Three Milestones of Bull Fighting in India: ஏறுதழுவல் பொங்கல் பண்டிகையோடு இணைந்தது. கால நெடுங்கோட்டில் இந்தியத் துணைக்கண்டத்தில் மூன்று மைல்கல்களை ஏறு அணைதல் – பொங்கல் விழாவோடு பொருத்தமாகக் காணலாம். (1) சிந்துசமவெளியின் முத்திரைகளில் ஏறு தழுவல். இம்முத்திரை பற்றித் தமிழ்நாட்டில் அண்மையில் வெளிவந்த சிந்துசமவெளி ஆய்வு நூல்களிலோ, பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பேசும் யுட்யூப் சொற்பொழிவுகளிலோ ஒன்றும் காணோம். சிந்து சமவெளியின் ஏறுதழுவல் முத்திரை பற்றிக் கட்டுரை தரவேண்டும்.
கொல்லி/கொற்றிப் பாவை மயிடனுடன் போரிடும் முத்திரைகள் சில உள்ளன. ஜல்லிகட்டு பற்றி விளக்கும் நூல்கள், காணொளிகளில் கொல்லி-மயிடன் (எருமை) போர் முத்திரைகளைக் காட்டுகிறார்கள்! சிந்து முத்திரைகள், வில்லைகள்(tablets) பார்த்தால் ஒன்று விளங்கும்: எருமைப் போத்தைக் கொல்லும் காட்சிகள் பல உண்டு. ஆனால், திமில் காளைகளைக் கொன்று பலி இடும் காட்சிகள் எதுவும் இல்லை. கொல்லி/கொற்றி (கொற்றவை) என்னும் பெயர் கொல்- என்னும் வினையடிப் பிறந்தது. கொற்கை கொல்கை என கிரேக்க நூல்களில் குறிப்பிடப்படுகிறது. மொகஞ்சதாரோ, பனவாலி முத்திரைகளில், கொல்லி-மயிடன் (போத்தரையன்) போர்க் காட்சி:
Paṭṭa-Mahiṣī: Proto-Koṟṟavai goddess in Indus civilization (Banawali and Mohenjadaro) http://nganesan.blogspot.com/2021/01/banawali-mohenjadaro-proto-durga.html
Indus seal, M-312 ஜல்லிக்கட்டு அல்ல, கொற்றவை போத்துராஜா போர் (Proto-Koṟṟavai war with Mahisha) http://nganesan.blogspot.com/2021/01/m312-seal-is-not-jallikkattu.html
பட்ட மகிஷி என்பதன் விளக்கமும், பட்டக்காரர், பட்டநாயக், பட்டவர்தனன் போன்ற க்ஷத்ரியர்களின் விருதுப்பெயர் தோற்றமும் காண்க. மேலும், வெற்றி வாகை சூடும் போர்க்களத்திற்குச் செல்ல ஏற்பட்ட முத்திரைகளில் வேல், ஈட்டி, கதாயுதம் போன்றவற்றை ஏந்துவானுடன், சேவல் (கோழி) காட்டப்பட்டுள்ளதும், பின்னாளில் தேவசேனாபதி கார்த்திகேயன் காசுகளில் கோழி வந்தவாறும், இந்தோ-கிரேக்கர்கள் கந்தார தேசத்தில் இவ்வாறு செய்யுமுன்னரே, பாரசீகம் வழியாக, கிரேக்க வீரர்களின் கேடயங்களில் இந்தியாவின் (சிந்து சமவெளியின்) கோழிச் சின்னம் இடம்பெற்றதும் குறிப்பிட்டுள்ளேன்.
(2) சங்க இலக்கியம் – கலித்தொகை முல்லைத்திணைப் பாடல்களில் ஏறு தழுவல். விரிவாக, மதுரைப் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் தொடங்கி ஐராவதம், பார்ப்போலா விளக்கியுள்ளனர்.
(3) ‘ஆ கெழு கொங்கர்’, ‘கொங்கர் ஆ பரந்தன்ன’ என்பது சங்க இலக்கியம். பழயகோட்டைக் காங்கயம் காளைகளின் கெம்பீரம் (Majesty) உலகறிந்தது. இந்தியாவில் பல்வேறு காளை இனங்கள் இருந்தாலும், காங்கயம் காளை இனம், அதன் கொம்பு, காம்பீர்யம் சிந்து திமில்கொண்ட காளைகளுடன் (Zebu Bulls) ஒத்துப்போகின்றன. I will post the photograph of the real Jallikkattu seal from Indus Valley Civilization. பிராமி, சமணம், சைவம் போன்றவை வடபுலத்தில் இருந்து கொங்கு (சேரநாடு) வழியாக, மதுரை (பாண்டிநாடு) சென்றடைந்த வரலாற்றைச் சங்க இலக்கியங்களும், தொல்லியல் அகழாய்வுகளும் காட்டிவருகின்றன. பெ. தூரன், பிரெண்டா பெக் போன்றோர் கொங்குநாட்டுப் பொங்கல் பண்டிகையைப் பற்றி எழுதியுள்ளனர். பட்டிநோன்பு பரிபாடல் 5-ம் பாடல் விளக்கமாக அமைந்துள்ளது.
கொல்லி, முருகு அணங்குகளும், வடநாட்டு வானியல் சமய மரபுகளும்: இந்தியா முழுமையும் இருந்த த்ராவிட நாகரீகம் அணங்கு வழிபாட்டின் அடிப்படையில் அமைந்தது. இரும்பூழிக் காலத்தில் அணங்கு வழிபாட்டை ஜார்ஜ் ஹார்ட் 1960களில் எழுதிய ஹார்வர்ட் பல்கலை தீஸிஸில் வாசிக்கலாகும். சிந்து நாகரீகத்தின் எச்சங்கள் பெருங்கற்காலத்தில் தமிழகத்தை வந்தடைகின்றன. வேளிர் வருகை, அரசுகளின் தோற்றம், இரும்பு உலோகப் பயன் அறிமுகம், மகரவிடங்கர் சிற்பங்கள் (மோட்டூர், உடையார்நத்தம்), பின்னர் பிராமி, ஜைனம், சைவம் வருகை என்பவை கி.மு. 800 – கி.பி. 200 வரை நிகழ்ந்துள்ளன. வட-தென் பண்பாடுகளின் கலப்பாக சிந்துவெளியின் வானியல் மரபுகள் முருகு அணங்குடன் சேர்ந்து கார்த்திகேய ஸ்வாமி வழிபாடாக மலர்வதை பரிபாடல், திருமுருகு போன்ற சங்க நூல்களில் காண்கிறோம். அதே போல, கொல்லி/கொற்றி என்னும் பாவையை வழிபட்டுத் திருமணங்கள் நிகழ்வதைச் சங்க இலக்கியத்தின் இரு கலியாணப்பாட்டுகளிலும் காண்கிறோம், இப்பாவை வழிபாடு, ஆண்டாளின் திருப்பாவை நோன்பு கன்னிப்பெண்கள் திருமணம் ஆவதற்காக, காத்யாயனி (= மகிஷாசுரமர்தனி ஆகிய துர்க்கை) தொழுதல் என்று ஸ்ரீமத் பாகவதம் தெரிவிக்கிறது. ஆக, கொல்லி(கொற்றி துருக்கை) வழிபாடு வட-தென் புல வழிபாடுகளின் இணைப்பாக மலர்ச்சி பெறுவது சங்க காலத்தில். சேரர்கள் கொல்லி மலையைக் குலபர்வதமாகக் கொண்டு வாழ்ந்தனர். கொல்லிப்புறை, கொல்லிரும்புறை என்று சங்க காலத்தில் தம் குலதேவதையின் பெயரால் காசுகளும் வெளியிட்டனர். தக்ஷிண கன்னர மாவட்டத்தில் கொல்லி என்று ஸ்ரீதுர்க்கை வழிபடப்படுகிறாள். இவள், சேர மன்னர்களின் கிளையாகிய அதியமான்களின் குலதெய்வம் ஆகலாம். சேரர்கள் கடுமான் < கடுமிமான் என துர்க்கையின் அடியார்கள் எனத் தங்களை அழைத்துக்கொண்டமை எடக்கல் தமிழ் பிராமிக் கல்வெட்டு போன்றவற்றால் அறிகிறோம். முருகு – கார்த்திகேயன் ஆவதும் இக்கால கட்டத்திலே தான்.
கொங்கு – மதுரை நடுவே பிராமிஎழுத்து தமிழுக்கு உற்பத்தி ஆகும் இடங்களில் முக்கியமானது வத்தலக்குண்டு வட்டாரம். நவீனத் தமிழ் இலக்கியத்தில், ஜல்லிக்கட்டு பற்றி முதலில் ‘கமலாம்பாள் சரிதம்’ என்னும் நூலில் எழுதியவர் வத்தலக்குண்டு ஆர் ராஜமையர். அதன் பின்னர், கு.ப.ரா எழுதிய ‘வீரம்மாளின் காளை’ சிறுகதையை ஒருங்கு குறியீட்டில் இங்கே வாசிக்கலாம். பின்னர், சி.சு. செல்லப்பா ‘வாடிவாசல்’ குறுநாவல் தந்தார். எங்கள் தோட்டத்தில், 1950களின் கடைசியில் ஆயுதபூஜை திருவிழா. சென்னை மாகாண அளவில் கால்நடைப்போட்டியில் முதலிடம் வென்ற காளை இந்த ஒளிப்படத்திலே இருக்கிறது.
~N. Ganesan
https://youtu.be/xCetfZJS3NI29
வீரம்மாளின் காளை
கு.ப.ரா., மணிக்கொடி, 30.04.1936.
வீட்டின் பின்புறக் கொட்டிலில் வீரம்மாள் தனியாக உட்கார்ந்திருந்தாள். அழுகையால் சிவந்திருந்த அவளுடைய பெரிய கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. மோவாய்க்கட்டையை வலது உள்ளங்கையில் தாங்கி ஏதேதோ எண்ணிக்கொண்டிருந்தாள். கோதி அள்ளிச் செருகியிருந்த தலைமயிரில் காலையில் வைத்துக்கொண்ட செவ்வந்திப் பூவும், கள்ளநாட்டு வழக்கப்படி பட்டைக் காரையுடன் சேர்த்துக் கழுத்தில் போடப்பட்டிருந்த பூவும், அப்படியே இருந்தன. காலையில் அணிந்த புதுச்சேலை கூட மாற்றப்படாமல் இருந்தது.
"ஏண்டி வீரம்மா நாளுங்கிளமையும் ஏன் இப்படி குந்திக்கிட்டிருக்கிறே? ரவைக்கி புதுக்கொளம்பு வைக்க வேண்டாமா?! என்று கேட்டுக்கொண்டு வந்த மூக்காயி தன் பெண்ணின் மடியில் ரத்தக் கறைபட்ட ‘மாட்டுத்துண்டு’ கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டுவிட்டாள்.
"ஏலா இதென்ன ரத்தம்?! என்று கேட்டுக்கொண்டே அருகில் ஓடினாள்.
சிற்பியின் பதுமைபோல் உட்கார்ந்திருந்த வீரம்மாள் மெல்ல வாயைத் திறந்து, 'ஆமா, உம் மருமயென் கொடலு ரத்தம்” என்று சொல்லி முடிக்கவில்லை.
அதற்குள், 'ஏண்டி, உங்காளெ களுத்துத் துண்டு கணக்கா இருக்குதே?! என்றாள் மூக்காயி.
'ஆமாம்’ என்று பதிலளித்துவிட்டு, வீரம்மாள் மறுபுறம் திரும்பிக்கொண்டாள்.
மாலைச் சூரியனின் கரணங்கள் அவள் கண்களைச் சற்றே கலக்கியதைக்கூட அவள் பாராட்டவில்லை.
பதினெட்டுப் பட்டிகளுக்குப் பெரிய அம்பலகாரனான பொங்குளியாண்டியின் ஒரே மகள் வீரம்மாள். பதினாறு வயசாகையால் அவளது கறுத்தமேனி யெளவனத்தின் கட்டழகு பெற்றிருந்தது. மங்கைப் பருவம் அவளுடைய முகத்தில் மிதப்புக் கொண்டிருந்தது. சாதாரணமாகவே கள்ளப்பெண்கள் சரீரக் கட்டில் கியாதி பெற்றவர்கள். அத்துடன் வீரம்மாளின் முகத்தெளிவும் சேர்ந்து அவளை அந்நாட்டுக்கு ஒரு திலகமாக்கியது. அவளை மருமகளாக்கிக்கொள்ள அநேக அம்பலக்காரர்கள் விரும்பினார்கள். ஆனால் ஆசாரப்படி, அவளை மூக்காயியின் அண்ணன் மகன் காத்தானுக்குக் கட்டிக் கொடுப்பதாகப் பரிசம் போட்டிருந்தது. தை பிறந்ததும் 'கண்ணாலம்'.
அன்று 'மஞ்சவெரட்டு’. காலை முதலே பதினெட்டுப் பட்டிகளிலிருந்தும் மாடுகள் வரத்தொடங்கின. வரவர அவற்றைத் தொழுவுகளில் அடைத்து வைத்தார்கள். கள்ளப் பெண்களும், ஆண்களும் திரள்திரளாக வந்து கொண்டிருந்தார்கள். பெண்கள் புதுச்சேலை உடுத்துத் தலைமயிரை வேப்பெண்ணெய் தடவி வாரி முடித்து, கொண்டையிலும் கழுத்திலும் செவ்வந்திப் பூக்களைச் செருகிக் கொண்டிருந்தார்கள். கை தவறாமல் கரும்பு!
வீரம்மாளும் அன்று காலையில் வெகு உற்சாகமாகத் தன்னை அலங்கரித்துக்கொண்டாள். ஆனால், முதல் நாளிரவு சாப்பாட்டுப்பந்தியில் தன் அப்பன் பேச்சுவாக்கில் பேசினதில் மனத்தாங்கல் கொண்டு, 'தன் அயித்தான்' தன்னுடைய மாட்டைப் பிடிக்கத் தீர்மானித்துவிட்டான் என்று கேட்டதும் அவள் கவலை கொண்டாள்.
பந்தியில் பேச்சு வந்தபொழுது பொங்குளியாண்டி அம்பலம், தன் மகளின் காளையை யாராலும் பிடிக்க முடியாது என்று வீரம் பேசினான்.
அதைக் கேட்டதும் காத்தான் சிரித்தான். அம்பலத்திற்கு கோபம் வந்துவிட்டது.
'என்னடா சிரிக்கிறே; நீ பிடிச்சுடுவையோ?' என்று உதாசீனமாக அவ்வளவு பேர் நடுவில் கேட்டான்.
காத்தானுக்கு ரோசம் வந்துவிட்டது.
'பொல்லாக் காளே! நான் நாளைக்கி அதைப் பிடிக்காட்டி ஆம்பிள்ளையா?'
'ஏண்டா வெறும் பேச்சு! ஓம் பாட்டனாலேயும் முடியாது. ஐயனெக் கூடல்ல ஏமாத்திடுச்சு!'
'ஏஞ் சும்மாப் பேசறீங்க? நான் பிடிக்காட்டி ஏன்னு கேளுங்க' என்று சபதம் கூறினான் காத்தான்.
இதுகூடக் காத்தான் தீர்மானத்திற்குக் காரணமாக இருந்திருக்காது? இளமையின் பெருக்கில் மெய்மறந்த வீரம்மாள், தன் செய்கையின் பலனைக் கொஞ்சமும் சந்தேகிக்காதவளாய், கொல்லென்று சிரித்து விட்டது தான் அவனுக்குச் சுருக்கென்று பாய்ந்தது.
வீரம்மாள் தன் காளையின் சக்தியை நன்றாக அறிவாளாகையால் இந்தத் தீர்மானத்தைக் கேட்டதும் கவலை கொண்டுவிட்டாள். அதைப் பிடிக்க முயலவேண்டாம் என்று தன் தாயை விட்டுக் காத்தானுக்குச் சொல்லச் சொன்னாள். மூக்காயியின் தூண்டுதலின்பேரில் அம்பலகாரன் கூட நல்ல வார்த்தை சொல்லிப் பார்த்தான். ஆனால் காத்தான் கள்ள ஜாதியான் அல்லவா?
சுமார் இரண்டு மணிக்கு மந்தைக் கோயிலில், எள்ளுப் போட்டால் கீழே விழாது என்பார்களே, அப்படிப்பட்ட கூட்டம். தொழுவில் அடைக்கப்பட்டிருந்த ஜல்லிக் கட்டுக் காளைகள் திறந்துவிடப்பட்டவுடன் ஓடுவதற்காக நடுவில் ஒரு பாதை. இரண்டு பக்கங்களிலும் கட்டை வண்டிகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றின் உள்ளும் மேலும் ஜனங்கள். மாடுகளைப் பிடிப்பதற்கு வந்தவர்கள் மட்டும் பத்துப் பத்துப் பேர்களாகத் தனித்தனி இடங்களில் விட்டு விட்டுப் பதுங்கி இருந்தார்கள்.
மந்தைக் கோயில் தெய்வத்திற்குப் பூசையானவுடன் தொழுவுகள் அம்பலக்காரன் கையால் திறந்துவிடப்பட்டன. கொட்டு முழக்குகள், ஜனங்களின் கூச்சல்கள், கூட்டம் - இவற்றால் மிரண்ட மாடுகள் வாலை எழுப்பிக் கொண்டு தலைதெறிக்க நாலுகால் பாய்ச்சலில் ஓடின. வழக்கமான சில மட்டும் கூட்டத்தைத் திரும்பித் திரும்பி எதிர்த்துக் கொண்டு நடந்து சென்றன. இவைகளை 'நின்னுகுத்தி' என்பார்கள். ஓடுபவைகளைக் காட்டிலும் இவைகளைப் பிடிப்பதுதான் கஷ்டம். நாட்டியக் குதிரையைப் போல ஓர் இடத்தில் நின்றுகொண்டு நாலு புறத்திலும் திரும்பித் திரும்பிப் பாயும். ‘நின்னுகுத்தி மாடுகள் அப்படிப் பாயும் பொழுது அந்தத் திக்கிலிருக்கும் கூட்டம் குபீரென்று கலையும். மாடுகள் நெருங்கி விட்டால் பொத்தென்று கீழே விழுந்து விடுவது தப்புவதற்கான ஒரு யுக்தி. கீழே விழுந்தவர்களை அவை குத்துவதில்லை.
காத்தான் தன் சகாக்களுடன் ஒரு பக்கம் காத்திருந்தான். பிடிக்க வசமாகத் தன் பக்கம் வந்த பல மாடுகளைக் கண்ணெடுத்துக்கூட அவன் பார்க்கவில்லை. வீரம்மாளின் காளை சீவிய கொம்புகளுடனும், மதுவால் வெறிகொண்ட பார்வையுடனும் அவ்வளவு கூட்டத்தின் நடுவில் நடைபோட்டுக்கொண்டு வந்தது. எதிரில் ஒருவரும் தோன்றத் துணியவில்லை. பக்கங்களும் காலியாக இருந்தன. அடிக்கடி வாலைப் பிடித்து இழுக்க முயலும் சில துடுக்கான வாலிபர்களை மட்டும் ஒரு திரும்புத் திரும்பி விரட்டிற்று. அவன் என்ன செய்யப் போகிறானென்பதைப் பார்ப்பவர்கள் அறிவதற்கு முன் குபீரென்று அதன் முன்பாய்ந்தான் காத்தான். அதே கணம் வெகு கோபத்துடன் மாடு கொம்புகளைத் தாழ்த்தியது. கூட்டம் அலறிற்று.
ஆனால் மறுகணம் காத்தான் மாட்டின் கொம்புகளை அணைத்துக் கொண்டு அதன் கழுத்தில் கால்களைப் பின்னிக்கொண்டிருந்தான். மாடு வெறிபிடித்தது போல் ஓட ஆரம்பித்தது. காத்தான் தன்னுடைய பற்களால் அதன் கழுத்தில் கட்டப்பட்டிருந்த புதுத்துண்டை அவிழ்த்துக் கவ்விக்கொண்டு, அபாரத் துணிச்சலும் தீர்மானமும் கொண்டு ஓர் ஊசல் கொடுத்து, திடீரென்று கையை விட்டுப் பின்புறமாக மாட்டின் முதுகின் மேலே தாவினான். தாவின சமயம் மாடு ஒரு மரத்தடியில் வந்தது. ஒரு விநாடி தான் அவனுக்கு யோசிக்க இடம் இருந்தது. மரத்தில் தொத்திக் கொள்ளலாம் என்று கிளையைப் பற்றிக் கால்களைத் தூக்கினான். மாடு வெருண்டதுபோல் பின் வாங்குவதற்கும், திடீரென்று அவன் சுமையால் எதிர்பாராத வண்ணம் கிளை தாழ்வதற்கும் சரியாக இருந்தது. அந்த நிமிஷமே மாடு பாய்ந்து அவனுக்கு கீழே கொம்புகளைத் தாழ்த்திற்று. காத்தான் உடல் மாட்டின கொம்புகளில் இறங் கியது. அந்தப் பாரத்தைத் தாங்கமாட்டாத மாடு தலையைத் தாழ்த்தி உதறிற்று. பிடி நழுவி ரத்தம் பீறிடக் காத்தான் கீழே விழுந்தான். மாடு பறந்து விட்டது.
பின்னால் ஓடி வந்தவர்கள் காத்தானை ஒரு கயிற்றுக் கட்டிலில் போட்டு ஆஸ்பத்திரிக்குத் தூக்கிச் சென்றார்கள். காத்தான் ரத்த நஷ்டத் தால் பிரக்ஞை இழக்கும் தறுவாயில் இருந்தான். வீரம்மாளுக்குச் சொல்லியனுப்பச் சொன்னான். அதே கவலையாக வெகு ஆவலுடன் மந்தைக் கோயிலில் காத்துக்கொண்டிருந்த வீரம்மாளிடம் செய்தியுடன் ஆள் வந்தான். அவள் ஆஸ்பத்திரிக்குச் செல்லும் பொழுது அவன் இறக்கும் தறுவாயில் இருந்தான். அவனால் பேச முடியவில்லை . தன் ரத்தத்தில் தோய்ந்து கிடந்த மாட்டுத் துண்டை அவள் கையில் கொடுத்து விட்டுக் கண்களை மூடிவிட்டான்.
***
'ஏண்டி வீரம்மா, ரொம்பக் காயமாடி?' என்று மூக்காயி கேட்டாள். கையால் தாங்கப்பட்ட மோவாய்க் கட்டையை மெள்ளத் திறந்து வீரம்மாள், 'செத்துப் போயிருச்சு' என்று சொல்லி மறுபுறம் திரும்பினாள்.
தான் அத்தனை நாளாய்த் தன் கையால் தீனி போட்டுத் தண்ணீர் காட்டி வளர்த்த காளை இப்பொழுது யம ஸ்வரூபமாகத் தன்முன் நிற்பதைக் கண்டாள்-திரும்பி வீட்டுக்கு வந்துவிட்டது.
வீரம்மாள் சாவதானமாக எழுந்தாள். பக்கத்தில் இருந்த வேல் கம்பை எடுத்து, 'புடிபட்டக் களுதைக்கி ரோசம் வேறேயா?' என்று வேலை அதன் மேல் பாய்ச்சினாள்.