பதிவுலகின் கலைச்சொற்கள் - கணிவரலாற்றில் ஓர் ஏடு!

குருவிகள் என்னும் நல்ல விஞ்ஞான வலைப்பதிவினை நடாத்திவரும் நண்பர் வலைப்பதிவு, வலைத்திரட்டிகளின் 2003-2004 கணிவரலாற்றில் சில சுவடுகளைப் பதிந்துள்ளார். (குருவிகள் ஒரு புனைபெயர், இயற்பெயர் அறிந்துகொள்ள ஆசை).

தற்காலப் பதிவர்களுக்கு ஆரம்ப காலக் கணிசரிதத்தில் சில முன்னெடுப்புகளையும், கலைச்சொல் ஆக்கங்களையும் பற்றிய சில செய்திகள், நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள இம்மடல்.

>வலைப்பூ திரட்டிகள் எவ்வாறு பெருகினையோ அதே போன்று
> வலைப்பூக்களின் எண்ணிக்கையும் 2003 இல் சில பத்துகளாக
>இருந்து இன்று பல நூறுகளாகப் பெருகிவிட்டன.


தமிழ்மணம் திரட்டி ஆகஸ்ட் 2009-ல் ஐந்தாம் ஆண்டு நிறைவுவிழாக் கொண்டாடுகிறது. நாள்தோறும் 300 பதிவுகளையும், 2300 மறுமொழிகளையும், மொத்தம் ~6000 பதிவுகளையும் தமிழ்மணம் திரட்டுகிறது. சுமார் 15 ஆயிரம் கணினிகள் தமிழ்மணத்தை வாசிக்கின்றன. ஓப்பன்-ஐடி முறையை இந்திய மொழிகளில் அறிமுகம் செய்துள்ள திரட்டி தமிழ்மணம்தான். அதைப் பயன்படுத்தி பதிவுகளுக்கு வாக்களிக்கிறீர்களா?

http://kundumani.blogspot.com/2009/07/blog-post_21.html
”அப்போதைய பொழுதுகளில் வலைப்பூப் பதிவுகளை ஊக்குவித்துக் கொண்டிருந்தவர்களில் திசைகள் மாலன், சுரதா யாழ்வாணன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

சுரதா யாழ்வாணன் பிளாக்கர்களுக்கு யாழ் இணையத்தில் குடில்கள் என்று தமிழில் பெயரிட்டார். இருந்தாலும் பின்னர் திசைகள் மாலன் அவர்கள் (யூலை 2003 இல்) முன்மொழிந்த வலைப்பூ என்பதே அநேகரின் எண்ணத்தைக் கவர.. அது 6 ஆண்டுகளுக்குள் தமிழில் மிகப் பிரசித்தம் பெற்றுவிட்டது.”


மே, ஜூன் 2003-ல் பரவலாக வலைப்பதிவுக்கு என்ன பெயர் வைப்பது என்று யாகூகுழுக்களில் பேசப்பட்டது. மாலன் “இணையப்பட்டி, இணைப்பதிவு“ என்றார். நா. கண்ணன் வலைக்கதிர், வலைத்தொகை, சுரதா குடில், நான் நாட்குறிப்பு போல இருப்பதால் வலைச்சுவடு, ... என்றோம்.

http://emadal.blogspot.com/2003_08_01_archive.html
”பதிப்பு: நா.கண்ணன் Tuesday, August 12, 2003 at Tuesday, August 12, 2003

மடலாடல் மஞ்சரி

புதிதாக அறிமுகமாகியிருக்கும் Weblog என்னும் நுட்பத்திற்கு பல பயன்கள் உண்டு. இதற்கான நாமகரணம் ஆகிவிட்டது. பெயர்த்தேர்வு ஆகவில்லை. இரமணிதரன்: வலைப்பதிவு; நா.கணேசன்: வலைச்சுவடு; மாலன்: "இணையப்பட்டி, இணைப்பதிவு, இணை-வரிசை (அலைவரிசை போல) அல்லது அதன் பயன்பாட்டுத் தன்மையைக் கருதி சிற்றிணை, அல்லது இணைக்குறிப்பு, குறிப்பிணை இப்படி அமையலாமா?"; சுரதா: குடில்; மணிவண்ணன்: வலைப்பூ. கடைசி இரண்டிலும் கவித்துவம் முன் நிற்கிறது.

இதைப் பயன்படுத்திய பின் இன்னும் சில பெயர்களை முன் வைக்கத் தோன்றுகிறது. கலைக்கதிர் என்பது ஒரு அறிவியல் பத்திரிக்கை. அதுபோல் இதை 'வலைக்கதிர்' எனலாம். கதிர் பல்கிப் பெருகி ஒளி வீசுவது போல், சிந்தனை ஒளிவீசும் தளமிது. தொகைப் படுத்துதலும் இதன் முக்கிய வேலை, எனவே 'வலைத்தொகை' என்றும் சொல்லலாம். இராம.கி என்ன சொல்லியுள்ளார் என்று தெரியவில்லை. நான் வலைப்பூ என்பதைப் பயன்படுத்துவதற்கான காரணங்களை முன்பு உயிரெழுத்தில் எழுதினேன், "பயன்பாட்டாளன் என்றளவில் ஏதாவதொரு சொல்லைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். நிற்கும் சொல் வென்றது என்று பொருள்'.

இந்த வலைத்தொகை இப்போது ஒரு காரியம் செய்யலாம்! எத்தனையோ மடலாடற்குழுக்கள் தமிழில் வந்து விட்டன. எல்லோருக்கும் எல்லாவற்றையும் வாசிக்கும் நேரமிருப்பதில்லை. Reader's Digest மாதிரி ஒரு "வலைமஞ்சரி" (இதுவே கூட Weblog என்பதற்கு இணையான சொல்லாகலாம்) -யை உருவாகலாம். இது எவ்வளவோ பயனுள்ளதாக இருக்கும். நானும், ஹவாய் மதியும் பல புதிய பயன்களைக் கண்டுள்ளோம். ஒவ்வொன்றாய் இங்கு சொல்லுவோம். இதற்கிடையில் இந்த 'வலை மஞ்சரி'யை முன்னிருந்து நடத்த ஆர்வமும், நேரமும், கொஞ்சம் கலா ரசனையும், முடிந்தால் editorial அனுபவமும் உள்ளவர்கள் வந்தால் இதைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு செயல்திட்டமாக நாம் நடத்தலாம். வலைத்தொகை அமைப்பிற்கு எங்களாலான் உதவிகளைச் செய்ய முடியும். “

முதலில் வலைப்பூ என்ற சொல்லைக் கவித்துவமாகப் படைத்தவர் மணி மு. மணிவண்ணன். மாலன் கேட்ட கேள்விக்கு மணி அளித்த பதில், மே 15, 2003:
http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/message/7994

Re: [RKK] Peyar soota vaarungkal

மதிப்பிற்குரிய மாலன் அவர்களுக்கு,

தமிழில் உவெ(ம்)ப் லா(ங்)க் அமைத்ததற்கும், திசைகள் வலையிதழுக்கு வியக்கத்தக்க எண்ணிக்கையில் வாசகர்களை ஈர்த்ததற்கும் உளமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்.

At 5/14/03 08:56 PM, you wrote:
>"Blog என்பதற்கு ஏற்ற தமிழ்ச் சொல் என்ன? Web Log என்ற சொல்லிலிருந்து
>தோன்றியது blog. எனவே இணையப்பட்டி, இணைப்பதிவு, இணை-வரிசை
>(அலைவரிசை போல) அல்லது அதன் பயன்பாட்டுத் தன்மையைக் கருதி சிற்றிணை,
>அல்லது இணைக்குறிப்பு, குறிப்பிணை இப்படி அமையலாமா?"

பொதுவாக இணையம் என்ற சொல்லை இண்டர்நெட்டுக்கும் வலை என்ற சொல்லை உவெப், நெட் என்ற சொற்களுக்கும் புழங்கி வருகிறோம். உவெப் சைட் என்பது வலைத்தளம், இணையத்தளம் இல்லை. உவெப் பேஜ் என்பது வலைப்பக்கம். உவெப்ஸைன் என்பது வலையிதழ், இணைய இதழ் இல்லை.

எனவே உவெப் லாக் என்பதற்கு வலைக் குறிப்பு என்று சொல்லாக்கினால், ப்லாக் என்னும் குறும்(புப்) பெயருக்கு இணையாக வலைப்பு என்று சொல்லலாமா? வலைப்பு என்ற சொல் கொலோன் வலையகராதியில் இல்லை. அதனால் இந்தச் சொல் ஏற்கனவே வேறு பொருளில் தமிழில் இருந்திருக்க வாய்ப்பில்லை.

இல்லையேல் இன்னும் குறும்பாக, வலைப்பூ எனலாம். வலையிதழ் என்பது உவெப்சைன் என்பது போல வலைப்பூ என்பது உவெப்லாக் ஆகலாம். ஆனால், புலவர்கள் பொருட்குற்றம் காண்பார்கள்!

"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்னும் இலக்கணத்தை மீறி இதற்கு இடுகுறிப்பெயரும் இடலாம். வலைக்குறிப்பு - வலைப்பு, வலைப்பூ, வறிப்பு, வலையரிப்பு(!), லைப்பு, லறிப்பு என்று விளையாடலாம்.

ஆனால், தமிழனுக்கு ஒரு கவிதையுள்ளம் உண்டு. இண்டர்நெட்டுக்குப் பல இதயங்களை இணைக்கும் மையம் என்னும் பொருள் தர இணையம் என்று சொல்லைப் படைத்தவன் தமிழன். பத்திரிக்கைகளுக்கு தினமலர், வார இதழ், ஆண்டு மலர், என்று பெயர் வைப்பவன் தமிழன். எனவே வலைப்பூ என்ற சொல் தமிழ் உள்ளங்களைக் கவரும் என்று எண்ணுகிறேன்.

அன்புடன், மணி மு. மணிவண்ணன்
நூவர்க், கலி., அ.கூ.நா.

பி. கு. உவெப் லாக் எப்படி உவெ(ம்)ப் லா(ங்)க் ஆகியது என்று எண்ணும் நண்பர்களுக்கு,
ஆங்கிலத்தில் ஓசையற்ற எழுத்துகள் உச்சரிப்பைப் பாதிப்பது போல் தமிழிலும் செய்தால் என்ன என்று சில சமயம் விளையாடிப் பார்த்திருக்கிறேன். வல்லின பகரத்துக்கு முன்னர் மெல்லின மகர மெய்யை இட்டால் வல்லினம் மெலிகிறதல்லவா? அதே போல் ககரத்துக்கு முன்னர் ஙகரம். Web எப்படி உவெப் ஆகிற்று என்பவர்கள் உச்சரிப்பில் Veb க்கும் Webக்கும் உள்ள வேறுபாட்டைக் கவனிக்க வேண்டும். Web எனக்கு உவப்பு தான்!”

ஆக, மணி மு. மணிவண்ணன் ராயர்காப்பி கிளப் யாகூ குழுவில், மாலனின் மடலுக்கு பதிலில் வலைப்பூ என்று பரிந்துரைத்தார். web-log blog ஆவதுபோல், வலைப்பு வலைப்பூ ஆகலாம் என்றார்.

வலைப்பூ, வலைத்தேனீ, குடில், ... என்பதெல்லாம் இலக்கியங்களில் பாவிக்கச் சிறப்பாக இருக்கும், ஆனால் தொழில்நுட்புக் கலைச்சொல்லாக இருக்க முடியாது என்றும் பதிவர்களால் உணரப்பட்டது. ஆகவே, “வலைப்பதிவு” என்ற சொல் இணையத்தில் வலம்வரலாயிற்று.

மேலதிகமாக,
இணையம் - மலேசியா ‘நயனம்’ ராஜகுமரன் (1996)
வைய விரிவு வலை - டாக்டர் ஜேபி (1997)
பின்னூட்டம் - ரமணி தன் ஆய்வுத்துறையில் 2001-லிருந்தே பயன்படுத்தியுள்ளார்.
வலைப்பதிவு - 2002-2003ல் முனைவர் இரமணீதரன் கந்தையா.
ஒருங்குறி - முனைவர் இராமகி
மட்டுநர் (மாடரேட்டர்) - நா. கணேசன்

திரட்டி (aggregator) - செல்வராஜ், பின் காசி பயன்படுத்த பிரபலம் அடைந்தது. இந்திய மொழிகளிலேயே தமிழ் திரட்டிநுட்பை முன்னெடுத்த மொழியாகும். உ-ம்: செல்வராஜ் வலைத்திரட்டிகள் பற்றிப் பேசிய 1/2/2004-ல் பேசிய வலைப்பதிவு:
http://blog.selvaraj.us/archives/34

தமிழின் முதல் வலைப்பதிவர்: கார்த்திகேயன் ராமசாமி
http://ta.wikipedia.org/wiki/வலைப்பதிவு

தமிழின் முதல் blog:
http://karthikramas.blogdrive.com/archive/21.html

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு - குறள் (392) சொல்லுமாப்போலே

கணிவலை ஏனை ஒருங்குறி இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழும் தமிழ்க்கு!

நா. கணேசன்


--------------

மாதவராஜ் பதிவில் கணினி அச்சாக்கம் எவ்வகையில்
பழைய அச்சுத் தொழிலாளிகளைப் பாதித்து என்று எழுதியுள்ளார்.
கண்களைப் பனிக்கச் செய்த பதிவது:
எழுத்துக்களைக் கோர்த்தவன் எங்கே போனான்?
http://mathavaraj.blogspot.com/2009/03/blog-post.html

காற்றலையில் பவனிவரும் கணினித் தமிழ்,
கல்யாண்குமார், இந்த வாரத் தமிழ்மண நட்சத்திரம்:
http://kalyanje.blogspot.com/2008/05/blog-post_08.html

மு.இளங்கோவன், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் 23,24-05-2009இல் நடத்திய 40 ஆம் ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கம்.
வலைப்பதிவுலகில் திரட்டிகளின் பங்களிப்பு
http://muelangovan.blogspot.com/2009/05/blog-post_25.html

கணித்தமிழ் – கடந்து வந்த பாதையும், தற்போதைய நிலையும்
(ஃபெட்னா மாநாடு, 2008) ~ ஜே. சௌந்தர், டல்லஸ், டெக்சாஸ்
http://nganesan.blogspot.com/2009/06/soundar-fetna-2008.html

தமிழ் விக்கிப்பீடியா: இ. மயூரநாதனுடன் நேர்காணல்
- அண்ணாகண்ணன்
http://nganesan.blogspot.com/2009/06/tamil-wiki.html

கவிதையில் கடிதம்! - 200 ஆண்டுகள் பழைய சீட்டுக்கவி

கவிதை வடிவத்தில் கடிதம் எழுதுவதைச் சீட்டுக்கவி எனத் தமிழ் இலக்கியம் பேசுகிறது. சீட்டுக் கவிதையில் ஆணையோ, வேண்டுகோளோ இருக்கும். சுப்பிரமணிய பாரதியார் எட்டையபுரம் ஃசமீந்தாருக்கு 1919-ல் எழுதிய சீட்டுக் கவிதையை ஓலைத் தூக்கு என்று குறித்துள்ளார் [1]. சிறுகுறிப்பு எழுதி வைக்கும் காகிதத்தைச் சிட்டை என்பதுண்டு. லேபிள் என்பதற்கும் சிட்டை பொருந்தும். கடன்-சிட்டை = credit card. டிவிட்டர் சிட்டு அனுப்பும் சிற்றஞ்சலைச் சிட்டி என்று அழைக்கலாம் தானே:
நுண்பதிவுலகம் (microblogs), சிட்டி (twits), சிட்டர் (twitter-er), தமிழ்ச்சிட்டு திரட்டி

200 ஆண்டுகளுக்கு முன் ஒரு கவிஞர் எழுதிய சீட்டுக்கவியைத் தருகிறேன். மடவளாகம் இலக்குமண பாரதியார் இப்போது புகழ்பெற்றுள்ள கந்தசஷ்டிக் கவசத்தின் ஆசிரியர் தேவராய சாமிகளின் வழிவந்த சிவாச்சாரியர் குருக்கள். 15 - 20ஆம் நூற்றாண்டுவரை பாரதி அந்தணர் மரபில் இசை, கல்வி, கேள்வியில் சிறந்தவர்களுக்குக் கிடைத்த பட்டம் ஆகும். லட்சுமண பாரதியின் இரண்டு நூல்கள் மடவளாகத் தலபுராணம், சிவமலை முருகன் மயில் விடுதூது அழிந்துபட்டன. ஆனால், அவர் பாடிய அழகான சிவமலைக் குறவஞ்சி அச்சாகியுள்ளது, என்னிடமும் இருக்கிறது. மடவளாகத்தில் பச்சோடநாதர் - பாற்பதி பச்சைநாயகி சந்நிதியில் கிடைத்த தமிழிசைக் கருவூலம்தான் “பஞ்சமரபு” என்னும் நூல். பச்சோடு, சித்தோடு, பேரோடு, ஈரோடு போன்ற ஊர்ப்பெயர்கள் சைவ உட்சமயங்களான காபாலிக, காளாமுகர்களின் தாக்கத்தைக் குறிப்பவை என்று தமிழறிஞர் காட்டியுள்ளனர்.

அவர் விண்ணப்பிக்கும் வள்ளியம்மாள் கொங்குநாட்டில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வெள்ளையர்களால் சங்ககிரி துர்க்கத்தில் தூக்கிலிடப்பட்ட 'தீரன்' சின்னமலையின் குடும்பத்து முன்னோர். பாட்டுடைத் தலைவி பழயகோட்டை வள்ளியம்மன் சின்னமலைக்குப் பெரிய தாயார். திப்பு சுல்தானின் தோழனான தீரன் சின்னமலையின் காலம்: ஏப்ரல் 17, 1756 – ஜூலை 31, 1805.

சிவராத்திரித் தேவையிதெனச் சீட்டுக்கவி:

  திருமருவு பழநிமலை முருகேசர் அரவிந்த 
செங்கமல பாத தியானம்
திரிகின்ற தண்டுமிண் டுகள்கொண்ட கவிமலை
செகுத்திடச் செய்வச் சிரம்
செய்யகார் காலமழை என்னவே மதுரித
செழுந்தமிழ் கொழிக்கும் மேகம்
தென்பரவு மங்கைபுர இலட்சுமண பாரதி
தெளிந்தெழுதி விட்ட நிருபம்,

  தருவுலவு காரையூர் நல்லசே னாபதிச் 
சர்க்கரைமன் றாடி ராசன்
தனதுமனை யாள்இனிய கற்பினில் அருந்ததி
சமானசற் குணபூ டணி
சந்ததி நிரம்பிவளர் சிவமலைப் பல்லவன்
தந்தசீ மந்த புத்ரி
தருமமிகு பயிறகுல வள்ளிநா யகியெனும்
தாய்மனம் மகிழ்ந்து காண்க,

  அருள்பரவு சிவன்உமைக் குத்திருக் கல்யாணம் 
ஆனசுப தினம்நா ளையே
ஆகையால் மாங்கலிய விரதபூ சனைசெய்ய
ஆரும்ஆ தரவ றிகிலேன்
ஐந்துவள் ளப்பச்சை அரிசிபா சிப்பயறு
அதற்குள்ள மேல்முஸ் திதி
ஆவின்நெய் வெல்லம் உழுந்துபால் தயிர்வெண்ணெய்
அரியதயிர் எண்ணு கறிகாய்

 மருவுலவு சந்தனம் குங்குமம் புனுகுசவ் 
வாதுபரி மளமும் உனது
மருமகட் கோர்புடவை பாக்குவெற் றிலைநல்ல
வாழையிலை இவையா வுமே
வாணருக் கார்அனுப் பினதெனக் கேட்பவர்
மனதுமென் மேலும் மெச்ச
மன்னர்புகழ் சர்க்கரைத் துரைராசி தந்ததென
வரவனுப் பிடவேண் டுமே!

                     ~ மடவளாகம் 
இலக்குமண பாரதி (1767 -1859)



இன்னொரு சமயம் வேறு சில நல்ல சீட்டுக்கவிகளைக் காண்போம்!

நா. கணேசன்


[1] மகாகவி பாரதியார் 2 மே 1919 அன்று எட்டையபுரத்தில் எழுதிய சீட்டுக்கவி:

ராஜமகா ராஜேந்த்ர ராஜகுல 
சேகரன் ஸ்ரீராஜ ராஜன்
தேசமெலாம் புகழ்விளங்கும் இளசைவெங்க
டேசுரெட்ட சிங்கன் காண்க!
வாசமிகு துழாய்த் தாரன் கண்ணனடி
மறவாத மனத்தான் சக்தி
தாசனெனப் புகழ்விளங்கும் சுப்ரமண்ய
பாரதிதான் சமைத்த தூக்கு!

மன்னவனே தமிழ்நாட்டில் தமிழறிந்த 
மன்னரிலை என்று மாந்தர்
இன்னலுறப் புகன்றவசை நீமகுடம்
புனைந்தபொழு திருந்த தன்றே!
சொன்னலமும் பொருணலமும் சுவைகண்டு
சுவைகண்டு துய்த்துத் துய்த்துக்
கன்னலிலே சுவையறியுங் குழந்தைகள்போல்
தமிழ்ச்சுவைநீ களித்தாய் அன்றே!

புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத் 
தமிழ்மொழியைப் புகழி லேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டிற் கில்லையெனும்
வசையென்னாற் கழிந்த தன்றே!
சுவைபுதிது! பொருள்புதிது! வளம்புதிது!
சொற்புதிது! சோதி மிக்க
நவகவிதை எந்நாளும் அழியாத
மாகவிதை என்று நன்கு!

பிரான்ஸென்னும் சிறந்தபுகழ் நாட்டிலுயர் 
புலவோரும் பிறகு மாங்கே
விராவுபுகழ் ஆங்கிலத்தீங் கவியரசர்
தாமுமிக வியந்து கூறிப்
பராவியென்றன் தமிழ்க்கவியை மொழிபெயர்த்துப்
போற்றுகின்றார் பாரோ ரேத்துந்
தராதிபனே! இளசைவெங்க டேசுரெட்டா!
நின்பால்அத் தமிழ்கொ ணர்ந்தேன்!

வியப்புமிகும் புத்திசையில் வியத்தகுமென் 
கவிதையினை வேந்த னே!நின்
நயப்படுசந் நிதிதனிலே நான்பாட
நீகேட்டு நன்கு போற்றி
ஜயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள்
பொற்பைகள் ஜதிபல் லக்கு
வயப்பரிவா ரங்கள்முதற் பரிசளித்துப்
பல்லூழி வாழ்க நீயே!

கணினியில் தமிழ் - பயிலரங்கு (அட்லாண்டா, ஜியார்ஜியா, ஜூலை 4, 2009)

அன்பு நண்பர்களே,

கணினியில் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஆர்வலர்களுக்குத் தமிழை மிக எளிதாகக் கணினியில் பயன்படுத்தும் வழிகளைப் பயிற்சியளிக்க ஃபெட்னா (http://fetna.org ) தனிப் பயிற்சிப் பட்டறை அமைத்துள்ளது.

என்னால் கணினி (Computer) வழி தமிழைத் தர முடியுமா, மின்னஞ்சல் எழுதுவது எப்படி போன்ற வினாக்கள் தங்கள் சிந்தனை ஓட்டத்தில் ஓடி மறைந்தால், இந்தப் பயிலரங்கு தங்களுக்கே.

வட அமெரிக்க உத்தமம் (http://www.infitt.org/), தமிழ்மணத்துடன் இணைந்து தமிழில் கணினியில் எப்படி எளிதாக எழுதுவது, வலைப்பதிவுகளைத் தமிழ்மணத்தில் சேர்ப்பது எப்படி போன்ற வினாக்களுக்கு விடையளிக்கவும், சில சிறந்த பயிற்சியாளர்களை அடையாளம் கண்டுள்ளது.

இந்தச் சிறந்த பயிற்சியாளர்கள், தங்களுக்குப் பயிற்சி அளிப்பதுடன், தங்களையும் இந்தச் சிறந்த பயிற்சியாளர் குழுவில் இணைக்க வழிவகையும் காண்பர், தங்களுக்கு ஆர்வமிருப்பின். பயிலரங்குப் பதிவுக்கு : http://www.infitt.org/fetna2009_signup.php

அட்லாண்டா தமிழ்விழாவுக்கு நீங்களோ, நண்பர் குழாமோ, உற்றார் உறவினர்களோ பங்கேற்றால் உத்தமம்-தமிழ்மணம் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்க அழைக்க வேண்டுகிறோம். நன்றி!

நா. கணேசன்

விழா நிகழ்ச்சி நிரலுக்கு கீழே உள்ள படங்களைச் சொடுக்குக. எழுத்துக்கள் தெளிவாகத் தெரியும்.