கரந்தைத் தமிழ்ச் சங்கத்து திரு. ஜெயக்குமார் அவர்களிடம் பெற்று, ஐந்து ஆண்டு முன்னர், தமிழ்ப்பொழில் இதழ்களின் பிடிஎப் கோப்புகளைத் தமிழ்மரபு அறக்கட்டளைக்கு அனுப்பினேன். தமிழ்ப்பொழில் இதழ்கள் இணையத்தில் இன்று இலங்குகின்றன. சிற்சில செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி இதழ்கள் தமிழ் எண்ம நூலகத்தில் (http://tamildigitallibrary.in ) கிட்டுகின்றன. இன்னும் 3 இலட்சம் நூல்களாவது இணையம் ஏறினால், தமிழ் ஆழம் பெறும். ஆறாம் திணைத் தெய்வதம் கூகுளாண்டவர் துழாவும் தமிழ்மாணவர்க்கு அருளுவார். பல எம்.ஏ, பிஎச்டி தீஸிஸ்கள் அழியும் தறுவாயில் உள்ளன. இடைக்கால இலக்கியம் வாசிப்போரோ, அவற்றில் புலமையோ இலா ஒரு தலைமுறை உருவாகி வருதலான் வாடுகிற தமிழ்ச்சூழலைக் காண்கிறோம். பேரா. சு. பசுபதி வலைப்பதிவில் , நாட்டார் ஐயா 1925-ஆம் ஆண்டு தமிழ்ப்பொழிலில் எழுதிய கட்டுரை ஒருங்கு குறியீட்டில் வெளியாகிறது. அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை தொல்காப்பியர் திருநாள் என சித்திரை முதல் நாளைக் (14 - 4 - 2021) கொண்டாடும் தருணம் இது. வாசித்துப் பயன்கொள்க. ~ நா. கணேசன்
தொல்காப்பியம்
‘மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி
யிறையவர்தம் பெயரை நாட்டி யிலக்கணஞ் செய்யப் பெற்றே
அறைகடல் வரைப்பிற் பாடை யனைத்தும்வென் றாரி யத்தோ
டுறழ்தரு தமிழ்த்தெய் வத்தை யுண்ணினைந் தேத்தல் செய்வாம்.'
உலகத்திலுள்ள மொழிகள் எல்லாவற்றையும் வென்று ஆரிய மொழியுடன் உறழ்வது தமிழ் என்று சில நூற்றாண்டுகளின் முன் விளங்கிய ஒரு பேரறிஞர் இப்பாட்டிலே கூறி வைத்தனர். இப்பொழுது தமிழ்மொழியுடன் வேறு மொழிகளையும் ஒருங்கு நன்காராய்ந்த ஆராய்ச்சி வல்ல புலமையாளர்கள் இம் முடிவுக்கே வருகின்றனர். தமிழ் மொழி எவ்வளவு பழமையுடையது என்பதனையும், பண்டைய நாளில் எவ்வளவு பரவியிருந்தது என்பதனையும் ஆராய்ந்தறிந்த மதிவல்லராகிய ஆசிரியர் சுந்தரம்பிள்ளை யவர்கள், அதனை,
‘சதுமறையா ரியம்வருமுன் சகமுழுதும் நினதாயின்
முதுமொழிநீ யனாதியென மொழிகுவதும் வியப்பாமே.'
என்று மொழிந்தருளினர். இங்ஙனம் பழமையால் மாத்திரமன்றி, இயல்வரம்பாகிய திருந்திய நிலையாலும், இனிமை முதலியவற்றாலும் தமிழ்மொழி தலைசிறந்து விளங்குதலின், புலமையும் , தெய்வத்தன்மையும் வாய்ந்துளோர் என நம்மாற் போற்றப் பெறும் நம் பெரு மக்கள் பலரும் தமிழைக் குறிக்குமிடத்தெல்லாம் செந்தமிழ், பைந்தமிழ், இன்றமிழ் , மென்றமிழ் , வண்டமிழ் , ஒண்டமிழ் , நற்றமிழ் , சொற்றமிழ் என்றிங்கனம் அடையடுத்து வழங்குவாராயினர் . இந் நாட்டிற்குரிய தொன்முது மக்களாகிய தமிழருடன் ஆரியர் விரவி ஒரு நாட்டினராக வாழலுற்ற காலத்தில் தமிழருடைய தத்துவ ஞானங்கள் வடமொழி நூல்களாகப் பரிணமித்தன. ஆரியருடைய கலை ஞானங்களும் , கோட்பாடுகளும் தமிழிலும் ஏறின . இரு மொழியும் நம்முடைய பெருமொழிகளென இந்நாட்டு முன்னையோர் போற்றி வந்தனர். எனினும் சிற்சில துறைகளில் ஒரு மொழி மற்றொரு மொழியினும் ஒவ்வொரு காலத்திற் சிறந்து விளங்குதல் இயற்கையே. தமிழ் மொழியானது ஆரியத்தை வெல்லுதற்கு மாறு கொண்டு நிற்கின்றது என்பது தலைப்பிற் காட்டிய பாட்டிலே குறிக்கப் பெற்றுளது. உறழ்தல் என்பதற்கு ஒத்தல் என்றும் பொருள் கூறப்படினும், வெல்லுதற்கு மாறுகொள்ளல் என்பதே சிறந்த பொருளாகும் . நம் இருமொழிகளில் வடமொழி வழக்கற்று வீழ்ந்ததனையும் தமிழ்மொழி இளமைச் செவ்வியுடன் என்றும் வழங்குதற்குரியதாய் மிளிர்வதனையும் நோக்குழி தமிழ் ஆரியத்தை ஒருவாற்றால் வென்று விட்டதென்றே இப்பொழுது கூறுதலும் ஏற்புடைத்தாகும்.
தமிழ் தன் மொழியமைதியாற் பிறமொழிகளை வென்று விளங்குதலேயன்றி , தன்னிடத்துள்ள சில நூல்களாலும் வாகை சூடித் திகழ்தல் கண்கூடாம் . திருக்குறள் , திருவாசகம் , திருவாய் மொழி என்னும் நூல்களுக்கு இணையான நூல்களை வேறெம் மொழியிற் காணக்கூடும்? தொல்காப்பியம் என்னும் இயல் நூலும் அத்தன்மையதே. இயல், இசை , நாடகம் என்னும் முத்துறையிலும் முச்சங்க நாளிலே இயற்றப் பெற்றுப் பரந்து கிடந்த இலக்கண நூல்களெல்லாம் கரந்துபடவும், தொல்காப்பிய மென்னும் இவ்வியற் றமிழிலக்கணம் இன்று காறும் நின்று நிலவுவது , பல்லாயிரம் ஆண்டுகளாக நம் முன்னையோர் இதனை எங்கனம் மதித்துப் போற்றி வந்தனரென்பதற்கு உறு சான்றாகும் .
”கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை
மண்ணி டைச்சில விலக்கண வரம்பிலா மொழிபோ
லெண்ணி டைப்படக் கிடந்ததா வெண்ணவும் படுமோ.”
என்றிவ்வாறாக , இலக்கண வரம்புடைமையால் நம் தமிழ்மொழி நிகரற்றதென வைத்துப் போற்றப்பெறுவது புனைந்துரையாமென ஏதிலார் புறங்கூறுதற் கிடனின்றி , எய்ப்பினில் வைப்பாக இந்நூல் கிடைத்திருப்பது நாம் புரிந்த தவத்தின் பயனேயாம். தமிழின் வரலாறனைத்தும் ஒருங்குணர்ந்து கோடற்குச் சிறந்த கருவியாகவுள்ள இந்நூல் இனி எக்காலத்தும் நிலவுதலுறும் என்பதிற் சிறிதும் ஐயமில்லை . இந்நூலானது தமிழ் கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆராய்ந்து முந்து நூல்கண்டு முறைப்படத் தொகுத்தியற்றப்பட்டதென்பது வடவேங்கடம் என்னும் இதன் சிறப்புப் பாயிரத்தால் அறியலாவது. இந்நூலை ஆராய்ச்சி செய்யுமிடத்து இது நன்கு தெளிவாம். இந்நூலின் எழுத்ததிகாரத்து மொழி மரபின் கண்ணே மொழிக்கீறாம் எழுத்துக்கள் கூறிவருமிடத்தே , சகரமெய்யூர்ந்த முற்றுகரமும் , நகரவொற்றும் இவ்விரண்டு மொழிகட்கே ஈறாகு மென்றும், பகர மெய்யூர்ந்த முற்றுகரமும் ஞகர வொற்றும் ஒவ்வொரு மொழிக்கே ஈறாகு மென்றும் , பகர மெய்யூர்ந்த வுகர வீற்றுச்சொல் ஒன்றே தன்வினைப் பொருளும் பிறவினைப் பொருளும் பயப்ப தாமென்றும் உணர்த்துவார்,
'உச்ச காரம் இருமொழிக் குரித்தே.'
'உப்ப காரம் ஒன்றென மொழிப.'
'இருவயி னிலையும் பொருட்டா கும்மே.'
'உச்ச காரமொடு நகாரம் சிவணும்.'
'உப்ப காரமொடு ஞகாரையும் அற்றே
அப்பொரு ளிரட்டா திவணையான.'
என ஆசிரியர் கூறி வைத்திருப்பன சிலவற்றிலிருந்தே, தமிழின் இரு வகை வழக்கினு முள்ள சொற்பரப் பெல்லாம் ஒருங்கு தொகுத்து வைத்துக் கொண்டு இந்நூல் இயற்றப்பட்டதென உணரலாகும் . மற்றும், தொகைமரபின் கண்ணே ,
'அளவிற்கும் நிறையிற்கும் மொழி முதலாகி
உளவெனப் பட்ட ஒன்பதிற் றெழுத்தே
அவைதாம்,
கசதப என்றா நமவ என்றா
அகர உகரமோ டவையென மொழிப.’
என்னுஞ் சூத்திரத்தால் , தமிழக முழுதும் வழங்கிய அளவுப்பெயர், நிறைப்பெயர்களை அவற்றின் முதலெழுத் தெடுத்தோதிக் குறித்து வைத்ததும், பொருளதிகாரத்து மரபியலில், இளமைப் பெயர் , ஆண்மைப் பெயர் , பெண்மைப் பெயர் எல்லாம் எடுத்தோதி , இன்னின்னவற்றிற்கு இன்னின்ன பெயர்கள் உரியவெனக் கூறி வைத்திருப்பதும் போல்வன இவ்வுண்மையை நன்கு விளக்குவனவாகும் . தமிழுக்கே உரிய சிறப்புவாய்ந்த பொருளதிகாரத்தில் மக்களுடைய ஒழுகலாறெல்லாம் தொகுத்துணர்த்தி யிருக்கும் மாட்சி அளவிடற் பாலதன்று . இவ்வாறாக இந்நூலின் கண் அமைந்து கிடக்கும் எழுத்துச் சொற்பொருட்டிறங்களையும் , அவற்றை ஆசிரியர் கூறிச் செல்லும் நெறிமுறைகளையும் நூற்பாக்களின் திட்ப நுட்ப அழகுகளையும், இன்னோரன்ன பிற சிறப்புக்களையும் ஒரு கட்டுரையில் எழுதிக் காட்டுவதென்பது இயலாத தொன்றாம்.
இனி , இத்தகைய சீருஞ்சிறப்பும் வாய்ந்த இவ்வியல் நூலையருளிய ஆசிரியராகும் ஒல்காப்பெருமைத் தொல்காப்பியனாரது வரலாறு ஏனைப்பல ஆசிரியர்களின் வரலாறு போன்றே நாம் செவ்விதின் அறிய வொண்ணாத்தாயிற்று , இவ்வாசிரியரின் வரலாற்றுக் குறிப்புக்களாக நமக்குக் கிடைத்திருப்பன மிகச்சிலவே . இவை கொண்டு சிற்சிலர் தாம் தாம் கருதியவாது இவ்வாசிரியரைப் பற்றி எழுதியிருக்கின்றனர். யாமும் தொல்காப்பியர் வரலாறாக அறிவனவற்றைத் தொல்காப்பிய ஆராய்ச்சி முடிவிற் கூறுவேம் . இனித் தொல்காப்பிய ஆராய்ச்சியைப் பல பகுதிகளாகப் பகுத்துக் கொண்டு , அவற்றை முறையே ஒவ்வொன்றாக எழுதிவரக் கருதியுள்ளேம் . இயல்பிலே சுருங்கிய அறிவினேமாகிய யாம் பலவினை நலிவுகட்கு இடையே இப்பேராராய்ச்சியை எடுத்துக் கொண்டது தமிழன்னையின் சிறுமகார் ஆற்றும் இச்சிறு திருத்தொண்டுக்கு அன்பர்களின் அன்பு முன்னின்று ஊக்கமளிப்பது போன்று இறைவன்றிருவருள் உண்ணின்று ஊக்கமளிக்கும் என்னும் துணிபு கொண்டேயாம்.
வாழி கரந்தை வளருந் தமிழ்ச்சங்கம்
வாழி தமிழ்ப்பொழில் மாண்புடனே - வாழியரோ
மன்னுமதன் காவலராய் வண்மைபுரி வோரெவரும்
உன்னுபுக ழின்பநலம் உற்று.
நாவலர் பண்டித. நடுக்காவேரி மு. வேங்கடசாமி நாட்டார்.