பாரதியார் பாடலில் ஒளியின் வேகம் - சாயணர் ரிக்வேத பாஷ்யத்தில் ஓர் ஆய்வு

2016 ஓம்சக்தி (கோவை) தீபாவளி மலரில் வெளியாகியுள்ள என் கட்டுரை. பாரதியார் ஒளியின் வேகத்தைச் சாயணர் எழுதிய ரிக்வேத பாஷ்யத்தின் சூத்திரத்தைத் தமிழாக்கித் தருகிறார். சாயணர் சூத்திரத்தில் யோஜனை என்னும் தூர அளவையைக் காதம் என்று பயன் படுத்துகிறார். அதாவது, ஒரு யோசனை = ஒரு காதம் எனக் கொள்கிறார் பாரதியார். சுமார் 10 மைல் = ஒரு காதம் என்கிறது சென்னைப் பல்கலைப் பேரகராதி.

இந்த சாயணர் பாஷ்ய சூத்திரம் பிரக்‌ஷிப்தம் எனப்படும் இடைச்செருகல் என விளக்கியுள்ளேன். 19-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் தொலைநோக்கிகள் (Telescopes) கொண்டு ஆராய்ந்து முடிவெடுத்த இயற்பியல் உண்மை ஒளியின் வேகம், https://en.wikipedia.org/wiki/Speed_of_light இவை இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களால் பள்ளிகளில் அறிமுகம் செய்தபோது யாரோ வடமொழிவாணர் ஒருவர் சாயணபாஷ்யத்தில் எழுதிச் சேர்த்துள்ளார் என்பது வெள்ளிடைமலை.

காதம்/காவதம்:
’பாரதியின் வேதமுகம்’ போன்ற நூல்களின் ஆசிரியர் சைவத்திரு. சு. கோதண்டராமன் அவர்கள் மின்தமிழ் குழுவில்
12/10/2010 அன்று குறிப்பிட்டுள்ளார்:
நாகைக்கும் காரைக்கும் காதம், 
காரைக்கும் கடையூருக்கும் காதம்,
கடையூருக்கும் காழிக்கும் காதம், 
காழிக்கும் தில்லைக்கும் காதம் என்று
ஒரு வழக்கு அந்தப் பகுதிகளில்- நாகப்பட்டினம், காரைக்கால்,
திருக்கடையூர், சீர்காழி, சிதம்பரம்- கேட்டிருக்கிறேன்.
சொல்லப்பட்ட ஊர்களுக்கு இடையேயுள்ள தூரம்
ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் உள்ளது.”

கொங்குநாட்டார்களிடையே நீண்ட காலமாக ஒரு சொலவடை வழக்கத்தில் உள்ளது. கொங்குப் புலவோர் அ.மு.குழந்தை, பெ.தூரன் போன்றோர் எழுதியும் உள்ளனர். மலைகளால் சூழப்படுவது அகல்விளக்கின் விளிம்பு போலவும் (Edges of the earthen lamp),முவ்விழைகள் கொண்ட திரி அந்த அகல்விளக்கில்! நொய்யல், ஆன்பொருனை, பவானி சேர்ந்து அகண்ட காவிரி ஆகிக் கொங்கிலிருந்து சோழநாட்டை வளமாக்கச் செல்கிறாள் பொன்னிப்பாவை. இதனால் அகல்நாடு என்று கொங்குநாட்டைக் கூறுவர். அகல் திரியின் முகம்/மூக்கு பெரிய காவேரி திருச்சி-தண்செய் சமவெளிக்கு விரிந்து பாய்ந்து ஒளிமயமான வாழ்க்கையைத் தமிழர்களுக்கு அத்திரி (காவிரி) அளிக்கிறது.

சங்ககாலச் சேரர்களின் தலைநகர் காவிரிக் கரையில் உள்ள வஞ்சி. விளக்கி நூலெழுதியவர் மகாவித்துவான் ரா. ராகவையங்கார். பின்னர், தினமலர் கிருஷ்ணமூர்த்தி கண்டெழுதின நாணயங்கள், ரா. நாகசாமியின் ரோமன் கரூர், ... எல்லாம் நிரூபித்துவிட்டன. காதம், காவதம் என்ற கன்னடச் சொற்களை அறிமுகம் செய்த இளங்கோ அடிகள் கொண்டது 10 - 14 மைல் எனலாம். சமணக் குரத்தி கவுந்தி அடிகளின் கதாபாத்திரத்தை தன் சமண சமயத்தை விவரிக்கத் தன் நாவலில் படைத்துக்கொள்கிறார். சீன மொழியில் Journey to the West போலவும், ஜப்பானிய மொழியில் Tale of the Genji போல, செம்மொழி தமிழில் உள்ள முதல் நாவல் சிலப்பதிகாரம். காவிரி பாயும் கங்கர்களின் நாட்டை ஆளுமைக்குள் வைத்திருப்பதைச் சோழர்கள் எப்பொழுதும் விரும்பினர். அணைகள் போன்றவை கட்டிவிட்டால் நீர்வரத்து திருச்சி-தஞ்சை டெல்ட்டா பாசனத்துக்கு குறையுமே. அதுபோல், சோழன் ஒருவனின் ஆட்சிக்குள் காவிரிநதி பாயும் எல்லா இடங்களும் இருந்தன என்று நாடுகாண் காதையில் கூறி, மதுரைக்கு வடக்கே 30 காதம் (= ~360 மைல்) தொலைவில் கோவலன் கண்ணகி கௌந்தி அடிகள் இருப்பிடத்தில் சந்தித்து, பின்னர் சீரங்கபட்டினம் வந்து, அந்தசரணரைத் தொழுது, பின் உறையூர் வந்துசேர்வதாகப் பாடியுள்ளார். பலரைச் சந்திப்பது எல்லாம் கண்டவியூக சூத்திரத்தை மாதிரியாக வைத்துச் செய்தது. வஞ்சியில் இருந்து கன்னட நாடு சென்று சமண சமய குரவர்களிடம் இளங்கோ அடிகள் அதன் தத்துவங்களைக் கற்றிருக்கலாம்.

ஜனத்தொகை மிகுந்துவரும் மாநிலங்களில் நீர் என்பது ஒரு நேஷனல் ரிஸோர்ஸ். சரியான முறையில் பங்கீடு செய்தல் வேண்டும். வரலாற்றையும் கணக்கில் எடுத்து. இதனையெல்லாம் தெளிவாக இளங்கோ அடிகள் சிலப்பதிகாரம் நாடுகாண்காதையில் காவிரி பாயும் நாடு, அதன் உரிமைகள் எல்லாம் சொல்லிவிட்டார். சோழன் மேலாளுமையில் இருந்த சீரங்கம் (இப்பொழுது சீரங்க பட்டினம்), அங்கே இருந்த சமண சமயம் எல்லாம் விளக்குகிறார். அந்தச் சோழன் யார் என்றால் கரிகால் சோழன்காலத்திலிருந்து என அடியார்க்குநல்லார் குறிப்பிடுகிறார். காதம் ~12 மைல் என்பது கன்னட, தமிழ் நாடுகளில் உள்ள சான்றுகளால் தெளிகிறோம். முப்பது காதம் ~360 மைல் மதுரைக்கு வடக்கே கவுந்தி அடிகளின் தவப்பள்ளியைச் சொல்லி, குடநாட்டில் (வடபெருங்கோடு) பொழில்மண்டிலமும் குறிப்பிடுகிறார். ஐம்பொழில் (ஐஹொளெ), பொழில்நரசபுரம் (ஹொளெநர்ஸிபுர), என பொழில்மண்டிலம் என சையமலைப் பகுதிகளைக் குறிப்பிடுகிறார். அந்த மலைகளில் கரும்பாலைப் புகை மேகங்கள் போலச் சூழும் வேளாண் வளமும் குறிப்பிடுகிறார். அங்கிருந்துதான் கரும்பு அதியமான் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்து பயிரிடச் செய்கிறான் என்பது சங்க இலக்கியம். சமண சமயத்தின் தெய்வங்களை சீரங்க பட்னத்தில் சந்தித்து, அங்கே மொழிந்த மந்திரங்களை பின்னர் தமிழ்நாட்டு திருச்சி (திருவரங்கம்) வந்தும் சொல்கின்றனர். சீரங்கத்தில் நிகழ்ந்தது திருவரங்கத்திலும் நினைவுக்கு வருதல் இயற்கை. சீரங்கம், திருவரங்கம் இரண்டுக்கும் இடையே நிகழும் நிகழ்ச்சிகளை நாடுகாண்காதையில் பேசுகிறார். இளங்கோ வாழ்ந்த காலத்தில் (~கி.பி. 5-ஆம் நூற்றாண்டு) தலைக்காவேரி உள்ளிட்ட பகுதிகள் தமிழகம் தான். ஆனால் ஏனோ, இருபதாம் நூற்றாண்டு உரைகள் நாடுகாண் காதையின் இன்றைய கர்நாடகப் பகுதிகளை விரித்துச் சொல்லாமல் விட்டுவிட்டன. ஆனால், கண்டவியூக சூத்திரம் படித்தாலும், காதம்/காவதம் கணக்கீட்டாலும், பொழில்மண்டிலம், வடபெருங்கோடு, ... என்ற குறிப்பிட்ட பொருளுடைய சொற்கள் காவிரி உற்பவிக்கும் பகுதியைச் சார்ந்தனவாகும். சையமலையும், தலைக்காவேரி, சீரங்கம் என்பதும் கர்நாடகம், சீரங்கம் அருகே தான் கங்கர்களின் தலைக்காடு. சீரங்கம் கங்கர் ராஜ்யம்; ஆனால், திருவரங்கம் என்பது திருச்சி எனவும் கணக்கில் எடுத்தால் நாடுகாண்காதையின் பொருள் தெளிவாக விளங்கும்.  ஆழ்வார் யாரும் திருவரங்கத்தைச் சீரங்கம் என்பதில்லை. இரண்டு இடங்களும் வெவ்வேறு. சோழனின் இறையாண்மைக்குக் கீழிருந்த பகுதிகள் இவை என்பதால் நாடுகாண்காதையில் காவிரிநாடு முழுக்கப் பாடியுள்ளார். மேல்கொங்கிலே காவிரி தடைபடாமல் இருந்தால்தான் தங்கள் நாட்டு வேளாண்மை செழிப்பாக இருக்கும் என்பதில் சோழர்கள் மிகக்கவனம் செலுத்தினர். இப்போதைய மாகாண எல்லைகள் இல்லாத காலம் சிலம்பின் காலம். இப்போது காவிரிநாட்டின் பகுதிகள் கர்நாடகா என்றாலும், பழங்காலத்தில் அதன் வரலாறும், மன்னர்களையும் உ. வே. சாமிநாதையர் விளக்குவதைப் பார்ப்போம்.

கொங்குநாட்டில் தலைக்காடு என்ற இடத்தில் கங்கர்கள் என்ற ஒருவகையரசர்கள் இருந்தார்கள். அவர்கள் புலவர்களை ஆதரித்து வந்தார்கள். தளக்காடு என்பது பிற்காலத்தில் தலைக்காடு என்று வழங்கப்படுகிறது. நன்னூல் இயற்றிய பவணந்தியாரை ஆதரித்த சீயகங்கன் அந்தக் கங்கர்களில் ஒருவனே. அவர்கள் சைனர்கள். நன்னூல், அதற்குரிய மயிலைநாதர் உரை, நேமிநாதம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, நம்பியகப்பொருள், இவற்றின் உரைகள், பெருங்கதை, வச்சணந்திமாலை முதலியன அவர்கள் இயற்றுவித்த நூல்களாகும். சீவக சிந்தாமணியும், சூளாமணியும் சில உபகாரிகள் வேண்டுகோளால் சைன பண்டிதர்கள் இயற்றிய காப்பியங்களே.”(பக்கம் 129, உவேசா, சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும், என்னிடம் உள்ள பிரதி: நூலின் முதலச்சு 1928-ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலையில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு).

அன்புடன்,
நா. கணேசன்