அன்னத்தின் வெற்றி
கி. வா. ஜகந்நாதன், கலைமகள் ஆசிரியர்
ஏதோ கைக்கு வந்த புத்தகத்தைப் புரட்டுவது என்ற பழக்கத்தில் ஒரு பள்ளிக்கூடத்துப் பையனுடைய பாட புத்தகத்தைப் புரட்டினேன். ரெயில் வண்டி, கப்பல், ஆகாய விமானம் - இவற்றின் படங்களைக் கண்டேன். கண்ணை அந்தப் பக்கத்தில் ஓட்டினேன். "வாகனங்கள்” என்ற தலைப்பில் ஒரு பாடம். வரவர விஞ்ஞான ஆராய்ச்சியினால் மனிதர்களுக்கு ஏற்பட்டுவரும் வசதிகளையும், மனிதன் தரைமீது காலால் நடந்து, வண்டியில் போய், கடல்மீது போய், வானத்திலும் பறக்கும் வகை வந்த கதையையும் பாடத்தில் கண்டேன். 'நிலம் நீர் வானம் என்ற மூன்று இடங்களிலும் செல்லும் ஆகாய விமானங்களே இனி வரும் உலகத்து வாகனங்கள். சண்டையானாலும் சமாதானமானாலும் இந்த மூன்று இயல்பும் ஒருங்கே பொருந்திய விமானங்களுக்குத்தான் இனிமேல் மதிப்பு உண்டு' என்று பாடம் முடிந்திருக்கிறது. படித்துப் புத்தகத்தை மூடினேன். கண் இமைகள் தாமே மூடின. நித்திராதேவி இறுகத் தழுவினாள். கனவு உதயமாயிற்று.
1
“தாயே, எனக்கு இனி இந்த வாழ்வு போதும். பரம கருணாநிதி யாகிய உன்னுடைய சந்நிதானத்தில் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு பிராணனை விட்டுவிடுகிறேன். எங்கள் ஜாதி முழுவதும் நிர்மூலமாகப் போகட்டும். அதனால் எனக்கு ஒன்றும் துக்கமில்லை. ஆனால் பதவிச் செருக்காலும் செல்வாக்கினாலும் மமதை ஏறிப்போனவர்களுடைய ஏளனச் சொற்களைக் கேட்டு மானமின்றி உயிர் வாழ்வதென்பது இனி ஆகாத காரியம். எங்கள் ஜாதிக்கு உயர்வு எதுவும் வேண்டாம். தாழ்வு இராமல் இருந்தால் போதும். ஹே கருணாலோசனி, சர்வ ஜீவர்களுக்கும் மாதாவாகிய உன் திருச்செவியில் என் விண்ணப்பம் ஏறாவிட்டால் எனக்கு இனிப் புகலிடம் இல்லை."
சிலம்பு ஒலிப்பது போன்ற தொனியில் இந்த முறையீடு அம்பிகையின் திருச்செவியில் விழுந்தது. ஸ்ரீ கைலாசத்தில் இறைவனுடன் திருவோலக்கத்தில் இருந்து தேவர்களுக்கெல்லாம் கருணாகடாட்சத்தை வழங்கிவிட்டு அப்போதுதான் அந்தப்புரத்துக்கு வந்து இளைப்பாற அமர்ந்தாள் தேவி. அவள் காதில் இந்தத் துக்கக் குரல் விழுந்தது. தன் குழந்தைகளின் துயரத்தைத் தானே உணர்ந்து வலியச் சென்று திருவருள் பாலிக்கும் பரமேசுவரி, இதைக் கேட்ட பிறகு வாளா இருப்பாளா? பரக்கப் பரக்க மஞ்சத்திலிருந்து எழுந்து எட்டிப் பார்த்தாள். அழகிய ராஜஹம்ஸம், பிரமதேவனது சிங்கார வாகனம், தளர்ந்த உடம்பும் சோர்ந்த முகமும் மேல் வாங்கும் மூச்சும் உடையதாக நிலைக்கு வெளியே நின்றது.
"குழந்தாய்,இப்படி உள்ளே வா" என்று அம்பிகை தேனொழுகக் கூறினாள்.
மெல்ல மெல்ல அன்னம் உள்ளே நுழைந்தது. அம்பிகையின் திருவடி மலர்களில் விழுந்து, "அஞ்சல் என்று சொன்னாலன்றி எழுவதற்கு எனக்குச் சக்தியில்லை'' என்று பொங்கி வரும் விம்மல் சுருதி கூட்டப் புலம்பியது.
“பயப்படாதே. உனக்குத் துக்கம் வர நியாயமே இல்லையே! ஆருயிர்களைச் சிருஷ்டித்து, அவர்களுக்கு வேண்டிய பொருள்களையும் சிருஷ்டித்து, அவர்களுக்குரிய இன்பங்களையும் சிருஷ்டித்துத் தன் செங்கோல் நடத்தும் நான்முகனுக்கு வாகனமாக இருக்கும் பாக்கியம் இருக்கும் போது உனக்குக் குறை ஏது?”
இந்த ஆறுதல் வார்த்தையே ஹம்ஸராஜாவினுடைய துயரத்தைக் கிளறிவிட்டது. விம்மல் அதிகமாயிற்று. மெல்லத் தலையெடுத்துப் பார்த்தது. சிறிது நேரம் பேச முடியவில்லை. பிறகு, "போதும், அந்தப் பாக்கியம். இனி, பிரம்மதேவர் வேறு வாகனத்தை ஏற்றுக்கொள்ளட்டும். எனக்கு அந்தப் பதவி வேண்டாம். எங்கள் இனத்திற்கே வேண்டாம். பூவுலகத்தில் வாத்தோடும் நாரையோடும் சேர்ந்து நத்தையையோ மீனையோ கொத்தி வயிறு வளர்த்துக்கொள்கிறேன். உண்மையாகச் சொல்கிறேன், தாயே! என் பதவியை வாங்கிவிட ஏற்பாடு செய்யவேண்டும். போதும் நான் பட்ட சுகம்!''
தேவி புன்முறுவல் பூத்தாள்; "பாவம்! எப்போதும் ராஜயோகத்திலே இருப்பவர்களுக்கு ஒரு சிறு துக்கம் வந்தாலும் பூகம்பம் வந்ததுபோல நடுக்கிவிடும். நீ ராஜ யோகம் உடையவன். உனக்குத் துக்கத்தின் சாயை லேசங்கூடத் தெரியாது. ஏதோ சிறு புரைசல் எங்கோ நிகழ்ந்திருக்கிறது. அது உனக்கு இவ்வளவு தாபத்தை உண்டாக்கியிருக்கிறது. நடந்தது என்ன? சொல்" என்று அன்போடு வினாவினாள்.
"தாயே, பூவுலகத்தில்தான் ஏழையென்றும் செல்வனென்றும், கூலிக்காரனென்றும் எஜமானனென்றும், உயர்ந்த ஜாதியென்றும் தாழ்ந்த ஜாதியென்றும் பிரிவுகள் இருக்கின்றன என்று கேட்டிருக்கிறேன். பேதமில்லாத பொதுவுடைமை ராஜ்யம் சொர்க்கமென்றே நம்பியிருந்தேன். இங்கேயும் பேதம் உண்டென்று இப்போது தெரிந்துகொண்டேன்; உயர்வு தாழ்வு உண்டென்று உணர்ந்துகொண்டேன்.''
''விஷயத்தைச் சொல்; எதற்காகக் காடு சுற்றுகிறாய்? உன்னுடைய தாபத்தால் தோன்றிய உணர்ச்சிகளைக் கொட்டாதே. அதற்கு மூலமான சம்பவத்தைத் தெரிவி. மற்றதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்.'
அன்பான பேச்சிலே, நடுவில் சிறிது கடுமை தேவியின் குரலில் தொனித்தது, கற்கண்டுப் பாகிலே கடுக்கென்று சிறிய கற்கண்டுத் துண்டு தட்டுப்பட்டதுபோலே. அன்னம் விழித்துக்கொண்டது. நேரடியாகச் செய்தியைச் சொல்ல ஆரம்பித்தது.
* * *
இன்று காலையில் பிரம்மதேவர் ஸ்ரீ கைலாசத்துக்குப் புறப்பட்டார். ஸோமவாரத்தில் ஸர்வலோக நாயகராகிய சிவபெருமானுடைய தரிசனம் இல்லாவிட்டால் அவருக்கு ஒன்றும் ஓடாது. என்மேல் ஆரோகணித்துக் கொண்டு ஸ்ரீ கைலாசத்துக்கு எழுந்தருளினார். வழக்கம் போல என்னைக் கோயிலுக்குப் புறம்பே நிறுத்திவிட்டுப் பரமேசுவர தரிசனத்துக்கு எழுந்தருளினார். ரிஷபதேவர் இருக்கும் மண்டபத்தில் என்னை விட்டுச் சென்றார். நான் உள்ளே போனேன். அங்கே புகுந்தவுடனே எனக்கு ஒரு விஷயம் தெரியவந்தது. நாராயண மூர்த்தியும் அன்று பரமசிவனுடைய தரிசனத்துக்கு வந்திருக்கிறார் என்பதை உணர்ந்தேன். ரிஷபதேவர் இருக்கும் இடத்தில் கருட தேவரும் இருந்தார். இருவரும் உல்லாசமாகப் பேசிக் கொண்டிருந்தனர். நெடுநாள் காணாமல் சந்தித்தவர்கள் போல மிகவும் சந்தோஷத்தோடு சிரித்துக்கொண்டு சல்லாபம் செய்துகொண்டிருந்தார்கள்.
ரிஷபதேவர் என்னைக் கண்டவுடன் திடீரென்று பேச்சை நிறுத்திவிட்டுக் கண்ணைக் காட்டினார். அந்தக் குறிப்பினால் நான் வருவதைத் தெரிந்துகொண்ட கருட தேவர் என்னைத் திரும்பிப் பார்த்தார். பார்த்தவர் ஒன்றும் பேசவில்லை. வா என்றும் சொல்லவில்லை.
நான் எப்போதும் போல, "என்ன, திடீரென்று பேச்சை நிறுத்திவிட்டீர்களே! நான் வந்தது தடையாக இருக்கிறதோ?" என்று வேடிக்கையாகக் கேட்டேன்.
ரிஷபதேவர் என்னை ஏறெடுத்துப் பார்த்தார். ஏளனமாகச் சிரித்தார்; 'ஓகோ! உனக்காகப் பயந்து கொண்டு நாங்கள் மௌனம் சாதிப்போம் என்று நினைத்து விட்டாயோ?" என்று அதுகாறும் கேட்காத ஏதோ தொனியிலே சொன்னார். என் காதை அது அராவியது. .
"பேசிக்கொண்டே இருந்தவர்கள், திடீரென்று நிறுத்திவிட்டீர்களே என்று கேட்டேன்'' என்று நான் சிரித்தபடியே சொன்னேன்.
"பேசுவதும் பேசாமல் இருப்பதும் எங்கள் இஷ்டம். தலை போயும் மானம் போகாமல் உயிர் வாழ்வோருடைய சேவகன் கட்டளை இடவேண்டிய அவசியம் இல்லை” என்று பிரம்பால் அடித்ததுபோலப் பேச்சு வந்தது; பார்த்தேன். கருடதேவரே அத்தனை ஆக்கிரோஷத்துடன் பேசினார் ; பறவை இனத் தலைவராக விளங்கும் சாக்ஷாத் கருடஸ்வாமியே இப்படி ஆத்திரத்துடன் பேசினார். "
எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. எம்பெருமானாகிய சதுர்முகப் பிரம்மாவையும் அவர்கள் இழுத்து வரும்படியாக அவர் அவர்களுக்கு என்ன செய்தாரோ தெரியவில்லை. என்றைக்கோ நடந்ததாகச் சொல்லும் கதையை அவர்கள் இப்போது எடுத்துப் படிக்கக் காரணமும் விளங்கவில்லை. சிருஷ்டிகர்த்தா ஐந்து முகங்களை முதலில் பெற்றுப் பிறகு பரமேசுவரனுக்குத் தம் சிரசையே சமர்ப்பணம் செய்து வன்மை பெற்றதை அந்த இரண்டு பெரியவர்களும் அப்போது நினைக்க வேண்டிய அவசியம் என்னவோ, தெரியவில்லை.
நான் நிதானித்துக்கொண்டேன். "பெரியவர்கள் பேச்சை இங்கே இழுக்க வேண்டாம்; அடியேனைப்பற்றி எது வேண்டுமானாலும் சொல்லுங்கள். எம்பெருமானைப் பற்றிச் சொல்லாதீர்கள். என்மேல் உண்டான கோபத்துக்கு அவர் காரணமாக மாட்டார்" என்றேன்.
இப்படிப் பேசிக்கொண்டிருந்த போதே, "பூவுலகத்தில் குலாலன் சட்டிபானை பண்ணுகிறான். தேவ லோகத்தில் இவர் பண்ணுகிறார். அவனுக்கும் இவருக்கும் வித்தியாசமே இல்லை. இந்த அழகுக்கு, இவரையும் சேர்த்து மும்மூர்த்திகளென்று சொல்லும்படியாகச் சட்டம் வேறு போட்டிருக்கிறார்கள்'' என்று ரிஷபதேவர் கொதித்துப் பேசினார்.
"அவர்கள் மூவரும் சேர்ந்து நின்றால் நமக்கு என்ன? நம்மைப் பற்றிய அளவில் நம்முடைய விமரிசனத்தை வைத்துக்கொள்வோமே!" என்று நான் பணிவாகவே சொன்னேன். இதில் என்ன தாயே குற்றம் இருக்கிறது? திரிமூர்த்திகளுடைய அந்தஸ்தை எடை போட்டுப் பார்க்க எங்களுக்கு அறிவோ, அதிகாரமோ ஏது?
என் வார்த்தைகள், எரிகிற தீயில் எண்ணெய் விட்டதுபோல் ஆயின. இரண்டு பேரும் மாறி மாறிச் சீற ஆரம்பித்து விட்டார்கள்.
"யாருக்கடா புத்தி போதிக்க வருகிறாய்? நண்டையும் நத்தையையும் தின்று வயிறு வளர்க்கும் ஜாதிக்குப் பேச்சைப் பார், பேச்சை! திரிமூர்த்திகளாம்! கண்டானாம்!" என்று ஒருவர் குமுறினார்.
"பெண்ணைப்போல நடந்து பெண்ணைப்போல நெளியும் உனக்கு ஆணவம் தலைமேலே ஏறியிருக்கிறது. பூ என்று ஊதினால் நாற்பது காதம் போய்விழுவாய். தாமரைப் பூவாவது சிறிது கனமாக இருக்கும். அதைவிட லேசான ஆகிருதி படைத்த உனக்கு வாய் வேறேயா?" என்று ஒருவர் பொங்கினார்.
''நானும் திரிமூர்த்தியிலே ஒருவன் என்று அவர் சொல்கிறாராம். இவன் நானும் உங்களோடு சேர்த்தி என்று இங்கே வந்தானாம்! போதும் போதும் உன்னுடைய உறவு. இனிமேல் இந்தப் பக்கம் எட்டிப் பாராதே. உன் எஜமானன் வந்தால், அவரோடே போய் நில். இல்லாவிட்டால் கைலாச மலை அடிவாரத்தில் மற்ற தேவர்கள் வாகனங்கள் நிற்கும் கொட்டகை இருக்கிறது. அங்கே போய் நீ உன் அதிகாரத்தையும் நியாயத்தையும் காட்டு. இந்தப் பக்கம் எட்டிப் பார்த்தாயோ..." என்றார் ரிஷபதேவர்.
"நான் பட்சிராஜா என்ற மரியாதை கூட இல்லை. என்ன துணிச்சல் உனக்கு? சீ புழுக்கை!" என்று உத்தண்டமாகப் பேசிக் காறித் துப்பினார் கருடஸ்வாமி.
அவர்கள் திருவாக்கிலிருந்து வந்த வார்த்தைகளை அப்படியே சொல்ல எனக்குத் திராணி இல்லை. அவ்வளவையும் சொல்ல முடியவும் முடியாது. நான் தேவ லோகத்தில் வாழ்ந்தது போதும். என்னால் பிரம்மதேவருக்கு இகழ்ச்சி வந்ததும் போதும். உன்னுடைய கருணை எனக்கு இருக்குமென்று துணிந்து முறையிட வந்தேன். என்னைப் பழித்தது பெரிதல்ல; சிருஷ்டி கர்த்தாவையே பழித்தார்கள்; அதற்குமேல் பெண்குலத்தையே பழித்தார்கள். எனக்கு அருள்க, தாயே!
* * *
இந்த விவரத்தைச் சொல்லிவிட்டு மீட்டும் விக்கி விக்கி அழத் தொடங்கியது ஓதிம அரசு. தேவி மனம் கனிந்து, "ஹம்ஸ ராஜாவே, எதற்காக இப்படித் துக்கிக்கிறாய்? இதெல்லாம் என்னுடைய திருவிளையாட்டென்று எண்ணிச் சந்தோஷப்படு. அவர்கள் சொன்ன வார்த்தைகளுக்கு நீ பதில் சொல்லாமல் பணிந்து வந்தாயே, அதை மெச்சுகிறேன். உன்னுடைய துக்கத்தை மாற்ற வழி தேடுகிறேன். நீ கவலைப்படாதே. நீ போய் வழக்கம் போல் உன் கடமையைச் செய்துகொண்டிரு. அகங்காரத்துக்குக் கைலாசம் இடம் கொடாது. இந்த எல்லைக்குள் அகங்காரத்தை அடைந்தவர்கள் யாரானாலும் தண்டனை பெறுவார்கள். நீ எல்லாவற்றையும் மறந்துவிடு" என்று அருள் செய்து ஹம்ஸத்துக்கு விடை கொடுத்து அனுப்பினாள் அகிலாண்ட நாயகி.
ஹம்ஸம் அம்பிகையின் குழலொலி போன்ற அந்த மதுர வார்த்தைகளால் தாபம் ஆறிச் சத்திய லோகத்தை அடைந்தது.
ஸ்ரீ கைலாசத்தில் அன்று ஏதோ ரகசிய ஆலோசனை நடந்தது. வழக்கம்போல ரிஷப தேவரும் கருடதேவரும் திருக்கோயிலின் வெளியிலே உள்ள மண்டபத்தில் இருப்பவர்கள், அடிவாரத்து மண்டபத்திலே இருந்தார்கள். மிகவும் அந்தரங்கமான ஆலோசனை நடக்கும்போது தான் இப்படி அவர்களுடைய ஸ்தானத்துக்கு மாறுதல் ஏற்படும். ஆனால் இந்த மாதிரியான ரகசியக் கூட்டம் யுக யுகாந்தரங்களுக்கு ஒரு முறைதான் ஏற்படும். இப்போது யுகசந்தி ஒன்றும் இல்லை; பிரளயமும் இல்லை; புதிய சிருஷ்டியும் இல்லை. அப்படி இருக்க இந்த அந்தரங்க ஆலோசனைக்குக் காரணம் தேவர்களுக்கு விளங்கவில்லை. மும்மூர்த்திகளைத் தவிர இந்திரனுக்குக் கூட அந்த ஆலோசனையில் இடமில்லை. திருமாலினுடைய அந்தரங்க ஆலோசனைகளுக்குக் கருடதேவர் புறம்பாக இருக்க மாட்டார். அவர் அறியாத ரகசியமே இல்லை. ரிஷபதேவரும் சிவபெருமானுடைய பிரதான பிருத்யராகிய நந்தியின் அம்சம் அல்லவா? இந்த இருவரையுங் கூட விலக்கிவைத்து மந்திராலோசனை நடக்கிறது.
மந்திராலோசனையின் முடிவு வெளியாயிற்று; வாயு தேவன் அதைப் பிரகடனம் செய்தான். "தேவலோகத்தில் ஏதாவது புதிய விநோதம் நடக்கவேண்டுமென்பது திரிமூர்த்திகளின் யோசனை. பூலோகத்தில் வாகனங்களை ஓடவிட்டுப் பந்தயம் நடத்துகிறார்களாம். அப்படி இங்கும் வாகனங்களைக் கொண்டு பந்தயம் நடத்துவதாக திருவுள்ளங் கொண்டிருக்கிறார்கள் மும்மூர்த்திகளும். முதல் முதலில் தங்களுடைய சொந்த வாகனங்களை கொண்டே இந்த விநோதத் திருவிளையாட்டை நடத்தத் தீர்மானித்திருக்கிறார்கள்'' என்ற செய்தி தேவலோகம் முழுவதும் பரவியது. பரவாத இடங்களுக்கெல்லாம் தாமே போய்ப் பரப்பினார் நாரத பகவான்.
2
செய்தி ரிஷபதேவர் காதில் விழுந்தது; கருடபகவான் செவியேற்றார்; பிரம்ம தேவருடைய அன்னமும் தெரிந்து கொண்டது. 'நம்மையுமா அந்தக் கூட்டத்தில் சேர்த்தார்கள்? நாம் ஜயிக்கிறோமோ இல்லையோ? அந்த இரண்டு வாகனப் பெரியாரோடும் சேர்ந்து போவதே ஒரு புதிய மதிப்பு. இது அம்பிகையின் கருணை போலும்!' என்று ஹம்ஸம் எண்ணியது.
'இதென்ன பைத்தியக்கார யோசனை! உலகையெல்லாம் க்ஷண நேரத்தில் சுற்றிவரும் நம்முடைய பராக்கிரமத்துக்கும், எட்டின மட்டும் பறந்து வானலோக சாம்ராஜ்யத்துக்கு ஆதிபத்தியம் வகிக்கும் கருடனுடைய பராக்கிரமத்துக்கும் முன்னே, கர்ப்ப ஸ்திரீயைப் போல அசைந்து அசைந்து நடை போடும் பேதை அன்னம் எம்மாத்திரம்! எம்பிரான் திருவுள்ளத்தில் இந்த விசித்திர எண்ணம் தோன்றக் காரணம் என்னவோ! என்ற நினைவில் ஆழ்ந்தார் ரிஷபதேவர்.
'அன்னக் குஞ்சின் சிறுமையை வெளிப்படுத்த இப்படி ஒரு சந்தர்ப்பம் வருமென்று யார் எதிர்பார்த்தார்கள்? நம் பெருமை இன்னும் ஒரு முழம் உயரப் போகிறது!' என்று கர்வத்தோடு சிறகை அடித்துக்கொண்டார் வைனதேயர்.
இந்தத் தேவலோக விளையாட்டுக்கு நாள் குறிப்பிட்டாயிற்று. சத்திய லோகத்தில் பந்தயம் தொடங்குவதாகத் திட்டம் போட்டார்கள். சத்திய லோகத்தில் புறப்பட்டு அதைக் கடந்து க்ஷீராப்தியைத் தாண்டி அப்பால் கைலாசமலையை அடைய வேண்டும். யார் முன்பு அதை அடைகிறார்களோ, அவரை அம்பிகை தன் வாகனமாக ஏற்றுக்கொள்வதோடு வேறு சிறப்புக்களும் செய்வாள். இதுதான் பந்தயத்தின் நிபந்தனை. "பூ, இது தானா பிரமாதம்! இம்மென்பதற்குள்ளே ஏழு தடவை சத்தியலோகம், க்ஷீராப்தி, கைலாசம் இந்த மூன்றையும் ஒரே தாவாகத் தாவி வந்துவிடுவேன்" என்று வீறு பேசினார் விடைக்குலத் தலைவர். "இந்த மூன்றென்ன? இந்திர லோகத்தையும் எட்டுப் பிரதட்சிணம் செய்து விட்டு, கற்பக நிழலில் இளைப்பாறிவிட்டு வா என்றாலும் வருவேன்'' என்று கருட பகவான் கூறினார்.
தேவர்களுக்கு இந்த வேடிக்கையைப் பார்க்க வேண்டு மென்று ஆவல் அதிகமாக இருந்தது. அப்ஸரஸுகள் எல்லாம், "ஐயோ! பாவம்! அன்னத்தை இப்படித் துன்பப்படுத்தலாமோ!" என்று அங்கலாய்த்தார்கள். தேவ லோக முனிவர்களெல்லாம், “பரமேசுவரனுடைய திருவிளையாட்டு இது. இதில் ஏதோ சூக்ஷ்மம் இருக்கிறது.” என்று சொல்லிக்கொண்டார்கள்.
* * *
பந்தய நாள் வந்தது. சத்திய லோகம் என்றும் இல்லாத சோபையோடு விளங்கியது. திரிமூர்த்திகளும் தக்க ஆசனத்தில் வீற்றிருந்தார்கள். நாரத மாமுனிவரே பந்தயத்துக்கு ஆணையிடும் அதிகாரியாக நியமிக்கப் பெற்றார்.
மூன்று வாகனங்களும் வந்து நின்றன. ரிஷபதேவர் தலை நிமிர்ந்து நின்றார். கருடதேவர் உடம்பைக் கோதிக் கொண்டு நின்றார். அன்னமோ அடங்கி ஒடுங்கிப் பணிவாக நின்றது.
நாரதர் பேசலானார்: "ஹே விருஷப ராஜாவே, பந்தயத்தின் நிபந்தனைகள் தெரியும் அல்லவா? உமக்குரிய கைலாசந்தான் லக்ஷ்ய ஸ்தானம். பரமசிவனுடைய வாகனமாகிய உமக்கு எப்போதும் முதல் ஸ்தானம் அளிப்பது சம்பிரதாயம் ஆகிவிட்டது. அந்தப் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். இதிலே கலந்துகொள்ள இஷ்டமில்லாவிட்டால் இப்போது அதைத் தெரிவித்துவிடலாம்" என்று சொல்லவே, ரிஷபதேவர் தம் சலங்கைமணியை ஒரு முறை உதறிவிட்டுக்கொண்டே, "என்ன மகரிஷே, அப்படிக் கட்டளை யிடுகிறீர்கள்? என்னுடைய சக்திக்கு எப்போதாவது குறைவு நேர்வது உண்டா? இந்தச் சிறிய காரியத்துக்குப் பயந்துகொண்டு நான் கைலாசத்தில் வாழ முடியுமா? பரமேசுவரனைத் தரிசிப்பதற்கு முன்பு தேவர் என்னைத் தரிசித்துச் செல்லும் பதவி எனக்குச் சும்மாவா கிடைத்தது?" என்று முறுக்காக விடை கூறினார்.
"சரி, அப்படியானால் உம்முடைய உள்ளம் போல உமக்குக் கௌரவம் கிடைக்கட்டும்" என்று அதன் கழுத்தில் ஒரு மாலையை இட்டார் நாரதர்.
அப்பால் கருடனை நோக்கிக் கூறலானார்: "பாற்கடலைக் கண்டவுடன் பழைய ஞாபகத்தில் அங்கே இறங்கி விட வேண்டாம். அதற்கு மேலும் போய்க் கைலாசத்தை அடையவேண்டும், கருடதேவரே! மகாவிஷ்ணுவுக்குப் பெரிய திருவடியாக இருக்கும் உம்முடைய பாக்கியமே பாக்கியம். நீர் பட்சி ராஜாவாக விளங்குகிறீர். பந்தயத்திலே உம்முடைய முழு ஆற்றலையும் காட்டவேண்டும்."
"ஸ்வாமி, கைலாசம் எனக்குப் புதிதல்லவே? பாற்கடலிலிருந்து அடிக்கடி கைலாசம் போகும் வழக்கம் இந்தச் சிறகோடு உடன் பிறந்ததல்லவா? ‘ஈயாடுவதோ கருடற் கெதிரே’ என்ற பழமொழி சர்வ லோகத்திலும் என்னுடைய ஜயத்தைக் கோஷித்துக் கொண்டிருக்க இந்தச் சிறிய விளையாட்டிலே எனக்கு உற்சாகம் உண்டாவதற்குத் தடை என்ன?”
நாரதர் மெல்ல அன்னத்தை நோக்கினார்; "குழந்தாய், உன்னுடைய ஊரிலிருந்து புறப்படுகிறாய்; பாற்கடலைத் தாண்டி, கைலாசத்துக்குப் போகவேண்டும். பலிஷ்டர்களாகிய இரண்டு பேர் உன்னோடு வருகிறார்கள். நீ தைரியமாக இந்த விளையாட்டிலே கலந்துகொள்வாயா?" என்று கேட்டார்.
"ஸ்வாமி, நான் வெறும் கருவி. எம்பெருமான்களெல்லாம் சேர்ந்து நிர்த்தாரணம் செய்த இந்தக் காரியத்தைச் செய்வது என் கடமை. இதில் வெற்றியோ தோல்வியோ அதுபற்றி எனக்குக் கவலை இல்லை. என் கடன் பணி செய்து கிடப்பதே" என்றது அன்னம். "ஐயோ! பாவம்!'' என்று லக்ஷ்மியின் தோழி ஒருத்தியின் குரல் காற்றோடு இழைந்து வந்தது. அரம்பையர் யாவரும் அந்த அநுதாபத்திலே கலந்துகொண்டார்கள்.
நாரதர் மறுபடியும் கனைத்துக்கொண்டு பேசலானார்: "ஒரு முக்கியமான சங்கதியைச் சொல்ல மறந்துவிட்டேன். உங்களுடைய எஜமானர்களின் கருணையால் நீங்கள் பெற்ற பலத்தைக் கொண்டு இங்கே பரீட்சை செய்யக் கூடாது. அது தவறு. உங்களுக்கு ஸ்வபாவமாக உள்ள ஆற்றலை, உங்கள் ஜாதியினர்களுக்கு எவ்வகையான சக்தி உண்டோ அந்த இயல்பான சக்தியை வைத்துக்கொண்டே நீங்கள் ஜயிக்கவேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பந்தயம் திரிமூர்த்திகளின் பலாபலத்தைச் சோதித்ததாக முடியும். அது மிகவும் அபசாரம். ஆகையால் உங்கள் மூவரிடத்திலும் உள்ள தெய்வ சக்தியை இதோ கிரகித்துக் கொள்கிறேன். உங்கள் சொந்த பலத்தைக்கொண்டே ஜயிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும் ! இனி ஆரம்பிக்கலாம்.''
மந்திராக்ஷதையைத் தூவி ஆக்ஞை கொடுத்தார் நாரதர். தேவர்கள் வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தொடங்கினார்கள். ரிஷபதேவர் துள்ளிக் குதித்தார். கருட பகவான் தத்தித் தாவிப் பறந்து குதூகலித்தார். அன்னம் மெல்ல நடந்தது. க்ஷண நேரத்தில் ரிஷபதேவர் சத்திய லோகத்தின் எல்லையை அடைந்துவிட்டார். கூரிய கண் படைத்த தேவர்கள் இருந்த இடத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
3
கருடதேவர்
ரிஷபதேவரை அடுத்துச் சென்றார். அன்னம் இருவருக்கும் சற்றுத் தூரத்திலே நடந்தது.
ரிஷபதேவர் வாலைக் கிளப்பிக்கொண்டு மேகத்தை முட்டி
எழும்பிக் குதித்தார். பக்ஷிராஜா மேக மண்டலத்தூடே புகுந்து புறப்பட்டார். அன்னமோ
கீழே தரையில் நடந்து சென்றது.
ரிஷபதேவர் சத்தியலோகத்தின் எல்லையை அடைந்தவுடன் க்ஷீராப்தி தோன்றியது. என்றும் இல்லாதபடி அன்று ஒரே கொந்தளிப்பு. அலைகள் மலைபோல எழும்பி அடித்தன. ரிஷபதேவர் அதன் கரையிலே நின்று திரும்பிப் பார்த்தார். பக்ஷிராஜா நெடுந்தூரத்தில் தெரிந்தார். அன்னம் கண்ணுக்கே தெரியவில்லை. அவருக்கு உற்சாகம் மூண்டது. 'பாற்கடலை ஒரே தாண்டலாகத் தாண்டலாமா? அல்லது உள்ளே குதித்து நீந்தலாமா?' என்று யோசித்தார். முன்பெல்லாம் ஒரு க்ஷணத்தில் தாண்டிப் போய்விடுவார். இப்போது நிமிர்ந்து, அக்கரை தெரிகிறதா என்று பார்த்தார்; தெரியவில்லை. அலைகள் உயரமாக எழும்புவதனால் மறைக்கிறது போலும் என்றெண்ணித் துள்ளிக் குதித்துப் பார்த்தார். அப்போதும் கடலின் எல்லை கண்ணுக்குத் தெரியவில்லை. உள்ளே குதித்துத் துளைந்து செல்வதுதான் வழியென்று எண்ணித் தாவினார். தரைமேல் நடந்து வந்தது போலச் சுலபமாகப் படவில்லை.
அவர் உள்ளத்தில் அப்போதுதான், 'இது விளையாட்டல்ல, வினை' என்ற உண்மை புலப்பட்டது. ‘ஒரு சிறு குழிபோல இருந்த இந்தக் கடல் இவ்வளவு பெரிதாகி விட்டதே! எப்படி?' என்று யோசித்துப் பார்த்தார். விஷயம் விளங்கியது. 'நம்மிடத்தில் இறைவன் கருணையாகிய பலம் இருந்தது. அதனால் பெரியவனாக இருந்தோம். இப்போது அந்தத் தெய்வ பலம் போய்விட்டது போலும்!' - இப்படி எண்ணுகையிலேயே கால் தளர்வது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. பாற்கடலின் அலைகள் பேய் அறைவது போல அறைந்தன. முகத்தை மேலே தூக்கிக்கொண்டார். மூக்குக்குள்ளெல்லாம் பால் புகுந்தது. மூச்சு விட முடியவில்லை. வாயைத் திறந்து பெருமூச்சு விட்டார். முன்னங்காலால் அடித்துத் துழாவி நீந்தினார். பளீர் பளீர் என்று அலைகள் கன்னத்தில் அடித்தன; காதில் அடித்தன. அப்போது எந்த ஞாபகமும் அவருக்கு வரவில்லை. இதுகாறும் அநுபவிக்காத பிராண சங்கடம் ஒன்றை அனுபவித்தார். நரகம் என்பதை அவர் பார்த்ததில்லை. அதுதான் நரகமோ என்று கூட எண்ணினார்.
வாய்விட்டுக் கதறி அறியாத ரிஷபதேவர் அன்று, முதல் முறையாக, "அம்மா!" என்று அலறினார். அவ்வளவு தான் தெரியும்; அவர் நினைவிழந்தார்.
* * *
கருடதேவர் சத்தியலோகத்தின் எல்லைக்கு வந்த போது ரிஷபதேவரைக் காணவில்லை. அவர் முன்னாலே நெடுந்தூரம் போய்விட்டாரென்று எண்ணிக்கொண்டார். பாற்கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. கருடபகவானுக்கு க்ஷீராப்தியைக் கண்டவுடன் பின்னும் உற்சாகம் உண்டாகிவிட்டது. கரையோரமாகச் சென்று சிறிது நின்றார். சிறகைக் கோதிக்கொண்டார். ஒரே வேகமாகப் பறந்து போனால் ரிஷப தேவரைப் பிடித்துவிடலாம் என்று எண்ணி எழும்பிப் பறந்தார். பாற்கடல் என்றும் இல்லாமல் பல மடங்கு நீண்டுவிட்டதோ என்று தோன்றியது அவருக்கு. பறக்கப் பறக்கத் தூரம் மாளவே இல்லை. பறப்பதென்றால் கருடஸ்வாமிக்கு அளவற்ற உற்சாகம். அதுவும் க்ஷீராப்திக்கு மேலே பறப்பது அவருக்கு நித்திய விளையாட்டு. இன்றோ,இதென்ன இப்படி? சிறகுகள் சேருமிடத்தில் தோள் பட்டையில் கொஞ்சம் வலியெடுக்கிறது போல் இருக்கிறதே! இந்தப் புதிய அநுபவம் முதலில் அவருக்கு விசித்திரமாக இருந்தது; மயக்கமோ என்று தோன்றியது; பிறகு வாஸ்தவமாகப்பட்டது. சிறிது நேரம் சிறகை அசைக்காமல் வானவெளியில் தூங்குவதுபோல மிதந்தார். சிறிது களைப்புத் தீர்ந்தது. மேலே பறக்க வேண்டுமே! பாற்கடலைக் கடந்து செல்லவேண்டுமே! தம் கூரிய திருஷ்டியால் பின்னே பார்த்தார். அதுவரையில் கண்ணுக்கே தெரியாமல் இருந்த அன்னம் சிறிய ஈயைப்போல நெடுந் தூரத்தில் பறந்துவருவது தெரிந்தது. முன்னால், ரிஷபதேவர் எவ்வளவு தூரம் போனாரோ என்ற எண்ணத்தோடு பறந்தார். இப்போதோ, 'இவன் வந்து விட்டானே' என்ற ரோசம் உந்தியது. பலங் கொண்ட மட்டும் சிறகுகளை மடக்கி விரித்து வானக்கடலில் ஒரு தாவுத் தாவினார்.
மனோவேகம் என்றுதான் சொல்லவேண்டும். அவ்வளவு வேகத்தில் நெடுந்தூரம் போய்விட்டார். ஆனால் சிறகுகளின் மூட்டுவாய்களிலே இப்போது இசிவு கண்டது. சிறிது ஆறுதலாக மிதந்தார். சிறகை விரித்த படியே மிதப்பதில் எப்போதுமே அவருக்குச் சிரமம் இல்லை. பூமியின்மேல் படுத்திருந்தால் நமக்குச் சிரமமோ முயற்சியோ இருக்குமா? அதுபோலத்தான் இருக்கும் முன்பு. ஆனால் என்ன ஆச்சரியம்! அப்போது அப்படி மிதப்பதற்குக் கூட முயற்சி வேண்டி யிருந்தது. 'சக்தி யில்லாமல் தத்தளிக்கும் நிலை ஒன்று உண்டு' என்பதைக் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை அவர். இப்போதோ, 'சக்தி நம்மிடமிருந்து குறைகிறது' என்பதை அணு அணுவாகத் தெரிந்துகொள்ளும் சந்தர்ப்பம் வந்துவிட்டது. 'என்ன இது! பறக்கின்றோம் என்ற நினைவே இல்லாமல் வானவெளியில் வட்டமிட்ட நாம் இன்று திடீரென் று முடமாகிவிட்டோமா?' என்று நினைத்தபோது, சுரீரென்று தோள்பட்டையில் வலியெடுத்தது.
'ஜல் ஜல்!' என்ற ஒலி அவர் காதில் விழுந்தது. அன்னம் வந்துகொண் டிருப்பது தெரிந்தது. மானம் தாங்க முடியவில்லை புள்ளரசுக்கு. மற்றொரு முறை மூச்சைப் பிடித்துக்கொண்டு வானக்கடலிலே தாவினார். இதோ அக்கரை அவர் கண்ணுக்குப் புலப்பட்டது. இனிமேல் உயிரைப் பிடித்துக்கொண்டாவது பறக்கலா மென்ற துணிவு வந்தது. ஆனால் சிறகு வேலை செய்ய வில்லை. உடம்பெல்லாம் ஒரே இசிவு. சிறகை யாராவது கழற்றிவைத்தால் தேவலை என்று தோற்றியது. பின்னால் திரும்பிப் பார்த்தபோது அன்னத்தைக் காணவில்லை. சிறிது ஆறுதல் உண்டாயிற்று. அடுத்த கணத்தில் மீண்டும் அன்னத்தின் சப்தம், சிலம்பு போன்ற ஒலி, காதில் விழுந்தது. இப்போது கீழேயிருந்து அந்தத் தொனி கேட்டது. ’சரி, தொலைந்தான். நாம் பட்ட பாட்டுக்கு இவன் எந்த மூலை? இந்தப் பாற்கடலுக்கு இரையாகிவிட்டான்' என்று எண்ணிய எண்ணத்திலே ஒரு துளி போலியான இன்பம் அவருக்குக் கிடைத் தது. ஆனால் உடனே இரண்டு விலாவிலும் சுரீரென்று வேதனை எழுந்தது. கடலைக் கடக்க வேண்டுமே! பந்தயம் ஜயித்தாலும் ஜயிக்காவிட்டாலும் கடலைக் கடந்து தரையில் போய்த்தானே நிற்கவேண்டும்? நடுக்கடலில் இளைப்பாற முடியுமா? பிராணனைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் பறக்கவேண்டியது அவசியமாகிவிட்டது.
புதிய மலைப்பு ஏற்பட்டது. சோர்வினால் உடம்பு கொஞ்சம் கீழே இறங்கியது. என்ன ஆச்சரியம்! அன்னத்தின் குரல் அவர் காதில் இப்போதும் விழுந்தது. தம் திருஷ்டியைக் கீழே செலுத்தினார். வெண்ணிறப் பாற்கடற் பரப்பிலே சுலபமாக அன்னத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பொன்னிறம் பெற்ற அதன் கொண்டை பளபளத்தது. அது கண்ணிலே பட்ட பிறகுதான் கருடதேவருக்கு அந்தச் சின்னஞ் சிறு பறவையின் இருப்பிடம் தெரிந்தது. அது ஏதோ வாயினால் சொல்லிக்கொண்டே இருக்கிறதே ! "அம்மா, கருணாகரீ" என்ற சப்தம், குழறுவதுபோலக் கருடன் காதில் விழுந்தது. கூர்ந்து கவனித்தார். ஆச்சரி யத்தின்மேல் ஆச்சரியம்! அன்னம் ஒய்யாரமாகப் பாற்கடல் திரையைத் தெப்பமாகவும் அம்பிகையின் திருநாமத்தைக் கோலாகவும் கொண்டு சுகமாக மிதந்து நீந்தி வருகிறது! அன்னம் அல்லவா அது? நீர்நிலைக்கு அஞ்சுமா?
கருடபகவானுக்கு நெஞ்சிலே இடி விழுந்தது போல் ஆயிற்று. எந்த வானவெளியைத் தம்முடைய ஏகபோக ராஜ்யமாக எண்ணி அரசுசெலுத்தி வந்தாரோ அந்த ஆகாசப் பரப்பு அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அவர் தம் சொந்த முயற்சியினால் எதிரிட்டுப் பறந்தாலொழிய அந்தப் படுபாவியாகிய வானம் அவரைத் தள்ளிவிடக் காத்திருக்கிறது. கீழே அவருடைய நாயகருக்கு இல்லமாக உதவும் பாற்கடலோ தயாதாக்ஷிண்யமின்றி அலைக் கரங்களை ஆட்டி, "கீழே வந்தால் அமிழ்த்திக் கொன்று விடுவேன்" என்று கொக்கரிக்கிறது. நமக்கென்று இப்போது என்ன பலம் இருக்கிறது? அன்னக் குஞ்சு என்று அற்பமாக நினைத்தோமே! நமக்குச் சொந்தமான வானமும், நம் தெய்வத்துக்குச் சொந்தமான க்ஷீராப்தியும் நம்மைக் கைவிட்டபோது எதிர் நிற்க நமக்குச் சக்தியில்லையே! அன்று நமக்கு மிஞ்சியவர் இல்லை என்று இறுமாந்தோமே. அதோ சாந்தமயமாக விளங்கும் அந்த ஹம்ஸத்தை ஏளனம் செய்தோமே! இன்று நம் நிலை...' மேலே நினைக்க அவருக்கு உணர்ச்சி இல்லை. "அம்மா!" என்ற கோஷத்துடன் அவர் வலியற்று விழுந்தார்.
* * *
ஹம்ஸம் ஒன்றையும் கவனிக்கவில்லை. எல்லாவற்றையும் மறந்து அம்பிகையின் திருவடி ஒன்றையே தியானித்துக்கொண்டும், அவள் திருநாமத்தை ஜபித்துக்கொண்டும் பாற்கடலைத் தாண்டிக் கொண்டிருந்தது. வேகமாகவே சென்றது. பாற்கடலின் கரைக்கும் வந்துவிட்டது. அங்கிருந்து மெல்ல மெல்லப் பறந்து கைலாசத்துக்குமேலே போயிற்று அப்பா! என்ன சிரமமான காரியம்! அம்பிகையின் அந்தப்புரத்தை அடைந்தது. கருணையே உருவாகிய தேவி அங்கே அதை எதிர்பார்த்து நின்றுகொண் டிருந்தாள். அதைக் கண்டவுடன், "வா, என் கண்ணே!" என்று ஆவலுடன் எடுத்து மடியில் வைத்துக்கொண்டாள். உடம்பெல்லாம் தடவிக் கொடுத்தாள். அமுதமயமான அந்த ஸ்பரிசம் அன்னத்துக்குப் பரமானந்தமாக இருந்தது.
"குழந்தாய், நீ ஜயித்தாய். விநயம் வென்றது; ஆணவம் தோற்றது. தேவலோக ராஜ்யத்திலும் அடக்கத்துக்குத் தான் மதிப்பு உண்டு என்பதை இன்று உலகமெல்லாம் அறிந்துகொள்ளும். இனிமேல் நீ எனக்கு வாகனம் ஆவாய். உன் ஜாதியில் மற்றொன்று நான்முகனுக்கு வாகனம் ஆகட்டும். உன்னுடைய பெருமையைத் தேவர்கள் அறியட்டும். பூவுலகத்தினர் அறியட்டும். உன் பெயரால் ஒரு மந்திரம் இதோ வெளியிடுகிறேன். ஜபிக்காத மந்திர மாகிய அதற்கு அஜபா மந்திரம் என்ற பெயர் இருக்கும். உன் பேரால் ஹம்ஸ மந்திரம் என்றும் வழங்கும். மகாயோகிகளுடைய உள்ளத் தடத்திலே இந்த மந்திர உருவத்தில் நீந்தி விளையாடுவாயாக!
"இது மட்டுமன்று. பூலோகத்திலும் உன்னுடைய அம்சம் வெல்லட்டும். தரையில் செல்லும் வண்டியும் நீரில் செல்லும் கப்பலும் வானத்தில் செல்லும் விமானமும் இதுவரையில் பூவுலகத்தில் இருந்தன. அவற்றின் மதிப்பு இனி மங்கும். நிலத்திலும் வானத்திலும் நீரிலும் ஒருங்கே இயங்கும் விமானங்களே இனி உலகில் மதிப்பைப் பெறும். உன் அம்சமான அவற்றால் இனி உலகத்தார் போர் புரிவார்கள்; பிரயாணம் செய்வார்கள். ஹம்ஸமே, நீ வாழ்க!'
அன்னம் மெய்ம்மறந்து போயிற்று. சிறிது நேரம் கழித்து மெல்லக் கண் திறந்து அம்பிகையின் திருமுகத்தைப் பார்த்தது. "அம்மா, அவர்கள்..." என்று தயங்கித் தயங்கி ஆரம்பித்தது.
"அந்த ஆணவப் பிண்டங்களா? இங்கே வா” என்று சொல்லி வெளி மண்டபத்துக்கு அழைத்துச் சென்றாள் தேவி. "அம்மா என்று அலறி விழுந்ததால் இவற்றை இங்கே கொண்டுவரச் செய்தேன்'' என்று சொல்லிக் காட்டினாள், அன்னத்துக்கு. மூர்ச்சை போட்ட நிலையில் உடம்பெல்லாம் பாலும் ரத்தமும் சேர்ந்து கசிய ரிஷபமும் கருடனும் கிடந்தன.
அன்னம் துணுக்குற்றது. அதன் உள்ளம் நெகிழ்ந்தது. "அம்மா, ஒரு வரம் கேட்கிறேன்" என்று தீனமான குரலோடு சொல்லியது.
''கண்ணே, கேள், தைரியமாகக் கேள்" என்றாள் தாய். "இவர்களை மறுபடியும் பழைய நிலையிலே வைத்துவிட வேண்டும். மகா மூர்த்திகளுக்கு வாகனமாக இருந்த புண்ணியம் படைத்தவர்களல்லவா? இந்த ஏழைக்கு கருணை நிரம்ப உண்டென்பதை நினைக்கும்போது அடியேனுடைய புல்லிய நெஞ்சில் சிறிது அகங்காரத்தின் பொறி எழுகிறது. ஆகையால் எல்லோருடைய அறிவிலும் ஒரு படலத்தை விரித்து, இந்தச் சம்பவம் அடியோடு மறந்துவிடும் படியாகக் கருணை பாலிக்க வேண்டும். ”
* * *
''ஓம்!" என்ற சம்மதத் தொனி எழும்பியது; பிறகு ஒரே மௌனம்! "ஹம்ஸஸ் ஸோஹம் - ஹம்ஸஸ் ஸோஹம் - ஹம்ஸஸ் ஸோஹம் - ஹம்ஸோஹம்” என்ற இனிய நாதம் அதனூடே நாரதர் வீணையிலிருந்து எழுந்தது.
--------------------
தெரிவு, வெள்ளுரை
ஆக்கம்: நா. கணேசன் https://nganesan.blogspot.com
This short story appeared in the book, 'aRunta tanti', 1947. So, it must have
been written in the early 1940s.