`யுனிகோடுக்கு' மாற 7 பேர் குழு அமைப்பு - செயலர் தேவிதார் அறிவிப்பு

இந்திய அரசாங்கம் யூனிக்கோட் எழுத்துருவை தமிழ் போன்ற எல்லா இந்திய மொழிகளுக்கும் பயன்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது. இதனை மாநிலங்களில் நடைமுறைப்படுத்தச் சில காலம் செல்லலாம். செம்மொழி மாநாடு இதைச் சாதிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

சொற்பகுப்பாய்வு பற்றிப் பத்ரி சேஷாத்ரியின் பதிவில் பார்த்தேன்.
http://thoughtsintamil.blogspot.com/2010/04/blog-post_17.html
முனைவர் மு. இளங்கோ அரசு நிறுவனங்களில் இணையம் பற்றி உண்மைநிலையை பின்னூட்டம் செய்திருந்தார்:
பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்களின் கணினி மொழியியல் முயற்சி வறண்ட பாலைநிலைத்தில் ஒரு சுனை நீருக்குச் சமம்.பெரும்பாலான ஆசிரியர்கள் கணினியில் ஆர்வம் காட்டவில்லை. அரசு நிறுவனம் ஒன்றுக்குப் பேசுவதற்குச் சென்றேன்.

வீடியோ கான்பரசிங் வசதி உண்டு என்று அழைத்துச் சென்றனர்.மிகப்பெரிய கற்பனையில் சென்ற எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.இருந்த பல கணினிகள் யாவும் பழுது.பிளக் பாயிண்டு கூட சரிவர இல்லை. நூலாம்படை படிந்து கிடந்தது.இந்த நிலையில்தான் தமிழ் இணையத்தை நாம் அறிமுகம்
செய்யவேண்டியுள்ளது.


யாப்பாய்வு, சொல்லாய்வு போன்றவற்றில் தமிழர் மிகுதியாக ஈடுபடக் கல்லூரிகளிலும், அரசாங்க அலுவலகங்களிலும் உலகத்தரமான இந்திய அரசின் மின்னாளுகை நடைமுறையானால் வாய்ப்புண்டு.

செ. ச. செந்தில்நாதன் முனைவர் மு. ஆனந்தகிருஷ்ணனைப் பேட்டி கண்டு 2007-ல்
காலச்சுவட்டில் எழுதியிருந்தார். அப்போது முனைவர் மு. ஆ. கூறியிருந்தார்:
http://valai.blogspirit.com/archive/2007/02/28/science.html
”இப்படித்தான் கணித்தமிழ்மீதும் ஈடுபாடு வந்ததா?

அந்த ஈடுபாட்டில்தான் கணிப்பொறியியல் துறையில் ஆரம்பத்திலிருந்து (நான் நியூயார்க்கில் இருக்கும்போது), தமிழை எப்படிக் கணிப்பொறியில் பயன்படுத்த முடியும் என்று ஆராய்ந்தேன். அப் போது நானே கணிப்பொறி வாங்கிவைத்து, சின்னச் சின்ன எழுத்துகளை உருவாக்க முயற்சித்தேன். பெரிய "ப" எழுத்து போட்டு. 'ஆ! தமிழ் உருவாகிடுச்சு' என்று மகிழ்ச்சி அடையக்கூடிய நிலைமை. மொழி நம்முடைய மொழி. கலைஞர், முரசொலி மாறன் போன்றோர்களிடம் அடிக்கடி சொல்வேன்:. 15ஆம் நூற்றாண்டில் அச்சுப் பொறி வந்தது. எந்தெந்த மொழிகள் அந்த அச்சுப்பொறியில் பயன்படுத்தப்படவில்லையோ அதெல்லாம் செத்து மடிந்துபோய்விட்டன. அச்சில் வராத மொழி அழிந்துபோனது. அது மாதிரி இன்றைக்குக் கணிப்பொறி. ஓரளவுக்கு எளிமையான முறையில் பலரும் பயன்படுத்தக்கூடிய வகையில் கணிப்பொறியில் தமிழ் வந்தால்தான் தமிழ் மொழியினுடைய மதிப்பு, தமிழனின் செயல்பாடு இதெல்லாம் உயரும். இல்லையெனில் ஆங்கிலம் படித்தவன்தான் கணிப்பொறியைப் பயன்படுத்த முடியும் என்ற நிலை வரும். இதனால் 100க்கு 95 சதவீத மக்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் எட்டாமல் போய்விடும். அல்லது கணிப்பொறியைப் படிப்பதற்குத் தமிழ் மொழியைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலமே படிக்கலாம் என்ற நிலைமை உருவாகும். அது தமிழுக்குக் கேடு.

நான் எதிர்பார்த்த அளவுக்கு கணித்தமிழ்த் துறையில் நாம் இன்னும் முன்னேறவில்லை என்பது வேறு விஷயம். எந்த அளவு வந்திருக்க வேண்டும், ஏன் வரவில்லை, அதனால் என்ன பிரச்சினை . . . இதையெல்லாம் பார்க்க வேண்டும். இருந்தாலும் அதை எப்படி அரவணைத்து, இருக்கிற சர்ச்சைகளைக் குறைத்து, ஈடுபாட்டைப் பெருக்குவது என்பதை என் முழு நோக்கமாகக் கொண்டு செயல்பட்டிருந்தேன்.

இன்றைக்கு இருக்கிற நிலைமையில் சர்ச்சைகளையெல்லாம் ஒரு பக்கம் வைத்துவிட்டு நாம் எல்லோரும் ஒருங்கிணைத்து முன்னேற்றிச் செல்ல முடியும். நேரத்தை வீணாகக் கழிக்கக் கூடாது. இல்லையென்றால் தொழில்நுட்பம் மக்களுக்கு எட்டாமல் போயிடும். அது வளர்ந்த நிலையில் எட்டுவது மிகவும் கடினம். எல்லோரும் தமிழ் படிக்காமல் கணிப்பொறிக்காக ஆங்கிலம் படிக்கப் போனால், மீண்டும் அந்தத் தலைமுறை மக்களைத் தமிழ் படிக்க அழைப்பது கடினம் என்று சொன்னேன்.”


தினமணி, தினமலர், தினத்தந்தி போன்ற பத்திரிகைகளில் அரசு அலுவலகங்களில் யூனிகோடு எழுத்துரு வருவதாக அரசின் ஐ.டி. தொழிநுட்ப செயலாளர், திரு. தேவிதார் அறிவித்துள்ளமை தெரிகிறோம். தினத்தந்தி செய்தி:

http://www.dailythanthi.com/article.asp?NewsID=557283&disdate=4/1/2010
[விக்கி] ”போட்டி எப்படி?

இந்த போட்டியில் கலந்து கொள்ளும் கல்லூரி மாணவர்கள், தமிழகத்தில்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், விக்கிபீடியாவில் இடம்பெறத்தக்க கட்டுரைகளை, 250 முதல் 500 வார்த்தைகளுக்கு மிகாமல், இன்டர்நெட் மூலமாக தமிழில் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம். இதற்காக ஆன்லைனில் எங்கள் இணையதளத்திலேயே (http://ta.wikipedia.org) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அனுப்பும் கட்டுரைகள், சொந்தமானவையாக இருக்கவேண்டும். தனிப்பட்ட நபர்கள், அரசியல், மத விமர்சனம் போன்ற ஆட்சேபகரமானவற்றை அனுப்பக்கூடாது. அவரவர் படிக்கும் துறை பற்றி எழுதலாம். தகவல் பக்கங்கள் ஒருங்குறியில் (யுனிகோட்) அமையவேண்டும். வெற்றி பெறுவோருக்கு சிறப்பான பரிசுகள் வழங்கப்படும்.

இவ்வாறு ஆனந்தகிருஷ்ணன் கூறினார்.

`யுனிகோடுக்கு' மாற 7 பேர் குழு அமைப்பு

``இணைய மாநாட்டை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் 8,300 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு விரைவில் பரிசுகள் அளிக்கப்படும்'' என்று அமைச்சர் பூங்கோதை தெரிவித்தார்.

``விக்கிபீடியா என்பது தனி அமைப்பு. தமிழக அரசுதான் இதில் முதல்முறையாக அக்கறையெடுத்து மாணவர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறது. தமிழக அரசு அலுவலகங்களில் `யூனிகோட்' எழுத்துருவை `பான்ட்' கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. (இதனால் இணையதளத்தில் தமிழில் அனுப்பப்படும் தகவல்களை தமிழ் எழுத்துரு இல்லாமலேயே ஒருவர் அப்படியே படித்துவிட முடியும். அதை படிப்பதற்காக ஒரு எழுத்துருவை `டவுன்லோடு' செய்ய தேவையில்லை. யூனிகோட் மிக எளிமையானது). இதுபற்றி முடிவெடுக்க 7 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. உலகத்தமிழ் மாநாட்டுக்கு முன்னதாக இப்பணி முடிக்கப்படும்'' என்று டேவிதார் தெரிவித்தார்.

அப்போது கவிஞர் கனிமொழி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.”

20 ஆண்டுகளாக கணித்தமிழ் வளர்ச்சியில் ஆர்வமுடன் ஈடுபட்டு, இணைய மாநாடுகளை தலைமையேற்றுச் சிறப்பாக நடத்தும் முனைவர் ஆனந்தகிருஷ்ணன் குழு பரிந்துரை செய்து தேவிதார் அறிவிக்கும் யூனிகோட் எழுத்துரு தமிழ்நாட்டில் வெறும் இணையத்திற்கு மாத்திரம் இல்லாமல், தமிழக அரசின் அனைத்து துறைகளிலும், மின்னாளுகையிலும் இடம்பெறச் செய்ய இயலும். முனைவர் மு.ஆ. குழு அறிக்கை தமிழ்நெட்99 போன்ற ஒரு ஃபோனெடிக்-ஒலியனியல் விசைப்பலகை மின்னாளுகையில், அரசாங்கத் துறைகளின் கோப்புகளை உருவாக்கப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அரசாணைக்கு அடிக்கோள் நாட்டவேண்டும்.

அவ்வறிக்கை ஒரு வழிகாட்டும் என்று நினைக்கிறேன்.

நா. கணேசன்


செ.ச. செந்தில்நாதன், இணையம், 2007:
http://ezilnila.com/archives/597

*செம்மொழி மாநாடு இன்னும் 76 நாள்கள்:- கம்பியில்லா இணைய வசதி வளாகமாகிறது 'கொடிசியா'*

தினமணி, 8 ஏப்ரல் 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் கொடிசியா தொழிற்காட்சி வளாகம் கம்பியில்லா இணையதள அலைவரிசை வசதி உடைய வளாகமாக மாற்றப்படுகிறது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் ​நடத்தப்படுகிறது. கான்பூர் ஐ.ஐ.டி தலைவர் மு.ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் தமிழ் இணைய மாநாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் தற்போது குளிரூட்டப்பட்ட வசதி உள்ள 'இ' பிளாக் அரங்கம் இணைய மாநாட்டுக்கு ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இணைய மாநாட்டையொட்டி பள்ளி,​​ கல்லூரி மாணவர்களுக்கு இணைய ​போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

இணைய மாநாடு நடைபெறும் அரங்குக்கு இணையதள இணைப்புக்காக பி.எஸ்.என்.எல் நிறுவனம் மூலமாக கம்பி இழை கேபிள்கள் அமைக்கப்படுகின்றன.

இணைய மாநாடு நடைபெறும் அரங்கம்,​​ பத்திரிகையாளர்களுக்கான அரங்கம்,​​ பொது தகவல் மையம் ஆகியவற்றில் துரித இணைய இணைப்பு வசதியுடன் கூடிய கணினிகள் நிறுவப்படுகின்றன.

மேலும் கொடிசியா தொழிற்காட்சி வளாகம் முழுவதும் கம்பியில்லா இணையதள அலைவரிசை வசதி கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான ஆயத்தப் பணிகள் தொடர்பாக எல்காட் நிறுவன மேலாண்மை இயக்குநரும்,​​ இணைய மாநாட்டின் உறுப்பினருமான சந்தோஷ் பாபு,​​ கொடிசியா தொழிற்காட்சி ​வளாகத்தை வியாழக்கிழமை (08/04/10) பார்வையிட்டார்.

இணைய மாநாட்டுக்குத் தேவையான வசதிகளைச் செய்வது தொடர்பாக பி.எஸ்.என்.எல், தேசிய தகவல் மைய அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இணையதள இணைப்பு,​​ அலைபேசி சேவை ஆகியவற்றுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பி.எஸ்.என்.எல் அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்


வசந்தபாலனின் அங்காடித்தெரு - பேரா. மு.இராமசுவாமி

வசந்தபாலனின் அங்காடித்தெரு

தமிழ்ச் சமூகம் பேச மறந்த கதை!

பேரா. மு.இராமசுவாமி
(உங்கள் நூலகம் இதழில் வெளிவந்தது.)


ஒளிப்படம் மற்றும் ஒலிலயக் கோர்வைகளின் நிரல் தொகுப்பில் யதார்த்தச் சலனத்தை உயிரோட்டமாய்ப் பதிவுசெய்யும் திரைப்படக்கலையின் உலகப் பெருமிதங்கள் பற்றிப் பேசுகையில், பெருமிதத்திற்குரிய இலக்கண, இலக்கிய வரலாறுகளைக் கொண்டிருக்கிற தமிழில் உருவான திரைப்படங்களின் தராதரம் பற்றித் தலைநிமிர்வுடன் பேசுவதற்கான சந்தர்ப்பங்கள் மிக அரிதாகவே வந்துசெல்லும் நிலையில், 'வெயில்' வசந்தபாலனின் 'அங்காடித்தெரு', நாம் தலைநிமிர மீண்டுமொரு பெரிய சந்தர்ப்பத்தை நமக்கு உருவாக்கித் தந்திருக்கிறது. மெல்லிய தயக்கங்களையும் தவிடுபொடியாக்கி விட்டிருக்கிறது. 'இளமையில் வறுமை'யின் காரணமாய்ச் சொந்த ஊரில் பிச்சை எடுக்கத் தயங்கி, 'சென்னை நகரக் கன'வில் ஊர், உறவைத்தாண்டி, ரங்கநாதன் தெருவில் 'நிமிர்ந்து' நிற்கும் 'சரவணா ஸ்டோர்ஸ்', 'ஜெயச்சந்திரன் ஸ்டோர்ஸ்' அருகில் அய்ந்து மாடியில் அதேபோல் 'நிமிர்ந்து' நிற்கும் 'செந்தில்குமார் ஸ்டோர்'ஸை நடத்தும் தெக்கத்திக்காரச் சொந்தச் சாதி முதலாளியான 'அண்ணாச்சி'யிடம் ஆணும் பெண்ணுமாய் அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துச் 'சக்கை'யாகத் தங்கள் இரத்தத்தை உறிஞ்சவிட்டு, தொழுவத்து மாடுகளைப் போல் அவர்கள் போடும் சோத்தைத் தின்று 'பன்றி'க்கூட்டங்களாய்ப் படுத்து உறங்கி, பெண்ணென்றால் மாரைப் பிசைகிற, ஆணென்றால் அடித்துத் துவைக்கிற எல்லாவகை இழிவுகளையும் அவமானங்களையும் கொடுமைகளையும் சகித்தும் புழுங்கியும் கொதித்தும் எதிர்த்தும் போராடியபடியே, அதன் தீராத பக்கங்களில் வண்ணம் பூசிய கவிதையாய் வாழ்வின் அழகைத் தேடிக் களிக்கும் எல்லா ஆண், பெண் இளைஞர்களின் வாழ்க்கையாயும் பதிவாகியிருக்கிறது 'அங்காடித்தெரு'!

இப்படியொரு அழகான தமிழ்ப் பெயரைப் புழங்க விட்டதற்கும் 'த்' போட்டு இலக்கணச் சுத்தமாய் தமிழ்த் திரைப்படத்தின் பெயரொன்று அமைந்துபோயிருப்பதற்கும் வசந்தபாலனுக்கு நன்றி சொல்லவேண்டும். இதைச் சொல்லக் காரணம், முதல்நாள் தஞ்சையில் படம் பார்த்துக் கொண்டிருக்கையில், பக்கத்திலிருந்தவர் தனக்கு அடுத்து இருந்தவரிடம் கேட்டார்: 'அங்காடித் தெருன்னா என்ன அர்த்தம்?' அடுத்தவர் சொன்னார்: 'மார்க்கெட் ப்ளேஸ்'. சரியோ தவறோ யோசிக்க வைத்ததற்குத்தான் அந்த நன்றி! நிஜமான இன்றைய ரங்கநாதன் தெருவும் அதிலுள்ள உண்மையான கடைகளும் நிழலான 'செந்தில்குமார் ஸ்டோர்ஸ்' மூலம் இயல்பான காட்சிகளாக்கப்படுகையில், கதையின் இயல்பில், உரையாடலின் அழுத்தத்தில், படமாக்கிய சாமர்த்தியத்தில், படத்தொகுப்பின் அழகில் நெறியாளுமையின் போக்கில் நிழலும் நிஜமாகிவிட, நிஜமாய் மூளையை உறைய வைக்கிற அத்தனை வலிக்கும் வேதனைக்கும் சமூக அவலத்திற்குமிடையே மெல்லிதாய்த் துளிர்க்கிற மனிதத்திற்கும் அசாத்திய நம்பிக்கைக்கும் நிஜமான சாட்சிகளாய் மனநிலையில் நம்மை ஆக்கியிருப்பதன் மூலம் அடையாளங்கள் இழந்து திரிகிற, நாம் பேச மறந்த ஒரு சமூகத்தவரின் மேல் நம்மைக் கரிசனம் கொள்ள வைத்ததில் வசந்தபாலன் என்கிற திரைப் படைப்பாளி தனித்துத் தெரிகிறார். தமிழ்ச் சமூகம் பேச மறந்த ஒரு வாழ்வியல் கதையை அழகாகத் திரையில் பதிவு செய்ததன் மூலம் சமூகப் பொறுப்பாளியாய் மிளிர்கிறார். காட்சிப்படுத்தலில் கூடுதல் குறைவுகள் இருக்கக்கூடும். ஆயின், படமாக்கல் முறையில், காட்டப்பட்டிருக்கிற அத்தனையும் நிகழக் கூடியதுதான் என்கிற நம்பகத்தன்மையைப் படம் பார்ப்பவரிடம் ஏற்படுத்தியிருப்பதற்கு, அவர்களின் வலியை உயிர்ப்புடன் உள்வாங்கிய வசந்தபாலனின் பிரயத்தனமே காரணமாயிருக்க முடியும்! இதைப் படமாக்குவதற்குத் துணிச்சலும் சமூகப் பொறுப்பும் அதற்கான அர்ப்பணிப்பும் இருந்தால் மட்டுமே சாத்தியப்படும். அது வசந்தபாலனிடம் நிறைந்திருப்பது தமிழ்த் திரைப்பட உலகின் மீது நம்பிக்கை கொள்ள வைக்கிறது, 'யானை இருக்கிற எடத்துலதான் எறும்பும் இருக்குது' என்பதை உணர்ந்த கதையின் நாயகர்கள் ஜோதிலிங்கமும் சேர்மக்கனியும் ரங்கநாதன் தெருவின் மீது வைத்திருக்கிற நம்பிக்கையைப் போலவே!
ரங்கநாதன் தெருவின் நகைமுகம், அழுகைமுகம், இளிவரல்முகம், மருட்கைமுகம், அச்சமுகம், பெருமிதமுகம், வெகுளிமுகம், உவகைமுகமென்று அதன் பன்முகமும் பதிவாகிக் கதை நாயகமாக ரங்கநாதன் தெருவே இரத்தமும் சதையுமாய் அமைந்துபோயிருப்பதும் அறிமுகமே ஆகியிராத அல்லது கூடுதல் அறிமுகம் தேவைப்படுகிற முகங்கள் 'அங்காடித்தெரு' கதாபாத்திரங்களாய், கூட்ட நெரிசலுக்குள்ளும் நமக்கு நெருக்கமான புதிய முகங்களாய் உலவவிட்டிருப்பதால் அவர்களெல்லாம் இரத்தமும் சதையுமான ரங்கநாதன் தெரு மக்களாகவே மனதில் தங்கிப் போயிருப்பதும் தமிழுக்குப் புதிது! படம் தொடங்குகிற இடம் தி.நகரில் 'நிமிர்ந்து' நிற்கும் 'போத்தீஸ்'க்கு அருகிலிருக்கிற பேருந்து நிறுத்தம். சுற்றுப்புறத்தைப் பற்றிக் கவலைப்படாத, அப்பாவித்தனமும் அழகும் மட்டுமே கொட்டிக் கிடக்கும் மனசோடு குறும்பும் குதூகலமுமாய், ஓட்டமும் துள்ளலுமாய், கால்போன போக்கிலெல்லாம் வானம் சொட்டிய மழைநீரை ஒருவர் மேல் ஒருவர் இறைத்தபடி கால்களுக்குள் கவிதை பேசிய ஓர் இளங் காதல் இணை எதிர்பாராமல் எதிர்கொண்ட விபத்தில், கதை பின்னோக்கி விரிகிறது. சென்னை உதயம் திரையரங்கு அருகில் உண்மையாய் நடந்த விபத்தை -நிஜத்தை- நிழலாக்கிக் கோர்த்த பாங்கில், செய்தியாய் மட்டுமே நம்மைக் கடந்துபோன ஒரு துர்நிகழ்வின் பின்னிருந்த, உயிரோட்டமாய் உணர்வில் தோய்ந்த ஒரு வாழ்க்கை, ஒரு பெருங்கதையாடலாய் விரிவதே 'அங்காடித்தெரு'! இதற்குள் பெரும் பெரும் கதையாடல்களுக்கான சிறுசிறு நிகழ்வுகள் பின்னிப் பிணைந்திருப்பது இன்னுமொரு சிறப்பு!
கதை, ரங்கநாதன் தெருவிலிருக்கிற 'செந்தில் முருகன் ஸ்டோர்'ஸின் உள்ளேயும் வெளியேயும் அதை ஒட்டியிருக்கிற 'செந்தில் முருகன் ஸ்டோர்ஸ்' மெஸ்ஸிற்குள்ளும் 'செந்தில் முருகன் ஸ்டோர்ஸ்' பணியாளர்கள் தங்கும் கொட்டடிக்குள்ளும் சிலவேளை சென்னைத் தெருக்களுக்குள்ளும் நடக்கிறது. 'செந்தில் முருகன் ஸ்டோர்ஸ்'க்கு வெளியே ரங்கநாதன் தெருவில் ஜீவிக்கும் குள்ள கணேஷ்- சின்னத்தாய் வாழ்க்கை ஒரு பெருங்கதையாடலுக்கான நிகழ்வு என்றால், 'விக்கிறவன்தான் ஜெயிக்கிறவன்' என்று முப்பது வருடத்திற்கு முந்திய மனிதர்களை நம்பித் தெருவோரத்தில் கடை போட்ட பார்வையற்ற தஞ்சாவூர்க் கிழவர் குமரேசன் அய்யா இன்னொரு பெருங்கதையாடலுக்கான நிகழ்வு! இளமை முழுவதையும் துணிக்கடையில் நின்றே கொன்றுவிட்டு முதுமையில் 'வெரிகோஸ்' நோயால் தாக்குண்டு, மக்கிப்போகும் குப்பையாகப் பத்திரப்படுத்த யாருமின்றி, ரங்கநாதன்தெரு மண்ணிலேயே மரணத்தைத் தழுவியவர், இன்னொரு பெருங்கதையின் களமாகக்கூடியவர். வேலை கேட்டு யாரும் தராமல், தானாகவே கழிசடைக் கழிவறையைச் சுத்தம் செய்து ஒரு வேலையைத் தனக்கானதாய்ச் செய்து வாழ்க்கையை நகர்த்தும் பெயர் தெரியாத அவரும், பழைய துணிகளை மொத்தமாக வாங்கி அதை 'அயன்' செய்து புதிது போலவாக்கி பத்து ரூபாய்க்குத் தைரியமாய் விற்கும் பெயர் தெரியா இளைஞரும், வயதான காலத்தும் தன் உழைப்பை விட்டுவிடாது வாழ்க்கையை நகர்த்தும் இஸ்லாமியப் பெரியவரும் இன்னொரு இன்னொரு களமாகக் கூடியவர்களே! வானத்தையும் தொட்டுவிடும் வெறியில் 'நிமிர்ந்து' நிற்கும் 'செந்தில் முருகன் ஸ்டோர்'ஸில் வேலை செய்பவர்களிடம் 'மூத்திரம்' பெய்யக்கூட இல்லாத சுதந்திரம் வெளியே உதிரித்தொழில் செய்யும் இவர்களிடம் இருக்கிறது என்பதையும் அவர்கள் ஒவ்வொருவரும் முதலாளியாயும் யாரும் ஏமாற்றிவிடுவார்களோ என்ற அச்சவுணர்வு துளியும் இல்லாதவர்களாயும் இருப்பதைக் காட்டி அவர்களுக்குள் இழையோடும் மனிதத்தையும் 'காமிரா' அழகாகப் பதிவு செய்திருக்கிறது.
'செந்தில்முருகன் ஸ்டோர்ஸ்' துணிக்கடையில் வேலை செய்யும் 'சௌந்திர பாண்டிய'னின் பேடிமைத் தனத்தால் ரங்கநாதன் தெருவில் பிணமாய் விழுந்த 'செல்வராணி'யின் காதலும், வாழ்க்கை அனுபவங்கள் பெரிதாக எதுவுமின்றி, அப்பாவித்தனமும் கோபமும் மட்டுமே கொண்ட விளையாட்டுச் சிறுவனான 'ஜோதிலிங்கம்' வாழ்க்கையின் மேடு பள்ளங்களை அடுக்கடுக்காய் எதிர்கொண்டு,கால்களை இழந்த‘சேர்மக்கனி'யுடன் 'யானைகள் இருக்கும் இடத்திலேயே எறும்பாய்' நம்பிக்கை ததும்பச் சுறுசுறுப்புடன் வாழ்க்கையைத் தொடங்குவதும்,நடிகை சிநேகாவின் உண்மைப் பெயர் சுபாஷினி என்பது தொடங்கி அவருடைய புகைப்பட ஆல்பத்தைப் பொத்திப் பாதுகாப்பது வரைக்கும் 'பொறுப்புட'னும், கடவுள் வாழ்த்துப் பாடலைக் காதல் கடிதமாக்கிய புத்திசாலித்தனத்துடன், நடைமுறை வாழ்விற்குத் தகுந்தமாதிரியும் முடிவெடுக்கும் ஊத்தவாயன் 'மாரிமுத்து'-சோபியா காதலும் புதிதானவை. ஒவ்வொருவருக்குள்ளும் ஊறும் காதலை மறைத்துப் பெருங்கதையாடலுக்கான பெரும்பெரும் கதைகளை உள்ளுக்குள் தேக்கி வைத்து, வெறும் கல்லாக மட்டுமே வாழ்க்கையை நகர்த்தும் 'செந்தில் முருகன் ஸ்டோர்ஸ்' ஊழியர்கள் அனைவர் பற்றியும் அலசத் தொடங்குகிறது மனசு! அந்தவகையில் இந்த வட்டத்திற்குள் கொண்டு வரப்படாது விடப்பட்டிருக்கிற, அங்கு பணிபுரிந்து கொண்டிருக்கும் அனைவரின் வாழ்க்கையைப் பற்றியும் நம் மனசு அசைபோடத் தொடங்கி விடுகின்றது. இதில்தான் வசந்தபாலன் என்கிற படைப்பாளி விதந்து தெரிகிறார்.

'மாரக் கசக்கினான்; நான் பேசாம நின்னுகிட்டிருந்தேன்' எனும் இயலாமையின் உச்சம் தந்த வேதனைப் பொருமலைக் கொட்டிக் குமுறுவதற்கோ ஆதரவுக் கரமாய்ப் பற்றி அழுவதற்கோ யாருமின்றி, வாடிக்கையாளரிடம் துணியைப் பற்றிப் பேசுகிற வியாபார சாமர்த்தியமாய்க் கடைத் துணிகளை எடுத்து வாடிக்கையாளர்களிடம் விரித்துக் காட்டியபடி, ஜோதிலிங்கத்திடம் கனி விட்டேத்தியாய்ப் பேசுகிற சூழல் கொடூரமானது. இதன் எதிர்நிலையில் சாய்ந்து கொள்ளும் தோளாய், ஆதரவுக் கரமாய்க் கனிக்கு ஜோதிலிங்கம் ஆனபின்பு, 'விட்டு விடுதலையாகும்' சமயத்திற்கான சூழலை நெருங்குகிறபோது, 'கண்ட எடத்ல கை வைக்கிறாம்லெ' என்று அத்தனைப் பேர் முன்னிலையிலும் உரிமையுடன் ஜோதிலிங்கத்திடம் வெடிப்பது, 'அடித்துத் தொவைடா' என்பதன் பிறிதுமொழியாயிருக்கிறது. மொழியை அளவாகப் பயன்படுத்தி, ஒரு சமூகத்தின் உள்ளார்ந்த வலியை அருமையாக வெளிக்கொணர்ந்திருக்கிறார் ஜெயமோகன்!. கூட்டத்திற்குள்ளிருந்துதான் தன்னுணர்ச்சிகளையும் அவர்களால் பகிர்ந்து கொள்ள முடிகிற அவலம் கொடூரமானது. அவர்களின் மேல் பரிதாபத்தை உண்டுபண்ணக் கூடியது. கனி, தன் தங்கை திரும்பிச் செல்லும்போது ஜோதிலிங்கத்தைப் பற்றி விசாரித்ததைக் கூறுகிறபொழுது, 'நீ என்ன சொன்னெ?' என்று குறும்பாக ஜோதிலிங்கம் கேட்கவும், கனி, 'சிரிச்சேன்' என்று கவிதையின் சிதறலாய்க் கூறுகிற இடம், காலையில் கடைக்கு வேலை செய்யக் கூட்டமாகப் பேசிக்கொண்டு வரும்போது! நெகிழ்வான கணங்களையும் போகிற போக்கில் வெற்று வார்த்தைகளாய்ப் பகிர்வதெனில் என்ன வாழ்க்கை அது! மாதவரத்தில் வேதங் கற்ற ஓர் ஆச்சார அனுஷ்டானக் குடும்பத்தில் 'குழந்தைத் தொழிலாளி'யாய்க் கனியின் தங்கை படும் அவலம் மிகக் கொடூரமானது. அதை நினைப்பதற்கும் பகிர்வதற்கும் செயல்படுவதற்கும்கூட எந்தவகையுமின்றி, கூட்டத்தின் நடுவில் அழுவதற்கும் வக்கின்றிப் போகிற போக்கிலேயே அதன் இழுப்பிலேயே 'நினைக்கிற நேரம் வேதனை' என்றபடி வாழுகிற கனியின் வாழ்க்கைக்கு என்னதான் செய்வது? இன்னொன்று, துணியைக் காயப் போடும் சோபியாவிடம் கனி துணிக்குச் சோப்பு போட்டபடி, 'இந்த ஒத்த ஆம்ப்ளைட்டயாவது நான் மானரோஷத்தோட இருக்கனே' என்று நெஞ்சிலறைகிற விதமாய்ப் பேசுகிற பேச்சு! இவை எல்லாமே போகிற போக்கில் நெஞ்சில் நெருப்பை விதைத்து விடும் மனப் பொருமலாயிருக்கின்றன. இதன் முத்தாய்ப்பு, 'யான இருக்ற எடத்லதாம்லெ எறும்பும் இருக்குது. ஒன்னாலெ என்ன செய்ய முடியும்னு பாக்கலாம்லெ' என்று கருங்காலியிடம் சவால் விடுகிற இடம்! வலிகளின் விதைப்பில் துளிர்க்கும் இந்தவகைப் பொருமல்களின் ஒளிக் கோர்ப்புதான் 'அங்காடித்தெரு'! இந்தப் பொருமல்களின் ஒத்தடங்களாகச் சிறுசிறு கவிதை நறுக்குகள்! அதிலொன்று, சிலேடை இலக்கிய நயம் சொட்டும் 'கனியிருக்கக் காய் கவர்ந்தற்று'! குரூரங்களின் நடுவேதான் இவர்களின் குதூகலமும் அமைந்து இவர்களை வாழவைத்துக் கொண்டிருக்கின்றன என்பதன் பதிவாகவும் 'அங்காடித்தெரு' அமைந்திருக்கிறது.

ஜோதிலிங்கமும் கனியும் இருவரும் தங்களின் முதற்காதலைப் பகிர்ந்து கொள்ளும் இடமும் சந்தடி நிறைந்த சரக்கறையில், அனைவருமிருக்க ஒருவருக்கொருவர் குறும்புகள் புரிந்து வேலை செய்து கொண்டிருக்கையில்தான்! சோடா குடித்தால் ஏப்பம் வருவது மாதிரி பருவம் வந்தால் காதல் எல்லாருக்குள்ளும் வந்து போகும் ஒன்றுதான் என்பதும் மிக இயல்பாகச் சொல்லப்படுகிறது. பெண் தன் முதற்காதலைச் சொல்லுவது ஒரு கட்டுடைப்புதான்! இட்டாமொழிக் கிராமத்தைச் சேர்ந்த ஏழை ஜோதிலிங்கத்தின் கதையில் அவனின் முதற்காதலி பணக்காரி; நகரத்தின் நவநாகரிக யுவதி அசுவினி! ஏழை ஜோதிலிங்கத்தின் காதல் நின்று போனதற்குக் காரணம் பணக்கார அசுவினி, 'குசுவினி'யாயிருந்ததுதான்! இது தமிழ் மரபிற்குப் புதுசு! ஏழை, பணக்காரன், நடுத்தரவர்க்கம் எனும் பேதம் பார்க்காமல், மாநகரம், நகரம், கிராமம் எனும் பிரிவு பார்க்காமல், நாகரிகம், நாட்டுப்புறம், காட்டுமிராண்டி எனும் பிரிவினை பார்க்காமல், ஆண், பெண், திருநங்கை எனும் பாலினம் பார்க்காமல், குழந்தைகள், விடலைகள், பெருசுகள் என்று வயோதிகம் பார்க்காமல், முதல் உலக நாடு, இரண்டாம் உலக நாடுகள், மூன்றாம் உலக நாடுகள் என்று நாட்டினம் பார்க்காமல் எல்லா உயிர்க்கும் குசு பொதுவானதாயிருக்க, இது விசயத்தில் கிராமத்துக்காரர்களையும் கால்சராய் போட்டவர்களையும் வயசாளிகளையும் மட்டுமே இதுவரையும் கேலி செய்து வந்த தமிழ்த் திரைமரபை மாற்றி, நகரத்து நவநாகரிகப் பெண்ணும் குசு விடமுடியுமென்று அவரைக் கேலிக்குரியதாக்கியதில் ஒரு கட்டுடைப்பு நிகழ்ந்திருக்கிறது என்பது முக்கியமானது! இதேபோல் சேர்மத்துரையுடனான கனியின் காதல், பத்தாம் வகுப்புத் தேர்வில் கனி தோற்று, சேர்மத்துரை வெற்றி பெற்றதால், சேர்மத்துரை அம்மா சொல்படி கனியை விட்டு சேர்மத்துரை விலக, 'கனி'யின் கோபத்தெறிப்பில் அங்கேயே அடி உதையுடன் அந்தக் காதல் நின்று போகிறது. பெண் தேர்வில் தோற்று, ஆண் தேர்வில் வெற்றி பெறுவது என்பதுங்கூட, தமிழ்த்திரையைப் பொருத்தவரை சிறு கட்டுடைப்புதான்! இவை மூலக்கதைக்குத் துணை செய்யாத போதுங்கூட, அவர்களின் மகிழ்ச்சிப் பகிர்தலை விகற்பமின்றி வெளிப்படுத்தும் மனக்கொட்டல்களின் மூலம் அவர்களின் மனநெருக்கம் உணர்த்தப்படுகிறது. சிறுசிறு கட்டுடைப்புகளையும் அவை செய்து முடிக்கின்றன.

தமிழகத்தின் தென்பகுதியான திசையன்விளை, தேரிக்காடு, உடன்குடி, இட்டாமொழி,திருச்செந்தூர் என்று 'நாடார்' சமூகத்தவர் அதிகம் வசிக்கும் ஊர்களாக அறியப்பட்டிருக்கிற இடங்களிலிருந்து, அந்தச் சமூகத்திலிருந்து, வறுமையின் பிடியில் வாழ்ந்துவரும், அப்பா அல்லது அம்மா இல்லாத குடும்பத்து இளைஞர்களைக் குறிவைத்து, வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் அந்தச் சமூகத்து முதலாளிகளால் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டுத் தங்கள் கடைகளில் கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டவர்களின் வாழ்க்கைப் பதிவுதான் 'அங்காடித்தெரு'! திருச்செந்தூர்க்காரியான கனியின் அப்பாவின் தொழில் நொங்கு, பதினி இறக்குவதென்பது கனியின் உரையாடலில் பதிவு பெறுகிறது. அதேபோல், நெல்லை 'சென்ட்ரல் கபே' மாடியில் அண்ணாச்சி கடைக்கு ஆள் பிடிக்கையில், 'அப்பா, அம்மா இல்லாத நம்ம சாதிப் பையங்களாவே எடுங்க' என்கிற பதிவு, அண்ணாச்சியும் அங்கு பணிபுரிபவர்களும், பெரும்பாலும் அல்லது அனைவரும் ஒரே சாதியை அல்லது ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதையே உறுதிப்படுத்துகின்றன. சொல்லாமலே,அவர்கள் 'நாடார்' சமூகத்தவர் என்பது புரிகிறது. பணி செய்யும் இடத்தில் உரிமையைக் கேட்டுத் தொழிற்சங்கங்கள் ஏதும் உருவாகிவிடாதபடி, மிக நுண்ணிய சாதி உணர்வால் அவர்களை இறுக்கக் கட்டி, சொந்தச் சாதி மக்களைச் சக்கையாய்ச் சுரண்டுவதும் கொத்தடிமைகளாக வைத்திருப்பதும் எத்தனைக் கொடுமையானது? சாதியின் வசீகரிப்பில் நடக்கும் பொருளாதாரச் சுரண்டல் இது! குறிப்பிட்ட இந்த சாதிக்கு மட்டுமே இது நிகழ்வதில்லை. எல்லாச் சாதி அண்ணாச்சிகளுக்கும் அவரவர்கள் சாதியில் கொத்தடிமைகளாக ஆட்கள் கிடைத்துக் கொண்டிருப்பதுதான் சோகம்! ஆனால் 'செந்தில் முருகன் ஸ்டோர்ஸ்' கடைக்கு வெளியே ரங்கநாதன் தெருவில் ஆணோ பெண்ணோ உழைக்கிற திறமையிருக்கிறவர் யார் வேண்டுமானாலும் சுதந்திரமாய்ப் பிழைக்கலாம். மாநகராட்சி நபர்களுக்கு, காவல் துறையினருக்கு, தொழிலாளர் நலத்துறையினருக்கு, தாதாக்களுக்கென்று கொஞ்சம் கொட்டி அழவேண்டியிருக்கும்! ஆனால் அதில் 'அண்ணாச்சி'கள் கொட்டிக் குடுப்பதை ஏற்பதில் இருக்கிற பணிவு இராது. வியாபாரிகள் இந்துவாய் இருக்கலாம்; இஸ்லாமியராய் இருக்கலாம்; குள்ளராய் இருக்கலாம்; நெட்டையாய் இருக்கலாம், யார் வேண்டுமாயினும் சுதந்திரமாகப் பிழைக்கலாம்! ஆனால் 'செந்தில் முருகன் ஸ்டோர்ஸ்' என்பது 'நிமிர்ந்து' நிற்கும் நெடிய சிறைக்கொட்டடியாயிருக்கும்!

நெல்லையிலிருந்து கொத்தடிமைகளாய் அவர்கள் சென்னைக்குக் கூட்டி வரப்பட்டதைக் கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையம் பதிவு செய்கிறது. அதன்பின் தி.நகர் வந்து சேர்ந்ததைக் காட்ட தி.நகர் பேருந்து நிலையப் பெரியார் சிலை காட்டப்படுகிறது. பெரியார் சிலையின் கீழ் எறும்புகளாய்க் குறுக்காகக் கடந்து செல்கின்றனர் அழைத்துவரப்படுவோர்! சூத்திரச் சாதி இழிவு நீங்கப் போராடிய பெரியாருக்குப் பெரிதும் கடமைப்பட்டது, 'பார்த்தாலே தீட்டு' என்று சமூகத்தால் புறந்தள்ளப்பட்டிருந்த அந்த 'நாடார்' சமூகம்! எந்த எதிர்பார்ப்புமின்றிப் பெரியாரின் பின்னால் பெரும்படையாய் நின்று சமூக இழிவுக்கு எதிராகக் களமாடிய அந்த 'நாடார்' சமூகத்திற்குப் பெரியாரும் கடன்பட்டவர்! பெரியார் இறுதி உரை நிகழ்த்திக் கல்லாய் உறைந்திருக்கும் அந்த இடத்தில், அவரின் கீழே, சமூகப் பொருளாதார நிலையில் உயர்ந்திருக்கிற சொந்தச் சாதி முதலாளிகளால் பொருளாதாரச் சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டு எல்லாவகை இழிவுகளுக்கும் ஆளாக்கப்படப் போகிறவர்கள், அது எதுவும் தெரியாமல் வெறும் கனவுகளை மட்டுமே கைபிடித்தபடி, பெரியாரைக் கடந்து செல்வது அதிர்ச்சி தரும் ஓர் அழகிய காட்சி!

வசந்தபாலன் நாம் பேச மறந்த ஒரு வாழ்க்கையை எளிமையாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார். எளிமை என்பது இயல்பைக் குறிப்பது! ரங்கநாதன் தெருவை நம் தேவைக்கேற்ப அப்படியே காட்டுவதும், அதனுள்ளே 'செந்தில் முருகன் ஸ்டோர்ஸ்'ஐ அங்குள்ள கடையாகக் குழப்பமின்றிக் காட்டுவதும், வியாபாரிகள் பலரை ரங்கநாதன் தெரு வியாபாரிகளாய்க் கொண்டு வந்து நிறுத்தியதும் அத்தனை எளிமையானதில்லை! 'இயல்பு' என்கிற எளிமைதான் இயல்பில் மிகவும் கடினமானது! நடிப்பிலும்கூடத்தான்! இயல்பை நேசிக்கிற வசந்தபாலன் செதுக்குகிற உளியிலிருந்து இயல்புதானே முகங்காட்டும்! இயல்பு கடினமானது....மிகக் கடினமானது. அதை இதில் நடித்தவர்கள் எளிமையாக்கியிருக்கிறார்கள், நாம் உண்மையாய் நம்பும்படி! இயல்பு ததும்பும் எளிமையைக் கொண்டு நம்மை அதகளப்படுத்தி விட்டார்கள் கனியாய் நடித்தவரும், கருங்காலியாய் நடித்தவரும், ஜோதிலிங்கமாய் நடித்தவரும்! இவர்களை ஒருசேர இங்குக் குறிப்பிடக் காரணம், இவர்கள் மூவரும் கதை நாயகியாயும், கதையை நகர்த்தும் வினைக்குரிய எதிர்க் கதாபாத்திரமாயும், கதை நாயகராயும் அமைந்திருப்பதால்! மற்றபடி தேவைக்குரிய கதாபாத்திரங்கள் அனைவருமே இயல்பு ததும்ப தங்கள் தங்கள் இடங்களைப் பூரணப்படுத்தி இருக்கிறார்கள். ஆரம்பக் காட்சிகளில் காட்சியின் அழகாய் இசையுமிருந்தது. பிற்பாடு, சில இடங்கள் தவிர்த்து, காட்சிகளின் அழகில் இசையின் இடம் அத்தனைப் பூரிப்பை ஏன் தரவில்லை என்பது தெரியவில்லை.பெரியதொரு இடராகவும் அது தெரியவில்லை! வலி மிகுந்த வாழ்க்கையை நிழற்கவிதையாய் வடித்துத் தந்த படத் தொகுப்பாளருக்கும் படப் பதிவாளருக்கும் பட நெறியாளுநருக்கும் இதைத் தயாரிக்க முன் வந்த தயாரிப்பாளருக்கும் தமிழ்ச் சமூகம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது. உண்மையான அர்ப்பணிப்புடனும் சமூகப் பொறுப்புடனும் உழைத்தால், அது நிச்சயம் 'மெய்வருத்தக் கூலிதரும்'! வசந்தபாலனின் உழைப்பு இந்தவகையானது என்பதை 'அங்காடித்தெரு' நிரூபித்திருக்கிறது.இதுவரையும் பேசப்படாதிருக்கிற ஒரு கொத்தடிமைச் சமூகத்தின் அழுத்தமான பதிவு இது! இதன் வெற்றி, சமூகப் பொறுப்புடன் இயல்பாகப் படம் பண்ண நினைக்கும் இளம் படைப்பாளிகளின் நம்பிக்கைக்கு ஊற்றும் நீர் என்பதே உண்மை!

சோகத்தைப் புடம்போட்டுத் தங்கள் நெஞ்சுக்குள்ளே புதைத்தபடியும் வாடிக்கையாளரைக் கண்டவுடன் வருவித்துக் கொண்ட வறட்டுச் சிரிப்பை மனதில் தேக்கியபடியும், தன் கனவுகளை ஒளித்துவைத்து, வலிகளையே வண்ணத் துணிகளாய் விரித்துக் காட்டியபடி துணிக்கடைகளில் பணிபுரியும் ஆண்கள், பெண்களைப் பார்க்கையில் இனிமேல் அவர்களுக்குப் பின்னிலிருக்கிற கதைகளாகப் புதிய புதிய கற்பனைகளை மனசு ஏக்கத்தோடும் தவிப்போடும் பேசும். அது விரியும் 'அங்காடித்தெரு'வின் நீட்சியாய்!