தொல்லியல் அறிஞர் இரா. நாகசாமிக்கு 80-ஆம் பிறந்தநாள்!

DSC05122A


தமிழ்நாட்டில் தொல்பொருள் துறையை நிறுவி அதன் முதல் இயக்குநராகப் பணியாற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் தமிழரின் - முக்கியமாகப் பல்லவர், சோழர் காலக் கலைக்கு - நிபுணத்துவமான புத்தகங்களை எழுதிவரும் டாக்டர் இரா. நாகசாமிக்கு 80-ஆம் பிறந்தநாள் அண்மையில் கோலாகலமாய்க் கொண்டாடப்பட்டது. கல்வெட்டுத் துறையில் ஏராளமான மாணவர்களைப் பயிற்றுவித்து, பல புதிய கலைச்சொற்களைப் படைத்தவர் நம் முனைவர்.
Nagaswamy Honoured (Coimbatore 2007)

The veteran Archaeologist Dr. R. Nagaswamy, Formerly Director of Archaeology and Former Vice Chancelor Kanchipuram University, was honoured with a Copper plate citations at the meeting of the Tamilnadu Arcaeological Society at its meeting at Coimbatore on the 21-7-2007 in the midst of a very large gathering of research scholars and historians. Professor Noboru Karoshima paid rich tributes to Dr. Nagaswamy for his all-round contribution to Archaeology in Tamilnadu and said that he knew Dr.Nagaswamy from 1963 onwards and realized his Sound scholarship and indefatigable works. Iravatham Mahadevan said that he has come specially to felicitate Nagaswamy for his services to the younger generations. Professor Subbarayalu paid great encomium on the distinguished scholar for training many batches of Epigraphists and all those who are today as the foremost epigraphists were trained by him. Nagaswamy made Archaeology and Epigraphy so popular that there is a great interest throughout the length and breadth of Tamilnadu, Subbarayalu said. He also commended Nagaswamy for making use of modern technology like Computer, long before any Government agency or University ever thought of utilizing them and brought the Tamil antiquities and epigraphy to the notice of the world of Scholars. Pulavar Raju who composed the Copper plate renderings said he was privileged and proud to study under Dr.R.Nagaswamy as his principal student and mentioned he was his guru. There were many other speakers who spoke about his untiring work even to this day in all fields of Art, History and Culture Including Music and Dance. The citations, inscribed in a traditional manner on Copper Plates, were read and presented to him. The presentation which is in Tamil Poetic form composed by Pulavar Raju is reproduced below.

வாழ்த்து
புலவர் Dr. செ. இராசு, ஈரோடு

ஐம்பது ஆண்டுஆக அருந்தமிழ் கலைகளோடு கற்பொறிகள்
இயல் இசை நாடகம் ஆம் அத்துணை துறைகள் தோறும்
அயர்விலா துழைத்துலகு எங்கிலும் சீர்த்தி யோடு
மக்கள் தம் மத்திதன்னில் அறிவினை வளர்த்த செல்வர்
சிலை மீட்ட செம்மல் என்றும், கலைமா மணியே என்றும்
தமிழகத் தொல்லியல் தன்தந்தையே என்று இலங்கும்
ஈடிலா அறிஞர் டாக்டர் இரா நாகசாமிப் பெரியோருக்கு
தமிழகத் தொல்லியல் கழகம் சேர்ந்த செம்மையோர் இசைந்துகூடி
பெருமையோ டளித்த செப்புப்பட்டயச் செய்யுள் ஈதாம்

தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர்

கங்கையில் புனிதமாய காவிரிக்கரையில் ஓங்கி
கொங்கு மேல் அரைய நாட்டில் குலவிய ஊஞ்சலூரில்
பங்கமில் குலத்தில் தோன்றிப் பலகலை கற்றுயர்ந்தே
எங்கள் தொல்லியல் குடும்ப ஏந்தலாம் நாகசாமி
பல்விதம் அதை வளர்த்துப் பாங்குடன் விரிவதாக்கி
நல்லாலி ன்விழுது போல நாடெங்கும் கிளை பரப்பி
எல்லையில் பணிகள் செய்தார்.
கல்வெட்டு கல்வி தந்து காசியல் விளக்கம் தந்து
பல்லோலை சுவடித் தேடிப் பன்னூல்கள் பதிப்புச் செய்து
கல் செப்புப் படிமம் ஆய்ந்து கட்டிடக் கலையும் தேர்ந்து
நல்லோவியங்கள் போன்று நற்கலை விளக்கம் செய்தார்.
பட்டயப் படிப்பினோடு பயில் கோடைப் பயிற்சி எல்லாம்
திட்டமாய் தந்தீர் அஃதால் தொல்லியல் ஆய்வர்கூட்டம்
பட்டாளம் எனக் கிளம்பி பல்திசை எங்கும் தேடி
கொட்டியே குவிக்கின்றார்கள் குறைவிலாத் தொல்பொருட்கள்
இயற்றமிழ் துறைகள் கண்டு இசைப்பாடல் பலவும் பாடி
நயமிகு நாட்டியத்தின் நாடகம் பலவும் தந்து
பயனுலகு அறியச் செய்து பாரெல்லாம் புகழும் உம்மை
வியன்நற் றமிழின் நல்ல வித்தகர் எனப்பகர்வோம்.
பத்தூர்ஆ னந்தக்கூத்தர் பரங்கியர்க்கும் அருள வேண்டி
புத்தூரில் சென்றே அங்கு புகுந்தனர் அங்கே சென்றே
பத்தியால் வாதில் வென்றே பண்புடன் கொணர்ந்த உம்மை
வித்தகமாய்ச் சிலைமீட்ட செம்மல் எனப்புகழ்வர்
கச்சி மாமுனிவர் கண்டகவின் கலைக்கழகம் தன்னில்
நச்சியே துணை வேந்தர் என்று நல்கினர் பதவி தன்னை
மெச்சியே பன்னாட்டார்கள் மேன்மையாய் அழைத்து உம்மை
உச்சிமேற் கொண்டு உயர்வாய் மெச்சியே புகழ்ந்துரைத்தார்
எல்லையில் காலம் எல்லாம் எம் நாகசாமியின் பேர்
கல்லிலே எழுத்துப்போல கவின் செப்புப் பொறிப்புப் போல
அல்லிலும் நிலவுப் போல ஆதவன் நிலவும் போல
நல்விதம் என்றும் நிற்க நயமுடன் வாழ்த்துகிறோம்

இவண்
தமிழகத் தொல்லியல் கழகத்தார்.
கோவை விழாநாள் 21-07-2007

-----------------------------------------------------------

நேர்காணல்: திரு. இரா.நாகசாமி (நன்றி:தீராநதி, ஜூன் 2005)


‘தீராநதி’ இதழில் வெளியான தமிழகத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் முன்னாள் இயக்குநர் திரு.இரா.நாகசாமி அவர்களுடைய நேர்காணலின் முக்கியத்துவம் கருதியும், யுனிகோடில் பதிவு இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இங்கு மீள்பதிவு செய்கிறேன்.

இரா.நாகசாமி தமிழகத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் முன்னாள் இயக்குநர். வரலாற்றுத்துறையில் நேர்மையுடனும் திறமையுடனும் அரும்பணி ஆற்றிவரும் மிகச் சிலருள் ஒருவர். தமிழக வரலாற்றுக்கு அடிப்படையாக உள்ள அரிய பல சான்றுகளாக விளங்கும் கல்வெட்டுகள், பட்டயங்கள், சிற்பங்கள், படிமங்கள், கட்டடங்கள் மற்றும் ஓவியங்கள் முதலானவற்றை ஆராய்ந்து வெளிப்படுத்தியவர். கோவை மாவட்டம், ஈரோடு தாலுகா, ஊஞ்சலூரில் 1930 _ ல் பிறந்த நாகசாமி, சமஸ்கிருத மொழியில் முதுகலைப் பட்டமும் டில்லி மத்திய தொல்பொருள் ஆய்வுப் பள்ளியில் அகழ்வாய்வு, பண்டைய சின்னங்களைப் பழுது பார்த்தல் முதலிய பயிற்சிகளையும் பெற்றவர். சென்னை அருங்காட்சியகக் கலைப்பிரிவின் தலைவராகவும் சிறிது காலம் பணியாற்றியுள்ளார். இவரது மாமல்லபுரம் தொடர்பான ஆராய்ச்சி உலகப்புகழ் பெற்றது. தமிழிலும் ஆங்கிலத்திலும் பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். கம்போடியா, தாய்லாந்து நாடுகளில் நடைபெறும் தொல்லியல் கருத்தரங்குகளில் கலந்து கொள்வதற்காகக் கட்டுரைகளைத் தயாரித்துக் கொண்டிருந்த நாகசாமியை சென்னை, பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம்.

தீராநதி: உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்துடன் தொடங்கலாம்.

இரா. நாகசாமி: எனது சொந்த ஊர் கரூர் பக்கத்தில் உள்ள பாண்டி கொடுமுடி. நால்வர் பாடல் பெற்ற ஸ்தலம் அது. காவேரிக்கரையில் அமைந்துள்ளது. சிறுவயதிலிருந்தே எனக்கு தேவாரப் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. நூற்றுக்கணக்கான சங்கப் பாடல்களை ஆழ்ந்து படித்துள்ளேன். நாங்கள் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான் கல்கி ‘பார்த்திபன் கனவு’, ‘சிவகாமியின் சபதம்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘கள்வனின் காதலி’ முதலிய நவீனங்களைத் தொடராக எழுதிக்கொண்டு வந்தார். அவரது எழுத்துக்களை எல்லாம் தொடர்ந்து படித்து வந்தேன். தேசிய விடுதலைப் போராட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்த காலகட்டம். பாரதியின் பாடல்களைத் தெருவில் பாடிக்கொண்டே ஊர்வலமாகப் போவார்கள். இவையெல்லாம் சேர்ந்துதான் வரலாறு தொடர்பான ஈடுபாட்டை எனக்கு ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

தீராநதி: சென்னை அருங்காட்சியகத்தில் கலைப்பிரிவு தலைவராகப் பணியாற்றியுள்ளீர்கள். அங்கே நீங்கள் பெற்ற அனுபவம் பற்றி?

இரா.நாகசாமி: சென்னை அருங்காட்சியகம், உலகின் பெரிய அருங்காட்சியகங்களுடன் ஒப்பிடத்தக்க மாபெரும் அருங்காட்சியகம். உலகின் பெரிய அறிஞர்கள், கலைஞர்கள் எல்லாம் அங்கு அடிக்கடி வருகை தருவார்கள். அங்கு வருபவர்களுக்குக் கலைப் படைப்புகள் பற்றி பலமுறை, மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லியதில் அவை தொடர்பான என்னுடைய புரிதல் வளர்ந்திருக்கிறது.

எந்தவொரு கலையையும் அல்லது வரலாற்றையும் பற்றிச் சொல்லும்போது உணர்ச்சி பெருக்கினால் சொன்னால் போதாது. சான்றுகளின் அடிப்படையில் சொல்லவேண்டும். “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றி மூத்தக்குடி நாங்கள்’’ என்று சொன்னால், அதற்கு என்ன ஆதாரம் என்றுதான் முதலில் கேட்பார்கள். இதற்கான சான்றுகள் பண்டைக்கால கல்வெட்டுகள், கோயில்கள், சிற்பங்கள் ஆகியனவற்றில் உள்ளன. இந்தச் சான்றுகளைத் தேடி எடுத்து ஆராயும் துறைதான், தொல்லியல் துறை; விஞ்ஞானபூர்வமான ஆய்வு நெறிமுறைகள் கொண்ட ஒரு துறை.

தீராநதி: நீங்கள் பார்த்த தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் முற்காலத் தமிழகம் பற்றிய ஒரு விளக்கத்தைத் தர முடியுமா?

இரா. நாகசாமி: போக்குவரத்து, வேளாண்மை, நீதி, நிர்வாகம் ஆகிய எல்லாத் துறைகளிலும் நமது முன்னோர்கள் சிறந்து விளங்கியிருக்கிறார்கள். உயர்ந்த பண்பாடுடைய நாடாக நமது நாடு இருந்திருக்கிறது. அவர்கள் நிலங்களை அளந்தது போல் துல்லியமாக, வேறு எந்த நாட்டினரும் அளந்ததில்லை. சாலையோரங்களில் கல் நடுவது வெள்ளைக்காரன் நமக்குத் தந்தது என்ற எண்ணம் நம்மிடம் இருக்கிறது. அது தவறு. ஆயிரம் வருடங்களுக்கு முன்னாலேயே, சாலைகளின் இரண்டு பக்கங்களிலும் கற்களை நட்டு, அடுத்த ஊர் இன்னும் எத்தனை காததூரம் இருக்கிறது என்று எழுதி வைக்கும் பழக்கம் தமிழகத்தில் இருந்திருக்கிறது. எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கும் உணர்த்துவதன் பொருட்டு, மைல்கற்களில் துளை போட்டு அடையாளப் படுத்தியிருக்கிறார்கள். ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் ராஜேந்திர சோழன் காலத்தில், வங்கக்கடலில், ஆயிரக்கணக்கான மைல்களைத் தாண்டிச் சென்று போரிட்டு, வெற்றி கண்டிருக்கிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் கல்வெட்டில் ஆதாரங்கள் இருக்கின்றன. நிலத்தை எவ்வாறு அளந்தார்கள் என்பதும் அந்த அளவுகளும் கல்வெட்டில் இருக்கின்றன. அதனைப் பார்த்து, மெச்சி, “இவர்கள் போல் உலகில் வேறு எவரும் நிலத்தை அளந்ததில்லை” என்று வெள்ளைக்காரனே எழுதியிருக்கிறான்.

இந்த நம்முடைய பெருமையோ, கடல்கடந்து பெற்ற வீரச்செயலோ இன்றைக்கும் நமது குழந்தைகளுக்கான வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் இல்லை. அதற்கு மாறாக வெள்ளைக்காரர்கள் நம்மை ஆண்டபோது உருவாக்கிய, வரலாற்றுப் புத்தகங்களைத்தான் நாம் படித்துக்கொண்டும், குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்துக்கொண்டும் வருகிறோம். நம்மை ஆட்சி செய்த வெள்ளைக்காரர்களின் ஒரே நோக்கம் இந்நாட்டிலுள்ளவர்களை என்றென்றைக்கும் அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்பதுதான். அதற்குத் தக்கபடி, அடிமை மோகத்தை வளர்க்க, இங்கிருக்கும் எல்லாமே, ‘அவன் கொண்டு வந்ததுதான், அவன் சொல்லிக் கொடுத்ததுதான்’ என்கிற மாதிரி வரலாற்றுப் புத்தகங்களை எழுதினான்.

ஆயிரம் வருடங்களுக்கு முன்னால், செங்கல்லில் எட்டு மாடி கட்டியிருக்கிறார்கள் நமது முன்னோர்கள். தஞ்சாவூர் கோயிலில் இருக்கிறது. அதனை அளவு எடுத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி அப்போது, 720 அடி உயரத்துக்கு, இரண்டு பக்கமும் துல்லியமான சம அளவுடன் அதனைக் கட்டினார்கள்? நமது கட்டடக்கலைத் தொழில்நுட்பம் அது. ஆனால் நாம் அதனை விட்டுவிட்டு ஏதோ ஒரு நாட்டுக்காரனின் கட்டடக்கலை தொழில்நுட்பத்தை நமது மாணவர்களுக்குச் சொல்லித் தந்துகொண்டிருக்கிறோம்.

தீராநதி: அதுபோல் தமிழகத்தின் பண்பாட்டு அம்சங்கள் சிலவற்றை இந்தியாவின் பிற மாநிலத்தவர்கள் உரிமை கொண்டாடுவதும் நடக்கிறது.உதாரணமாக மோகினியாட்டம் தஞ்சைக்கே உரித்தானது. தஞ்சையிலிருந்து தாசிகள் திருவாங்கூர் சென்று அங்குள்ளவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாக திருவாங்கூர் அரச ஆவணங்கள் எழுத்துபூர்வமாகக் கூறுகின்றன. ஆனால் இன்று அக்கலை மலையாள ஆட்டமாக மாறிவிட்டது.

இரா.நாகசாமி: கேரளத்துக்காரர்கள், சாக்கியார் கூத்தையும் எங்கள் ஊர் கூத்து என்றுதான் சொல்கிறார்கள். ராஜராஜசோழன் காலத்தில் நமது ஊரில் சாக்கியார் கூத்து இருந்திருக்கிறது. ஊர்க்காரர்கள் சாக்கியாருக்கு என்று நிலத்தை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். ஐந்து முதல் ஏழு நாள்களுக்கு இரவு தினமும் சாக்கியார் கூத்து நடந்திருக்கிறது. கல்வெட்டில் அதற்கான ஆதாரங்கள் இருக்கிறது.

தீராநதி: இந்தியாவில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் மூன்றில் இரண்டு பங்கு தென்னிந்தியாவில்தான் கிடைத்துள்ளன. ஆனால், அவற்றில் பாதிக்குமேல் இன்னும் பதிப்பிக்கப் பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. இது எந்தளவு உண்மை?

இரா. நாகசாமி: மொத்தமுள்ள 25,000 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில் 8,000 கல்வெட்டுகள் மட்டும்தான் பதிப்பிக்கப்பட்டுள்ளது. மற்றவற்றையும் பதிப்பிக்க அரசு பணம் ஒதுக்கவேண்டும். ஆனால், “அதற்குப் பணம் தரமாட்டேன்” என்கிறார்கள். அதன் முக்கியத்துவத்தை உணரமாட்டேன் என்கிறார்கள். நான் தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குனராக இருக்கும்போது அரசின் மொத்தவருவாயில் தொல்லியல் துறைக்கு ஒதுக்கப்பட்டது 0.004சதவிகிதம்தான்.

தீராநதி: இதனை மாற்ற முயற்சித்தீர்களா?

இரா.நாகசாமி: நான் இருந்தபோது, மேலிடத்திலிருந்தவர்கள் அனைவரையும் சந்தித்து கல்வெட்டுகளைப் பதிப்பிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்ல வாய்ப்புகள் இருந்தன. எம்.ஜி.ஆர். ஒரு முறை, “உங்களுக்கு என்னதான் வேண்டும். இவ்வளவு உணர்ச்சிகரமாகப் பேசுகிறீர்களே” என்று கேட்டார். “இந்த நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு என்று பெரிய ஆய்வுக்கூடம் ஒன்றை உருவாக்க வேண்டும். கட்டடக் கலையில் ஒன்றும் இல்லாத நாட்டைச் சேர்ந்தவர்கள், நூறுஅடி அமைப்பைப் பெரியதாகக் கோடுபோட்டுக் காண்பித்து, பெருமையைத் தட்டிச் செல்கிறார்கள். நம்மிடம் 720 அடி உயரமுள்ள பெரிய அமைப்பு இருக்கிறது. ஆனால் காண்பிக்க முடியவில்லை’’ என்றேன். “எவ்வளவு ரூபாய் ஆகும்?’’ என்றார். “எண்பது லட்சம்’’ என்றேன். உடனே அதே இடத்தில் கொடுக்கச் சொல்லி உத்தரவு போட்டார். ஆனால் எனக்குப் பின் வந்தவர்களுக்கு அது புரியவில்லை; என்ன செய்வதென்றும் தெரியவில்லை. பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அது வேறு விஷயம்.

இப்போதும், “கல்வெட்டு என்றால் என்ன? அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்’’ என்று கேட்கிறார்கள். இப்போது நாம், நமது நிலத்தை இன்னொருவருக்குக் கொடுக்கும் போது பத்திரப்பதிவு செய்வதுபோல், அப்போதும் செய்திருக்கிறார்கள். அரசனுடைய பெயர், ஆண்டு, உட்பிரிவு, கிராமம், எல்லை, எவ்வளவு விளையக்கூடியது?, வரிகள், நீக்கப்பட்ட வரிகள் இத்தனை விஷயங்களும் கல்வெட்டில் இருக்கிறது. எல்லையைக் குறிப்பிடும்போது, வடக்கு எல்லை, தெற்கு எல்லை, கிழக்கு எல்லை, மேற்கு எல்லை என்று எல்லாவற்றையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்போது நமக்கு அவனுடைய பொருளாதாரம், வேளாண்மை, அந்த நிலத்துக்கு எங்கேயிருந்து தண்ணீர் வந்தது ஆகியவை உட்பட எல்லாம் தெரியும்.

தீராநதி: இதுவரைக்கும் பதிப்பானவற்றை மட்டும் வைத்துக் கொண்டுதான் நமது வரலாறு எழுதப்பட்டுள்ளதா?

இரா. நாகசாமி: ஆமாம்.

தீராநதி: பதிப்பிக்கப்பெறாத கல்வெட்டுகளைப் பதிப்பிக்க அரசிடம் ஏதாவது திட்டங்கள் இருக்கிறதா?

இரா. நாகசாமி: இல்லை.

தீராநதி: தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதிகளை எடுத்துக் கொண்டால், ஆரம்பத் தொகுதிகளில் உள்ள பதிப்பின் தரம், விளக்கங்கள் முதலியன இப்போது வெளிவருபவற்றில் இல்லை; சில தொகுதிகளில் மூலம் மட்டுமே இருக்கின்றன? ஏன் இந்த நிலை?

இரா. நாகசாமி: தொடக்க காலத்திலும் இதுமாதிரி செய்பவர்கள் இருக்கத்தான் செய்தார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் குறைவு. அதற்குக் காரணம் அப்போது இருந்தவர்களுக்கு வடமொழி தெரியும். இப்போதுள்ளவர்களுக்குத் தெரியாது. அதுபோல் டச்சு, பிரஞ்சு உட்பட உலகின் பல்வேறு மொழிகளில் எவ்வளவோ செய்திகள் நமது நாட்டைப் பற்றி இருக்கின்றன. அந்த மொழிகளைத் தெரிந்தவர்கள் இருந்தால் அவற்றை மொழிபெயர்த்து, என்ன இருக்கிறது என்று நாம் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் பிற மொழிகள் மீது வெறுப்பை வளர்த்து, அவற்றை மாணவர்களைப் படிக்கவிடாமல் செய்துவிட்டார்கள்.

தாய்லாந்து நாட்டில் அரசனுக்கு பட்டாபிசேகம் செய்யும்போது தேவாரம், பிரபந்தம் முதலிய நமது பாடல்களைச் சொல்லுகிறார்கள். தாய்லாந்து மொழியைப் படிக்க நமது நாட்டில் ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழர்கள் கம்போடியாவுக்குக் கப்பலில் போயிருக்கிறார்கள். அதைப்பற்றியும், அவர்களுக்கும் நமக்கும் இருக்கும் தொடர்பைப்பற்றியும் ஆராய கம்போடி மொழி தெரிந்தவர்கள் யாராவது நம்மிடம் இருக்கிறார்களா? கம்போடி மொழியைக் கற்றுக்கொள்ள இங்கே ஏதாவது வசதி இருக்கிறதா? நம்மைச்சுற்றியுள்ள நாடுகளுடன் தொடர்புகொள்ள அந்த நாட்டின் மொழிகளைப் படிக்கக்கூடிய ஒரு தலைமுறையை உருவாக்க வேண்டும். பன்மொழிகளை வளர்க்க வேண்டும். அதுபோல் நமது மொழியை அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். நாம் மற்றவர்களிடம் இருந்து நம்மைத் துண்டித்துக் கொண்டிருக்கிறோம்.

மொழி தொடர்புக்கான ஒரு ஊடகம். இதில் அந்த மொழி உயர்ந்தது, இந்த மொழி தாழ்ந்தது என்று எதுவும் கிடையாது. நமது நாட்டில் அதிகம் பேர் தமிழ் பேசுவதால் தமிழை வளர்த்தெடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அதற்கென்று மற்ற மொழிகள் மீது துவேஷத்தைக் கொண்டிருக்க தேவையில்லை.

தீராநதி: சமீபத்தில் தமிழகத் தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியிட்ட புத்தகத்தில் ஒரு கட்டுரை பேரூர் மண் ஓடுகளைப் பற்றி புகழ்ந்து கூறுகிறது. சாதாரணமான ஒருவர் அவ்வோடுகளை நேரில் பார்த்தாலே அவை தற்காலத்தவை, போலியானவை என்று கூறிட முடியும். பேரூர் போலிமண் ஓடுகளிடம் தமிழக தொல்பொருள் ஆய்வுத்துறை ஏமாந்தது போன்ற தவறுகள் எப்படி நடக்கின்றன?

இரா. நாகசாமி: உலக அளவில் ஏமாற்றுவது என்பது இப்போது புதியதாக தோன்றியிருக்கிறது. அவர்கள் மிகவும் புத்திசாலித்தனத்துடன் செய்கிறார்கள். கேரளா எல்லைப் பகுதியில் உள்ள பழைய ஓடுகளை எடுத்து வந்து அதில் எழுதி, அந்த எழுத்து பழையதா, புதியதா என்று கண்டுபிடிக்க முடியாதபடி, அதற்குமேல் நன்றாகத் தேய்த்து, ஒவ்வொன்றாக வெளியே விடுகிறார்கள். சில நேரங்களில் பாதியை முதலில் வெளியிட்டுவிட்டு, பிறகு மற்றொரு பாதியை வெளியிடுகிறார்கள். முதலில் பார்ப்பவர்களுக்கு மிகவும் பழையதாக இருக்கிறதே என்று தோன்றும். 2, 4, 6. 8, 16 என்று அதிகரித்துக்கொண்டே போகும்போது, ஆய்விலும் இது ஏமாற்று வேலை என்பது தெரிந்துவிடும். இதற்குக் கொஞ்ச காலம் எடுக்கிறது. முதலில் ஒன்றிரண்டு வெளியே வந்த போது உண்மையானவை மாதிரிதான் இருந்தன. ஆனால் மிகவிரைவில் அவை போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.

தீராநதி: காவல்துறையின் நடவடிக்கைக்குப் பிறகும் மும்பையிலும் டில்லியிலும் அந்த ஓடுகள் விற்பனை ஆகிக்கொண்டிருக்கின்றன.

இரா. நாகசாமி: ஏமாற்று வேலை என்பது எல்லாத் துறையிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த ஓடு உண்மையானதா, போலியா என்று சந்தேகம் இருக்கும்போதும் கூட அது கையை விட்டுப் போய்விட்டால் என்ன செய்வது என்று உடனே வாங்கிவிடுவார்கள்.

தீராநதி: நீங்கள் தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குநராக இருந்தபோது, பள்ளி ஆசிரியர்களைப் புதிய கல்வெட்டுகளைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தும் திட்டமொன்றைச் செயல்படுத்தினீர்கள். அந்தத் திட்டம் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருந்தது?

இரா.நாகசாமி: எல்லா மாவட்டங்களிலும் இருந்து மொத்தம் 40 ஆசிரியர்களைத் தேர்வு செய்தேன். சரித்திரத்தை எப்படிச் சொல்லித்தர வேண்டும் என்பதற்கான ஒரு கோட்பாட்டை உருவாக்கி, வரலாற்றுச் சின்னங்கள் இருக்கும் இடங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்றேன். விஞ்ஞானப் பாடத்தில் எவ்வாறு செயல்முறையுடன் சொல்லித் தருகிறார்களோ அவ்வாறு சொல்லித் தந்தேன். அதற்கு நல்ல பயன் இருந்தது. 12 வருடம் தொடர்ந்து இதனைச் செய்தோம். பயிற்சி முடிந்து திரும்பிச் சென்ற ஆசிரியர்கள், அவர்கள் பகுதிகளில் கேட்பார் இல்லாமல், வெளி உலகுக்குத் தெரியாமல் கிடந்த ஏராளமான கல்வெட்டுகளையும் சிற்பங்களையும் கண்டுபிடித்து எங்களுக்கு அனுப்பித் தந்தார்கள். தர்மபுரியில் ஒரு அருங்காட்சியகத்தையே உருவாக்கினோம். இத்திட்டத்துக்கு அப்போது 1000 ரூபாய் கொடுத்தார்கள். இப்போது ஒரு லட்சம் கொடுக்கிறார்கள். ஆனால் யாரும் மகாபலிபுரத்தைத் தாண்டிச் செல்வதில்லை.

தீராநதி: ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நிபுணர்கள் சிலர் தமிழக கல்வெட்டுகளை டிஜிட்டலைஸ் செய்து கொண்டிருப்பதாகவும், அத்திட்டத்தில் நீங்களும் இருப்பதாக அறிகிறோம். அத் திட்டத்தில் உங்களது பங்களிப்பு என்ன?

இரா. நாகசாமி: இதுவரை படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளைப் பற்றி, எந்த ஆண்டு, எந்த ஊரில் படியெடுக்கப்பட்டது முதலிய விவரங்கள் ஏற்கெனவே ஆங்கிலத்தில் இருக்கிறது. அதனை அவர்கள் எடுத்துக்கொண்டுபோய் அப்படியே கணிப்பொறியில் போடுகிறார்கள். அவ்வளவுதான். ஆனால் அதனுடன் சம்பந்தமில்லாமல், நான் தனியாக www.tamilartsacademy.com என்று ஒரு இணையதளத்தைத் தொடங்கி, தமிழ்நாட்டில் எந்தெந்த ஊர்களில் கல்வெட்டைப் படியெடுத்திருக்கிறார்கள், எப்போது படியெடுத்தார்கள் என்ற விவரங்களை அதில் போட்டுக்கொண்டு வருகிறேன். இலவச இணையதளம் அது. இதுவரைக்கும் வெளிவந்துள்ள கல்வெட்டுகளின் சுருக்கங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் உள்ளன. நான் அவற்றை தமிழில் மொழிபெயர்த்து இந்த இணையதளத்தில் போட்டிருக்கிறேன்.

தீராநதி: இலங்கையில் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். அதன் வரலாறு நமது வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. நிறையத் தமிழ் கல்வெட்டுகள் இலங்கையில் உள்ளன. இந்நிலையில் நமது தொல்பொருள் ஆய்வுத்துறையும் இலங்கைத் தொல்பொருள் ஆய்வுத்துறையும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு அல்லது கலந்தாலோசனை இல்லையே?

இரா. நாகசாமி: நமது நாடு ஒரு பெடரல் அமைப்பு. நாம் வெளிநாட்டவர்களுடன் தொடர்புகொண்டு ஒரு காரியத்தைச் செய்யவேண்டும் என்றால் மத்திய அரசின் ஓப்புதல் வேண்டும். அதற்கு மத்திய அரசில் நமக்கு இணக்கமானவர்கள் இருக்க வேண்டும். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே உறவு மோசமாக இருந்தால் எதுவுமே செய்யமுடியாது.

தீராநதி: அதுபோல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய நம்மைச் சுற்றியிருக்கும் மாநிலங்களைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர்களுடனும் ஆய்வு ஆலோசனைகள் நடைபெற்றதாகத் தெரியவில்லையே?

இரா. நாகசாமி: அதற்கு நான் முயற்சி செய்தேன். சோழர்களுடைய தொடர்பு ஆந்திரா, மைசூர் உட்பட விசாகப்பட்டினம் வரைக்கும் இருந்திருக்கிறது. தமிழக வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுத்தது போல், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் பயிற்சி கொடுக்க நினைத்தேன். இங்கே பயிற்சி பெற்றவர்கள் அங்கே போகும்போதும், அல்லது அங்குள்ளவர்கள் இங்கு வரும்போதும் அதற்கான சான்றுகளை இன்னும் அதிகம் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது என்றேன். ஆனால், அதிகாரிகள், “வேண்டாம்” என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார்கள்.

தீராநதி: பொதுவாக தமிழில் ஆய்வுத் துறை முந்தின தலைமுறையுடன் ஒப்பிடும் போது பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது என்று சொல்லலாம். வையாபுரிப் பிள்ளை, மு.இராகவையங்கார் போன்றவர்கள் இனி உருவாவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே சொல்கிறார்கள். இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

இரா. நாகசாமி: தமிழைப் படிப்பதில்லை என்பதுதான் தமிழ்ப் பேராசிரியர்களின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணம். இன்று சங்ககால தமிழ் இலக்கியத்தைப் படிப்பதற்கு ஆள் கிடையாது. புறநானூறு, பத்துப்பாட்டு, கலித்தொகை, பரிபாடல் ஆகியவற்றில் எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தால் நான் யாரைப் போய் கேட்கமுடியும். பழைய ஆசிரியர்களுக்குக் குறைந்த பட்சம் ஆயிரம் பாடல்களாவது மனப்பாடமாகத் தெரியும். கொஞ்சம் சமஸ்கிருதமும் அவர்கள் படித்திருந்தார்கள். இன்று தமிழ் இலக்கியம் படித்த யாரையாவது நானூறு பாடல்களைச் சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்; அல்லது தேவாரம் படித்தவர்கள் யாரையாவது காட்டுங்கள். அப்படிப்பட்ட ஒரு தலைமுறையை நாம் உருவாக்கவே இல்லை. நூறு பாடல்களாவது மனப்பாடமாக ஒருவருக்குத் தெரிந்தால்தான் அவருக்கு சொல்வளமும் எழுத்துவளமும் வரும். சொல்லே தெரியாதவன் எப்படி ஆராய்ச்சி செய்யமுடியும். கண்ணதாசன் சொல்கிறார்: “நான் மிக நன்றாகப் பாடுகிறேன் என்று எல்லோரும் சொல்கிறார்கள்; அதற்குக் காரணம் நாலாயிர திவ்யபிரபந்தம் முழுவதும் எனக்குத் தெரியும் என்பதுதான். அப்போது சொல்லும் ரிதமும் வந்து விழும்.’’ இப்போதுள்ள தமிழ்ப் பேராசிரியர்கள் எவரையாவது தக்கயா பரணிக்குப் பொருள் சொல்லச் சொல்லுங்கள், நிச்சயம் அவர்களுக்குத் தெரியாது. காரணம், யாரும் படிப்பதில்லை. இன்று தமிழ்ப் பேராசிரியர்கள், செய்யுள் நடத்தும்போது சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளைச் சொல்லுவதே இல்லை. அந்த மரபு அழிந்துவிட்டது.

சந்திப்பு: தமிழ்ச்செல்வன், தளவாய் சுந்தரம்
படங்கள்: சித்ரம் மத்தியாஸ்

6 comments:

R. said...

அன்பார்ந்த கணேசன் அவர்களே,

தொல்லியல் அறிஞர் நாகசாமிக்கு 80 வது ஆண்டு பிறந்தநாள் பதிவைத் தந்து எங்களை மகிழ்வித்தமைக்கு நன்றி. தொல்லியல் அறிஞர் நாகசாமி அவர்கள் பல பல நெடும் பல்லாண்டுகள் நலமோடும் மகிழ்வோடும் சிறப்புற இறைவனை வேண்டுகின்றோம்.
அன்புடன்
ராதாகிருஷ்ணன்
ஹுச்டன்
ஆகச்டு 19, 2009

L N Srinivasakrishnan said...

Dear Ganesan,

Thanks for posting this It's a wonderful felicitation message. PRof Nagaswamy's contributions in the field are amply clear.

For people like me, who live outside the country, his books are a great resource.

His knowledge of Tamil and Sanskrit both, though somewhat rare in modern Tamil studies, have given him the 360 degree view that is required in interpreting archaeological and cultural elements.

Apart from "Sivabhakti" (a great resource for those interested in Appar) and "Devi Worship", his countless articles in professional journals, felicitation volumes, and deepavali malar's have been a treat to read. I have in my hand the recent book on 'Mamallapuram' which is not only scholarly but also very well produced.

I wish Prof Nagaswamy good health and a long life.

Vijay said...

அவருடன் ஒரு நிமிடம் கழித்தால் நூறு புத்தங்கங்கள் படித்த ஞானம் பெறுவோம். அவர் இன்னும் பல காலம் வழ இறைவனை வேண்டுகிறேன்

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

தொல்லியல் துறைக்கு வாராது வந்த மாமணி அறிஞர் இரா.நாகசாமி!
அன்னாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

//அங்கு வருபவர்களுக்குக் கலைப் படைப்புகள் பற்றி பலமுறை, மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லியதில் அவை தொடர்பான என்னுடைய புரிதல் வளர்ந்திருக்கிறது//

என்ன ஒரு இயல்பான உண்மையான பதில்! பிறர்க்கு அறியத் தரும் போது, தரும் போது, தன் அறிதலே மேம்படுகிறது என்று சொல்ல ஒரு முதிர்ந்த அறிஞரால் தான் முடியும்! வாழ்க!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கொங்கு மேல் அரைய நாட்டில் குலவிய ஊஞ்சலூரில்//

பாண்டி கொடுமுடி என்றால் ஊஞ்சலூரா?
சற்று விளக்குங்கள் கணேசன் ஐயா!

//கொங்கு மேல்//

பாட்டோலையில் தமிழ்க் கொங்கு வந்துரிச்சி பாருங்க! :))

Anonymous said...

கணேசன் அய்யா அவர்கட்கு,
தினமணி நாழிதழ் வாயிலாக அவ்வப்போது மேலோட்டமாக அறிய நேர்ந்தாலும் அறிஞர் நாகசாமியின் சீரிய சேவை குறித்து தங்கள் கட்டுரை மூலமாக துல்லியமாக அறிய முடிந்தது.
நன்றி/கனி