மலையாள வார்த்தை - இன்னலெ (நேற்று)

இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் தொடர்பை நன்கு விளக்கிய பதிவை ஜெகத் அவர்களின் பதிவில் வாசித்தேன்:
http://kaiman-alavu.blogspot.com/2006/08/blog-post.html
"இரண்டு மொழிகளில் உள்ள சொற்களுக்கு இடையே உள்ளத் தொடர்பை அறிய வழக்கொழிந்துவிட்ட பழஞ்சொற்களைப் பற்றிய அறிவும் தேவை. எடுத்துக்காட்டாக, 'இன்று' என்பதை 'இண்ணு' என்றும் 'நாளை' என்பதை 'நாள' என்றும் சொல்லும் மலையாளிகள் 'நேற்று' என்பதை மட்டும் 'இன்னலெ' என்று ஏன் சொல்கிறார்கள் என்று நான் குழம்பியதுண்டு. இதற்கான விளக்கம் வேங்கடராஜுலு என்பவர் எழுதிய "தமிழ் சொல்லமைப்பு" என்ற நூலில் கிடைத்தது. பழந்தமிழில் 'நேற்று' என்பதைக் குறிக்க 'நெருநல்' மற்றும் அதன் திரிபாகிய 'நென்னல்' ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. (குறள்: "நெருநல் உளனொருவன் இன்றில்லை.." - நேற்று இருந்தவன் இன்றில்லை). நென்னல் என்பதே கன்னடத்தில் 'நென்ன' என்றும் மலையாளத்தில் இன்னலெ என்றும் திரிந்திருக்கிறது."

என் பின்னூட்டம்: சிந்தனையைத் தூண்டும் பதிவு. திராவிட மொழிக் குடும்பச் சொற்களுக்கும், இந்தோ-ஐரோப்பிய மொழிச் சொற்களுக்கும் இவ்வாறு தொடர்பு அனேகமாக இருக்காது.

'தென்மொழிக் கட்டுரைகள்', சமணர் நூல்களாம் ஸ்ரீபுராணம், மேருமந்தர புராணம் போன்றவற்றை அச்சிட்ட பேரா. வேங்கடராஜுலு ரெட்டியார் என்று நினைக்கிறேன். நூலின் பதிப்பு விவரம், பதிப்பகம், அச்சான ஆண்டு, மொத்தப் பக்கம் அறிய ஆவல்.

சொல்முதல் நகரவொற்று கெடுதல் வேறு சொற்களிலும் பார்க்கமுடியும். காட்டுகள்:
(1) நெருநல் > நென்னல் > இன்னலெ
மணிமொழியாரின் திருவெம்பாவையில் நென்னலை என்ற சொல் பயில்கிறது.
(2) நீர்+அம் (சாரியை) > ஈரம்.
(3) நுண்ணி(ய) > உண்ணி
குருவாயூரில் குழந்தையாய்த் திகழ்பவர் உண்ணிக் கிருஷ்ணன் (நுண்மை ~ மழலை).
கவிஞர் கண்ணதாசன் அழகான கவிதைகள் உண்ணிக் கண்ணன் மீது பாடினார்.
தமிழில், நாய்மேல் உள்ள நுண்பூச்சியை உண்ணி என்கிறோம்.

உடல் என்னும் சதைப்பிண்டத்தில் ஏறும்/உகும் உயிரை, உகிர் > உசிர் > உயிர் என்றானதா? என்று பார்க்கவேண்டும்.

மேலும், வடசொல்லாகிய நகம் என்பதற்குத் தெளிவான இந்தோ-ஐரோப்பிய மூலம் காணோம் என்கின்றனர். நுகம் > நகம் என்றாகியிருக்கலாம். ஒப்பீடு: புல்லி > பல்லி, நுணா > நணா (திருநணா (பவானி) - சம்பந்தர் பாடிய தலம்.கூடுதுறை). உகிர் (நகம்) - நுகம் என்ற சொல்லின் முதல் ந அழிவதால் ஏற்படுவதா? என்னும் ஆய்வுவினாக்கள் எழுகின்றன.

மேலும் பார்க்க:
Consonant assimilaton in Tamil and Sanskrit
ஆஸ்கோ பார்போலா அவர்களின் மறுமொழி:
Prof. Parpola's reply

நா. கணேசன்

எண்ணாயிரம் - காளமேகத்தின் ஊர்

காளமேகப் புலவரின் ஊர் என்ன என்று 17-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றின் மூலம் புலப்படுகிறது. அக்கல்வெட்டு காஞ்சி வரதராசப்பெருமாள் கோவில் இராயகோபுரத்தில்
தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கண்டறிந்தனர்.

கல்வெட்டில் நேரிசை வெண்பா:

         மண்ணில் இருவர் மணவாளர், மண்ணளந்த
         கண்ணன் அவன்,இவன்பேர் காளமுகில் - கண்ணன்
         அவனுக்கூர் எண்ணில் அணியரங்கம் ஒன்றே;
         இவனுக்கூர் எண்ணா யிரம்!


வெண்பாவின் சுவையும், சிலாலிகிதம் ஆன பெற்றியையும் நோக்குங்கால் காளமேகத்தின் பாடலே என எண்ணத் தோன்றுகிறது. கண்ணபிரானுக்கும், காளமேகத்திற்கும் உள்ள ஒப்புமைகளை இயம்புகிறது: கண்ணன் என்றால் கருப்பன் எனப்பொருள் (கிருஷ்ண > கண்ஹ, பிராகிருதத்தில்). காளமேகம் வரையாது வழங்கும் கருமுகில். கண்ணபெருமானுக்கு திருவரங்கம் ஒன்றுதான் ஊராம். ஆனால், காளமேகத்துக்கோ ஊர் எண்ணாயிரம் (8000!) என்கிறது
பழைய கல்வெட்டு. இன்றைய எண்ணாயிரம், டாக்டர் இரா. கலைக்கோவன் கட்டுரை:
http://www.varalaaru.com/Default.asp?articleid=359

திருவானைக்கா உலா: 3 பதிப்புகள் உண்டு. 1870கள், பின்னர் மு. அருணாசலம், இன்னும் ஒருபதிப்பு - சைவ ஆதீனம். இருக்கின்றன, தட்டெழுதலாம்.

சித்திரமடல்: 1880-ல் அச்சானது. பின்னர் ஆழ்வார் திருநகரிப் பிரதிப்படி வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் 1948-ல் பெ. தூரனின் கோவை புதுமலர் நிலையம் மூலம் பதிப்பானது. இரண்டும் ஒப்பிட்டு 1978-ல் கழக வாயிலாகவும் வெளியானது. தட்டெழுதலாம்.

அன்புடன்,
நா. கணேசன்

இரவாவின் காளமேகப் பாட்டுரை

முத்தமிழ் குழுமத்தில் முனைவர் இர. வாசுதேவன் அவர்களின் உரை.

மாக்கைக்கு இரங்கும் குருகும், வளர்சக்ர வாகப்புள்ளும்
தாக்கச் சரபம் குழைந்தது எவ்வாறு? சகதலத்தை
ஆக்கிப் பெருக்கித் திருஅறச் சாலையில் அன்னம்இட்டுக்
காக்கைக்கு ஒரு கொக்கின் கீழே இருக்கும் கருங்குயிலே!


உரை:


நின் பெருமை பொருந்திய கைகளிலே யிருந்து ஒலிக்கும் வளைகளும், வளர்கின்ற சக்கரவாகப் பறவையினைப் போன்றதாக விளங்கும் தன பாரங்களும், அழுத்தமாகப் பொருந்தித் தாக்கிய விடத்துச் சிங்கத்தைத் தாக்கி யழிக்கும் சிம்புள் என்னும் வடிவை மேற்கொண்ட சிவபெருமானின் வலிய திருமேனியும் குழைந்து போயினதே!


அதுதான் எப்படியோ?


உலகத்தைப் படைத்து வளம் பெருக்கி அழகான அறச்சாலையிலே அனைவருக்கும் உணவும் அளித்து உயிர்களைக் காக்கும் பொருட்டாக, ஒப்பற்ற மாமரத்தின் கீழே அமர்ந்து, தவமிருக்கும், கருமை நிறமும், குயிலினும் இனிய குரலும் உடையவளான உமையே! அதனை எனக்குச் சொல்வாயாக!


அன்புடன்
இரவா
http://thamizhkkuil.blogspot.com/
http://thamizmandram.blogspot.com/
www.thamizhkkuil.com

யூனிகோடு தளத்தில் தமிழ் குறியேற்றம் பற்றிய அறிவிப்பு

இன்று ரிக் மெக்காவனின் மடலொன்றின்படி,தமிழ் குறியேற்றம் பற்றிய அறிவிப்பு ஒன்றைக் காணலாம். "A new FAQ page on Tamil issues has recently been added:
http://www.unicode.org/faq/tamil.html "

Unicode Named Character Sequences தமிழின் மெய்யெழுத்துக்களைச் சேர்த்தலாமா? என்று பலமுறை யுனிகோட் கன்சார்த்தியத்தாரிடம் கேட்டிருக்கிறேன். இப்பொழுது அதற்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று எண்ணுகிறேன்.

மாலத்தீவு எழுத்துக்கள் அரபி எழுத்துக்களைப்போல் இருந்தாலும் தமிழின் தாக்கம் உண்டு. தமிழுக்கு மெய்யெழுத்துக்கள் code chart-ல் இல்லாதது போல, தானா எழுத்துக்களுக்கு யுனிகோட் அதற்கு உயிர் எழுத்துக்கள் இல்லாமல், வெறும் உயிரெழுத்து மாத்திரைகளைத் (vowel signs) தந்துள்ளது. மாலத் தீவு எழுத்துக்களுக்கும் தனி உயிரெழுத்துக்களின் தொடர்களை அதிகாரப்பூர்வமாக்க விண்ணப்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.
http://www.unicode.org/charts/PDF/U0780.pdf

நா. கணேசன்

காஞ்சி காமாட்சியிடம் காளமேகத்தின் கேள்வி

காளமேகப் புலவர் 6 பறவைகள் வரும்படியாக ஒரு பாடல் செய்திருக்கிறார்: நாரை (குருகு), சக்ரவாகம், சிம்புள் (சரபம்), காக்கை, கொக்கு, குயில். இறுதி மூன்றும் ஈற்றடியிலே இருப்பது அதன் சிறப்பம்சம்.

மாக்கைக்கு இரங்கும் குருகும், வளர்சக்ர வாகப்புள்ளும்
தாக்கச் சரபம் குழைந்தது எவ்வாறு? சகதலத்தை
ஆக்கிப் பெருக்கித் திருஅறச் சாலையில் அன்னம்இட்டுக்
காக்கைக்கு ஒரு கொக்கின் கீழே இருக்கும் கருங்குயிலே!


காஞ்சியில் கம்பா நதிக்கரையில் மணலால் இலிங்கம் தாபித்து உமையம்மை வழிபடுகையில் வெள்ளம் வர, சிவலிங்கத்தைத் தழுவினார். அதனால் பிருதுவித்தலம் என்ற பெயரும், வளைத்தழும்பு போன்றவையால் தழுவக் குழைந்தநாதர் என்ற பேரும் உண்டு என்கிறது தலபுராணம். சுந்தரமூர்த்தி நாயனார் கச்சியில் கண்பெற்று இக்கதையைச் சொல்லியிருக்கிறார்:

         எள்கல் இன்றி இமையவர் கோனை
                  ஈசனை வழிபாடு செய்வாள் போல்
         உள்ளத்து உள்கி உகந்து உமைநங்கை
                  வழிபடச் சென்று நின்றவா கண்டு
         வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி
                  வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட
         கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
                  காணக் கண் அடியேன் பெற்றவாறே!

                                                                       சுந்தரர் தேவாரம்

சரி, காளமேகம் பாட்டுக்கு வருவோம்.
பிற்காலச் சோழர் காலக் கோயில்களில் (உ-ம்: தாராசுரம் (குடந்தை) ) நரசிம்மரை அடக்க சிவபிரான் சரபேசுவரராகத் தோன்றினார் என்னும் சிற்பங்களைக் காணலாம். சரபம் ஒரு வலிய பறவை, மூக்கு கருடன் போலேயும், சிறகுகள் கொண்டதாகவும், சிங்கம் போன்ற உருவமுடனும் இருப்பதான கற்பனை வடிவம். திருபுவனம் என்ற ஊரில் உள்ள சரபமூர்த்தியின் படிமம் வெகு அழகு. கண்டபேரண்டப் பறவையாகப் பெருமாள் வந்து சரபம் அடங்கிற்று என்னும் வைணவக்கதையும் உண்டு.

குருகு என்றால் நாரை. வெண்ணிற சங்குகளால் வளையல்கள் சிந்துநதி நாகரீகந்தொட்டு அணிந்துள்ளனர். சங்க இலக்கியங்களில் சங்கின் வளையல்களைப் பரக்கக் காணலாம். மாக்கைக்கு இரங்கும் கை = மகிமை பொருந்திய பிராட்டியின் கைகளில் ஒலிக்கும் வளைகளின் தழும்பும், சக்கிரவாகப் பறவைகள் சோடியாக வாழ்வன, இணைபிரிந்தால் உயிர்துறக்கும். சக்கரவாகம் என்பது நகிற்சுவடு இப்பாட்டில். சக்கிரவாகத்தின் சுவடுகளாலும் எவ்வாறு சரபப்புள் குழைந்தது? என்று அம்பிகையை முன்னிறுத்திக் கவிஞர் கேட்கிறார். தழுவக் குழைந்த புராணம் பேசப்படுகிறது:
மாக்கைக்கு இரங்கும் குருகும், வளர்சக்ர வாகப்புள்ளும்
தாக்கச் சரபம் குழைந்தது எவ்வாறு?


காமாக்‌ஷி அம்மன் அன்னச்சாலை நாட்டிக், கணவன் உட்பட உலகத்திற்கே படி அளந்தாள். காக்கை = (உலகைக்) காத்தல். கொக்கு = மாமரம், காஞ்சியில் மாமரம் தலவிருட்சம். அதனால் வடமொழியில் ஏகாம்ரேசுரர், (ஏகாம்பரம்) என்று பெயர். ஆம்ரம் = மாமரம். காமாட்சிதன் அண்ணன் விஷ்ணு போலக் கருத்த கருங்குயில். சாதாரணமாக, குயில் மாமரத்தில் மேல் இருக்கும். கச்சியிலோ குயில் போலும் அன்னை மாமரத்தின் கீழ் வீற்றிருக்கிறாள் என்கிறார் கவிஞர்.

                                                                                                  சகதலத்தை
ஆக்கிப் பெருக்கித் திருஅறச் சாலையில் அன்னம்இட்டுக்
காக்கைக்கு ஒரு கொக்கின் கீழே இருக்கும் கருங்குயிலே!

(நம்மைக் காத்தற்பொருட்டாய் மாவடி வைகும் குயிலாகிய அம்மையே!).

காளமேகப் புலவர் காஞ்சி காமாட்சி அம்பிகைமேல் சொல்லியது:
மாக்கைக்கு இரங்கும் குருகும், வளர்சக்ர வாகப்புள்ளும்
தாக்கச் சரபம் குழைந்தது எவ்வாறு? சகதலத்தை
ஆக்கிப் பெருக்கித் திருஅறச் சாலையில் அன்னம்இட்டுக்
காக்கைக்கு ஒரு கொக்கின் கீழே இருக்கும் கருங்குயிலே!


இன்னும் சில பழைய பாடல்களைப் பார்க்கலாமா?

நா. கணேசன்