மயிலாடுதுறையில் இருந்து ஒரு ஃபோட்டோ: உதவி தேவை

அண்மையில் தேவாரத்தில் தேவி உமா எப்படி வர்ணிக்கப்படுகிறாள் என்பதைப் பார்த்துக்
கொண்டிருந்தேன். அவளது அங்க அவயவங்களை விவரித்திருப்பர். அப்போதெல்லாம் தேவி உமைக்குத் தனிக்கோயில் இல்லை. பின்னர் 12-14 நூற்றாண்டு அளவிலே பிற்காலச் சோழர், பாண்டியர், விஜயநகர் மன்னர்கள் தான் தனிக்கோயிலைக் கட்டுகிறார்கள். மயிலாடுதுறை பெரிய கோயில் உறைகின்ற அம்மைக்கு அஞ்சொலாள் என்பது தேவாரத்தில் வரும் பழைய பெயர். இதனை 200 ஆண்டுகளாய் நூற்றுக்கணக்கான சுவடிகளை ஆராய்ந்து சைவப்பெருமக்கள் பதிப்பித்த எல்லா தேவார நூல்களும் தெளிவாகச் சொல்லுகின்றன. அதுபற்றி ஒரு கட்டுரை எழுத ஆவல் கொண்டு சில குறிப்புகளைச் சேகரித்தேன்:
http://groups.google.com/group/santhavasantham/msg/13876352b4fd4a1b
http://groups.google.com/group/minTamil/msg/45a14325f0655ee6
http://groups.google.com/group/minTamil/msg/8be3ac24e73d1b9c

பரணீதரன், தீட்சிதர் பாடிய திருத்தலங்கள், விகடன், 2007 (ISBN 978-81-8476-038-5). பக். 99: " மாயூரத்தில் 'பெரிய கோயில்' எனக் கூறப்படுவது ஸ்ரீ மாயூரநாத சுவாமி திருக்கோயிலாகும். இது தொன்மைச் சிறப்பு பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். கிழக்கே உயர்ந்த கோபுரம் கொண்ட இந்தக் கோயிலுக்கு வீதி உட்பட ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

இங்கு கோயில் கொண்டிருக்கும் இறைவன் ஸ்ரீமாயூரநாதர். இங்கு உறையும் அம்பிகையை
'அபயாம்பிகை' எனவும், 'அஞ்சல்நாயகி' எனவும் அழைக்கிறார்கள்.தேவாரத் திருப்பாடல்களில் இறைவன் மயிலாடுதுறை அரன், மயிலாடுதுறையன்,அஞ்சொலாள் உமைபங்கன் எனவும், அம்பிகை, அஞ்சொலாள் எனவும் வழங்கப்படுகின்றனர்."
தஞ்சை, நாகைப் பகுதி நண்பர்களை விசாரித்தபோது பழைய எம்எல்ஏ கிட்டப்பா தான் முழுமுயற்சி எடுத்து மாயவரத்தை மயிலாடுதுறை என்று அதிகாரபூர்வமாகத் தேவாரத்தில் வரும் ஊர்ப்பெயரை உலகறியச் செய்தார். அதுபோல, நாமும் தேவாரத்தில் வரும் தேவியின் திருப்பெயரை உலகறியச் செய்தல் கடன். என்ன உதவி வேண்டுமோ கேளுங்கள். தருமை ஆதீனமும் என்றும் கொள்வது அஞ்சொலாள் என்னும் திருநாமமே. சரியாக, வடமொழியில் மொழிபெயர்த்திருந்தால், சாருவசனி என்பதுபோல் ஒரு பெயர் அமைந்திருக்கும்.

மயிலாடுதுறை அம்பிகை பெயர்தரும் தேவாரப் பாடல் இதுதான்:

வெஞ்சினக் கடுங்காலன் விரைகிலான்
அஞ்சிறப்பும் பிறப்பும் அறுக்கலாம்
மஞ்சன் மாமயிலாடு துறையுறை
*அஞ்சொலாள் உமை*பங்கன் அருளிலே. 5.39.4


இந்திய சுதந்திரத்தின்பின் பல கோயில்களில் தேவாரத்தைக் கருங்கல்லில் எழுதி வைத்தனர். இப்பொழுது பளிங்குக் கல்லில் எழுதுகின்றனர். மயிலாடுதுறை (மாயவரம்) பெரிய கோயிலில் அம்பிகை கருவறையிலோ, அல்லது ஈசன் சன்னதியிலோ இருக்கும். அதைப் பார்த்து அம்பிகையின் திருப்பெயர் வரும் பாட்டின் புகைப்படம் எடுத்து அனுப்ப முடியுமா? நன்றி.

நா. கணேசன்

பி.கு.: விகடனின் அண்மைக் கட்டுரையொன்றில் ந. கிட்டப்பாவின் வெற்றியை அண்ணா எப்படிக் கேட்டார் என்றுள்ளது.


உன்னோடு போனதே அண்ணா...

'அ'... மொழிக்கு முதல் எழுத்து. அண்ணா... பல கட்சிகளுக்கு முன்னெழுத்து. இன்றைய அரசியல்வாதிகள் பலருக்கும் அவர்தான் தலையெழுத்து!

அசாதாரண மனிதர்களையே ஆச்சர்யப்படவைத்த அண்ணாவுக்கு இது நூற்றாண்டு விழா தொடங்கும் நேரம்!

இன்றும் அந்த மனிதரைக் கொண்டாடுவதற்கு, அவரது பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மட்டும்தான் காரணமா? இல்லை, அத்துடன் அவரிடம் இருந்த அரசியல் நாகரிகமும் பண்பாடும்தான் காரணம். தனக்குக் கீழே இருந்த தம்பிகளை மதித்தார். அதிகாரத்தைப்
பங்கிட்டுக்கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர்களை அரவணைத்தார். குடும்பம் வேறு,
கட்சி வேறு என்று நினைத்தார். அவர் வளர்த்த நாகரிகம் இன்றைய அரசியல்வாதிகளால் பின்பற்றப்பட்டால், சமூகமே மேம்படும்!

அண்ணாவின் கதையைத் தேடினால், 'உன்னோடு போனதே அண்ணா!' என்றுதான் சொல்லத் தோன்றும். அந்த ஏக்க காலத்தின் சில சொச்சங்கள் மட்டும் இங்கே...

பழிக்குப் பழி!: தி.மு.க. அப்போது எதிர்க்கட்சி. அறிவிக்கப்பட்ட போராட்டத்தை அடக்குவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா, நெடுஞ்செழியன், சம்பத், என்.வி.நடராஜன், மதியழகன் ஆகிய ஐந்து பேரை போலீஸ் கைது செய்தது. வண்டியில்
ஏற்றும்போது அண்ணாவின் தோளில் கிடந்த துண்டு கீழே விழுந்தது. அந்த அதிகாரி தனது கையில் வைத்திருந்த தடியால் துண்டைத் தூக்கிஎறிந்தார். குனிந்து எடுத்த அண்ணா, கோபத்தைக் காட்டாமல் தோளில் போட்டுக்கொண்டார். கமிஷனர் அலுவலகம் அழைத்து வரப்பட்ட அண்ணாவை சேரில் உட்கார்ந்து சிகரெட் பிடித்தபடியே விசாரித்தார் அந்த அதிகாரி. அப்போதும் அமைதியாகவே இருந்தார் அண்ணா.

சில ஆண்டுகளிலேயே தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியது. அண்ணா, முதலமைச்சர் ஆனார். அந்த அதிகாரிக்கு பயம் வரத்தானே செய்யும். தனது பதவியை ராஜினாமா செய்தார். அண்ணா அதை ஏற்க வில்லை. ''எந்த ஆட்சி வந்தாலும் போனாலும், அதிகாரிகள் நிரந்தரமானவர்கள். விலகத் தேவைஇல்லை'' என்று அந்த அதிகாரியை வரச் சொன்னார். வெட்கப்பட்டபடியே அவரும் வந்தார்.

சில மாதங்களுக்கு பிறகு... தி.மு.க-வின் முன்னாள் மேயர் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய், தான் சொல்வதைத்தான் இன்ஸ்பெக்டர் செய்ய வேண்டும் என்று கட்டளை போட்ட தகவல் அந்த உயரதிகாரிக்குத் தெரிய வந்தது. அண்ணாவின் காதுக்குத் தகவலை கொண்டுபோனார். ''இப்படி ஒருவர் செய்தால், நீங்கள் என்ன செய்வீர்களோ... அதையே செய்யுங்கள். இனி, என்னைக் கேட்க வேண்டாம்'' என்று உத்தரவு போட்டார் அண்ணா!

கட்சி வேறு, ஆட்சி வேறு!: தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது அண்ணா வெளியிட்ட ஓர் அறிக்கை, ஆட்சியாளர்களின் சட்டப் புத்தகமாக அமையும் அளவுக்கு முக்கியமானது.

''கட்சி என்பது ஒன்று; சர்க்கார் என்பது வேறு ஒன்று; நாடு என்பது இன்னொன்று. கட்சியைவிட சர்க்கார் நிரந்தமானது. சர்க்காரைவிட நாடு நிரந்தரமானது. கட்சிகள் தோன்றலாம், மறையலாம், மாண்டும் போகலாம். ஆனால், சர்க்கார் நிரந்தரமானது. ஆகவே, கட்சிக் காரியங்களுக்கு சர்க்காரைப் பயன்படுத்தும் எண்ணத்தை விட்டுவிட வேண்டும். கட்சியும் சர்க்காரும் தனித்தனியாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் மோதுதல்
இருக்கக் கூடாது, இணைந்தும் போய்விடக் கூடாது. தனித்தனித் தன்மையுடன் தனித்தனியாக இயங்க வேண்டும். அதிகாரிகளை நேரடியாக அணுகிக் காரியம் சாதிக்கும் முறை நமது ஆட்சியில் இருக்கக் கூடாது'' என்றார்.

குடும்பமா... கிட்ட வராதே!: முதலமைச்சராகப் பதவிஏற்கும் நிகழ்ச்சிக்கு உறவினர்கள்
யாரும் வரக் கூடாது என்று சொல்லிவிட்டார் அண்ணா. ஆனால், அவரின் மனைவி ராணிக்கு அந்தக் காட்சியைப் பார்க்க ஆசை. புறப்படும்போது அண்ணா அழைத்துப் போவார் என்று நினைத்தார். ஆனால், அண்ணா அமைதியாக கார் ஏறிவிட்டார்.

மறுநாள் நுங்கம்பாக்கத்தில் அண்ணாவின் வீட்டுக்கு அரசு அலுவலர்கள் புதிய நாற்காலிகள், சோபாக்களை கொண்டுவந்து வைத்தார்கள். அதை எங்கே வைக்க வேண்டும் என்று ராணி சொல்லிக்கொண்டு இருக்கும் போது வீட்டுக்குள் நுழைந்த அண்ணா, ''எல்லாத்தையும்
எடுத்துட்டுப் போங்க'' என்றார். விதிமுறைப்படிதான் செய்கிறோம் என்று அலுவலர்கள் சொன்னபோதும் தேவையில்லை என்று அனுப்பிவைத்த அண்ணா, ''ராணி... எனக்கு இந்தப் பதவி நிரந்தரமல்ல. நாளைக்கே ஆட்சி போய்விடும். அப்போது இவர்களே வந்து சோபாவை எடுத்துட்டுப் போயிடுவாங்க. அப்ப உன்னோட மனசுதான் வருத்தப்படும். நமக்கு இந்த நாற்காலியே போதும்'' என்று பக்கத்தில் இருந்த மூங்கில் நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தார்.

அரசியல் வேண்டாம்!: தி.மு.க. வேர் பிடிக்க ஆரம்பித்த காலம். செ.அரங்கநாயகம் அப்போது பள்ளிக்கூட ஆசிரியர். ''தி.மு.க. சார்பு ஆசிரியர்களை ஒன்றுசேர்த்து ஒரு சங்கம் ஆரம்பிக்கலாமா?'' என்று கேட்க, அண்ணா மறுத்தார்.

''கல்வி அனைவருக்கும் பொதுவானது. அதில் அரசியலைப் புகுத்தக் கூடாது'' என்ற அண்ணா, மாணவர்கள் அரசியலுக்கு வருவதையும் விரும்பவில்லை. ''அரசியல் ஈடுபாடு இருக்கலாம். ஆனால், படித்து முடித்ததும்தான் பங்கேற்க வேண்டும். அரசியல் என்பது அத்தை மகள் மாதிரி. திருமணத்துக்கு முன் சுத்திச் சுத்தி வரலாமே தவிர, தொட்டுவிடக் கூடாது'' என்றார்.

அண்ணா முதல்வரானதும், ஒரு கோயிலில் அறங்காவலர் விஷயத்தில் சர்ச்சை எழுந்தது. ''கட்சிக் காரர்களை கோயில் அறங்காவலர்களாகப் போடக் கூடாது'' என்று உத்தரவிட்ட அண்ணா, அதற்கு இரண்டு காரணங்களும் சொன்னார்.

''கட்சிக்காரங்களுக்கு கோயில் ஐதீகம், விதிமுறைகள் தெரியாது. இது கோயிலுக்கு இழப்பு. கட்சிக்காரர்களை அறங்காவலராப் போட்டா, அவங்க கோயில்ல தர்ற பொங்கலைச் சாப்பிட்டுட்டு, அங்கேயே தூங்கிடுவாங்க. இது கட்சிக்கு இழப்பு!'' என்றார்.

தனது குறைபாட்டை தானே சொன்னார்!: 'யாருக்கும் பயப்பட மாட்டேன்... எதிர்ப்பு எனக்கு தூசு!' என்றுதான் தலைவர்கள் பேசுவார்கள். தலைவர்கள் யாரும் தங்களின் குறைபாட்டை மறந்தும் சொல்ல மாட்டார்கள். அண்ணா அதற்கு நேர் எதிர்!

''எனக்கு நிறையக் குறைகள் உண்டு. சொகுசாக இருப்பது மாதிரி நிறையக் கனவுகள் காண்பேன். சிறுசங்கடம் வந்தாலும், பெரும் குழப்பம் புகுந்துவிடும். எதிரிகள் பிரமாண்டமானவர்கள் என்ற அச்சம் எனக்கு எப்போதும் உண்டு. ஊர்வலம் என்றாலே எனக்குப் பிடிக்காது. என்னிடம் வந்து பலரும் பல விஷயங்களைச் சொல்கிறார்கள். ஆனால், அதைக் கேட்டுக்கொள்வது போல நான் பாவனைதான் காட்டுகிறேன். பலவற்றை கேட்டுக்கொண்டதே இல்லை. அசகாய சூரத்தனமாகப் பேசுவது என்றாலே எனக்கு அச்சமாக இருக்கிறது'' என்றார்

நோயை ஒப்புக்கொண்டார்!: தலைவர்கள் இப்போதெல்லாம் சாதாரணமாக மருத்துவமனைக்குப் போனால்கூட, அது வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள். நடிகர்களைவிட தலைவர்கள்தான் 'இமேஜ்' பற்றி அதிகமாகக் கவலைப்படுகிறார்கள். ஆனால், அண்ணா தனது உடல்நலம் பற்றி பகிரங்கமாக எழுதினார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அண்ணா மறைந்தது 1969-ல். ஆனால், அதற்கான அறிகுறிகள் பத்தாண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது. இதற்கான அறிகுறி வந்து, டாக்டரைப் போய் பார்த்துவிட்டு வந்ததும் பக்கம்பக்கமாக திராவிட நாடு பத்திரிகையில் எழுதினார். 'உன்னிடமின்றி வேறு யாரிடம் சொல்லப் போகிறேன்' என்ற பீடிகையுடன் ஆரம்பித்த அண்ணா, கழுத்தின் பின்புறத்தில் கட்டி இருப்பதைச் சொன்னார். ''இடது தோளில் எலும்புக்கும் சதைக்கும் இடையில் உள்ள மெல்லிய பாகம் தடித்துப்போய் என்னால் கையைத் தூக்க முடியவில்லை'' என்று சொன்னார். ''என்னுடைய உடலமைப்பே அதிக அளவு அலைந்து கட்சி வேலை பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறது'' என்றார்.

மாற்றார் மீதும் மதிப்பு!: ''தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். ஆனால், மற்ற கட்சித் தலைவர்கள் அனைவரும் சட்டமன்றத்துக்குள் வர வேண்டும்'' - 1967 தேர்தல் பிரசாரத்தின்போது அண்ணா சொன்னது.

தேர்தல் முடிவுகளை டிரான்சிஸ்டர் வைத்துக் கேட்டுக்கொண்டு இருந்தார் அண்ணா. முதல் முடிவு, பூங்கா நகர். கூட்டணிக் கட்சியான சுதந்திரா வேட்பாளர் ஹண்டே வெற்றி. மகிழ்ச்சி அடைந்தார். அடுத்ததாக, மாயவரம் தி.மு.க. வேட்பாளர் கிட்டப்பா வெற்றி. துள்ளிக் குதித்தார். அடுத்ததாக விருதுநகர் காமராஜர் தோல்வி. துவண்டுபோனார் அண்ணா.

''காமராஜர் எல்லாம் தோற்கக் கூடாதுய்யா!'' என்று கலங்கினார். ''ஜெயிச்சது நம்ம கட்சிதானே'' என்று பக்கத்தில் இருந்த கவிஞர் கருணானந்தம் கேட்க, ''காமராஜ் தோற்கக் கூடாதுய்யா.நாட்டுக்காக உழைச்சவரை எப்படித் தோற்கடிக்கலாம்?'' என்றார் அண்ணா. பதவியேற்றதும், ''காமராஜர் எங்களுக்கு ஆலோசனை சொல்ல வேண்டும்'' என்று அவரை நேரில் பார்க்கப் போனார். யாரை வீழ்த்தி தி.மு.க. வெற்றிபெற்றதோ, அந்த முதலமைச்சர் பக்தவத்சலத்தைப் பார்த்து ஆசி வாங் கினார்.

அரசியல் அதிசயமாக நடந்த சம்பவம், பெரியாரையும் பார்க்கப் போனதுதான். பெரியாரிடம் இருந்து பிரிந்த அண்ணா, 18 ஆண்டுகள் அவரை எதிர்த்து கட்சி நடத்தினார். இரண்டு இயக்கங்களும் தகுதி குறைந்த விமர்சனங்களைக்கூட செய்துகொண்டன. தேர்தலில் தி.மு.க-வை எதிர்த்து பெரியாரே பிரசாரம் செய்தார். ஆனால், வெற்றி பெற்ற அண்ணா, ''இந்த ஆட்சியே உங்களுக்குக் காணிக்கை!'' என்றபோது பெரியாரால் பேச முடியவில்லை. 'அண்ணா வந்து பார்த்தபோது கூச்சத்தால் குறுகிப்போனேன்' என்றுதான் பெரியாரால் சொல்ல முடிந்தது.

- ஆனந்த விகடன்.

5 comments:

Anonymous said...

me the first

வாசு ரங்கநாதன் said...

திரு கணேசன்
வணக்கம். தங்களின் முயற்சி நல் முயற்சி.

அஞ்சொல் என்பதை அரும் + சொல்
என்னும் பெயரடை மற்றும் பெயர்ச் சொல்லின் கூட்டுத் தொடராக எண்ணிப்
பாருங்கள். அரும் சொல்லைக் கூறுபவள் அஞ்சொலாள் என மருவியிருக்கலாம். இது
அஞ்சல் என்ற சொல்லிலிருந்து வந்திருக்க வாய்ப்பிருக்காது.

சிவனை அஞ்சொலார் என்று திருஞானசம்பந்தர் கூறியிருப்பதை இங்கு காணுங்கள்.
மேலும் வெஞ்சொலார் என்பது கொடுஞ்சொல் என்ற பொருளில் வந்திருக்கவேண்டும்.
அதற்கு ஈடாக அஞ்சொலாள் என்ற சொல் வந்திருப்பது கவனிக்கத்தக்கது.

நானும் மயிலாடுதுறையைச் சேர்ந்தவன்.

அன்புடன்
வாசு அரங்கநாதன்.


1109. திருமந்திரம்
அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சமென்று எண்ணித்தன் சேவடி போற்றுவார்க்கு
இன்சொல் அளிக்கும் இறைவியென் றாரே. 35

1095 அஞ்சுமொன்றி ஆறுவீசி நீறுபூசி மேனியில்
குஞ்சியார வந்திசெய்ய அஞ்சலென்னி மன்னுமூர்
பஞ்சியாரு மெல்லடிப் பணைத்தகொங்கை நுண்ணிடை
அஞ்சொலார் அரங்கெடுக்கும் அந்தணாரூ ரென்பதே. 04

2.101 திருவாரூர் – திருவிராகம் - திருஞானசம்பந்த சுவாமிகள்

365. மஞ்சர்தாம் மலர்கொடு வானவர் வணங்கிட
வெஞ்சொலார் வேடரோ டாடவர் விரும்பவே
அஞ்சொலாள் உமையொடும் மமர்விட மணிகலைச்
செஞ்சொலார் பயில்தருந் திருமுது குன்றமே. 07

365. மஞ்சர்தாம் மலர்கொடு வானவர் வணங்கிட
(2130) வெஞ்சொலார் வேடரோ டாடவர் விரும்பவே
(2131) அஞ்சொலாள் உமையொடும் மமர்விட மணிகலைச்
(2132) செஞ்சொலார் பயில்தருந் திருமுது குன்றமே. 07

51 வெஞ்சினவெள் ளேறூர்தி யுடையாய் போற்றி
(525) விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி
(526) துஞ்சாப் பலிதேருந் தோன்றால் போற்றி
(527) தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
(528) நஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றி
(529) நான்மறையோ டாறங்க மானாய் போற்றி
(530) அஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி

வண்ணத்துபூச்சியார் said...

தகவல்கள் அருமை. எப்போவோ படித்தது. மீண்டும் படித்ததும் மகிழ்ச்சியே. நிறைய எழுதவும்.

நன்றி..

வாழ்டத்துக்கள்

மு.வேலன் said...

வாழ்த்துக்கள்!

மாயவரத்தான்.... said...

வணக்கம். புத்தாண்டிற்கு மயிலாடுதுறை செல்கிறேன். பெரிய கோயில் சென்று மேற்கண்ட புகைப்படத்தை எடுத்து அனுப்ப முயலுகிறேன்.