உ. வே. சாமிநாதையர் 1936-ஆம் ஆண்டில் பாரதியார் பற்றி ஆற்றிய பிரசங்கம்

1936-ஆம் ஆண்டில் அகில இந்தியக் காங்கிரஸின் பொன்விழாவில் சென்னைக் காங்கிரஸ் மண்டபத்தில் பாரதியாருடைய படம் திறக்கப்பட்டபோது ஐயரவர்கள் (தம் 81-ஆம் பிராயத்தில்) செய்த பிரசங்கம்):
**********

சுப்பிரமணிய பாரதியார்   

தாம் பிறந்த தேசம், வாழ்ந்த இடம், பழகும் மனிதர்கள் முதலிய தொடர்புகளால் ஒருவருடைய வாழ்க்கையில் சில பழக்கங்கள் அமைகின்றன.  ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் எட்டயபுரத்திற் பிறந்தவர்.  இவர் பிறந்த பாண்டி நாடு தமிழுக்கு உரிய நாடு.  தமிழ் நாடென்று பழைய காலத்தில் அதற்குத் தான் பெயர். கம்பராமாயணத்தில் ஆஞ்சநேயர் முதலியவர்கள் சுக்கிரீவனால் தென் தேசத்துக்கு அனுப்பப்பட்ட போது அங்கே உள்ளவற்றைச் சுக்கிரீவன் சொல்லுவதாக உள்ள பகுதியொன்றுண்டு; அங்கே ஒரு பாட்டில்,
"தென்றமிழ்நாட் டகன்பொதியிற் றிருமுனிவன்
   தமிழ்ச்சங்கம் சேர்கிற் பீரேல்
 என்று மவனுறை விடமாம்"
என்று அவன் கூறியதாக இருக்கிறது; "நீங்கள் பாண்டிய நாட்டை அடைந்தால், அங்கே உள்ள பொதியில் மலைக்கருகில் செல்லும்பொழுது போகும் காரியத்தை மறந்து விடக் கூடாது; ஏனென்றால் அம்மலையில் அகத்தியருக்குரிய தமிழ்ச்சங்கத்தை அணுகினால் தமிழ் நயத்தில் ஈடுபட்டுவிடுவீர்கள்" என்று அவன் சொன்னதாகத் தெரிகிறது.  இதனால் பாண்டி நாட்டின் பெருமை வெளிப்படுகிறதல்லவா?
பாரதியார் பிறந்த எட்டையபுர ஸமஸ்தானத்தில் பல வித்துவான்கள் இருந்தார்கள்.  அந்த ஸமஸ்தானத்து வித்துவானாகிய கடிகை முத்துப் புலவருடைய பெருமையை யாரும் அறிவார்கள்.  அவருடைய மாணாக்கருள் ஒருவராகிய உமறுப்புலவரென்னும் முகம்மதிய வித்துவான் முகமத் நபியின் சரித்திரமாகிய சீறாப் புராணத்தை இயற்றியிருக்கிறார்.  அந்நூல் ஒரு தமிழ்க்காவியமாக இருக்கிறது.  எட்டையபுரத்தில் அங்கங்கே உள்ளவர்கள் தமிழ்ப் பாடல்களைச் சொல்லியும் கேட்டும் இன்புற்று வருபவர்கள்.  இதனால் பாரதியாருக்கு இளமை தொடங்கியே தமிழில் விருப்பம் உண்டாயிற்று.  அது வர வர மிக்கது.
இவர் இளமையில் ஆங்கிலக் கல்வி கற்றார்.  தம்முடைய தமிழறிவை விருத்தி செய்துகொள்ளும் பொருட்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்திற் சேர்ந்து சில காலம் படித்தார்..  சிறு பிராயமுதற்கொண்டே இவருக்குச் செய்யுள் இயற்றும் பழக்கம்  உண்டாயிற்று.  அக்காலத்திலேயே தேசத்தின் நிலைமை இவருடைய மனத்திற் பதிந்தது.  தெய்வத்தினிடத்திலும், தேசத்தினிடத்திலும், பாஷையினிடத்திலும் அன்பில்லாதவர்களைக் கண்டு இவர் மிக வருந்தினார்.  முயற்சியும் சுறுசுறுப்பும் இல்லாமல் வீணாகக் காலத்தைப் போக்குபவர்களை வெறுத்தார். புதிய புதிய கருத்துக்களை எளிய நடையில் அமைத்துப் பாடவேண்டுமென்ற உணர்ச்சி இவருக்கு வளர்ந்துகொண்டே வந்தது.
இவர் சிலகாலம் சேதுபதி ஹைஸ்கூலில் பண்டிதராக இருந்ததுண்டு.  பிறகு, சென்னைக்கு வந்தார்.  இங்கே ஸ்ரீ ஜி. சுப்பிரமணிய ஐயர் இவரிடத்தில் ஈடுபட்டுச் 'சுதேசமித்திரன்' உதவி ஆசிரியர்களுள் ஒருவராக இருக்கச் செய்தார்.  கட்டுப்பாடான வேலைகளைச் செய்வதிற் பிரியமில்லாத பாரதியார் அந்த வேலையில் அதிக காலம் இருக்கவில்லை
சென்னையில் இவர் இருந்த காலத்தில், நான் இவரோடு பலமுறை பழகியிருக்கிறேன். பிரசிடென்ஸி காலேஜில் வாரந்தோறும் நடைபெறும் தமிழ்ச் சங்கக் கூட்டத்துக்கு வருவார்; பேசுவார்; புதிய பாட்டுக்களைப் பாடுவார். வருஷ பூர்த்திக் கொண்டாட்டங்களில் புதிய செய்யுட்கள் செய்து வாசிப்பார். ஒரு முறை, ஸ்ரீ வி. கிருஷ்ணசாமி ஐயர் தலைமையில் அச்சங்கத்தில் ஜி. ஏ. வைத்தியராமையர் பேசினார். ஸ்ரீ  கிருஷ்ணசாமி ஐயருடைய தமிழபிமானமும், தமிழ் வித்துவான்களை ஆதரிக்கும் இயல்பும் தெரியாத பலர், `இவருக்குத் தமிழ்ப் பாஷையில் பழக்கம் இல்லையே; தமிழில் என்ன பேசப் போகிறார்?' என்று நினைத்தனர்.  அவரோ, "தமிழைப் பற்றி அதிகமாகப் பேசுவானேன்?  உலகத்திலுள்ள பல பாஷைகளில் மொழிபெயர்க்கப்பட்டு விளங்கும் திருக்குறளைத் திருவள்ளுவர் இயற்றிய பாஷை இந்தப் பாஷை.  நவரஸமும் பொருந்திய இராமாயணத்தைக் கம்பர் செய்த பாஷை இது.  எல்லோருடைய மனத்தையும் கரைத்து உருக்கித் தெய்வ பக்தியை உண்டாக்கும் தேவாரத்தை நாயன்மார்கள் இயற்றிய பாஷை இது.  ஆழ்வார்கள் திவ்வியப் பிரபந்தத்தைப் பாடிய பாஷை இது" என்று உத்ஸாகத்தோடு பிரசங்கம் செய்தார்.  கேட்ட யாவரும் ஆச்சரியமுற்றார்கள்.  அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த பாரதியார், அந்தப் பிரசங்கத்தில் மிகவும் ஈடுபட்டார்.  பின்பு கிருஷ்ணசாமி ஐயர் பாஷையின் பெருமையையும், தேசத்தின் பெருமையையும் வெளிப்படுத்தி யாவருக்கும் விளங்கும்படியான பாட்டுக்களைப் பாடியனுப்ப வேண்டுமென்று என்னிடம் சொன்னார்.  எனக்கு அவகாசம் இல்லாமையால் வேறொருவரை அனுப்பினேன்.  அவருடைய பாட்டுக்கள் அவருக்குத் திருப்தியை அளிக்கவில்லை. பிறகு பாரதியாரே அவருடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்தார்.  ஸ்ரீ கிருஷ்ணசாமி ஐயரது பிரசங்கத்தில் இருந்த கருத்துக்களே பாரதியார், "கம்பன் பிறந்த தமிழ்நாடு" என்பது போன்ற பகுதிகளை அமைத்துப் பாடுவதற்குக் காரணமாக இருந்தன.
தேசத்தின் பெருமையை யாவரும் அறிந்து பாராட்டும்படியான பாட்டுக்களைப் பாடவேண்டுமென்ற ஊக்கம் இவருக்கு நிரம்ப இருந்தது.  அதனால் இவர் பாடிய பாட்டுக்கள் மிகவும் எளிய நடையில் அமைந்து படிப்பவர்களைத் தம்பால் ஈடுபடுத்துகின்றன.  இவர் உண்மையான தேச பக்தியுடன் பாடிய பாட்டுக்களாதலின் அவை இவருக்கு அழியாத பெருமையை உண்டாக்குகின்றன.

பாரதியார் தேசீயப் பாட்டுக்களைப் பாடியதோடு வேறு பல துறைகளிலும் பாடியிருக்கிறார்.  இசைப் பாட்டுக்கள் பலவற்றைப் பாடியிருக்கிறார்.  இவர் சங்கீதத்திலும் பழக்கம் உடையவர்.
கவிகளின் தன்மையை உபமானமாக வைத்து ஒரு புலவர்,
"கல்லார் கவிபோற் கலங்கிக் கலைமாண்ட கேள்வி
 வல்லார் கவிபோற் பலவான்றுறை தோன்ற வாய்த்துச்
 செல்லாறு தோறும் பொருளாழ்ந்து தெளிந்து தேயத்
 தெல்லாரும் வீழ்ந்து பயன்கொள்ள இறுத்த தன்றே"
என்று சொல்லியிருக்கிறார்.  அதற்கேற்ப விளங்குபவை இவருடைய செய்யுட்கள். இப்பாட்டில், "தேசத்து எல்லாரும் வீழ்ந்து பயன் கொள்ள" என்றது இவருடைய பாட்டுக்களுக்கு மிக்க பொருத்தமுடையதாகும். (வீழ்ந்து - விரும்பி).

பாட்டுக்களின் பாகம் ஐந்து வகைப்படும். அவை நாளிகேர பாகம், இக்ஷுபாகம், கதலீபாகம், திராக்ஷாபாகம், க்ஷீரபாகம் என்பனவாம்.  நாளிகேரபாக மென்பது தேங்காயைப் போன்றது. தேங்காயில் முதலில் மட்டையை உரிக்கவேண்டும்; பிறகு ஓட்டை நீக்கவேண்டும்; அதன் பிறகு துருவிப் பிழிந்து வெல்லம் சேர்த்துச் சாப்பிட வேண்டும். இந்த வகையிலுள்ள பாட்டுக்கள் சில உண்டு.  அதைப் பாடுபவர்கள் தம்முடன் அகராதியையும் எடுத்துக் கொண்டு போகவேண்டும்.  சில சமயங்களில் அவர்களுக்கே தாங்கள் செய்த பாட்டுக்களுக்கு அர்த்தம் விளங்காமற் போய்விடும்.

இக்ஷுபாகமென்பது கரும்பைப் போன்றது.  கரும்பைக் கஷ்டப்பட்டுப் பிழிந்து ரஸத்தை உண்ணவேண்டும்.  கதலீபாகமென்பது வாழைப்பழத்தைத் தோலுரித்து விழுங்குவது போலச் சிறிது சிரமப்பட்டால் இன்சுவையை வெளிப்படுத்துவது. திராக்ஷா பாகம் முந்திரிப் பழத்தைப் போல் எளிதில் விளங்குவது. க்ஷீரபாகம் அதனிலும் எளிதில் விளங்குவது; குழந்தை முதல் யாவரும் உண்பதற்குரியதாகவும், இனிமை தருவதாகவும் உடலுக்கும் அறிவுக்கும் பயன் தருவதாகவும் இருக்கும் பாலைப்போல் இருப்பது.  பாரதியாருடைய கவிகள் க்ஷீர பாகத்தைச் சார்ந்தவை.  சிலவற்றைத் திராக்ஷாபாகமாகக் கொள்ளலாம்.

ஆங்கிலம், வங்காளம் முதலிய பாஷைகளிற் பழக்கமுடையவராதலால் அந்தப் பாஷைகளிலுள்ள முறைகளை இவர் தம் கவிகளில் அமைத்திருக்கிறார்.  இவருடைய கவிதைகள் ஸ்வபாவோக்தியென்னும் தன்மை நவிற்சியணியை யுடையவை.  பழைய காலத்தில் இருந்த சங்கப் புலவர்கள் பாடல்களில் தன்மைநவிற்சிதான் காணப்படும்.  அநாவசியமான வருணனைகளும் சொல்லடுக்குகளும் கவியின் ரஸத்தை வெளிப்படுத்துவன அல்ல.  சில காலங்களில் சில புலவர்கள் தங்கள் காலத்திலிருந்த சில ஜமீன்தார்கள், பிரபுக்கள் முதலியவர்களுடைய வற்புறுத்தலுக்காக அநாவசியமான வருணனைகளை அமைத்ததுண்டு.

பாரதியாருடைய பாட்டுக்களில் தெய்வ பக்தியும் தேச பக்தியும் ததும்புகின்றன.  தனித்தனியாக உள்ள பாட்டுக்கள் இயற்கைப் பொருள்களின் அழகை விரித்தும், நீதிகளைப் புகட்டியும், உயர்ந்த கருத்துக்களைப் புலப்படுத்தியும் விளங்குகின்றன.

இவருடைய வசனத்தைப்பற்றிச் சில சொல்ல விரும்புகிறேன். பாட்டைக் காட்டிலும் வசனத்திற்குப் பெருமை உண்டாயிருப்பதின் காரணம் அது பாட்டைவிட எளிதில் விளங்குவதனால்தான்.  பாரதியாருடைய பாட்டும் எளிய நடையுடையது; வசனமும் எளிய நடையுடையது.  வருத்தமின்றிப் பொருளைப் புலப்படுத்தும் நடைதான் சிறந்தது.  பாரதியாருடைய வசனம் சிறு வாக்கியங்களால் அமைந்தது; அர்த்த புஷ்டியுடையது.  இவருடைய கவிகளின் பொருள் படிக்கும்போதே மனத்துக்குள் பதிகின்றது.  வீர ரஸம், சிருங்கார ரஸம் ஆகிய இரண்டும் இவருடைய பாட்டுக்களில் அதிகமாகக் காணப்படுகின்றன.  பாரதியார் அழகாகப் பேசும் ஆற்றல் வாய்ந்தவர்.

இவருடைய பாட்டுக்கள் எல்லோருக்கும் உணர்ச்சியை உண்டாக்குவன; தமிழ் நாட்டில் இவருடைய பாட்டை யாவரும் பாடி மகிழ்வதனாலேயே இதனை அறிந்து கொள்ளலாம்.  கடல் கடந்த தேசங்களாகிய இலங்கை, பர்மா, ஜாவா முதலிய இடங்களிலும் இவருடைய பாட்டுக்கள் பரவியிருக்கின்றன.  அங்கே உள்ளவர்களில் சிலர் இவரைப் பற்றி எழுத வேண்டுமென எனக்குக் கடிதங்கள் எழுதியதுண்டு. "மணவைமன் கூத்தன் வகுத்தகவி, தளைபட்ட காலுடனே கடலேழையுந் தாண்டியதே" என்று ஒரு புலவருடைய கவியைப்பற்றி வேறொரு புலவர் பாடியிருக்கிறார்.  ஸ்ரீ ராமனுடைய கவியாகிய ஆஞ்சனேயர் ஒரு கடலைத்தான் தாண்டினார்; மணவைக் கூத்தன் கவியோ ஏழு கடல்களையும் தாண்டிவிட்டது.  ஸ்ரீ ராமனுடைய கவி தளையில்லாமல் தாண்டியது; அங்ஙனம் செய்தது ஆச்சரியமன்று.  இந்தப் புலவர் கவியோ, தளையுடைய காலோடு ஏழு கடலைத் தாண்டியது என்கிறார்.  தளையென்பதற்கு விலங்கென்றும் கவிக்குரிய லக்ஷணங்களுள் ஒன்றென்றும் பொருள்.  இந்தப் பாட்டுக்கு இப்போது இலக்கியமாக இருப்பவை பாரதியாருடைய கவிகளாகும்.

பாரதியார் தாம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், ஜனங்களுக்கு நன்மை உண்டாக வேண்டுமென்ற கொள்கையையுடையவர்.  தைரியமுடையவர்.  இவருடைய புகழ்  தமிழ் நாட்டின் புகழாகும்.
(முற்றும்)

நினைவு மஞ்சரி II
நன்றி: வெண்பாவிரும்பி, சந்தவசந்தம், 2010