புள்ளிவில் (= Rainbow, தூளிஜாலம்)

புள்ளிவில் (= Rainbow, தூளிஜாலம்)

’பசுமைக் கவிஞன்’ நிரஞ்சன் பாரதி, இராமநாடகக் கீர்த்தனையில் வரும் புகழ்பெற்ற ஒரு கீர்த்தனையில் வரும் ’புள்ளிவில்’ என்றால் என்ன என என்னைக் கேட்டிருந்தார். பாடலின் சரணத்தைப் படித்தால் அதன் பொருள் வானவில் என்பது வெளிப்படை.

தரு-7

மோகனராகம்                             ஆதிதாளம்

பல்லவி

ராமனைக்கண் ணாரக்கண்டானே-விபீஷணன்கை
மாமுடிமேல் வைத்துக்கொண்டானே                    (ராம)

அநுபல்லவி

காமனும் செங்கமலப்  பூமனும் பணிபரந்
தாமனை ஆயிர  நாமனைக்  கோதண்ட (ராம)

சரணங்கள்

1. வெள்ளமான வானர           வர்க்க-நடுவேதம்பி
            மேருமலைபோல் அருகே    நிற்க-பூணில்லாமார்பம்
  புள்ளிவில் போடாதமேகம்      ஒக்கத்-தோள்வளைநீக்கிப்
         பூட்டில்லா மந்தரம்போல்    சோபிக்க-மூன்றுலோகமும்

வானவில்லுக்குத் தமிழிலே பல பெயர்கள்: (1) இந்திரசாபம், (2) இந்திரதனு (3) இந்திரவில் (4) குறைவில் (5) கூனி (6) சிலை (7) திருவில் (8) பச்சைவில் (9) மணிதனு (10) மழைச்சிலை (11) மேகதனு (12) வருணவில் (13) வான்மிகம் (14) வானவில் (15) வில் (16) கோடீரம் (17) கௌசிகாயுதம் (18) வில்லடிக்குறி.

இதில், புள்ளிவில் என்ற சொல்லும் சேர்க்கப்படல் வேண்டும். புள்ளிவில் என்னும் வானவில் கரந்துறைகோள் என்று சமணர்களால் வர்ணிக்கப்படுவது: கொங்குவேளிர் பெருங்கதையிலே இதனைக் காண்கிறோம்.

கரந்துறைகோள் karantuṟai-kōḷ , n. < id. +. Phenomena of the heavens, sometimes visible and sometimes not, for the most part regarded as ominous, such as இராகு, கேது, பரிவேடம், வால்வெள்ளி, வானவில்; மறைந்து சிறுபான்மையாகப் புலப்படுங் கிரகங்கள். கரந்துறைகோளொடு நிரந்தவை நிறீஇ (பெருங். உஞ்சைக். 58, 57).

புள்ளி என்பதற்கு தூளி (= தூசி, speck) என்றும் ஒரு பொருள் உண்டு. மகரந்தம், மண், புகை, ... போன்ற தூளிகளால் நீர்த் துளியில் கலந்து விண்ணில் ஜாலத்தை உண்டுபண்ணுவதற்குத் தூளிஜாலம் (dhūli-jālam) என்று வானவில்லுக்குப் பெயரைச் சமண நூல்களிலே காண்கிறோம். (Jaina.) The first outer wall of the temple of Arhat, in camava-caraṇam, known as tūḷicālam and having the splendour of a rainbow; சமவசரணத்துள் தூளிசாலமென்னும் பெயருடையதும் இந்திரதனுசின் ஒளியுடையதும் முத லாவதுமான ஜினாலயத்தின் வெளிமதில். வானவிற் கடந்து (மேருமந். 60).

வானின் துளியில் தூளி (dhūli, புழுதி) கலந்து ஏற்படுவது வானவில் எனக் கொண்டுள்ளனர் என்பது ’தூளிசாலம்’ என வானவில்லுக்கு வழங்கிய பெயரால் விளங்குகிறது. dhūli – துகள் என்ற சொல் தமிழாதலான், தூளி ‘தூசி’ =  dhūli என்பதும் திராவிட மொழி  வடமொழிக்கு வழங்கும் கொடை எனக் கொள்வர் வடமொழி அறிஞர் (tuka DEDR 3283). ’தாயே யசோதா’ ... கீர்த்தனையில் “பாலனல்லடி உன் மகன் ஜாலம் மிகச் செய்யும் கிருஷ்ணன்” என்பதுபோல, வானில் நடக்கும் ஜாலம் ‘தூளிஜாலம்’. கம்பன் சொல்கிறான்:

குசை உறு பரியும், தேரும், வீரரும், குழுமி, எங்கும்

விசையொடு கடுகப் பொங்கி வீங்கிய தூளி விம்மி,

பசை உறு துளியின் தாரைப் பசுந் தொளை அடைத்த, மேகம்;

திசைதொறும் நின்ற யானை மதத் தொளை செம்மிற்று அன்றே        

 ஆனால், நவீன அறிவியல், சூரியன் ஒளிக்கதிரில் ஏழு வண்ணங்கள் “VIBGYOR” நீர்த்துளியில் பிரிதலால் ஏற்படும் என அறிவிக்கிறது. https://en.wikipedia.org/wiki/Visible_spectrum . ஒருவகையில் தூளிஜாலம் என்ற பெயரில், தூளி என்பது துளி என்னும் தமிழ்ச்சொல்லின் நீட்சி என்று கொண்டால், இப்பொருள் பொருந்திவரும்.  https://scijinks.gov/rainbow/

https://science.howstuffworks.com/nature/climate-weather/atmospheric/10-rainbow-myths.htm

பேரா. கனக அஜிததாஸ் புள்ளி தூறலைக் குறிக்குமா எனக் கேட்டார். தூறலில் கலந்து தூளி எனப் பண்டையோர் கொண்டனர் எனத் தெரிகிறது,

“விசும்பின்  துளிவீழின் அல்லாமல் மற்றாங்கே

புள்ளிவில் காண்பரி து” 😀 😀

நீறுபூசி வேளாளரும், நீறுபூசா வேளாளரும்

***************************************************

தமிழ்நாட்டில் வேளிர் வருகையால் வேளாண் தொழில் சிறப்பாக அமையலாற்று. வேளாண்மைக்கு மழையே மழையால் வரும் நீரே  இன்றியமையாதது. சைவமும், சமணமும் வெள்ளாளர்கள் கொணர்ந்த சமயங்கள். இரண்டுக்கும் ஊடாடல்கள் பல காலமாக நிகழ்கின்றன. சைவ ஆகமங்களில் ஜைந சமயத்தின் தாக்கத்தைக் காண்கிறோம். சைவ உணவு என்பதை ஆருகத (< அர்ஹத்) உணவு என்றே யாழ்ப்பாணத்தில் வழங்குகின்றனர். திருக்குறள், நாலடியார் போன்றவை வேளாண் வேதம் எனப் பெயர்பெற்றவை. கொங்குவேளிர் வானவில்லைக் கரந்துறைகோள் என்கிறார். தூளிசாலம் என்ற வானவில் பெயரால் ஜினாலயத்தின் முதலாவதாகிய வெளிமதில் அமைந்துள்ளது என்கிறது மேருமந்தர புராணம்.

இராம நாடகக் கீர்த்தனையின் ஆசிரியர், நீறுபூசி வேளாளர் என்னும் குலமரபு உடையார். அதாவது, சமணத்தினின்றும், சைவத்துள் புகுந்த வேளாளர்கள். அவ்வகையில், விவசாயத்தைக் குலத்தொழில் ஆகக் கொண்ட சீகாழி அருணாசலக் கவிராயரின் “புள்ளிவில்” என்ற சொல், தூளிசாலம் போன்ற பழைய சொற்களையும், தமிழரின் பண்டைய வானவில் கோட்பாடு பற்றி அறியவும் துணை ஆகிறது. இவரது முதல் மகன் அம்பலவாணக் கவிராயர் கொங்குநாட்டில் வாழ்ந்தவர் ஆவார். காங்கேயம் சிவமலைப்புராணத்தில் (தி. அ. முத்துசாமிக் கோனார் பதிப்பு, 1918) விரிவாகக் காணலாம். 

”இன்றும், தமிழ்நாட்டின் சில இடங்களில் ‘நீறுபூசும் வேளாளர்’ என்போர் உள்ளனர். இவரும் முன்பு சமணராக இருந்து பின்னர்ச் சைவராக மாறியவர். இவர் நீறணிந்து சிவனை வழிபடுகின்றனராயினும் இரவில் உண்ணாதிருத்தல் முதலிய சமணசமய ஒழுக்கங் களையும் ஒழுகி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் ‘மஞ்சுபுத்தூர் செட்டிகள்’ என்று ஒரு வகுப்பார் உளர். இவர்கள் இப்போது சைவர்கள். ஆனால், வெள்ளிக்கிழமை தோறும், இளையான்குடி சிவன் கோவிலுக்கு வெளியேயுள்ள ‘அமணசாமி’யைத் தொழுது வருகின்றனர். இந்த அமணசாமி இவர்களின் குல தெய்வம் என்றும் சொல்லுகின்றனர். இப்போது சைவராக உள்ளவர்களில் பெரும் பகுதியோர் பண்டைக் காலத்தில் சமணராக இருந்தவர்களே என்பதற்குப் போதிய சான்றுகள் பல உள.” (சமணமும் தமிழும், மயிலை சீனி வேங்கடசாமி). 

"கீர்த்தனை என்று அந்தப் பாட்டுக்களைச் சொன்னாலும் – ’ராம நாடகக் கீர்த்தனைகள்’  என்றே அந்த ‘ஒர்க்’குக்குப் பெயர் சொல்வதுண்டு; அப்படிச் சொன்னாலும் – அந்தப் பாட்டுக்கள் குறிப்பாக ‘தரு’ (daru) என்ற பாடல் வகையைச் சேர்ந்ததேயாகும். பல பாட்டுக்களைத் தொடர்ச்சியாக அமைத்து ஒரு கதையைச் சொல்லிக் கொண்டு போகிறபோது அந்தப் பாட்டுக்கு ‘தரு’ என்றே தனிப்பெயர் கொடுத்திருக்கிறது.

அருணாசலக் கவிராயர் நான் சொல்லி வந்த சைவ-வைஷ்ணவ ஸமரஸத்தைக் காட்டுபவராக இருப்பதும் ஒரு விசேஷம்! அவருடைய பெயரே, விஷ்ணு அவதாரமான ராமர் கதையைச் சொன்ன அவர் சைவர் என்று காட்டுகிறது. ‘நீறுபூசி வேளாளர்’ என்று விபூதியிட்டுக் கொள்வதை வைத்தே பெயர் ஏற்பட்ட ஸமூஹத்திலே பிறந்தவரவர். ஒரு காலத்தில் ஜைனர்களாக இருந்து அப்புறம் ஹிந்து மதத்திற்கு, அதிலே சைவ மரபுக்கு வந்தவர்களின் ஸமூஹத்துக்கு அப்படிப் பேர். தஞ்சாவூர் ஜில்லா தில்லையாடியில் இருந்த அந்தக் குடிகளில் ஒன்றிலே பிறந்தவரவர். கல்யாணமான பிறகு சீர்காழிக்கு வந்து அங்கேயே கடைசி வரை இருந்தார். அதனால் அவரைச் சீர்காழிக் கவிராயர் என்றே சொல்வதாக ஆயிற்று.

சைவக் குடும்பத்திலே பிறந்த அவர் படித்ததும் – தமிழ், ஸம்ஸ்கிருதம் இரண்டிலும் அவர் நிரம்பவே படித்திருக்கிறார்; அப்படிப் படித்ததெல்லாமும் – சைவ மடமான தர்மபுர ஆதீனத்தில்தான். ஆனாலும், சைவமா, வைஷ்ணவமா என்று பேதம் பாராட்டாத அவருக்கு ராம கதையிலேயே ஒரு தனி ருசி இருந்தது. அதனாலேயே இப்படித் தம்முடைய காவிய ஸ்ருஷ்டியை உண்டாக்கினார்.” (காஞ்சிப் பெரியவர்).

தமிழ்நாட்டுக்கு வட இந்தியாவில் இருந்து எழுத்து (பிராமி இலிபி), சமணம், சைவம் வருகை: Śaka Clans, Pallava Royals, Śākya Nāyanār and Bodhidharma http://nganesan.blogspot.com/2020/09/zen-koan-by-hakuin-and-tamil-proverb.html

http://nganesan.blogspot.com/2020/08/civasvami-in-edakkal-cave-brahmi.html

 கிண்ணிமங்கலத்தில் கிடைத்துள்ள முகலிங்கம் தென்னிந்தியா, தென்கிழக்கு ஆசியா பள்ளிப்படை சிவாலயங்களில் பழமையானது. http://nganesan.blogspot.com/2020/07/chennimalai-devarayar-kandasashti.html புறநானூற்றுப் பாடல் 249 தும்பி சேரகீரனார் பாடியது. அப்பாடலில் தான் தலைவனை இழந்த தலைவி குங்குமம் இழந்து, வரிநீறு ஒன்றையே தரிக்கும் 16-ம் நாள் ஈமச்சீர் பாடப்பட்டுள்ளது பாசுபத காபாலிகம் கொங்கில் பரவியதைப் பாடும் பாடல் ஆகும். திரிபுண்டரம் அழகாக, தும்பி சேர கீரனாரால் ’வரிநீறு’ எனப்படுகிறது. வரி நீறு என்ற பாடமே முனைவர் ம. வே. பசுபதி (தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்) நூலிலும் இருக்கிறது. தும்பி சேர கீரனார் பாடல், புறநானூறு 249, உரையுடன் படித்தருளுக:
http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/purananuru/purananuru249.html#.Xw2ulOdOnIW
ஈரோடு, பச்சோடு (பாப்பினி), பெரியோடு, சித்தோடு, வெள்ளோடு, ... போல ராசிகணத்தார் பரப்பிய பாசுபத சைவம் பழனி-திண்டுக்கல் அருகே எரியோடு வந்து, கிண்ணிமங்கலம் சேர்ந்த வரலாற்றை விளக்கும் ஆவணமாக, இப்போது கி.பி. 2-ம் நூற்றாண்டின் முகலிங்கம் “எகன் ஆதன் கோட்டம்” என்ற எழுத்துடன் கிடைப்பது அருமை. நீறுபூசுதலும், நீறுபூசாமையும் சைவர் - சமண வெள்ளாளர்களின் வேற்றுமைகளில் முக்கியமானவை. இரு சமயத்தாருக்கும், சங்க காலத்தில் இருந்தே பஞ்ச திராவிட தேசம் முழுமையும் (குஜராத்தில் இருந்து தமிழகம் வரையிலும்) கணவனை இழந்த பெண்டிர் வெள்ளைச் சீலை கட்டுதல் பழைய மரபு. சைவர்களிடையேயும், சமணர்களிடையேயும் இதைக் காணலாம்.
 

இதனை ஆராயத் தூண்டிய பசுமைக்கவிஞன் பாரதிக்கும், பேரா. கனக அஜிததாஸ் அவர்களுக்கும் என் நன்றி பல. ~NG