மரபின் மைந்தன் முத்தையா, ஹூஸ்டன் மீனாட்சி கோவிலில், ஏப்ரல் 24, 2022

கோவையில் இருந்து மரபின் மைந்தன் முத்தையா, நண்பர்கள் ஹூஸ்டன் இல்லம் வருகை தந்துள்ளனர். நேற்று NASA Johnson Space Center சென்றபின், மீனாட்சி கோயிலில் தரிசனம். அப்போது மீனாட்சி அம்மன் மீது மரபின் மைந்தன் சொன்ன பாடல். இன்று காலை 10 மணிக்குத்  திருக்கடவூர் அபிராமி பற்றிய சொற்பொழிவு. கலந்துகொண்டு சிறப்பிக்க அழைக்கிறோம்.

ஹூஸ்டன் மீனாட்சி
------------------

கள்ளக் கணக்கில் உழலும் மனம் உனைக்
          கண்டதும் கனிந்துவிடும்
  கடுமைகள் உடைந்து நெடுந் துயில் கலைந்து
         கதிரொளி புலர்ந்து விடும்

உள்ளொளி பெருகிட நல்லருள் புரிவாள்
         
ஹூஸ்டன் மீனாட்சி!
    உலகின் உயிர்களை  விழிவழி காக்கும்
          உத்தமி அரசாட்சி!

பிள்ளைச் சிரிப்பினில் பித்தனை வென்றவள்
          பேரெழில் பாருங்கள்
    பொன்னெழில் மதுரையின் மின்னல் கொடியிங்கும்
          பூத்ததைப் பாருங்கள்

வெள்ளிக் கிளியுடன் நின்றிருக் கும்எங்கள்
        வித்தகி பதந்தொழுவோம்
    வெண்ணிற மாந்தர்கள்  மண்மிசை அருளும்
        வஞ்சியள் வாழியவே!
                                                    -மரபின்மைந்தன் முத்தையா, 4/23/2022

மரபின் மைந்தன் முத்தையா, ஹூஸ்டன் மீனாட்சி கோவிலில், ஏப்ரல் 24, 2022
---------------------------------------------------------

மரபின் மைந்தன் முத்தையா, கோவையில் இருந்து டெக்சஸ் மாநிலம், அமெரிக்கா வந்துள்ளார்கள். அவரது ஊரான திருக்கடவூர் அபிராமி மீதான பிரபந்தங்களைப் பற்றி வரும் ஞாயிறு அன்று பேச உள்ளார். அனைவரும் வந்து பயன் பெறுக.

Bharati Kalai Manram and Meenakshi Temple Society
cordially invite you and family to a special lecture  by

மரபின் மைந்தன் முத்தையா
Thiru. Marabin Maindhan Muthiah

 அபிராமி அந்தாதி (Abirami Andhadhi)

On 24th April 2022 (Sunday) morning, 10:30 A.M-12 Noon
Venue: Visitor Center (Ratham Building)
Sri Meenakshi Temple,
17130 McLean Rd, Pearland, TX 77584








































அபிராமி அந்தாதி தவிர, அபிராமி பட்டர் பாடிய பிரபந்தங்கள்: (1) கள்ள விநாயகர் பதிகம் (2) அமுத கடேசர் பதிகம் (3) கால சங்கார மூர்த்தி பதிகம் (4) கால சம்மாரப் பின்முடுகு வெண்பா (முழுதும் கிடைக்கவில்லை) (5) அபிராமி அம்மை பதிகம் I (6) அபிராமி அம்மை பதிகம் II (7) அபிராமவல்லி பதிகம் 

இந்தப் பதிகங்களில், “கடவூர் இறைவரை ஆளும் செல்வி! அபிராம வல்லியே!” என்னும் பதிகம் தென்காசியை ஆண்ட மதுராபுரி அம்பிகை மாலையைப் பெரிதும் ஒத்துள்ளது: https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0050.html ; மேலும், அபிராமி அந்தாதியிலும் மதுராபுரி மாலையின் தாக்கத்தைக் காணலாம். (மு. அருணாசலம், தென்காசிப் பாண்டியர், 1977: காந்தி வித்தியாலயம்) 

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க எனப் பெரியோர் வாழ்த்துவர். அந்தப் 16 பேறுகளை இன்னின்ன என வரிசைப்படுத்திப் பாடும் மூன்று பாடல்கள் தமிழிலே உள்ளன. புகழ்மிக்க இரு பதிகங்களில், முதல் பதிகத்தில் முதல் பாட்டாகவும் (அவதாரிகை), இரண்டாம் பதிகத்தில் இறுதிப் பாட்டாகவும் (மங்களம்) 16 பேறுகளை அருளுவாய் என வேண்டுகிறார் அபிராமிபட்டர். காளமேகம் அதற்கு நாலு நூற்றாண்டு முன்னர் மதுரைச் சொக்கனிடம் இப் பட்டியல் தந்துள்ளார்.

         துதிவாணி வீரம் விசயம்சந் தானம் துணிவுதனம்
         அதிதானி யம்சவு பாக்கியம் போகம் அறிவழகு
         புதிதாம் பெருமை அறம்குலம் நோவகல் பூண்வயது
         பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே  - கவி காளமேகம்

கலையாத கல்வியும் .... - சீர்காழி கோவிந்தராஜன், https://youtu.be/29CDPRyCetc
கலையாத கல்வியும் ... - மரபின் மைந்தன் முத்தையா, https://youtu.be/9ZNXYTsYkuM

பதினாறு பேறும் அருள்வாய்!

அபிராமி பதிகங்கள் (முதல் பாடல்)
---------------------------

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
             கபடு வாராத நட்பும்
     கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
            கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
              தவறாத சந்தானமும்
     தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
              தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
              துன்பமில்லாத வாழ்வும்
     துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
             தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
             ஆதிகடவூரின் வாழ்வே!
     அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
             அருள்வாமி! அபிராமியே!

மங்களம்
------------

சகல செல்வங்களுந் தரும் இமய கிரிராச
          தனயை! மாதேவி! நின்னைச்
     சத்யமாய் நித்ய முள்ளத்தில் துதிக்கும் உத்
          தமருக்கு இரங்கி மிகவும்

அகிலமதில் நோயின்மை கல்விதன தானியமெய்
         அழகு புகழ் பெருமை இளமை
     அறிவு சந்தானம் வலிதுணிவு வாழ்நாள் வெற்றி
        ஆகு நல்லூழ் நுகர்ச்சி

தொகைதரும் பதினாறு பேறும் தந்தருளி நீ
        சுகானந்த வாழ்வு அளிப்பாய்
    சுகிர்த குணசாலி! பரிபாலி! அநுகூலி! திரி
        சூலி! மங்கள விசாலி!

மகவுநான் நீதாய் அளிக்கொணாதோ? மகிமை
        வளர் திருக்கடவூரில் வாழ் 
    வாமி, சுபநேமி, புகழ் நாமி, சிவசாமி மகிழ் 
         வாமி, அபிராமி உமையே!

 - சுபம் -