தமிழ் வளர்ச்சிக்குக் கணினியின் பங்களிப்பு - முனைவர் இர. வாசுதேவன், சென்னை - 2006 (TNF-FeTNA, Texas)

         தமிழ்மொழியின் வளர்ச்சி வரலாற்றில் இயல்பாக நிகழ்ந்த வளர்ச்சிச் செயல்களை விடவும் தமிழின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு திட்டமிட்டு நிகழ்ந்த பணிகள் சிறப்பானவை. பிறமொழியோடு தமிழை ஒப்பிட்டுப் பார்த்து, பிறமொழிக்கு இணையாகத் தமிழ்மொழியில் நிகழ்ந்த வளர்ச்சிப் பணிகளுண்டு. பிறமொழியாளர்களின் தற்பெருமையும், தமிழ்மொழியை இழித்துப்பேசிய கூற்றுகளும், மொழிக் கலப்பும் தமிழ்மொழி வளர்ச்சியெனக் கூறி  நிகழ்ந்த நிகழ்வுகள் தமிழ் மொழி வரலாற்றில் காணக் கிடைக்கின்றன.
            'ஐந்தெழுத்தால் ஒரு பாடை' என்றும், தமிழ் தனித்து இயங்கும் தன்மை அற்றது! என்றும், தமிழைப் பழித்துப் பேசிய கருத்துகளுக்கிடையே தமிழ்மொழி வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ள தமிழறிஞர்கள் எடுத்த முயற்சிகள் ஏராளம். தமிழ்ப்புலவர்கள் இயற்றிய இலக்கியங்கள், களவு போனவை போக எஞ்சியவை காலவெள்ளத்தால் அழிந்து போகாமல் காக்க எடுத்த முயற்சியின் தொகுப்பே பாட்டு, தொகை, மேற்கணக்கு, கீழ்க்கணக்கு, காவியம், காப்பியம், புராணம், பிரபந்தம், திருமுறை, சிற்றிலக்கியம் என்பனவாகும்.
            காலத்துக்குக் காலம் தமிழில் நிகழும் மாற்றங்களுக்கும் வளர்ச்சிப் பணிகளுக்கும் அடையாளம், பழைய இலக்கண இலக்கியங்களுக்கு காலத்துக்கு ஏற்றவாறு உரை காண்பதும், இலக்கண இலக்கியத்தை எளிமைப் படுத்துவதும் அவற்றை இளைய தலைமுறைக்குக் கற்றுத் தருவதுமாகும்.
தமிழ் பாதுகாப்புச் செயல்கள்:
            தமிழ்ப் பயன்பாட்டின் திறன் கருதி, அதனை  நிலைப்படுத்துவதற்காக மொழியளவில் நிகழவேண்டிய பாதுகாப்புப் பணிகள் இன்றியமையாததாகின்றன. பாதுகாப்புப் பணிகளின் தன்மையைக் கொண்டு, அப்பணிகளை அகப்பாதுகாப்பு, புறப்பாதுகாப்பு என வகைப்படுத்தலாம். அகப்பாதுகாப்பு மொழிக்குள் நிகழும் செயலாகவும், புறப்பாதுகாப்பு மொழியைப் பயன்பாட்டு நிலைக்குக் கொண்டு வருவதற்கான செயலாகவும் கூறலாம்.
            தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தடையாக அமைந்தது, பிறமொழி ஆதிக்கமாகும். பிறமொழிக் கலப்பு, திட்டமிட்டு தமிழின் மீது நிகழ்த்தப்பட்ட செயலாகும். பாலி, பிராகிருதம் போன்ற வடமொழிகள் தமிழில் கலந்திருந்தாலும், சமஸ்கிருதமே தமிழ்மீது திணிக்கப்பட்டு ஆதிக்கம் செய்த மொழி எனலாம். கி.பி.3ஆம் நூற்றாண்டளவில் பல்லவர் ஆட்சிக் காலத்தில், சமஸ்கிருத மொழியின் ஆதிக்கத்தால் தமிழ்மொழி மறுக்கப்பட்டது.  கல்விமொழி முதல் கல்வெட்டு மொழிவரை வடமொழியாகவே மாறின.
            திருக்குறளுக்கு உரை எழுதிய பரிதியார்,"தமிழ் பைஸாஸ பாஷை, சமஸ்கிருதம் தேவ பாஷை, தமிழ் அபிவிருத்தியடைந்ததும், அது இந்நாள்வரை ஜீவித்து வருவதும் வடமொழியால்தான்" என்று உரை இயற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

                        நடந்த வரலாற்று நாடக மெல்லாம்
                                    இறந்த தாக எண்ணிக் கொள்வோம்!
                        தடத்தில் பதிந்த தானிய மணியைத்
                                    தேடி யெடுத்து தேவைக்கு வைக்கும்      
                        அடவிக் காட்டின் குருவி எறும்பாய்
                                    அறிவியல் புதுமைக்கு ஆயத்த மாவோம்!
                        உடமை யாய்க்கொண்ட மொழிச்சண்டை வேண்டாம்!
                                    அறிவுச் சந்தைக்கு அணிவகுத் திடுவோம்!

            அறிவியலின் வளர்ச்சியினால்  உள்ளங்கை அளவுக்கு, உலகம் சுருங்கி வருகிறது. அறிவியல் வளர்ச்சியுடன் இணைந்துதமிழ் மொழி  வளர்ந்து பயனாக வேண்டும்.  அதற்காக எடுத்த முயற்சியே இணையத் தமிழ் வளர்ச்சி.  இணையத்தைப் பயன்படுத்தும் உலக மொழிகளில், தமிழ் இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது. இதனை, மேலை கீழை நாடுகளில் பணி நிமித்தமாகப், புலம் பெயர்ந்து சென்றுள்ள தமிழ்ப் பேரினப் பெருங்குடியினர், தமிழுக்குச் சூட்டிய மகுடந்தன்னைக் கருத்தில்  கொள்ள வேண்டும்.
            தமிழகத்திலுள்ள தமிழர்களில் பலர், தமிழைப் பேசவும் எழுதவும் விரும்புவதில்லை. தமிழ்மொழியோடு தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போலத் தமிழ்ப்பெயர்களைத் தம்மக்களுக்குச் சூட்டவும் விரும்பு வருவதில்லை. தமிழில் பேசுவதையே தரக்குறைவாகக் கருதும் தமிழர்கள், தமிழில் கல்வி கற்க முன்வருவார்களா! என்ன?
எழுத்துகளின் சீர்திருத்தம்:
            ஐரோப்பியரின் வருகைக்குப் பின்னர் புதிய அச்சு இயந்திரங்களும் புதிய எழுது கருவிகளும் வந்தடைந்தன. தமிழ் எழுத்தமைப்பிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டன.அச்சு இயந்திரத்தில் தமிழ் எழுத்துகளைப் பயன் படுத்தவும், எழுத்துகளை வேறுபடுத்திக் காட்டவும் எழுத்தமைப்பில் சில மாற்றங்களை உருவாக்கினார், வீரமாமுனிவர். ரகர உயிர் மெய், ரகர ஒற்று (ர்), இருசுழி நெடிற்குறி, எகர, ஒகரக் குறில் ஆகியவற்றின்  வேறுபாடுகளைக் காட்ட  எகரத்திற்குக் கீழே சாய்வுக் கோடும், ஒகரத்தின் இறுதியில் ஒரு சுழியும் ஏற்படுத்தினார். தமிழ் தவிர, அனைத்துப் பாரத மொழியெழுத்துகளிலும் சம்யுக்தாட்சரங்கள் மிகுதி. தொல்காப்பியர், சங்கக் கல்வெட்டுக்களில் காணும் புள்ளிகொண்டு அச்சுநுட்பைத் தமிழுக்குக் கொணர்ந்த வெள்ளையர், கூட்டெழுத்தை  உடைக்கும் புள்ளியுடன் தனிமெய்யை மீட்டுருவாக்கம் செய்தனர். ஓலை ஏடுகளில் புள்ளி இருக்காது, உய்த்துணர்ந்தே படிக்க வேண்டிய நிலையால் ஏற்படும் இன்னல்கள் பல. இத்தொந்தரை அச்சில் இல்லாதொழிந்தது. கூட்டெழுத்து இன்மையால்தான் இந்திய மொழிகளிலே முதன்முதலாகத் தமிழில்தான் அச்சு, தட்டெழுதி, இணையம், ஒளிஉணரி (OCR), யாகூ மடற்குழு போன்ற மேலைநுட்புகள் வந்திறங்கின.
            "வளர்ந்துவரும் அறிவியல் தொழில் நுட்பத் துறைகளில் செய்திகள் யாவற்றையும் தமிழகத்திற்குக் கொண்டு வருதல் வேண்டுமென்றால், தமிழில் உள்ள வரிவடிவம் எல்லாம் ஒரு ஒழுங்குமுறையை கொள்ளாதிருப்பதாகும்" என்று, பாரதி கூறிப் போந்தான். பலமொழிகளை அறிந்த பாரதி நெடுங்கணக்கில் அதிக எண்ணிக்கையில் எழுத்துகள் இருப்பதாகக் கருதவில்லை. புதிய எழுத்துகள் தமிழிற்கு வேண்டும் என்பது அவனின் கருத்தாக இருந்துள்ளது. தமிழில் வர்க்க எழுத்துகள் முறைப்படுத்தப் பட்டிருப்பதால் இன்றைய கணிப்பொறியில் தமிழை எளிமையாகப் பயன்படுத்த இயலுகிறது, என்பது குறிப்பிடத்தக்கது.
            ஒரு காலத்தில், தமிழ்மொழியறிஞர்கள், உலக அரங்கில் தமிழுக்கென்று ஒரு தனியிடம் வேண்டுமென்றால், தமிழில் உள்ள எழுத்துகளில் சிலவற்றின் வரிவடிவ அமைப்பை மாற்றியாக வேண்டுமென்று சிந்திக்கத் தொடங்கினர். அவ்வேளையில், கணினியின் படையெடுப்பு நிகழ்ந்தது. அனைத்துத் துறையிலும் கணினி இடம் பெறலாயிற்று. கணினி இல்லையேல் பணியும் இல்லை என்ற நிலை உருவாயிற்று. தொழிற்துறையின் போட்டியால் கல்வித்துறை கணினித்துறை பொறியாளர்களை உருவாக்க முயன்றது. வேலைவாய்ப்பிற்காகக் கணினித்துறைப் பட்டங்கள் அதிக அளவில் உருவாக்கப்பட்டன். உலக நாடுகள் அனைத்திலும் அனைத்துத் துறைகளிலும் கணினிப் பொறியாளர்களின் தேவை அதிகரித்துள்ளன. கணினியின் பயன்பாட்டினால், கணினித் துறையின் வளர்ச்சி கணிசமாக உயர்ந்தது.
            பொறியியல் துறையும் அறிவியல் துறையும் வேலை வாய்ப்பை மிகுதியாக்கியதனால், தமிழ் மொழித் துறையில் பின்னடைவு ஏற்பட்டது. காரணம், கணினிப் பொறியியல் கல்வி ஆங்கில வழிக் கல்வியாக இருந்ததேயாகும். ஆங்கிலம் கற்றால் மட்டுமே வேலையும், வசதியும் வாய்ப்பும் என்னும் நிலை உருவான பின்பு தமிழைப் பயில்வது எதற்குஎன்னும் கேள்விக்குறியோர், தமிழ்வெற்றுப் பேச்சுக்காக மட்டும் பயன்படும் மொழி! என்று, எண்ணத் தொடங்கினர். ஆனாலும், கணினியின் வருகையினால்தமிழர்களால் தள்ளி வைக்கப்பட்ட தமிழ், ஆங்கில வழிக் கல்வி கற்று, மேலை கீழை நாடுகளுக்குச் சென்றவர்களும், புலம் பெயர்ந்த தமிழீழத்தவர்களும், பல தலைமுறைகளுக்கும் முன் மேலை நாடுகளில் குடிபெயர்ந்தவர்களும்  தமிழ் வளர்ச்சிக்குப் பாடுகின்றனர். தாங்கள் கற்ற கணினிக் கல்வியைத் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அதன் பயனால், தமிழில் மென்பொருள்கள், எழுத்துருக்கள் கிடைத்தன. அவை, தத்தம் கணினியின்  பயன் பயன்பாட்டுக்கு ஏற்றவையாக அமைந்திருந்ததால், புதிய புதிய அச்சுமுறைகளும், நூல்களும் வெளியாயின. அச்சுக்கலையின் வளர்ச்சியால், புதினங்கள், கவிதைகள், இதழ்கள் போன்றவற்றின் படைப்பாளிகள் அதிகரித்தனர். எழுத்தின் தரம் உயர உயர வாசகர் எண்ணிக்கையும் மிகுந்தது. மொழியின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இணையம்:
             இணையம், உலக அறிவியல் கூடமாகக் கருதக்கூடியது. அது, எல்லைகளைக் கடந்த தகவல் களஞ்சியம். நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கும் அறிவுச் சுரங்கம், தரவுச் சேமக்கலம் (database) - ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தியைத் தரும். நம் இல்லத்தில் இருந்து கொண்டே உலகத்தைக் கண்டுகளிக்கலாம். நம் வீட்டுச் செல்வத்தை அதில் நட்டுப் பயிராக்கலாம். பிறர் வளர்த்த நாற்றுகளைக் கொண்டுவந்து நம் வீட்டுத் தோட்டத்தை வளமாக்கலாம்.
            இணையத்தைப் பயன் படுத்துவதில் உலகத்திலேயே நாம் இரண்டாவது நிலையில் இருக்கின்றோம் என்பது பெருமையாக இருக்கலாம். அதுமட்டும், தமிழ்  மொழியை வளர்த்துவிடாது. ஆயிரக்கணக்கான தமிழ்த் தளங்களையும் சேர்த்தெடுத்து ஆய்வு செய்தோமானால், அதில் தேர்ந்த இணைய தளமாக இருப்பவை இரண்டு இலக்க எண்ணளவே என்பது தெரியும். அவற்றுக்குக் காரணம்தமிழார்வத்தினால் வடிவமைக்கப்படும் இணையங்களெல்லாம் எண்ணிக்கையைக் கூட்டுவதற்கே ஆகும்.
            தமிழ் வலைத்தளங்களில் பல, தமிழ்ச் சமுதாயத்தை வீழ்ச்சியடையச் செய்யும் செயல்களோடு பின்னிப் பிணைந்தவையாக இருக்கக் காண்கிறோம். உலக மொழிகளில் வளர்ந்த நாட்டினரால் வடிவமைக்கப்பட்ட  இணையத் தளங்களில் கேடுசூழும் செயல்களைக் கொண்டவையும் காணமுடிகிறது. அவற்றைத் தவிர்த்து தரமுள்ள தளங்களைப் போல வடிவமைப்புகளும் உள்ளீடுகளும் இருக்கச் செய்ய வேண்டும்.
            நம்மால் தமிழ் வலைத்தளங்கள் அனைத்தையும் நாம் வாசிக்க முடிவதில்லை. அதற்குக் காரணம், ஒவ்வொரு தளமும் ஒவ்வொரு எழுத்துருக்களைக் கொண்டதாக இருப்பதேயாகும். அவை அனைத்தையும் எல்லோராலும் உலாவியில் பார்க்கக் கூடியதாகச் செய்ய வேண்டுமானால், அனைத்துத் தளங்களும் ஒருங்குற்ற குறியுடன் இருக்கச் செய்ய வேண்டும். அதற்காகவே, உருவாக்கப் பட்ட குறியீடே ஒருங்குறி என்னும் யுனிக்கோட் ஆகும்.
ஒருங்குறிப் (யுனிக்கோடு) பலன்கள்:
            யூனிக்கோடு எந்த ஒரு மொழியிலும், எந்த ஓர் இயங்கு தளத்திலும், எந்த ஒரு நிரலிலும், இயங்கக் கூடியது. சார்புச்சேவை அல்லது பல்லடுக்குப் பயன்நிரல்களிலும், வலைத் தளங்களிலும், பழைய குறியீட்டு முறைகளை விடுத்து யூனிக்கோட்டை உள்ளமைப்பதன் மூலம் கணிசமான நிதிச் சிக்கனத்துக்கு வழியுண்டு. யூனிக்கோடு ஒரு தனி மென்பொருளையோ அல்லது ஒரு தனி வலைத்தளத்தையோ, எந்தவிதமான மீளமைப்புமின்றி, பல இயங்குதளங்கள், மொழிகள், நாடுகளை இலக்காகக் கொண்டு இயங்குகிறது. யூனிக்கோடு மூலம் பல்வேறு கணினி அமையங்களுக்கு ஊடாகத் தரவுகளைப் பழுதின்றி அனுப்பலாம்.  அனைத்து இயங்கு தளங்களும் யுனிக்கோட்டுக்கு மாற்றப்பட்டால், எந்தக் கணினிப் பயனரும் இயங்கு தளங்களைப் பழுதின்றிக் கண்டு மகிழலாம்.
            கணினியின் கட்டமைப்புக்கு ஏற்ப நம்மை நாம் மாற்றிக் கொண்டால், உலகம் நம் உள்ளங்கைக்குள் வந்தடையும். இச்சாதனங்கள், தமிழைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் பயன்படும். வலையாடும் மடற்குழுக்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மின்னஞ்சல் குழுமங்களைக் கூகுள் குழுமம் ஒன்றியம் போலிருந்து ஒருங்கிணைக்கிறது. அதனைப் பயன் படுத்தி, உலகத் தமிழர்கள் ஓரணியில் திரளலாம். மேலும், மகிழ்ச்சிக்குரிய சாதனையாகத் திகழ்வது, ஒலிமடலாகும்.இதன் வாயிலாக, நன் எண்ணங்களை அறிவிக்கலாம். செய்திகளை, இலக்கிய இன்பத்தைப் பதிவு செய்து படையலாக்கலாம். சேமித்துச் செல்வந்தராகலாம்.
            கல்வியாளர், அறிஞர் தாங்கள் தங்கள் அறிவின் முதிவுகளை மக்களுக்கும் எதிர்வரும் சந்ததியினர்க்கும் பகிரலாம். அத்தகையச் செயலுக்காகவே "தமிழ்க்குயில்" என்றொரு ஒலிமடல் குழுமம் தொடங்கப்பட்டுள்ளது. செம்மொழியைச் செல்வத்தைச் சேமிக்கும்  களஞ்சியமாகக் கணினி அமைந்துள்ளது.
உலக அரங்கில் தமிழ்ப்பள்ளி மடலாடல் கூடுதுறைகள்:
யூனிக்கோடு என்றால் என்ன? என்னும் விளக்க ஏடு அதிகாரப்பூர்வமாக, யூனிக்கோட் கன்சார்த்தியத்தால் ஈழநாட்டார் மொழிபெயர்ப்பில் விண்ணேற்றப்பட்டிருக்கிறது:                                   http://www.unicode.org/standard/translations/tamil.html
உலகின் பன்மொழிகளில் அப்பக்கம் காண,                                
http://www.unicode.org/standard/WhatIsUnicode.html
பற்பல கூகுள்குழுக்கள் தமிழில் சிறப்புற நடைபெறுகின்றன. காட்டுகளாக, அன்புடன், முத்தமிழ், நம்பிக்கை, ... குழுமங்கள். ஜிமெயில் துணைகொண்டு அனுப்பும் மடல்கள் கூகுள் குழுக்களில் வரிவடிவம் சிதையாமல் சேர்கின்றன. மேலும், தேடெந்திரங்களால் (search engines) ஒரு தமிழ்ச் சொல்லையிட்டுக் கூகுள்குழு மடல்களை ஒரே நொடியில் துழாவிக் கண்டுபிடிக்க இயல்கிறது. யுனித்தமிழ்ச் சொற்களுக்குக் கூகுள் போன்ற தேடுவசதி வாய்த்திருப்பதும் அருமை. 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்னும் கோட்பாடு தந்த தமிழினத்தவரின் வளரும் தலைமுறை தமிழுணர்வோடு தம் தாய்மொழியை உலகெங்கும் கற்கிறது. அதற்கு உலக நகரங்கள் ஒவ்வொன்றிலும் தமிழ்ச்சங்கம், தமிழ்ப்பள்ளி சார்பில் கூகுள்குழுமங்கள் தோன்றி வளரவேண்டும். பண்டை இலக்கியங்களும், இன்றைய சினிமாவின் பாட்டு எம்பி3 தொடுப்புகளும் இளைஞர்களால் சுவைத்து அலசப்படல் வேண்டும்.
முன்னுதாரணம் ஒன்று, அமெரிக்க ஹ்யூஸ்டன் தமிழ்ப்பள்ளி கூகுள்குழுமம்:                        http://groups.google.com/group/houstontamil/about
பெரியார் ஈவேரா, அறிஞர் வா. செ. குழந்தைசாமி, கிவாஜ, கொடுமுடிச் சண்முகன் இன்னும் பலர் பல்லாண்டுகள் ஆய்ந்து தம் தேர்ந்த முடிபாக உகர, ஊகார உயிர்மெய்ச் சீர்மையை வலியுறுத்தி வருகின்றனர். வெளி மாநிலங்களிலோ, புலம்பெயர் தேயங்களிலோ தம்மழலையருக்குத் தமிழ் கற்பித்து அவர்கள் வளரும்போது தமிழைத் தக்கவைக்க உ/ஊ உயிர்மெய்ச் சீர்மை தேவை. இந்த அரிய செயலை ஏற்கெனவே யுனிக்கோடு அமல்படுத்தி விட்டது. யுனிக்கோட் தமிழெழுத்துப் பக்கத்தில் உயிரெழுத்துக்கும், அகர மெய்களுக்கும் மட்டும்தான் தனியிட ஒதுக்கீடு. ஏனைய இந்திய, தென்கீழாசிய மொழிகள் போலவே யுனித்தமிழிலும் உயிர்மெய் எழுத்துக்குத் தனியிடம் இல்லை. தொல்காப்பியனார் தமிழெழுத்து முப்பது என்றுதானே வரையறுத்தார்? எனவே, யுனித்தமிழ் எழுத்துருவை (font) மாற்றினால் போதும், தானாகவே யுனித்தமிழில் உ/ஊ உயிர்மெய்கள் உடைபட்டுத் தோன்றுகின்றன. இது யுனித்தமிழ் குறியீட்டின் தனிச்சிறப்பாகும், மற்ற தமிழ்க் குறியீடுகளில் எழுத்துச் சீரமைப்புக்கு இவ்வசதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் இச்சீர்மையை ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக கேரள அரசு சட்டம் ஆக்கிவிட்டது. இணையத்தில்  முதன்முறையாகத் திருக்குறளை எழுத்துச் சீர்மையுடன் கண்டுமகிழச்  சொடுக்குக: http://tinyurl.com/zly6e
தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று ஓர் புதிய மென்கலனை தமிழ்மணம்.கொம் தளம் வழங்கியது,
           தமிழ்மணம்.கொம் தளத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான வலைச்சுவடியர் பதிவு செய்துகொண்டு தம் அன்றாட பதிவுகளைத் திரட்டித் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அளிக்கின்றனர். 10 நிமிடத்துக்கு ஒருமுறை புதுவரவுகள் வலைப்பதிவுகளில் மலர்ந்து கொண்டேயுள. முனைவர் நா. கணேசனின் நன்கொடையால் திஸ்கியில் எழுதப் பெறும்  யாஹூ குழுக்களின் மடல்களைப்  புதுப்பொலிவுடன் யுனிகோடு தமிழில் தானியங்கியாக மாற்றிக் கூகுளின் இணைக்குழுவில் அளிக்கப்படுகிறது. தமிழ்மணத்தில் வலைச்சுவடிகளைப் பதிவுசெய்வது போலவே விரும்புவோர் தானாகவே தங்கள் யாகூகுழுக்களைப் பதிவு செய்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. சந்தவசந்தம் மரபுக்கவிதைக் குழுமடல்கள் கூகுள் நிழற்குழுவில் யுனித்தமிழில் ஆடிப் பிம்பம்போல் பதிக்கப்படுகின்றன.
பிபிசி வலைத்தளம், கன்னடம், மலையாளம், இந்தி, உருது, தெலுங்கு, ... மொழிக்குழு மடல்களையும் புதுவரத்துகள் அனைத்தையும் தமிழெழுத்தில் தானாக மாற்றி கூகுள் இணைக்குழுக்களாகத் தரும் முயற்சியில் முனைந்துள்ளனர். உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில் என்னும் வள்ளுவத்தை நடைமுறை ஆக்கிவிட்டது      கணியுலகு!
தமிழ்க் கணிமை, கணிஞர் வாழி!

         கணினியின் பயனர் எல்லாம் களித்திடும் இணையக் கூடம்!
         அணிபெறும் தமிழின் கூடல் அளித்திடும் வளத்தை எல்லாம்
         கணினியின் உள்ளே வைத்துக் காத்திட வாரீர்! தம்மின்
         பணியெலாம் தமிழுக் கென்றே படைத்திடத் திரண்டு வாரீர்!

          ஆடி மகிழ்ந்திருக்கும் சோலை! - தமிழை
                அருந்தி மகிழ்ந்திருக்கும் ஓலை!
          கூடி மகிழ்ந்திருக்கும் குழுமம்! - தமிழால்
                குளிர்ந்து மகிழ்ந்திருக்கும் மடலம்!
           தேடி மகிழ்ந்திருக்கும் நண்பு! - இன்பம்
                திளைக்க மகிழ்ந்திருக்கும் அன்பு!
           நாடி மகிழ்வளித்தே  என்னை! - இங்கே
                நாளும் மகிழ்விக்கும் கம்பன்.

         பார்த்தாலும் இன்பந்தான்; மற்றோர், வாயால்
                 படித்தாலும் இன்பந்தான்; பொருளை நெஞ்சில்
         சேர்த்தாலும் இன்பந்தான்; கவியின் சொல்லால்
               சினைத்தாலும் இன்பந்தான்; கற்றோர் முன்றில்
         ஆர்த்தாலும் இன்பந்தான்; தமிழின் கேளிர்
                அணைத்தாலும் இன்பந்தான்; இணையந் தன்னில்
         ஊர்த்தாலும் இன்பந்தான்; உலகத் தோர்க்கே
                உரைத்தாலும் இன்பந்தான்! தமிழும் தானே!