அண்மையில் 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர் பேரில் பிற்காலத்தில் எழுந்த புராணக் கதைகளுக்குப் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அவர் மறைந்து சில நூற்றாண்டுகள் கழிந்தபின் திருக்கோவில் கட்டியபோது அவரைக் குறிப்பிடும் செய்திகள் நாளிதழ்களில் (தி ஹிந்து, தினமணி) வெளியாகியுள்ளன. ஆனால் கல்வெட்டுக்கள் என்ன சொல்கின்றன என அந்தப் பத்திரிகைச் செய்திகள் வெளியிடவில்லை. திருவாவடுதுறை ஆதீன வெளியீடாக இக்கோவில் கல்வெட்டுகள் உள்ள நூல் 1991-ல் அச்சாகியுள்ளது, தினமணிச் செய்தியில் பஞ்சாட்சர மண்டபத்தில் திருவாசகப் பாடல்கள் சில பொறிக்கப்பட்டிருந்தன எனக் கல்வெட்டு சொல்வதாய்த் தெரிவிக்கிறது. அதிசயமான கொடுங்கை இந்த மண்டபத்தில்தான் கூரையாகக் கல்லில் செதுக்கப்பட்ட வளைந்த விட்டங்களாய் இருக்கின்றன. மாணிக்கவாசகருக்காகவே எழுந்த இந்தக் கோவிலில் திருவாசகம் சில பாடல்கள் கல்லில் வெட்டினது ஒன்றும் அதிசயம் அல்லவே! திருவிளையாடல் புராணக் கதைகள் எல்லாம் உருவாகி ஒருங்கிணைக்கப்பெற்ற 13-14ஆம் நூற்றாண்டுகளில் இக்கோயில் புதிதாய்ப் பிறந்திருக்கிறது. தமிழ் பிராமி கல்வெட்டுக்களும், சமணர் தமிழ்ச் சங்கம் முதலில் அமைத்ததும் அரதப் பழைய வரலாறு. சமண முனிவர்களின் (எ-டு: திருவள்ளுவர்) இலக்கிய, இலக்கணக் கொடைகளுக்கு எதிர்வினையாக அகத்தியர் தமிழ் தந்த முதல் தமிழ்ச் சங்கம் என்ற புராணக் கதைகளைக் கட்டும் இறையனார் களவியல், அதன் உரை போன்ற 8-ஆம் நூற்றாண்டு நூல்களோ, அகப் பாடல்களாக உள்ள 11-ஆம் நூற்றாண்டுக் கல்லாடம் (மதுரையின் 32 திருவிளையாடல்களைப் பேசுகிறது) போன்றவை மாணிக்கவாசகர் புராணம் எனக் கதை எதனையுமே குறிப்பிடவில்லை. எனவே, கல்லாடத்தில் உள்ள நரி பரி ஆன கதை எல்லாம் மாணிக்கவாசகர் புராணமாக ஏறுவதன் முன்னம் எழுதப்பட்டமை தெளிவு என்கிறார் எஸ். வையாபுரிப்பிள்ளை (கலைமகள் பொங்கல் மலர், 1942). 8-ஆம் நூற்றாண்டின் சுந்தரரும் மாணிக்கவாசகரைப் பாடவில்லை. எனவே மாணிக்கவாசகர் புராணங்கள் அவற்றின் பின்னர் எழுந்த கதைகள் என்பது நிச்சயம். பிற்காலப் பாண்டியர் ஆட்சி முடிந்து ஹிந்து எழுச்சியாகும் விஜயநகர காலகட்டம். அதன்பின் மதுரை நாயக்க மன்னர்கள் ஆட்சியில் அவர்கள் ஆளுமைக்கு உட்பட்ட உள்நாட்டு ஊராகிய ஆவுடையார்கோவிலை விரிவாக்கியுள்ளனர். ஆவுடையார்கோவிலில் மாணிக்கவாசகர் அருள்பெற்ற குருந்தமரங்கள் இவை என்றும், அதன் அடியிலே மூலஸ்வாமி எனப் பூஜைகள் நடக்கின்றன. தெற்கே பார்த்த தென்னன்- தட்சிணாமூர்த்திக்கான சன்னிதியாக ஆவுடையார்கோவிலும், சிதம்பரத்து model-ல் சிவகாமி அம்பாளை அப்போது பழைய சிவபிரான் கோவிலுடன் சேர்த்திருப்பதும் விசேடமானது. சிதம்பரத்தை நினைவூட்ட சிவகாமி என்ற பெயர் 13ஆம் நூற்றாண்டு வாக்கில் சேர்ந்துள்ளது. அதற்குமுன் அம்மனுக்கு தனிக்கோவில்கள் கட்டும் வழக்கம் இல்லை. ஆவுடையார்கோவிலுக்கு வடக்கே இந்த ஆதி கைலாசநாதர்-சிவகாமி அம்பாள் என்ற பழைய கோவிலும் இருக்கிறது. இப்பொழுது கோவை, ஈரோடு செல்வந்தர்கள் கௌமார மடாலயம் சுந்தரசுவாமிகள் தலைமையில் பெரிதாகக் கும்பாபிடேகம் 1990-ல் செய்த கோவில் இந்த கைலாசநாதர்-சிவகாமி கோவில். கைலாசநாதர் கோயில் பழையது. கற்சிலைகள் வைத்துச் செங்கல்லால் கட்டிய இக் கோயில் பின்னர் கல்லால் கட்டப்பட்டது. ஆனால், இக் கோயிலுக்கும் மாணிக்கவாசகருக்கும் எந்தத் தொடர்பு இருப்பதாக ஒரு சான்றும் - கல்வெட்டு, புராணம் - இல்லை. சிதம்பரத்திலும் 15-ஆம் நூற்றாண்டின் பிற்பட்ட ஆத்மநாதர்-யோகாம்பிகை கோவில் உண்டு. அங்கே திருவாசகம் பாடினார் என்றும் ஒரு மரபுண்டு. ஆவுடையார் கோவிலைப் போலவே, சிதம்பரம் மாணிக்கவாசகர் தொடர்பான கோவிலும் ஓர் பிற்காலக் கட்டிடம், மாணிக்கவாசகர் கட்டியது அல்ல.
பாண்டிநாட்டுப் பொதிகைமலையின் தட்சிணாமூர்த்தி, சோழநாட்டுச் சிதம்பரத்து நடராஜர் வழிபாடுகளை ஒருங்கிணைத்து ஆகமவழி நிற்கும் சைவசித்தாந்தம் உருவாக்கியதில் மாணிக்கவாசகர் பங்கு பெரிது. வடக்கே இருந்து வந்த கோகழிச் சைவ ஆகமங்கள் மரபையும், தமிழ்ப் பொதிகை தட்சிணாமூர்த்தியையும் இணைத்தவர் மாணிக்கவாசகரே. எல்லாக் கோவில்களிலும் நடராஜர் அருகே மாணிக்கவாசகர் இருப்பார். மார்கழி உற்சவத்தில் திருவெம்பாவை நடராஜருக்குப் பாடப்பெறும். மாணிக்கவாசகர் குலம் ஆமாத்திய அந்தணர் குலம். அமாத்திய அந்தணர் என்னும் மங்கல அந்தணர்கள் வரலாற்றை விரிவாக ’மாணிக்கவாசகர் மகாசபை’ மாநிலத் தலைவர் நந்தன் என்கிற நாமக்கல் தங்கம் விசுவநாதன் “மங்கல சமூகத்தார் மாண்புமிகு வரலாற்று” நூலில் எழுதியுள்ளார். நாமக்கல் நந்தன் கேட்டுக்கொண்டதன் பேரில் எஸ். இராமச்சந்திரன் தலைமையில் கல்வெட்டாய்வாளர்கள் சென்று கல்வெட்டுக்களை ஆராய்ந்து ஆவுடையார்கோயிலின் 13-ஆம் ஆண்டுத் தோற்றத்தை விளக்கியுள்ளனர். ”மாணிக்கவாசகர் கட்டியதல்ல அக்கோவில்” என்றும் தெளிவுபடுத்தியுளர் (தினமலர், மார்ச் 1, 2014). இசுலாமியரும் வந்து தொழும் குதிரை ராவுத்தர் மண்டபத்தில் தூண்களுக்கு மேலே பாவுகற்கள் பாவி உள்ளனர். இதன் காலம் கி.பி. 1581. பத்திரிகைகளில் வெளிவராத ஆவுடையார்கோவில் பிற்காலக் கல்வெட்டுக்கள் படிப்போமா? கல்வெட்டறிஞர் வை. சுந்தரேசவாண்டையார் 50+ ஆண்டுகளுக்கு முன்னர் படித்த கல்வெட்டுப் பாடல் இதுதான்:
கட்டளைக் கலித்துறை
திதிக்கும் சகாத்தமிங் கொன்றரை ஆயிரம் செல்லுறுநான்கு
உதிக்கும் பிலவத்தில் பங்குனி மாதத்தில் ஒன்பதிற்குப்
பதிக்கும் கனக சபைமண்ட பந்தனிற் பாக்கலெலாம்
மதிக்கும் படிமுகித் தானெங்கள் மாணிக்க வாசகனே!
மாணிக்கவாசகர் அருளால் 16-ஆம் நூற்றாண்டில் இம்மண்டபம் எழுந்தது என்பது பொருள். ’கண்காண வேமுகித் தாள்யோக நாயகக் காரிகையே’ என அம்பிகையும்,
‘பலஞ்சேரும் நாளில் கனக சபைதனில் பாக்கலெலாம்
நலஞ்சேர வேமுகித் தானெங்கள் ஆளுடை நாயகனே’
என ஆளுடையார் ஆத்மநாதரும்,
‘பாக்கலெலாம்
வேடிக்கை யாகச்செய் தானெங்கள் கோபுர வேலவனே’
ஆக, மணிமொழியார், வேலன் போன்றோர் செய்த தெய்வ அருளால் பாக்கல் பாவிய செய்தி கவித்துவமான செய்யுள்களாகச் சொல்லப்பட்டுள்ளது. கி. வா ஜகந்நாதன் அவர்களும் ‘வாருங்கள் பார்க்கலாம்’ என்னும் நூலில் இந்தப் 16, 17-ஆம் நூற்றாண்டுப் பாடல்கள் ’மாணிக்கவாசகர் கட்டியது ஆவுடையார்கோவில்’ என்பதன் சான்றாகா என விளக்கி எழுதியுள்ளார். 9-ஆம் நூற்றாண்டில் மாணிக்கவாசகர் மறைந்தபின் 13, 14-ஆம் நூற்றாண்டில் திருவிளையாடல் புராணக்கதைகள் கட்டப்பெற்றுச் சிதம்பரத்தையும், பொதிகை தட்சிணாமூர்த்தியையும் இணைக்கும் வகையில் இந்த இரு கோவில்கள் இவ்வூரிலே ஏற்பட்டுள்ளன. பழைய திருவிளையாடற் புராணம் (கி.பி. 1200) பின்னர் கல்லாக உருப்பெற்றது ஆவுடையார்கோவிலிலே! இப்போது 200 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. அவை முழுதும் தனிநூலாக வெளிவர வேண்டும். எங்குமே இல்லாத வகையில் தென்னன் (தக்ஷிணாமூர்த்தி) கோவிலாக தெற்குப் பார்த்தவகையில் ஆவுடையார்கோவில் மூலஸ்தானம் டிஸைன் செய்யப்பட்டிருப்பது சிறப்பம்சம். தென் (பொதியில் தென்னன்), வட (காளாமுக சைவம், ஆனந்தநடராஜர் தோற்றத்தில் அவர்கள் பங்கு) நாடுகளின் சைவங்களை எல்லாம் தொகுத்து, synthesize செய்த திருவாதவூர் அடிகள் பேரில் அவர் மறைந்து ஓரிரு நூற்றாண்டுகள் சென்றபின்னர் புராணக்கதைகள் திருவிளையாடல் புராணமாகக் கட்டப்பட்டு, அவருக்காகப் பாண்டிநாட்டில் ஏற்பட்ட நினைவுச்சின்னக் கோவில் ஆவுடையார்கோவில். ஆனால், அவர் குருந்த மரநிழலில் குருமூர்த்தியைத் தரிசித்ததாய் வரலாறும், இலக்கியங்களும், மரபும் காட்டும் திருப்பெருந்துறை சோழநாட்டில் இருக்கிறது. சோழநாட்டின் ஒரு பகுதியான மிழலைநாடு அது என்று சங்க இலக்கியங்கள் விவரிக்கும் பிரதேசம். வேள் எவ்வி என்பவன் ஆண்ட நாடு. குருந்தமரத்தின் அடியில் மாணிக்கவாசகர் அருள்பெற்ற சோழதேசத்தின் திருப்பெருந்துறையும், மாணிக்கவாசகர் அதன் அருகுள்ள சோழநாட்டின் பெரும் கடற்கரைப் பட்டினம் (நாகப்பட்டினம்), இந்தச் சோழநாட்டுத் திருப்பெருந்துறையில் குருமூர்த்தி - மாணிக்கவாசகர் அருள்பெற்ற தல வரலாறு, அத் தல புராணம் சிவபெருமானின் அஷ்டாஷ்ட மூர்த்திகளில் ஒன்றான சரித்திரமும், அழகாக இத் தலவரலாற்றைத் திருப்புகழில் இச் சோழநாட்டுத்தலம் சொல்லும் இந்தக் குருமூர்த்தி வரலாறு பற்றியும் ஆராய்வதே இக் கட்டுரை. சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் நிகழ்ந்த போர்கள், அவற்றின் முடிவுகளால் பாண்டியர்கள் மிழலைநாட்டு திருப்பெருந்துறை தலவரலாற்றை ஆளுடையார்கோவிலுக்கு மாற்றியது வரலாற்று நிகழ்ச்சிகளால் நேர்ந்த நிர்ப்பந்தமாகும். வடமர்களுக்கு முந்திய சோழிய நாட்டு அந்தணர்கள் பற்றி காஞ்சிப் பெரியவர் கூறியிருக்கிறார்.
http://rlalitha.wordpress.com/2013/01/30/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88/
பழைமையான சோழிய அந்தணர்களை அழைத்துவந்து ஆவுடையார்கோவில், வேம்பத்தூர்ச் செல்லிநகர் போன்ற ஊர்களில் குடியேற்றி திருவிளையாடற்புராணம் செய்யப் புரந்தனர் பிற்காலப் பாண்டியர்கள்.
பரஞ்சோதி முனிவர் (16ஆம் நூற்றாண்டு) இயற்றிய திருவிளையாடல் புராணத்துக்கு முன் தோன்றியது சோழியர் குலத்தோன்றல் பெரும்பெற்றப்புலியூர் நம்பி இயற்றிய திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம். கி.பி. 1228-ல் இத் திருவிளையாடல் புராணம் பாடி, பாண்டியனிடம் இறையிலி நிலங்களும், பல்லக்கு முதலான வரிசைகளும் பெற்ற பாடல்கள் இருக்கின்றன. இந்தப் 13-ஆ நூற்றாண்டுப் புராணம் தான் மாணிக்கவாசகர் வாழ்க்கைக் கதை (hagiography) கட்டும் முதல்நூல் ஆகும். அதற்கு முன் மொத்த திருவிளையாடல் 64 எனக் குறிப்பிட்டாலும், அவற்றில் பாதியையே (32) பேர்சொல்லிப் பாடும் நூல் கல்லாடம். இந்நூல் மாணிக்கவாசகரின் திருக்கோவையாரை முதல்நூலாகக் கொண்டு, அதன் 400 துறைகளில் ஒரு நூறைத் தேர்ந்து ஆசிரியப் பாவால் இயன்றது. கல்லாடத்தில், நரியைப் பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது, மதுரை ஆலவாய் அண்ணல் ஆனது முதலிய 32 திருவிளையாடல்கள் வந்துள்ளன. ஆனால், மாணிக்கவாசகர் பொருட்டு இவை நிகழ்ந்தன என்று கல்லாடம் சொல்லவில்லை. பெரும்பெற்றப்புலியூர் நம்பியின் திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணத்துக்கு முன்னோடியாகக் கல்லாடத்தில் வரும் சோமசுந்தரக்கடவுள் திருவிளையாடல்கள் பல உள்ளதால், இதன் காலம் 11ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி எனத் தமிழ் இலக்கிய வரலாற்றறிஞர் மு. அருணாசலம் கணித்துள்ளார்கள். புராணக் கலப்புடைய இந்நூல் சங்க இலக்கிய நடையில் உள்ளது.
மாணிக்கவாசகர் அருள்பெற்ற தலமாக - குருமூர்த்தியாய் மாணிக்கவாசக சுவாமிக்கு அருளிய கோவில் என்று வரலாறும் இலக்கியமும் காட்டுவது சோழநாட்டு கடற்கரைத் துறைமுகத்துக்கு அருகே உள்ள திருப்பெருந்துறை இன்றும் சிறப்புடன் இருக்கிறது. சோழநாட்டு மக்கள் திருப்பூந்துருத்தியைத் திருப்பந்துருத்தி என்பதுபோல, இந்த மாணிக்கவாசகர் அருள்பெற்ற திருப்பெருந்துறை திருப்பந்துறை என்று பேச்சுவழக்கில் இன்று இருக்கிறது. கடலருகே இருந்த சதுர்வேதிமங்கலம் பவுத்திரமாணிக்கச் சதுர்வேதிமங்கலம் இது. கீழக்கரை அருகே உள்ள பௌத்திரமாணிக்கப் பட்டினம் என்பதுபோல திருப்பெருந்துறை (திருப்பந்துறை) பௌத்திரமாணிக்க சதுர்வேதமங்கலம் என்ற நெய்தல் திணைக்கான ஊர், ராஜராஜ சதுர்வேதிமங்கலமே இன்றில்லையே. அதேபோல இந்த நெய்தல்நில பௌத்ரமாணிக்க சதுர்வேதமங்கலமும் சோழநாட்டிலோ வெறெங்குமோ இல்லை. ஆனால், 14ஆம் நூற்றாண்டுத் தென்காசிப் பாண்டியர் கல்வெட்டிலே அப்பெயர் உள்நாட்டு ஆவுடையார்கோவில் கட்டிய காலத்தில் அங்கே நினைவு கூர்ந்திருப்பது குறிப்பிடத் தக்கது. பாண்டிய மன்னர்கள் (சோழநாட்டு) மிழலைக் கூற்றத்தின் திருப்பந்துறை அந்தணர்களை ஆவுடையார்கோவிலுக்குக் குடியேற்றியுள்ளனர். மேலும், இந்த சோழநாட்டுத் திருப்பெருந்துறை குருந்தமரம் நிறைந்த புனங்கள் மிகுதியாய் இருந்துள்ளது. மாணிக்கவாசகர் கும்பகோணம் அருகுள்ள திருப்பந்துறை வனக் குருந்தை மட்டுமில்லாமல், பூம்புகார் அருகேயுள்ள திருவெண்காட்டில் குருந்தின் கீழ்த் தோன்றியதும் பாராட்டியுள்ளார். தாவரவியலார் கோரமண்டல் கடற்கரை நெய்தல் நிலங்களில் குருந்து மிகுதி என்று விளக்கியுள்ளனர். [ Coromandel Coast ] உள்நாட்டில் உள்ள ஆவுடையார்கோவிலுக்கு 13-14 நூற்றாண்டுகளில் இடம் மாறி இருக்கிறது. திருமுருகாற்றுப்படையில் ஏரகம் என்பது திருச்செங்கோடு, பிற்காலத்தில் சுவாமிமலைக்கு மாறியது என்பர். விழுப்புரம் விழுப்பரையர்கள் அமைத்த ஊர். அதனருகே காராணை தீபங்குடியில் அவதரித்தவர் கவிச்சக்கிரவர்த்தி செயங்கொண்டார். சமணர்கள் நிறைந்துவாழ்ந்த இத் தீபங்குடியின் பேரால் சோழநாட்டிலும் ஒரு தீபங்குடி உருவாகியுள்ளது. பாணர்கள் (Banas) என்னும் தலைவர்கள் ஆந்திரம்-கன்னட நாட்டிலிருந்து வந்தவர்கள். சங்க காலக் கல்வெட்டுக்களில் தமிழ்நாட்டில் பிருகத் பாணராஷ்ட்ரம் (பெரும்பாணப்பாடி) என்று உருவாக்கினர். தில்லை கோவிந்தராஜன் மீது பாடிய ஆழ்வார் பாசுரங்கள் திருப்பதி அடிவாரத்தில் உள்ள கோவிந்தராஜன் சன்னிதி ஆகியுள்ளது போல, வரலாற்று மாற்றத்தில் திருப்பெருந்துறை சோழநாட்டு நாகைத் துறைமுகத்து அருகே இருக்கும் திருப்பெருந்துறை ஸ்தல வரலாறு சிற்பக் கலைக்கூடமாக, சோழநாட்டுத் திருப்பந்துறை போலவே கடலுக்கு சமதூரமாய் (~ 20 கிமீ) உள்நாட்டில் உள்ள ஆவுடையார்கோவிலை 13-ஆம் நூற்றாண்டில் தோற்றுவித்துள்ளது. அப்போது மாணிக்கவாசகர் காலஞ்சென்று நான்கு நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. ஆவுடையார்கோவில் பாண்டிநாட்டுத் தொண்டி துறைமுகம் அருகே உள்ளே உள்ள உண்ணாட்டு ஊர். அத்தலத்தில் இன்று உள்ள குருந்தமரம் பிற்காலத்தில் வைக்கப்பட்ட செடி. புத்தகயாவில் இருந்து ஸ்ரீலங்கா கண்டியில் போதிமரக் கிளை வைப்பதுபோல சம்பந்தர், மாணிக்கவாசகர் துதிக்கும் ‘பேணுபெருந்துறை’ குருந்து எனக் கொள்ளத் தடையில்லை. பழனி ஆண்டவர் கோவிலும் பல இடங்களிலும் இருக்கின்றனவே. 13-14-ஆம் நூற்றாண்டில், மிகப் பிற்காலப் பாண்டியர், மதுரை நாயக்கர்கள் போன்றோரால் கட்டப்பெற்ற கோவில் ஆவுடையார்கோவில். தமிழ்நாட்டில் 13-ஆம் நூற்றாண்டிலே இருந்து மாணிக்கவாசகர் படிமங்கள் கிடைக்கின்றன. அக் காலத்தில் திருவிளையாடற்புராணம் உருவாகிறது. அதில் கல்லாடத்தின் 32 திருவிளையாடல்கள் இரண்டு பங்காகப் பெருகி (2x32 = 64) திருவிளையாடல் புராணக் கடைசிப் பகுதியாக மாணிக்கவாசகர் திருவிளையாடல்கள் பிற்சேர்க்கையாக உருவெடுக்கின்றன. 10-ஆம் நூற்றாண்டுக் கல்லாடத்தின் பரிணாம வளர்ச்சி திருவிளையாடற்புராணம் ஆகும். ஆவுடையார்கோவிலில் ஏன் ஆத்மநாதேசுவரர் என ஸ்வாமி பெயர் என்றும், தென்னன் - தட்சிணாமூர்த்தி தலமாக, மூலவர் தெற்குப்பார்த்த சன்னிதியாக உருவாக்கினார்கள் என்றும் பார்க்கலாம். இதற்கு, திருவாலம்பொழில் என்ற சோழநாட்டுக் கோயிலைப் பார்த்தால் விளங்கும். ஆலம்பொழில் என்பதால் கல்லாலின் கீழ்விளங்கும் மேதாதட்சிணாமூர்த்திக்கு விசேடமான தலம் திருப்பூந்துருத்தி (திருப்பந்துருத்தி) அருகுள்ள திருவாலம்பொழில். அங்கும் ஆத்மநாதேசுவரர் தான். ஆலமரம், தென்னன் தக்ஷிணமூர்த்தி, அதனால் ஆத்மநாதர். திருவிடைமருதூரிலும் தென்னன் தக்கிணாமூர்த்தி பெயர் ஆத்மநாதர் தான். இதே பெயர்தாம் ஆவுடையார்கோவில் ஆத்மநாதரும் தக்ஷிணாமூர்த்தி கோவில் - தெற்கே பார்த்து - மாணிக்கவாசகர் புராணங்களுக்காய் அமைத்துள்ளனர் என்பது வெள்ளிடைமலை. ஆவுடையார்கோவிலில் டிஸைன் செய்யத் தொடங்கிய காலம் கி.பி. 1300 வாக்கில் எனக் கருதலாம்.
ஆனால், தேவாரம், திருவாசகம், மற்றும் முக்கியமாகத் திருப்புகழை ஆராய்ந்து பார்த்தால் கடலுக்கு அருகே உள்ள திருப்பெருந்துறை (இன்று திருப்பந்துறை எனப்படுகிறது) மாணிக்கவாசகருக்கு குருமூர்த்தி ஆக எழுந்தருளிய தலம் எனத் தெளிவாக விளங்குகிறது. சோழதேசத்தின் மிழலைநாட்டுத் திருப்பெருந்துறை - கடலருகே ஆற்றங்கரையில் உள்ள இந்த ஊரில்தான் குருமூர்த்தியாக மாணிக்கவாசகருக்குக் குருந்த நிழலில் அருள்புரிந்தார் என்ற செய்தி வழிவழியாகத் தமிழிலக்கியத்தில் வழங்கிவருகிறது. திருவிளையாடல் இலக்கியங்களில் சோழநாட்டுத் துறைமுகப் பட்டினம் அருகே உள்ள திருப்பெருந்துறை என்றே தெளிவுறுத்தியுள்ளனர். சோணாட்டுத் திருப்பெருந்துறை அருகே அப்போதைய பெரிய துறைமுகம் நாகப்பட்டினம் இருக்கிறது. தமிழ் இணையப் பல்கலைத்தளத்திலும் மாணிக்கவாசகர் வரலாற்றில் குதிரை வாங்க நாகப்பட்டினம் மணிவாசகர் சென்றார் என்றுள்ளது. பழைய திருவிளையாடல் புராணத்தில் பெரிய சோழநாட்டுத் துறைமுகம் மாணிக்கவாசகர் சென்றார் என்றுள்ளது. 9-ஆம் நூற்றாண்டிலே இருந்த பெரிய சோழநாட்டுத் துறைமுகம் நாகப்பட்டினம் தான். மதுரையில் இருந்து பாண்டிநாட்டுத் தொண்டி துறைமுகம் போக வேண்டுமானால் ஆவுடையார்கோயில் வழி போகலாம். ஆனால், மாணிக்கவாசகர் மதுரை, புதுக்கோட்டை, மன்னார்குடி வழியாக நாகப்பட்டினம் சென்றபோது இடையில் நாகை அருகே உள்ள திருப்பெருந்துறையில் அருள் பெற்றிருக்கிறார் என்பது இலக்கிய வரலாறு. காட்டுக் குருந்த மரங்களும் புதர்களும் நிறைந்த இத் திருப்பெருந்துறை (திருப்பந்துறை) அந்தச் சோழநாட்டிலே இருக்கிறது. இதனைத் தான் பழைய திருவிளையாடல் மிழலைநாட்டுத் திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் அருள் பெற்றார் எனப் பாடியுளது/ மதுரை, தஞ்சை போன்ற நாயக்க மன்னர்களுக்குத் தமிழ் வரலாறு தெரியாது. தெலுங்கு, வடமொழி போன்ற இலக்கியங்களுக்கே அதிக ஆதரவு அளித்த தஞ்சை மன்னர்கள் மிழலைத் திருப்பெருந்துறையைப் பதிவுசெய்யாது போயினர். பாண்டிநாட்டில் ஆவுடையார்கோவிலை விஜயநகர், மதுரை நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டி தென்காசிப் பாண்டியர்கள் விரிவாக எழுப்பியுள்ளனர். மிழலைநாட்டு கடல் அருகே உள்ள திருப்பெருந்துறைச் சோழிய அந்தணர்களின் அக்கிரகாரம் பௌத்திரமாணிக்கச் சதுர்வேதிமங்கலம் என்று 14-ஆம் நூற்றாண்டிலே ஆவுடையார்கோவிலில் குறிப்பிடப்பெறுவது மிழலைநாட்டு அந்தணர்களை பாண்டியர்கள் அழைத்துவந்தமையால் தான். தட்சிணாமூர்த்தி ஆகிய தென்னன் தென்பாண்டி நாட்டான் (பொதிகை) என்பதால் பாண்டிநாட்டு மன்னர்கள் ஆகிய மதுரை நாயக்கர் ஆட்சியில் ஆவுடையார்கோவில் விரிவாகியுள்ளது. அதனருகே சிதம்பரத்தை நினைவூட்டும் கைலாசநாதர் கோவிலில் சிவகாமி சன்னதியும் சேர்த்தப்பட்டு இருக்கிறது. ஆனால் தமிழ் இலக்கிய வரலாற்றிலே திருப்பெருந்துறை என்பது மாணிக்கவாசகரோடு தொடர்புபடுத்தி நீண்டகாலமாக வழங்கிவருவது அரிசில் ஆற்றங்கரையில் மாணிக்கவாசகர் காலத்தில் பெருந்துறைமுகமாக விளங்கிய நாகப்பட்டினம் அருகே உள்ள ஆதி திருப்பெருந்துறை (திருப்பந்துறை) ஆகும். மாணிக்கவாசகர் குதிரை வாங்கச் சென்ற பட்டினம் 9-ஆம் நூற்றாண்டில் சோழநாட்டின் பிரசித்தி பெற்ற நாகப்பட்டினம் என்னும் துறைமுகம். அதன் அருகே தான் குருந்த மரத்தின் நிழலில் குருமூர்த்தியாகச் சிவனிடம் அருளுபதேசம் பெற்றிருக்கிறார். சோழநாட்டின் திருப்பெருந்துறையில் அவரது குரு ‘அதெந்துவே’ என்று அருளியதைத் திருவாசகத்திலேயே காணலாம். வேசறு, அதெந்துவெ என்னும் வடுகுச் சொற்கள் கோகழி என்னும் கர்நாடக ஊரின் சைவம் மாணிக்கவாசகர் மீதும், தமிழ்நாட்டின் சமயங்கள் மீதும் ஏற்படுத்திய தாக்கத்தை வெளிக்காட்டுபவை. கர்நாடகத்தின் பெல்லாரி மாவட்டக் கோகழி பற்றி ஸ்ரீமதி ந. மார்க்சீயகாந்தி கட்டுரை, இரா. நாகசாமி அவர்கள் வெளியிட்டுள்ளார்:
http://tamilartsacademy.com/journals/volume2/articles/kogali.html
இந்தக் கர்நாடக தேசத்தின் கோகழியிலிருந்து காளாமுக சைவர்கள் சோழநாட்டில் பல ஊர்களில் வாழ்ந்து தங்கள் தத்துவத்தைப் பரப்பினர். திருவாவடுதுறையில் நிறைய துறவிகள் கோகழியில் இருந்து வந்து தங்கியிருக்கவேண்டும். அதனால் ஆவடுதுறைக்கே கோகழி என்ற ஒரு பெயரும் இலக்கியங்களில் உண்டு. சோழநாட்டில் திருப்பெருந்துறை, திருவாவடுதுறை அருகருகே ஆன ஊர்கள். இரண்டிலும் கோகழிக் குருமணிகளின் கர்நாடகத் தொடர்புக்குச் சான்றுகள் தமிழ் இலக்கியங்களில் உள்ளன. இன்றும் திருவாவடுதுறை ஆதீனக் கோவிலாக ஆவுடையார் கோவில் இருப்பது சோழநாட்டுத் தொடர்பு அறாது விளங்குவதைத் தெரிவிக்கிறது.
மாணிக்கவாசகர் 3-ஆம் நூற்றாண்டா? மாணிக்கவாசகர் காலம் 3-ஆம் நூற்றாண்டு என்ற கருத்தை முதன்முதலில் எழுதியவர் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள். அவர் காலத்துக்குப் பிறகு தமிழ்ப் புலவர்களின் வரலாற்றை நிர்ணயிக்கக் கல்வெட்டுகளும், கலைவரலாறும், ஆராய்ச்சிமுறைகளும் பெருகிவிட்டன. அப்பர் அடிகள் சொல்லும் நரி பரி ஆன கதை எதுகையமைதியால் ஏற்பட்ட நாட்டார்கதை. மேலும், “குராமலரோடு, அரா, மதியம், சடைமேல் கொண்டார்; குடமுழ நந்தீசனை, வாசகனாக் கொண்டார்” என்னும் அப்பர் திருத்தாண்டகத்துக்கு நந்திதேவர் மாணிக்கவாசகராக அவதாரம் எடுக்கவைத்தார் என்று மறைமலையடிகள் உரை புதிதாய் எழுதினார். அடிகள் நந்திதேவரின் அவதாரம் என்று மறைமலை அடிகளுக்கு முன்னர் யாரும் சொன்னதில்லை. ’வாச்’ என்றால் ஒலி, வாச்சியம் என்றால் ஒலி முழங்கும் முழவு, வாசகன் என்றால் வாசிப்பவன். சிவ தாண்டவத்துக்கு முழவு மத்தளம் வாசிப்பவர் நந்தீசன் என்பது அப்பர் பாடலின் பொருள். இப்பாடலுக்கும், மாணிக்கவாசகருக்கும் தொடர்பு யாதொன்றுமில்லை. அண்ணாமலைப் பல்கலைத் தமிழ்த்துறைக்கு மாணிக்கவாசகர் காலம் 9-ஆம் என நிர்ணயித்ததில் சிறப்பிடம் உண்டு. கல்வெட்டுக்களால் தி. வை. சதாசிவப் பண்டாரத்தார், க. வெள்ளைவாரணர், ஔவை சு. துரைசாமிப்பிள்ளை, மா. இராசமாணிக்கனார், பின்னர் அ. ச. ஞானசம்பந்தன் என அப் பட்டியல் நீண்டது. மறைமலை அடிகள் யூகமான மணிவாசகர் 3-அம் நூற்றாண்டைக் காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரசுவதியின் ஆதிசங்கரர் காலம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு என்ற பேச்சுடன் ஒப்பிடலாம். சான்றின்மையாலும், யாப்பமைதியாலும் இரண்டு கூற்றையும் ஆராய்ச்சி வரலாற்றறிஞர் தள்ளிவிட்டனர்.
பெருந்துறை என்றால் பெரிய நீர்நிலை உள்ள நிலம். குளம், கண்மாய், ஏரி, ஆறு, கடல் பகுதிகளில் தமிழகம் எங்கும் பெருந்துறை என்பர். சங்க இலக்கியத்திலே பல பெருந்துறைகளைக் காணலாம். ”மாமுனி பொதியின் மலைவலங் கொண்டு குமரியம் பெருந்துறை யாடி மீள்வேன்” (சிலம்பு), “குமரி அம் பெருந்துறை அயிரை மாந்தி” (புறம்). பதிற்றுப்பத்து வஞ்சி (இன்றைய கரூர், தாராபுரம் பகுதி) ஆண்ட சங்கச் சேரரை வாழ்த்துகிறது: ”காஞ்சி யம் பெருந்துறை மணலினும் பலவே” (காஞ்சி - நொய்யல் பேரூர் ஆறு). நொய்யலின் கரையில் தான் பேரா. கா. ராஜன் இந்தியாவிலே பழைய, அசோகனுக்கு முந்தைய தமிழ்பிராமி எழுத்துக்களைக் கண்டு பிடித்துள்ளார்கள். காவிரிக் கரையிலே பெருந்துறை என்ற பெரிய ஊரும் கொங்கிலே உள்ளது தாங்கள் அறிந்ததே. ’முடமுதிர் மருதத்துப் பெருந்துறை’, ’ஒண்ணுதல் அரிவை பண்ணை பாய்தெனக் தண்ணென்று இசினே பெருந்துறைப் புனலே’ (ஐங்குறுநூறு). ஆக, பெருந்துறை என்று பல ஊர்கள் இருப்பினும், திருப்பெருந்துறை எனபது எந்த ஊர்? என ஆராய்ந்தால் மாணிக்கவாசகர் காலத்திலும், அதற்கு முன்னர் சம்பந்தர் காலத்திலும் திருப்பெருந்துறை என்பது சோழ மிழலைக் கூற்றத்தில் தான் உள்ளது. அங்குதான் மாணிக்கவாசகர் அருள்பெற்றிருக்கிறார். இதனை விரிவாக 64 (அஷ்டாஷ்ட) சிவமூர்த்திகள் பற்றிய பழைய நூல்கள் தரும் குருமூர்த்தி (மாணிக்கவாசகருக்கு குருவாக எழுந்தருளின திருவிளையாடல்) வர்ணனையியிலும், திருப்புகழின் தலவைப்பு முறையில் இந்த மிழலைப் பிரதேசத்துத் திருப்பந்துறைத் திருப்புகழ்களிலும், அட்டாட்டமூர்த்திகள் சிலைகள் கொண்ட திருக்கோடிகா கல்வெட்டுக்கள் (உ-ம்: கோப்பெருஞ்சிங்கனின் கி.பி. 1264-ஆம் ஆண்டுக் கல்வெட்டுகள்) சோழநாட்டுத் ‘திருப்பெருந்துறை ஆளுடையார்’ படிமம் அமைத்த செய்தியாலும், திருக்கோடிகா திருப்புகழுக்கு அடுத்த திருப்புகழ் தலமாய் அமைந்துள்ளது. ஆளுடையார் என்று ஏராளமான ஊர்களில் சிவபெருமான் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுகிறார். ‘உய்யக்கொண்டான் திருமலை ஆளுடையார்’, ’திரு அரைசிலி ஆளுடையார்’, ’ஆளுடையார் திருப்பனங்காடு உடையநாயனார்’, ’பெரும்பேறூர் ஆளுடையார்’’ஸ்ரீகரணீசுவரமுடையார்’, ’திருத்தான்தோன்றீ மகா ஸ்ரீ கரண ஈசுவரமுடையார்’, ‘ஆளுடையார் திருப்படக்காடுடையார்’ ’கருவூர்த் திருவானிலை ஆளுடையார்’, ’பாப்பினி ஸ்ரீ பச்சோட்டு ஆளுடையார்’, ’குரக்குத்தளி ஆளுடையார்’ (இங்கே சுந்தரபாண்டியனின் வடுகப்பிள்ளையார் ஆகிய ஸ்ரீபைரவர் படிமம் அளித்த கல்வெட்டு முக்கியமானது. வடுகப்பிள்ளை - பைரவர், மூத்த பிள்ளை - கணபதி, இளைய பிள்ளை - முருகன் என்பதறிக. சாத்தன், வீரபத்திரன் - சிவன் பிள்ளை உறவுமுறை). சிவனை ஆளுடையார், ஆளுடையாய் என்று போற்றுவது தேவாரம், திருவாசகம். திருப்பெருந்துறை ஆளுடையார் என கி.பி. 1264 கல்வெட்டு திருக்கோடிகாவில் குறிப்பது மாணிக்கவாசகரின் குருமூர்த்தியாய் திருப்பந்துறையில் எழுந்தளியவரே.
தமிழ்நாட்டு வரலாற்றில் குழப்பம் மிகுந்த நூற்றாண்டு கி.பி. 13ஆம் நூற்றாண்டு. டில்லித் துருக்க சுல்தான்களும், அவர்களை விரட்டிக்கொண்டு விஜயநகர் கன்னட, தெலுங்கு நாயக்கர்களும் அதுவரை என்றுமே தமிழ்மன்னர்கள் ஆண்ட தமிழகத்தை ஆள நுழைந்த காலம். ஹிந்துயிஸத்தைக் காப்போம் என்ற கோஷத்துடன் ஆட்சி கட்டில் ஏறினர், பல தமிழ்ப் புராணக் கதைகள் சம்ஸ்கிருத மயமாகின்றன. பல கோவில்களில் புரவலர்களின் தன்மையும் தமிழ்ச் சமயமும் மாறுகிறது. தெலுங்கு, கன்னட நாடுகளில் இருந்து துருக்கர் படையெடுப்புகளால் பலவகை பிராமண ஜாதியினர் தமிழ்நாட்டில் குடியேறுகின்ற காலகட்டம் அது. சோழிய அந்தணர்கள் பாண்டிநாடு செல்கின்றனர். நாயக்கர் அரண்மனைகளில் தமிழ் தாழ்கிறது; தெலுங்கு, கன்னடம் ஆட்சி ஏற்ற காலம், பின்னர் ஐரோப்பிய காலனி ஆட்சி இந்தியாவில் உருவானதும் தன் சுய ஆட்சியை இழந்துவிட்ட தமிழகத்தில் தான் நிகழத் தொடங்குகிறது. கண்மாய்கள், ஏரிகள் நிறைந்தது ஆவுடையார்கோவில் பகுதியாகும். தமிழர் தமிழ்நாட்டு ஆளுமை இழந்த 13-ஆம் நூற்றாண்டில் தமிழ் வரலாறு அறியாத, ஆனால் தமிழ்நாட்டில் ஆளுமை பெற்றுவருவோரிடம் சொல்லி ஆளுடையார்கோவில் என்ற அழகான கோவில் மாணிக்கவாசகர் ஞாபகார்த்தமாய் அவரது புராணத்துக்குப் பாண்டிநாட்டில் 13-ஆம் நூற்றாண்டில் ஆட்சி வலிமை இழந்த பாண்டியர்கள் துணையோடு கட்டப்படுகிறது. ஆவுடையார் கோவிலின் எல்லாக் கல்வெட்டுக்களிலும் ஆளுடையார் கோவில் என்றே உள்ளது. ஆளுடையார் = சிவபெருமான் எனப் பழைய கல்வெட்டு மரபின் படி எல்லாச் சிவன் கோவில்களிலும் உள்ள பெயர் ஆகும் என இக்கட்டுரையில் முன்னர் பார்த்தோம் அல்லவா? ஆளுடையார்கோயிலை ஆவுடையார் (சக்திபீடம்) மாத்திரம் வைத்துத் தென்னன் தக்கிணனுக்கு கட்டிய கோவில் என்னும் தனித்துவத்தால் பொதுஜனங்கள் ஆளுடையார் கோவிலை ஆவுடையார்கோவில் என்று தற்காலத்தில் அழைக்கத் தொடங்கிலாயினர். அதனால், தண்ணீர்ப் பெருந்துறைகள் நிறைந்த தாலுக்காவே இன்று ஆளுடையார்கோவில் என்ற பேர் மாறி ஆவுடையார்கோவில் தாலூக்கா ஆகிவிட்டிருக்கிறது!
தேவசபை தெற்கு வாசல் மேற்குப்புறச் சுவர்:”ஸ்ரீ கோமாறவர்மரான விக்கிரமபாண்டிய தேவற்கு ... திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருந்து பிரசாதஞ் செய்தருளின திருமுகத்துப்படி நயினார் ஆளுடையனயினாற்கு பழைய தேவ தானமான மிழலைக் கூற்றத்து நடுவில் கூற்றத்தில் தனிஊர் திருப்பெருந்துறையான பவிகு மாணிக்க சதுர்வேதிமங்கலம் ” இவன் மதுரையில் இருந்த கடைசிப் பாண்டியர்களுள் ஒருவன். கி. பி. 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. கல்வெட்டு மிழலைக் கூற்றத்தின் பவித்திர மாணிக்கச் சதுர்வேதிமங்கலம் (திருப்பந்துறை) ஆவுடையார்கோவிலுக்கு கொண்டுவரப்பட்ட காலத்தைச் சொல்கிறது. ”ஸ்ரீ கோமாறபன்மரான பராக்கிரம பாண்டிய தேவற்கு யாண்டு அஞ்சாவதின் நெதிர் இரண்டாவது திருப்பெருந் துறையிலெழுந்தருளியிருந்து பிரஸாதஞ்செய்தருளின மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றத்து பிரமதேயம் தனியூர் திருப்பெருந்துறை ஆன மாணிக்க சதுப்பேதி மங்கலத்து நாயனார் ஆளுடைய பரம ஸ்வாமிகளுக்கு ” இவ்விரண்டு கல்வெட்டுக்களும் திருப்பெருந்துறைத் தலவரலாறு (1991, திருவாவடுதுறை ஆதீனம்). 14-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்த தென்காசிப் பாண்டியர்களில் முதலாமவன் இப் பராக்கிரம பாண்டியன். இக் கல்வெட்டுக்களில் பௌத்திர மாணிக்கப் பட்டினம் (திருப்பந்துறை) என்னும் சோழநாட்டுத்தலம் மாணிக்கம் என்று சுருங்கிவிடுவதைக் காண்கிறோம். பௌத்திரம் என்றால் கடல். பௌத்திரமாணிக்கம் கடல் துறைமுகம். ஆவுடையார்கோவிலுக்கு அருகே மாணிக்கவாசகர் சென்ற துறைமுகம் இல்லையாதலால் ”பௌத்திர மாணிக்கம்” என்ற திருப்பந்துறை சுருங்கி விட்டது. 13-ஆம் நூற்றாண்டிலே சோழர்கள் மேன்மை. எனவே, பாண்டியர்கள் தன் ஆளுமைக்கு முழுமையும் உட்பட்ட இடத்தில் மாணிக்கவாசகருக்கு 13-ம் நூற்றாண்டில் சிற்பக்கோவில் கட்டத் தலைப்பட்டனர், அவர் அருள்பெற்ற சோழநாட்டுத் திருப்பெருந்துறை அந்தணர்களை இங்கு அழைத்து வந்து குடியேற்றினர்.
9-ஆம் நூற்றாண்டில் காளாமுக சைவர்களால் ஏற்பட்ட ஆனந்த நடராஜமூர்த்தி வடிவம்:
http://nganesan.blogspot.com/2011/09/naalvar-kaalam.html
மாணிக்கவாசகர் காலமாகிய 9-ஆம் நூற்றாண்டு சைவத்தின் வளர்ச்சியில் முக்கியக் காலம், அதனைச் சற்று அவதானிக்கலாம்.
தந்திவர்ம பல்லவன் காலத்தில் முதல் வரகுண பாண்டியன் (கி.பி. 792-835) சோழதேச மிழலை நாட்டைக் கைப்பற்றினான். பேரூரில் குன்றம் அனையதோர் விஷ்ணுகோயில் கட்டிய பரமவைஷ்ணவன் அவன். சின்னமனூர்ச் செப்பேடுகள் “கொற்றவர்கள் தொழுகழற்கால் கோ வரகுண மகாராசன்” என்கின்றன. சோழநாடு முழுதும் தன் ஆட்சியின் கீழ்க் கொணர்ந்த பாண்டியன் அவனே. தந்திவர்ம பல்லவன் (கி.பி. 775-826) கல்வெட்டுக்கள் எதுவும் சோழநாட்டில் கிடைப்பதில்லை. எனவே, சோழநாட்டை, அதன் மிழலைக் கூற்றத்தை, பல்லவரிடம் இருந்து கைப்பற்றிய பாண்டிய மகாராசன் முதல் வரகுண பாண்டியன் தான். அவனது மிழலைநாட்டு வெற்றி முழுதும் அழிந்துவிடவே, பாண்டியர் ஆட்சி இரண்டாம் வரகுணன் காலத்தில் சுருங்கிவிட்டது. இந்த பாண்டிய ஆட்சி அழிபாடு சோழநாட்டில் இரண்டாம் வரகுணனின் தந்தை சீவல்லபன் காலத்திலேயே தொடங்கியது. முழுதும் இழந்தது இரண்டாம் வரகுணன் ஆட்சியிலே. எனவே, சிவபக்தியில் வாழ்வின் கடைசிக் காலத்தைச் செலவிட்டான். பாண்டிநாட்டை மாத்திரம் தம்பி பராந்தகன் வீரநாராயணன் ஆண்டான். அவனது தளவாயபுரம் செப்பேடுகள் அண்ணன் இரண்டாம் வரகுணன் சிவபக்தி வலையில் பட்ட பெருமை சாற்றுகின்றன. இவ்வழியில் அவனைச் செலுத்தியவர் மாணிக்கவாசகர் ஆவார். பாண்ட்ய குலோதய காவ்யம் மாணிக்கவாசகர் எவ்வாறு அவனை அரசாக்கினார் என்று குறிக்கிறது, பத்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய நிகண்டுகள் (திவாகரம், பிங்கலந்தை) மாயாவாதம் பற்றிப் பேசுவதில்லை. “புறச் சமயங்களில் ஒன்றாகிய மாயாவாதம் நிகண்டுகளில் பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்தினதாகிய சூடாமணி நிகண்டில் முதலில் சொல்லப்படுகிறது. இதற்குப் பிற்காலத்தில் வைணவ சமயாசிரியர்கள் சைவ சந்தனாசிரியர்கள் இவர்களிற் பலர் மாயாவாத கண்டனம் எழுதியிருக்கின்றார்கள். வாதவூரடிகள் போற்றித் திருவகவலில் “மிண்டிய மாயா வாதமென்னும் சண்டமாருதம் சுழித்தடித்து ஆர்த்து” என்று சொல்லியிருப்பது இவர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் இருந்தாரென்பதை வற்புறுத்தும்.” (K. S. சீனிவாசபிள்ளை, தமிழ் வரலாறு, I, pp. 104-105, முதல்பதிப்பு). அப்போதைய பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுணன் (கி.பி. 862-880) ஆவான். சிறந்த சிவபக்தன். தளவாய்புரம் செப்பேடுகள் அவனது தம்பி பராந்தகன் வீரநாராயணன் வெளியிட்டவை. அதில் தன் அண்ணனின் சிவபக்தி ஒன்றே சொல்லப்படுகிறது: “எம் கோ வரகுணன் பிள்ளைப்பிறை சடைக்கணிந்த பினாகபாணி எம்பெருமானை உளத்தில் இனிதிருவி உலகம் காக்கின்ற நாளில்”. கி.பி. 911-ல் தளவாய்புரச் செப்பேடு வெளியானது. அப்போதும் மாணிக்கவாசகர் புகழும் வரகுணன் வாழ்ந்திருக்கிறான். திருக்கோவையாரில் திருவாதவூர் அடிகள் “வரகுணனாம் தென்னவன் ஏத்தும் சிற்றம்பலம்” என்றும், “சிற்றம்பலம் புகழும் மயலோங்கு இருங் களியானை வரகுணன்” என்றும் புகழ்கிறார். நந்திவர்மன் கட்டிய தில்லை கோவிந்தராஜன் சன்னதியை “வரங்கிடந்தான் தில்லையம்பல முன்றிலில் அம் மாயவனே” என்கிறார் மாணிக்கவாசகர். சின்னமனூர்ச் செப்பேடுகளில் இரண்டாம் வரகுணன்:”குரைகழற் கால் அரசு இறைஞ்சக் குவலயதலம் தனதாக்கின வரைபுரையும் மணிநெடுந்தோள் மன்னர்கோன் வரகுணவர்மன்”. திருப்புறம்பயப் போரில் இரண்டாம் வரகுண பாண்டியன் படுதோல்வி யுற்றான். இடவை, வேம்பில் - சோழநாட்டு ஊர்களில் போர்கள் நடத்தி வென்ற அவனுக்குத் திருப்புறம்பயம் போரில் பல இழப்புகள். பாண்டிநாடு திரும்பிவிட்டான். இவ்வுலகம் இல்லாமல் போனாலும், அவ்வுலக அருள் பெற்றவன். மாணிக்கவாசகர் புகழ்பவன் இவனே என்று வடமொழிச் சரித்திர காவியம் பாண்டிய குலோதயம் (பஞ்சாப் பல்கலை, 1981) கூறுகிறது. பாட்டன் ஜெயித்து வைத்திருந்த மிழலைநாடு இவன் காலத்தில் பல்லவர்-சோழர்களிடம் மீண்டும் செல்லவே பாண்டியரின் அமைச்சர் அருள்பெற்ற சோழநாட்டுத் திருப்பெருந்துறை பற்றிய செய்தி காலப்போக்கில் சற்றே மங்கி மறைந்திருக்கிறது. இதற்கு ஒருவகையில் பாண்டியர்களும் காரணம் எனலாம். எதிரி மன்னர்கள் ஆட்சி மிழலைநாட்டிலே, எனவே தாம் இழந்துவிட்ட பகுதிகளில் கட்டமுடியாது என்றானது. ஆனால் தம் மந்திரி தமிழ்ச் சைவத்துக்குப் புதுவழி காட்டிய மாணிக்கவாசகருக்கும் மரியாதை செய்ய வேண்டும். என்ன செய்வது என ஆய்ந்து முடிவெடுத்துத் தென்காசிப் பாண்டியர் தம் வலு மிகக் குன்றிய நாளில் புதிதாய் ஆவுடையார்கோவிலைக் கட்டத் தொடங்கலாயினர்.
குதிரை ஏற்றத்துக்கு உகந்த ராவுத்தர் வடிவில் ”பள்ளிக் குப்பாயம்” என்னும் மேல் சட்டையையும், வெள்ளையான துணியால் செய்த இறுக்கமான பைஜாமா போன்ற ஒன்றையும் சிவபிரான் அணிந்திருந்ததாக மாணிக்கவாசகர் பாடுகிறார். ஆரிய வடநாட்டிலிருந்து வந்த குப்பாயம் அணிந்து குதிரை ஊர்ந்தார் என்கிறது திருவிளையாடல் புராணம். இதற்கான “சொக்கராவுத்தர்” சிலைகளை மதுரை மீனாக்ஷி கோவிலில் காணலாம். ராவுத்தர் குப்பாயத்தை தமிழரோ, அவர்களின் கடவுள் சிவனோ அணிவதாக 9-ஆம் நூற்றாண்டுவரை இல்லை. சங்க இலக்கியங்களோ, தமிழ்க் காவியங்களோ, தேவாரமோ சிவன் "பள்ளிக் குப்பாயம்" அணிவதாகப் பாடுவதில்லை. மாணிக்கவாசகர் காலத்தில் குப்பாயத்தர் வணிக உறவுகள் அதிகமாகி உள்ளன. இன்றும் முஸ்லீம்கள் ஆவுடையார்கோவிலில் குதிரைராவுத்தரைத் தொழும் மரபு இருக்கிறது (கிவாஜ, வாருங்கள் பார்க்கலாம்).
வெள்ளைக் கலிங்கத்தர் வெண்திரு முண்டத்தர்
பள்ளிக் குப்பாயத்தர் அன்னே என்னும்
பள்ளிக் குப்பாயத்தர் பாய்பரிமேற் கொண்டென்
உள்ளம் கவர்வரால் அன்னே என்னும். (திருவாசகம்)
பள்ளிக் குப்பாயம் வெள்ளையாக உடலில் (முண்டத்தில்) அணிந்து, பைஜாமா வெள்ளைத் துணியால் கால்களை மூடியிருந்த குதிரை ராவுத்தர் உருவம் தமிழர்களுக்கு அதிகம் பழக்கம் இல்லாமல் இருந்த காலம் 9-ஆம் நூற்றாண்டு. எனவே, ராவுத்தரை வேடுவன் என்றே திருவாசகத்தில் அழைக்கிறார். பழைய திருவிளையாடல் பரி குதிரை ஆக்கிய படலத்தில் மிழலைக் கூற்றத்தின் நரியை எல்லாம் பரியாக்கி சிவபிரான் வந்தார் என்கிறது. ராவுத்தர் தலைமையில் சிவகணங்கள் மற்ற குதிரைகளை ஓட்டி மிழலை வனங்களைக் கடந்து மதுரை சென்றனராம்.
”குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும்
பட்ட மங்கையில் பாங்காய் இருந்து அங்கு
அட்ட மாசித்தி அருளிய அதுவும்
வேடுவன் ஆகி வேண்டு உருக் கொண்டு
காடு அது தன்னில் கரந்த உள்ளமும்
மெய்க் காட்டிட்டு வேண்டு உருக் கொண்டு
தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும் ” (கீர்த்தித் திருவகவல்)
வேடுரு வாகி மகேந்திரத்து மிகுகுறை வானவர் வந்துதன்னைத்
தேட இருந்த சிவபெருமான் சித்தனை செய்தடி யோங்களுய்ய
ஆடல் அமர்ந்த பரிமாஎறி ஐயன் பெருந்துறை ஆதிஅந்நாள்
ஏடர் களையெங்கும் ஆண்டுகொண்ட இயல்பறி வார்எம் பிரானாவாரே. (திருவார்த்தை)
பாண்டிய மன்னன் அரசவைப் பணியை விட்டபின் துறவியாகி மீண்டும் மிழலை நாடு சென்று திருப்பெருந்துறையில் ஞானாசிரியனிடம் சிலநாள் தங்கியிருந்து பின்னர் அருகுள்ள இடைமருது, ஆரூர், சீர்காழிப் பதிகளை வணங்கினார். அதன்பின்னர் நடுநாடு, தொண்டைநாடு அடைந்தார் என்கிறது அவர் வரலாறு.
திருச்சூர் அருகே பிறந்து 9-ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் பௌத்த தத்துவங்களை உள்வாங்கிய ஆதி சங்கரரின் மாயாவாதம் பற்றி மாணிக்கவாசகர் முக்கியமான செய்தியைக் குறிப்பிடுகிறார். அதனாற்றான், காஞ்சி தூப்புல் வேதாந்த தேசிகர் மாயாவாதம் என்பதே அடிப்படையில் பௌத்தக் கோட்பாடு. எனவே சங்கரரைப் பிரசன்ன பௌத்தர் என்றார். சங்கரர்க்குப் பிற்பட்டவர். இதனால் திருவாசகமுடையார் 9-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியினர் என்பது தெளிவு என்கிறார் ஔவை சு. துரைசாமிப் பிள்ளையவர்கள். மாணிக்கவாசகரை ஆதரித்த பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுணனைப் பற்றிய செய்திகள் கல்வெட்டுக்களால் வெளிச்சமாகின்றன.
மாணிக்கவாசகர் காலத்தை அறிய 9-ஆம் நூற்றாண்டில் அவர் வடநாடு, தென்னாடு இரண்டிலும் இருந்த சைவ சமயங்களின் கூறுகளைச் சேர்த்திணைத்துத் தொகுத்துருவாக்கம் (synthesize) செய்த சாதனை அறிந்து போற்றத்தக்கது. தேவாரம் போன்ற நூல்களிலோ, சிலப்பதிகாரத்திலோ ஆனந்ததாண்டவ நடராஜர் பேசப்படுவதில்லை. அஃதாவது, அப்போது நடராஜா உருவம் தோன்றவில்லை. நடேச மூர்த்திதான். பாசுபத சைவக்காலகட்டம் அஃது. அப்பர் போன்றோர் காலம் (7-ஆம் நூற்றாண்டு). இதனை தமிழகத்திலும், இந்தியா முழுமையும் காணலாம். பல்லவர்களின் இறுதிக்காலம் பாசுபத சைவத்தில் திராவிடமக்களுக்கு உரிய இசை, நடனம் இரண்டுக்குமான சிவ நடேசர் வழிபாடு இருந்தது. நடேசர் படிமைகளில் கால் சற்று வளைந்து தாண்டவ நடனத்தின் துவக்கம் காட்டப்படும். அவ்வளவுதான். ஆனால், பஞ்சகிருத்தியம் என்னும் ஐந்தொழில் காட்டும் நடராஜ தத்துவம் பிறக்காத காலம் (K. Zvelebil, Ānanda-tāṇḍava of Śiva-sadānṛttamūrti : the development of the concept of Aṭavallān̲-Kūttaperuman̲aṭikaḷ in the South Indian textual and iconographic tradition, Madras : Institute of Asian Studies, 1985.) ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டு ஐந்தொழில் புரியும் நடராஜமூர்த்தி உருவானது சுமார் கி.பி. 800ல் தான். இந்த நடராஜரைத் திருமந்திரமும், திருவாசகமும் பலவாறு புகழ்கின்றன. நடராஜர் ஐந்தொழிலை உமாபதி சிவத்தின் உண்மைவிளக்கம் பறைகிறது:
தோற்றம் துடியதனில் தோயும் திதிஅமைப்பில்
சாற்றிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமாய்
ஊன்று மலர்ப்பதத்தே உற்றதிரோதம் முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு.
ஆனந்தநடராஜரைக் கைகாட்டித் தான் பாடிய பக்திப் பாட்டுகளுக்குப் பொருள் ஆடவல்லான் ஆகிய அவரே என்று சொல்லிச் சிதம்பரத்தில் மறைந்த மறையவர் மணிவாசகர். இதனால்தான் மார்கழித் திருவாதிரை உற்சவத்தில் நடராஜா ஊர்வலத்தில் கூடவே மாணிக்கவாசகர் சிலையும் உலாச் செல்கிறது. ஓதுவார்கள் நடராஜர் திருமுன் திருவெம்பாவை பாடுகின்றனர். முனைவர் இரா. நாகசாமி அவர்களும் என்னிடம் ஒருமணி நேரம் செலவிட்டு மாணிக்கவாசகர் காலம் இரண்டாம் வரகுணபாண்டியன் காலம், அப் பாண்டியனின் சகோதரன் பல்லவனுடன் போரிட்ட செப்பேட்டுச் செய்திகளை விளக்கினார்.
காளாமுகர்களுக்கும் நடராஜருக்கும் உள்ள உறவுகள்:
1) நடராஜரும் காளாமுகர்களும்: The festival of Dancing Siva (Nataraja and Kalamukhas)
Dr. R. Nagaswamy
http://tamilartsacademy.com/journals/volume1/articles/fesdan1.html
(2) அப்பர் குறிப்பிடும் மாவிரதியர், காளாமுகர், ... போன்ற சைவப்
பிரிவுகள்:
http://tamilartsacademy.com/books/siva%20bhakti/chapter10.html
(3) An Interesting Dakshinamurti Image And Kalamukhas
Dr.R.Nagaswamy
http://www.tamilartsacademy.com/journals/volume5/articles/article2.xml
(4) திருமதி. ந. மார்க்சியகாந்தி, மாணிக்கவாசகர் போற்றும் கோகழி எங்கே
இருக்கிறது? Saint Manikkavacaka and Kalamukhas (Identification of Kogali)
Dr.M.Gandhi
http://tamilartsacademy.com/journals/volume2/articles/kogali.html
தமிழ்ச் சைவத்தின் கேந்திரமான பொதிகை மலைப் பக்கத்தில் இருக்கும் மயேந்திர மாமலையின் செய்திகளை மாணிக்கவாசகர் சொல்கிறார். காளாமுகர்கள் மயேந்திரமலைச் சைவ மரபு பற்றிச் செய்யும் மாற்றங்கள் நிகழும் காலத்தில் இரண்டுக்கும் பாலமாக வாழ்ந்தவர் மணிவாசகர். தென்னாட்டுச் சைவத்தின் வளர்ச்சியில் 3 காலகட்டங்களை ஆராயலாம்: (1) பெருங்கற்காலம் - Megalithic period. ஐயனார். குதிரை, இரும்புத் தாவடி (stirrups for horses) கிடைக்கும் காலம். பொதியிலில் ஐயனாரைச் சைவர்கள் சிவன் என, பௌத்தர் அவலோகிதேசுரன் என்று வளர்ச்சி பெற்ற காலம்.அப்போது கொற்றவையின் கணவன் மகரவடிவில் வழிபட்டிருப்பதற்குப் பாண்டியர் சங்ககாலக் காசுகளும், அண்மையில் கிடைத்துள்ள திருப்பரங்குன்றம் தமிழ் பிராமி கல்வெட்டும் சான்று. தமிழ்நாட்டில் சைவத்தின் இந்த முதல்கட்டம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வரை எனலாம். (2) பல்லவர்கள் கட்டிய பெருங்கோயில்கள் காலம். பொதியில் தென்னன் தட்சிணாமூர்த்தியைக் கருவறையின் வெளிப்புறச் சுவரில் தெற்கே அமைத்து வளர்க்கும் பாசுபத சைவம் தழைத்த காலம். சைவசித்தாந்தம் காஷ்மீர் போன்ற இடங்களில் அப்போது உருவாகவில்லை. ஆனந்தநடராஜா உருவமும் அமையாத காலம் இது. (3) காளாமுகர்கள் சைவத்தின் தலைமை ஏற்கும் (மாணிக்கவாசகர், கோகழி, ....) 9-ஆம் நூற்றாண்டு. ஆனந்த நடராஜர் தத்துவமும், படிமமும் வடிவமைக்கப்படும் காலம். பல்லவர்கள் ஆட்சி முடிவுக்கு வரும் காலகட்டம். பாண்டியர் தாழ்ச்சி. பின்னர் சோழச் சக்கிரவர்த்திகளின் எழுச்சி: 850-விஜயாலயன், 875- ஆதித்தன், காளாமுகர்கள் கண்டுபிடித்த வடிவம்: ஆனந்த தாண்டவ நடராஜர். அதனைப் பல்லவர் கால தட்சிணாமூர்த்தி கோஷ்டத்தின் மேல் வைக்கலாயினர். முதல் கோயில்: திருச்சி அருகே நிருபதுங்கவர்மனின் சடையார்கோயில் சான்று காணலாம் (R. Nagaswamy, Some Adavallan and Other bronzes of the Early Chola period, Lalit Kala, X, 1961, pp. 34-40). அக் காலத்தில் தில்லை ஆனந்தநடராஜர், பொதிகைத் தக்ஷிணாமூர்த்தி வழிபாடுகளை இயைத்து சைவ சமயத்தைப் பெரியசமயமாக அமைத்தவர் திருவாதவூரரே. நடராஜாவும், தக்ஷிணனும் ஒன்று சேர்ந்து கோகழிக் குருமணி வடிவில் மிழலைநாட்டு வனத்தின் குருந்தமர நிழலில் கண்ட காட்சியைத் திருவிளையாடல் புராணம் வர்ணிக்கிறது.
”மன்றுள் ஆடிய ஆனந்த வடிவமும் வடஆல்
ஒன்றி நால்வருக்கு அசைவு அற உணர்த்திய உருவும்
இன்று நாயினேற்கு எளிவந்த இவ் உரு என்னா
அன்று நாயகன் குறிப்பு உளத்து உணர்த்திட அறிந்தார்.”
மாணிக்கவாசகரே தம் திருவாக்கினால் ஞானாசிரியன் பார்ப்பனராய் திருப்பந்துறையில் ஆட்கொண்டதை விவரிக்கிறார்:
பத்தர் சூழப் பராபரன் பாரில் வந்துபார்ப் பானெனச்
சித்தர் சூழச் சிவபிரான் தில்லை மூதூர் நடஞ்செய்வான்
எத்தனாகிவந் தில்புகுந்தெமை ஆளுங் கொண்டெம் பணிகொள்வான்
வைத்த மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே
திருவிடைமருதூர்க் கல்வெட்டு ஒன்று சோழர்கள் ஆட்சியில் நடராஜரை நிறுவியதை மாணிக்கக் கூத்தன் எனக் குறிப்பிடுகிறது. இது தஞ்சைப் பெரியகோயில் கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் ஆட்சியாண்டு 18-க்குப் பின் எழுந்த 11-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு (Ins. no. 694, SII V, p. 290; AR no. 130 of 1895). மாணிக்கவாசகர் தில்லைக் கூத்தனை மாணிக்கக்கூத்தன் என்பார். அதன் தாக்கம் இக் கல்வெட்டில் தெரிகிறது. அவரது திருவாசகம் மாணிக்கக்கூத்தர் மீதான பக்திப்பனுவல். மாணிக்கவாசகர் - மாணிக்க நிறத்தானாகிய தில்லைக் கூத்தனின் அடியார்/தொண்டர்/பக்தர். வாசகன் என்னும் சொல்லுக்கு இப்பொருளை ஆழ்வார் அருளிச் செயலிலும் பார்க்கலாம். மாணிக்கத்தி என்றால் கொங்குநாட்டில் சிவன்கோயில் தேவரடியாள் எனக் கல்வெட்டுகளில், ஓலை ஆவணங்களில் காணலாம். மாணிக்கம் = சிவன் (நடராஜா), வாசகன் = பக்தன். மங்கலர்கள் மங்கல வாழ்த்துப் பாடுதலை அப்பர் விசயமங்கைத் தேவாரத்தில் குறித்துள்ளார்: “வசையில் மங்கல வாசகர் வாழ்த்தவே ...”. ஆக, மாணிக்கவாசகர் என்பது பட்டப்பெயர். அவரது இயற்பெயர் அறியோம்.
சோழதேசத்தின் மிழலைநாடு, அங்குள்ள திருப்பெருந்துறை:
சங்க காலத்தில் சோழநாட்டின் உள்நாடாகிய மிழலைநாடு கடற்கரையும், அதனை அடுத்த பல ஊர்களைக் கொண்டதாகவும் விளங்கியது: வீழிமிழலை, மிழலை, நீடூர், மயிலாடுதுறை (மாயவரம்), திருப்பெருந்துறை (திருப்பந்துறை), குறும்பூர், வைப்பூர் (அகநானூறு 126) ... பெருமிழலைக் குறும்ப நாயனார் இந்த மிழலை நாட்டின் குறும்பூரில் வாழ்ந்தவர். வேள் எவ்வி என்பவன் அதன் அரசன். இவன் வரலாறு சங்க இலக்கியங்கள் புறநானூறு (24), அகநானூறு (266) வாயிலாகத் தெரிகிறோம்.
”யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன்
வாய் வாள் எவ்வி ஏவல் மேவார்
நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர்
அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண்,
கள்ளுடைப் பெருஞ் சோற்று எல் இமிழ் அன்ன,
கவ்வை ஆகின்றால் பெரிதே (அகநானூறு 266)
தொழுவர் கடல் திரைமிசைப் பாயும் மிழலை, பரதவர் குரவைச் சீர்தூங்கும் மிழலை, மைந்தர் தலைக்கை தரூஉம் மிழலை என்றெல்லாம் கடல்படு திரவியங்கள் கிடைக்கும் இந்த மிழலை நாட்டைப் பண்டை இலக்கியங்கள் புகழுகின்றன. மூவர் தேவாரமும் பெற்ற மூதூர்களில் ஒன்று திருவீழிமிழலை இங்கேதான் உள்ளது. மிழலை நாட்டு மிழலை என்பது தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாளுக்கு அருகில் உள்ள ஊர். குறும்ப குல நாயனாரின் பெருமிழலை இது. வெண்ணி நாட்டு மிழலை என்பது வீழிமிழலை. வெண்ணி இன்று கோயில்வெண்ணி என வீழிமிழலைக்கு அருகே உள்ள ஊர் (தி. வே. கோபாலையர், தேவாரம், 3-ஆம் தொகுதி).
வேளாளன் கண்டன் மாதவன் பாண்டி நாட்டுச் சமண அடிகளார் அமிதசாகர முனியைத் தன் மிழலை நாட்டுக்கு அழைத்துத் தமிழ் இலக்கணம் படைக்கச் செய்ததை இரண்டு கல்வெட்டுப் பாடல்களால் அறிகிறோம். இது முதற் குலோத்துங்க சோழன் காலம் என்பதாகத் தெரிகிறது.
‘‘எண்டிசை உலகை ஒருகுடை நிழற்கீழ்
இருத்திய குலோத்துங்க சோழற்கு
யாண்டொரு முப்பத் தெட்டினில் சோணாட்(டு)
இசைவளர் இந்தளூர் நாட்டுள்
உண்டைநீடியநீ டூர்உமை யோடும்
உலாவிய சிவபெரு மானுக்(கு)
உவந்து வெண்கயிலை மலைஎனச் சிலையால்
உத்தம விமானமிங் கமைத்தான்
தண்டமிழ் அமித சாகர முனியைச்
சயங்கொண்ட சோழ மண்டலத்துத்
தண்சிறு குன்ற நாட்டகத் திருத்திச்
சந்தநூற் காரிகை அவனால்
கண்டவன் மருமான் காரிகைக் குளத்தூர்க்
காவலன் நிலாவினான் எவர்க்கும்
கருணையும் நிதியும் காட்டிய மிழலை
நாட்டுவேள்கண்டன்மாதவனே’’
”நேரியற்(கு) ஆண்டோர் அஞ்சுடன் மூன்றில்
நிகரிலாக் கற்றளி நீடூர்
நிலாவினாற் கமைந்த நிலாவினான்அமுத
சாகரன் நெடுந்தமிழ்த் தொகுத்த
காரிகைக் குளத்தூர் மன்னவன் தொண்டை
காவலன் சிறுகுன்ற நாட்டு
கற்பக மிழலை நாட்டுவே ளாண்மை
கொண்டவன் கண்டன்மா தவனே’’
மிழலைக் கூற்றத்துக் கடற்கரைப் பட்டினங்களில் பௌத்தர்கள் வருகை அதிகம். ஸ்ரீவிஜய நாட்டு மன்னனே வந்து நாகப்பட்டினத்தில் புத்தருக்கு விகாரை ஆலயம் எடுத்தான். காரைக்கால் அருகே புத்தகுடிப் பொன்பற்றி ஊரில் புத்தமித்திரன் என்னும் புலவர் வீரசோழியம் செய்திருக்கிறார். இன்று புத்தமித்திரனாரின் பொன்பற்றியில் விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு புத்த சமயத்துடன் நெருங்கிய தொடர்புகொண்ட
மிழலைக் கூற்றத்துப் பொன்பற்றி என்று காரைக்கால் புத்தகுடிப் பொன்பற்றியை முதலில் குறிப்பிட்டவர் மு. இராகவையங்கார் ஆவார்.
ஈண்டுநூல் கண்டான் எழில்மிழலைக் கூற்றத்துப்
பூண்டபுகழ்ப் பொன்பற்றி காவலனே - மூண்டவரை
வெல்லும் படைத்தடக்கை வெற்றிபுனை வீரன்தன்
சொல்லின் படியே தொகுத்து!
பெரும்பற்றப்புலியூர் நம்பி சோழிய அந்தணர். சோழநாட்டு பிராமணர்களைப் பாண்டிய மன்னர்கள் சங்க காலத்து மிழலைக் கூற்றத்தில் இருந்து அழைத்து வந்து 13-ஆம் நூற்றாண்டு வாக்கில் பாண்டிநாட்டின் பல ஊர்களில் குடியமர்த்தினர். அவ்வாறு ஏற்பட்டது தான் சங்கரநயினார்கோயில் தாலூக்காவின் வேம்பத்தூர் - இது சோழநாட்டு வேம்பத்தூர் (வேம்பில்) அந்தணர்கள் குடியேற்றம். அதேபோல், மிழலை நாட்டு அந்தணர்களை அழைத்துவந்து குடியேற்றிய இடத்தில் திருப்பெருந்துறை எனப் புதிதாய் சோழநாட்டு திருப்பெருந்துறை நினைவால் அழைக்கப்பெற்றது. பெரும்பற்றப்புலியூர் நம்பி பாடிய பழைய திருவிளையாடல் புராணத்தில் நரியைக் குதிரையாக்கிய திருவிளையாடல் (பாடல் 11) மிழலைக் கூற்றத்துத் திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் குருந்த மர நிழலில் ஞானாசிரியனைச் சந்தித்தார் என்பது சோழநாட்டுத் திருப்பந்துறை ஆகும்.
மாணிக்கவாசகர் வரலாற்றில் சோழநாட்டுக் கடற்கரைப் பட்டினம் சென்றதும், அதனருகே திருப்பந்துறையில் அருளுபதேசம் பெற்றதும்
திருவிளையாடல் புராணத்தில் மாணிக்கவாசகர் சோழநாட்டுக் கடற்கரைப் பட்டினம் (அதாவது, நாகைப்பட்டினம்) செல்லும் நிகழ்ச்சி கூறப்படுகிறது: “”திருவாதவூரர் என்ற திருநாமம் அடைந்து கல்வியில் முதிர்ந்து பாண்டியனிடத்தில் மந்திரித் தொழில் பெற்றுத் தென்னவன் பிரமராயன் என்னுஞ் சிறப்புப் பெயர் வாய்ந்து தேகமும் செல்வமும் நிலையாமை உணர்ந்து பதிநூல் ஆராய்ந்து சிவமூர்த்தியிடம் அன்பு மேலிட்டு ஆசாரியரைத் தேடிக்கொண்டு மந்திரித் தொழிலில் இருந்தனர். இவ்வகை யிருக்கையில் சோழதேசத்தில் குதிரைகள் வந்திருக்கின்றன எனத் தூதர் பாண்டியனுக்குக் கூறினர். பாண்டியன் 49 கோடி பொன் கொடுத்துக் குதிரை கொண்டுவரும்படிச் சோணாட்டிற் சிலரை யனுப்பினன். திருவாதவூரர் பொன்கொண்டு திருப்பெருந்துறை அடைந்தனர்.” (அபிதான சிந்தாமணி). இதன்படி நோக்கினால், மாணிக்கவாசகர் புராணங்களுக்கெல்லாம் அடிப்படைத் திருவிளையாடற்புராணம் சோழநாட்டுத் திருப்பெருந்துறை என்கிறது அல்லவா? ”தாவு மா இறங்கும் பட்டினம்” என்னும் புகழ்மிக்க நாகப்பட்டினத்தருகே உள்ள திருப்பெருந்துறைதான் இந்த ஸ்தலம். சம்பந்தர் தேவாரம் பெற்ற காவிரித் தென்கரைத் தலம் இந்தத் திருப்பெருந்துறை. 10 பாடல்களில் இப் பெருந்துறையைப் புகழ்கிறது தேவாரம் (7-ஆம் நூற்றாண்டில்). முதல் பாடல்.
பைம்மா நாகம் பன்மலர்க் கொன்றை பன்றிவெண் கொம்பொன்று பூண்டு
செம்மாந் தையம் பெய்கென்று சொல்லிச் செய்தொழில் பேணியோர் செல்வர்
அம்மா னோக்கிய அந்தளிர் மேனி அரிவையோர் பாக மமர்ந்த
பெம்மான் நல்கிய தொல்புக ழாளர் பேணு பெருந்துறை யாரே - (சம்பந்தர்)
இந்தப் பேணு பெருந்துறையில் தான் அருள்பெற்றதாகத் திருவாசகம் திரு அம்மானையில் இரண்டு இடங்களில் மாணிக்கவாசகரே தெளிவுபடுத்துகிறார்:
விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்! (திருவம்மானை 10)
முன்னானை மூவர்க்கு முற்றுமாய் முறுக்கும்
பின்னானைப் பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின்
மன்னானை வானவனை மாதியலும் பாதியனைத்
தென்னானைக் காவானைத் தென்பாண்டி நாட்டானை
என்னானை என்னப்பன் என்பார்கட்கு இன்னமுதை
அன்னானை அம்மானைப் பாடுதுங்க்காண் அம்மானாய்! (திருவம்மானை 19)
தேவார காலத்திலேயே புகழ்பெற்ற திருப்பந்துறைக் கோயிலைப் பாடுகிறார் மாணிக்கவாசகர்:
செந்தழல் புரைதரு மேனியும் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தணன் ஆவதுங் காட்டிவந்து ஆண்டாய்! (திருப்பள்ளி எழுச்சி 8)
"நீதிமறை பரவுதிருப் பெருந்துறையில் குருவடிவாய்த் திகழ்ந்த கோலம்" - அதாவது மறைகளைப் பாடும் சோழிய அந்தணர்கள், அக்கிரகாரம், கோவில் எல்லாம் உள்ள மிழலைக் கூற்றத்துத் திருப்பந்துறை என்கிறார். ஆவுடையார்கோவில் 13-ஆம் நூற்றாண்டு. அங்கே கோவில் எதுவும் மாணிக்கவாசகரின் 9-ஆம் நூற்றாண்டில் இல்லை என்ற செய்தியுடன் இணைத்துப் பார்த்தால் சோழநாட்டுத் திருப்பெருந்துறைக்கும், மணிவாசகருக்கும் உள்ள உறவு தெளிவாகும்.
திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந்துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட்
டென்னுடை யெம்பிரான் என்றென்று
அருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால்
அலைகடல் அதனுளே நின்று
பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண்
போதராய் என்றளு ளாயே!
கடலுக்குச் சற்று உள்ளே உள்ள நெய்தல் திணையின் ஊர்கள் தில்லை, சீகாழி, திருப்பந்துறை மூன்றுக்கும் கடலவருணனை இருக்கும். கோகழிக் குருமணி ஞானாசிரியனை விளித்து ‘அதெந்துவே’ என்று பாடும் பதிகத்தின் கடைசிப் பாட்டில் மிழலைத் திருப்பந்துறையின் அலைகடல் பட்டினத்தில் நின்று அருள்க என்கிறார். மாணிக்கவாசகர் காலத்தில் பௌத்திரமாணிக்கம் என்று வழங்கிய மிழலைக் கூற்றத்து நாகபட்டினத்தின் சதுர்வேதிமங்கலம் திருப்பந்துறையில் இருந்துள்ளது.
மாணிக்கவாசகர் காலத் திருப்பெருந்துறையும் (மிழலைக் கூற்றம்) தலவரலாறும், திருப்புகழ்களும்:
மிழலைக்கூற்றத்தில் உள்ள திருப்பெருந்துறைத் தலவரலாறு தெளிவாக இன்றும், பழைய திருவிளையாடல் முதன்முதலில் பதிவு செய்த செய்தியைக் கூறுகிறது. இங்கே தான் மாணிக்கவாசகருக்கு ஞானாசிரியன் குருந்த மரநிழலில் ஆட்கொண்டார், “காரைக்கால் - கும்பகோணம் வழித்தடத்தில் உள்ள பெருந்துறையில் இருக்கும் பிரணவேஸ்வரர்தான் மாணிக்கவாசகரை ஆட் கொண்டவர். இவரை வன்னி இலையில் அர்ச்சனை செய்து வழிபட்டால் நமக்கும் அவரது உபதேசம் கிடைக்கும். கலைகளில் தேர்ச்சி, தொழில் முன்னேற்றமும் பெறலாம்.” http://www.maalaimalar.com/2013/05/08112832/sri-guru-moorthy.html
பழைய தமிழ்ச் சைவ நூல்களில் அஷ்டாஷ்ட மூர்த்திகள் என்று 64 சிவ வடிவங்களும், ஒவ்வொன்றுக்குமான ஊர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள். சிவன் குருமூர்த்தியாய் வந்து அருள்புரிந்தது இந்தத் திருப்பந்துறையிலே என்று மாணிக்கவாசகர் வரலாற்றைச் சொல்வர். வழிவழியாய் பழைய திருவிளையாடல்புராண காலத்திலிருந்து 64 சிவ மூர்த்தங்கள் உருவாகியது தொடங்கி இன்றும் மாணிக்கவாசகர் திருப்பெருந்துறை இது தான்.
http://temple.dinamalar.com/news_detail.php?id=1827
"குடந்தை - காரைக்கால் நடுவே அமைந்துள்ளது பெருந்துறையாகும். இறைவனது திருநாமம் பிரணவேஸ்வரர் இறைவி திருநாமம் மலையரசி. இவரே குருவடிவம் கொண்டு மாணிக்கவாசகரை ஆட்கொண்டு உபதேசித்தவர். இங்கமைந்துள்ள மங்கள தீர்த்ததில் நீராடி, வன்னி இலை அர்ச்சனை செய்ய நமக்கும் உபதேசம் செய்வார் என்பது ஐதீகம். இவரை வெண்தாமரை அல்லது மகாவில்வ இலை அர்ச்சனையும், வாழை, மா, கரும்பு, திராட்சை கொண்டு நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் செய்துவர தொழில் அபிவிருத்தியும், அனைத்துக் கலைகளில் தேர்ச்சியும் திருஐந்தெழுத்தின் மகிமையும் புரியும்."
குளந்தை என்று திருப்புகழ் கூறும் ஊர் தூத்துக்குடி அருகே உள்ள ஊர் என்று ஏற்கெனவே நிறுவியிருக்கிறேன். திருப்புகழின் பெரிய ஆய்வாளர் வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்கள். அவர் தலையில் திருப்புகழ் பெற்ற மிழலைநாட்டுத் திரியம்பகபுரத்தில் புதிதாய் திரியம்பகபுரேசுவரர், முருகன் கோவில் திருப்பணிக்கு நிதி திரட்டும் மடல்கள் காண்கிறேன். வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன் கல்வெட்டுச் சான்றால் சோளிங்கர் அருகே இருப்பது திருப்புகழ் பெற்ற ஞானமலை என்று காட்டியுள்ளார்கள். மாணிக்கவாசகர் திருவருள் பெற்ற ஞானாசிரியர் தோன்றிய இடம் திருப்பந்துறை என்று வழங்கும் திருப்பெருந்துறை ஆகும் என அருமையாகக் காட்டியிருப்பவர்களில் சுவாமி அருணகிரிநாதர் தலையாயவர். அதனை இனி நோக்குவோம்.
திருப்புகழ் தலவைப்புமுறையை நோக்கினாலும் திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் அருள்பெற்றது சோழநாட்டு ஊர் என எளிதில் விளங்கும். அருணகிரிநாதர் மாணிக்கவாசகர் வரலாற்றில் பெருவிருப்பு உடையவர்.
(1) வாசி வாணிகன் என குதிரை விற்று மகிழ்
வாத ஊரன் அடிமை கொளு க்ருபை கடவுள் . (ஆசைநாலு... திருப்புகழ்)
(2) பரி என்ப நரிகள் தமை நடனம் கொண்டு ஒரு வழுதி
பரி துஞ்ச வரும் மதுரை நடராஜன் (திரைவஞ்ச... திருப்புகழ்)
(3) குருவின் உரு என அருள் செய் துறையினில்
குதிரை கொள வரு நிறை தவசி தலை
கொற்ற பொன் பதம் வைத்திட்டு அற்புதம்
எற்றி பொன் பொருள் இட்டு கை கொள்ளும் முதல்வர் (மருவுகடல்... திருப்புகழ்)
(4) வாதவூரனை மதித்து ஒரு குருக்கள் என
ஞான பாதம் வெளி இட்டு நரியின் குழுவை
வாசியாம் என நடத்து உவகை உற்று அரசன் அன்பு காண (சீதவாசனை... திருப்புகழ்)
(5) செருக்கு மம்பல மிசைதனில் அசைவுற
நடித்த சங்கரர் வழிவரு அடியவர்
திருக்கு ருந்தடி யருள்பெற அருளிய குருநாதர்
திருக்கு ழந்தையு மென அவர் வழிபடு
குருக்க ளின்திற மெனவரு பெரியவ
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே (அருக்கு மங்கையர் ... திருப்புகழ்)
என்றெல்லாம் பாடும் அருணகிரியார் சோழநாட்டுத் தலமான திருப்பெருந்துறை திருப்புகழ்களில் மாணிக்கவாசகர் புராணத்தை அருளிச் செய்துள்ளார். அவர்காலத்தில் புதிதாக எழுந்துவரும் மிமோரியல் கோவில் ஆன ஆவுடையார்கோவிலை அருணகிரிநாதர் ஒரு பாட்டிலும் பாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆவுடையார்கோவில் வளர்ச்சி அருணகிரிநாதர் காலத்திற்குப் பின்னர்.
சங்கப் பாடல்:
”ஓம்பா வீகை மாவேள் எவ்வி
புனலும் புதவின் மிழலையொடு கழனிக்
கயலார் நாரை போர்விற் சேக்கும்
பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்
குப்பை நெல்லின் முத்தூறு தந்த
கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய” (புறம் 24)
மிழலைக்கூற்றம் நாகப்பட்டினமும் அதனருகே உள்ள ஊர்களுமாகும். ஏராளமான கல்வெட்டுக்களும் சங்க இலக்கியம் கூறும் இச்செய்தியை உறுதிப்படுத்துகின்றன. நோன்பு (திருவிழா) சாட்டு/சாற்று என்னும் பெயர்ச்சொல்லைச் சாறு என்றே சொல்கிறது புறநானூறு. முத்துப்போல நன்னீர் ஊற்று இருக்கும் பகுதியை முத்தூறு என்கிறது புறம் 24. நாற்று நாறு என்றே சொல்வது இலக்கியத்தில் உள்ளது. முத்தூற்றுக் கூற்றம் அதற்குத் தெற்கே கடலருகே உள்ள முத்துப்பேட்டை (முத்தூறு), துவரங்குறிச்சி (துவரை) உள்ளடக்கிய சோழநாட்டின் பட்டுக்கோட்டை வட்டமாகும். முத்தூட்டுக் கூற்றம் சோழநாட்டு எல்லையில் பட்டுக்கோட்டை தாலூக்காவில் உள்ளது. சிலப்பதிகாரம், காடுகாண் காதையில் வரும் “குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள” என்ற வரிக்கு விசேடவுரையில் பாண்டியனின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாகச் சோழ நாட்டின் எல்லைப் பகுதியில் முத்தூற்றுக் கூற்றம் அமைந்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. (பக். 300, சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்குநல்லார் உரையும், உ.வே.சா. பதிப்பு, 1978.) சங்ககால முத்தூறு (முத்துப்பேட்டை), துவரையில் (பட்டுக்கோட்டை) இருந்து பாண்டி, கொங்கு, சேர நாடுகளுக்குப் பிற்காலங்களில் குடிபெயந்து அதே பெயர்களில் ஊர்கள் அமைத்துள்ளனர். ’முத்தூட் ஃபைனான்ஸ்’ என்னும் கேரளாவின் நிறுவனம் திருவல்லவாழ் அருகே குடிபெயர்ந்த குடும்பத்தாரினது. வட கேரளாவின் வனத்தில் சென்றவாரம் ஓர் அரிய தமிழ்பிராமி கல்வெட்டை பேரா. ராகவ வாரியர் கண்டறிந்து ஹிந்து பத்திரிகையில் கொடுத்திருந்தார். கொங்கின் அறச்சலூர் - இந்தியாவின் பழமையான இசைக் கல்வெட்டு - ஒத்த கி.பி. 400 வாக்கில் எழுதிய தமிழ்க் கல்வெட்டு. “கழிகோறு பட்டன் மகன் சரும” என்றுள்ளது. முத்தூட்டுக் கூற்றத்தின் முத்தூறு முத்தூட் எனப்படுதல் போலேம் கழிகோறு (Calicut) கழிக்கோடு என உச்சரிக்கப்படுகிறது. கழிக்கோடு கோழிக்கோடு என இன்று மாறியிருக்கிறது.
14-ஆம் நூற்றாண்டில் முத்தூற்றுக் கூற்றம் (பட்டுக்கோட்டை) துவரங்குறிச்சி அருகே கப்பலூரில் வாழ்ந்த கருமாணிக்கன் என்பவன் மீது கப்பல்கோவை யுண்டு. 1958-ல் அச்சாகியும் உள்ளது. கீழ்த்திசைச் சுவடிகள் நூலக வெளியீடான இந்நூல் என்னிடம் இருக்கிறது. 1920-ல் ஓலைச்சுவடிகள் மதுரை சேதுபதிகள் அமைத்த நூல்நிலையம் தீப்பற்றியபோது அழிந்துவிட்டதாக மு. ராகவையங்கார் எழுதியிருக்கிறார்கள். ஆனால், நல்ல வேளையாக உ. வே. சா. அவர்கள் காப்பாற்றி வைத்தது தமிழுக்குப் பெருத்த நன்மையாயிற்று. சிவபெருமானின் 64 மூர்த்தி வடிவங்கள் சிலையாக வடிக்கப்பட்டுள்ள திருக்கோயில் கோடிகா என்னும் தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம். துவரை, முத்தூறு, கப்பலூர் கொண்ட முத்தூற்றுக் கூற்றத்திற்கும், திருப்பெருந்துறை, நாகைப்பட்டனம், நீடூர், பெருமிழலை போன்ற இடங்களைக் கொண்ட மிழலைக் கூற்றத்துக்கும் நடுப்பகுதியில் அமைந்துள்ளது திருக்கோடிகா. அங்கே மாணிக்கவாசகருக்கு அருளிய திருப்பெருந்துறை ஆளுடையார் விக்கிரகம் அமைக்கப்பட்டதாக கி.பி. 1264ஆம் ஆண்டுக் கல்வெட்டு பறைசாற்றுகிறது. இவையெல்லாம் சோழநாட்டுக் கடற்கரை ஊர்கள் என்பது மணிமொழியார் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரிய செய்திகள்.
இந்த திருப்பந்துறை/திருப்பெருந்துறைத் திருப்புகழ் (843 - இரத்த முஞ்சியு மூளை..) உலகில் குருவாய் விளங்கும் உனது தந்தையாகிய சிவபெருமானுக்கு வேத உபதேசம் அளித்த பரமகுருவே, உன் தந்தை மாணிக்கவாசகருக்கு ஞானச் சொற்பொழிவு செய்த தலமாகிய திருப்பெருந்துறையில் விரும்பி வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. செகத்தி னின்குரு வாகிய தந்தைக் களித்தி டுங்குரு ஞானப்ர சங்கத் திருப்பெருந்துறை மேவிய பெருமாளே! (844 - வரித்த குங்கும மணிமுலை...) குருமூர்த்தியாய் மாணிக்கவாசகருக்கு திருப்பந்துறையில் எழுந்தருளிய வரலாற்றைப் பதிவுசெய்கிறது: பிரமன் முதலான தேவர்களும் உன் திருவடிகளை விரும்பிப் போற்ற, திருக் குருந்த மரத்து அடியில் வீற்றருளிய குருமூர்த்தியாகிய சிவபெருமானுடன் திருப்பெருந்துறையில் அமர்ந்திருக்கும் பெருமாளே. சதுமுக திருட்டியெண் கணன்முத லடிபேணத் திருக்குருந் தடியமர் குருத்வசங் கரரொடு திருப்பெருந் துறையுறை பெருமாளே! (845 - முகர வண்டெழும் ...) மாணிக்கவாசர் அருள்பெற்ற குருந்தைப் போற்றுகிறது. திருப்பந்துறையின் கடல்வளம் ஆன முத்து, பவழமுடன் நெல் வயல் சூழ்ந்த நிலம்) பேசுகிறது. நிலவு அரும்பு தண் தரளமும் மிளிர் ஒளிர் பவளமும் பொரும் பழனமும் அழகு உற நிழல் குருந்தமும் செறி துறை வளர் உறு பெருமாளே! திருப்பெருந்துறைக்கான திருப்புகழ் மூன்றின் ஈற்றடிகளிலும் மாணிக்கவாசகர்-குருமூர்த்தி வரலாற்றை திருப்பந்துறைத் திருப்புகழில் அருணகிரியார் குறித்துள்ளது அரிய இலக்கிய வரலாற்று ஆவணங்கள்.
குறிப்புகள்:
குருந்த மரம்: குருந்து நெய்தல் நிலத்தில் நிறைய வளரும் காட்டு எலுமிச்சை. காட்டுநாரங்கம் என்றும் பெயர். நறுமணம் மிக்க மலர்களும், காயு கொண்டது. 10-12 அடி வளரும் குருந்த மரத்தில் முட்களும் இருக்கும். ஜி. யு. போப் காலத்தில் thorny trichilia (trichilia spinosa) என்ற தாவரவியலார் இப்போது அழைக்கும் பெயர்: Atalantia monophylla. குருந்து ஒசித்த கோவலனாகக் கண்ணபிரானை ஆழ்வார்களும், தேவாரமும், பாகவதமும் பேசுகின்றன.
http://www.flowersofindia.net/catalog/slides/Indian%20Atalantia.html
http://idtools.org/id/citrus/citrusid/factsheet.php?name=Atalantia%20monophylla
http://www.flickr.com/photos/adaduitokla/12200919376/in/set-72157627137731125/
http://www.theplantlist.org/tpl1.1/record/kew-2664457