இந்திய அரசாங்கம் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தந்த ராபெர்ட் கால்ட்வெல் பாதிரியாரின் தபால்தலையை மே 7, 2010 அன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளது. அதற்கு முன்னரே திராவிட மொழிக் குடும்பக் கோட்பாடு அளித்தவர் ஃபரான்சிஸ் வைட் எல்லிஸ் ஆவார். எல்லிஸ் சிறுவயதில் நஞ்சுணவை உண்டு மாய்ந்ததால், நூல் எழுதவில்லை. 1856-ல் எல்லிஸ் தொடங்கிய பணியைக் கால்டுவெல் பாதிரியார் (மே 7, 1814 - ஆகஸ்ட் 28, 1891) தனிநூலாகச் செப்பமுடன் எழுதி வெளியிட்டார்.
திசையன்விளை அருகுள்ள இடையன்குடி என்ற வெப்பம் மிகுந்த ஊரில் 50 வருடங்கள் வாழ்ந்து கால்டுவெல் ஐயர் கிறிஸ்து சமயத்தைப் பரப்பினார். அந்தக் கிறித்துவ மிஷனரி தொண்டூழியம் பற்றிய விரிவான திரைப்படம்:
கால்டுவெல் 19-ம் நூற்றாண்டில் த்ரவிட என்பது திரமிட என்றாகி அது பின்னர் த்ரமிள ஆகத் திரிந்து பின்னர் தமிள, தமிழ் என்று ஆனது என்றார். 100 ஆண்டு சென்றபின்னர் இதனை மறுத்து, தமிழ் என்பதே திரமிடம், திராவிடம் என்றானது என்று மொழியியல் அறிஞர் சுவெலபில் போன்றோர் எழுதினர். திராவிடம் என்பது தமிழைக் குறிக்கும் பெயரே என்பதைக் கால்டுவெல் கூறுகிறார். தமிழை மட்டும் குறிக்க தமிழ் என்னும் சொல்லையும், தமிழையும் அதன் கிளை மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்றவற்றையும் குறிக்க ‘திராவிடம்’ என்னும் சொல்லையும் தான் பயன்படுத்துவதாகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.(மேலது பக். 8). தமிழ் என்ற சொல்லுக்கான சமஸ்கிருதச் சொல் ‘திராவிட’ என்றும், அச்சொல் திராவிடர் என்று அழைக்கப்படும் மக்கள் வாழும் நாட்டையும், அவர்களது மொழியையும் குறிக்கும் என்றும் கால்டுவெல் குறித்தார். (மேலது பக். 12, கவிதாசரண் வெளியீட்டில் உள்ள பக்க எண்கள்).
மேலும் ஆராய,
Y. V. Kumaradoss,
Robert Caldwell, a scholar-missionary in colonial South India
Delhi : ISPCK, 2007
ரா. பி. சேதுப்பிள்ளை, கால்டுவெல் ஐயர் சரிதம்,
1936: ஹிலால் பிரஸ், நெல்லை
1964: பழனியப்பா பிரதர்ஸ்
Minatcicuntaram, Ka.,
Contribution of European scholars to Tamil
University of Madras, 1974 (Tamil translation: 2003).
எல்லீசன் என்றொரு அறிஞன் - ஆ.இரா. வேங்கடாசலபதி
http://www.kalachuvadu.com/issue-89/varalaru.asp
கால்டுவெல் என்ற மனிதர் - தொ. பரமசிவன்
http://www.keetru.com/maatruveli/nov08/tho_paramasivan.php
கால்டுவெல்: பின்காலனிய வாசிப்பு - அ. மங்கை
http://www.keetru.com/maatruveli/nov08/a_mangai.php
கால்டுவெல் என்னும் சிக்கல் - எம். வேதசகாய குமார்
http://www.keetru.com/maatruveli/nov08/vedhasakayakumar.php
கால்டுவெல்லின் திராவிடம்: ஒரு வாசிப்பு -வ. கீதா
http://www.keetru.com/maatruveli/nov08/Va_Geetha.php
M.S.S. Pandian, Non-Brahmin: Genealogies of the Tamil Political Present, Delhi, 2007.
http://muelangovan.blogspot.com/2007/04/1814-1891.html
2009 கிறிஸ்துமஸ் தினத்தன்று முதல்வர் கருணாநிதி தமிழைச் செம்மொழி ஆக்கும் திருப்பணியைத் துவக்கிய கால்டுவெல்லையும், பின்னர் கரந்தைத் தமிழ்ச் சங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் பற்றி முரசொலியில் எழுதியுள்ளார்.
அறிக்கை:
தமிழ்மொழி செம்மொழியென முதல் குரல் கொடுத்த தமிழர் பரிதிமாற் கலைஞர் என்றால்; தமிழ்மொழி செம்மொழியென்று முதலில் சொன்ன வெளிநாட்டவர் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் ஆவார்.
பரிதிமாற் கலைஞர் தமிழ்மொழி செம்மொழியென 1887-ம் ஆண்டு குரல் கொடுத்ததற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே, 1856-ம் ஆண்டு அறிஞர் கால்டுவெல், தாம் எழுதிய "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற ஒப்புவமை காண்பித்திட இயலாத, உயர்பெரும் நூலில், "திராவிட மொழிகள் அனைத்திலும், உயர் தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களை அறவே ஒழித்துவிட்டு உயிர் வாழ்வதோடு அவற்றின் துணையை ஒருசிறிதும் வேண்டாமல் வளம் பெற்று வளர்வதும் இயலும்.
செந்தமிழ் என்றும் தனித்தமிழ் என்றும் சிறப்பிக்கப் பெறுவதும், பெரும்பாலும் அம்மொழி இலக்கியங்கள் அனைத்தையும் எழுதப் பயன்படுவதுமாகிய பழந்தமிழ் அல்லது இயல்தமிழ், மிக மிகக் குறைந்த சமஸ்கிருதத் தொடர்பையே பெற்றுள்ளது.
சமஸ்கிருதச் சொற்களையும், எழுத்துக்களையும் மேற்கொள்வதை வெறுத்து ஒதுக்கிவிட்டு; பழந்திராவிட தனிச்சிறப்பு வாய்ந்த மூலங்கள், சொல்லுருவங்கள், ஒலி முறைகளை மட்டும் மேற்கொள்வதில் காட்டும் ஆர்வத்தையும் விழிப்புணர்ச்சியையும் விடாமல் மேற்கொண்டிருப்பதினாலேயே அச்செந்தமிழ், தன் மொழியின் உரைநடை, பேச்சு நடைகளோடு சிறப்பாக வேறுபடுகிறது என்று தமிழ்மொழி செம்மொழியே எனச் சான்றாதாரங்களோடு நிரூபித்துக் காட்டினார்.
அறிஞர் கால்டுவெல்லின் ஆழ்ந்த ஆராய்ச்சி அடிப்படையிலான நூல்கள் தமிழகத்தில் பிராமணர் அல்லாதார் இயக்கத்திற்கு ஊக்கமளிப்பதாக அமைந்தன. தமிழ், தமிழர்தம் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றில் அவர் கொண்டிருந்த பற்றின் அடிப்படையிலேதான், அண்ணா இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டின்போது, அவரது திருவுருவச் சிலையைச் சென்னை மெரினா கடற்கரையில் நிறுவிடச் செய்தார்.
தென்னிந்தியத் திருச்சபையினர் வழங்கிய ராபர்ட் கால்டுவெல் திருவுருவச்சிலை, 2.1.1968 அன்று, அன்றைய தமிழக மேலவைத் தலைவர் எம்.ஏ.மாணிக்கவேலர் தலைமையில், பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையாரால் திறந்து வைக்கப்பட்டது.
தமிழ்மொழி செம்மொழியேயென அறுதியிட்டு உறுதியாக சைவ சித்தாந்த மகா சமாஜம் 1918-ம் ஆண்டிலேயே நிறைவேற்றிய தீர்மானம் தமிழ் ஆர்வலர்களாலும், அன்பர்களாலும் மிகுந்த மகிழ்ச்சியோடும், நிறைவோடும் நினைவு கூரத்தக்கதாகும்.
பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தைப் பற்றி, தனித்தமிழ் அறிஞர் மறைமலையடிகளார் 12.3.1918-ந் தேதி பற்றிய தமது நாட்குறிப்பில், "தமிழைச் செம்மொழியாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அரசாங்கத்திற்கு விண்ணப்பம் விடுப்பதற்குப் பச்சையப்பன் கல்லூரியில் 15-ம் நாள் (15.3.1918) நடக்கவிருக்கும் கூட்டத்தில் என்னை உரையாற்றுமாறு, கா.சுப்பிரமணிய பிள்ளை எம்.ஏ., எம்.எல்., வேண்டினார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
தஞ்சை-கரந்தைத் தமிழ்ச் சங்கம், செம்மொழி வரலாற்றிற்கு வழங்கியுள்ள மிகச்சிறப்பான பங்களிப்பு போற்றத்தக்கது மட்டுமல்ல; புவியில் வாழும் நாள்வரை தமிழர்களால் மறக்கவொண்ணாததுமாகும். த.வே.ராதாகிருஷ்ணப் பிள்ளை உள்ளிட்ட தமிழ் ஆர்வமும், தமிழ்ப் பயிற்சியும் உடையோர் சிலரால் 1911-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கம்; தொடங்கிய காலம் முதல் தமது வாழ்நாள் இறுதிவரை அதன் தலைவராக இருந்து அரும்பணியாற்றியவர் தமிழறிஞர் த.வே.உமாமகேசுவரம் பிள்ளை ஆவார். அதனால் தான், 18.2.2006 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் - கலைஞர் அரங்கில் நடைபெற்ற தமிழவேள் உமாமகேசுவரனார் அஞ்சல்தலை வெளியீட்டு விழாவில் நான் உரையாற்றியபோது:
"உமாமகேசுவரனார் பெயர் இன்று மற்ற அறிஞர்களைவிட அதிகமாக நினைவுக்கு வரவேண்டிய காலகட்டம் இது. காரணம் தமிழ்ச் செம்மொழி என்று எண்ணினால், பரிதிமாற் கலைஞருக்கு அடுத்து, நம் நினைவுக்கு வருகிற பெயர் தமிழவேள் உமாமகேசுவரனாரின் பெயர்தான். அவர்தான் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ், செம்மொழியாக ஆக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தை இயற்றியவர். இல்லையேல், தமிழ் செம்மொழியாவதற்கு எந்த ஆதாரத்தை வைத்து நாம் மத்தியிலே இருக்கின்ற அரசோடு பேச முடிந்தது?'' - என்று கரந்தை உமாமகேசுவரனாரின் அருமை பெருமைகளுக்கு அணி செய்தது எனது நினைவில் அழுத்தமாக அச்சியற்றப் பெற்றிருக்கிறது.
தஞ்சை - கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஏழு-எட்டாம் ஆண்டுகளுக்கான விழா, 24.5.1919 மற்றும் 25.5.1919 ஆகிய நாட்களில் திருக்கோவிலூர் ஆதீனம், திருப்பாதிரிப்புலியூர் திருஞானியார் மடத்தின் தலைவர் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சார்ய சுவாமிகள் தலைமையில், தமிழவேள் த.வே.உமாமகேசுவரம் பிள்ளை, தமிழறிஞர் வேங்கடசாமி நாட்டார், டி.என்.குருமூர்த்திப் பிள்ளை, டி.கூரத்தாழ்வார் முதலியார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
அவ்விழாவில், "தமிழ்மொழியானது தொன்மையும், சீர்மையும், செம்மையும் வாய்ந்து விளங்குகின்ற ஓர் உயர்தனிச் செம்மொழியென உறுதிப்பட பலதிறத்தாராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதால், சென்னைப் பல்கலைக் கழகத்தார் தாம் இதுகாறும் கொண்டிருந்த கொள்கையை மாற்றித் தமிழ்மொழி, ஓர் உயர்தனிச் செம்மொழியே என்பதை ஒப்புக் கொண்டு, இத்தென்னாட்டுப் பல்கலைக்கழகத்தில் அதற்கு முறைப்படி முதலிடமும், உரிமைகளும் கொடுக்க வேண்டும்'' என்று வற்புறுத்தித் தீர்மானம் இயற்றப்பட்டது.
22.9.1923 மற்றும் 23.9.1923 ஆகிய நாட்களில் தமிழ் வள்ளல் சா.ராம.மு.சித. பெத்தாச்சி செட்டியார் தலைமையில் நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பன்னிரெண்டாவது ஆண்டு விழாவில், "உலகத்து உயர்தனிச் செம்மொழிகளில், முதல் மொழியெனக் கருதப்படுவதற்குரித் தான எல்லா இலக்கணமும் தமிழ் மொழி உடையதாயிருப்பதால், அதனை அத்தகை மொழியாக ஆட்சியாளர் கருதி ஐ.சி.எஸ். பட்டத்திற்கு அதனை ஒரு பாடமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று இந்திய அரசியலாரை வற்புறுத்திக் கேட்டுக் கொள்ளப்படுகிறது'' எனும் தீர்மானம் இயற்றப்பட்டது.
1938-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15, 16, 17 ஆகிய நாட்களில் நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவிற்குத் தலைமையேற்ற திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் தனது உரையில், "இத்தகைய பெருமையும், இனிமையும் உடைய தமிழை உயர்தனிச் செம்மொழி என்ற நிலையில் அரசியலார் போற்றாதிருப்பது கவலத்தக்க தாகும்'' என்று தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டார்.
இவ்வாறு கரந்தைத் தமிழ்ச் சங்கம் தமிழவேள் உமாமகேசுவரனார் தலைமையில் தொடக்கக் கட்டத்தில்; தமிழ், செம்மொழியென அரசியல் நிலையில் அங்கீகரிக்கப்பட்டு உரிய முறையில் சிறப்பு செய்யப்படவேண்டும் என்பதற்கு ஆற்றிய பணி அளவிடமுடியாததாகும். செம்மொழி வரலாற்றில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் ஆற்றல் மிக்கதோர் அத்தியாயமாக இடம் பெற்றுள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
கிறித்துமசு வாழ்த்துச் செய்தி (24. டிச. 2009):
சென்னை, டிச.24 பொறுமையைப் போதித்த இயேசு நாதரின் அடிச்சுவட்டில் வாழும் கிறித்தவ சமுதாய மக்களுக்குத் தனது உளமார்ந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்வதாக முதலமைச்சர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் கருணாநிதி விடுத்துள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி:
இயேசு பெருமான் பிறந்த திருநாள் ஆண்டுதோறும் டிசம்பர் திங்கள் 25 ஆம் நாள் கிறிஸ்துமஸ் திருநாளாகக் கிறித்தவ சமுதாய மக்களால் மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, வரும் ஜூன் திங்கள் 23 ஆம் நாள் முதல் 27 ஆம் நாள் வரை 5 நாள்கள் கோவையில் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டு, ஆயத்தப் பணிகள் நடைபெற்றுவரும் வேளையில், கிறித்தவ சமயத்தைப் பரப்பிடும் நோக்கில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழகம் வந்த குருமார்கள் பலர் ஆற்றிய தமிழ் வளர்ச்சிப் பணிகள் நினைவில் எழுகின்றன. அவ்வகையில், 1606இல் இத்தாலி நாட்டிலிருந்து வந்து, தமிழ்த் துறவியாக வாழ்ந்து, `தத்துவ போதகர்’ எனத் தம் பெயரையே மாற்றிக் கொண்டு தொண்டாற்றி, தமிழ் உரைநடையைச் செப்பம் செய்த இராபர்ட் டி. நொபிலி!
அதே இத்தாலியிலிருந்து 1700இல் வந்து, கிறித்துவத் தொண்டுகளுடன் தமிழ் வளர்ச்சிப் பணிகளாக, “தேம்பாவணி,” “சதுரகராதி” முதலிய நூல்கள் பல படைத்த வீரமாமுனிவர்! 1709இல் ஜெர்மன் நாட்டிலிருந்து வந்து, தரங்கம்பாடியில் முதன்முதல் அச்சுக்கூடம் நிறுவி, பொறையாறில் இந்தியாவிலேயே முதன் முதலாகக் காகித ஆலையையும் நிறுவி, தமிழ் - இலத்தீன் அகராதி, பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு முதலான தமிழ் நூல்கள் பல கண்ட சீகன் பால்க்!
இங்கிலாந்து நாட்டிலிருந்து, 1839இல் தமிழகம் வந்து சமயப் பணிகளாற்றி, திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததுடன், இங்கிலாந்து திரும்பிச் சென்ற பின் அங்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி மேனாட்டினருக்குத் தமிழின் சிறப்பைப் புலப்படுத்தி, தமிழ் மொழி மீது கொண்ட காதலால், “நான் ஒரு தமிழ் மாணவன்” எனத் தம் கல்லறையில் எழுதச் செய்த ஜி.யூ. போப்!
அயர்லாந்து நாட்டில் பிறந்து 1889இல் தமிழகம் வந்து, நெல்லைச் சீமையில் தங்கி, “திருநெல்வேலி சரித்திரம்” என்னும் ஆங்கில நூலுடன், திராவிட மொழிகளை ஆய்ந்து, “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் அரிய நூலைப் படைத்துத் தமிழ்மொழியின் மேன்மையை மேதினியில் நிலைநாட்டிய மேதை கால்டுவெல் போன்றோர் தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஆற்றிய அளப்பரிய தொண்டுகளெல்லாம் வரலாற்றில் நின்று நமக்கு எழுச்சியூட்டுகின்றன.
அக்கிறித்தவப் பெருமக்களை நன்றியோடு நினைவுகூர்ந்து, மண்ணில் மனிதநேயம் தழைக்க, “அடுத்தவனை நேசி; உன் எதிரியிடமும் அன்பு காட்டு; உன்னைச் சபிப்பவர்களை ஆசீர்வாதம் செய்; உன்னை வெறுப்பவர்களுக்கும் உதவி செய்; உன்னை அவமதிப்பவர்களையும் போற்று;” எனப் பொறுமையைப் போதித்த இயேசு நாதரின் அடிச்சுவட்டில் வாழும் கிறித்தவ சமுதாய மக்களுக்குத் தமிழக அரசின் சார்பில் எனது உளமார்ந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்!
இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
---------------------
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்' பாடலை `தமிழ்த்தாய் வாழ்த்துப்' பாடலாக ஆக்கிய பெருமை தி.மு.க. அரசுக்கு உண்டு; கருணாநிதி அறிக்கை
முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1919-ம் ஆண்டு ஜுன் மாதம் 22-ம் நாளன்று, திருச்சி டவுன்ஹாலில் பிராமணர் அல்லாதார் மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்த மாநாட்டில், திருச்சி வழக்கறிஞர் டி.சி.தங்கவேலு, ராவ்பகதூர் ஓ.கந்தசாமி செட்டியார், டி.ஏ.ஜி.ரத்தினம், டி.வி.சுப்பிரமணியம், திவான்பகதூர் பி.ராமராயநிங்கார், ராமநாதபுரம் மன்னர், கொல்லங்கோடு மன்னர், தொட்டப்பநாயக்கனூர் ஜமீன்தார், டி.ஆர்.மருதமுத்து மூப்பனார் போன்ற பிராமணர் அல்லாதார் இயக்கத்தின் முன்னணியினர் கலந்து கொண்டனர்.
அந்த மாநாட்டில், பிராமணர் அல்லாதாருக்குத் தனி வாக்குரிமைத் தொகுதி, வகுப்புவாரிப்பிரதிநிதித்துவம், கலப்புத் திருமணம் ஆகியவை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு முக்கியமான தீர்மானம் பின்வருமாறு:-
"சென்னைப் பல்கலைக்கழகமும், அரசுப் பணித் தேர்வாளர்களும்; பாரசீக மொழி, அரேபிய மொழி, வடமொழி ஆகிய மொழிகளுக்குச்சமமாக; செறிவும், செழிப்பும் நிறைந்த மிகப்பழமை வாய்ந்த இலக்கியங்களைக் கொண்டுள்ள தமிழ் மொழியை, செம்மொழியாக அங்கீகாரம் செய்யவேண்டும்.
இவ்வாறு பிராமணரல்லாதார் இயக்கத்தைச் சேர்ந்த நமது நீதிக்கட்சியின் முன்னோர், 1919-ம் ஆண்டிலும்; தமிழவேள் உமாமகேசுவரனார் தலைமையில் அமைந்திருந்த கரந்தைத் தமிழ்ச் சங்கம் கடைசியாக 1923-ம் ஆண்டிலும்; தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்படவேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றியதற்குப் பிறகு;
விடுதலைப் போராட்ட வீரரும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், பாகிஸ்தான் பிரிவினையைத் தீவிரமாக எதிர்த்தவரும், உருது, அரேபியம், இந்தி, பாரசீகம், வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்த பன்மொழி அறிஞரும், கவிஞரும், பண்டிதநேருவின் மத்திய அமைச்சரவையில் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவரும், இலவசத் தொடக்கக் கல்வியை அறிமுகப்படுத்தியவரும், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களை அமைத்தவருமான மவுலானா அபுல்கலாம் ஆசாத்; 15.3.1951 அன்று - சாகித்ய அகாடமியை உருவாக்குவதற்காக நடத்தப்பட்ட மாநாட்டில் தொடக்க உரையாற்றியபோது, தமிழ்மொழி செழுமையும், தொன்மையும்மிக்க இலக்கியத்தைக் கொண்டது; அம்மொழியிலுள்ள கவிதைகள் வெளிநாட்டு மொழிகளில் மொழியாக்கம் செய்வதற்குரிய தகுதி படைத்தவை; தமிழ் உண்மையிலேயே ஒரு செம்மொழி என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்; தமிழ் செம்மொழியென அங்கீகாரம் செய்வதற்குரிய தகுதிப்பாடுகள் அனைத்தும் பண்டைக் காலத்தைச் சார்ந்தவை என்று தமிழ் செம்மொழியே என்பதைச் சுட்டிக் காட்டினார்.
1955-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26, 27, 28 ஆகிய தேதிகளில் சிதம்பரம் - அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அகில இந்திய கீழ்த்திசை மாநாட்டில் தலைமையுரை ஆற்றிய பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்; 15.3.1951 அன்று மத்திய கல்வி அமைச்சர் மவுலானா அபுல்கலாம் ஆசாத், சாகித்ய அகாடமியை உருவாக்குவதற்காக நடத்தப்பட்ட மாநாட்டில் ஆற்றிய மேலே குறிப்பிட்ட தொடக்க உரையைச் சுட்டிக்காட்டி, "அவ்வாறு தமிழ்மொழியைச் செம்மொழியென அங்கீகாரம் அளித்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அப்படித் தேவையான அங்கீகாரத்தை இந்தக் கீழ்த்திசை மாநாடு வழங்கவில்லையெனில், வேறு யார் தான் வழங்கமுடியும்? என்று வினாக் கணை தொடுத்தார்.
செம்மொழி வரலாற்றில் அடுத்த கட்டம் 1966-ம் ஆண்டு உருவானது. அதனை உருவாக்கியவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆவார். பாவாணர் நுண்ணிய ஆய்வு ஆராய்ச்சிக்குப் பிறகு, தமிழ்மொழி செம்மொழியே என மொழி அறிஞர்கள் அனைவரும் ஏற்றுப் போற்றும் வகையில், உரிய சான்றுகளுடன் "உலகின் முதன்மையான செம்மொழி என்ற அரிய நூல் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்.
"தமிழ்மொழி-செம்மொழி தகுதிபாட்டுச் சான்று ஆதாரங்கள்:-
தொல் இலமூரியா காலத்தோடு தொடர்புடையது, சந்த ஒலிச் சால்பு, உலகளாவிய உணர்வுப் பெருமிதம், ஆரிய மொழிகளுக்கிடையே, தலைநிமிரும் தமிழின் தரம், சொல்லமைப்பின் தொன்மையும் ஒலிச் சுருக்கமும், தமிழ்மொழியில் உள்ள "அம்மா'' "அப்பா'' என்கிற சொற்கள் பிற பழைமையான மொழிகளில் ஒத்த வடிவங்களில் உள்ளன, எழுவாய் வேற்றுமைக்கு தனி விகுதியின்மை, அடைமொழிகள் பிரிக்கத்தக்கவை - ஆழமுடைமை, தமிழ் சொற்களுக்கு பாலினம் இல்லை, தமிழில் ஒழுங்கு முறையற்ற சொற்கள் இல்லை, தமிழ்மொழி தோன்றிய காலத்தை கண்டறிய இயலும், தமிழில் காணப்படும் சொற்கள் இயற்கையான காரண காரிய தொடர்புடையவை, ஒருமை, இருமை, பன்மை என்று வடமொழியில் இருக்க, தமிழில் ஒருமை, பன்மை என்று இரண்டைப் பொருத்தமாகக் கொண்டு இருத்தல், தமிழின் தனித்தன்மையும் - இயற்கைத் தன்மையும், உயர்ந்த இலக்கியத் தரமிகுந்த நூற்கோவைகள்.
பாவாணர் எடுத்துரைத்த அசைக்கமுடியாத ஆதாரங்கள் தமிழ் ஆர்வலர்களையும், அறிஞர்களையும் மட்டுமல்லாமல், பிறமொழி அறிஞர்களையும் குறிப்பாக, வடமொழி மற்றும் ஆங்கிலப் புலமை மிக்கோரையும் பெரிதும் ஈர்த்து ஏற்றுக் கொள்ளச்செய்தன.
பாவாணரின் தமிழ்மொழி மேதைமையையும், ஆழ்ந்த தமிழ்ப்பற்றினையும், தமிழ் செம்மொழியே என அனைவரும் ஏற்றுக்கொள்வதற்கு அவர் எடுத்துக் கொண்ட சீரிய முயற்சிகளையும் பாராட்டிப் போற்றிடும் வகையில்; கழக அரசு 1974-ல், "செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்'' ஒன்றினை நிறுவி, அதன் முதல் இயக்குநராக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரை நியமித்தது. பிறமொழித் தாக்கத்திலிருந்து தமிழைப் பாதுகாக்கத் தமிழ்க்கடல் மறைமலையடிகளார் வழியைப் பின்பற்றி; "உலகத்தமிழ்க் கழகம்'' கண்ட பெருமைக்குரியவர் பாவாணர். பாவாணர் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்கூட; மதம் - குலம் இவற்றைக் கடந்து தமிழராக அவர் வாழ்ந்ததால், தம் பிள்ளைகளின் பெயர்களை; நச்சினார்க்கினிய நம்பி, சிலுவையை வென்ற செல்வராயன், அருங்கலைவல்லான் அடியார்க்கு நல்லான், மடந்தவிர்த்த மங்கையர்க்கரசி, மணிமன்ற வாணன், பைந்தமிழ் வளர்த்த பாண்டியன் - என இனிய தனித்தமிழில் வழங்கினார். இருபத்திமூன்று மொழிகளைக் கற்றுத் தேர்ந்து, பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தவர் பாவாணர்.
அத்தகைய பாவாணரின் நினைவைப் போற்றிடும் வகையில் கழக அரசு, 1996-ம் ஆண்டு அவரது படைப்புகள் அனைத்தையும் அரசுடைமையாக்கி, அவரது மரபுரிமையர்க்கு ரூ.20 லட்சம் பரிவுத்தொகையை வழங்கியதோடு; அவரது நினைவு சிறப்பு அஞ்சல்தலையை, மத்திய அரசின் மூலம் 18.2.2006 அன்று வெளியிட்டுப் பெருமைகொண்டது. அதுமட்டுமல்லாமல், மதுரை மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தில், பாவாணருக்கு ரூ.39 லட்சத்து 60 ஆயிரம் செலவில் மணிமண்டபமும், அதில் பாவாணரது முழுஉருவச் சிலையும் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டு, நான் 30.10.2007 அன்று திறந்து வைத்துச் சிறப்பு செய்தேன்.
அதன்பிறகு, நீண்ட இடைவெளி ஏற்பட்டு விட்டது. தமிழைச் செம்மொழியாக அறிவித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை முன்வைத்து, தமிழ் ஆர்வலர்கள் மத்தியிலோ, தமிழ் அமைப்புகள் மத்தியிலோ, பெரும் கருத்துருவாக்கம் எதுவும் ஏற்படவில்லை.
அருமை நண்பர் எம்.ஜி.ஆர். தமிழக முதல்-அமைச்சராக இருந்தபோது, மதுரையில் 1981-ம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டையொட்டி, தமிழைச் செம்மொழியாக அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பற்றியும், அந்த முயற்சிகளுக்கு நேர்ந்த முடிவு பற்றியும், வளர்தமிழ்ச்செல்வர் மணவை முஸ்தபா தனது "செம்மொழி - உள்ளும் புறமும்'' என்ற நூலில் எழுதியுள்ளார்.
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில், இரண்டாம் நாள் காலை, நீதியரசர் மகராஜன் தலைமையில் நடைபெற்ற பொதுநிலைக் கருத்தரங்கில், மணவை முஸ்தபா பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவர் தனது உரையில், "செம்மொழிக்குரிய அனைத்துத் தகுதிப்பாடுகளும் இருந்தும், அதற்கு அரசு அங்கீகாரம் அளிக்காததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பற்றி'' விரிவாகப் பேசினார். அவரது உரையைக் கேட்ட எம்.ஜி.ஆர்., மணவை முஸ்தபாவிடம் செம்மொழி தொடர்பாக அரசுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அதற்கிணங்க, 1982-ம் ஆண்டில், மணவை முஸ்தபா செம்மொழி கோரிக்கை மனுவை, தமிழக அரசின் பரிசீலனைக்கு அனுப்பினார். அந்த மனு மீது அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டது என்பது குறித்து யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.
1984-ல் தனக்கு `கலைமாமணி விருது' அளித்ததற்கு நன்றி கூறும் முறையில், முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், மணவை முஸ்தபா செம்மொழி பற்றியும் நினைவூட்டினார். அது அரசுத் துறைச் செயலாளருக்கு அனுப்பப்பட; அன்றைய அரசுச் செயலாளர், அக்கோரிக்கை மனு மீது எழுதிய குறிப்பில், "மணவை முஸ்தபா கூறுவது போல், தமிழைச் செம்மொழியாக்கினால், தமிழைச் செத்த மொழிகளின் பட்டியலில் சேர்த்ததாகிவிடும் என்பதால், இக்கோப்பு இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது'' என்ற முறையில் குறிப்பு எழுதி, கோப்பையே முடித்து வைத்துவிட்டதாக மணவை முஸ்தபா கையறுநிலை கசியக் கசிய கண்ணீர் மல்கிட தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
செம்மொழி கோரிக்கைக்கு இந்த `கதி' ஏற்பட்டதற்கு பிறகும், இந்த களத்தில், யாரும் கவனம் செலுத்தவில்லை. மாநாடுகளிலோ, கருத்தரங்குகளிலோ, செம்மொழி கோரிக்கை முன்வைக்கப்படவில்லை.
1995-ம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற எட்டாம் உலகத்தமிழ் மாநாட்டின்போது, தமிழ்ச் செம்மொழிக் கோரிக்கை, அப்போதைய இந்தியப் பிரதமர் நரசிம்மராவ் முன்னிலையில் வைக்கப்பட்டதாகவும்; ஆனால் பிரதமர் அக்கோரிக்கை தொடர்பாக எவ்வித கருத்தையும் வெளிப்படுத்தாமல், தன்னுடைய உரையை நிறைவு செய்தார் என்றும் புலவர் த.சுந்தரராசன் (பொதுச் செயலாளர், தலைநகர்த் தமிழ்ச்சங்கம், சென்னை) கட்டுரை ஒன்றில் மிகுந்த கவலையுணர்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்'' என்று தொடங்கும் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை எழுதிய பாடலை, 1970-ம் ஆண்டில் `தமிழ்த்தாய் வாழ்த்துப்' பாடலாக ஆக்கிய பெருமை, கழக அரசுக்கு என்றென்றும் உண்டு. அதைப் போலவே, தமிழர்களின் நலன் காக்க, நாளும் பாடுபடும் கழக அரசு, தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் பாடுபடுவதை எந்த நிலையிலும் நிறுத்தாது என்பதற்கு உதாரணம்தான், நான்காம் முறையாக கழக அரசு பதவியேற்றபோது, தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறைக்காக ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கியது; அந்தத்துறை, அமைச்சர் முனைவர் தமிழ்க்குடிமகன் தலைமையில், 13.5.1996 முதல் செயல்படத் தொடங்கியது.
புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட அந்தத் துறையின் தலையாய முதல் பணியாக, தமிழைச் செம்மொழி என அறிவிக்கக் கோருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று நான் வழங்கிய அறிவுரைகளையொட்டி; 20.6.1996 அன்று தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் தலைமையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி, சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ப.க.பொன்னுசாமி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் - முனைவர் ச.அகத்தியலிங்கம், முனைவர் அவ்வை நடராஜன், முனைவர் சி.பாலசுப்பிரமணியம்; திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் ச.முத்துக்குமரன், ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ஜி.ஜான்சாமுவேல், மணவை முஸ்தபா, தமிழ்வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில்; தமிழ்மொழியைச் செம்மொழியென அறிவிக்கப்படுவது தொடர்பாக, ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் சி.ஜான்சாமுவேலால் தயாரிக்கப்பட்ட வரைவு அறிக்கை பரிசீலிக்கப்பட்டு, ஒரு சிலமாற்றங்களுடன் ஏற்கப்பட்டு, மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டதோடு; தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழக ஆட்சிக் குழுக்களின் பரிந்துரைகளையும் பெறலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
தமிழ் செம்மொழி என அறிவிக்கப்படுவதற்குரிய அடிப்படைத் தகுதிகள் அனைத்தையும் பெற்றிருக்கிறது என்பதற்கான வலுவான ஆதாரங்களைக் கொண்டுள்ள அறிக்கை என்பதாலும்; தமிழ் செம்மொழி என அறிவிக்கப்படுவதற்கு அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும், அரசளவிலும், கழக அரசால் மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சி என்பதாலும்; தமிழ் ஆர்வலர்களும், கழக உடன்பிறப்புகளும் அதனைப் படித்தறிந்து நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையை, தமிழாக்கம் செய்து, அதன் முக்கியப் பகுதிகளை அடுத்த கடிதத்தில் வழங்குகிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.