தமிழர் கூட்டமைப்பு - தேர்தல் அறிக்கை

தமிழர் கூட்டமைப்பு
நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை
(மாற்று அரசியலுக்கான தொடக்கம்)
2009

நன்றி: இத் தேர்தல் அறிக்கையை பிடிஎப் கோப்பாக அனுப்பி உதவிய பேரா. சி. இ. மறைமலை, சென்னை, அவர்களுக்கு என் மனமார்ந்த வணக்கம்.

வெளியீட்டின் பெயர் : தமிழர் கூட்டமைப்பு தேர்தல் அறிக்கை 2009
வெளியீட்டு நாள் : 14.04.2009
இடம் : சென்னை
வெளியிடுவோர் : தமிழர் கூட்டமைப்பு
36, கானாபாக் 4ஆம் சந்து
திருவல்லிக்கேணி, சென்னை - 5

“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே!”
- புரட்சிப் பாவலர் பாவேந்தர்

தமிழர் கூட்டமைப்பு
நாடாளுமன்றத் தேர்தல் - 2009 தேர்தல் அறிக்கை

முன்னுரை
தமிழினம் எதிர்கொள்கின்ற வரலாற்று முகாமை வாய்ந்த தேர்தலாக 2009 மே திங்கள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் அமையப்பெற்றுள்ளது. தமிழ்நாடு - புதுச்சேரியில் வாழ்கின்ற தமிழினத்தாரும் பிறரும் வாழ்வியலின் அனைத்துக் கூறுகளிலும் மேம்பாடு அடைவதற்குக் கவனம் செலுத்தி இத் தேர்தலைத் தமிழர் கூட்டமைப்பு ஏற்றுள்ளது. குறிப்பாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழீழத் தமிழர்களையும் முற்றாக அழித்தொழிக்கும் போரைச் சிங்கள இனவெறி அரசு முழுவீச்சில் நடத்துகின்ற கொடுநிலையில் தமிழீழத்தைக் காக்கும் முகமாக வரலாறு இத் தேர்தலைத் தமிழர் கூட்டமைப்பிடம் கையளித்துள்ளது. தமிழ்நாடு-புதுச்சேரி மக்களை மட்டுமே நம்பி நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் களம் காண்கிறோம்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழிவந்த திராவிட இயக்கக் கட்சிகள் தங்கள் தலைவர்களின் மொழிவழி இனக் கொள்கைக்கு எதிராகச் செயற்பட்டு வருகின்றன.

தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்குச் சார்பான கட்சிகள் என்பவை தங்களுக்குள் கூட்டணி அமைக்கத் தவறியதாலும், கூட்டணி சேருகின்ற கட்சிகளுடன் தனித் தமிழீழ நாடு மலருவதற்கான உறுதி மிக்க தேர்தல் உடன்படிக்கை ஏற்படுத்தத் தவறியதாலும் வேறு வழியின்றி வரலாறு அளித்துள்ள கடமையைச் செயலாற்றத் தொடங்கியுள்ளோம். இந்திய அரசியலில் மாற்று அரசியலை ஏற்படுத்துவதற்கான அரசியல் நுழைவாக இத் தேர்தலை எதிர் கொள்கிறோம். தமிழ்நாடு - புதுச்சேரி மாநில மக்களின் கட்டளையை நிறைவேற்ற உறுதியேற்றுள்ளோம்.

தமிழர் கூட்டமைப்பு தோற்றம்

இந்திய ஒன்றியத்தின் நடுவணரசை ஆளும் காங்கிரசு அரசு அமெரிக்காவின் வல்லாளுமை, அரசியல், பொருளியல் கொள்கைக்குத் தன்னை முழுமையாக விற்றுக்கொண்டதன் விளைவாகவும் தெற்காசியக் கூட்டமைப்பிற்குத் தலைமை ஏற்கும் தகுதியை நிலைப்படுத்திக்கொள்வதற்காகவும் சிங்கள இனவெறி அரசு தமிழ் ஈழத்தின்மீது கொடுமையான போரைத் தொடுப்பதற்குத் தொடக்கத்தில் மறைமுகமாகவும் பின்னர் நேர்முகமாகவும் துணைநின்று போரை நடத்தி வருகின்றது. இதன்மூலம் தமிழினத்தைப் பழிவாங்கும் சோனியாவின் விருப்பமும் நிறைவேறியுள்ளது.

நடுவணரசில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளும் இதற்குப் பொறுப்பாகும். இவ்வாறு பல நாடுகளும் இங்குள்ள கட்சிகளும் ஒருங்கிணைந்து திட்டமிட்டு அழித்தொழிக்கும் வேளையிலும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் இனக்குழுத் தன்மையைப் பெறுவதற்கு இயலாத கையறு நிலையில் உள்ளனர். இதிலிருந்து மீட்சி பெறுவதற்கே தமிழர் கூட்டமைப்பு உருவெடுத்துள்ளது.

நோக்கம்
தமிழர்கள் தங்களைத் தமிழர்கள் என்று உணர்ந்தறிந்து ஒன்றுபட்டுத் தம் வாழ்வியலை மீட்டு மேம்படுத்திக்கொள்வதற்காகப் பாடாற்றுவதைத் தமிழர் கூட்டமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.

உயிர்க்கொடை நல்கிய ஈகி முத்துக்குமாரின் இறுதி ஆவணம் தமிழர் கூட்டமைப்பின் முதல் ஆவணமாக அமையப் பெற்றுள்ளது.

கொள்கை
குமரிக் கண்டம் என்னும் மிகத் தொன்மையான நிலப்பரப்பில் தோன்றிய தமிழினம் மாந்தக் குலத்தின் தாய் இனம். தாய்மை இதனின் இயற்கைப் பண்பாகும். அன்பும் அறமும் இணைந்த வடிவம் வாழ்வியலாகும். உயிர்க்குலத்தின் உரிமையியலாகவும். உலக ஓர்மையின் உயிராகவும் உலகப் பொதுமையின் வேராகவும் இருக்கின்ற தமிழியமே தமிழர் கூட்டமைப்பின் கொள்கையாகும்.


தேர்தல் நிலைப்பாடு
தமிழீழ விடுதலைப்போரை வீழ்த்தி, பழிவாங்கும் நோக்குடன் அழித்தொழிக்கும் காங்கிரசும் ஆரியத்தின் கூரிய வடிவமான செயலலிதாவும் எதிரிகளாவர். பாரதிய சனதா, மார்க்சியப் பொதுவுடைமைக்கட்சி தமிழீழ விடுதலைக்கு எதிரான கருத்துடையனவாக உள்ளன. இந்திய பொதுவுடைமைக்கட்சி மாறுபாடான கருத்துக் கொண்டுள்ளது. கலைஞர் கருணாநிதி இரண்டகராக உள்ளார். பா.ம.க., ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகியன பிழைப்பு அரசியலுக்கு ஆட்பட்டுக் கிடக்கின்றன. தெலுங்கின நடிகர் இதிலும் சிறப்பாக நடிக்கிறார். இவ்வாறான வெறுமை நிலையில்தான் நாற்பது தொகுதிகளிலும் தமிழின மீட்சிக்காகத் தன்னார்வமாக முன்வந்து தனிநிலை வேட்பாளர்களாக நிற்பவர்களை இனங்கண்டு தமிழியக் கொள்கை அடிப்படையில் ஒருங்கிணைந்து தமிழர் கூட்டமைப்பின் சார்புநிலை வேட்பாளர்களாக அறிவித்து இணைந்து களம் காண்கிறோம். பரப்புரைப் பணியை மேற்கொள்கிறோம்.

தனித் தமிழீழ விடுதலையே தீர்வு
தமிழீழத்தில் நடத்தப்பட்டுவரும் இன அழிப்புப் போரை உடனடியாக நிறுத்தி கொடுந்துன்பத்தில் அழியும் தமிழர்கட்கு விரைந்து மீட்புப் பணிகளைச் செயலாற்றி, அரசியல் உடன்படிக்கை மூலம் தனித் தமிழீழ நாடு அமைவதுமட்டுமே ஈழத் தமிழர் சிக்கலுக்கு நிலையான தீர்வாகும். இந்த நிலைப்பாட்டில் தமிழர் கூட்டமைப்பு கொள்கையளவில் உறுதியாகவுள்ளது. அதற்காக இறுதிவரை துணை நிற்கும்.

மீனவர் நலன்
தமிழ்நாட்டு மீனவர்கள் சிங்களக் கொலைவெறிப் படைகளால் திட்டமிட்டு அழிக்கப்படுவது எவ்வகையிலும் ஏற்கவியலாதது; கண்டிக்கத்தக்கது. வேறு மாநிலத்து மீனவர்கள் இடருற்றிருந்தால் இந்தியா போரையே தொடுத்திருக்கும். தமிழ்நாட்டு மீனவர்களை தில்லி அரசு இந்திய மீனவர்களாக ஏற்பளிக்கவே இல்லை. தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய மீனவர்களாக ஏற்பளித்து சிங்கள அரசின்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகை காண்போம்.. இடருற்ற குடும்பங்களுக்கு மீட்புத் தொகையைப் பெற்றுத்தர முயல்வோம்.

கடல்சார் காப்புரிமை மீனவர்கட்கு வழங்க வழிவகை செய்தல், மீனவர் அனைவர்க்கும் ஆயுள் காப்புரிமை செய்தல், கடலோரக் காவல் படையில் மீனவர்கட்கு முன்னுரிமை வழங்குதல் போன்றவைகட்கு உறுதியாகத் துணை நிற்போம்.

கச்சத்தீவு மீட்பு
தமிழக மீனவரின் உயிர்க்காப்பிற்கு உறுதி செய்யும் வண்ணம் கச்சத்தீவு மீட்புப்பெற உறுதியுடன் செயற்படுவோம்.

உலகத் தமிழர் நலன்
உலகம் முழுமையும் வாழும் தமிழர்களுக்கிடையில் உறவுகள் மலர்வதற்கும் தமிழர் வாழுகின்ற நாடுகளில் தன் மதிப்புடன் நிலைபெறுவதற்கும் மேம்படுவதற்கும் வழிவகை செய்வோம். பேரிடர் ஏற்படுகின்றபொழுது உடனே களைய முன்னிற்போம். தமிழ்மொழியைப் பயில்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம். தமிழ்ப் பண்பாட்டு விழாக்களையும் இலக்கிய விழாக்களையும் ஒருங்கிணைத்து நிகழ்த்துவோம். உலகத் தமிழர்க்கான வைப்பகம் (வங்கி) உறுதியாகத் தொடங்குவோம். அதன்வழி அனைத்து மேம்பாட்டுப் பணிகளையும் மேற்கொள்வோம்.

வேளாண்மை
உழவர்கள் எல்லா துன்பங்களிலிலிருந்தும் மீள்வதற்கு இயற்கைவழி வேளாண்மை முறைக்கு இட்டுச் செல்வதே நி¬லையான தீர்வாக அமையும். தற்சார்புடைய வாழ்க்கைக்கு பன்முகத் தன்மையுள்ள பயிர்முறையை நடைமுறைப்படுத்துவது; மரபுவழி வித்துகளை மீட்டெடுத்து அவற்றிற்குள் கலப்பினங்களை உருவாக்கி நிறைவான ஊட்டமான உணவுப் பொருள்கள்
விளைவிக்கவும் விளைபொருள் வணிகத்தில் நேர்முகமாக ஈடுபடவும் துணைநிற்பது,

உழவர்கட்கு வணிக வாய்ப்பு
பிறபொருள் வணிக முறைகளிலும் முதலீடுகள் செலுத்துவதற்குத் துணைநிற்பது. வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை வெளியிடுவது. மனைவணிகத்தை முற்றாகத் தடைசெய்வது. அரசே நேர்முகமாகக் குடியிருப்புகளை உருவாக்க வழிவகை காண்பது. விளைபொருள்களுக்கு உழவர்களே விலை தீர்மானிக்கும் உரிமையைச் சட்ட வடிவமளித்து நடைமுறைப்படுத்துவது.

தேவையான மின்னிணைப்பைக் காலந்தாழ்த்தாமல் எளிய வைப்புத் தொகையில் வழங்குதல். மின்னிணைப்பு இல்லாத உழவர்கட்கு எரிஎண்ணெய் (டீசல்) சலுகை விலையில் வழங்குவது. இருக்கின்ற நீர்த் தேக்கங்களை மேம்படுத்தி புதியவை உருவாக்குவது. சமவெளிப் பகுதிகளில் நான்கில் இரண்டு பங்கு சமூகநலக் காடுகளை உருவாக்குவது. முள்வேலி மரத்தையும், தைல மரங்களையும் முற்றாக அழிப்பது.

ஐந்து ஊராட்சிகளுக்கு இடையில் சிறிய சந்தைகளை உருவாக்குவது. நேரடி ஏற்றுமதிக்கு உழவர்கட்கு உதவுவது. கணினி பயிற்சி அளிப்பது. பண்ணைமுறை வேளாண்மையில் பெரிய நிறுவனங்கள் ஈடுபடுவதைத் தடைசெய்வது.

கல்வி
தொடக்கக் கல்வி முதல் ஆய்வு நிலை படைப்பாக்கக் கல்விவரை மாநிலத் தாய்மொழியான தமிழ்வழியில் கல்விபெறும் உரிமையை நிலைநாட்டுவது. பாடத்திட்ட வரைவு உரிமையை மாநில அரசுக்கு முழுமையாக பெறுவது. சமச்சீர் பொதுக் கல்விமுறையை நடைமுறைப்படுத்துவது. ஆங்கில மொழிப் பாடத்தை விருப்பப் பாடமாக நடைமுறைப்படுத்துவது. வணிக முறைத் தனியார் கல்விமுறைக்கு முற்றாகத் தடைவிதிப்பது. உடல் திறன் குறைவு, மனநலம் குன்றியோர் உட்பட அனைவர்க்கும் அனைத்துவகைக் கல்வியையும் இலவயமாக வழங்குவது, அனைவர்க்கும் பட்டயக் கல்விவரை இலவயமாக வழங்குவது, வேளாண்மை, தொழில்கள், பொதுத் தொண்டு கலந்த பாடத்திட்ட கல்வி முறையை நடைமுறைப்படுத்துவது.

பயிலும் காலத்தே மாணவர்கட்கு வருவாய்க்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல். சுற்றுலா கல்வி முறையை இணைத்துப் பாடத்திட்டம் உருவாக்குவது. ஆட்சிமுறையில் பங்கேற்கும் பயிற்சியை வழங்குவது.

மொழிவழி மரபுசார்ந்த வாழ்வியல் கல்வியை உருவாக்கத் துணை நிற்பது. மாநில எல்லையோரங்களில் மொழிச் சிறுபான்மையினரின் தாய்மொழியைப் பயில்வதற்கு வழிவகை காணுதல்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பிள்ளைகளை அரசு கல்வி நிறுவனங்களில் கட்டாயம் பயிலச் செய்வது.

தமிழை ஆட்சி மொழியாக அறிவித்தல்
நாடாளுமன்றத்தில் தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளையும் பயன்பாட்டு மொழிகளாக, ஆட்சி மொழிகளாக செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மருத்துவம்
மக்கள் நல மருத்துவ முறைகளான இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம், தொடு மருத்துவம், துளை மருத்துவம், ஆசனம், ஓர்மம், (தியானம்) சித்த மருத்துவம், ஓமியோபதி, இயன்முறை மருத்துவம் போன்ற மருத்துவங்களைப் பரவலாக வளர்த்தெடுத்து மக்கள் நலனை மீட்டெடுப்பது.

ஆங்கில மருத்துவமனைகள் பெருந்தொழில்களாக வளர்ந்திருப்பதை மாற்றி யமைத்தல்; சிற்றூர்ப்புற மருத்துவத் தொண்டினைக் கட்டாயப்படுத்துதல், தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் அரசு மருத்துவமனைகளைத் தரப்படுத்துதல்; நேர்ச்சியை (விபத்தை) தவிர்த்துப் பிற நோய்களுக்கு மருத்துவம் பார்க்கையில் அறுவை மருத்துவ முறைகளை பெரும்பாலும் தவிர்க்க வழிவகை காணுதல்; இலவய மருத்துவ முகாம்களை நெறிப்படுத்துதல்; முழு மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்துவது.

தொழில்துறை
இந்திய அரசின் தொழிற்கொள்கை என்பது உலகமயமாதல், தனியார்மயமாதல் என்ற உலக வணிக அமைப்பின் கொள்கையோடு முற்றிலும் ஒத்துழைக்கும் முறையில் மேற்குலக நாடுகளின் அரசியலுக்கும் பொருளியலுக்கும் நாட்டை அடகு வைக்கும் முறையில் அமைந்துள்ளது.

இதனடிப்படையில் அணுவாற்றல் ஒப்பந்தம், பங்குச் சந்தை, தகவல் தொழில் நுட்பம், வான் போக்குவரத்து விரிவாக்கம், தங்க நான்குவழிச் சாலை அமைப்பு, நகர மேம்பாட்டு விரிவாக்கத் திட்டம், பல்வகை உந்து வண்டித் தொழிற்சாலைகள், நச்சு வகைக் குடிப்புகள் உருவாக்கம், தனியார்துறை ஆயுள் காப்பீடு, பிற வகைக் காப்பீடுகள், பன்னாட்டுத் தனியார் துறை, வைப்பகங்கள் (வங்கி), நிதி நிறுவனங்கள், படையெடுப்பு, மட்டைப் பந்து விளையாட்டு முதலீடு, திரை - ஊடகத் துறை முதலீடுகள், தொழிலாளர் சங்கவுரிமை மறுத்தல், மண் வளத்தைக் கெடுக்கின்ற, மறு உருவாக்கம் செய்ய இயலாத மலட்டு விதைகளைத் திணிக்கின்ற வேரற்ற எந்திரமுறை வேளாண்மை என்றவாறு விரிவடைந்து மக்களை மிகக்கொடுமையான ஒடுக்குமுறை வாழ்க்கைக்குத் தள்ளி பயிற்றுவித்துள்ளது.

நமக்கான தொழிற்கொள்கை என்பது மரபுசார்ந்த தொழில்களுக்கு ஊக்கமளித்துத் துணை நிற்றல்; தொழில் முனைவோர்க்கு எளிதாக இசைவளித்தல், பெரும்பான்மை யான தொழில்களில் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பளித்தல், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நிலம் வழங்குவதைத் தடைசெய்தல்; வேலை வாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்க வழிவகை செய்தல்; சுற்றுச் சூழலுக்குக் கேடான தொழில்களைத்தடை செய்தல்; தொழில் துறை ஊர்ப்புற வாழ்க்கையை அழிக்கா வண்ணம் நெறிப்படுத்துதல்; விளைபொருள் மறு உற்பத்தித் தொழில் களில் உழவர்களுக்கு முன்னுரிமை அளித்தல்.

கடைநிலை மக்களின் வருவாய் அடிப்படையில் பங்குத் தொகையை வகுத்து பொதுமக்களும் அரசும் பங்குபெறும் பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்குவது.

வணிகம்
உருவாக்குநர்கள் (உற்பத்தியாளர்கள்) விற்பனையின் பங்குத்தொகையைப் பெறுவதற்கு வழிவகை செய்தல்; படிநிலை அடுக்குமுறை வணிக நிலையை மாற்றியமைத்தல்; வட்டாரம் சார்ந்த சந்தைகளை உருவாக்கி நிலைப்படுத்துதல்; மொத்தக் கொள்முதலை அரசே ஏற்றுநடத்த வழிவகை செய்தல்; சிறு வணிகம் வரை அரசு சார்பு நிறுவனங்களை ஈடுபட வைத்தல்; பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூர் வணிகங்களில் ஈடுபடுவதைத் தடைசெய்தல்.

விலை அளவை மாநில அளவில் ஒரே சீராக நெறிப்படுத்துதல்; தன்னுதவிக் குழுக்களுக்கு வணிக வாய்ப்பை ஏற்படுத்தி வழங்குதல்; அனைத்துப் பிரிவினருக்கும் வணிக வாய்ப்பை பொதுமைப்படுத்துதல்; கூட்டுறவு வணிக முறைக்கு முன்னுரிமை வழங்குதல்.

நுகர்பொருள்
மண்ணெய்யும், எரிவளிக் கலன்களும் தேவையான அளவு கிடைக்க வழிவகை காணுதல். உணவகங்களில் உணவு தரத்தையும் விலையளவையும், கட்டடங்களின் வாடகைத் தொகையையும் நெறிப்படுத்துதல்.

பண்பாடு
தமிழ்மரபு சார்ந்த வரலாறு, இலக்கியம் இவற்றின் அடிப்படையில் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்குக் கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், நூல்கள் வெளியிடுதல், மாநாடுகள் நடத்துதல், உலக மொழிகளின் நல்ஆக்கங்களை மொழிபெயர்ப்புச் செய்தல், உலக இனங்களின் வாழ்க்கை முறைகளைக் காட்சிப்படங்கள், சுற்றுலா போன்றவை மூலம் அறிமுகம் செய்து வாழ்க்கை முறைகளை செழுமைப்படுத்துதல் மூலம் மனிதவள மேம்பாட்டுக்குரிய பண்புக் கூறுகளை வளர்த்தெடுப்பது.

பாலியல் தொழிலை முற்றாக ஒழித்து, சிதைக்கப்பட்ட பெண்களை மாற்றுத் துறைகளில் ஈடுபடுத்துதல்.

சாதி - சமய மறுப்புத் திருமணம் செய்துகொண்டோருக்கு உயர்கல்வி வரையிலும் வேலை வாய்ப்புகளிலும் முன்னுரிமையும் தனி இடஒதுக்கீடும் வழங்குவது. சாதி - சமயப் பதிவுகளை மறுப்பவர்கட்கு அனைத்திலும் முன்னுரிமை வழங்குதல்.

கலை, இலக்கியம்
குழந்தை வளர்ப்பு முதல் முதியோரைக் காப்பதுவரை அனைத்து வாழ்க்கை முறைகளையும் உயர்ந்த கலை, இலக்கிய வடிவங்களில் வழங்குதல், சீரழிவு மிகுந்த கலை, இலக்கிய வடிவங்களைத் தடை செய்தல், நாளிதழ், கிழமையிதழ், திரைத்துறை, தொலைக்காட்சி ஆகியவற்றை உரிய முறையில் நெறிப்படுத்துவது.

பத்து வயது முதல் கருவி இசை, குரல் இசை, நடனம், தற்காப்பு கலைபோன்ற கலைகளைப் பயிற்றுவித்தல்.

தொழிலாளர்
அமைப்புசாராத் தொழிலாளர்களின் வாழ்க்கையைக் காப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் அரசின் ஒப்பந்தமுறை உழைப்புகளை நேர்முகமாக வழங்குதல், வேளாண்மைத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கு பயிர்த் தொழில் கூலியின் ஒரு பங்கினை அரசே வழங்குதல், தொழிற்சாலை மேலாண்மையில் தொழிலாளர்கள் பங்கேற்க வழிவகை செய்தல்.

உருவாக்கத்தின் (உற்பத்தி) அடிப்படையில் சம்பளம் பெறுவதற்கு வழிவகை செய்தல்; குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றாக ஒழிப்பதற்குக் குடும்ப வருவாயை உறுதிப்படுத்தி மேம்படுத்துதல்; தொழிலாளர்களுக்கு அனைத்துத் துறைகளிலும் சலுகைகள் பெறுவதற்கு வழிவகை செய்தல்.

சிறு உழவர், உழவுத் தொழிலாளர், தொழிலாளர், சிறு தொழில் முனைவோர், சிறு வணிகர் ஆகியோர்க்கு இலவயக் காப்பீடும் 60 அகவையிலிருந்து ஓய்வூதியமும் வழங்குவதற்கு வழிவகை காணுதல். இறந்தபின்பு அடக்கம் செய்யும் முழுச்செலவையும் அளிப்பதற்கு ஏற்பாடு செய்தல்.

பெண்கள்
பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சமனளவு பங்கேற்புச் செய்ய வாய்ப்புகளை வழங்குதல், பெண்களை நுகர்வுப் பொருளாகக் கருதுவதை மாற்றுவதற்கு ஊடகத்துறை, இதழ்கள், பாலியல் அடைவுகள் ஆகியவற்றை நெறிப்படுத்துதல்; பாலின சமத்துவம் நிலவுவதற்குரிய கல்வி, வேலை வாய்ப்புகளை வழங்குதல்.

ஒழுக்கநெறிகளை இருபாலருக்கும் பொதுவானதாக நெறிப்படுத்துதல், பாலியல் சிந்தை கடந்து ஆண், பெண் நட்பு முறை மேம்பட வாழ்வியல் பயிற்சியை வழங்குவது.

கருவுற்ற மகளிருக்கு இரண்டு மகப்பேறுவரை முழுப்பாதுகாப்பு அளித்தல்.

குழந்தைகள்
குழந்தைகளை மழலையர் பள்ளிகளில் அடைக்கும் கொடுமைக்குத் தீர்வு காண்பது. குழந்தைகளின் உணர்வுகள், உரிமைகள் மதித்துப் போற்றப்படுத்துவதற்குப் பெற்றோர் களுக்கு உரிய பயிற்சி அளித்தல்; குழந்தைகளை ஒடுக்குமுறை செய்வோருக்கு உரிய தண்டனையை வழங்குதல்; குழந்தை வளர்ப்பில் சிறந்து விளங்குபவருக்கு அரசுத் துறைகளில் முன்னுரிமை வழங்குதல்; குழந்தைகள் மீது திணிக்கும் வகைக் கல்வியை முற்றாக மாற்றுதல்; குழந்தைகளின் இயல்புகள், திறன்களுக்கு ஏற்ற கல்வியை வழங்குதல்; குழந்தைகளின் வெளிப்பாடுகளை ஏற்பளித்துப் பாராட்டிப் பெருமைப் படுத்துதல் மூலம் மனிதவளத்தை மேம்படுத்துதல்.

இளைஞர்கள்
தலைமுறை இடைவெளி குறைவதற்குப் பழகுமுறைகளை வகுத்து இளைஞர்கட்கும் முதியோர்கட்கும் இடையில் உணர்வுப் பகிர்வைச் செய்துகொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்துதல்.

தொல்குடியினர்
தொல்குடியினரின் வாழ்வு மேம்படுத்துவதற்குச் சிறப்பு உட்கூறு திட்டத்தை விரைந்து செயல்படுத்துவது. சாதி, மதங்களைக் கடந்து மொழிவழி இனமாக ஓர்மையடைவதற்கு உரிய சமூகப் பொருளியல் கட்டுமானங்களை உருவாக்குதல்; மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை மாற்றி முழுமையான எந்திர மயமாக்குதல்;

தொல்குடியினருக்கு அளிக்கப்பட்ட பெஞ்சமின் சட்டவழி பஞ்சமி நிலங்களை மீட்டு முழுமையாக அவர்களிடம் அளித்தலுக்கு வழிவகை காணுதல்.

மலைவாழ் மக்கள்
பழங்குடி மக்களுக்கு காட்டுத்துறைப் பிரிவின் தலைமைப் பொறுப்பை அவர்களுக்கே வழங்குதல்.

காடு, மலை வளக் கொள்கையை அவர்களின் பங்கேற்புடன் உருவாக்குதல்; மூத்த குடிமக்கள் என்னும் முறையில் அனைத்துத் திட்டங்களிலும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குதல்.

திருநங்கையர்
திருநங்கையர்க்கு அனைத்து வாழ்வியல் நல உரிமைகளை வழங்கிப் பொருளாதார மேம்பாட்டுக்கான வழிகளை அமைத்தளித்து சமூக ஏற்பைப் பெறச் செய்தல்.

மின்சாரம்
கடல் அலை மின்னாக்கத்தை வெற்றியடையச் செய்ய முனைதல்; வீடு, சிறு தொழில்களுக்குத் தேவையான மின்னாக்கத்தை அவர்களே உருவாக்கிக் கொள்வதற்கு வழிவகை காணுதல்.

தனியார் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் மின்சாரத்தை அவரவர்களே உருவாக்கிக் கொள்வதற்கு வாய்ப்பளித்தல். அணுமின் நிலையங்களை அகற்றி இயற்கை சார்ந்த மின்னாக்கங்களை உருவாக்கிக் கொள்ளுதல், சுரங்கத் தொழில்களை இயற்கை கூறுகள் சிதையாவண்ணம் கட்டுப்படுத்துதல்.

மின்னாற்றல் தடங்கலில்லாமல் சரியான கட்டணத்தில் கிடைக்க வழிவகை செய்தல்.

உயிரி எரி எண்ணெய் (பயோ டீசல்) பெருமளவில் உருவாக்குவதற்கு வழிவகை செய்தல்.

சாலைப் போக்குவரத்து
போக்குவரத்துத் துறையின் வணிக வெறிக் கொள்கையை மாற்றி மக்கள் நலக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல்; சாலை அமைப்பை உடனுக்குடன் சரி செய்தல்; பொது மக்களின் பங்களிப்புடன் போக்குவரத்துக் கொள்கைகைளை அமைத்துக் கொள்ளுதல்.

தொடர்வண்டி
அனைத்துப் பேரூர்களையும் இணைக்கும் இருவழி இருப்புப் பாதைகளை அமைத்தல். மாநில அளவில் உள்ள இருப்புப் பாதை உரிமையை மாநில அரசிற்கு வழங்குவதற்கு வழிவகை செய்தல்.

கட்டடக்கலை - கட்டுமானம்
வீடுகள் - கோட்டங்கள் முதலானவற்றை எழுப்பும் கட்டுமானத் துறையில் தமிழ்மரபு சார்ந்த கட்டடக் கலைகள் மீட்டுருவாக்கம் செய்தல். தற்பொழுதுள்ள கட்டுமான முறை புவி வெப்பமடைவதற்குத் துணையாக அமையப் பெற்றுள்ளது. அடுக்குமாடிக் கட்டடங்கள் நிலத்தடி நீரை உருஞ்சுகின்ற முறையாக உள்ளன. நகர்ப்புறப் பெருக்கம் சுற்றுச் சூழலுக்குக் கேடாக அமைகிறது. ஆதலால், எல்லாப் பருவ நிலைகளுக்கும் ஏற்ற கட்டுமான முறையை நடைமுறைப்படுத்த முனைதல்.

தமிழ்மரபு சார்ந்த கட்டடக் கலைஞர்களைக்கொண்டு கட்டுமானக் கொள்கையை உருவாக்குதல்; தமிழ்மரபுவழிக் கட்டுமானங்களுக்கு சலுகைகள் வழங்குதல்; தற்பொழுதுள்ள கட்டுமான மூலப் பொருள்களை மாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுதல்.

மாற்று அரசியல் அமைப்புக்கான வரைவுகள்
 பொதுத்துறைகள் மக்களுக்குச் சுமையாக இல்லாமல் துணையாக இருப்பதற்கு வழிவகை காணுதல்
 பொதுமக்களுக்குத் தேவையானஅனைத்துச் சான்றுகளையும், பெரும்பான்மை யான அலுவல்களையும் இணையத்தின்மூலம் செய்துகொள்ள வழிவகை செய்வது
 துறைகளுக்கு இடையே உள்ள அதிகார மோதல்களை முற்றாக நீக்குதல்.
 படைத்துறையில் உள்ளோரை பொருளாக்கத் துறையில் ஈடுபடுத்துதல்.
 பன்னாட்டு நதிநீர்க் கொள்கையின்படி, தமிழ்நாட்டு ஆற்று உரிமைகளையும், பிற மாநிலங்களின் ஆற்று உரிமைகளையும் நிலை நாட்டுவது
 மனிதவளம் காக்கின்ற, மேம்பாடு அடைகின்ற சட்டம் ஒழுங்கு முறைகளைக் கொண்டு வருதல்.
 அரசுத் துறைகளைக் காட்டிலும் தனியார் துறை மூலம் வருவாய் ஈட்டம் செய்ய வழிவகுத்தல்.
 தனியார் துறையைக் காட்டிலும் அரசுத் துறைகளில் மேலாண்மை முறையைக் கொண்டு வருதல்.
 அறிவுழைப்பு வேலைக்கு இணையாக உடலுழைப்பு வேலைக்கு வருவாயும் மதிப்பும் பெறுவதற்கு வழிவகை செய்தல்.
 பிச்சையெடுப்பதை முற்றாக ஒழித்தல்; அதற்காக அரசே புகலிட விடுதிகளை அமைத்தல்.
 மதவழிச் சட்டங்களைத் தவிர்த்து அறவழிச் சட்டங்களை உருவாக்குதல்.
 மதவழி இடஒதுக்கீட்டைத் தவிர்ப்பது.
 மதம் சார்ந்த விடுமுறைகளைத் தவிர்த்து வரலாறு சார்ந்த விடுமுறைகளை நடைமுறைப்படுத்துதல்.
 உண்மையான மதச்சார்பற்ற கொள்கையை நடைமுறைப்படுத்துதல்.
 அனைத்து சமயக் கோயில்களிலும் மொழிவழி மரபினரை பூசகர்களாக அமர்த்தம் செய்வது,
 மொழிவழி இனங்களின் இனப்பதிவை மொழிசார்ந்த நாட்டினமாகப் பதிவு செய்வதற்கு வழிவகை காணுதல்.
 மொழிவழி வரலாறுகளை மீட்கவும் மேம்படுத்தவும் வழிவகை செய்தல்.
 மொழிவழிப் பண்பாடு, கலைகள் காப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் வழிவகை செய்தல்.
 மொழிவழி அறிவுசார் சொத்துரிமை முறையையும் தனித்தன்மையைக் காக்கும் வாய்ப்பும் சட்ட வடிவங்களாக இயற்றுவதற்கு வழிவகை செய்தல்.
 மொழிவழி தேசிய இனத்தவர்கட்கு அமனைத்து வாழ்வியல் தேவைகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் தனித்தனி அடையாள அட்டைகள் வழங்க வேண்டும்.
 மொழிவழி மாநிலங்களின் எல்லைகளை வரலாற்றின் அடிப்படையில் மறு ஆய்வு செய்து எல்லைகளைத் திருத்தி அமைக்க ஆவன செய்வது
 மாநிலங்களில் அமைந்துள்ள கனிம வளங்களை மாநிலங்களே பெறுவதற்கு வழிவகை காணுதல்
 அண்டை மாநிலத்தாரும், வெளிநாட்டினரும் சொத்துகள் வாங்குவதைத் தடை செய்தல்.
 மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமையாமல் அனைத்து மாநிலங்களுக்கும் சமனளவு எண்ணிக்கையில் அமைவதற்கு வழிவகை காணுதல்
 ஆளுநர் பொறுப்பையும் 356ஆம் பிரிவு ஆட்சிக் கலைப்புச் சட்டத்தையும் நீக்குவதற்கு வழிவகை காணுதல்.
 தேர்தல் அறிவித்த நாளிலிருந்து ஆட்சி அமையும் நாள்வரை குடியரசுத் தலைவரின் மேலாண்மை நடைபெற ஆவன செய்தல்.
 உலக மொழிவழி இனங்களுக்குள் உறவுகள் ஏற்பட அறம் சார்ந்த வாழ்க்கை முறையை நிறுவுதல்.
 உலகில் அமைதி தவழும் வண்ணம் தற்சார்புக் கொள்கைகளை ஏற்படுத்துதல்.
 ஐக்கிய நாடுகள் மன்றம் அனைத்து நாடுகளின் அறமன்றமாக அமைய வழிவகை காணுதல்
 வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்களின் செயல்களைக் கண்காணித்து நெறிப்படுத்துதல்.
 சந்தைப் பொருளியல் கொள்கையை நாட்டின் பொருளியல் இறையாண்மைக்கு உட்பட்டு நடைமுறைப்படுத்துதல்.
 கூட்டுறவுப் பொருளியல் கொள்கைக்கு முன்னுரிமை அளித்தல்.
 நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறும் நிலையில் தகுதி இழக்கும் சட்ட வடிவம் கொண்டுவருதல்.
 புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் வாழுகின்ற மக்கள் புவியியல் அடிப்படையிலும் மொழிவழி தேசிய இன அடிப்படையிலும் தனிமாநிலக் கோரிக்கை கோருகையில் ஏற்பளிக்க வழிவகை செய்தல்.
 மாநில அரசுகளின் ஒப்புதல் பெற்றே வெளியுறவுக் கொள்கை, படையெடுப்பு, படை உதவி போன்றவற்றை முடிவெடுக்கும் முறைகளைக் கொண்டுவர முனைவது.
 மொழிவழித் தேசிய இனங்களின் இறையாண்மை மிக்க உண்¬மான கூட்டாட்சியை நிறுவுதல்,
தமிழீழத் தமிழர்களை முற்றாக அழிக்கின்ற சிங்கள இனவெறிப்போரை நிறுத்தாமல் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தக் கூடாது எனும் முடிவை தமிழகத்தில் உள்ள கட்சிகள் எடுக்காத நிலையில் வேறுவழியின்றித் தமிழர் கூட்டமைப்புத் தேர்தலைச் சந்திக்கிறது.

மேற்காணும் வரைவுகளை நிறைவேற்றம் செய்வதற்குத் தமிழ்நாடு - புதுவையில் வாழுகின்ற தமிழறிஞர்கள், தமிழமைப்புகள், கல்வியாளர்கள், வழக்குரைஞர்கள், மாணவர்கள், உழவர்கள், மீனவர்கள், வணிகர்கள், தமிழினச் செல்வர்கள், தொழில்துறையினர், தொழிலாளர்கள், மனித உரிமை இயக்கங்கள், பெண்ணுரிமை இயக்கங்கள், இயற்கைக் காப்பு இயக்கங்கள், ஊடகத் துறையினர், கலைத்துறையினர் பிற அனைத்துத் துறையினரும் தமிழர் கூட்டமைப்பிற்கு வலிமை சேர்க்குமாறு வேண்டுகிறோம்.

தமிழர் கூட்டமைப்பு
36, கானாபாக் 4ஆம் சந்து
திருவல்லிக்கேணி, சென்னை - 5.

9994698649, 9282348253

2 comments:

Mark K Maity said...

BEST::: Simply BEST... keep it up. thanks from a eela tamil

முனைவர் இரத்தின.புகழேந்தி said...

தமிழர் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டமைக்கு நன்றி
நாம் எதிர்பார்க்கும் மாற்று அரசியல் எபோது கிடைக்குமோ என ஏக்கமாக இருக்கிறது.