடமும் பணம் பெற்று தமிழ் இருக்கைகளை உலகின் உயர்பல்கலைக் கழகங்களில் ஏற்படுத்த வேண்டும் என்பது என் கோரிக்கை. தமிழ்நாட்டில் புகழ்வாய்ந்த பத்திரிகைகளிலும், செம்மொழி மாநாட்டிலும் எழுத ஆவல் மேலிட்டுள்ளேன். தமிழுக்கு உயராய்வு இருக்கைகளை ஏற்படுத்த கேட்டவுடன் தமிழ்மக்கள் கோடிக் கணக்கான ரூபாய்களை அள்ளி வழங்குவர் என்பது உறுதி.
நா. கணேசன்
[1] மணவை முஸ்தபா, தீராநதி (ஜூன் 2009) பேட்டியில் செம்மொழி முயற்சிகளின் முன்னோடியாகத் தமிழ்நாட்டில் செய்தவற்றைக் குறிப்பிட்டுள்ளார். அறிவியல் தமிழுக்கு உழைப்பவர். யுனெஸ்கோ கூரியர் ஆசிரியராய் பணிசெய்த அறிஞர்.
ஐராவதம் மகாதேவன், வா.செ.குழந்தைசாமி, பெரியார், புலவர் குழந்தை, ... போலவே மணவை முஸ்தபா தமிழ் எழுத்துச் சீர்மை ஆதர்வாளர்:
“மணவை முஸ்தபா: தமிழ் எழுத்துக்கள் சீர்திருத்தம் உடனடியாக கட்டாயம் செய்யப்பட வேண்டும். ஏனெனில், 247 எழுத்துக்களில் பெரியார் எழுத்துச் சீர்மைக்குப் பிறகும் 131 எழுத்துக்கள் என்பது, குழந்தைகளுக்கு மொழி மீது ஒரு வெறுப்பை உருவாக்க காரணமாக உள்ளதோ என எண்ண வேண்டியுள்ளது. [...] குறிப்பாக ஒலியை மாற்றாமல் வரி வடிவங்களில் மட்டும் மாற்றங்களைச் செய்யலாம். 31 எழுத்துக்களை மட்டுமே வைத்துக் கொண்டு 247 ஒலியும் வரும்படி தமிழைப் பயன்படுத்த முடியும். “
[2] மணவை முஸ்தபா, செம்மொழி - உள்ளும் புறமும், அறிவியல் தமிழ் அறக்கட்டளை, சென்னை, 104 பக். 2004.
சாலினி இளந்திரையன், தமிழ்ச் செம்மொழி ஆவணம், மணிவாசகர் படிப்பகம், 2005.
கு. வெ. பாலசுப்பிரமணியன், செம்மொழி - ஏன்? எதற்கு? மணிவாசகர்: 2004.
நெல்லை சு. முத்து, அறிவியல் செம்மொழி, மணிவாசகர் படிப்பகம், 240 பக்., 2004.
[3] தென்றல் பத்திரிகையில் ஏப்ரல் 2008-ல் எழுதிய கடிதத்தில்
முனைவர் ஜான் சாமுவேல் அவர்கள் இயற்றிய ஆவணப் பங்கைக் குறிப்பிட்டுள்ளேன்.
http://www.tamilonline.com/thendral/MoreContent.aspx?id=89&cid=16&aid=4817
---------------
முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1919-ம் ஆண்டு ஜுன் மாதம் 22-ம் நாளன்று, திருச்சி டவுன்ஹாலில் பிராமணர் அல்லாதார் மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்த மாநாட்டில், திருச்சி வழக்கறிஞர் டி.சி.தங்கவேலு, ராவ்பகதூர் ஓ.கந்தசாமி செட்டியார், டி.ஏ.ஜி.ரத்தினம், டி.வி.சுப்பிரமணியம், திவான்பகதூர் பி.ராமராய நிங்கார், ராமநாதபுரம் மன்னர், கொல்லங்கோடு மன்னர், தொட்டப்பநாயக்கனூர் ஜமீன்தார், டி.ஆர்.மருதமுத்து மூப்பனார் போன்ற பிராமணர் அல்லாதார் இயக்கத்தின் முன்னணியினர் கலந்து கொண்டனர்.
அந்த மாநாட்டில், பிராமணர் அல்லாதாருக்குத் தனி வாக்குரிமைத் தொகுதி, வகுப்புவாரிப்பிரதிநிதித்துவம், கலப்புத் திருமணம் ஆகியவை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு முக்கியமான தீர்மானம் பின்வருமாறு:-
"சென்னைப் பல்கலைக்கழகமும், அரசுப் பணித் தேர்வாளர்களும்; பாரசீக மொழி, அரேபிய மொழி, வடமொழி ஆகிய மொழிகளுக்குச்சமமாக; செறிவும், செழிப்பும் நிறைந்த மிகப்பழமை வாய்ந்த இலக்கியங்களைக் கொண்டுள்ள தமிழ் மொழியை, செம்மொழியாக அங்கீகாரம் செய்யவேண்டும்.
இவ்வாறு பிராமணரல்லாதார் இயக்கத்தைச் சேர்ந்த நமது நீதிக்கட்சியின் முன்னோர், 1919-ம் ஆண்டிலும்; தமிழவேள் உமாமகேசுவரனார் தலைமையில் அமைந்திருந்த கரந்தைத் தமிழ்ச் சங்கம் கடைசியாக 1923-ம் ஆண்டிலும்; தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றியதற்குப் பிறகு விடுதலைப் போராட்ட வீரரும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், பாகிஸ்தான் பிரிவினையைத் தீவிரமாக எதிர்த்தவரும், உருது, அரேபியம், இந்தி, பாரசீகம், வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்த பன்மொழி அறிஞரும், கவிஞரும், பண்டிதநேருவின் மத்திய அமைச்சரவையில் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவரும், இலவசத் தொடக்கக் கல்வியை அறிமுகப்படுத்தியவரும், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களை அமைத்தவருமான மவுலானா அபுல்கலாம் ஆசாத்; 15.3.1951 அன்று - சாகித்ய அகாடமியை உருவாக்குவதற்காக நடத்தப்பட்ட மாநாட்டில் தொடக்க உரையாற்றியபோது, தமிழ்மொழி செழுமையும், தொன்மையும்மிக்க இலக்கியத்தைக் கொண்டது; அம்மொழியிலுள்ள கவிதைகள் வெளிநாட்டு மொழிகளில் மொழியாக்கம் செய்வதற்குரிய தகுதி படைத்தவை; தமிழ் உண்மையிலேயே ஒரு செம்மொழி என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்; தமிழ் செம்மொழியென அங்கீகாரம் செய்வதற்குரிய தகுதிப்பாடுகள் அனைத்தும் பண்டைக் காலத்தைச் சார்ந்தவை என்று தமிழ் செம்மொழியே என்பதைச் சுட்டிக் காட்டினார்.
1955-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26, 27, 28 ஆகிய தேதிகளில் சிதம்பரம் - அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அகில இந்திய கீழ்த்திசை மாநாட்டில் தலைமையுரை ஆற்றிய பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்; 15.3.1951 அன்று மத்திய கல்வி அமைச்சர் மவுலானா அபுல்கலாம் ஆசாத், சாகித்ய அகாடமியை உருவாக்குவதற்காக நடத்தப்பட்ட மாநாட்டில் ஆற்றிய மேலே குறிப்பிட்ட தொடக்க உரையைச் சுட்டிக்காட்டி, "அவ்வாறு தமிழ்மொழியைச் செம்மொழியென அங்கீகாரம் அளித்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அப்படித் தேவையான அங்கீகாரத்தை இந்தக் கீழ்த்திசை மாநாடு வழங்கவில்லையெனில், வேறு யார் தான் வழங்கமுடியும்? என்று வினாக் கணை தொடுத்தார்.
செம்மொழி வரலாற்றில் அடுத்த கட்டம் 1966-ம் ஆண்டு உருவானது. அதனை உருவாக்கியவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆவார். பாவாணர் நுண்ணிய ஆய்வு ஆராய்ச்சிக்குப் பிறகு, தமிழ்மொழி செம்மொழியே என மொழி அறிஞர்கள் அனைவரும் ஏற்றுப் போற்றும் வகையில், உரிய சான்றுகளுடன் "உலகின் முதன்மையான செம்மொழி என்ற அரிய நூல் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்.
"தமிழ்மொழி-செம்மொழி தகுதிபாட்டுச் சான்று ஆதாரங்கள்:-
தொல் இலமூரியா காலத்தோடு தொடர்புடையது, சந்த ஒலிச் சால்பு, உலகளாவிய உணர்வுப் பெருமிதம், ஆரிய மொழிகளுக்கிடையே, தலைநிமிரும் தமிழின் தரம், சொல்லமைப்பின் தொன்மையும் ஒலிச் சுருக்கமும், தமிழ்மொழியில் உள்ள "அம்மா'' "அப்பா'' என்கிற சொற்கள் பிற பழைமையான மொழிகளில் ஒத்த வடிவங்களில் உள்ளன, எழுவாய் வேற்றுமைக்கு தனி விகுதியின்மை, அடைமொழிகள் பிரிக்கத்தக்கவை - ஆழமுடைமை, தமிழ் சொற்களுக்கு பாலினம் இல்லை, தமிழில் ஒழுங்கு முறையற்ற சொற்கள் இல்லை, தமிழ்மொழி தோன்றிய காலத்தை கண்டறிய இயலும், தமிழில் காணப்படும் சொற்கள் இயற்கையான காரண காரிய தொடர்புடையவை, ஒருமை, இருமை, பன்மை என்று வடமொழியில் இருக்க, தமிழில் ஒருமை, பன்மை என்று இரண்டைப் பொருத்தமாகக் கொண்டு இருத்தல், தமிழின் தனித்தன்மையும் - இயற்கைத் தன்மையும், உயர்ந்த இலக்கியத் தரமிகுந்த நூற்கோவைகள்.
பாவாணர் எடுத்துரைத்த அசைக்கமுடியாத ஆதாரங்கள் தமிழ் ஆர்வலர்களையும், அறிஞர்களையும் மட்டுமல்லாமல், பிறமொழி அறிஞர்களையும் குறிப்பாக, வடமொழி மற்றும் ஆங்கிலப் புலமை மிக்கோரையும் பெரிதும் ஈர்த்து ஏற்றுக் கொள்ளச்செய்தன.
பாவாணரின் தமிழ்மொழி மேதைமையையும், ஆழ்ந்த தமிழ்ப்பற்றினையும், தமிழ் செம்மொழியே என அனைவரும் ஏற்றுக்கொள்வதற்கு அவர் எடுத்துக் கொண்ட சீரிய முயற்சிகளையும் பாராட்டிப் போற்றிடும் வகையில்; கழக அரசு 1974-ல், "செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்'' ஒன்றினை நிறுவி, அதன் முதல் இயக்குநராக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரை நியமித்தது. பிறமொழித் தாக்கத்திலிருந்து தமிழைப் பாதுகாக்கத் தமிழ்க்கடல் மறைமலையடிகளார் வழியைப் பின்பற்றி; "உலகத்தமிழ்க் கழகம்'' கண்ட பெருமைக்குரியவர் பாவாணர். பாவாணர் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்கூட; மதம் - குலம் இவற்றைக் கடந்து தமிழராக அவர் வாழ்ந்ததால், தம் பிள்ளைகளின் பெயர்களை; நச்சினார்க்கினிய நம்பி, சிலுவையை வென்ற செல்வராயன், அருங்கலைவல்லான் அடியார்க்கு நல்லான், மடந்தவிர்த்த மங்கையர்க்கரசி, மணிமன்ற வாணன், பைந்தமிழ் வளர்த்த பாண்டியன் - என இனிய தனித்தமிழில் வழங்கினார். இருபத்திமூன்று மொழிகளைக் கற்றுத் தேர்ந்து, பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தவர் பாவாணர்.
அத்தகைய பாவாணரின் நினைவைப் போற்றிடும் வகையில் கழக அரசு, 1996-ம் ஆண்டு அவரது படைப்புகள் அனைத்தையும் அரசுடைமையாக்கி, அவரது மரபுரிமையர்க்கு ரூ.20 லட்சம் பரிவுத்தொகையை வழங்கியதோடு; அவரது நினைவு சிறப்பு அஞ்சல்தலையை, மத்திய அரசின் மூலம் 18.2.2006 அன்று வெளியிட்டுப் பெருமைகொண்டது. அதுமட்டுமல்லாமல், மதுரை மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தில், பாவாணருக்கு ரூ.39 லட்சத்து 60 ஆயிரம் செலவில் மணிமண்டபமும், அதில் பாவாணரது முழுஉருவச் சிலையும் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டு, நான் 30.10.2007 அன்று திறந்து வைத்துச் சிறப்பு செய்தேன்.
அதன்பிறகு, நீண்ட இடைவெளி ஏற்பட்டு விட்டது. தமிழைச் செம்மொழியாக அறிவித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை முன்வைத்து, தமிழ் ஆர்வலர்கள் மத்தியிலோ, தமிழ் அமைப்புகள் மத்தியிலோ, பெரும் கருத்துருவாக்கம் எதுவும் ஏற்படவில்லை.
அருமை நண்பர் எம்.ஜி.ஆர். தமிழக முதல்-அமைச்சராக இருந்தபோது, மதுரையில் 1981-ம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டையொட்டி, தமிழைச் செம்மொழியாக அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பற்றியும், அந்த முயற்சிகளுக்கு நேர்ந்த முடிவு பற்றியும், வளர்தமிழ்ச்செல்வர் மணவை முஸ்தபா தனது "செம்மொழி - உள்ளும் புறமும்'' என்ற நூலில் எழுதியுள்ளார்.
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில், இரண்டாம் நாள் காலை, நீதியரசர் மகராஜன் தலைமையில் நடைபெற்ற பொதுநிலைக் கருத்தரங்கில், மணவை முஸ்தபா பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவர் தனது உரையில், "செம்மொழிக்குரிய அனைத்துத் தகுதிப்பாடுகளும் இருந்தும், அதற்கு அரசு அங்கீகாரம் அளிக்காததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பற்றி'' விரிவாகப் பேசினார். அவரது உரையைக் கேட்ட எம்.ஜி.ஆர்., மணவை முஸ்தபாவிடம் செம்மொழி தொடர்பாக அரசுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அதற்கிணங்க, 1982-ம் ஆண்டில், மணவை முஸ்தபா செம்மொழி கோரிக்கை மனுவை, தமிழக அரசின் பரிசீலனைக்கு அனுப்பினார். அந்த மனு மீது அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டது என்பது குறித்து யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.
1984-ல் தனக்கு `கலைமாமணி விருது' அளித்ததற்கு நன்றி கூறும் முறையில், முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், மணவை முஸ்தபா செம்மொழி பற்றியும் நினைவூட்டினார். அது அரசுத் துறைச் செயலாளருக்கு அனுப்பப்பட; அன்றைய அரசுச் செயலாளர், அக்கோரிக்கை மனு மீது எழுதிய குறிப்பில், "மணவை முஸ்தபா கூறுவது போல், தமிழைச் செம்மொழியாக்கினால், தமிழைச் செத்த மொழிகளின் பட்டியலில் சேர்த்ததாகிவிடும் என்பதால், இக்கோப்பு இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது'' என்ற முறையில் குறிப்பு எழுதி, கோப்பையே முடித்து வைத்துவிட்டதாக மணவை முஸ்தபா கையறுநிலை கசியக் கசிய கண்ணீர் மல்கிட தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
செம்மொழி கோரிக்கைக்கு இந்த `கதி' ஏற்பட்டதற்கு பிறகும், இந்த களத்தில், யாரும் கவனம் செலுத்தவில்லை. மாநாடுகளிலோ, கருத்தரங்குகளிலோ, செம்மொழி கோரிக்கை முன்வைக்கப்படவில்லை.
1995-ம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற எட்டாம் உலகத்தமிழ் மாநாட்டின்போது, தமிழ்ச் செம்மொழிக் கோரிக்கை, அப்போதைய இந்தியப் பிரதமர் நரசிம்மராவ் முன்னிலையில் வைக்கப்பட்டதாகவும்; ஆனால் பிரதமர் அக்கோரிக்கை தொடர்பாக எவ்வித கருத்தையும் வெளிப்படுத்தாமல், தன்னுடைய உரையை நிறைவு செய்தார் என்றும் புலவர் த.சுந்தரராசன் (பொதுச் செயலாளர், தலைநகர்த் தமிழ்ச்சங்கம், சென்னை) கட்டுரை ஒன்றில் மிகுந்த கவலையுணர்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்'' என்று தொடங்கும் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை எழுதிய பாடலை, 1970-ம் ஆண்டில் `தமிழ்த்தாய் வாழ்த்துப்' பாடலாக ஆக்கிய பெருமை, கழக அரசுக்கு என்றென்றும் உண்டு. அதைப் போலவே, தமிழர்களின் நலன் காக்க, நாளும் பாடுபடும் கழக அரசு, தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் பாடுபடுவதை எந்த நிலையிலும் நிறுத்தாது என்பதற்கு உதாரணம்தான், நான்காம் முறையாக கழக அரசு பதவியேற்றபோது, தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறைக்காக ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கியது; அந்தத்துறை, அமைச்சர் முனைவர் தமிழ்க்குடிமகன் தலைமையில், 13.5.1996 முதல் செயல்படத் தொடங்கியது.
புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட அந்தத் துறையின் தலையாய முதல் பணியாக, தமிழைச் செம்மொழி என அறிவிக்கக் கோருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று நான் வழங்கிய அறிவுரைகளையொட்டி; 20.6.1996 அன்று தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் தலைமையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி, சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ப.க.பொன்னுசாமி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் - முனைவர் ச.அகத்தியலிங்கம், முனைவர் அவ்வை நடராஜன், முனைவர் சி.பாலசுப்பிரமணியம்; திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் ச.முத்துக்குமரன், ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ஜி.ஜான்சாமுவேல், மணவை முஸ்தபா, தமிழ்வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில்; தமிழ்மொழியைச் செம்மொழியென அறிவிக்கப்படுவது தொடர்பாக, ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் சி.ஜான்சாமுவேலால் தயாரிக்கப்பட்ட வரைவு அறிக்கை பரிசீலிக்கப்பட்டு, ஒரு சிலமாற்றங்களுடன் ஏற்கப்பட்டு, மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டதோடு; தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழக ஆட்சிக் குழுக்களின் பரிந்துரைகளையும் பெறலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
தமிழ் செம்மொழி என அறிவிக்கப்படுவதற்குரிய அடிப்படைத் தகுதிகள் அனைத்தையும் பெற்றிருக்கிறது என்பதற்கான வலுவான ஆதாரங்களைக் கொண்டுள்ள அறிக்கை என்பதாலும்; தமிழ் செம்மொழி என அறிவிக்கப்படுவதற்கு அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும், அரசளவிலும், கழக அரசால் மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சி என்பதாலும்; தமிழ் ஆர்வலர்களும், கழக உடன்பிறப்புகளும் அதனைப் படித்தறிந்து நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையை, தமிழாக்கம் செய்து, அதன் முக்கியப் பகுதிகளை அடுத்த கடிதத்தில் வழங்குகிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்
-------------
ஆய்வரங்க குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம் (ஜன. 8, 2010):
கோவையில் ஜூனில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடக்கிறது. இதில் உலக தமிழறிஞர்கள் பங்கேற்பது குறித்து திட்டமிட ஆய்வரங்க அமைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதன் தலைவராக இலங்கை பேராசிரியர் சிவதம்பி, இணை தலைவர்களாக அவ்வை நடராசன், பொற்கோ, செயலாளராக கனிமொழி எம்பி, ஒருங்கிணைப்பாளராக தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் ராசேந்திரன் உள்ளனர். ஆய்வரங்க பணிகளை திட்டமிட, ஆய்வுக் கட்டுரைகளுக்கேற்ப அமர்வுகளை வரையறை செய்ய ஆய்வரங்க அமைப்புக் குழுவுக்கு ஆலோசனைக் குழு, ஆய்வரங்க குழு உறுப்பினர்களை முதல்வர் அறிவித்துள்ளார்.
ஆலோசனைக் குழு உறுப்பினர்கள்: ஜார்ஜ் எல்.ஹார்ட் (அமெரிக்கா), கா.மீனாட்சி சுந்தரம், எழுத்தாளர் ஜெயகாந்தன், ஆஷர் (இங்கிலாந்து), அலெக்சாண்டர் டுபியன்ஸ்கி (ரஷ்யா), தாமஸ் மால்டன், லேமன், டாக்மார் ஹெல்மன் ராசநாயகம் (ஜெர்மனி), வாசெக் (செக்கோஸ்லேவியா), டத்தோ மாரிமுத்து (மலேசியா), நாராயணசாமி திருமலை செட்டி(மொரீஷியஸ்),திண்ணப்பன் (சிங்கப்பூர்), ரவிகுமார் எம்எல்ஏ.
ஆய்வரங்க குழு உறுப்பினர்கள்: தமிழண்ணல், கா.வேழவேந்தன், க.ப.அறவாணன், இ.சுந்தரமூர்த்தி, அ.அ.மணவாளன், சோ.ந.கந்தசாமி, சம்பகலட்சுமி, எ.சுப்பராயலு, முத்துக்குமாரசாமி, சிற்பி பாலசுப்பிரமணியம், ஜான் சாமுவேல், க.நெடுங்செழியன், இ.மறைமலை, க.ராமசாமி, கரு.அழு.குணசேகரன், வீ.அரசு, ந.தெய்வசுந்தரம், வ.ஜெயதேவன், ரவிச்சந்திரன், இரா.வேங்கடாசலபதி, இரா.மோகன்.
------------
பன்னாட்டு அறிஞர்கள் உலகின் செம்மொழிகளில் ஒன்றாக தமிழ்மொழியை ஏற்றுள்ளனர்
(28-டிசம்பர்-2009)
முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நான்காவது முறையாக நான் தமிழக முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு; கழக அரசின் சார்பில், தமிழ் செம்மொழியே என உரிய முறையில் நிலைநாட்டி, மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பதற்கென; ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ஜான்சாமுவேலால் தயாரிக்கப்பட்ட; முனைவர் ச.அகத்தியலிங்கம், முனைவர் வா.செ.குழந்தைசாமி, திரு.மணவை முஸ்தபா, முனைவர் அவ்வை நடராஜன், முனைவர் பொற்கோ போன்ற வல்லுநர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரைவு அறிக்கையின் முக்கியப் பகுதிகள் பின்வருமாறு:-்
உலகச் செம்மொழிகளின் வரிசையில் தமிழுக்கு ஈடில்லாத ஒரு தனித்தன்மையுண்டு. ஈராயிரம் ஆண்டுப் பழமைவாய்ந்த செவ்விய இலக்கியங்களின் களஞ்சியமாகவும், மூத்த திராவிட இலக்கிய அணிகலன்களின் கவசமாகவும் தமிழ்மொழி திகழ்கிறது. எண்ணற்ற கவிதைகள்-செய்யுள்கள்- பாடல்களின் கோவைகளைக் கொண்ட இம்மொழி கிறித்துவின் முதலாண்டுக்கு முன்னேயே நிலைபெற்றதாகும். தங்குதடையின்றிப் பொங்கும் வளமையுடனும், பொலிவார்ந்து ஓங்கிய வளர்ச்சியுடனும் நூற்றாண்டுகள் பல கடந்தாலும் இன்றும் தன் சீரிளமைத் திறம் குன்றாமல் தமிழ் மொழி சிறந்து விளங்குகிறது.
பொங்கித்ததும்பும் நதியின் போக்கிற்கேற்பப் பல்வேறு இணைப்புகள், பகிர்வுகள் வாயிலாகத் திராவிட மொழிகளின் தொகுப்பில் உயரிய இடம் பெறும் மொழியாகத் தமிழ்மொழி மிளிர்கிறது. இந்தியாவின் வடமாநிலங்களில் வழங்கிய சமஸ்கிருத மொழிக்கு நிகராக, உயிரோட்டத்தோடு உலவி வரும் மொழியாக நிலைபெற்று, இந்தியப் பண்பாட்டு மாறுதல்களுக்கு இசைவாகப் பிறமொழிகளுடன் தக்க உறவினையும், அதே சமயம் தன்னுடைய தனித்தன்மை வாய்ந்த இயல்புகளைத் தக்கவைத்துக் கொண்டும், ஆற்றல் குன்றாத நிலையில் தமிழ்மொழி திகழ்கிறது.
இந்திய ஐரோப்பிய மொழி வரிசையில், செல்தியம், செருமானியம், இலத்தீன் மற்றும் கிரேக்க, இரானிய மொழிக் குழுமத்தின் வேர்த் தொடர்புகளைத் தமிழ் மொழியிலும் கண்டு அறிஞர் கால்டுவெல் ஒப்பீடு செய்துள்ளார். அதேபோல, தாமஸ் பர்ரோ பின்லாந்திய மொழிக்கும், திராவிட மொழிகளுக்கும் நுண்ணிய தொடர் இணைப்புகளைக் கண்டார். அங்கேரிய மொழிக்கும் திராவிட மொழிக்கும் தொடர்புறவை ஜி.எஸ்.பாலிண்ட் ஆராய்ந்து கண்டார். ஹப்பர், சுசுமோ ஓநோ ஆகியோர் சப்பானிய, கொரிய ஒப்பாய்வுகளைத் தமிழ்மொழியோடு ஆராய்ந்து கண்டுள்ளனர்.
தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் ஆறு கோடித் தமிழரின் அன்றாட வாழ்வில், நடனமிடும் தமிழ்மொழி; இலங்கையிலும், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, மியான்மர் நாடுகளிலும் மோரீசு, டிரினிடாட், பிஜிதீவுகளிலும் வாழும் மக்களால் பேசவும், எழுதவும் படுகிறது. இலங்கையரசும், சிங்கப்பூர் அரசும், தமிழ்மொழியினை ஆட்சி மொழியாகவும் அறிவித்துள்ளன.
எகிப்திய, சுமேரிய, சிந்துவெளி பண்பாட்டுக்கு இணையாக கலையிலக்கிய பண்பாட்டுச் செல்வங்களைத் தாங்கி விளங்கும் தமிழ்மொழி, தொல் திராவிட மரபையும், தொல் தமிழிய வளர்ச்சியையும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வாளர்கள் கணக்கிடுவதற்கு வழிவகுக்கிறது. இந்நிலையிலும், இவ்வளவு தொடர்பிருந்தும் இன்றுவரை தொன்மைக்குத் தொன்மையாய், இன்றும் வாழும் ஒரே இயல்பும் திறனும் கொண்டது தமிழ்மொழி ஒன்றேயாகும்.
தமிழ்மொழியையும், தமிழின் இலக்கியப் படைப்புகளில் பொதிந்துள்ள கோட்பாடு களையும், இலக்கண விதிகளையும் நுணுக்க மாக வரையறுக்கும் வகைப்பாடு ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே தொடங்கியுள்ளது. இதனால் இலக்கியச் செய்யுள் படைப்புகள் செம்மையாக அமைவதற்குத் தொல்காப்பியம் வளமூட்டியுள்ளது. தொல்காப்பியத்தில் காணப்படும் விதிகள், நெறிமுறைகள், ஒலியியல், மொழியியல் பயன்பாடுகள், அயற்சொற்களைக் கையாள்வதற்கு உருவாக்கிய விதிப்பாடுகள் முதலியன தெளிவாக உள்ளன. இதனால் தமிழ்மொழி பயனுடைய மேம்பாட்டைப் பெறுதற்கு இடந்தருகிறது என்று குறிப்பிட்டுள்ளனர். பழமைவாய்ந்த, செப்பமுற வளர்ந்த தமிழ்மொழியை இப்போது செம்மொழி என்று நாம் குறிப்பிடும் சிந்தனைக்கு, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே இம்மண்ணில் வாழ்ந்த அறிஞர்கள் உரமூட்டினர்.
கிரேக்க மொழியுடன் தமிழ்மொழியாளரின் உறவு தொடங்குவதற்கு முன்னரே, தமிழ்மொழி செம்மொழித் தகுதியை அடைந்துவிட்டது என்று கில்பர்ட் சிலேட்டர் குறிப்பிடுகிறார். தமிழ்மொழி கிரேக்க மொழியை விடச் செறிவானதென்றும், இலத்தீன் மொழியைவிட மேன்மையானது என்றும், ஆங்கிலம் மற்றும் செருமன் மொழியைவிட ஆற்றல் வாய்ந்தது என்றும் டாக்டர் வின்சுலோ குறிப்பிட்டுள்ளார். பிரெஞ்சு இந்தியவியல் அறிஞர் பியரி மெய்லியின் கருத்துப்படி, செம்மொழித் தமிழின் சங்கப் பாடல்கள், கிரேக்க மொழியின் நுட்பமான கவிதைத் தொகுதிகளுக்கு அறைகூவலாக விளங்குகின்றன.
தொடக்க நிலைகளில் கூட, வால்டர் எலியட், எல்லீசு கோவர், வின்சுலோ, கால்டுவெல், போப், வின்சன் ஆகியோர் தாங்கள் வாழ்ந்த காலத்திலும் திராவிடத் தமிழ்ப் பண்பாட்டாய்வு பொதுவாக புறக்கணிக்கப்பட்டேயிருந்தது என்பது பற்றிய தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளனர். ஆங்கிலேய அரசு தமிழ் இலக்கியத்தை புறக்கணித்தது பற்றி டாக்டர். ஜி.யு.போப், 1910-ஆம் ஆண்டிலேயே தெரிவித்தார். மிகத் தொன்மையான, வளம்மிக்க, பண்பட்ட தமிழ்மொழி எம்மொழிக்கும் சிறப்பில் குறைந்ததன்று என்றபோதிலும்; இங்கிலாந்துப் பேரரசின் ஆட்சியிலிருந்து தொலைவில் உள்ள ஒரு பகுதியில் வாழும் மக்களால் பேசப்படும் ஒரு மொழி என்றே, தமிழ் மொழியைப் பெரும்பான்மையான மக்கள் நினைக்கின்றனர்.
நம்முடைய இந்திய அரசோ, நம்முடைய பல்கலைக் கழகங்களோ தமிழ் இலக்கியத்தின் மாண்பை முழுமையாக அறியவில்லை. எனவே, தென்னிந்திய மொழிகள் குறித்து ஆய்வு செய்பவர்கள், ஆழ்கடலில் முத்துக்களை அலைந்து தேடுபவர்களைப் போன்ற அரிய உழைப்பாளர்களாக உள்ளனர்.
புவியியல் வகையில் பரந்து விரிந்த இந்திய நாட்டின் மொழி என்ற வகையிலும், திராவிட இனம் சார்ந்த, சமூக நலனில் அக்கறையுள்ள ஒரு மொழி என்ற வகையிலும், அமெரிக்காவிலும் தமிழைப் படிக்கத் தொடங்கினர். தமிழ்மொழி, பென்சில்வேனியா, சிகாகோ, கான்சாஸ் ஆகிய பல்கலைக் கழகங்களிலும், கோடைப் பள்ளிகளிலும் மொழியைப் பயிற்றுவிக்கும் திட்டங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
பன்னாட்டு அறிஞர்களும், நம்முடைய தமிழியல் ஆய்வாளர்களும், இந்திய பண்பாட்டுக் கூறுகளை முழுமையாகவும், முற்றிலுமாகவும் புரிந்துகொள்வதற்குத் தமிழாய்வு மிகவும் இன்றியமையாததென்பதை உணர்ந்துள்ளனர். இந்தியத் திருநாட்டின் பண்பாட்டுக்கலை வளத்தை, முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு வடமொழி ஆய்வு மட்டும் போதுமானதல்ல என்றும்; திராவிட மொழிகளில் மிகத் தொன்மையான தமிழ்மொழியின் வளம்மிக்க கலைப் பண்பாட்டு இலக்கியக் கூறுகளை கருத்தில் கொண்டால்தான்; இந்தியப் பண்பு குறித்த எந்த ஒரு ஆய்வும் முழுமையாகும் என்றும் அறிஞர்கள் ஒருமித்த கருத்தை உறுதி செய்கின்றனர்.
இந்திய மொழிகள் குறித்து, புகழ்பெற்ற அறிஞரான டாக்டர் சுனித்குமார் சட்டர்ஜி பின்வருமாறு தன் கருத்தைத் தெரிவித்தார். (வங்கநாட்டுப் பேராசிரியர் சுனித்குமார் சட்டர்ஜி தமிழார்வத்தால் தன் பெயரை `நன்நெறி முருகன்' என மாற்றிக் கொண்டதும் நாம் நினைக்கத்தக்கது). `தற்போதைய இந்தியப் பண்பாடு மற்றும் சமய தத்துவத்தைப் பொறுத்தவரையில் திராவிட மொழியே பாவு நூலாகவும், ஆரியமொழி ஊடிழையாகவும் உள்ளன. இந்தியப் பண்பாட்டுச் செல்வத்துக்கு திராவிடர்கள் ஆற்றிய பங்கு ஐம்பது விழுக்காட்டுக்குக் குறையாதது' என்றும் அவர் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்ச்சங்க இலக்கியம்தான் செம்மையான, நவீனமான இந்திய இலக்கியமாகும். முந்தைய வடமொழி நூல்களைப் போன்று பழமையான தோடு இன்றைய நவீன படைப்புகளுக்கும் ஈடுகொடுத்து தொடர்ந்து வாழ்ந்து வருகிறது. அறிஞர் ஏ.கே.இராமானுசன் `இலக்கிய இயற்கையடைவு' என்ற தன் நூலில் இந்தியாவின் இரண்டு செம்மொழிகளுள் ஒன்றான தமிழ் மட்டுமே, சமகால இந்திய நிகழ் மொழியாகும் என்றும்; இது கடந்தகாலத் தொல் பழமையோடு தொடர்ந்து வழக்கு மொழியாக மக்களிடையே ஏற்றுக்கொள்ளத்தக்கதாக உள்ளது என்றும் காட்டியுள்ளார்.
சங்க இலக்கியங்கள் புகழ்பெற்ற காலப்பழமை கனிந்த தமிழ்ப்பாடல்களாகச் செம்மையுடன் விளங்குவதற்கு, மூன்று காரணங்களை, டாக்டர் கமில் சுவலபில் தெரிவிக்கிறார். முதலாவதாக, நம்முடைய தேசிய இலக்கியங்களின் சில பகுதிகளை நாம் பாராட்டுவதைப் போன்று; புகழ்பெற்ற சங்கப் பாடல்களை, தமிழறிஞர்களும், வரலாற்று வல்லுநர்களும் திறனாய்வாளர்களும் செம்மையானது என்று பாராட்டுகின்றனர். இரண்டாவதாக, இது ஒரு முற்றாக `நிறைவெய்திய' இலக்கியத் தொகுப்பாக இருந்து வந்துள்ளது. இது இன்றும் உயிர்ப்பான வாய்மொழி மரபில் துடிப்போடு வழங்கப்பெறுகிறது.
காலத்திற்கேற்ப மாற்றம் பெறமுடியாத விழுமிய சொற்களைக் கொண்டதால் `உறைந்த நிலை மாறாத கவிதை' வடிவில் உள்ளன.
மேலும் இது செம்மையான மரபு வழியின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது. மூன்றாவதாக, ஒரு மொழிசார்ந்த யாப்பிலக்கணம் மற்றும் புலனெறி சார்ந்த முழுமைபெற்ற வரம்போடு உள்ளது. முழுமையான, நிறைவான, ஈடிணையற்ற பண்பாட்டின் இலக்கியத் தொடராகவும், பண்பாட்டின் முடிமணியாகவும் இவை உள்ளன. இவ்வகையில், செம்மையான வடிவமைப்புடையதாக ஒரு செவ்விய இலக்கியமாக உள்ளது.
திராவிடக் குடும்ப மொழிகளில் தலையாய மொழி என்ற வகையில், இது தனியிடம் பெற்றுள்ளதால், பல நூற்றாண்டுகளைக் கடந்தும் இன்றும் என்றுமுள தென்தமிழாக நிலைத்து நின்று; வளர்ச்சியையும், மேன்மையையும் பெற்று அனைத்தையும் அரவணைத்து அனைவருடனும் ஒன்றிக் கலந்து வந்துள்ளது. ஏனைய திராவிட மொழிகளைப் போன்று, இந்திய ஐரோப்பிய மொழிகள் மற்றும் கீழை நாட்டு மொழிகளின் அம்சங்களுடன், தொடர்புற்றிருந்த ஒப்புமையையும் வெளிப்படுத்துகிறது. இருபத்தைந்து மொழிகளுக்கு மேற்பட்ட திராவிடக் குடும்ப மொழிகளில் இதுவே முதன்மையான மொழியாகும்.
தமிழ்மொழியிலுள்ள சொற்களின் வேர்களை, உலகின் அனைத்துச் செம்மொழிகளிலும் காணலாம். இது, போர்த்திறம் கொண்ட புறப்பாடல்களையும், உயரிய காதல் கனிந்த அகப்பாடல்களையும் மற்றும் அறநூல்களையும் சிறந்த படைப்புகளாக இலக்கியத் தொகுப்பாகப் படைத்துள்ளது. சமயம் சாராத உலகளாவிய மனித நேயம் பற்றி இவ்விலக்கியங்கள் கூறுகின்றன. சமய உருக்கம் கொண்ட பக்தி சார்ந்த பாடல்களின் தொகுப்பும் இம்மொழியின் செல்வமாகும். இந்த நாட்டில் இன்றுள்ள அனைத்து மொழிகளிலும் நிலையான தமிழ் முத்திரையைப் பொறித்துள்ளது.
கடந்த ஐம்பதாண்டுகளாகவும் அல்லது அதற்கு மேலாகவும், அரப்பா - மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சியைத் தொடர்ந்து சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், ஒட்டுமொத்த இந்தியப் பண்பாட்டிற்குத் தமிழ் அல்லது திராவிட மொழி பேசும் மக்களின் கணிசமான, குறிப்பிடத்தக்க பங்களிப்பு அனைவராலும் கவனிக்கத்தக்க அளவுக்கு உணரப்பட்டு வருகிறது. மொகஞ்சதாரோ என்ற இடத்தைக் கண்டுபிடித்த பேராசிரியர் ஆர்.டி.பானர்ஜி `ஆரியர்கள் வருகை புரிந்த காலத்திற்குப் பல நூறு ஆண்டுகளுக்கும் முன்னரே அமைந்திருந்த, சிந்துவெளி நாகரிகமானது, ஆரிய நாகரிகத்திற்கும் முந்தைய அதிசய நாகரிகம் என்பதை நிலைநிறுத்தியுள்ளது என்றும்; அம்மக்களைத் திராவிடர்கள் அல்லது திராவிட இனத்தில் மூத்தவர்கள் என்று தென்னிந்தியாவில், திராவிட மொழிகளைப் பேச்சுவழக்காகக் கொண்டு வாழும் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாகப் பின்னர் சுட்டிக்காட்டப் பட்டது' என்றும் எழுதியுள்ளார்.
தமிழர்கள், தம் இலக்கிய இலக்கணக் கோட்பாட்டினை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மிகவும் திறம்பட மேம்படுத்தியுள்ளனர் என்பதும், இது உலகில் உள்ள எந்த வொரு செம்மொழிக்கும், எந்த வகையிலும் சளைத்தது அன்று என்பதும் ஐயத்திற்கிட மின்றி அறுதியிடப்பட்டுள்ளன. தமிழ்மொழி சில சொற்களை வடமொழியிலிருந்து பெற்றிருந்தாலும், அவையனைத்தும் தமிழ்ச்சொற்களாகவே கொள்ளப்பட்டதால் அல்லது தமிழாக்கப் படுவதால், தமிழ்மொழியானது தன் தனித்தன்மையையும், அமைப் பொழுங்கையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
சொல்லமைவு நுணுக்கத்தைப் பெருமளவில் வடஇந்திய மொழிகளுக்குத் தமிழ்மொழி வழங்கியுள்ளதை முனைவர் பர்ரோ, பட்டியலிட்டுள்ளார். இந்தியப் பண்பாட்டிற்குத் தமிழ்மொழி மிகப்பெரிய அளவில், பங்களிப்புச் செய்தபொழுதும், உரிய தகுதியினைப் பெறத் தாமதமாகிவிட்டது. செனகலிலுள்ள டாக்கர் பல்கலைக்கழகத்தில், செம்மொழித் துறையில், தமிழ்மொழி, அரேபியமொழி, பாரசீக மொழி, வடமொழி ஆகியவை செம்மொழிகளாகப் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், நம்முடைய பல்கலைக் கழகங்களில் நீண்டகாலத்திற்கு முன்னரே தமிழ்மொழி, இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, அரேபிய மொழி, பாரசீகமொழி, வடமொழி ஆகிய மூன்று மொழிகளே செம்மொழிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தன
ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், தமிழறிஞர் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார் தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழி என்று குறித்துக் காட்டி தமிழுக்குச் செம்மொழி மகுடம் சூட்டவேண்டும் என்று விழைந்தார். இந்த வேண்டுதல் அறிஞர்கள் பலரின் உள்ளங்களில் எழுச்சிஞ்ட்டியது.
மரபுரிமைக் களஞ்சியமாக இலக்கிய வரையறையைக் கொண்டுள்ள மொழி சார்ந்த சமுதாயம் ஒவ்வொன்றும், சமூக மற்றும் இலக்கியம் சார்ந்த சூழலின் குறிப்பிட்ட காலத்தினைச் செம்மொழிக் காலமாகக் குறிப்பிடுகிறது. அறிஞர் சிலரின் கூற்றுப்படி, கி.மு.500-ல் இருந்து 300 வரைப்பட்ட காலமானது, கிரேக்கர்களின் செம்மொழிக் காலம் ஆகும். கி.மு.500 முதல் கி.பி.1110 என்ற வரையறையில் வடமொழியின் செம்மொழிக் காலமெனக் கருதப்படுகிறது.
சங்க காலம் முதல் கி.பி. ஆறாம் நூற்றாண்டைய எல்லையுட்படும் காலத்தைச் செம்மொழிக் காலமாகக் குறிப்பிடலாம். ஏனெனில், இக்காலத்தில் தான் ஈடிணையற்ற இலக்கியமும், மொழிசார்ந்த உயர்ந்த சிந்தனைகளும் மலர்ந்தன. இத்தகைய பங்களிப்புகள், திராவிடத் தொன்மையினையும் விழுமிய செழுமையினையும் உருவாக்கின. திராவிடர்களின் சிறந்த பண்பாட்டுச் சாதனைகளைக் கணக்கில் கருதத் தவறினால், இந்தியப் பண்பாட்டு மரபு குறித்த எந்தவொரு ஆய்வும் முழுமையற்றதாக குறையளவிலேயே இருக்கும் என்று, புகழ் வாய்ந்த ஆய்வாளர்கள் பெரும்பாலானோர் வலியுறுத்துகின்றனர்.
பன்னாட்டு அறிஞர்கள், உலகின் செம்மொழிகளில் ஒன்றாகத் தமிழ்மொழியை இப்போது ஏற்றுள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்கள், வடமொழி, அராபிய மொழி மற்றும் பாரசீக மொழியுடன் பண்டைய தமிழ்மொழியைச் செம்மொழியாக அறிவிப் பதற்கு முன்வந்துள்ளன.
வடமொழியறிஞர் சி.ஆர்.சங்கரன், ஈராயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தொல்காப்பிய நூலில் உள்ள ஒலியியல் குறித்த பிரிவை ஆராய்ந்து தாம் கண்ட முடிவைப் பின்வருமாறு எழுதுகிறார். மொழியின் உள்ளார்ந்த ஒலி குறித்த ஆய்வுமுறைக்குச் சிறப்பளிப்பதும் ஒலியின் வடிவம், வகைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றை உறுதிப்படுத்தும் முயற்சி, சொற்களுக்குப் பொருள்கள் காண்பதில் சிறப்பான இடத்தைக் கொண்டிருக்க வேண்டும். இது பாணினியின் அஸ்டதி யாதியில் கூடக் காணப்படவில்லை என்று மதிப்பிட்டுள்ளார். மொழிகள் குறித்த வரலாற்றுக்குப் பண்டைய தமிழ் இலக்கண மரபார்ந்த நெறி மிகவும் போற்றத்தக்க பங்களிப்பாகக் குறிப்பிடலாம்.
இந்தியாவில் உள்ள மொழிகளில் தனித்தன்மை பூண்ட வீறுகொண்டதாகத் தமிழ் விளங்குகிறது. செழுமையான, அகப்புற இலக்கியக் கோட்பாடுகளையும், யாப்பிலக் கணம், செய்யுளியல், இலக்கண வரம்பு களையும் உள்ளடக்கியதாகத் தமிழ் இலங்குகிறது. வடமொழிச் செம்மொழியுடன் சேர்ந்து ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளாக அமைந்திருந்தாலும் வடமொழியின் செல்வாக்கினால் எவ்விதச் சீர்குலைவுமின்றி, வழக்கொழியாமல் தமிழ் தனித்து நின்று ஈடில்லாத மொழியாகத் தன்னைக் காத்துள்ளது.
உலகளாவிய மரபிலக்கிய நற்கூறுகள், தொன்மை, வளமை, எளிமை முதலிய சிறப்பியல்புகளைப் பெற்றிருந்தபோதிலும் கூட, இந்நாள்வரையில் தமிழ்மொழி வட்டார மொழியாகவே கருதப்பட்டு, புதிய இந்திய மொழிகளின் வரிசையில்தான் வகைப் படுத்தப்பட்டது. இந்திய மொழிகளில், வடமொழி தவிர, தமிழ்மொழி போன்ற தொல்மரபு கொண்ட மொழி வேறெதுவும் இல்லை. ஒருமைவாய்ந்த நம் பண்பாட்டின் உயர்ந்த மரபு மாட்சியைப் பேணுவதும், காப்பதும் இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்பதை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வரையறை செய்துள்ளது. இந்நிலையில் தமிழ்மொழியைச் செம்மொழியாக ஏற்பது நமது கடமையாகும்.''
தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமென்று, தக்க வரலாற்றுப் பின்னணியோடும், சான்றுகளோடும், கழக அரசின் சார்பில் மத்திய அரசின் கல்வித்துறைக்கு அனுப்பப்பட்ட இந்த அறிக்கை; மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் ஆணையத்திற்குப் பரிசீலித்து கருத் துரைக்குமாறு அனுப்பப்பட்டது.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
நெய்யூர் ஜி. ஜான் சாமுவேல் தயாரித்த வரைவு ஆவணம் - தமிழ் செம்மொழி ஆன வரலாறு (2)
Subscribe to:
Post Comments (
Atom)
4 comments:
செம்மொழியாக ஏற்கப்படுவதற்கான நீண்ட போராட்டத்தை ஆவணமாக்கியிருக்கிறீர்கள்.....
அறியப்படாத பல தகவல்கள், பகிர்வுக்கு நன்றிகள்.
உங்களுக்கு என் வணக்கங்கள்
அறியப்படாத பல தகவல்கள், பகிர்வுக்கு நன்றிகள்.
இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
நல்ல ஆவணம். தகவலுக்கு நன்றி,
கோபி சார்,
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
“திங்களூர் நொண்டி” எங்கு கிடைக்கும் என்ற தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்.
Post a Comment