50 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகச் சென்னையில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குக் கற்பித்தவர் இலக்கணக்கடல் இராம. சுப்பிரமணியன். பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப்புலமை நடாத்தியவர். அவரது 16 இலக்கணக் கட்டுரைகள் கொண்ட கணக்கு வழக்கு (இலக்கிய இலக்கணம்) என்னும் நூலை வாசித்துக்கொண்டுள்ளேன். 1998-ல் திருமகள் நிலைய வெளியீடு. அனைவரும் படிக்கவேண்டும். தம் மாணவர்கள் இருவர் - தவத்திரு. நக்கீர அடிகள், முனைவர் அரங்க. இராமலிங்கம் - முன்னுரைகளுடன் வெளியாகியுள்ளது. சென்னை மருத்துவர்கள் இருவரைப்பற்றிக் கட்டுரைகள்: பெ. மா. சுந்தரவதனன், இரத்தினவேல் சுப்பிரமணியம். இலக்கியம், இலக்கணம் என்பன வடசொற்கள். அதற்கு நேரான தமிழ்ச்சொற்கள் கணக்கு வழக்கு என ஒரு கட்டுரை அழகாக எழுதியுள்ளார். தீபம் நா. பார்த்தசாரதி போன்றோர் பேராசிரியரின் மாணவர்கள்.
’குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்துஒன்று
உண்டாகச் செய்வான் வினை’
என்னும் திருக்குறளுக்குத் “தக்க உரை காண்க” என்ற அரிய கட்டுரையை எழுதியுள்ளார். இங்கே, கண்டு = செய்து என்ற பொருள் எனத் தெளிவாக விளக்குகிறார். திரு. நா. மகாலிங்கம் மீது “கண்டார்” என்னும் சொல் மடக்கணியாக வரும் செய்யுளை வைத்துக் கண்டார் = செய்தார் என்ற பொருளில் வருவதை விளக்கியுள்ளார்.
பழைய வெண்பா நூல்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்த இராம சுப்பிரமணியன் வெண்பாவில் விளாங்காய்ச் சீரை விலக்கியே தமிழ்ப்புலவோர் யாவரும் பாடிவந்த மரபைப் பற்றிய கட்டுரை யாத்துள்ளார். இந்த வெண்பா இலக்கண விதி ஒரு பழைய நூற்பாவை நினைவூட்டுகிறது:
இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே;
எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே;
எள்ளினின்று எண்ணெய் எடுப்பது போல
இலக்கியத் தினின்றும் எடுபடும் இலக்கணம்
அகத்தியர்: பேரகத்தியத் திரட்டு
1998-ல் இராம. சுப்பிரமணியன் கண்டுபிடிப்பைப் பற்றி இணையத்தில் ஹரிகி எழுதியுள்ளார். புலவரேறு ச, சீனிவாசன் பரிமேலழகர் உரைப்பதிப்பு முன்னுரையில் இவ்விதி பற்றி எழுதிய விளக்கத்தைக் கவிஞர் ஹரிகி சென்ற மாதம் அனுப்பிவைத்தார், பலருக்கும் பயன்படும் என்பதால் இங்கே முற்செலுத்துகிறேன். இன்னும் சில நாளில் இராம. சுப்பிரமணியன் மூலக்கட்டுரையை அனுப்பித்தருகிறேன்.
நா. கணேசன்
2018-06-19 7:01 GMT-07:00 Kavip-perum-sudar Hari Krishnan <hari.harikrishnan@gmail.com>:
புலவரேறு சீனிவாசன் அவர்கள் பதிப்பித்த திருக்குறள்=பரிமேலழகர் உரையுடன் நூலுக்கு அவர் எழுதிய முன்னுரையில் இதுகுறித்து விளக்கியிருக்கிறார். விளாங்காய்ச்சீர் பற்றி கவியோகி வேதம் தொடங்கி, தசாவதானி இராமையா ஈறாகப் பலர் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள். இதுகுறித்து விரிவாக நான் படித்த முதல் விளக்கம் இதுவே. புலவரேறு சீனிவாசன் அவர்கள் பரிமேலழகர் உரை மொத்தத்தையும் மனப்பாடமாக ஒப்பிப்பார். அவருக்கு இந்த உரை மனப்பாடமாக இருந்ததன் காரணமாகப் பல நுணுக்கங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார். இந்த நூல் கவிமாமணி, என் அன்புக்குரிய நண்பன் வீரராகவனிடம் இருக்கிறது. அவனிடம் இந்த முன்னுரையை மட்டும் பிரதியெடுத்து அனுப்பச் சொல்லியிருந்தேன். இன்று கிடைக்கப்பெற்றேன். தாள் பிரதியாகக் கிடைத்திருக்கும் இந்த முன்னுரை 41 பக்கம் நீளமுள்ளது. இது மொத்தத்தையும் அனுப்ப ஆசைதான். ஆனாலும் ஸ்கேன் செய்த இமேஜ் கோப்புகளை என்னால் பிடிஎஃப்பாக மாற்ற முடியவில்லை. மாற்றினால் பக்கங்கள் கிடைமட்டமாகச் சாய்ந்துவிடுகின்றன. ஆகவே விளாங்காய்ச் சீர் பற்றி விளக்கும் பகுதியை மட்டும் தனியாக இந்த மடலுடன் இணைக்கிறேன்.
--அன்புடன்,
ஹரிகி.
நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.