திருவள்ளுவர் விழாவா? பயனென்ன? - பாவலரேறு பெருஞ்சித்திரனார் (1969)

திருவள்ளுவர் விழாவா? பயனென்ன?

     - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

[திருவாரூரில் (2. 3. 1969) கும்பம் 16 அன்று தொடங்கி நடந்த திருவள்ளுவர் ஈராயிரமாண்டு விழாவில் முதல்நாள் நடந்த பாட்டரங்கத்தின் தலைமையுரை. கனிச்சாறு - எட்டாம் தொகுதி.]

பேரன்புடைய பெரியோரே! தாய்மாரே!
சீரன்பு கொண்டிருக்கும் மாணவச் செல்வங்காள்!
பாட்டரங்கம் ஏறவந்த பாவலர்காள்! அன்பர்காள்!
கூட்டிருக்கும் ஆவி குழைய வணங்குகிறேன்.

இங்கு, திரு வள்ளுவரின் ஈரா யிரமாண்டு
பொங்கி நிறைந்தவொரு பூரிப்பால் நம்முள்ளம்
விம்மும்; புளகமுறும்; வெற்றி விழாவெடுக்கும்!
எம்மூரும் எந்நாடும் எவ்வினமும் வள்ளுவரைத்
தம்மூரான் தம்நாட்டான் தம்மினத்தான் என்று கொள்ளும்
பெற்றித் திருமான், பெறலரிய மெய்ப்புகழோன்,
வற்றியநம் வாழ்க்கை வளம் பெருக்கும் நல்லாசான்,
நல்லறத்தின் வித்து, நடுவூர்ப் பழுத்தமரம்!
இல்லறத்தைக் காத்த எழில்தந்தை, நற்செவிலி,
ஆட்சி வகுத்த அறவாணன், செந்தமிழ்க்கு
மாட்சி கொடுத்துயர்ந்த மாப்புலவன், பாட்டிறைவன்,
கல்விக் கதிரோன், கருத்துக்குச் சொல்லுழவன்,
பல்துறைக்கும் உள்ளொளியால் பாட்டுரைத்த செம்புலவன்
தன்பெயரைக் கூறாத் தனித்தகையோன், கல்விவள்ளல்,
அன்புரையால் தீமை அறக்கடியும் நன்னெஞ்சன்,
ஆழ்ந்தகன்ற பேரறிவால் ஆன்ற முதல்நூலான்,
காழ்த்த அறிவுமணி, கங்குகரை யற்றகடல்!

அன்ன பெரும்புலவர்க் கான்ற திருவிழவில்
என்னை, சிறியேனை, எற்றுக்கும் பற்றாத
துன்னுஞ் சிறுதுரும்பைத் தூணென்று கொண்டது போல்
மன்னும் பெருவிழவின் மன்றத் தலைவனெனக்
கொண்டு புகழ் கொண்டீர் கூற்றிற் குறைபொறுப்பீர்!
தொண்டே எம் வாழ்வெனலால் தோல்வியும் எம் வெற்றியன்றோ?

வாழுந் தமிழ்க்குலத்தீர்! வாழ்க்கை பலகோடி!
சூழுகின்ற வாழ்க்கையெலாம் சோற்றுக்கே என்போம் நாம்!
நல்லறங்கள் செய்யோம்; நலந்தேடி நாம்போகோம்,
வல்லமற நெஞ்சால் வருந்துயருக் காட்பட்டோம்!
ஈட்டலெல்லாம் தீநெறியே! ஈவதெல்லாம் தீநெறிக்கே!
நாட்டலெல்லாம் பொய்யுரையே! நாடலெல்லாம் போலிகளே!

மெய்யுரைக்கச் சொல்லிடுவோம்; மெய்பேச நாம் விரும்போம்!
பையுறைக்குள் பைவைத்துக் காசைப் பதுக்கிடுவோம்!
தொண்டைக் குழிநிறைந்து துப்பித் தொலைத்தாலும்
அண்டையயல் உள்ளார்க் கணுவளவும் நாம் கொடுக்கோம்!

பட்டென்றும் சீமைப் பருத்தித் துணியென்றும்
கட்டிக் கிழித்தாலும் கட்டாது போனாலும்
இல்லாத ஏழையர்க்கோர் கந்தையினை ஈந்தறியோம்!

கல்லாத நூலில்லை; கண்ட அறம் பல்கோடி!
என்றாலும் நாமோ இருந்தபடி யேயிருப்போம்!
குன்றாத செல்வம்! குலையாத நல்விளைவு!
தெய்வங்கள் கோடி! திருவிழா பல்கோடி!
மெய்யாக எண்ணுங்கள்! மேன்மை அடைந்தோமா?
என்ன நிலையால், என்ன நிகழ்ச்சியினால்
என்னபடி நாமுயர்ந்தோம் என்றே உரைப்பீர்கள்?
நாம்பெற்ற நாகரிகம் எல்லாம் அயல்நாட்டார்
தாம்கண்டு ஈந்த தவப்பயனா இல்லையா?

நாளிரவாய்க் கண்விழித்தும் நல்லவுணா வுண்ணாதும்
ஆளரவங் காணா நடுக்காட்டில் ஆன்றலைந்தும்
கண்டளித்த நற்பொருள்கள் அல்லால்நாம் கண்டதென்ன?
பெண்டளித்த இன்பமும் பிள்ளைப்பே றும் அல்லால்
நாம்கண்ட தென்னவென நாட்டுதற்கு வல்லோமா?
ஆம் கண்டோம் என்றொன் றறைதற்கே உண்டென்றால்
அன்பும் அறனுமல்லால் வேறென்ன? ஆய்ந்தறிவீர்!
இன்பமெல்லாம் இவ்விரண்டே என்றே குறள் முழங்கும்!
பண்பும் பயனுமதாம் என்னும் பழநூற்கள்!

இத்தகைய அன்பெங்கே? இற்றை அறமுண்டா?
பொத்தகத்துள் அல்லாமல் போக்கினிலே பண்புண்டா?
எங்ஙன் பயன் கிடைக்கும்? ஏனிவ் விழிந்தநிலை
உங்கள் மனமழுந்த எண்ணி உரைத்திடுங்கள்!
வள்ளுவரைக் கொண்டாடி வான்முட்டப் பேசிடுவோம்!
கொள்ளளவே அவ்வுரையை நம்முளத்துக் கொண்டோமா?

நூலெங்கே? நூல்கள் நுவன்ற அறமெங்கே?
கோலெங்கே? நேர்மைக் குணமெங்கே? பண்பெங்கே?
மெய்யெங்கே? வாழ்வென்னும் மேன்மைச் சிறப்பெங்கே?
வெய்ய கொடுவாழ்க்கை! வீணான பொய்வாழ்க்கை!
ஒவ்வொருவர் இல்லத்தும் ஒவ்வொருவர் உள்ளத்தும்
இவ்வினா நிற்கட்டும்! இன்பத் தமிழ் எங்கே?

மெய்வருந்த நாமுழையோம்! மேலோட்ட வாழ்வறிந்தோம்!
பொய்யஞ்சா நெஞ்சும் புளுகுரைக்கும் நாவுமல்லால்
இன்றைக்கு மீந்ததென்ன? ஏன்இம் மறவாழ்க்கை !
அன்றைக்கு யாத்த அறநூல் திருக்குறள்தான்!
ஆனாலும் அந்த அறநூல் உரைத்தவற்றை
ஏனோ மறந்தோம்; இனைய நிலைக்கிழிந்தோம்!
செப்பவாழ் வென்றுரைத்தோம்; செப்பமுற்று வாழவில்லை!
ஒப்புரவு கூறினோம்; நாம்காண ஒப்பவில்லை !

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை நன்றென்றோம் நாம் செய்ய எண்ணவில்லை!
அல்லவை தேய அறம்பெருகும் என்றுரைத்தோம்!
சொல்லியவை நூலிலுள; வாழ்விற்குச் சோறென்றோம்!
ஒல்லும் வகையால் அறவினைகள் ஓம்பென்றோம்!
சொல்லும் வகையெல்லாம் பொய்சொல்லி வாழுகின்றோம்!
ஓம்பும் ஒழுக்கம் உயிரென்றோம்; அம்மாவோ
தீம்புச் செயலே ஒழுக்கமெனத் தேர்ந்துவிட்டோம்!
வெஃகாமை வேண்டும் பிறன்பொருளென் றோதினோம்!
அஃகாவென் றங்காந் தலைகின்றோம் செல்வமெனில்!

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கென்றோம்; ஆனாலும்

நம்பால் ஒருவன் நடையாய் நடந்தாலும்
இம்மி யளவும் எடுத்தீய ஒப்புகிலோம்!

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவென்றோம் என்றாலும்
பத்துருபாத் தாள்களைநான் நூறாக்கு வேனென்றால்
ஒத்தவன்பின் ஓடி ஒருநூறு தாள்தந்தே
ஏமாறிப் பல்லிளித்தே இல்லம் திரும்புகின்றோம்!
நாமாறிப் போனோம்; நமதுள்ளம் மாறியது!

நாகரிக ஆர்ப்பரிப்பில் நல்லுளத்தை மாய்த்து விட்டோம்!
ஈகம் அறிந்தோம்; இரப்பு மேற் கொண்டோம்;
குடிமை நலனழித்தோம்; கூட்டுணர்வை விட்டோம்;
அடிமை மனங்கொண்டோம்; ஆளுடைமை நீக்கி விட்டோம்;
வள்ளுவனார் யாத்தளித்த வாய்மைத் திருக்குறள் போல்
வெள்ளம் போல் நூல்கள் விளங்கக் கற்றாலும்
நம்கீழ்மை நம்மைவிட் டிம்மி நகரவில்லை;
நம் மான நல்லுணர்வு நாற்றுத் துளிர்க்கவில்லை;

அன்புடையீர் என்சொல் அழல்போற் பாய்ந்தாலும்
மன்பதையுள் நாம் விட்ட மாண்பை நினையுங்கள்
ஓர்மின் குறளை! உணர்மின் பொதுநோக்கு!
பார்மின் உலகம்! பழிதுடைமின்! மக்கட்கே
தொண்டு புரிமின்! துடைமின் துயரங்கள்!
பண்டு மொழிந்த நலங்கள் பலகோடி!
எண்ணம் புதுக்குமின்! இன்பம் பெருக்குமின்!
பண்ணும் புதுமையினும் பண்டைப் பழமையினும்
நல்லவற்றைத் தேர்மின்! நயன்மை கடைப்பிடிமின்!
அல்லவற்றை நீக்குமின்! அன்புணர்வை வித்துமின்!

- இன்ன விளைவுக்கு எருப்போலும் நற்கருத்தைக்
கன்னல் தமிழால் கவின்பெறவே கூறுதற்குப்
பாவலர் இங்கே பலர்வந்து நிற்கின்றார்
ஆவல் பெருக அருந்தமிழ்த்தேன் பெய்வார்கள்!
நல்லமைச்சு சொல்வார்; நயன்பெறவே ஆசிரிய
வல்லாண்மை கூறுவார்; வாய்மைச்சான் றோர் விரிப்பார்
நண்பர் உழவர் நறுங்காத லர்துறவி
என்னுந் தலைப்பெடுத்தே எந்தமிழிற் பாவடிப்பார்
இவ்வரிய பாவிருந்தை இங்கிருக்கும் பாவலர்கள்
ஒவ்வொருவ ராய்ப்படைப்பார் உண்பீர்! அவர்நாவில்
தவ்வி அமர்வாளெந் தாய்!

---------------------

இவ்வரிய பாடலைத் தேடியனுப்பிய புலவர் கடவூர் மணிமாறன் அவர்களுக்கு என் நன்றி. நா. கணேசன்