தமிழ்ச் சைவ மரபில் நால்வர் மூர்த்திகள் (சிவன்கோவில்களில் கால வரிசையில் நால்வர். மாணிக்கவாசகர் கடைசி என்பதை நோக்கலாம்.) சித்திரம்: திருமயிலை வி. சுந்தர முதலியார், பெரிய புராணம், விக்டோரியா ஜுபிலி பிரஸ், 1893-ஆம் ஆண்டு.
----------------------
நால்வர் காலம்
குடந்தை என். சேதுராமன் பி.எஸ்ஸி., டி.எம்.ஐ.டி.,
இயக்குநர், இராமன் மற்றும் இராமன் வணிகக் குழுமம்.
(Director, Raman & Raman Co., Kumbakonam)
சைவ உலகில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், சுந்தர மூர்த்தி சுவாமிகளும், மாணிக்கவாசகரும் நால்வர் எனப்படுவர். நால்வரின் காலங்களைப் பல அறிஞர்கள் பலகோணத்தில் ஆய்ந்து உள்ளனர். அவர்களின் ஆய்வுகளும் அணுகுமுறைகளும் ஆராய்ச்சியாளர்களுக்குப் பெருவிருந்தாய் அமைகின்றன. அடியேன் இவ் ஆய்வில் இறங்குவதற்குமுன் அப்பெரியோர்களுக்கு எனது வணக்கத்தை முதற்கண் கூறி, ஆராய்ச்சியைத் துவக்குகிறேன். பலபுதிய செய்திகளை ஆங்காங்கே காணலாம்.
நால்வரின் கால ஆராய்ச்சிக்கு மூலக் கருவூலங்களாகத் துணை நிற்பவை முறையே பாண்டியர் வரலாறு, பல்லவர் வரலாறு, பழங்காலச் செப்பேடுகள், கல்வெட்டுகள், வானசாத்திரம், தேவாரம், பெரியபுராணம் ஆகியவை ஆகும். அண்மைக் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளும், செப்பேடுகளும் ஆய்விற்கு அடித்தளமாக அமைகின்றன. அவைகள் தக்க இடத்தில் குறிப்பிடப்படும்.
திருஞானசம்பந்தர் காலம் :
திருஞானசம்பந்தரின் காலத்தை ஆராய்ச்சி செய்வதற்கு முன்பாக, பாண்டியர் காலத்தையும், வம்சாவழியையும் அறிவது அவசியம். ஆறாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை அரசாண்ட பாண்டிய மன்னர்கள் யாவர்? அவர்களின் காலம் எது? இவ்வினாக்களுக்குரிய விடைகளைப் பாண்டியர் செப்பேடுகள் பத்தும், அம்மன்னர்களின் கல்வெட்டுகளும் நமக்கு அளிக்கின்றன. அண்மைக் காலத்தில் பாண்டியரின் வரலாறு விஞ்ஞான ரீதியாக ஆராயப்பட்டது. இவ்வாய்வின்படி ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரை அரசு புரிந்த பாண்டியரின் வம்சாவழிப் பட்டியல் கீழே கொடுக்கப்பெற்றுள்ளது. (பாண்டியர் செப்பேடுகள் பத்து - தமிழ் வரலாற்றுக்கழகம் - பதிப்பு 1967.)
ஒவ்வொரு மன்னனது காலமும் எவ்வாறு நிர்ணயம் செய்யப் படுகிறது என்பதைத் தக்க இடங்களில் சான்றுகளுடன் காண்போம்.
முற்காலப் பாண்டியர்
1. பாண்டியன் கடுங்கோன் (சுமார் கி.பி. 550)
(களப்பிரரை ஒழித்து, மதுரையில் மீண்டும் பாண்டியப் பேரரசைத் தாபித்தவன்)
2. மாறவர்மன் அவனி சூளாமணி
3. சேந்தன்
4. மாறவர்மன் அரிகேசரி (630-680)
(நெல்வேலிப் போரில் சேரனை வென்றான். புலியூரில் கேரளனை வென்றவன் - அநேக இரண்ய கர்ப்பம், துலா பாரம் தானங்களைப் பலமுறை செய்தவன். பாண்டி நாட்டில் மங்கலாபுரம் என்ற ஊரை நிர்மாணித்தான்.)
5. கோச்சடையன் ரணதீரன் (680-730)
(மங்கலாபுரத்தில் சாளுக்கியரைத் தோற்கடித்தான்.)
6. ஸ்ரீ மாறன் இராஜசிம்மன் (730-768)
(பல்லவ மல்லனை வென்றவன்)
7. நெடுஞ்சடையன் பராந்தகன் - முதல் வரகுணன் (768-811) (பரம வைணவன்)
8. ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லவன் (811-860)
(சேரனையும், சிங்களவரையும் வென்றவன்)
12. மாறவர்மன் இராஜசிம்மன்
(911-931)
பாண்டியர் செப்பேடு பத்தில், குறிப்பாக வேள்விக்குடி செப்பேடுகள், சீவரமங்கல செப்பேடுகள், தளவாய்புரம் செப்பேடுகள், சின்னமனூர் பெரிய செப்பேடுகள் ஆகியவைகளை ஊன்றிக் கவனித்தால் ஏழாவது மன்னனாகிய நெடுஞ்சடையன் பராந்தகனே முதல் வரகுணன் என்பதை எளிதில் அறியலாம். (Epigraphica Indica XXXII page 271) சாளக்கிராமத்தில் உள்ள வரகுண ஈஸ்வரமுடையர் கோயிலுக்குத் தேவதான நிலங்கள் இறையிலியாக அளிக்கப்பட்டன என்று கூறுகிறது. (E.I. XXVIII No. 7) இதனால் ஸ்ரீ வல்லபன் தன் தந்தை வரகுணன் பெயரால் ஒரு சிவன் கோயிலை எழுப்பினான் என்பதை அறியலாம்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள இரண்டு கல்வெட்டுகள் நெடுஞ்சடையன் பராந்தகனாகிய வரகுணனுக்கு உரியவை, கரவந்தபுர ஆதிவாசி வைச்சியன், பாண்டி அமிர்தமங்கல வரையினனாகிய சாத்தன் கணபதி என்பான், சம்புவின் திருக்கோயிலையும், திருக் குளத்தையும் திருத்துவித்தான் என்றும், அவனது மனைவியாக நக்கன் கொற்றியார் துர்க்கைக்கும், சேட்டைக்கும் கோயில் எடுப்பித்தாள் என்றும் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளன. மன்னனின் ஆறாம் ஆட்சி ஆண்டில் கலியுக வருடம் 3874இல் தை மாதத்தில் இத்திருப் பணிகள் செய்யப்பட்டன. (E.I. XXXVI No. 5). கல்வெட்டின் காலம் கி.பி. 774 சனவரி மாதம் ஆகும்.
மதுரைக்கு அருகில் உள்ள ஆனைமலை நரசிங்கபெருமான் குடவரைக் கோயிலில் இம்மன்னனுக்கு உரிய இரு கல்வெட்டுகள் உள்ளன. மன்னனின் மந்திரியாகிய மதுரகவி என்னும் மாறன்காரி இக் குடவரைக் கோயிலை எடுப்பித்தார் என்றும், அவர் இறந்துவிடவே, அவரது தம்பியாகிய மாறன் எயினன் என்பவர் கோயிலைக் கட்டி முடித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. (South Indian Inscriptions Volumes XIV Nos. 1 and 2; E.I. VIII No. 33). இக்கல்வெட்டுகளில், மன்ன னின் மூன்றாம் ஆண்டு, கலியுக வருடம் 3871, கார்த்திகை மாதம் ரேவதி நட்சத்திரம், ஞாயிற்றுக்கிழமை குறிக்கப்படுகின்றன. இதன் காலம் கி.பி. 770, நவம்பர் மாதம் நான்காம் தேதி ஆகும். (E.I. XXXVI page 115)
திருப்பரங்குன்றம் ஆனைமலைக் கல்வெட்டுகளின் காலங்களைப் பின்னோக்கிக் கணக்கிட்டால், கி.பி. 768 இல் சனவரியில் இருந்து நவம்பர் மாதத்திற்குள் ஏதோ ஒருநாளில் மன்னன் முடி சூடினான் என்பதை அறியலாம். நெடுஞ்சடையன் பராந்தகனாகிய முதல் வரகுணன் கி.பி. 768இல் முடிசூடியவன் என்னும் செய்தி ஆய்விற்கு ஒரு பலத்த அஸ்திவாரமாக அமைகிறது.
கி.பி. 770க்கு உரிய ஆனைமலைக் கல்வெட்டில் மன்னனின் மந்திரியாகிய மதுரகவி என்னும் மாறன்காரி குறிப்பிடப்படுகிறார். இவர் நம்மாழ்வாருடன் தொடர்பு உடையவர் என்பதை இலக்கியங்களால் அறியலாம். (E.I. VIII page 319, S.I.I. XVI Introduction)
சீவரமங்கலச் செப்பேடுகள் நெடுஞ்சடையன் பராந்தகனாகிய முதல் வரகுணனை குரு சரிதை கொண்டாடியவன் என்றும், பரம வைணவன் என்றும் கூறுகின்றன. (Archaeological Report on Epigraphy 1926 - 27 page 87;பாண்டியன் செப்பேடு பத்து பக்கம் XXIV) நம்மாழ்வார் வரகுணமங்கை என்னும் திருமால் தலத்திற்கு மங்களா சாசனம் அருளினார் என்பதும் அறியத்தக்கது. முதல் வரகுணனுக்கு சிரீவரன் என்னும் விருதுப்பெயர் இருந்ததைச் செப்பேடுகள் கூறுகின்றன. நம்மாழ்வார் சிரீவர மங்கை என்னும் தலத்திற்கு (நாங்குநேரி) மங்களாசாசனம் செய்துள்ளார். சிந்தனைக்கு உரிய இச்செய்திகளினால் முதலாம் வரகுணன் வைணவத்தில் பெரிதும் ஈடுபட்டவன் என்பதை அறியலாம்.
முதல் வரகுணனின் தந்தை மாறவர்மன் ராஜசிம்மன் ஆவான். ராஜசிம்மன் பல்லவமல்லனைத் தோற்கடித்ததாகச் செப்பேடுகள் கூறுகின்றன. இப்பல்லவ மல்லன் நந்திவர்மன் என்னும் பெயர் கொண்டவன். காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவன். கி.பி. 730இல் தனது பன்னிரண்டாவது வயதில் முடிசூடி 65 ஆண்டுகள் (கி.பி. 795 வரை) அரசாண்டவன். (E.I. XXIX page 92; S.I.I. IV No. 135 section "d" - A.R.E. 666 of 1922 Nandipotavarman regnal year 65) ஆகவே வரகுணனின் தந்தையான ராஜசிம்மனின் காலத்தைச் சுமார் 730 முதல் 768 வரை என்று கொள்ளலாம். ராஜசிம்மனின் தந்தை கோச்சடையன் ரணதீரன் ஆவான். இவன் சாளுக்கியர்களை மங்கலாபுரம் என்னும் இடத்தில் தோற்கடித்தான் என்று செப்பேடுகள் கூறுகின்றன. மங்கலாபுரம் என்பது பாண்டி நாட்டில் உள்ள ஊர். இவ்வூர் இவன் தந்தை மாறவர்மன் அரிகேசரியால் நிர்மாணிக்கப்பட்டது என்பதைப் பின்னால் காண்போம். இவன் காலத்தை 680இலிருந்து 730 வரை என்று கொள்ளலாம். பின் கூறப்படும் சரித்திர நிகழ்ச்சிகளும், ரண தீரனின் தந்தையின் காலமும் அக்கருத்திற்குத் துணை நிற்கும்.
கோச்சடையன் ரணதீரன் மங்கலாபுரத்தில் சாளுக்கியரைத் தோற்கடித்தது எப்போது என்ற வினாவிற்குத் திட்டவட்டமாக இப்போது விடை அளிப்பதற்கு இல்லை. சாளுக்கிய நாட்டில் முதலாம் விக்கிரமாதித்தன் கி.பி. 654 முதல் 681 வரை அரசாண்டவன். இவன் 647இல் பல்லவரை வென்று சோழமண்டலத்தில் ஊடுருவி உறையூரில் முகாமிட்டான். தொடர்ந்து பாண்டி மண்டலத்திலும் படையெடுத் திருக்கலாம். அப்போது இளவலான பாண்டியன் ரணதீரன் சாளுக்கிய விக்கிரமாதித்யனை மங்கலாபுரத்தில் தோற்கடித்து இருக்கலாம். (E.I. X No. 22; E.I. XXVII No. 20) சாளுக்கிய விக்கிரமாதித்தனின் மகன் வினயாதித்தன் 681 முதல் 696 வரை அரசாண்டவன். இவன் சோழ, கேரள, பாண்டிய, பல்லவரின் கூட்டணியை முறியடித்ததாகச் சாளுக்கியரின் செப்பேடுகள் கூறு கின்றன. ( E.I. IX page 201) எப்படி இருப்பினும் போர் நடந்த காலத்தை நிர்ணயிக்கும் வகையில் இடைவெளி இருபது ஆண்டுகளுக்கு மேல் இல்லை. தந்தையால் நிர்மாணிக்கப்பட்ட மங்கலாபுரத்தில் மகன் ரணதீரன் சாளுக்கியரைத் தோற்கடித்தான் என்னும் வரலாற்று வடிவமே நமக்குத் தேவையானது.
ரணதீரனின் தந்தை மாறவர்மன் அரிகேசரி ஆவான். அரி கேசரி, நெல்வேலிப் போரில் சேரனையும், புலியூர்ப்போரில் கேரளனையும் வென்றவன் என்றும், எண்ணற்ற துலாபாரமும், இரண்ய கர்ப்ப தானங்களும் செய்தவன் என்றும் செப்பேடுகள் கூறு கின்றன. இவனது காலம் 680க்கு முன் விழுகின்றது. இந்தக் கட்டத்தில், பெரிய புராணம், ஏனாதிக் கல்வெட்டு, மதுரை வைகைக் கல்வெட்டு ஆகியவைகளை நோக்குவோம்.
பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் மகன் முதலாம் நரசிம்மவர்மன் ஆவான். (630 - 668) மேலைச் சாளுக்கியர்களுக்கும், பல்லவர்களுக்கும் தீராத பகைமை இருந்தது. கி.பி. 642இல் நரசிம்மவர்மன் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்தான். (Sastri - A. History of South India - Page 151 Edition 1971) சாளுக்கியரின் தலைநகரான வாதாபியை அழித்தான். அவ்வூரே இன்று பதாமி என்று விளங்குகின்றது. அவ்வூரில் உள்ள மல்லிகார்ச்சுனர் ஆலயத்துப் பக்கத்தில் உள்ள பாறையில் நரசிம்மவர்மனது கல்வெட்டை இன்றும் காணலாம். நரசிம்மவர்மனும் வாதாபி கொண்டவன் என்று அழைக்கப்படலானான்.
சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில், சிறுத்தொண்டர் நாயனாரைப் பற்றிக் குறிப்பிடும்போது, வாதாபிப் போரைப் பற்றி விரிவாய் எடுத்துரைப்பர். சிறுத்தொண்டரின் இயற்பெயர் பரஞ்சோதி என்பது ஆகும். இவர் அவதரித்த ஊர் சோழநாட்டுத் திருச்செங் காட்டங்குடி. பரஞ்சோதி மன்னனிடத்து யானைப்படைத் தலைவராய்த் திகழ்ந்தவர். மன்னவர்க்குத் தண்டு போய் வாதாபித் தொன்னகரம் துகளாகச் செய்து பன்மணியும், நிதிக்குவையும் பரிசுத்தொகையும் இன்னும் பலவும் மிகக் கொணர்ந்து அரசன் முன் வைத்தனர். மன்னனும் மகிழ்ந்து பரஞ்சோதியைப் போற்றினான். பரஞ்சோதியார் வாதாபிப் போரில் கலந்து கொண்டது கி.பி. 642 என்பது வெள்ளிடை மலை.
பரஞ்சோதியார் போர்த் தொழிலை வெறுத்தார். சிவபெருமான்பால் பக்தி கொண்டு, மன்னனிடம் விடைபெற்று, தனது பதியாகிய திருச்செங்காட்டங்குடி, வந்தமர்ந்து, திருத்தொண்டில் ஈடுபாடு கொண்டனர். சிறுத்தொண்டர் என அழைக்கப்பட்டார். திருவெண் காட்டு நங்கை என்னும் நல்லாளை மணந்தார். அவர்களுக்கு ஓர் மகன் பிறந்தான், தங்கள் மகனுக்குச் சீராளன் என்னும் பெயரை வைத்தனர். (திருச்செங்காட்டாங்குடி உத்திராபதீஸ்வரர் கோயிலில் உள்ள முதல் இராஜராஜனின் 19 வது ஆட்சிக் கல்வெட்டுக்கள் இரண்டில் (கி.பி. 1004) இறைவனின் பெயர் சீராளன் என்று கூறப்பட்டு உள்ளது. "திருச்செங்காட்டங்குடி மகா தேவர் சீராள தேவர்க்குப் பணிசெய்து சிறுத்தொண்ட நம்பிக்குத் திருவிழா எடுப்பதற்கும், தேவதானம் திருச்செங்காட்டங்குடி சீராளத் தேவர் சித்திரைத் திருவாதிரைத் திருநாளில் சிறுத்தொண்டர் மாளிகையில் எழுந்தருளவும்" நிவந்தங்கள் அளிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இறைவனின் பெயர் சீராளன் என்பது பெரியபுராணத்திலும் தேவாரங்களிலும் காணப்படவில்லை. கல்வெட்டில் இச்செய்தி கூறப்படுவது உய்த்து உணரத்தக்கது. தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை நன்னிலம் கல்வெட்டுகள் முதல் தொகுதியில் எண்கள் 67, 68 காண்க.)தமது மகன் சீராளனைச் செழுங்கலைகள் பலப் பயிலப் பள்ளியினில் இருத்தினர். அவ்வமயம் திருஞானசம்பந்தர் திருச்செங்காட்டங் குடிக்கு வந்து சிறுத்தொண்டரை வாழ்த்தி, திருச்செங்காட்டங்குடி இறைவன்பால் பதிகங்கள் இயற்றி அருளினார். இந்நிகழ்ச்சிகளை நோக்குங்கால், திருஞானசம்பந்தர் திருச்செங்காட்டங்குடி வந்தது சுமார் கி.பி. 650 என்று கொள்ளலாம்.
பலதலங்கள் ஏகிய பின்பு திருஞானசம்பந்தர் மதுரையம்பதி வந்தடைந்தார். அப்போது மதுரையில் நெடுமாறன் என்னும் பாண்டியன் ஆட்சிபுரிந்து வந்தான். இவன் மனைவியே சோழனின் மகளாகிய மங்கையர்க்கரசியார். மன்னனின் மந்திரி குலச்சிறையார் ஆவர். பாண்டி மன்னன் சைன மதப்பற்று உடையவனாக இருந்தனன். மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் இவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, திருஞானசம்பந்தர், பாண்டி மன்னனைச் சைவ சமயத்தை ஏற்கும்படி செய்து அருளினர். மன்னனும் சைவ சமயத்தைத் தழுவி, திருத்தொன்டுகள் பலபுரிந்தனன். இம்மன்னனை நெல்வேலிப்போர் வென்ற நெடுமாறன் என்றும், நின்றசீர் நெடுமாற நாயனார் என்றும் சுந்தரமூர்த்தி நாயனாரும், நம்பியாண்டார் நம்பிகளும், சேக்கிழார் பெருமானும் குறிப்பிடுவர். நெல்வேலிப்போர் வென்ற பாண்டியன் நெடுமாறனைத் திருஞானசம்பந்தர் சந்தித்தது கி.பி. 652 இல் எனக் கொள்வதில் தவறில்லை.
பாண்டியரின் செப்பேடுகளின் கூற்றுப்படி கோச்சடையன் ரணதீரனின் தந்தையான நெல்வேலிப் போர் வென்ற மாறவர்மன் அரிகேசரியே நின்ற சீர் நெடுமாறநாயனார் என்பதை எளிதில் அறியலாம். செப்பேடுகளும் மாறவர்மன் அரிகேசரி நெல்வேலியில் சேரனை வென்றான் என்றும், புலியூரில் கேரளனை வென்றான் என்றும் கூறுகின்றன. சமீபத்தில் ஏனாதி என்னும் இடத்தில் கிடைத்த கல்வெட்டு இதனை உறுதி செய்யும். இக்கல்வெட்டு வட்டெழுத்தில் உள்ளது. எழுத்தின் அமைதி 7ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சுட்டுகின்றது. கல்வெட்டைப் பார்ப்போம்.
இராமநாதபுரம் மாவட்டம் மானாமதுரை வட்டம் - ஏனாதி என்ற ஊரில் சமீபத்தில் கிடைத்த கல்வெட்டு, (நன்றி - திரு. நடன காசினாதன், இயக்குநர், தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறை. நன்றி - திரு. முத்துக்கோனார், மதுரை வரலாற்றுப் பேரவை.) பின்வருமாறு :
1. ............. து அறிந்தோ
2. தர்விழுமையுந் நோம்மை .......
3. றிவாபெய் -- நேராத நேர்ப்பேரூர் க(ண்)
4. டிர்நெய்வேலிப் போரார் வென்நேர்ந்தர் பொழிகுருதி
5. நீரா நிலமகளை ஆட்டிய கோன் மாந்தார் நேரிர்கு
6. லமகள் ஆட்டினீரை கூ(ற்) றுல வொரு கால் பொலங்
7. கருசில் நூல் கலப்ப ஒரு காற் துலாபாரம்
8. புக்கான் பொரு காற்சிலை வேந்தனற்றோர் வாடத்தென்
9. புலிஊர் (சென்றிக்) குலை வேழங்கைப்படுத்த கோமா
10. ணணிருலகளவு மாபாய விரிந்து வானுரிஞ் சற்றரிதா
11. ரமாபோல குளிருந்தன்மைத் தோன்றிதாள் நடவாபோ
12. ரீ யானை உலங்குணி (மே) மா நூட்டிய கூடற் கோமாறனே கூறு
13. ஸ்ரீ சேந்தன் மாறன்
14. அரிகேஸரி
15. முள்ளி நா
16. ட்டு அரிகேசரி
17. நல்லூர் தச்ச
18. ன் சடயன் பூ
19. தன் எழுத்து
கடல் கோமாறன் - நெல்வேலிப்போர் வென்றவன் - சேந்தன் மாறன் அரிகேசரி - ஆகிய இச்செய்திகளால் - இக்கல்வெட்டு நின்றசீர் நெடுமாற நாயனாராகிய பாண்டி மன்னனுடையது என்பதை எளிதில் அறியலாம். மன்னன் துலாபாரம் செய்த செய்தி சொல்லப்பட்டுள்ளது. இச்செய்தி செப்பேடுகளிலும், கீழே சொல்லப்படும் வைகைக்கரைக் கல்வெட்டிலும் சொல்லப்பட்டுள்ளது. சேந்தன் மாறன் என்றால் சேந்தனின் மகன் மாறன் என்பது பொருள். முள்ளிநாட்டு அரிகேசரி நல்லூர் என்பது இக்காலத்தில் அம்பாசமுத்திரம் அருகில் கிரியம்மா புரம் என்று வழங்குகிறது. இவ்வூர் அரிகேசநாதர் கோயில் கல்வெட்டு களில் இறைவனின் பெயர் முள்ளிநாட்டு அரிகேசரி நல்லூர் அரிகேசரி ஈஸ்வரமுடைய நாயனார் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. (A.R.EP. 455 of 1916) இக் கோயில் மாறவர்மன் அரிகேசரியின் பெயரால் கட்டப்பட்டது என்பதை நன்கு உணரலாம்.
வைகைக்கரைக் கல்வெட்டும் இம்மன்னனுடையதே. (E.I. XXXVIII No. 4; இதில் சேந்தன் மற்று என்று தவறாகப் படித்து உள்ளனர். சேந்தன் மாறன் என்பதுதான் சரியான வாசகம் என்பதை சாசன ஆய்வு பக்கம் 32இல் உள்ள புகைப்படத்தில் காணலாம். இப்போது இக்கல்வெட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருங்காட்சி அகத்தில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளது.) கல் வெட்டு மன்னனை சேந்தன்மாறன் என்று குறிப்பிடுகிறது. சேந்தனின் மகனாகிய மாறன் என்பது இதன்பொருள். மன்னனின் ஆட்சி ஆண்டு 50 இல் மன்னனின் பெயரால் அரிகேசரியான் என்னும் மதகு (நீர்மடை) கட்டப்பட்டது கூறப்படுகிறது. எண்ணற்ற துலாபாரமும், கோதானமும், இரண்ய கர்ப்ப தானமும் மன்னன் செய்தனன் என்றும் கூறப்படுகிறது. அக்ரகாரங்கள் பலவும் ஏற்படுத்தப்பட்டன. மங்கலாபுரம் என்ற ஊரையும் மன்னன் நிர்மாணித்தான். (இதே மங்கலா புரத்தில்தான் இவன் மகன் ரணதீரன் சாளுக்கியரை வென்றான் என்பதை முன்பு கண்டோம்.)
வைகைக்கரைக் கல்வெட்டு கிரந்தமும், வட்டெழுத்தும் கலந்து உள்ளது. எழுத்தின் அமைதி 7ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. சொல்லப்பட்டுள்ள செய்திகளால் இக்கல்வெட்டும் நின்றசீர் நெடுமாறனாகிய பாண்டி மன்னனது என்பதில் சிறிதும் ஐயமில்லை. மன்னன் சைன மதத்தவனாகக் காட்சி அளிக்கவில்லை. சைவ சமயத்திற்கு மாறிய பிறகு இக்கல்வெட்டு வெட்டப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எளிதில் அறியலாம். ஆட்சி ஆண்டு 50 எனக் கொடுக்கப் பட்டுள்ளது. சைவ சமயத்தைத் தழுவிய பின்பு மன்னனும் நெடுங் காலம் வாழ்ந்திருந்தான் என்று சேக்கிழார் பெருமானும் கூறுவர். தொகுத்து நோக்கினால், இம்மன்னன் கி.பி. 630 இலிருந்து 680 வரை ஆட்சி புரிந்திருக்கலாம் எனக் கொள்ளலாம்.
அரிகேசரியின் கொள்ளுப்பாட்டன் கடுங்கோன் என்னும் பாண்டியன் ஆவான். இவன் களப்பிரர்களை ஒழித்தவன். கடுங்கோன் முடிசூடிய காலத்தைச் சற்றேறக் குறைய கி.பி. 550 என்று கொள்ள லாம். இக்காலமே மதுரையில் களப்பிரர் ஒழிக்கப்பட்ட காலம்.
களப்பிரர் என்பார் கருநாடகத்திலிருந்து வந்த ஒரு சாரார். இவர்கள் மதுரையைப் பிடித்து ஆட்சி புரியலாயினர். மதுரைக் களப்பிரர் சைனர். சோழமண்டலம், தொண்டை மண்டலம் ஆகிய பகுதி களில் வாழ்ந்த களப்பிரர் பௌத்தர். இதன் விரிவான ஆய்வை திரு. மு. அருணாசலம் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரையில் காண்க. (Journal of The Madras University - Section A Humanities - Volume L I No. 1 - January 1979)
திருஞானசம்பந்தர் பதினாறு ஆண்டுகளே வாழ்ந்தவராகக் கருதப்படுகிறது. இதுவரை வந்த ஆய்வின் பயனாய் இவர் காலத்தை கி.பி. 640 முதல் 656 வரை என்று கொள்ளலாம். இவரது காலத்தில் திருநாவுக்கரசரும் வாழ்ந்தார். ஆளுடைய பிள்ளையான ஞானசம் பந்தர் வயது முதிர்ந்த நாவுக்கரசரை "அப்பரே" என்று மரியாதையாக அழைப்பர். நாவுக்கரசர் 80 வயது வரை வாழ்ந்ததாகக் கருதப்படு கிறது. எனவே திருநாவுக்கரசரின் காலம் சுமார் 580 - 560 எனக் கொள்வதில் தவறில்லை. வேறுபல சரித்திர நிகழ்ச்சிகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன. அவை அறிந்த செய்திகளாதலால் விரிவுக்கு அஞ்சி விடுக்கிறேன்.
சுந்தரர் காலம்:
சுந்தரரின் காலத்தை அறியப் புகுமுன் பல்லவ மன்னர்களின் காலத்தைப் பற்றியும் சிறிது குறிப்பிடவேண்டி உள்ளது. திருநாவுக்கரசர் காலத்துப் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் ஆவான். அவனுக்குபின் ஆண்ட பல்லவ மன்னர்கள் வருமாறு:
1. முதலாம் மகேந்திரவர்மன் 600-630
2. முதலாம் நரசிம்மவர்மன் 630-668
3. இரண்டாம் மகேந்திரவர்மன் 668-670
4. பரமேஸ்வரவர்மன் 670-700
5. இரண்டாம் நரசிம்மவர்மன் 700-728
மூன்றாம் மகேந்திரவர்மன் இரண்டாம் பரமேஸ்வரவர்மன்
720-728 728-730
ராஜசிம்மன்
பல்லவ மன்னர்களில் இரண்டாம் மகேந்திரவர்மன் (எண் - 3), ராஜசிம்மனாகிய இரண்டாம் நரசிம்மவர்மன் (எண் - 5) ஆகிய மன்னர்களின் செப்பேடுகள் இரண்டில் வானிலைக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவைகளின் துணைக் கொண்டு, பல்லவர் களின் கல்வெட்டுகள், செப்பேடுகள், சாளுக்கிய மன்னர்களின் கல் வெட்டுகள், செப்பேடுகள் இவைகளின் துணைக்கொண்டும், மேலே காட்டியுள்ள பட்டியலை ஆய்வாளர் கணக்கிட்டுத் தந்துள்ளனர். பல்லவர் சரித்திரத்திற்கு இண்டிகா தொகுதி 20 இல் கட்டுரை எண் 11இலும், எபிகிராபிகா இண்டிகா தொகுதி 32 இல் கட்டுரை எண் 9இலும் வெளிவந்துள்ளன. முப்பது ஆண்டுகளுக்கு முன் வெளியிடப் பட்ட அறிய, பலருக்கு வாய்ப்பு இல்லாத காரணத்தால் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் காலத்தை ஆராயப் புகுந்த பல அறிஞர்களுக்கு சில குழப்பங்கள் ஏற்பட்டன.
நிற்க, விஞ்ஞான ரீதியாக பல்லவர் காலம் கணிக்கப்பட்டுள்ள மேல்வரும் பட்டியலைக் கொண்டு சுந்தரர் காலத்தைக் காணலாம்.
சுந்தரர் திருத்தொண்டத் தொகையில், "கடல் சூழ்ந்த உலகம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கற்கு அடியேன்" என்கின்றார். காடவர் கோன் என்றால் பல்லவ மன்னன் என்று பொருள். "உலகம் காக்கின்ற பெருமான்" என்று நிகழ்காலத்தில் கூறுவதால் அப்பல்லவ மன்னனும், சுந்தரரும் சமகாலத்தவர்கள் என்பதை எளிதில் அறியலாம். கழல் என்பது மன்னனுக்கு உரிய அடைமொழி. சிங்கன் என்பது மன்னனின் இயற்பெயர். பல்லவர் களுக்கு, சிங்கன் என்ற பொதுப்பெயரைக் கூறி விட்டபடியால் மீண்டும் ஒருமுறை சிங்கன் என்ற பொதுப் பெயரைக் கூற நியாய மில்லை. எனவே இங்கு சிங்கன் என்று சுந்தரர் குறிப்பது அவர் காலத்தில் வாழ்ந்த பல்லவ மன்னனின் இயற்பெயர் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
திருநாவுக்கரசருக்கும் சம்பந்தருக்கும் காலத்தால் பிற்பட்டவர் சுந்தரர். இப்பிற்பட்ட காலத்தில் சிங்கன் என்று பெயர் தரித்த பல்லவ மன்னன் ஒருவனே ஆட்சி புரிந்தவன். அவன் ராஜசிம்ம னாகிய இரண்டாம் நரசிம்மவர்மன் ஆவான். அவனது காலம் கி.பி. 700 முதல் 728 வரையிலாகும். சுந்தரர் இக்காலத்தில் வாழ்ந்தவர் ஆவர். பின்வரும் ஆய்வும் இக்கருத்துக்குத் துணைநிற்கும்.
ராஜசிம்மன் காஞ்சிபுரத்தில் தன் பெயரால் ராஜசிம்மேஸ்வரம் என்னும் சிவன் கோயிலைக் கட்டினான். அதுவே இன்றைய கைலாச நாதர் கோயில். இக்கோயிலில் இம்மன்னனது கல்வெட்டுகள் வட மொழியில் உள்ளன. மன்னனுக்கு இறைவன் அசரீரியாக உணர்த்தினான் என்று கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. (South Indian Inscriptions - Tamil and Sanskrit - Volume 1 Page 14 Line 7) எண்ணற்ற எதிரிகளைத் துகளாக்கிய இம்மன்னன் சைவ சித்தாந்தப் பாதையில் நின்றவன் என் றும் கூறப்பட்டுள்ளது. இவனது வீரத்தையும், சிவபக்தியையும் கூறும் இவ்வடமொழிக் கல்வெட்டுகள் மிக விரிவானவை. (Above Volume Page 8 to 22) இடமின்மையால் விரிவுக்கு அஞ்சி விடுகின்றேன்.
பெரிய புராணத்தில் கழற்சிங்க நாயனார் புராணத்தில் கூறப் படும் பல்லவனும் வடபுல மன்னர்களை வென்றவன் என்றும், சிவ பக்தி கொண்டு சிவதர்மங்களும் தொண்டுகளும் செய்தவன் என்றும் கூறப்பட்டுள்ளது. அவையாவும் ராஜசிம்மனுடைய கல்வெட்டுகளில் - வடமொழிக் கிரந்தங்களில் விரிவாய்ச் சொல்லப்பட்டுள்ளன.
சுந்தரர் பூசலார் நாயனாரையும் குறிப்பிடுகின்றார். பூசலார் நாயனாரின் வரலாற்றைச் சேக்கிழார் பெருமான் விரிவாக எடுத் துரைப்பார். பூசலார் அவதரித்த திருத்தலம் திருநின்றவூர். அவர் சிவபெருமானுக்குக் கோயிலெடுக்க நினைத்தார். ஆனால் அவரிடம் பொருள் இல்லை. ஆகவே தன் மனத்திலேயே சாத்திர விதிப்படி கோயில் அமைத்தார், மனதில் கட்டியகோயிலுக்குக் கடவுள் மங்கலம் என்னும் மருந்து சாத்துதல், குடமுழுக்கு விழா ஆகியவற்றுக்கு நன்னாள் அமைத்தார்.
இஃது இவ்வாறு இருக்க, காஞ்சிபுரத்தில் பல்லவ மன்னன் கச்சிக் கற்றளி எடுத்தான். இறைவன் திருமேனியைத் தாபிக்கவும் நாள் வகுத்தான். ஆனால் அதற்கு முதல் நாள் இறைவன் மன்னனின் கனவில் தோன்றி "நின்றவூர் பூசல் அன்பன் நெடிது நாள் நினைந்து செய்த நன்றுநீடு ஆலயத்து நாளை யாம் புகுவோம். நீ உன்னுடைய நாளை மாற்றி அமைத்துக்கொள்" என்று அருளினார்.
மன்னனும் மறுநாள் பூசலாரைக் கண்டு வணங்கி இறைவன் கனவில் உரைத்ததைக் கூறினான். பூசலாரும் தாம் மனதில் கோயில் கட்டியதையும், குட முழுக்கு விழாவிற்கு அன்றுதான் நன்னாளாக நினைத்ததையும் கூறினார். மன்னனும் பூசலாரும் இறையருளில் மூழ்கிப் பேரின்பம் அடைந்தனர்.
காஞ்சிபுரத்தில் முதன் முதல் கச்சிக் கற்றளி எடுப்பித்தவன் இராஜசிம்மனே. அவனுக்கு அசரீரியாக இறைவன் உணர்த்தியதாகக் கல்வெட்டும் கூறுகிறது. இவை பூசலார் நாயனார் புராணத்துடன் ஒத்து இருப்பதும் கணிக்கத்தக்கது (S.I.I. XII Introduction page III - 'This is evidently an allusion to Periyapuranam wherein it is stated that the Pallava king was directed to postpone the consecration of this temple so that the Lord might be present elsewhere at a similar ceremony conducted in the mental plane by Saint Pusalar). தொகுத்து நோக்கினால், சுந்தரரும் காஞ்சி கைலாசநாதர் கோயில் கட்டிய இராஜசிம்ம பல்லவனாகிய கழற்சிங்கனும், பூசலார் நாயனாரும் சமகாலத்தவர் என்பதை எளிதில் உணரலாம். எனவே சுந்தரர் காலத்தை கி.பி. 700 முதல் 728 வரை எனக் கொள்ளலாம்.
மாணிக்கவாசகர் காலம்:
நெடுஞ்சடையன் பராந்தகனாகிய முதல்வரகுணன் 786 இல் முடிசூடினான். இவனது கல்வெட்டுக்கள் 43 ஆம் ஆட்சி ஆண்டுவரை கிடைக்கின்றன (S.I.I. XIV No. 41 - Eruvadi Nanguneri Taluk.). எனவே இவனது ஆட்சி 11இல் முடிவடைந்தது. அவ் வாண்டிலிருந்து வரகுணனின் மகனான ஸ்ரீவல்லபனின் ஆட்சி துவங்குகிறது எனலாம். வல்லபன் தனது 18 ஆம் ஆட்சி ஆண்டில் (829) சிங்களத்தை வென்றான் (S.I.I. XIV No. 44 - Erukkangudi Sattur Taluk) செப்பேடுகளும் ஸ்ரீவல்லபனின் சிங்கள வெற்றியைக் குறிப்பிடுகின்றன.
ஸ்ரீ வல்லபனிடம் தோற்ற சிங்களவர் வாளா இருக்கவில்லை. பாண்டிநாட்டின் மீது படையெடுக்க, தக்க சமயத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தனர். இதனைச் சிங்களவர் ஸ்ரீ வல்லபனின் கடைசி காலத்தில் வெற்றிகரமாகச் செய்து முடித்தனர். இச்சரித்திர நிகழ்ச்சி களை இலங்கைச் சரிதமாகிய மகாவம்சம் விரிவாய் எடுத்துரைக்கிறது.
மகாவம்சத்தில் கூறப்படும் செய்தி வருமாறு: இலங்கையில் இரண்டாம் சேனன் கி.பி. 851இல் முடிசூடினான். இவன் காலத்தில் பாண்டி மன்னனின் மகன் ஒருவன் தன் தந்தைக்கு எதிராக கிளர்ச்சி செய்தான். இலங்கை மன்னன் சேனாவின் உதவியை நாடினான். தக்க தருணம் இதுதான் என்று உணர்ந்த இலங்கை மன்னனும் தனது 9ஆம் ஆட்சி ஆண்டில் பாண்டி நாட்டின் மீது படையெடுத்து வெற்றி வாகை சூடினான். மதுரை மன்னன் போர்க்களத்தில் இறந்தான். மன்னனின் மகனைச் சிங்களவர் மதுரை சிம்மாதனத்தில் ஏற்றினர். சிங்கள மன்னன் "மதுரா துனு" என்ற பட்டம் கொண்டான்.
இந்நிகழ்ச்சியின் காலம் கி.பி. 860 என்று மகாவம்சத்தால் அறியலாம். (South Indian Temple Inscription Volume III Part I Pages 37 and 102.). இப்போரில் இறந்தவன் ஸ்ரீ வல்லபனே. இவன் போரில் இறந்தவன் என்னும் செய்தியினைப் பாண்டியர் செப்பேடுகளும் உறுதி செய்கின்றன.
கி.பி. 860இல் மதுரை சிங்காதனத்தை அலங்கரித்தவன் ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லவனின் மகனே ஆவான். இவன் தந்தையோடு முரண் பட்டவன். சிங்களவரின் துணைக்கொண்டு அரசைக் கைப்பற்றியவன். தன் தந்தை போர்க்களத்தில் சிங்களவர்களால் கொல்லப்படுவதற்கும் காரணமானவன். இம்மகன் யார் என்பதை பின்னால் பார்ப்போம்.
பாண்டியர் செப்பேடுகளின்படி ஸ்ரீமாற ஸ்ரீவல்லபனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்ததவன் சடையவர்மனாகிய வரகுணன் மகாராஜன். இவனை இரண்டாம் வரகுணன் என்று சரித்திர ஆய்வாளர் அழைப்பர். இவனது தம்பியின் பெயர் சடையவர்மன் பராந்தகன் வீரநாராயணன் என்பதாகும். அண்ணனும் தம்பியும் தங்கள் பாட்டனார் முதலாம் வரகுணனான நெடுஞ்சடையன் பராந்தகனின் பெயரைத் தரித்துள்ளனர் என்பது ஈண்டு நோக்கத்தக்கது.
இரண்டாம் வரகுணனின் நான்கு கல்வெட்டுக்கள் வானிலைக் குறிப்புக்களைக் கொடுக்கின்றன. அவைகளின் காலத்தைக் கீழே காணும் பட்டியலில் காணலாம்.
இரண்டாம் வரகுணன் காலம் (E.I. XXVIII No. 6; E.I. XXXII No. 41)
ஊர்க்கல்வெட்டு காலக்குறிப்பு சமமான கிறித்துவ எண் ஆண்டு
1. அய்யம்பாளையம் ஆட்சிஆண்டு 8 கி.பி. 870 மார்ச்
705/1905 சகவருடம் 792 மாதம் 22 ஆம்
தேதி முதல் 871
மார்ச் மாதம் 21
ஆம் தேதி வரை
இடைப்பட்ட
காலம்
2. திருவெள்ளறை ஆட்சிஆண்டு 13 14 ஆம் தேதி
84/1910 விருச்சிக மாதம் நவம்பர் மாதம்
அச்வதி நக்ஷத்திரம் 875
திங்கட்கிழமை
3. சவந்தினாதபுரம் ஆட்சி ஆண்டு 13 5 ஆம் தேதி
104/1947 தனுர் மாதம் டிசம்பர் மாதம்
அவிட்டம் திங்கட் 875
கிழமை
4. லால்குடி ஆட்சி ஆண்டு 13 6 ஆம் தேதி
121/1929 தனுர்மாதம் சதயம் டிசம்பர் மாதம்
செவ்வாய்க்கிழமை 875
திருவெள்ளறை, சவந்தினாதபுரம், லால்குடி ஆகிய ஊர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ளவை. இக்கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் வரகுண மகாராஜர் தனது அதிகாரியான அண்ட நாட்டு வேளான் என்பவனிடம் நிதி அளித்து கோயில்களில் நிசதம் விளக்கு எரிக்க நிவந்தங்கள் ஏற்படுத்தியதாகச் சொல்லப்பட்டுள்ளது. (S.I.I. XIV; E.I. XXVIII No. 6) சவந்தினாத புரத்துக் கல்வெட்டின் நாளுக்கு மறுநாள் லால்குடி கல்வெட்டின் நாளாக அமைவதையும் நோக்கவேண்டும்.
இக்கல்வெட்டுக்களின் காலங்களைப் பின்னோக்கிக் கணித் தால் இரண்டாம் வரகுணன் கி.பி. 863இல் மார்ச் மாதத்திற்கு பிறகு, நவம்பர் மாதத்திற்கு முன் ஏதோ ஒரு நாளில் முடிசூடினான் என்பதை அறியலாம். அதாவது இரண்டாம் வரகுணன் முடிசூடியது கி.பி. 863 ஆகும். இம்மன்னனின் திருநெய்த்தானத்து கல்வெட்டு யாண்டு 4இல் செதுக்கப்பட்டது. (S.I.I. V. No. 608) இதன் காலம் 866-67. வரகுண மகாராஜன் என்னும் பெயர் கொண்ட திருவிளக்கு ஒன்று எரித்த கோன்பராந்தகன் என்பது வரகுணனின் தம்பியே. இதனால் இவ்விருவரும் ஒற்றுமையாக இருந்தனர் என்பதை நன்கு அறியலாம். கோன் என்ற அடைமொழி கொடுக்கப்பட்டதால் தம்பியாகிய பராந்தகன் 866இல் முடிசூடியிருக்கவேண்டும் என்று கொள்ளலாம். அதாவது அண்ணனே தன் தம்பிக்கு இளவரசுப்பட்டம் கட்டி வைத்தான்.
இச்சரித்திர நிகழ்ச்சிகளைக் கோர்வையாகப் பார்த்தால் ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபனுக்கு மூன்று மகன்கள் இருந்தனர் என்பதை நன்கு அறியலாம். சிங்களவர் உதவிகொண்டு கி.பி. 860 இல் மதுரையில் சிம்மாதனம் ஏறிய மகன் வெகுநாள் ஆளவில்லை. மூன்று ஆண்டுகளில் அவனை வரகுணன் விரட்டி விட்டான். பின்பு தனது தம்பியையும் உடன் சேர்த்துக்கொண்டு நெடுநாள்கள் அரசு புரிந்தான்.
860க்கும் 863க்கும் இடைப்பட்ட காலத்தை முக்கியமாகக் கவனிக்கவேண்டும். இக்காலத்தில் சிங்களவர்களால் மதுரை சிம்மாதனத்தில் வைக்கப்பட்டவன் யார்? அவனை விரட்டிவிட்டு, வரகுணன் எவ்வாறு தனது ராஜ்யத்தைப் பெற்றான் இவ்வினாக்களுக்கு உரிய விடைகளைத் திண்டுக்கல் வட்டத்தில் உள்ள பெரும்புல்லி என்னும் ஊரிலிருந்து கிடைக்கும் கல்வெட்டும் (E.I. XXXII No. 31) பாண்டிய குலோதயா என்னும் வடமொழி சரித்திர வரலாற்றுக் காவியமும் அளிக்கின்றன.
சிங்களவரை விரட்டினால்தான் மதுரையை மீட்கமுடியும் என்பதை வரகுணன் உணர்ந்து செயல்பட்டான். பெரும்புல்லிக் கல்வெட்டில் பாண்டியருக்கும், சிங்களவருக்கும் நடந்த போர் நிகழ்ச்சி சொல்லப்படுகிறது. இப்போரில் பள்ளி வேளான் நக்கன் புல்லன் என்பவன் வரகுணனுக்கு உதவியாக இருந்து சிங்களவரை வென்று, வரகுண மகாராஜருக்குப் பணி பலவும் செய்தான் என்று கூறப்படுகிறது. வரகுணன் தனது ஆட்சியை 863 இலிருந்து கணக்கிடுவதால் அப்போர் அந்த ஆண்டிலேயே நடந்திருக்க வேண்டும்; மதுரையில் இருந்த சகோதரனும் அவ்வாண்டிலேயே விரட்டப்பட்டு இருக்க வேண்டும்.
பாண்டிய குலோதயா என்னும் வடமொழிக் காவியம் தெரிவிக்கும் அரிய செய்தி ஒன்றைக் காண்போம். (Pandya Kulodaya Edition 1981 - Page 50 Introduction - Pages 194 and 20 of English Translation - Edited by Dr. K.V. Sarma - Published by Institute of Sanskrit and Indological Studies of Punjab University Hoshiarpur. When Dr. K.V. Sarma was editing the manuscript, I had the rare opportunity of associating myself with his research in identifying the historical characters referred to in the poem. I am indebted to Dr. K.V. Sarma who has also acknowledged in the book, my humble service.) வரகுணனுடைய சகோதரன் இராஜ்யத்தைப் பிடுங்கிக்கொண்டு வரகுணனைத் துரத்தி விட்டான். மனமுடைந்த வரகுணன் காடுகளில் அலைந்து திரிந்து கடைசியில் திருவாதவூர் அடைந்தான். அங்குச் சிறந்த சிவபக்தராக விளங்கியவரும் பல கலைகள் சாத்திரங்கள் அறிந்தவருமாகிய வாதபுரி நாயகர் என்னும் அந்தணரை அடைந்தான். அவருடைய அருள் ஆசியால் வரகுணன் தன் சகோதரனை மதுரையிலிருந்து துரத்திவிட்டு, பாண்டி மண்டலத்தை ஆளத்துவங்கினான். வாதபுரி நாயகர் என்று இங்கே கூறப்படுபவர் மாணிக்கவாசகரே ஆவர். மாணிக்கவாசகர் தொடர்பான மற்ற செய்திகளையும் பாண்டிய குலோதயா நன்கு விளக்குகிறது. நரியைப் பரியாக்கியது ஆகிய செய்திகளும் சொல்லப்டுகின்றன. மாணிக்கவாசகர் வரகுணனுக்கு மந்திரியாக இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
எனவே கி.பி. 863இல் மாணிக்கவாசகர் சாத்திரங்கள் பல அறிந்த சிவனடியாராக இருந்தார் என்பதையும், பின்பு பல ஆண்டுகள் வரகுணனுக்கு மந்திரியாகவும் இருந்தார் என்பதையும் அறிகிறோம்.
வரகுணன் தனது தம்பி பராந்தக வீரநாராயணனுக்கு கி.பி. 866இல் முடி சூட்டி வைத்தான் என்பதை முன்பே கண்டோம். பராந்தகனின் தளவாய்புரச் செப்பேடு மன்னனின் 45ஆம் ஆட்சி ஆண்டில், கி.பி. 911 இல் அளிக்கப்பட்டது. (பாண்டியர் செப்பேடு பத்து - தளவாய்ப்புர சாசனம்.)
இதில் பராந்தக வீரநாரயணன் தன் அண்ணன் வரகுணனை எம்கோ என்றும், சிறந்த சிவபக்தன் என்றும் கூறுகிறான். வரகுணன் தவத்தை மேற்கொண்டு இனிதிருக்கும் நாளில் இச்சாசனத்தை வெளி யிட்டதாகத் தம்பி பராந்தகன் கூறுகிறான்.
"எம்கோ வரகுணன் பிள்ளை பிறைச் சடைக்கணிந்த பினாக பாணி எம்பெருமானை
உள்ளத்தில் இனிதிருவி உலகம் காக்கின்ற நாளில் ......"
என்பது செப்பேடு வாசகம். இச்செப்பேடு வழங்கிய காலத்தில் வரகுணனும் உயிருடன் இருந்தனன் என்பதை அறியலாம். இச்செப் பேட்டில் பராந்தக வீரநாராயணன் வேறு ஒன்றையும் சொல்கிறான். அதாவது, வரகுணன் அண்ணன்; அவன் சிவதர்மத்தில் ஈடுபட்டவன். அவன் உலகத்தைக் காத்து வருகின்றனன். செப்பேட்டை வழங்கும் பராந்தக வீரநாராயணன் அக்களநிம்மிடி வயிற்றில் பிறந்தவன். பராந்தகன் தனக்குமுன் பிறந்தவனைச் செந்நிலத்தில் தோற்கடித்தான். இதனால் வரகுணனின் தாயும், பராந்தகனின் தாயும் வேறாவர் என்பதை எளிதில் உணரலாம். பராந்தகனால், தோற்கடிக்கப்பட்டவன் வரகுணனாக இருக்க வாய்ப்பு இல்லை. எனவே அவன் வேறு ஒருவளின் மகன் என்பதையும் நன்கு அறியலாம். தொகுத்து நோக்கினால் ஸ்ரீ வல்லபனுக்கு மூன்று மனைவிகள் இருந்தனர்; மூத்தவளின் மகன் வரகுணன்; இளையவளின் மகன் ஒருவன்; மூன்றாமவளின் மகன் பராந்தக வீரநாராயணன் ஆவான் என்னும் உண்மைகள் புலப்படும்.
பட்டத்து அரசியான மூத்தவளின் மகன் வரகுணன் வயதில் சிறியவனாகவும் இளையவளின் மகன் வயதில் பெரியவனாகவும் இருந்திருக்கலாம். பட்டத்து அரசியின் மகனே முடிசூட வேண்டும் என்று தந்தை நினைத்திருக்கலாம். இதனைப் பொறாத இளையவளின் வயிற்றில் பிறந்தவன் - வயதில் பெரியவன் - சிங்களவர்களுடன் சேர்ந்து துரோகச் செயலில் ஈடுபட்டான் எனலாம். இத்துரோகச் செயலில் ஈடுபட்டவனின் பெயர் வீரபாண்டியன். இதனைக் கொடும்பாளூரில் வாழ்ந்த பூதிவிக்கிரம கேசரியின் கல்வெட்டால் அறியலாம். பூதிவிக்கிரம கேசரியும், வரகுணனும், பராந்தகனும் சமகாலத்தவர்கள். நண்பர்கள். பூதிவிக்கிரமகேசரி வீரபாண்டியனைத் தோற்கடித்ததாகக் கொடும்பாளூர் கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ளது. (S.I.I. XIX Introduction S.I.I. XXIII Introduction S.I.I. XXXIII - 129; K.V. Subramaniya Iyer - Quarterly Journal of Mythic Society Volume XLIII Nos. 3 and 4.) அந்த வீர பாண்டியன் வரகுணனின் சகோதரன் என்பதைச் சரித்திர நிகழ்ச்சிகள் துணைக்கொண்டு அறிகிறோம்.
மாணிக்கவாசகர் இரண்டாம் வரகுணன் காலத்தில் வாழ்ந்தவர் என்று வரலாறு சுட்டுகிறது. முதல் வரகுணன் (768-811) குரு சரிதம் கொண்டாடிய பரம வைணவனாவான். அவன் பேரனான இரண்டாம் வரகுணன் (863-911) சிறந்த சிவபக்தன் என்பதைப் பாண்டியர் செப்பேடுகளும், மாணிக்கவாசகரின் திருக்கோவையாரும், பட்டினத்து அடிகளின் பாடல்களும், பாண்டிய குலோதயா வடமொழிக் காவியமும் உறுதி செய்கின்றன. மாணிக்கவாசகர் "வரகுணனாம் தென்னவன் ஏத்தும் சிற்றம்பலம்" என்றும், "சிற்றம்பலம் புகழும் மயல் ஓங்கு இருங்களியானை வரகுணன்" என்றும் நிகழ்காலத்தில் வரகுணனைப் பற்றித் திருக்கோவையாரில் கூறுவது ஆய்வுக்கு அணி கூட்டுகிறது.
திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் வாழ்ந்த காலத்தில் தில்லை நடராஜப்பெருமான் ஆலத்திற்குள் திருமாலுக்கு என்று திருமேனி இல்லை. தேவாரங்களில் தில்லையில் திருமால் வழிபாடு இருந்ததாகக் கூறப்படவில்லை. பிற் காலத்தில் நந்திவர்மன் காலத்தில் தில்லைத் திருச்சித்திர கூடம் எடுக்கப்பட்டது.
இராஜசிம்மன் என்னும் இரண்டாம் நரசிம்மவர்மனின் மூத்த மகனாகிய மூன்றாம் மகேந்திரவர்மன் இளமையில் இறந்தான். இரண்டாம் நரசிம்மவர்மன் 728 இல் காலமானான்.அவனது இரண்டாம் மகனான பரமேஸ்வரவர்மன் சில ஆண்டுகளே ஆட்சி புரிந்து மறைந்தனன். பரமேஸ்வரவர்மனுக்கு வாரிசுகள் இல்லாததால், பல்லவரின் கிளையில் வந்த நந்திவர்மன் கி.பி. 730 இல் பன்னிரண்டாவது வயதில் முடிசூட்டப்பட்டான். இவன் 65 ஆண்டுகள் ஆட்சிபுரிந்து 795 இல் மறைந்தனன்.(See Note 9 above.) நந்திவர்மனின் காலத்தில் வாழ்ந்தவர்கள் திருமங்கை ஆழ்ழாரும், குலசேகர ஆழ்வாரும் ஆவர்.
வைணவர்களின், குருபரம்பரை, திருமுதியடைவு ஆகியவை களின் கூற்றுப்படி திருமங்கையாழ்வார் கி.பி. 776 இல் அவதரித்தவர். குலசேகர ஆழ்வார் கி.பி. 767 இல் அவதரித்தவர். (For the dates of Alwars - See Swamikannu Pillai, Indian Ephemeris Volume I Part I Page 489.)
கும்பகோணம் அருகே உள்ள நாதன் கோவில் என்னும் திருமால் தலம் நந்திவர்மனால் எடுப்பிக்கப்பட்டு நந்திபுர விண்ணகரம் என்று அழைக்கப்பட்டது. "நந்தி பணிசெய்த நகர் நந்திபுர விண்ணகரம்" என்று திருமங்கை ஆழ்வாரும் மங்களா சாசனம் செய்து அருளினர். தில்லைத் திருச்சித்திர கூடத்தில் பல்லவ மன்னன் திருமாலை எழுந்தருள்வித்தான்.
"பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து
புடைமன்னவன் பல்லவர் கோன் பணிந்த
செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த
தில்லைத் திருச் சித்திர கூடம்"
என்று திருமங்கையாழ்வாரால் அருளப்பட்டது. எனவே தில்லைத் திருச்சித்திர கூடத்தில் திருமாலை எழுந்தருள்வித்தவன் நந்திவர்மனே (730-795) என்னும் செய்தி உறுதிப்படுகிறது.
"தில்லை நகர்த் திருச்சித்திர கூடந் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த ....."
என்று குலசேகர ஆழ்வாரும் தில்லைத் திருமால் மீது பாடியிருப்பதும் கணிக்கத்தக்கது. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தில்லையில் திருமாலின் திருமேனி வைக்கப்பட்டது என்னும் இச்செய்தி மிக முக்கியமானது.
திருமங்கையாழ்வாருக்கும், குலசேகர ஆழ்வாருக்கும் காலத்தால் பிற்பட்டவர் மாணிக்கவாசகர். தில்லையில் திருமாலின் திருக் கோலத்தைத் திருக்கோவையாரில் மாணிக்கவாசகர் குறிப்பதும் நம் ஆய்வுக்குத் துணை நிற்கும். "வரங்கிடந்தான் தில்லையம்பல முன்றிலில் அம் மாயவனே" என்பது மாணிக்கவாசகரின் அருள் வாக்கு.
வரகுணன் - சிவபக்தன்:
863 இல் முடிசூடிய வரகுணன் சோழநாட்டை வென்றான். வரகுணனின் கல்வெட்டுகள் திருநெய்த்தானம், திருக்கோடிக்காவல், திருக்காட்டுப்பள்ளி, கும்பகோணம், ஆடுதுறை, திருவிசலூர் ஆகிய ஊர்களில் காணப்படுகின்றன. கி.பி. 885இல் நடந்த திருப்புறம்பியப் போரில் வரகுணன் தோல்வி அடைந்தான். பல்லவரும், சோழரும் வெற்றி அடைந்தனர். வரகுணன் இராச்சிய பாரத்தைத் தனது தம்பி பராந்தக வீரநாராயணனிடத்து ஒப்படைத்து விட்டுச் சிவதர்மத்தில் மூழ்கினான்.
வரகுணனுக்கு வாரிசுகள் இல்லைபோலும். பராந்தக வீர நாராயணன் 911இல் இறக்கவே அவன் மகன் ராஜசிம்மன் பாண்டி மன்னன் ஆனான். இவன் 931 வரை அரசாண்டான். பின்பு சோழர் களுக்குப் பயந்து ராஜசிம்மன் சிங்களத்துக்கு ஓடிவிட்டான்.
ராஜசிம்மனுக்கு ஆண்மக்கள் இருவர் இருந்தனர். ஒருவன் சுந்தரபாண்டியன். மற்றவன் வீரபாண்டியன். சுந்தரன் இளமையில் இறந்தனன். அவன் பெயரில் ஒரு பள்ளிப்படைக் கோயில் கட்டப் பட்டது. (S.I.I. XIV Pallimadam inscriptions) வீரபாண்டியன் 938 முதல் 959 வரை மதுரையில் அரசு புரிந் தான். 944 இல் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் போர் நடந்தது. வீரபாண்டியன் சோழமன்னன் முதல் பராந்தகனின் மகனான உத்தம சீலியைக் கொன்றதால் "சோழன் தலைகொண்ட வீரபாண்டியன்" என்று அழைக்கப்பட்டான். சோழர்களும் வாளாயிருக்கவில்லை. கி.பி. 959இல் நடந்த போரில் சுந்தர சோழனின் மகனாகிய ஆதித்ய கரிகாலன், வீரபாண்டியனைக் கொன்றான். "வீரபாண்டியன் தலை கொண்ட பரகேசரி" என்றும் அழைக்கப்பட்டான் (For these Historical accounts see N.Sethuraman's "Early Cholas" edition 1980.) கொலையும், சண்டையும், சச்சரவும் நமக்கு எதற்கு? ஆகவே இவ்வாராய்ச்சியை இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.
நால்வர் காலம் - ஆய்வின் சாரம் :
திருநாவுக்கரசர் - 580-660
திருஞானசம்பந்தர் - 640-656
சுந்தரர் - 700-728
மாணிக்கவாசகர் - 863 இல் பல சாத்திரங்கள் அறிந்த சிறந்த சிவனடியாராகத் திகழ்ந்தவர். 863க்குப்பின் இரண்டாம் வரகுணனிடம் அமைச்சராகப் பணியாற்றியவர்.
Source:
Thevaram, Second Edition, Dharmapuram Adheenam
Credits & sincere thanks to http://thevaaram.org
சைவம் போற்றும் நால்வர் காலம் - ஆராய்ச்சிக் கட்டுரை - குடந்தை ந. சேதுராமன்
Posted by நா. கணேசன் at 2 comments
திருவள்ளுவர் தூக்குத் தண்டனையை வலியுறுத்துகிறாரா? - நாமக்கல் கவிஞர் விளக்கம்
பாரதியார் மறைவுக்குப் பின்னர் பாரதியார் புகழைப் பாடிக்கொண்டே இருந்தவர்களுள் மிக முக்கியமானவர் நாமக்கல் கவிஞர் ஆவார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பலமுறை சிறை சென்றவர், தமிழ்நாட்டின்
அரசவைக் கவிஞராக விளங்கியவர். இன்று நாமக்கல் கவிஞரைப் பற்றிப் பேசுபவர்கள் மிகவும் அரிது. கம்பனையும், வால்மீகியையும் ஒப்பிட்டு நூல்கள் எழுதினார். திருக்குறளுக்கு ஓர் அரிய உரையை எழுதினார். கவிஞரின் உரை பலராலும் பாராட்டப்பட்ட உரை. அவரது ‘என்கதை’ தமிழின் தன்வரலாற்று நூல்களில் சிறந்த ஒன்று. உவேசா, கோவை அய்யாமுத்து போன்றோர் எழுதிய ஆட்டோ-பயாகிராபிகள் போல, ‘என் கதை’ படித்தால் நினைவில் என்றும் நிற்கும். பாரதியின் 90-ஆம் நினைவுதினம் இன்று. சென்னை பாரதி சங்க விழாவில் 1956-ல் தலைமையேற்றுப் பாரதியார் பற்றி நாமக்கல் கவிஞர் ஆற்றிய உரை கற்போம்:
http://ilakkiyapayilagam.blogspot.com/2011/08/90_26.html
தமிழ்நாட்டில் இப்பொழுது சூடு பறக்கும் விவாதங்களில் ஒன்று. அரசாங்கம் தூக்குதண்டனையை நிறைவேற்ற வேண்டுமா? நீக்கவேண்டுமா? என்பதாகும். சுப்ரீம் நீதிமன்ற நீதிபதிகள் - கிருஷ்ணையர், பகவதி போன்றோர், நாகரீகம் அடைந்த நாடுகளைப்போல இந்தியாவிலும் அரசாங்கம் தூக்குதண்டனையை முழுதுமாக ரத்து செய்தல் வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். ’ஒன்றாக நல்லது கொல்லாமை’ என்ற வள்ளுவர் உள்ளத்தை ’இது துறவிகளுக்கு மாத்திரம்’ என்று கொள்ளமுடியாது. ராஜநீதியில் மனிதர்களைக் கொல்லலாம் என்று துறவிகள் ஒருமித்து சிங்கள ராஜாங்கத்திற்கு அறிவுரை தந்துவந்ததால் பல லட்சம் தமிழர்கள் ஈழத் தீவில் உயிர்ப்பலி ஆன கொடுமையை அண்மையில் உலகம் கண்டது. உதாரணமாக, புதியதலைமுறை டிவியில் சுப்பிரமணியன் ஸ்வாமிக்கும், சுப. வீரபாண்டியற்கும் நடந்த தருக்கம் பாருங்கள்:
திருவள்ளுவர் சமண சமயம் சார்ந்தவர் என்று விளக்கி எழுதும்போது குறள் 550-ன் பொருளை உணர்ந்து எழுதியவர் நாமக்கல் கவிஞர் என்று பல ஆண்டுகளுக்கு முன்னமே குறிப்பிட்டுள்ளேன். குறள் 550 மரண தண்டனையை ஆதரிப்பதன்று. பரிமேலழகர் தரும் பொருளை விலக்கிவிட்டு, நாமக்கல்லார் போன்ற கவிஞர்கள் சொல்லும் உரையை நடைமுறையாக்க இந்தியா முன்வர வேண்டும். உலகுக்கே பிற உயிர்கட்கு தீங்கு செய்யாமையைப் போதித்த சமணர் வழிவந்த திருக்குறள் மரணதண்டனையை விலக்கும் வழியைக் காட்டும் ஒளிவிளக்கு. நாகரீகமான நாடுகள் யாவும் மரண தண்டனையை விலக்கி வருவது வள்ளுவருக்கு உவப்பான வளர்ச்சி.
குறள் 550
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்
பரிமேலழகர் கூற்றின்படி:
Couplet 550
By punishment of death the cruel to restrain,
Is as when farmer frees from weeds the tender grain
If this is the meaning by Valluvar, he would have written kuRaL 550 this way:
"கொலையில் கொடியாரை *வேந்துகொல்லல்* பைங்கூழ்
களைகொல் வதனொடு நேர்"
வள்ளுவர் உள்ளம் தெளிவிக்கும் நாமக்கல் கவிஞர் உரை:
"550. கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்
களைகட்டதனோடு நேர்.
பதவுரை: கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களை கட்டதனோடு நேர் = கொலை செய்யும் கொடியவர்களை அரசன் அப்புறப்படுத்துவது பயிர்களுக்குக் களை பறிப்பதோடு ஒத்தது.
பொழிப்புரை: கொலை செய்யும் பாதகர்களை அரசன் அகற்றி விடுவது, பயிர்களைக் களையெடுப்பதற்குச் சமானம்.
விளக்கம்: "வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்தல்" என்று வலிந்து பதங்களைச் சேர்த்து 'கொடியவர்களை எல்லாம் கொன்ற்விடவேண்டும்" என்று பொருள் கொள்ளுவது திருவள்ளுவர் கருத்துகளுக்கு முற்றிலும் விரோதமானது. மேலும் தீவைப்பவர் , விஷம் கொடுப்பவர், ஆயுதங்களால் கொலை செய்பவர், பிறர் மனைவியிடம் விபசாரம் செய்பவர் ஆகிய இவர்களெல்லாம் கொன்றுவிடத்தக்க கொடியார் என்று குறிப்பது திருக்குறளின் பெருமைக்குத் தீங்கானது. கொலை செய்தவனைக் கொன்றுவிடுவதில் குற்றமில்லை என்று சொல்லவும் கூசி 'கொன்றுவிடுதல்' என்பதைச் சொல்லாமல் 'ஒறுத்தல்' என்று சொல்லுகிறார். 'ஒறுத்தல்' என்பது 'கொல்லுவது' என்பது அல்ல. சமயோசிதம் போல் 'தண்டிப்பது' என்ற பொருளே தருவது. கொலைக்குக் கொலை சரியான தண்டனை என்று சொல்லவும் கூசினார் என்பதை அனுமானிக்க இடமிருக்கிறது. ஆதலால், 'வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்து' என்று பதங்களைக் கூட்டிக் கொன்றுவிடத்தான் வேண்டும் என்று பொருள் கொள்ளுவது திருவள்ளுவருடைய கருத்தாக இருக்க முடியாது. 'களையெடுப்பது' என்ற உவமானத்திலும்கூட, களைகளைப் பயிர்களுக்கிடையிலிருந்து அப்புறப்படுத்துவது காரியமேயல்லால் அவற்றை அழிக்க வேண்டுமென்பது காரியமல்ல. பிடுங்கி எறியப்பட்ட களை பயிரில்லாத வேறு இடத்தில் விழுந்து அங்கே உயிரோடிருந்து விடுவதைப் பற்றிக் களைபறித்தவன் கவலைப்பட மாட்டான்."
(பக். 290, திருக்குறள் - நாமக்கல் கவிஞர் உரை, 2004, பூம்புகார் பிரசுரம்).
இன்றும், பல உலக நாடுகள் கொலை தண்டனையை ரத்து செய்துவருகின்றன என்பது நல்ல செய்தி. நாமக்கல் கவிஞர் சொல்வதுபோல் கொலையிற் கொடியாரைத் தண்டிக்க/ஒறுத்தல் வேண்டும். மனிதகுல வளர்ச்சிக்கு அதுவே உதவும்.
கொல்லுதல், வன்முறை அரசாங்கம் கையில் எடுத்துவிட்டால் என்ன நடக்கும் என்று பல நாடுகளில் பார்க்கலாம். தனியாக புத்த பிக்ஷுக்கள் கொல்லமாட்டார்கள், ஆனால் அவர்கள் கூடி வழிநடத்தும் சிங்கள அரசு கொல்லலாம் என்ற கொள்கைதான் இலங்கையில் தமிழ் இனப்படுகொலைக்கு மூல காரணம்.
இக்குறளில், சூட்சுமமே கட்டுதல் என்ற சொல்லில் வள்ளுவர் வைத்துள்ளார் எனக் கருதுகிறேன்.
கட்டல் என்பதைத் தமிழ்ச் சொல்லாகப் பார்த்தால் நாமக்கல்லார் உரை பொருள் வருகிறது. கட்டு (மாடு கட்டுதல், தாலி கட்டுதல் (கால்கட்டு), கட்டுப்பாடு ... ) போல.
ஆனால், கட்டல் என்பதை இந்தோ-ஐரோப்பியச் சொல்லாக (VaLLuvar's word, kaTTa in KuRaL 550, as a cognate with IE words like "cut" in English) பார்த்தால் வெட்டு, நீக்கு, கொல் என்ற பொருள் வரும். கர்த்தரி (கத்தரி) -rt- will turn to -T- in Prakrit.
வள்ளுவர் கூறும் குறள் 550 வழி அரசாங்கம் நடக்கட்டும்,
நா. கணேசன்
அண்ணா, நாமக்கல் கவிஞர், கவிமணி தேவி, உடுமலை நாராயண கவி - கவிமணியின் இல்லத்தில்.
இன்றைய செய்தி:
”தமிழ்நாட்டில் மரண தண்டனையே தேவையில்லை என்றுதான் கோருகிறோம். உலகில்
147 நாடுகளில் 117 நாடுகளில் மரண தண்டனை அறவே ஒழிக்கப்பட்டுள்ளது. ”
”மரண தண்டனையை அடியோடு ஒழிக்க வேண்டும். அரசியல் சட்டத்தில் இருந்து மரண
தண்டனை என்பதையே நீக்க வேண்டும்” என்று பேசினார் பழ.நெடுமாறன்.
குறள் 550-உம் பிற திருக்குறள்களும் - ஓர் ஒப்பீட்டாய்வு:
குறள் 328:
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை
என்னும் வள்ளுவரா கொலைத்தண்டனை கொடுக்கச் சொல்வார்? செந்தமிழ் மரபில் வள்ளுவர் போல இன்னொரு பெரிய சமண ஆசிரியர் இளங்கோ அடிகள். இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில் குற்றம் ஒன்றும் செய்யாத கோவலன் அரசனது ஆணை மேற்கொண்டு பொற்கொல்லனால் கொலைத்தண்டனை அனுபவிப்பதில் நிரபராதிகள் கொல்லப்படுவதைக் காட்டி உள்ளார். தூக்குதண்டனைக்கு எதிராகக் குரலெழுப்பவே கோவலன் அநியாயமாகக் கொல்லப்படுவதாகத் தாம் எழுதிய காப்பியத்தில் படைத்துள்ளார். கொலைத்தண்டனை அக்காலத்தில் இருந்தது என்பதற்காக, இளங்கோ அடிகள், திருவள்ளுவர் போன்றவர்கள் அதனை ஆதரித்துப் பரிந்துரை செய்தார்கள் என்பது அவர்களில் மனிதநேயத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகும். இளங்கோவின் குரல் தூக்கு தண்டனையின் அபாயத்தைக் காட்ட எழுந்த குரல். கோறலை நீக்கி, கடுந்தண்டனை கொடுக்க வள்ளுவர் பரிந்துரைக்கிறார் என்றால்தான் மற்றத் திருக்குறள்களோடு பொருள் இயையும் என்பது வெள்ளிடைமலை.
குறள் 321:
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.
குறள் 325:
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.
குறள் 327:
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.
குறள் 330:
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
கொலை தண்டனை ஒரு நாட்டில் கொலைகளைக் குறைப்பதில்லை, நிறுத்துவதுமில்லை. கனடா நாட்டில் கொலைதண்டனையை நீக்கிய பின்னர் கொலைகள் குறைந்துள்ளன என்று அரசாங்கப் புள்ளிவிவரங்கள் அறிவிக்கின்றன.
குறள் 202
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
Posted by நா. கணேசன் at 3 comments