ஒலிநாடா விடுதூது

ஒலிநாடா பெரிய அறிவியற் சாதனை, இந்திய மாந்தருக்குப் பலவகையில் பயன்படுவது. பல பெரிய பாடகர், அறிஞர் குரல்களை இன்றும் நம்மால் கேட்க முடிகிறதாகில் ஒலிநாடாவே துணை.

மனைவிக்கு மத்தியகிழக்கு நாடான ஏமனிலிருந்து அனுப்பிய ஒலிநாடாவுடன் கவிஞர் இலந்தை இராமசாமியார் இயற்றிய ஒலிநாடா விடுதூதை என்னிடம் தந்தார். அரிய தூதுப்பொருள் கொண்டு பாடிய இத்தூதை அனுப்பிய ஆசிரியர் மடலில் குறிப்பிட்டது:

"ஒலிநாடா விடு தூது 1987ல் ஏமனில் இருந்த போது எழுதியது. தூதுப் பாடல்கள் பொதுவாக கலிவெண்பாவில்தான் எழுதப்பட வேண்டும். ஆனால் புதியன புகுதல் முறையில் எளிமையாக இருப்பதற்காக அகவலில் எழுதியுள்ளேன் - இலந்தை".

ஒலிநாடா விடுதூது
----------------------------------

இந்திய மண்ணில் இருக்கும் எனது
சிந்தை நிறைந்த தேவிக் கெதனைத்
தூதாய் அனுப்ப? தொடர்ந்த சிந்தனை
தோதாய்ப் பலப்பல சொல்லிச் சென்றது.
எண்ணி எண்ணி எங்கும் தேடினேன்
உண்ணா துறங்காது உள்ளே தேடினேன்
இலக்கியம் தன்னில் எடுத்துச் சொன்ன
பலப்பல தூதுகள் பயன்பட மாட்டா!
கிளியும் புறாவும் கிளரல கன்னமும்
எளியேன் கண்ணில் எதிர்ப்பட வில்லை
காற்றைத் தூதாய்க் கருதினேன், ஆனால்
மாற்றிக் கொண்டேன், மலைகளில் மோதி
ஆற்றல் அழிந்தே அடங்கிடக் கூடும்
ஊற்றை விழுங்கி உயரே மிதக்கும்
மேகம் தன்னை விடலாம் எனிலோ
தேகம் வெளுத்துத் திரியும் மேகம்
போகா தென்றே புந்தியில் கொண்டேன்
வாகாய்ப் புடவை வாங்கி அதனை
அனுப்பலாம் என்றே ஆலோ சித்தேன்
வனிதையின் முன்னே புடவை வந்தால்
புகல்வதைக் கேட்கவா பொறுமை இருக்கும்?
நிகழ்வதை மனத்தில் நிறுத்திப் பார்த்தேன்
என்ன செய்வதென் றெண்ணி யிருக்கையில்
என்முன் அங்கே இறைந்து கிடந்த
ஒலிநா டாக்கள் உற்றுப் பார்த்தன
நலமாய் இவற்றை நாமங் கனுப்பினால்
என்ன என்றே எண்ணிப் பார்த்தேன்
இந்நாள் வரையில் இலக்கியம் காணாப்
புதுமை இதுவெனப் பூரிப்படைந்தேன்
விதவித மாக விழுந்து கிடந்த
அவற்றை எடுத்தேன், அடுக்கி வைத்தேன்
எந்தப் பதிவும் எழுதப் படாத
அந்த நாடா அமைதியாய் இருந்தது
தூதுகள் எல்லாம் சொன்னதை நெஞ்சில்
தோதுற வாங்கிச் சுமந்து சென்றே
ஏற்றி இறக்கி எடுத்துச் சொல்லும்.
மாற்றி உரைக்கும் வர்க்கமும் உண்டாம்
சொன்ன குரலைச் சுமந்து செல்லும்
உன்னதத் தூதாய் ஒன்றும் இல்லையே!
என்ஒலி நாடா இதனைச் செய்யும்.
சொன்னதை மாற்றிச் சொல்வதும் இல்லை
பாசமும் பரிவும் பழகிய முன்னாள்
நேசமும் அன்பின் நெருக்கமும் குரலில்
இழைவதை மாற்றா தெடுத்துச் செல்லும்
விழுமிய நாடா மேன்மை உணர்ந்தேன்
இதையே தூதாய் ஏற்றுக் கொள்கிறேன்
பதிவுக் கருவி பலநாள் முன்பு
வாங்கிக் கொடுத்து வைத்திருப் பதனால்
ஆங்கிதைக் கேட்க அல்லல் இல்லை
பதமாய் அதனிடம் பகரத் தொடங்கினேன்
"புதுமையே, நாடாப் புரட்சியே, ஒலியைப்
பதிவு கொள்ளும் பண்புக் கனிவே
அதிசயத் தூதே, அன்புக் குரலில்
எதையும் உரைக்கும் இனிய தோழியே
உணர்ச்சியைக் கூட உலையா தளிக்கும்
குணத்தின் இழையே, குன்றா ஒலியே
ஓடும் கணங்கள் ஒவ்வொன்றுள்ளும்
பாடும் பரிவே, பாசப் பிடிப்பே
உன்னை என்றன் உற்ற தூதாய்
என்றன் துணைவி இடத்தனுப்புகிறேன்
இங்கே இந்த ஏமன் மண்ணில்
தங்கும் என்றன் சரித்திர மெல்லாம்
அங்கே அவளிடம் அமைதியாய்ச் சொல்கநீ
எங்கும் தங்காது இந்தியா செல்க
சென்னை நகரம் சென்றபின் அங்கே
என்றன் வீட்டை எப்படிக் காண்பது
என்று கவலை ஏதும் வேண்டாம்
சென்னை விமான நிலையம் அருகே
தில்லை கங்கா நகரம் சென்றிடு
எல்லை யின்றி எங்கும் கொசுக்கள்
தொல்லை கொடுக்கும், சோர்ந்து விடாதே!
ஊர்ச்சாக் கடைகள் ஒருதெரு வோரம்
கூடிக் குலவும் குலைந்து விடாதே!
அந்தத் தெருவில் ஆதவன் உதிக்கும்
திசையை நோக்கித் தெரியும் வாயில்.
வீட்டுக் குள்நீ விரைந்திடும் முன்பு
அங்குள நிலையை அறிதல் அவசியம்
காலை நேரம் கச்சித மில்லை
வேகமும் எரிச்சலும் விதண்டா வாதமும்
திட்டும் குட்டும் தினமும் நடக்கும்
மாலைப் பொழுதும் வாகா யிராது
வேலை முடிந்து வீடு வந்தபின்
அந்தக் களைப்பின் அசதி யினாலே
வரவேற் பிற்கு வகையிருக் காது
இரவில் எட்டு மணிக்கு மேலே
படிப்ப தாகப் பாவனை செய்து
பையனும் பெண்ணும் பல்படச் சண்டை
போட்டுக் கொண்டு பொழுதைக் கழிப்பர்
ஒன்பது மணிக்குள் உறங்கச் செல்லுவர்
அந்த நேரம் அமைதி யாக
சிந்தை செய்து தேவி இருப்பாள்
கடந்த காலக் காட்சிகள் தம்மை
எண்ணிப் பார்த்தே ஏங்கி இருப்பாள்
தேவியைப் பார்த்துச் செய்தி சொல்லிடு
எப்படி இருப்பாள் என்றா கேட்கிறாய்?
இந்திய நாட்டின் எலுமிச்சை வண்ணம்
பருத்த மூக்கு, படிந்த செவ்வாய்
குறுகி உயர்ந்த கோல நெற்றி
ஏறும் வயதை எடுத்துக் காட்ட
எட்டிப் பார்க்கும் எழில்நரை உண்டு
எட்டு மாதங்கள் முன்னே பார்த்தது
எவ்வளவு பருமன் என்பதை அறியேன்
அடையாள மாக அவளிடம் சொல்ல
இரகசிய வார்த்தை, இங்குவா சொல்கிறேன்
"ஆடிக் கிருத்திகை" அதனைச் சொல்கநீ
அப்புறம் பாரேன் அவள் வரவேற்பை
படபட என்பாள் பதறி விடாதே
படபடப் புள்ளே பாசம் உண்டு
கோபப் படுவாள் குலைந்து விடாதே
கோபத் தூடே குணமும் உண்டு
ஏமன் நாட்டில் இருக்கும் என்றன்
நிலைமையைச் சற்றே நெருங்கிச் சொல்கநீ
ஒடுக்கும் குளிரில் உடலைக் குறுக்கி
"மங்கிக் கேப்பில்' தலையை மறைத்து
இறுகிய உடைகள் இரண்டு மூன்றுக்குள்
மேனி குறுக்கி மெத்தையின் மீது
போர்வைக்குள்ளே புதைந்து கிடக்கும்
என்றன் நிலையை எடுத்துச் சொல்லுநீ
கடந்த காலக் காட்சிகள் எல்லாம்
உடலில் சூட்டை உற்பத்தி செய்ய
அவளை நினைந்தே அவதிப் படுவதைத்
தவறா தவளிடம் சாற்றிட வேண்டும்
பின்னாள் வாழ்க்கை பீடுடன் அமைய
இந்நாள் துன்பம் ஏற்றிடல் அவசியம்
வியாகூலம் வேண்டாம், வெற்றி என்பது
தியாகத்தில்தான் தெரியும் எனச்சொல்
காலையில் பையன் கண்விழிக்கையிலே
பாடம் படிக்கும் பணியைச் சொல்கநீ
பெண்ணிடம் கல்விப் பெருமையைக் கூறி
அண்ணனை விடவும் அதிகம் மதிப்பெண்
பெற்றிட வேண்டும் என்பதைக் கூறுநீ
என்றன் குரலை எடுத்துச் செல்வதால்
மாற்றி உரைக்கும் வகையுனக் கில்லை
கூட்டி உரைக்கும் குணமுனக் கில்லை
குறைத்துச் சொல்லும் கொள்கையும் இல்லை
என்றன் தூதே, நம்பிச் சொல்கிறேன்
செய்தியைச் சொல்கையில் சிக்கி விடாதே
மாட்டிக் கொண்டு வார்த்தை விடாதே
வாழிய தூதே, வாழிய நன்றே!

. . . . இலந்தை இராமசாமி, 1987,
. . . . ஏமன் நாட்டில் இயற்றியது.


காலத்தின் கட்டாயமாக, தொழில் நிமித்தமாகப் பிரிந்து வாழ்வது பலருக்கும் வாழ்வின் ஒருபகுதி ஆகிவிட்டது. பிரிவின் துயரைப் பதிக்கும் நாரை விடுதூதுத் தனிப்பா (அகவல்)அழியாதது.

பின்னாளில் தம்பதியர் பிரிவைச் சுந்தரக் கவிராயர் என்பவர் பாடுகிறார்:

நறையொழுகுங் குழலாளை அமுதொழுகும் மொழியாளை நயனவேலிற்
பிறையொழுகும் நுதலாளைப் பிரிந்திருக்க இப்பிறப்பில் பெரிதும்யான்செய்
குறையெதுவோ மதன்கணைக்கு மிகவருந்த எனைவிதித்த கொடியோனான
மறையவனும் கலைமகளைப் பிரிந்திருந்தால் தெரியுமிந்த வருத்தந்தானே!


கலிவெண்பாவில் இயன்ற சில பழைய தூதுகள்:
தமிழ் விடுதூது:
http://www.tamil.net/projectmadurai/pub/pm0040/tviTutUtu.pdf

கோயம்புத்தூர்
பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது:
http://www.tamil.net/projectmadurai/pub/pm0183/kaNNaaTi.pdf

நா. கணேசன்

பெற்றோர் பெற்ற திருமண வாழ்த்து

என் பெற்றோர் திருமண நாள் 9-நவம்பர்-1956.
அந்நாளில் வித்துவான் மாரி செட்டியார் பாடிய வாழ்த்துப்பா.
வித்துவான் பெயரர் கோவைக் கல்லூரியில் தமிழ்ப்
பேராசிரியராக விளங்குகிறார் என்று கவிஞர் சிற்பி
சொன்னார். அன்புடன், நா. கணேசன்

--------------------------------------

மாணிக்க - மரகதத்
திருமண வாழ்த்து

மண நாள்: துன்முகியாண்டு ஐப்பசி 24

வாழ்த்து

மங்கலஞ் செறிந்து வளம்பல வோங்கி
எங்கணும் புகழும் எழிற்பதி யாகும்
பண்புள புரவி பாளைய மருங்கில்
தண்பொழிற் சோலை தனியெழிற் காட்டும்
கழனிகள் புடைசூழ் காளியா புரத்தில்

ஓங்கிய சிறப்போ டொல்கா நல்லிசை
வீங்கிய விழுப்புகழ் வேளாண் குடியில்
தோன்றிய செல்வன் தூநெறி யாளன்
ஆன்றமைந் தொழுகும் அறிவின் திறலோன்
மாண்புடை நாக மாணிக்க மென்னும்
சுப்பிர மணியத் தோன்றல் தானும்
திருநிறை செல்வி மரகத மடந்தையைச்
செங்கரம் பற்றித் திருமண மென்னும்
மங்கல மணிந்தனன் மனமகிழ் வோடும்

ஈங்கிவர் வாழ்க்கை யோங்கி யுயர்க
நீங்காச் செல்வமும் நிறைநாட் பேறும்
இன்னுயிர் மக்கள் எழில்நலச் செல்வமும்
மன்னுயி ரோம்பும் மதிநல வளனும்
இன்ன பலவும் இயைபுடன் பெற்று
சுற்றமும் நட்பும் சூழ்தரச் சிறந்து
வாழிய மகிழ்ந்தென வாழ்த்துவன்
ஊழி முதல்வனை யுளமதிற் கொண்டே.


பொள்ளாச்சி அன்பு சிறக்க.
9-11-1956 வித்வான் ப. மாரி செட்டியார்

விநாயகர் வாழ்த்து

எண்ணிய எண்ணியாங்கு எய்துப
கண்ணுதற் பவள மால்வரை பயந்த
கவள யானையின் கழல்பணி வோரே.


(தொல்காப்பியம், தமிழ்நாவலர் சரிதை, உரிச்சொனிகண்டு முதலிய நூல்களின் தொடக்கத்துக் காணப்படுகின்றன. - பெருந்தொகை).

உரிச்சொல் நிகண்டு செய்தவர் கொங்குநாட்டுக் காங்கேயர். ஆதாரம்: மெக்கென்சி ஆவணங்கள்.