கணினியும் செம்மொழி தமிழும் (சுஜாதா, 2005)

சென்ற மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம் என்ற மடலில் செம்மொழி தமிழ், அதன் ஆய்வுக்குக் கணினியின் பங்கு என்னும் சுஜாதா 2005-ல் எழுதிய கட்டுரையை அளிப்பதாக அறிவித்திருந்தேன். அனைவரும் ஒருமித்த எழுத்துருக் குறியேற்பில் எழுதுவதன் அத்தியாவசியத் தேவையைச் சுஜாதா அதில் குறித்துள்ளார். அவர் மேற்கோள் காட்டும் சங்கப்பாட்டு அகத்துறையைச் சேர்ந்தது. எனவே, அது புறநானூற்றில் இல்லை, குறுந்தொகைச் செய்யுள் அது. அச்சுப் பத்திரிகை இதழ்களில் வெகுசனங்களுக்கு விஞ்ஞானத்தின் மொத்த உருவாக முன்னிறுத்தப் பட்டவர் 'வாத்தியார்' சுஜாதா. தனியார் கான்வெண்டுகளால், தமிழ்க் கல்வி குறைந்துவரும் சமகாலத்தில் தமிழ்ப் பத்திரிகை வாசிப்பும் மத்யமரிடம் குறைதல் கண்கூடு. திரையுலகம் விசிடி, சின்னத்திரை என்று பெருகி விரிந்துவிட்டதால் 'வாத்தியார்' எம்ஜிஆர் போல ஒரு சகாப்தம் உருவாவது இனிமேல் கடினம். சினிமா போலவே, எழுதுதற்கு இணையம், வலைப்பதிவுகள், வலைத்திரட்டிகள், ... தோன்றிவிட்டன. முன்னெல்லாம் எழுதுவதைப் பலருக்கும் அளிக்கப் பத்திரிகையாளர் துணைவேண்டும். சென்னை மீடியா மன்னர்கள் வெளிச்சம் போட்டுக்காட்டி முயன்றாலும் இனி ஒரு 'வாத்தியார்' சுஜாதா போலத் தமிழ்நாட்டில் சகாப்தம் படைப்பது இயலாது. எழுத்தாளர்கள் எஸ்ரா, ஜெயமோகன் போன்றோர் வலைப்பதிவுகளைப் பார்த்தாலே தெரிகிறது: இனித் தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளர்கள் எல்லோரும் விரைவில் ஆளுக்கொரு வலைப்பதிவு தொடங்கிவிடுவார்கள். இன்னும் இணைய வசதி போன்றவை தமிழ்நாட்டில் பெருகினால் 50 ஆயிரம், லட்சம் பேர் எழுத முன்வரவேண்டும். இல்லாவிடில், 'கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலா" என்று வேறொரு சமயத்தில் பாரதிதாசன் வருந்தியது போலாகிவிடும். ஆயிரக் கணக்கில் தமிழ்நாட்டார் இணையத்தில் எழுதும் வேளையில் நிறுவன மயமாக்கப் பட்ட பத்திரிகைகள், சினிமா உலகம் தூக்கி நிறுத்தும் பிம்பங்களைத் தமிழ் மக்கள் உணர்ந்திட வாய்ப்புண்டாகும்.

இந்திரா காந்தி தொலைக்காட்சியை நாடுமுழுதும் தேர்தலுக்கு முன் ஒளிபரப்ப 'தூரதரிசனம்' தோற்றுவித்தார். அந்நாளில் டிவி அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ் முழுமையும் இருந்தது. ஆனால் சில நாள்களில் கொலையுற்ற இந்திராவின் மறைவைப் பட்டிதொட்டியெங்கும் ஒளிபரப்பியது. இந்தியாவில் ஒரு தலைவரின் மரணம் பரவலாக ஒளிபரப்பப்பட்டது அதுவே முதன்முறை.
2005-ல் சுஜாதா ஒரே குறியேற்பில் தமிழில் வலையாட வேண்டும் என்றார், பலரின் உழைப்பும் இன்று வலைப்பதிவுலகைத் தோற்றுவித்துள்ளது. விகடன் யூனிக்கோடுக்கு மாறிவிட்டார். பத்திரிகைகளில் எழுதுவோரும், முதலாளிகளைத் தெரிந்தோரும் தினமலர், தினமணி, குமுதம், குங்குமம், ... எல்லாவற்றையும் யூனிகோடுக்கு மாறச் செய்யுங்கள். தமிழ்நாடு அரசின் வலைத்தளங்களை (உ-ம்: இணையப் பல்கலை, ... ) யூனிக்கோடில் தர வேண்டுகோளிடவும். ஸ்ரீமான் பொதுஜனத்துக்கு, (ஐடி கணிஞர், விஞ்ஞானிகளை விட்டுவிடுவோம்) கணினி, எழுதுரு (font), DTP என்ற கருத்தை எடுத்துச் சென்ற பொறிஞர் சுஜாதாவின் மறைவு முதன்முறையாக உலக ஊரில் பலராலும் வலைத்திரட்டிகள் வாயிலாக அலசி வலைபரப்பப்படுவது அறிவியல் விந்தை அல்லவா.

நா. கணேசன்


கணினியும் செம்மொழி தமிழும்
சுஜாதா (1935 - 2008)

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதற்காக கலைஞருக்குப் பாராட்டுவிழா ஒன்று சிறப்பாக நடைபெற்றது. 'பெரும்பாலானவருக்கு செம்மொழியானதில் என்ன லாபம்' என்பதைப் பற்றிய தடுமாற்றம் இருப்பது தெரிகிறது.

செம்மொழி என்பது என்ன? அதை முதலில் விளக்கிவிடுவோம். Classical Language என்று மேல்நாட்டினர் கருதுவது, புராதன கிரேக்க, லத்தீன் மொழிகள மட்டுமே. இதனுடன் ஒருசிலர் சமஸ்க்ருதம், சீனம், ஹீப்ரு போன்ற மொழிகளையும் சேர்த்துக் கொள்கிறார்கள். பல்கலைக் கழகங்களில் சொல்லித் தருகிறார்கள். ஆராய்ச்சிக்காக நிதி தருகிறார்கள். தமிழும் இவ்வரிசையில் செம்மொழிதான் என்பதில் சிகாகோ, பர்க்லி, பென்சில்வேனியா போன்ற பல்கலைக்கழகர்களுக்கும், விஷயம் தெரிந்தவர்களுக்கும் எள்ளளவும் சந்தேகமில்லை. பெரும்பாலும் இந்தியத் துணைக்கண்டத்தில் இருப்பவர்களுக்குத்தான் இம்மொழியின் பழமையை உணர்த்த வேண்டியிருக்கிறது. மொழியியலாளர்களுக்கு மட்டும் தெரிந்தது ஏனையோருக்கும் தெரியப்படுத்துவதுதான் இப்போது நிகழ்ந்திருக்கிறது.

செம்மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டதால், பல பல்கலைக்கழகங்கள் தமிழையும் தங்கள் மொழியியல் சார்ந்த பாடங்களிலும் ஆராய்ச்சிகளிலும் சேர்த்துக் கொள்வார்கள். அவர்கள் என்ன என்ன கவனிப்பார்கள்?

தமிழினத்தின் கலாச்சார வேர்களை அவர்கள் ஆராய்வார்கள். நவீன மொழிகளில் குறிப்பாக திராவிட மொழிகளின் இலக்கண அமைப்புகளுக்கும், வாக்கிய அமைப்புகளுக்கும் செம்மொழியில் அடையாளங்களைத் தேடுவார்கள். வேர்ச்சொற்களை ஆராய்வார்கள். அந்தச் சொற்கள் எப்படி நவீன இந்திய, உலக மொழிகளில் குறிப்பாக திராவிட மொழிகளில் பரவின; மாறின என்பதைப் பற்றியும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவரும். செம்மொழியாக தமிழைப் படிப்பவர்களுக்கு, மற்ற மொழிகளில் அவர்களின் திறமை எவ்வாறு அதிகரிக்கும் என்பதை ஆராய்வார்கள். செம்மொழி இலக்கியங்களையும், இலக்கணங்களையும், அதன் கலைகளையும், பண்பாட்டையும் உன்னிப்பாக கவனிக்கும்போது பல புதிய உண்மைகள் வெளிப்படுவதை நம்மால் உணர முடியும்.

உதாரணமாக, சிலப்பதிகாரத்தில் ஐநதுவகை மன்றங்களில் இந்திரவிழாவெடுத்த காதையில் வெள்ளிடை மன்றம் என்ற ஒன்றின் வருணனை வருகிறது. நம்மை வியக்க வைக்கிறது. புகார் நகருக்கு வரும் புதியவர்கள் பல இடங்களில் தங்கள் தலைச்சுமையை இறக்கி, பெயர் ஊர் எல்லாம் குறிப்பிட்டு சரக்குப் பொதிகளை விட்டுவைத்து, எந்தவித பாதுகாப்பும் இன்றி ஊர் சுற்றப் போய்விடுவார்களாம். அவைகளை யாராவது கவர்ந்து செல்ல முயன்றால், 'திருடன்... திருடன்...' என்று கூவி, நான்கு காதம் வரை கயிற்றால் அவர்களைச் சுண்டி எழுப்பும் பூதம் ஒன்று சதுக்கத்தில் இருப்பதாகக் செய்தி உள்ளது. இதை, நவீன கார்த் திருடர்கள் வாகனத்தின் மேல் கை வத்தால் ஊளையிட்டு ஊரைக் கூட்டும் 'பர்க்ளர் அலார்'முடன் ஒப்பிடலாம். இவ்வாறு செம்மொழி இலக்கியங்களில் உள்ள நவீன செய்திகள் உன்னிப்பாக ஆராயப்படும். அந்த நாகரிகத்தின் பழக்க வழக்கங்கள ஆராயும்போது நம் இன்றைய வழக்கங்களின் பின்னணி தெரியவரும். முக்கியமான தமிழறிஞர்களுக்கு மேல்நாடுகளிலும், வடநாடுகளிலும் தேவை ஏற்பட்டு அவர்களுக்கு கொஞ்சம் சில்லரை புரளும்.

ஒரு மொழியை செம்மொழி என்பதற்கு என்ன தகுதி வேண்டும்?

குறைந்தபட்சம் ஆயிரம் ஆண்டாவது பழசாக இருக்க வேண்டும். இங்கிலிஷ், இந்தி எல்லாம் அடிபட்டுப் போய்விடும். கலாச்சார இலக்கியத் தொடர்ச்சி இருக்க வேண்டும். தமிழுக்குச் கூடுதல் சிறப்பு - இரண்டாயிரம் ஆண்டு பழமையான நம் இலக்கியத்தின் சில வரிகள் இன்றைய அன்றாடத் தமிழிலும், அரசியல் மேடைகளிலும், சினிமாப் பாடல்களிலும் ஒலிக்கும் அளவுக்கு தொடர்ச்சி இருப்பது. தமிழைச் செம்மொழியாக அறிவித்ததற்கு உண்மையிலேயே பெருமை பெற வேண்டியவர்கள் இருவர் - திவ்யப் பிரபந்தத்துக்கு வேதசாம்யம் அளித்த நாதமுனிகளும், திருமுறைகளுக்கு ஆலயங்களில் அந்தஸ்து அளித்த நம்பியாண்டார் நம்பியும்தான். செம்மொழி ஆராய்ச்சியில் இவர்கள் வாழ்வும், பணியும்கூட விரிவாக ஆராயப்படலாம்.

அண்மையில் மத்திய சர்க்காரில்... மன்னிக்கவும்; நடுவண் அரசில் ஏற்பட்ட அரசியல் மாறுதல்களால் கிடைத்த சலுகைகளில் முக்கியமாகக் கருதப்பட்ட தமிழைச் செம்மொழியாக அறிவித்து ஆவன செய்வதாகச் சொன்னதுதான். 'மைய அரசு அளித்த வாக்குறுதிகளிலேயே மிக மலிவு விலை வாக்குறுதி இதான்' என்று, இதனால் அரசியல் ஆதாயம் பெறாத சிலர் குறிப்பிட்டார்கள். சேது சமுத்திர கால்வாய் என்றால் ஆயிரம் கோடி வேண்டும். தமிழைச் செம்மொழியாக அறிவிக்க சாகித்திய அகாதமியிலிருந்து ஒரு ஜிஓ போதும். இந்த அறிவிப்பிலேயே புளகாங்கிதம் அடைந்து, சம்பந்தப்பட்ட தலைவர்களைப் பாராட்டு மழையில் நனைத்து மாவட்ட ரீதியாக விழாக்கொண்டாடுவர்கள ஒரே ஒரு கேள்வி கேட்டு என்ன பதில் வருகிறது என்று சோதித்துப் பாருங்கள். செம்மொழி என்றால் என்ன? உயிர் வாழும் அவசரங்களிலும், கவலைகளிலும் தினம்தினம் ஓடிக் கொண்டிருக்கும் சராசரித் தமிழனைக் கேட்டால், ''செம்மொழியோ, எதோ சொல்லிக்கிடறாங்க! அவங்க சொன்னா நல்லதாத்தான் இருக்கும். ஆள விடுங்க, 23பி வந்துருச்சு''

'செம்மொழி என்றால் என்ன?' என்று, ஒரு பிரபல பத்திரிகை கேள்வி பதிலில் 'சிவப்பான நம் பம்பாய் நடிகைகள் பேசும் தமிழ்' என்று கிண்டலடித்திருந்தது. 'இவ்வளவு பேசுகிறாயே! உனக்கு செம்மொழி என்றால் என்னவென்று சொல்லத் தெரியுமா?' என்று நியாயமான கேள்வி கேட்கலாம்.

அதனால், என் கருத்தில் செம்மொழி என்றால் என்ன என்பதை முதலில் அறிவித்துவிடுகிறேன். குறிப்பாக, அறிஞர்கள் மத்தியில், கழாக்காலுடன் பேதை புகுந்தாற் போல ஆகிவிடக் கூடாது. ஆங்கிலத்தில் 'கிளாசிக்கல்' என்பதற்கு ஈடான சொல்லாக செவ்வியல் பண்பைச் சொல்கிறார்கள். தமிழின் செம்மை, நிறம் சார்ந்ததல்ல; குணம் சார்ந்தது. செம்மை என்பதற்கு முதிர்ச்சி; பக்குவம் என்பது அகராதிப் பொருள். செந்தமிழ் என்பதிலும் இந்த வழக்குதான். ஒரு மொழி ஓர் அளவுக்கு பக்குவமும் முதிர்ச்சியும் அடைய முதல் தேவை - காலம். நேற்று வந்த ஜாவா மொழியை செம்மொழி என்று சொல்ல முடியாது. அந்த அளவில் தமிழுக்கு பழமையான மொழி; மிகப் பழமையான மொழிச் சான்று. மைய அரசு, 'ஆயிரம் வருஷம்' என்று சொன்னாலும், இரண்டாயிரம் ஆண்டு காலமாக அதற்கு இலக்கியம் இருப்பதை மேல்நாட்டு அறிஞர்கள் அறிவார்கள். எனவே முதிர்ச்சி அடைய போதிய காலம் கடந்துள்ள மொழி, தமிழ். முதிர்ச்சி மட்டும் போதாது. இலக்கியம் வேண்டும். இலக்கண முதிர்ச்சி வேண்டும். இலக்கணத்தில் முதிர்ச்சிக்கான கட்டமைப்புகள், விதிகள் என்று மொழியியலாளர்கள் அடையாளம் காட்டும் தகுதிகள் வேண்டும். ஓர் உதாரணம் சொல்கிறேன். தமிழில் ஆண்பால் பெண்பால் பகுப்பில் குழப்பமே இல்லை. ஆண், ஆண்தான். பெண், பெண்தான். மற்றதெல்லாம் அஃறிணை. சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் அஃறிணை இல்லாததால் ஸ்திரீலிங்க புல்லிங்க பாகுபாடு தன்னிச்சையாக ஓசை சார்ந்தே உள்ளது. இதனால் கால் விரல்கள் ஒரு பாலாகவும், கை விரல்கள் மற்றொரு பாலாகவும் கருதப்படும் வினோதங்கள் மொழியில் ஏற்படுகின்றன. இவ்வகையிலான Arbitrariness தமிழில் இல்லை. இது இலக்கணத்தின் முதிர்ச்சிக்கு ஓர் உதாரணம். இரண்டாவது தகுதி, தொடர்ச்சி. கிரேக்கம், லத்தின், சமஸ்க்ருதம் போன்றவையும் செம்மொழியாகக் கருதப்படுகின்றன. கிரேக்க மகாகாவியமான இலியட், நவீன கிரேக்கர்களுக்கு இப்போ சுத்தமாகப் புரியாது. லத்தீனும், சம்ஸ்க்ருதமும் மொழியியலாளர்களுக்கு மட்டும் புரியும். இம்மொழிகள் வழக்கொழிந்து அன்றாடத்தன்மையை இழந்துவிட்டன. தமிழில் அப்படியில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய சங்கப் பாடல்கள் இப்பொழுது படித்தால் ஏறக்குறய புரிகிறது.

நிலத்தினும் பெரிதே
வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவு இன்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே

இந்த புறநானூற்றுப் பாடலில் ஓரிரு வார்த்தைகளை நவீனப்படுத்திவிட்டால் இன்றைய தமிழாகிவிடும். மற்றபடி இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்து முடிந்தாலும் ஓரளவுக்கு புரிந்கொள்ளக் கூடிய மரபுத் தொடர்ச்சி தமிழுக்கு உள்ளது.

இன்றைய தமிழ், சங்ககாலத் தமிழ் அல்ல. தமிழ்மொழி தன் மரபுத்தொடர்ச்சியை கைவிடாமல் மாறிக்கொண்டும் வந்திருக்கிறது. மெல்ல மெல்ல தன்னை எளிதாக்கிக் கொண்டு வந்திருக்கிறது. மேகத்துக்கு இருபத்தேழு சொற்கள் இருந்தன. இப்போது மேகம், முகில் இரண்டுதான் மிச்சமுள்ளது. கொண்மூ, எழினி எல்லாம் கைவிடப்பட்டது. அலங்கல், தெரியல், பிணையல், தார், கண்ணி, தொடையல் எல்லாம் வழக்கொழிந்து போய் மலர்மாலை மட்டும் மிச்சமுள்ளது. புதிய வார்த்தைகளையும் தேவைப்பட்டபோது சற்றுத் தயக்கத்துடன் தமிழ் எடுத்துக் கொள்கிறது. இணையம், மென்பொருள், சைக்கிள், ரயில் போன்ற வார்த்தைகள் உதாரணம்.

தமிழ் மொழியின் தொன்மை குறித்து அதிகம் சந்தேகத்துக்கு இடமின்றி, தமிழ் சங்க நூல்களிலேயே இருக்கும் உள்சாட்சியங்கள் internal evidences தெளிவாகத் தெரிவிக்கின்றன. இதனால் தமிழ்மொழி கிமு 2ம் நூற்றாண்டிலிருந்து கிபி ஆறாம் நூற்றாண்டு வரை பண்பட்ட இலக்கிய நூல்கள் கொண்டதாக உள்ளது என்று தமிழ் மொழி பற்றி உணர்ச்சி வசப்படாத மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்களே கருதும் அளவுக்கு சான்றுகள் உள்ளன. இதனால் இதன் பழமையைப் பற்றி கருத்து வேறுபாடு எதுவும் இல்லை.

பெரிப்ளுஸ், டாலமி, பிளினி போன்றோரும் தமிழ் மொழியைப் பற்றி தம் குறிப்புகளில் சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம்விட, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழன், இன்றைய தமிழனோடு பேசினால் ஓரளவு புரியும். உலகின் மற்ற செம்மொழிகளுக்கு இந்தத் தகுதி இல்லை என்பதால் தமிழை சிறந்த செம்மொழி என்பேன்.

ஓர் எழுத்தாளன் என்கிற தகுதியில் தமிழுக்கு செய்ய வேண்டிய காரியங்கள் சில உள்ளன.

1. செம்மொழியின் அத்தனை இலக்கியங்களையும் வகைப்படுத்தி, அவைகளுக்கு ஒருமித்த எண் அடையாளம் கொடுத்து, பாகுபடுத்தி அனைத்தையும் ஒரு தகவல் தளத்தில் கிடைக்குமாறு செய்ய வேண்டும். இந்த தகவல் தளத்தில் தமிழ் இலக்கியங்களை காலம், பொருள், பாவகை இப்படி பல தலைப்புகள் கீழ் - 'ரிலேஷனல்' தகவல் தளத்தில் அமைத்து, அதில் பலவகையிலான வினாக்களுக்கு விடை கிடைக்குமாறு செய்ய வேண்டும். உதாரணமாக, இரண்டாம் நூற்றாண்டில் வெண்பா வடிவத்தில் எதாவது பாடல் இருந்ததா? நச்சினார்க்கினியர் எந்த காலத்தவர்? 'முள்ளும் மலரும்' என்ற நாவல் எப்போது எழுதப்பட்டது? முத்தொள்ளாயிரத்தின் காலம் என்ன? கம்பர் எத்தனை நூல்கள் எழுதியுள்ளார்? 'அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென்யானே' என்கிற வரி எந்த நூலில் உள்ளது. இவ்வாறான கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்குமாறு தகவல் தளக் கட்டமைப்பு தேவைப்படுகிறது. இது தற்போதைய சூழ்நிலையில் ஏறக்குறய இயலாத காரியமாகப்படுகிறது. காரணம், தமிழின் எழுத்துருவாக்கத்தில் தரக்கட்டுப்பாடு இன்னும் வராததே! இன்று தமிழ் இலக்கியத்தின் அத்தனை நூல்களும் இணையத்தில் பல்வேறு ஆர்வலர்களால் உள்ளிடப்பட்டிருக்கின்றன. கனடாவில் ஒருத்தர் திவ்ய ப்ரபந்தம் அனைத்தையும் உள்ளிட்டிருக்கிறார். மதுரை திட்டத்தின் கீழ் திருமுறைகள் உள்ளிடப்பட்டுள்ளன. திருக்குறள் பலபேரால் பலமுறை உள்ளிடப்பட்டுள்ளது. சங்க நூல்கள், காப்பியங்கள், கம்பன்... எல்லாமே இணைய உலகின் ஒரு ஓரத்தில் தனிக்குடித்தனம் நடத்துகின்றன. இவைகளை அணுகி, பயன்படுத்த முக்கியத் தேவை - எந்த எழுத்துருவாக்கத்தில் அவை உள்ளன என்பது தெரிய வேண்டும். டிஸ்கி, டாப், டாம், யூனிகோடு என்று நான்கு வகைகள் உள்ளன. இது தேவையற்ற குழப்பம். யூனிகோடுமுறையைதான் மைக்ரோசாப்ட், google போன்றவர்கள் பயன்படுத்தியுள்ளனர். புகழ்பெற்ற தேடியந்திரங்களப் பயன்படுத்த வேண்டுமெனில் முதல்தேவை யுனிகோடில் உள்ளிட்டிருக்க வேண்டும். இனிவரும் உள்ளீடுகள் எல்லாம் யூனிகோடில் இருந்தாக வேண்டும் என்கிற நியதியை எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும். இன்றைய யதார்த்தங்களில் இது சாத்தியமாகத் தெரியவில்லை. அவரவர் விருப்பப்படி உள்ளிடல் இன்னும் சில வருடங்கள் தொடரும் என்று தோன்றுகிறது. எனவே இம்மாதிரியான வேறுபாடுகளுடன் சமரசம் செய்து கொள்ளும்வகையில் எந்த எழுத்துருவில் இருந்தாலும் யூனிகோடுக்கு மாற்றிக் கொண்டு தேடக்கூடிய ஒரு தேடியந்திரத்தைச் செய்ய சில புத்திசாலிகள் முன் வந்திருக்கிறார்கள். குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு தேடியந்திரம் செய்திருக்கிறார்கள் எனக் கேள்விப்படுகிறேன். இந்த முயற்சிக்கு நிதி தர வேண்டும். இன்றைய கணிப்பொறி இயலில், இது வேண்டாத வேலையென்றாலும் டெக்னாலஜிப்படி சாத்தியமே! இணையத்தில் தமிழில் ஒரு கேள்வி கேட்கப்பட்டால், அது எந்த இணைய தளத்தில்.... எந்த எழுத்துருவில் இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து உங்கள் உள்ளுர் எழுத்தில் காட்டும் மென்பொருள் ஒன்று தேவை.

என் அனுபவத்தில், நான் கதையோ, கட்டுரையோ எழுதிக் கொண்டிருக்கும்போது இம்மாதிரியான கேள்விகள் எழும். அவைகளுக்கு பதில் கிடைக்கும்வரை எழுத்து தடைப்படும். முன்பெல்லாம் புத்தகங்களையும், நூலகங்களையும் தேடிப்போவேன். இப்போது இணையத்தில் தேடிக் கண்டுபிடிக்க ஓரளவுக்கு முடிகிறது. தமிழ் இலக்கிய நூல்கள் முழுவதையும் நின்று நிதானமாகப் பாகுபடுத்தி எண்ணிக்கை கொடுத்து, தொடர்புகள் கொடுத்து வடிவமைத்தால் உலகெங்கும் ஒரே தகவல் தளத்தை அணுக, ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தரம் உயரும். யோக்கியமும் கூடும். ஆசியவியல் நிறுவனம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் போன்றோர் இதுவரை செய்த பாகுபாடுகளைக் கருத்தில்கொண்டு ஒருமிப்புக் குழு ஒன்று அமைத்து அதற்கு போதிய நிதியுதவி தந்து, இந்தக் காரியத்தை நிறைவேற்றவேண்டும்.

தாமஸ் மால்டன் போன்றவர்கள் சங்க இலக்கியங்கள catalogue அட்டவணைப்படுத்தியுள்ளார்கள். எந்த வார்த்தையை உள்ளிட்டாலும், அது சங்க வார்த்தையெனில் எந்த நூலில், எந்தப் பாடலில், எந்த வரியில் வருகிறது என்று சொல்கிறது இந்தப் பட்டியல். இது concordance. இதுபோல் தமிழின் மற்ற இலக்கியங்களுக்கும் தேவைப்படுகிறது. ஐம்பெரும் காப்பியங்கள், ராமாயண, பாரத காவியங்கள், பக்தி இலக்கியங்கள், இடைக்கால உதிரி இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் அனைத்திற்கும் பட்டியல்கள் தேவைப்படும்.

2. தமிழ் எழுத்து சீர்திருத்தம் பற்றி நிறைய பேசிவிட்டோம். இதை செம்மொழி ஆராய்ச்சியின் அங்கமாகக் கொள்ள முடியாது. எழுத்துக்கள் காலப் போக்கில் எவ்வாறு மாறி வந்திருக்கின்றன என்பதைப்பற்றி ஆராய்ச்சி செய்யலாம். எழுத்தாளனான எனக்கு இனிமேல் எழுத்துச் சீர்திருத்தம் தேவையில்லை. இருக்கிற எழுத்துகளைச் சுருக்காமல் இருந்தால் போதும். புதிய எழுத்துக்கள் தேவையென்றால் அவைகளுக்கு தன்னிச்சையாக எழுத்துகள் தோன்றலாம். அல்லது புதிய ஒலிகளை தமிழோசைகளாக மாற்றிக் கொள்ளலாம். உதாரணமாக ஆங்கில 'ஸர்' என்பதை, தமிழில் 'சார்' என்று ஆகிவிட்டது. இதில் நாம் ஜப்பானியர்களின் முறையைக் கடைப்பிடிக்கலாம். ஆங்கில வார்த்தைகளை அவர்கள் தங்கள் நாக்குக்கு சௌகரியமாக, ஒலிமாற்றம் செய்து கொள்கிறார்கள். 'பால்' என்பத, 'பாரு' என்கிறார்கள். கம்ப்யூட்டர் என்பதை, கம்யுத்தா என்று மாற்றிக்கொள்கிறார்கள். ல, வ ஓசைகள் அவர்களுக்கு வராது. அதைப்பற்றி கவலையே படுவதில்லை. ல ஒலியை, ர ஒலியாக மாற்றிக் கொள்கிறார்கள். 'வ'வை, 'ப'வாக. பெங்காலிகள் போல. நாம்தான் தமிழின் தூய்மை, தொன்மை என்பதைக் கட்டிக்கொண்டு புதிய வார்த்தைகளைப் பிரயோகிக்க, அல்லது ஒலிமாற்றத் தயங்கி ஒவ்வொரு வார்த்தைக்கும் தமிழ் தேடுகிறோம். இதிலும் ஒரு சிக்கல். புதிய சிக்கல். எத்தனை தமிழார்வலர்கள் உள்ளனரோ அத்தனை மொழிபெயர்ப்புகள் உள்ளன. அயல் வார்த்தைகளை நமதாக, நமக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம் அல்லவா? ஆங்கிலக் கலைச் சொற்களை அப்படியே உபயோகிக்கலாம் என்று சொன்னால், அடிக்க வருவார்கள். மொழிபெயர்ப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. மொழி பெயர்த்த சொற்களில் ஒரு தரநிர்ணயம் கொண்டுவரவேண்டும். கலைச் சொற்களுக்கான ஒரு இணைய தளத்தில் இதுதான் எல்லோரும் பயன்படுத்த வேண்டிய மொழி பெயர்ப்பு என்று ஒப்பந்தம் வைத்துக்கொண்டால், அவைகளைப் பயன்படுத்துவதில் என் போன்ற எழுத்தாளர்களுக்கு தயக்கமே இல்லை. அதைப் பற்றி நான் உணர்ச்சிவசப்பட மாட்டேன். அதன் பொருத்தம் பற்றி கேள்வி கேட்கவும் மாட்டேன்.

எனக்கு இன்னொரு யோசனை தோன்றுகிறது. செம்மொழியின் ஏராளமான வார்த்தைகளை நவீன தமிழ் இழந்துவிட்டது. அந்த வார்த்தைகளை மறுபடி கொண்டுவந்து நவீன தமிழின் கலைச்சொற்களாக பயன்படுத்தலாம். ஆங்கிலத்தில் கலைச்சொற்களுக்கு லத்தீன், கிரேக்க வார்த்தைகள பயன்படுத்துவதுபோல் நம் மருத்துவம், கணிப்பொறியியல், வேதியியல், இயற்பியல், கணிதம் போன்றவற்றுக்கு செம்மொழிச் சொற்கள மறுபயன்படுத்தலாம். உதாரணமாக வல்லினம், மெல்லினம், இடையினம் என்பதற்கு HARDWARE, SOFTWARE, FIRMWARE, INPUT, OUTPUT அகம், புறம். புதுசாகச் சொற்கள அமைப்பதற்கு மாறாக பழைய சொற்களையே புதுப்பித்து, பாலிஷ் போட்டு பயன்படுத்தாமல் செம்மொழி தமிழுக்கு ஒருகால வரையறை சொல்ல வேண்டும் என்ற கருத்துள்ளவர்கள் சில அறிஞர்கள். அதாவது, ஆறாம் நூற்றாண்டு வரைதான் செம்மொழி. அதன்பின் வருவது இடைக்காலத் தமிழ். அதன்பின் நவீனத்தமிழ் என்று வரையறை செய்ய வேண்டும் என்கிறார்கள். இது பற்றியும் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் நல்லது. செம்மொழி ஆராய்ச்சி பல்கலக்கழகங்களில் தமிழ் நாற்காலிகளில் மட்டும்தான் இப்போது நிகழ்கிறது. இன்றைய சராசரித் தமிழனுக்கு இவ்வகை ஆராய்ச்சிகளால் நேரடியாக பயன் எதுவும் இருக்காது. மறைமுகமான சில பயன்கள் ஏற்படலாம். தமிழ் ஆராய்ச்சி மாணவர்களுக்கு அதிகப்படியான நிதி கிடைக்கலாம். அவர்கள் வீட்டில் வரவேற்பறையில் திண்டுகள் வைத்து தொலைக்காட்சிப்பெட்டி, குளிர்சாதனப் பெட்டி போன்றவை வாங்கலாம். செம்மொழி ஆராய்ச்சி இவைகளுடன் நின்றுவிடக்கூடாது. சமூகவியல், பொருளாதாரம், அறிவியல், அரசியல், வேளாண்மை என எல்லாத் துறைகளிலும் செம்மொழி ஆராய்ச்சி நிகழ வேண்டும். எல்லா இயலுக்கும் செம்மொழியில் உதாரணங்களும், சொற்களும் உள்ளன.

3. தமிழ் மொழி ஒன்றில்தான் இணையத்தில் கோப்புகளை அனுப்ப, இன்றய தேதிக்கு சுமார் 26 முறைகள் உள்ளன. விசைப்பலகை ஒதுக்கீடு நான்கு உள்ளது. கிரந்த எழுத்துக்களின் இடம் பற்றி தீர்மானமின்மை. தமிழ் எண்கள் குறித்தும். எழுத்துருவில் டாப், டாம், டிஸ்கி, யுனிகோடு, இன்னும்விட்டுப்போன ஒன்றிரண்டு. எத்தனை எத்தனை? இணையம் என்னும் மாளிகையில் நுழைவதற்கு முன்வாசலிலேயே நின்றுகொண்டு ஒருவரை ஒருவர் நுழையவிடாமல் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை மாற செம்மொழி தமிழுக்கு என்று ஒரே ஒரு விசைப்பலகை ஒதுக்கீடு. ஒரேஒரு குறியீடு. அது, யுனிகோடு கன்ஸார்ட்டியத்தின் அங்கீகாரத்துடன் நிலைப்படுத்த வேண்டும். செம்மொழியில் செய்யப்படும் ஆராய்ச்சிகள் எல்லோருக்கும் தெரிவதற்கு இது மிக முக்கியமான செயல்.

4. தமிழின் அகரவரிச நெடுங்கணக்கு வரிசையை நெறிப்படுத்த வேண்டும்.

5. செம்மொழி ஆராய்ச்சி, முனைவர்களுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் உரியது என்பதை அரசு சார்ந்த நிறுவனங்கள் உணர வேண்டும். செம்மொழிக்கு வழங்கப்படும் நிதியுதவி செம்மையான முறையில் பயன்படுத்தப்படுவதை ஐ ஏ எஸ் அதிகாரிகள் தீர்மானிக்கக்கூடாது. தமிழ்மொழியில் சிறந்த ஆராய்ச்சியாளர்களான வையாபுரிப்பிள்ளயும், வானமாமலையும், டிகேசியும் வக்கீல்கள்!

6. தமிழில் எந்த மூலையிலிருந்தாலும் சமர்ப்பிக்கப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகளின் பிப்லியோகிராஃபி - நூல் அடைவு அல்லது நூல் விவரப் பட்டியல் வேண்டும். செம்மொழி என்று அலங்கார ஒப்பனைகள் செய்து தங்கக் கூண்டில் அடைத்துவிடுவார்களோ என்கிற பயம்தான் என் போன்ற எழுத்தாளர்களுக்கு ஏற்படுகிறது.

7. ஆசியவியல் நிறுவனம் மேற்கொண்டிருக்கும் லெக்ஸிக்கன் விரைவில் முடிக்க வேண்டும். அவர்களுக்கு நிதியுதவி தரவேண்டும். அதே போல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிலையம், தமிழ் இணையப் பல்கலைக்கழகம் போன்றவர்களுக்கும் செம்மொழி ஆராய்ச்சியில் நிதியுதவவேண்டும். இவர்கள் செய்து வரும் பணி இதுவரை கவனிக்கப்படவில்ல. சில மிகச் சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார்கள்.

8. தனியார் பதிப்பகங்கள் ஆராய்ச்சி நூல்களை வெளியிட உதவி தரவேண்டும்.

9. அண்ணா பல்கலைக்கழகத்தின் 'களஞ்சியம்' போன்ற செம்மொழிக்கான அங்கீகாரம் பெற்ற ஓர் ஆராய்ச்சி இதழ் பதிப்பிக்கவேண்டும். அதன் ஆசிரியர் குழுவில் பன்னாட்டு அறிஞர்களும் இடம் பெறவேண்டும்.

10.செம்மொழியில் எல்லா இலக்கியங்களுக்கும் திருத்தப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட பதிப்பு கொண்டு வரவேண்டும்.

தமிழ் பிசி என்று ஒரு அமைப்பை லினக்ஸ் ஆர்வலர்கள் சேர்ந்து அமைத்தோம். ரெட் ஹாட் இதற்கு நல்ல ஆதரவு தருகிறார்கள். தமிழ் இணையப் பல்கலைக்கழகமும் ஆதரவளித்திருக்கிறது. தமிழ்சார்ந்த மென்பொருள் அமைப்பதற்கு ஓப்பன் சோர்ஸ் என்னும் திறந்தவெளி அமைப்புத்தான் சரிப்பட்டு வருகிறது. ஆளாளுக்கு தமிழைக் காப்பபாற்றியே தீருவேன். நான் காப்பாற்றுவதுதான் சரியான காப்பாற்றல் உன் காப்பாற்றல் வெத்து என்கிற மனப்பாங்கு தமிழர்களிடயே இருக்கும்வரை அவரவர் போக்குக்கு காப்பாற்றட்டும் என்று விட்டுவிட்டு, அவைகளில் நல்லவை சிறந்தவை புழக்கத்தில் வந்து மற்றவை தாமாகவே வழியில் உதிர்ந்துவிடும். இல்லையென்றால் டிஸ்கி, டாம், டாப், இஸ்கி, யுனிகோடு என்று எத்தனை குறியீட்டுத்தரங்கள், ரோமன், ஃபோனிட்டிக், பழைய தட்டச்சு, புதிய தட்டச்சு என்று எத்தனை விசைப்பலகை ஒதுக்கீடுகள்! இவைகளில் எவை பிழைக்கும்.

தமிழைக் கணிப்பொறியில் பார்க்கும் பிரமிப்பு முதலில் ஓயவேண்டும். இதுவரை செய்ததே போதும் என்று தமிழர்கள் உணரும்வரை தினப்படி புதிய முயற்சிகளில் நாம் நேர விரயம் செய்துகொண்டு, மற்ற அத்தியாவசியங்கள கவனிக்காமல் விட்டுவிடுவோம். இதன் காரணங்களை இப்போது அலசுவதில் பயனில்லை. புதிதாக தமிழில் ஏதேனும் மென்பொருள் சூழ்நிலையை முயலும்போது நமக்கு தேவைப்படுவது ஒருகலைச் சொல் அடைவு. எல்லோரும் பயன்படுத்துமாறு கலைச்சொற்களை ஓரிடத்தில் ஒரு வலைமனையில் பதிப்பித்து அதை ஊற்றுக்கண்ணாக எல்லோரும் பயன்படுத்தவேண்டும். இந்த கலைச்சொற்களின் அவசியத்தைத்தான் நாங்கள் முதலில் உணர்ந்தோம். இதற்கு ஓப்பன் ஆஃபீஸ் போன்ற மேல்மேசை சூழலுக்கு ஏற்ற எண்ணாயிரம் வார்த்தைகளை முதலில் பதிப்பித்தோம. இப்போது கேடிஇ மோசிலா போன்றவைக்கு உண்டான தனிப்பட்ட வார்த்தகளையும், செய்திகளையும், தமிழாக்கிக் கொண்டிருக்கிறோம். இவைகளில் மாறுதல்கள் செய்ய சில யோசனை கூறுகிறார்கள். இந்த யோசனைகள் மதிப்பிட்டு உடனடியாக மாற்றங்கள் செய்யவும் ஓப்பன் ஆபிஸ் சூழல் அனுமதிக்கிறது. தமிழ் மொழிக்கு இவ்வாறு அதன் உலகளாவிய ஆர்வக்கோளாறுகளயும் மீறி நல்லது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இன்றைக்கு தமிழில் இதெல்லாம் சாத்தியம். தமிழ் எழுத்துகளை கணிப்பொறியில் பார்க்கலாம், தமிழிலக்கியங்களை தகவல்தளமாக அமைக்கலாம் போன்ற மேம்போக்கான பயன்பாடுகளைக் கடந்து, தமிழில் வாணிபம் உலகளாவிய வர்த்தகம் செய்ய தமிழ் மொழி அறிவு மட்டும் போதும் என்கிற சூழ்நிலை உருவாகத் தொடங்கும். பாரதி, ''சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு, சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்'' என்றது சொன்னது இப்போது யூனிகோடு மூலம் சாத்தியமாகியிருக்கிறது. ~ சுஜாதா


6 comments:

முனைவர் மு.இளங்கோவன் said...

தக்க நேரத்தில் நினைவு கூர்கின்றமைக்கு நன்றி.
மு.இளங்கோவன்
புதுச்சேரி

Unknown said...

கணேசன்
சிறப்பானபதிவுக்கு நன்றி
ராதாகிருட்டிணன்

குமரன் (Kumaran) said...

உங்கள் முன்னுரை நன்றாக இருக்கின்றது ஐயா. உங்கள் எழுத்து நடை கொஞ்சம் புதுமையாகவும் இருக்கிறது. ஒரு வேளை கலைச்சொற்களை நிறைய புழங்குவதால் இருக்கலாம். அந்தக் கலைச்சொற்கள் மிகுதியாகப் புழக்கத்தில் வந்த பின்னர் இப்போது ஒவ்வொரு புதிய சொல்லை/சொற்றொடரைப் படித்தவுடன் ஒரு நொடி தயங்கி பொருள் உணர முற்படுவது போல் செய்யத் தேவையிருக்காது என்று நினைக்கிறேன்.

சில பழந்தமிழ் சொற்களை என் பதிவுகளில் நான் பயன்படுத்துவதுண்டு. அவற்றைப் படிப்பவர்களுக்கும் இந்த எண்ணம் தோன்றும் என்று நினைக்கிறேன். :-)

சுஜாதாவின் கட்டுரையை சேமித்து வைத்திருக்கிறேன். ஒரு முறை படித்துவிட்டேன். இன்னொரு முறை படிக்கலாம் போல் இருப்பதால் இப்போதைக்குச் சேமித்து வைத்துக் கொள்கிறேன். :-)

கோவி.கண்ணன் said...

சுஜாதாவின் சிலப்பதிகாரத்தில் உள்ள காவல் தெய்வம் சதுக்கபூதத்தை கிண்டல் செய்து இருப்பதைத் தவிர ஓரளவு கட்டுரை நன்றாகாவே இருக்கிறது, அவரது ஆளுமையையும் (மேதாவி) சேர்த்து எழுதி இருக்காவிட்டால் கட்டுரை மிக நன்றாகவே இருக்கும், பிறமொழி கலைச்சொற்களை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம் என்கிற ஜப்பான் உதாரணம் தவிர்த்து ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்துக்களையே சொல்லி இருக்கிறார்

Peram said...

நன்றாக உள்ளது அய்யா !

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

சொல்ல வேண்டி கருத்தை அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்