சிகாகோவில் வாழ்ந்த அரிய நண்பர், அழகப்ப இராம்மோகன் (1939 - 2019) கானாடுகாத்தான் என்னும் புகழ்மிக்க ஊரைச் சார்ந்தவர். திருக்குறள், தமிழ்ப் பண்பாட்டுக் கையேட்டுடன் மிக அழகிய முறையில் வெளியிட்டவர். தமிழில் அறிவியலைக் கற்றுத்தரப் பல நல்ல ஆங்கில நூல்களைத் தமிழாக்கம் செய்த புரவலர். மூன்றாம் பதிப்பாக, திருக்குறள், தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு அச்சாகிக் கொண்டுள்ளது. அதற்கான நிதி உதவியைச் செய்து தாருங்கள். நன்றி.
This Noble project is taken forward by International Tamil Language Foundation which is a 501(c) (3) organization. The donation is tax deductible. EIN: 36-3755576.
Donation can be made by check to:
International Tamil Language Foundation,
8417, Autumn Drive,
Woodridge, Illinois, 60517, USA.
One can also pay via PayPal or Zelle using meenakshi@kural.org
பெரும் பதவி வகித்தாலும் பழகுதற்கு இனியர். தமிழர் முன்னேற்றம் பற்றியே சிந்தித்தவர். அவர் வெளியிட்ட பண்பாட்டுக் கையேட்டில் என் நூலகத்தில் இருந்த பல கட்டுரைகள், ஒளிப்படங்கள் காணலாம்.
அமெரிக்காவில் தமிழும், திருக்குறளும் வளர்த்த இனிய நண்பர், திருமிகு. அழகப்ப இராம்மோகன். அவரது குடும்பத்தார் அனைவரும் - குறிப்பாக, மகள் பார்வதி வெங்கட், மகன் சிதம்பரம் ராம்மோகன், திருமதி. மீனாட்சி இராம்மோகன் - எங்கள் நண்பர்கள். ஸ்டீபன் ஹாக்கிங்கின் நூல்களைத் தக்காரைக் கொண்டு மொழிபெயர்த்து வெளியிட்டவர். கேம்பிரிட்ஜ் பல்கலையில் வெளியான இயற்பியல் காணொளிகளைத் தமிழாக்கித் தந்த பெருமகன். தமிழர் வாழ்வு உயர, அறிவியலும், சுயசிந்தனையும், தாய்மொழிப்பற்றும் இன்றியமையாதவை என்று கண்டு வாழ்நாள் எல்லாம் உழைத்தவர். அவரது நூலகம் 10,000 நூல்களைக் கொண்டது. யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது போல, உலகின் முதல் நூலகம் அலெக்சாண்டிரியாவில் இருந்து சில ஆயிரம் ஆண்டு முன்னே அழிந்தது. அந்த இடத்தைச் சென்று ஆராய்ந்தவர் அவர்.
அழகப்ப ராம்மோகனின் கனவுத்திட்டமாகிய நூலகம், அதில் காணொளிகள், இணைய வசதி, ஏராளமான நூல்கள் என அவரது சொந்த ஊர் கானாடுகாத்தானில் டிசம்பர் 26, 2019-ல் தொடங்கிற்று.
நான் ஸ்பேஸ் ஸ்டரக்சர்ஸ், ராக்கெட் ஸயன்ஸ்-ல் முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்க விண்வெளி நிலையத்தில் பணியில் சேர்ந்த அமயம், திரு. ராம்மோகன் பலமுறை ஹூஸ்டன் இல்லம் வந்திருக்கிறார். அவர் கடின உழைப்பாளி. ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்க முலாம் பூசிய விவிலிய நூல் இருக்கும். அதே போல, அதே பதிப்பகத்தில் தங்க முலாம் பூசி திருக்குறளும், ஓவியமும் (மணியம்செல்வன்), பண்பாட்டுக்கையேடும் மிகுந்த பொருட்செலவில் வெளியிட்டார்கள். அந்நூலுக்காக, ஒரு தலைப்பை வடித்துத் தந்தேன் “Culturescape of Tamils" என்பது அச்சொல். இராம்மோகனுக்கு மிகப்பிடித்த தலைப்பு அது. ஏ. கே. ராமாநுஜன் “Interior Landscape" என்று அகத்திணைக் கோட்பாட்டுக்குப் பெயரளித்தார். அதன் வழி, Culturescape of Tamils என்ற பெயரமைத்தேன். தமிழ்ப் பண்பாட்டுக் கையேட்டில் வெளியான கட்டுரைகள் பலவும் என் நூலகத்தில் இருந்து இராம்மோகனார் தேர்ந்தெடுத்தவை. 1900களின் ஆரம்பத்தில் சுமார் ஒரு இலட்சம் கட்டுரைகள், ஆய்வேடுகள், நூல்கள் பற்றிய விரிவான தமிழ், தென்னிந்திய மொழியியல், சமூகவியல், கலைவரலாறு பற்றிய நூற்றொகுப்பு (Bibliography on Tamils) செய்தேன். அதில் இருந்து ஒருபக்கம், இராம்மோகனின் வலைத்தளத்தில் (https://kural.org/ ) இருந்து பார்க்கலாம்: https://kural.org/culturescape/
சிகாகோ இராம்மோகன்
--------------------------------------------------------------------
அன்பார்ந்த நண்பர் அழகப்ப ராம்மோகன்
இன்பார் திருக்குறளை இப்பாரில் என்றும்
அமிழ்தெனப் போற்றஅரும் பாதைதந்தார் வாழி
தமிழுள் ளளவும் தழைத்து.
https://ar-ar.facebook.com/1428383984066811/posts/1428415247397018/
தங்க முலாம் பூசிய திருக்குறள் நூல்
--------------------------------------------------------------------------------
திருக்குறள் தொடர்பாக எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. ஆனாலும் உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சிகாகோ, அமெரிக்கா வெளியிட்டுள்ள திருக்குறள் நூல் புதுமையானதாகவும், அரியதாகவும் உள்ளது. 1814 பக்கங்களில் திருக்குறளுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு, திருக்குறள் தொடர்பான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் கோட்டுவடிவப்படங்கள் எனத் தொகுத்துள்ளது. திருக்குறள் தமிழ் மறை, தமிழ்ப்பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி எனக் குறிப்பிட்டிருப்பதைப் போலவே - கிருத்துவர்களின் மறையான பைபிள் அச்சடிக்கும் அதே தாளில் அதே வடிவில் சிறப்பாக அச்சாக்கி, தங்கமுலாம் பூசி நூலை வெளியிட்டிருப்பது வணங்குதற்குரியதே. தொடர்புக்கு :- திரு. அழகப்பா ராம்மோகன், திட்ட இயக்குநர், உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை, சிகாகோ, அமெரிக்கா.
அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள, உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை (International Tamil Language Foundation) என்ற அமைப்பு, தமிழ் மறை திருக்குறள் என்ற நூலை வெளியிட்டு இருக்கின்றது.
‘இது, தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு,
தமிழின எதிர்கால வழிகாட்டி’
என்று முகப்பில் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.
இதுவே நான் பார்த்த குறள் நூல்களுள் சிறப்பானது.
1815 பக்கங்கள். தலைமைத் தொகுப்பாசிரியர், அழகப்பா ராம்மோகன். உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையின் இயக்குநரும் இவரே. நூலின் நுழைவாயிலில்,
‘தனிப்பட்ட தமிழர்கள் தமிழை மறக்கலாம், தங்களை மறக்கலாம், இறந்தும் போகலாம். ஆனால், தமிழ்ச் சமுதாயம் தன்னை மறக்க இயலாது. அது இறப்பற்றது. அதன் ஒட்டுமொத்தமான கூட்டு நினைவுகள், புத்தக வடிவில் அழியாது காக்கப்பட்டு வந்துள்ளன. அவை என்றும் நிலைத்து நிற்கும். நமது கிரேக்க, ரோம தோழமை நாகரிகங்கள் மறக்கப்பட்டபோதிலும், ஐரோப்பிய மறுமலர்ச்சி அந்த கிரேக்க, ரோம நாகரிகங்களின் மீட்டு எடுப்பில்தான் வெற்றி பெற்றது. அதே முறையில், இந்தப் புதிய ஆயிரம் ஆண்டுகளில், தமிழ் இனம் காணப்போகும் மறுமலர்ச்சி வெற்றி பெற வேண்டும் என்றால், அது அதன் பண்டைய நாகரிகச் சிறப்பை மீட்டு எடுப்பதில்தான் உள்ளது. அதற்காகவே இந்த நூல் முயற்சி’
என்று குறிப்பிட்டு உள்ளார். அத்துடன், ‘இது உங்கள் மனை. இந்த மனைக்குப் பரப்பும், உயரமும் தேவை. எப்படிச் செய்வது என்பது, உங்களைப் பொறுத்தது. எவ்வளவு சிறப்பாக, வலுவாக, உயரமாக, அகலமாகச் செய்ய முனைந்தாலும், இந்தக் கருவறை-மையம்-முற்றம் இடம் கொடுக்கும்’ என்கிறார்.
இந்த நூலின் ஆக்கத்தில், அமெரிக்கா, தமிழ்நாடு, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, மலேசியா, இந்தோனேசியா எனப் பல நாடுகளில் வசிக்கின்ற தமிழர்கள் பங்கு அளித்து உள்ளனர். அச்சிடுவதற்கான நிதி உதவியையும், பன்னாட்டுகளில் வசிக்கின்ற 97 தமிழ்ப் புரவலர்கள் பகிர்ந்து கொண்டு உள்ளனர். 2000 ஆம் ஆண்டு ஜனவரியில், முதல் பதிப்பாக, அமெரிக்காவில் பத்தாயிரம் படிகள் அச்சிடப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு குறளையும் இருவகையாக எழுதி இருக்கின்றார்கள். முதலில், இலக்கண மரபில் பெரிதாகவும், அடுத்து, இக்கால நடைமுறைக்கு ஏற்றவாறு சொற்களைப் பிரித்தும் எழுதி இருக்கின்றார்கள். ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து இருக்கின்றார்கள்.
புத்தகத்தைத் திறந்தவுடன் உள் அட்டையில் கீழ்காணும்செய்திகள் இடம் பெற்று உள்ளன:
தமிழர் வரலாறு; மற்றவர்கள் பார்வையில்...
* ‘பாண்டிய அரசு ஒரு ராணியால் ஆளப்படுகிறது’ - மெகஸ்தனிஸ், கிரேக்கத் தூதர், கி.மு. 400
* ‘பான்-கான்-டோ-லுh வில் இருந்து, கப்பல் மூலம் இரண்டு மாதங்களுக்கு மேல் பயணித்தால், காஞ்சி நாட்டை அடையலாம். காஞ்சி, பரந்தும், மக்கள் மிகுந்தும், பலவிதமான பொருள்களோடு முத்தும், மணி வகைகளும் நிரம்பித் திகழும். பேரரசர் வான் (கி.மு. 140-86) காலம் முதல் நம்முடன் வாணிபம் செய்து வருகிறார்கள்.’ - பான் கோ, சீன விருந்தாளி, கி.மு. 100
* இந்தியாவின் ஒரு இடத்திலிருந்து, அதுவும், பாண்டிய அரசனின் பரிசுகளோடு அனுப்பி வைத்த தூதுவர்கள், அகஸ்டஸ் சீசரிடம் வந்தார்கள். - கிரேக்க நாட்டு ஸ்டிராபோ, கி.மு. 10
* பாண்டிய நாட்டு முத்துப் பண்ணைகள், தெற்கே குமரி முனையிலிருந்து, கொற்கை வரை விரிந்து உள்ளது. கொற்கைக்கு அப்பால் இருககும் உறையூருக்கு, எங்குமில்லாதபடி கரையோரம் விளைந்த முத்துகள் கொண்டு வரப்பட்டு, மெல்லிய துணி வகைகளோடு ஏற்றுமதி ஆகின்றன. - பெரிப்ளஸ், ரோம், கி.பி. 75
* தமிழர்கள், எழுதப்பட்ட இலக்கியங்கள் மட்டுமல்லாமல், வானவியல் அறிவும் பெற்றுள்ளார்கள். ஆடவர்கள் எல்லோரும் ஓலைச் சுவடிகளில் பாதுகாக்கப்பட்ட சித்தாந்தம் என்ற வழிகாட்டும் நூலைக் கற்கிறார்கள். - மா டவான்லின், சீன வரலாற்று ஆசிரியர், கி.பி. 550-600
* காஞ்சித் தலைநகரம்: இது வளமான பூமி. பூவும், கனிகளும் பெருமதிப்புள்ள பல்வகைப் பொருள்களும் கொண்டு இருந்தது. இதன் மக்கள் தைர்யம் உடையவர்களாகவும், நம்பத்தகுந்தவர்களாகவும், பொது நலம் பேணுபவர்களாகவும், கல்வியில் நாட்டமுடையவர்களாகவும் இருந்தார்கள். - யுவான் சுவாங், சீனப் பயணி, கி.பி. 640
* குலசேகர பாண்டியனுடைய அரசு, செல்வம் கொழிக்கும் வளமுடையது. மதுரை நகர் அரசப் பெட்டகத்தில் 1200 கோடி பெறுமானமுள்ள தங்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதைத் தவிர, பெருமதிப்புள்ள முத்து, சிகப்பு, பச்சை போன்ற, வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத மணிவகைகள் இருந்தன. - வாசாஃப், இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர், (சிராஸ்ரீ) கி.பி. 1281
* உடன்பிறந்த சகோதர மன்னர்கள் ஐவர் இருக்கிறார்கள். இதில் ஒருவரான சுந்தரபாண்டித் தேவர் முடிசூட்டப்படுகிறார். இந்த அரசகுமாரன் சிறப்புகள் எல்லாம் பெற்ற சான்றோன். - மார்க்கோபோலோ, வெனிஸ்சிலிருந்து வந்த பயணி, கி.பி. 1293
* தமிழர்கள் கவிதை, ஓவியம், சிற்பக்கலையில் மகோன்னதமான முத்திரை பதித்தவர்கள். ஆனால், அவர்களது தலைசிறந்த படைப்புகள் படிமங்களே. அதில் தலையாயது சிவ வடிவம். உலோகத்தில், பிளாரன்ஸ் தந்த மேதை டான்டொலோ பிறப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்னரே, 1011 ஆம் ஆண்டில் வார்க்கப்பட்டது. இதைப்போல, பண்டைய கிரேக்கம் முதல் இன்று வரை எதுவும் படைக்கப்படவில்லை. - மைக்கேல் வுட், இங்கிலாந்து ஆசிரியர், உலக நாகரிகங்கள்.
அடுத்ததாக, திருக்குறள் பெருமை என்ற தலைப்பில், ஒரு கட்டுரை இடம் பெற்று உள்ளது. வா.செ. குழந்தைசாமி, எஸ். மகராஜன், ஆல்பர்ட் சுவைட்சர், உ.வே.சா., எம்.ஏரியல் ஆகியோரது கருத்துகளைத் தொகுத்து, வா.செ. குழந்தைசாமி எழுதி உள்ளார். திருக்குறள் குறித்து ஏராளமான செய்திகள், ஒப்பீடுகள் இடம் பெற்று உள்ளன.
ரோமில் நடந்த அகஸ்டஸ் பேரரசன் முடிசூட்டு விழாவில், பாண்டிய மன்னனின் தூதர் கலந்து கொண்டதாக, கி.பி. முதல் நூற்றாண்டில், முதலாவது புவியியல் நூலை எழுதிய கிரேக்க அறிஞர் ஸ்டிராபோ குறிப்பிட்டு உள்ளார்.
கி.மு. முதல் நூற்றாண்டிலேயே, மலேசியா, வட போர்னியோ, வடக்கு ஃபிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுடன், தமிழர் விரிவான வாணிக உறவு கொண்டு இருந்தனர் என்று, புகழ் பெற்ற தொல் பொருளியல் அறிஞரும், வரலாற்று ஆசிரியருமான ஆர்.பி. டிக்சன் வலியுறுத்துகிறார்.
தென்னிந்தியக் கடலோரப் பகுதிகளுக்கும், சீனப் பேரரசுக்கும் இடையில், தூதரகத் தொடர்புகள் இருந்து வந்ததற்கான சான்றுகள், சீன இலக்கியங்களில் காணப்படுவதாக, பால் பெரியோ குறிப்பிடுகிறார்.
சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த சீன எழுத்தாளர் பான் கூ என்பார், ஹீவா பேரரசர் காலத்தில், சீனாவுக்குத் தூதர்களைச் சோழ அரசன் அனுப்பியதாகக் கூறி உள்ளார். (கே.எம். பணிக்கர், இந்தியாவும், சீனாவும் பக்கம் 17,19).
இந்நூலின் உள்ளடக்கம்:
பகுதி 1
திருக்குறள் அறிமுகம், திருக்குறள் பெருமை, அதிகார அடக்கம், சிந்தனைச் சாறு, அதிகார ஓவியங்கள், திருக்குறள் மூலம், ஆங்கில மொழியாக்கம், நுண்பொருள் விளக்கவுரை, உரையாசிரியர் பக்கம், பாட்டு முதற் குறிப்பு அகராதி, குறள் பொருள் அகராதி, திருக்குறள் மந்திரங்கள், வள்ளுவர் படக்கதை, மொழிபெயர்ப்புப் பதிப்புகள்.
பகுதி 2
தமிழ் வாழ்த்து, தமிழ்ச் சான்றோர் வாழ்த்து, தமிழ் மொழி - ஒரு அறிமுகம், பண்பாடு, தமிழ்ப் பண்பாடு, தமிழினப் பண்பாட்டுக் குறியீடு, இன்றைய தமிழினம், தமிழ் ஒரு செவ்வியன் மொழி, தமிழின் தொன்மையும், தொல்காப்பியமும், தமிழின் கொடை, இலக்கணமும் செய்யுள் மரபும், தமிழ் ஒலியியலும் வரி வடிவமும், தமிழ்க் கவிதை ஓவியங்கள், சங்க காலத் தனிச் சிறப்பு, தமிழர் சட்டங்கள், தமிழ் மரபிசை, நாட்டியம், தமிழ் இலக்கிய வரலாறு, தமிழர் வரலாறு, மருத்துவ இயல், கணித இயல், வானவியல், தொழில் நுட்ப மேன்மை, சிவ நடராச தத்துவம், தமிழர் வளர்த்த சமயங்கள்.
பகுதி 3
தமிழின எதிர்கால வழிகாட்டி
புதிய ஆயிரம் ஆண்டுகள், அற வழி, மனம், மனப்பயிற்சி வழி உள்நோக்கு, உடற்பயிற்சி, சிந்தனைத் திறன் வளர, உங்கள் சிக்கல்கள் தீர, கடமை ஆற்றலே தவம், தமிழ் எழுத்தாளர்களின் பொறுப்பு, தமிழினம் ஓங்குக, வேற்றுமைகளில் ஒருமைப்பாடு, வள்ளுவக்குக் கடிதமும், பதிலும், வாழ்வுக்கு நெறிமுறைகள், தமிழின் எதிர்காலம்
தொடர்புக்கு:
International Tamil Language Foundation,
8417, Autumn Drive, Woodridge, Illinois, 60517 USA
Web: www.kural.org
e-mail: thiru@kural.org
Ph: 630-985-3141
- அருணகிரி (writerarunagiri@gmail.com)
அமெரிக்காவின்
அகரத்தமிழன் இராம்மோகன்
அழகப்பன்
இன்றில்லை என்பதறிந்து
நேற்றும்
கண்ணீர் வடிக்கிறது
நாளையின் கண்களிலும்
கண்ணீர் தேங்குகிறது
பொதிகை
அனுப்பிவைத்த ஒரு
புலவன்போல் இருந்தவன்
வைகை
அனுப்பிவைத்த ஒரு
புரவலன்போல்
இருந்தவன் இன்றில்லை
கனவுகளிலும்
தமிழ்வளர்க்கத் திட்டமிட்டவன்
நனவுகள் கைகளில் தானே
ஆயுதமாய்த்
தமிழ்ப்பகையை எதிர்த்தவன்
இன்றில்லை
இன்று-
எமக்குப் பகல்ஒழிக்கும்
இரவானது இடரானது
இராம்மோகன்
இறப்பறிந்து தமிழ்த்தாய்
னகர இறுவாய்
எல்லா எழுத்துகளுக்கும்
கருப்புடை அணிவித்தாள்
வள்ளுவனாரின்
ஆயிரத்து முன்னூற்று முப்பது
அருங்குறட்பாக்களும்
கைகளில் மலர்வளையங்களோடு
இராம்மோகன் வீட்டு
வாசலில் நிற்கின்றன
முப்பாலிலும்
துயரம் பொங்கி வழிகிறது
இராம்மோகன்
முகம்பார்த்து அழுகின்றன
செப்பலோசை
ஒனறும் செப்பமுடியா நிலையில்
ஊமை ஓசை உள்ளிருந்து
அரற்றுகின்றது
அவருடைய
இதயநேர்த்தியும்
ஈரக்கனவும் படைத்த
பரிசுப்பதிப்பு வள்ளுவத்தின்
பக்கம்
ஒவ்வொன்றிலிருந்தும்
திருவள்ளுவர்
தேம்பி அழுகிறார்.
கையேடு
தமிழருக்குத் தயாரித்தவன்
யாரோடு புறப்பட்டுப் போனான்
தெரியவில்லையே
பொய்யோடு வாழாதவன்
இனி
மெய்யேடு தந்த
ஐயன்
வள்ளுவனோடு வாழலாம்
என்று புறப்பட்டுப் போனானோ?