அரங்கநாதன் சீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு எழுதிய பிரணய பத்திரிகை (1454 CE கல்வெட்டு)

தமிழ்க் கல்வெட்டுகளில் ஓர் அழகிய காதல் கடிதம் இருக்கிறது. சீவில்லிபுத்தூரில் இருக்கும் ஆண்டாளுக்குக் கி.பி. 1454-ம் ஆண்டு திருவரங்கம் பெரியபெருமாள் எழுதிய பிரணய பத்திரிகை. ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவிலில் இந்த அரிய கல்வெட்டினைக் கண்டறிந்து உலகுக்கு வெளிப்படுத்தியவர் தமிழறிஞர்  கோவைகிழார் ஆவார். பல ஆண்டுமுன், கோவையில் அச்சாகும் ஓம்சக்தி இதழில் கட்டுரை எழுதினேன். கல்வெட்டுப்படி, சாசனமாலை (1960: எஸ். ராஜம்) இங்கே.
   இன்றோ திருவாடிப் பூரம்! எமக்காக
   அன்றோஇங்கு ஆண்டாள் அவதரித்தாள்! – குன்றாத
   வாழ்வான, வைகுந்த வான்போகம் தன்னைஇகழ்ந்து,
   ஆழ்வார் திருமகளா ராய்!
                                       - மணவாள மாமுனிகள்
கோதையின் தரிசனம்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ஐந்து வடிவங்களில் அருள் பாலிக்கிறாள். மூலவருக்கு சூடிக்கொடுத்தாள் என்பது திருப்பெயர்.

கௌதுக பேரம் எனப்படும் (செல்வ) ஆண்டாளின் திருப்பெயர் மல்லி வளநாடி. முற்காலத்தில் இந்த பகுதிக்கு 'மல்லி வளநாடு’ என்பது பெயர். இந்த நாட்டை ஆள்பவள் எனும் பொருளில் இப்பெயர் வழங்குகிறது. இந்தத் திருமேனி வெள்ளியால் செய்யப் பட்டது. இவளை மல்லிநாடாண்ட மடமயில் என்பர்.

ஸ்நான பேரம் எனப்படும் திருமஞ்சனத் திருமேனிக்கு புதுவை ஆண்டாள் என்பது பெயர். புதுவை என்பது ஸ்ரீவில்லிபுத்தூரின் பெயர்களில் ஒன்றாகும்.

வீதி கண்டருள்வாள் எனும் உற்ஸவத் திருமேனிக்கு 'திருப்பாவை பாடினாள்’ என்பது பெயர்.

நித்தியோற்ஸவராக (பலிபேரம்) உள் வலம் வந்து ஸ்ரீபலி சாதிக்கும் ஆண்டாளுக்கு, 'வேயர் பயந்த விளக்கு’ என்பது பெயர்.

----------------------------
தமிழ் இந்தியாவின் பழமையான செம்மொழி. பாரத பார்லிமெண்ட்டால் செம்மொழி என்று முதன்முதலாக அறிவித்த மொழி. எப்பொழுதுமே, ஒரு மொழியின் பரப்பளவு விசாலமாகிக்கொண்டே இருக்கவேண்டும். இந்தியாவின் பக்தி இலக்கியங்களிலே, இந்தியாவின் செம்மொழி ஆகிய ஸம்ஸ்கிருதத்தில் உள்ள ஆகச் சிறந்த பக்தி இலக்கியம் ஸ்ரீமத் பாகவதம். இதன் அடிப்படையாக, தமிழ் ஆழ்வார்களின் பாசுரங்கள் திகழ்கின்றன. ஒரு மொழியின் அழிவு, சொல்வளத்தை இழப்பதால் ஏற்படும். ஆழ்வார்கள், ஸ்ரீதர என்னும் வடசொல்லைச் சீதரன், சிரீதரன் என்று மொழிபெயர்ப்பர். என் முன்னோர் ஒருவர் பெயர் சீரங்கசாமி. சீரங்கம், சீவைணவம், சீவில்லிபுத்தூர், சீகத்தம் (< ஸ்ரீஹஸ்தம், திருமந்திரம்), சீகாரியம் (ராஜராஜீசுவரம் உடையார்கோயில் சீகாரி யஞ் செய்வானுக்கும் (S. I. I. ii, 311)), சீதனம், சீதாளி (தாளிப்பனை), சீதேவி, சீபாதம், சீமங்கலி (பாணன், நாவிதன்), சீமான், சீபலி, சீபண்டாரம்,, சீமத்து (செல்வம்), சீமந்தம் (சீர்), சீமுகம் (கடுதாசி) சீவலி (ஸ்ரீபலி), ... என்றெல்லாம் எழுத்திலும் சொல்லிலும் தமிழிலும் பயன்படுத்துவது வழக்கம்.

சீவில்லிபுத்தூர் என இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் பல நூற்றாண்டுகளாக உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரை மக்கள் சீலத்தூர் (அ) சீலுத்தூர் என்று பேச்சில் சொல்லுவது வழக்கம்.
தமிழின் சில முக்கியமான கல்வெட்டுகளைச் சாசனமாலையில் (1960) கற்கலாம்:
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0021978_சாசன_மாலை.pdf

சீவில்லிபுத்தூர்க் கல்வெட்டு, வாணாதிராயர்கள் ஆட்சிக் காலத்தில் எழுதப்பெற்றது. முனைவர் வெ. வேதாசலம், தொல்லியற்றுறை நூல் (1987):
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0009492_வாணாதிராயர்கள்.pdf
Here is a rare Tamil inscription, dated 1454 CE. A Love Letter from Ciivilliputtuur to Tiruvarangam. சீவில்லிபுத்தூர்ச் சிலாலிகிதத்தை வாசிப்போம்.  வெள்ளுரையாக (Plain-text) இணையத்தில் முதல்முறை:
உறங்காவில்லி தாசனான மாவலி வாணாதிராயன் (கி.பி. 1454)

     ஏதத் த்ரைலோக்ய நிர்மாண த்ராண ஸம்ஹார காரணம், 
    ஸ்ரீமன் ஸ்ரீரங்கநாதஸ்ய சாசனம் சாஸ்வதம் பரம்.  
ētat trailōkya nirmāṇa trāṇa saṁhāra kāraṇam |
śrīman śrīraṅganāthasya śāsanaṁ śāśvataṁ param ||

   'பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும்
           புதுவையர் கோன் விஷ்ணுசித்தன்'[1]
   கோதைக்கு நாம் வரக்காட்டின ப்ரணய பத்திரிகை :

'பக்தர்களும் பகவர்களும் பழமொழிவாய்
       முனிவர்களும் பரந்து, நாடும்
சித்தர்களும் தொழுதிறைஞ்ச, திசை விளக்காய்
       நிற்கின்ற' [2]

'நல்லார்கள் வாழும் நளிர் அரங்கப் பெரு நகருள்,' நம் வீட்டில், சேரனை வென்றான் மண்டபத்துச் சுந்தர பாண்டியன் பந்தல்கீழ், அரிய ராயன் கட்டிலில் இருந்து, உம்பரும் தும்புரு நாரதர் வந்து முகம் காட்ட, அவர்களுக்கு அழகு ஒலக்கம் கொடுத்து இருக்கச் செய்தே. நம் வீட்டில் - குடவர், கோவணவர், பூவிடுவர், தழை விடுவர், தண்ணீர் சுமப்பார், தண்டெடுப்பார், அணுக்கர், கணக்கர், மற்றும் நம் காரியத்துக்குக் கடவர் எல்லோரும் வந்து, - நம் கோதை வீட்டினின்றும் அர்ச்சகர், குடவர், கோவணவர், தண்டெடுப்பார், 'ஸ்ரீ ராமாநுஜ உடையார் வந்தார்கள்' என்று, நாமும் சர்வ பரிகரமும் அனைத்துக் கொத்துள்ளாரையும் எதிரே போகவிட்டு, தம் வீட்டில் உள்ளாரையும் கூட்டிக் காண்பித்துக் கொள்ளும் அடைவிலே காண்பித்துக் கொண்டு, தாம் வரக்காட்டின சம்மானமும் சுவீகரிக்கும் அடைவிலே சுவீகரித்தோம். தாம் வரக் காட்டின சாசனமும் வாசித்துக் காட்ட அறிந்து கொண்டோம். தாம் சொல்லிவரக் காட்டின படியாவது: 'நாம் பதினாறாமாயிரவர் தேவிமாருடனே, பெரிய மண்டபத்திலே, விநோதித்திருந்தோம்' என்று, தம் சுற்றத்துத் தோழிமார் தமக்குச் சொல்ல, அப்பொழுது தாம் புண்ணிற் புளி பெய்தாற் போலேயும், வேலால் துன்னம் பெய்தாற் போலேயும், நெஞ்சு ஊடுருவ வேவுண்டு, நிலையும் தளர்ந்து,

                 'கொள்ளும் பயன் ஒன்று இல்லாத
                        கொங்கை தன்னைக் கிழங்கோடும்
                அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில்
                        எறிந்து என் அழலைத் தீர்வேனே'[3]

என்றும் உள்ளே உருகி நைந்து, தாம் நம்மைப் பொருத்தமிலி என்றும், புறம்போல் உள்ளும் கரியான், பெண்ணின் வருத்த மறியாத பெருமான், 'வஞ்சக்கள்வன் மாமாயன்,' 'பாம்பணையார்க்கும் தம் பாம்புபோல் நாவும் இரண்டுள வாய்த்து நாணிலி'[4] என்றும், தாய் சொல்லிவரக் காட்டினது தாம், மாமிமார் மக்களாகையாலும், நாம் மாமனார் மக்களாகையாலும், நந்திறத்து ஊடல் கண்டு உவப்ப வேண்டிச் சொன்னதாயிருக்கும். நாம் 'முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்ப்பது' காரியம் ஆகவும், தேவரகசியமாகவும், பெரிய மண்டபத்தில் இருந்தோம். தாம் மணவாளர் வைத்த பரிசிலே இருந்தோம் என்றும், நாங்கள் எம்மில் இருந்து ஒட்டி அகச்சங்கம் நானும் அவனும் அறிந்தும் என்றும்.

              'பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்கு, பண்டு ஒரு நாள்
              மாசு உடம்பில் நீர் வாரா மானம் இலாப் பன்றி ஆம்
              தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
              பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே[5]
என்றும்,
            'திண் ஆர்ந்திருந்த சிசுபாலன் தேசு அழிந்து,
            அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்த 
             பெண்ணாளன்'[6]

என்றும், 'செம்மையுடைய திருவரங்கர்[7] என்றும் சொன்னபடியே - நாம் தம்மை அல்லது வேண்டுவதில்லை. தம் வீட்டில் உள்ளவர்களைத் தாட்க நிறுத்தி நில்லாமல் வரக் காட்டச் சொன்னபடியே, அவர்களுக்கு வேண்டும் சத்காரங்களும் செய்து, தமக்கு நாம் என்றும் பல்லக்கும், நாம் இருக்கும் குடையும், நாம் பூணும் கண்டமாலை ஆபரணங்களும், பட்டு பருத்தி ஸுகந்த திரவியங்களும் வேண்டுமதும் கொடுத்து, தமக்கு அடுக்களைப் புறமாக நமக்குப் பூர்வம் நடந்து வருகிற சீர்மையில் விட்ட சகாப்தம் 1375 மேல் செல்லாநின்ற ஸ்ரீமுக வருஷம், மீன ஞாயிற்று, பூர்வ பக்ஷத்து, ஏகாதசியும் புதவாரமும் பெற்ற உத்திரத்து நாள், உறங்கா வில்லிதாஸன் ஆன மஹாபலி வாணாத ராயர்— சீர்மையான மதுரை மண்டலத்து, முட்டநாட்டுத் திடியன் ஆன திருவரங்க நல்லூர் எல்லையாவது : மேல் எல்லை, புத்தூர் மலைக்கும் வயிரவன் பற்றுக்கும் கிழக்கு; வட எல்லை, வாரந்தூர்ப் பற்றுக்குத் தெற்கு; கீழ் எல்லை, கருமாத்தூரில் குளத்துக்கு மேற்கு; தென் எல்லை புளியஞ்சோலைக்கும் குத்துக்கல்லுக்கும் வடக்கு; இந் நான்கு எல்லைக்கும் உள்பட்ட, மாவடை, மரவடை, பட்டடை, பதிமுதல் மற்றும் எப்பேற்பட்ட சமஸ்தப் பிராப்திகளும் கைக்கொண்டு, கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்ளவும். இப்படிக்குத் திருவாய் மொழிந்தருளினமைக்கு அருளால் திருமந்திர ஓலை நாயகம் ஸ்ரீரங்கநாதப் பிரியன் எழுத்து.
 [இராமநாதபுரம் ஜில்லா, ஸ்ரீவில்லிபுத்தூர், சூடிக் கொடுத்த நாச்சியார் கோயிலில் உள்ளது.]
 
(சாசனத்தில் குறித்த மேற்கோள்: 1. நாச்சியார் திருமொழி 1:10; 2. பெரியாழ்வார் திருமொழி 4, 9, 6; 3. நாச்சியார் திருமொழி 13, 8; 4. நாச்சியார் திருமொழி 10,3; 5. நாச்சியார் திருமொழி 11, 8; 6. நாச்சியார் திருமொழி 11:9; 7. நாச்சியார் திருமொழி 11: 10.)
---------------------------------------------
தெரிவு:
நா. கணேசன்