ரெடியா கலாம் ? –சுஜாதா (with an English translation)

இன்று (23-4-2025) உலகப் புத்தக தினம்! இருவரும் புஸ்தகப் பிரியர்கள். சேர்ந்து புத்தகம் எழுதுவதாக இருந்தது. 

ரெடியா கலாம் ? –சுஜாதா

ஏ.பி.ஜே. அப்துல் கலாம் திருச்சி புனித வளனார் கல்லூரியில் (சென் ஜோசப்) பி.எஸ்ஸி. படிப்பில் என் வகுப்புத் தோழர். அந்தக் கல்லூரியில் மதிய இடைவேளைகளில் லாலி ஹால் என்னும் பெரிய அரங்கத்தில் பெல் அடிக்கும் வரை அரட்டையடித்துக் கொண்டிருப்போம். அப்போதிலிருந்தே அப்துல் கலாமை எனக்கு ஞாபகம் இருக்கிறது. அதிகம் பேச மாட்டார். ஏதாவது கலாட்டா செய்தால் சிரித்து மழுப்பிவிடுவார். எங்களுடன் சினிமாவுக்கெல்லாம் வரமாட்டார்.

பி.எஸ்ஸி. படிப்புக்குப் பிறகு நான் எம்.ஐ.டி-யில் எலெக்ட்ரானிக்ஸ் சேர்ந்தபோது அதே வருடம் அவர் ஏரோநாட்டிக்ஸில் சேர்ந்தார். இருவருக்கும் பொதுவாக இருந்த தமிழ் ஆர்வத்தால் அடிக்கடி சந்தித்துப்  பேசியது நினைவிருக்கிறது. பாரதி பாடல்களிலும் திருக்குறளிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. அப்போதே அவருக்கு விமான இயல், ராக்கெட்ரி போன்ற துறைகளில் எதையாவது நடைமுறையில் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்ததை அறிய முடிந்தது. எம்.ஐ.டி-யின் ஜெர்மானிய ப்ரொபசர் ரெபந்தின், பேராசிரியர் பண்டாலே போன்றவர்கள் வழிகாட்ட (நாட்டிலேயே முதன் முதலாக என்று எண்ணுகிறேன்), ஒரு கிளைடர் என்னும் எஞ்சின் இல்லாத விமானத்தை செய்து முடித்தார்கள். அதை மீனம்பாக்கத்துக்கு பார்ட் பார்ட்டாக கழற்றி எடுத்துச் சென்று மறுபடி பூட்டி ‘விஞ்ச்’சின் மூலம் இழுத்து காத்தாடி போல உயர்த்த, அது தர்மலை (உஷ்ணக் காற்றைப்) பிடித்துக் கொண்டு பறந்தபோது கல்லூரியில் நாங்கள் அனைவரும் பெருமிதத்தில் பறந்தோம். கலாம் அதில் பங்கு வகித்தார்.

எம்.ஐ.டி-யில் இயற்பியல் பேராசிரியர் ராகவாச்சாரி, தமிழில் ஈடுபாடு உள்ளவர். அவர், தமிழில் அறிவியல் கட்டுரைகள் எழுதுவதற்கு ஒரு போட்டி வைத்தார். நானும் கலாமும் அதில் கலந்து கொண்டோம். கலாம் எழுதிய கட்டுரை ‘ஆகாய விமானம் கட்டுவோம்‘ என்பது. நான் எழுதியது ‘அனந்தம்‘ என்னும் Infinity Mathematics பற்றிய கட்டுரை. கலாமுக்குப் பரிசு கிடைத்தது. எழுதுவதுடன் நிறுத்தி விடவில்லை. பிற்காலத்தில் விமானம் என்ன, ராக்கெட்டே கட்டி முடித்தார்.

எம்.ஐ.டி-க்குப் பின் சில வருடங்கள் அவருடன் தொடர்பு இல்லை. இடைவருடங்களில் விக்ரம் சாராபாய் போன்றவர்களின் கண்காணிப்பில் அவர் வளர்ந்திருக்கிறார். நாசாவில் பயிற்சி பெற்றிருக்கிறார். கலாமை நான் பாரத் எலெக்ட்ரானிக்ஸில் சேர்ந்ததும் மீண்டும் வேலை தொடர்பாக சந்திக்க வாய்ப்புக்கள் கிடைத்தன. அவர் ஐ.எஸ்.ஆர்.ஓ-வின் ‘எஸ்.எல்.வி’ போன்ற ராக்கெட்டுகளின் வடிவமைப்பில் பங்கு கொண்டிருந்தார். அப்போதே கடினமான உழைப்பின் அடையாளங்கள் தெரிந்தன. கலாம், அரசாங்க ஏணியில் விரைவாக உயர்வார் என்பதை சுற்றுப்பட்டவர்கள் அப்போதே சொன்னார்கள். பின்னர் அவர் ஸ்பேஸ் டிபார்ட்மெண்டிலிருந்த ஐதராபாத் டி.ஆர்.டி.ஓ. நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்று இந்திய அரசின் ‘ப்ருத்வி’, ‘அக்னி’ ‘ஆகாஷ்’, ‘நாக்’ போன்ற ஏவுகணைகளின் வடிவமைப்பை வெற்றிகரமாகச் செய்து முடித்தார். அதன்பின் டெல்லியில் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அரசின் மிகமிக தாமதமாகிவிட்ட எல்.சி.ஏ. விமானத்தை ஹாங்கரைவிட்டு வெளியே இழுத்து வந்து பறக்கவைத்ததில் கலாமின் பங்கு கணிசமானது.

எங்களுடன் அந்த பாட்ச்சில் எம்.ஐ.டி-யில் படித்த மற்றவர்களுடன் ஒப்பிட்டால் கலாமின் வளர்ச்சி பன்மடங்கானது. நாங்கள் யாரும் ‘பாரத ரத்னா’ ரேஞ்சுக்கு உயரவில்லை. கலாமின் வெற்றிக்கு முக்கியக் காரணம், செய்யும் தொழில் மேல் பக்தியும் அயராத உழைப்பும் தன்னம்பிக்கையும்தான்.

கலாம், டி.ஆர்.டி.ஓ-வில் இருந்தபோது  அவர் நடத்திய   ரெவ்யூ மீட்டிங்குகளில் கலந்து கொண்டிருக்கிறேன். மிகச் சுருக்கமாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட காரியம் நடந்ததா என்று அந்தந்த ப்ராஜெக்ட் லீடரைக் கேட்பார். தாமதமானால் கோபித்துக்கொள்ளவே மாட்டார். சத்தம் போட மாட்டார். எப்படியோ அவரிடம் கொடுத்த வாக்குத் தவறுவதில் சங்கடத்தை உண்டு பண்ணுவார். அவரே அவ்வளவு கடுமையாக 24/7/365 என்று வேலை செய்யும்போது மற்றவர்கள் அதற்கு ஈடுகொடுக்க வேண்டியது கட்டாயமாகியது. Leading by example.

அவருடைய சொந்தத் தேவைகள் எளிமையானவை. பிரம்மச்சாரி. சைவ உணவு. எந்தவிதக் கெட்ட பழக்கமும் கிடையாது. இதனுடன் ஆதாரமான முஸ்லீமின் நல்லொழுக்க குணங்களும் சேர்ந்து அவரை அத்தனை பெரிய பதவியின் சபலங்களிலிருந்து வெகு தூரம் தள்ளிவைத்தன. தெஹல்கா டேப்களில் கலாம் பெரிய இடத்து லஞ்சங்களுக்கு ஒரு பெரிய முட்டுக்கட்டையாகத்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறார்.

ஒரு சம்பவம் எனக்குத் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஐதராபாத்தில் அவருடன் ஒரு மீட்டிங் சென்றிருந்தபோது சில ரஷ்ய தொழில்நுட்பர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்கு பஞ்சாரா ஓட்டலில் ஒரு டின்னர் இருந்தது. என்னையும் அழைத்திருந்தார். ரஷ்யர்கள் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மகிழ்ச்சியில் இருந்தனர். கலாம் கையில் ஒரு வோட்காவைத் திணித்து வற்புறுத்தினார்கள். கலாம் எந்தவித லாகிரிப் பழக்கமும் இல்லாதவர். சங்கடத்துடன் அவசரமாக என்னை அணுகி ‘கையில என்ன?’ என்றார். ‘வாட்டர்.. ஜஸ்ட் வாட்டர் கலாம்’ என்றேன். ‘கொண்டா’ என்றார். நான் வைத்துக் கொண்டிருந்த கிளாசை மின்னல் வேகத்தில் பிடுங்கிக் கொண்டு வோட்கா கிளாசை என் கையில் திணித்தார்.

‘சாப்பிட மாட்டேன்னு சொன்னா அவங்களுக்குப் புரிய மாட்டேங்குதுய்யா…’ சற்று நேரத்தில் ‘சியர்ஸ்’ என்று வோட்கா கிளாஸ்களுடன் கலாமின் தண்ணீர் கிளாஸும் சேர்ந்து க்ளிங்கியது.

கலாமும் நானும் இணைந்து ஒரு புத்தகம் எழுத உத்தேசித்திருக்கிறோம். இந்திய ராக்கெட் இயல் பற்றித் திப்புசுல்தான் காலத்திலிருந்து ஆரம்பித்து எழுதலாம் என்றார். ‘நான் ரெடி…நீங்க ரெடியா கலாம்?’ என்று எப்போது பார்த்தாலும் கேட்பேன். ‘இதோ வந்து விடுகிறேன்…அடுத்த மாதம் துவக்கிடலாம்யா’ என்பார்.

இப்போது அவர் ஓய்வெடுத்த பின் அந்தப் புத்தகத்தை எழுதிவிடுவார் என்று எண்ணுகிறேன். இந்திய அரசும், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் அரிமா ரோட்டரி சங்கங்களும் பள்ளிகளும் சமூக அமைப்புகளும் அவரை விட்டு வைத்தால்!

------------------

What made Kalam great: In the words of his classmate Sujatha

Hindustan Times, Jul 31, 2015. Translated from Tamil by N. Madhavan

(The following is a translation of a piece by celebrated Tamil writer, the late S Rangarajan, who wrote under the pseudonym Sujatha – after his wife. “Sujatha” (https://en.wikipedia.org/wiki/Sujatha_Rangarajan) was a classmate of A.P.J Abdul Kalam through their university years and is also the inventor of the electronic voting machine for Bharat Electronics Ltd, where he worked, apart from being a script writer for hit movies by Tamil film maker Mani Rathnam. This piece was written before Kalam became the President of India)

APJ Abdul Kalam was my classmate in the BSc course at Trichy’s St Joseph’s College. During lunch breaks in the big assembly hall, we used to banter until the bell rang for the lectures. I remember him from those times. He would not talk much then, and if someone poked fun, he would gently laugh it off. And he would not come with the rest of us to watch movies.

After our BSc,, when I joined the Madras Institute of Technology to study electronics, I saw him join the aeronautics course in the same year. We both shared a common passion for Tamil and I recall our frequent meetings on that count. I recall his interest in the songs of Subramania Bharathi (nationalist poet) and Tirukkural (Tirvalluvar’s omnibus of couplets). Right at that stage, it was clear that he wanted to accomplish something practical in the field of aeronautics or rocket science. Our professors (one German, one Indian) showed the way – and I think it was the first time in India. They made an engineless-glider and took it to the Meenambakkam airport – part by part – and put it all together again. Then they used a winch to pull it and hoisted it like a kite in the sky. It caught the hot winds and soared. And so did our feelings in the college. Kalam played a role in that.

Professor Raghavachari, who taught us physics, was passionate about Tamil. He held a competition that invited essays in Tamil on science. Kalam and I took part, of course. Kalam’s essay was titled “We will build a plane”. Mine was on Infinity Mathematics, titled “Anantham.” He got the prize.

Kalam did not stop with his writing. Forget the plane. He built a rocket!

I lost touch with him for a few years after our MIT days. In the interval, he grew up under the supervision of figures such as Vikram Sarabhai, training in NASA. After I joined Bharat Electronics Ltd, I found opportunity to meet him on many counts for official work. He was a part of ISRO’s SLV rocket project. I could now see strong signs of hard work. There were people saying right then that he was destined to climb the ladder in the government hierarchy. Later, he moved to become the head of the DRDO (Defence Research and Development Organisation) at Hyderabad in the Department of Space. He successfully accomplished a series of missile projects: Prithvi, Agni, Akash, Nag et al. Then he became advisor to the prime minister and played a significant role in the stalled light commercial aircraft (LCA) project, pulling it finally out of the hangar and actually making it fly.

If I were to look back and compare ourselves with our batch mate, Kalam’s rise is manifold. None of us quite rose to become a Bharat Ratna. The main reason for his success was his dedication towards work, tireless labour and self-confidence.

When he was in the DRDO, I have taken part in his review meetings – and they were brief. He would ask a project head if a certain task was done. If it was delayed he never got upset. No shouting – but somehow he would make the person responsible for missing the deadline squirm in discomfort. When he was working 24/7/365, others were compelled to match up. He led by example.

His personal needs were few. He was a bachelor and a vegetarian with no “bad” habits. To top this he had a devout Muslim’s sense of good conduct. These kept him away from the temptations of a big office. In all of Tehelka’s tapes that exposed doings inside the government, he came out as a figure who stood in the way of corruption in high places.

I particularly recall one incident. When I went to Hyderabad for a meeting with him, some Russian technicians were visiting and there was a dinner at the Taj Banjara. I was invited as well. The Russians were gloating in the joy of having signed an agreement and forced a glass of vodka on Kalam, who avoided any intoxicant. He approached me quickly and asked in an embarrassed tone, “What’s that in your hand?”.

“Water. Ice water, Kalam,” I replied.

“Give it to me,” he said.

In a flash he had taken my glass and thrust the vodka glass into my unsuspecting hands.

“Those guys simply don’t understand that I don’t drink,” he said.

In a while I heard them say “Cheers” – and a glass of ice water went up with the vodkas!

Kalam and I plan to write a book together. He said we could do one on India’s rocket science since the times of Tipu Sultan. “I am ready, Kalam. Are you?” I would ask him. “I am almost ready. Let us start next month,” he would say – everytime.

Now that he has retired, I expect him to write it – if only the Indian government, US universities, colleges, Lions and Rotary clubs, schools and social organizations would leave him alone!

Translated by N. Madhavan

From Kattradhum Pettradhum (The Learned & The Received), a collection of Sujatha’s writings, published by Ananda Vikatan Publications.


Indus Makara Crocodile sign in Stone Bangles (Mohenjo Daro) and in a Rakhigarhi seal

 Indus Makara Crocodile sign in Stone Bangles (Mohenjo Daro) and in a Rakhigarhi seal

------------------------------------------------------------------------------------

There is an important Crocodile "Makara Viṭaṅkar" sign in the Indus script. It represents the Crocodile of the Sky "the Pole Star". His spouse is the Earth goddess "Kolli/Koṟṟavai" with Tiger or Blackbuck as her symbol. Stone bangles were a specialty of the Indus civilization. From Mohenjo Daro, two stone bangles have the Makara sign, at the right most position.  Source: https://x.com/Vritrahan2014/status/1453705462612852740









.




Mohenjo Daro bangle (stoneware). 3 signs (a) crab (b) man with javelin (c) makara (L to R).
A bangle from Mohenjo Daro, Sindh with three characters of Sarasvati-Sindhu/ Harappan Script on it. A rare & beautiful find. Should be of Integration Harappan period ~2800-2000 B.C.E. Bangles are still popular among Hindus of the subcontinent. © Irshad Ali Solangi
The bangle below shows two right most signs: a man, Makara.


IVC religion in Iron Age Tamil Nadu:
Divine Couple in Ancient Indian Astronomy from Binjor to Adichanallur: Makara Viṭaṅkar & Kolli/Koṟṟavai. https://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html

Indus Makara sign variants (A. Parpola)



Indus Creation Mythology in the Iron Age Tamil Nadu:
https://cenkantal.medium.com/indus-creation-mythology-in-the-iron-age-tamil-nadu-e4834c8ecbd7
This year (2024) excavations by Dr. S. K. Manjul's team have yielded a small seal of the Harappans from Rakhigarhi. It shows a Sindh wild goat (Sindh ibex = Capra aegagrus blythii) or a Himalayan ibex with a single sign of the Indus script above the animal. The sign is the Makara Viṭaṅkar sign. A very important find.




https://www.induscaravan.com/blog/sindh-ibex-hingol-national-park/

https://www.wilddocu.de/sindh-wild-goat-capra-aegagrus-blythi/

https://link.springer.com/article/10.1007/s10344-024-01776-5




தமிழிசைப் பாடல்களில் சந்தக் குழிப்பு – தோற்றமும், வளர்ச்சியும்

     தமிழிசைப் பாடல்களில் சந்தக் குழிப்பு – தோற்றமும், வளர்ச்சியும்

                            டாக்டர் நா. கணேசன்

               ஜான்சன் விண்ணாய்வு நிலையம், ஹூஸ்டன், அமெரிக்கா

1.        இசை இலக்கணத்தில் சந்தம்

சங்க காலத்திலேயே இயற்கை தான் இசையைத் தோற்றுவிக்கும் முதல் ஆசிரியன் என்று கண்டு பாடியுள்ளனர். மூங்கில் துளையில் காற்று, அருவி, வண்டுகள், பறவைகள் சங்கீதம் பாடும். ஓசை ஒலி உடையது இயற்பா, இசை ஒலி உடையது இசைப்பா என்று இலக்கணம் வகுத்தனர். சங்கீதத்தின் பல கூறுகளைத் தொல்காப்பியத்தில் காண்கிறோம். வண்ணம் என்று தொல்காப்பியர் சந்தத்தைக் குறிப்பிடும் 44 இடங்கள் அமைந்துள்ளன.  ‘வண்ணங்கள் என்பன சந்த வேறுபாடுகள்’ எனப் பேராசிரியர் உரை தந்துள்ளார். வண்ணம் தூய தமிழ்ச்சொல் தான். நிறம் எனப் பொருள்படும் வர்ணம் என்ற வடசொல் அன்று. பகு-/வகு-, பழுதி/வழுதி, பால்/வால், பாடிவாசல்/வாடிவாசல், பயலை/வயலை இத்தகைய சொல்லிணைகள் போல, பண்-  பண்ணம்/வண்ணம் என்னும் சொல்முதல் பகரம் வகர எழுத்து மாற்றம் இது. காரைக்கால் அம்மையார் பண்களில் அமைத்தும், ஏழு சுரங்களைக் குறித்தும், இசைக்கருவிகளைத் தொகுத்தும் பாடினமையால், தமிழிசையின் தாய் எனப் புகழ்பெறுகிறார்.

வண்ணம் நூறும் பலவும் ஆகி வேறுபடினும், தொல்காப்பியச் சூத்திரத்தின் இருபதுள் அடங்கும் என்பார் பேராசிரியர். மனஸ்/மனம், தபஸ்/தவம் போல, சந்தஸ்/ சந்தம். சிலப்பதிகாரத்தில் உள்ள வரிப்பாடல்கள் அனைத்தும் சந்தப் பாடல்கள். சந்தத் தமிழின் தந்தை இளங்கோ அடிகள் பாடிய கந்துகவரி தமிழின் முதல் சந்தப்பாடல். இதே திசிரநடைச் சந்தத்தில் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம், சிவவாக்கியம், கம்பனின் ‘உறங்குகின்ற கும்பகன்ன’ பாடியுள்ளனர்.‘சந்தம் மலி பாடல்’, ‘சந்தமே பாட வல்ல தமிழ் ஞான சம்பந்தன்’, ‘சந்தம் இவை தண் தமிழின் இன்னிசை எனப் பரவு பாடல்இவ்வாறு எல்லாம் பக்தி இலக்கியக் காலத்திலே, சந்தஸ் வடசொல் சந்தம் தொல்காப்பியரின் வண்ணம் தமிழ்ச்சொல்லுக்கு நேர் ஆகிறது. சிந்தாமணி, சூளாமணி, கம்பன் என காப்பியங்களில் சிலப்பதிகாரத்தின் சந்தப் பாடல் மரபு தொடர்ந்துள்ளது. பரணி நூல்களில் சந்த அமைப்பு பெரிதாகி இருக்கிறது.

2.        ஒலிக்குறிப்பாக இயற்கைச் சந்தம்

  தும்பி போன்ற வண்டுகள் , தேனீக்கள் இசை முரல்வன. இந்த உயிரிகளுக்கு அளி (Bees) என்பது சங்ககாலப் பொதுப்பெயர். ‘அளிவழக்கம்’ என்று அளிகள் பாடுவதைப் பரிபாடலில் பார்க்கிறோம். தென்னா, தெனா என வண்டுகள் முரலுவதால், தென்னானே, தேன்னானே என நாட்டார் இசையில் சந்தத்தைப் பாடுகின்றனர். தென்னாதெனா என இசை பாடும் தேனீக்கள் மலரில் இருந்து எடுத்துக் கூட்டில் சேர்ப்பதற்குத் தேன் என்ற பெயர் பிறந்தது. இதுவே, தே(ம்)/தீ(ம்) = இனிமை என்ற பொருள் பெறக் காரணம் ஆயிற்று: தேம்பாகு (தேன்பாகு) இனிய பாகு. தேனளிகள் போன்றவை எழுப்பும் இசையைப் பக்தி இலக்கியங்கள் முறையாகத் தொகுத்துள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

தென்ன (4)

தென்ன என வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள் - நாலாயிரம்:682/3

தென்ன என்று வண்டு இன் இசை முரல்தரு திருவயிந்திரபுரமே - நாலாயிரம்:1149/4

தென்ன என்ன வண்டு இன் இசை முரல் திருவெள்ளறை - நாலாயிரம்:1375/4

தென்ன என்று அளிகள் முரன்று இசைபாடும்  - நாலாயிரம்:1756/4

தென்னா (2)

தென்னா தெனா என்று வண்டு முரல் திருவேங்கடத்து - நாலாயிரம்:3209/3

தென்னா என்னும் என் அம்மான் திருமாலிருஞ்சோலையானே - நாலாயிரம்:3961/4

தெத்தென (1)

தெத்தென இசை முரல் சரிதையர் திகழ்தரும் அரவினர் - தேவாரம்-சம்:3714/3

 தெத்தே (2)

தெத்தே என முரல கேட்டார் வினை கெடுக்கும் திரு நணாவே - தேவாரம்-சம்:2249/4

தெத்தே என முரன்று எம் உள் உழிதர்வர் - தேவாரம்-அப்:166/2

தேத்தென (2)

தேத்தென என்று இசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்து - தேவாரம்-அப்:785 /3

தேத்தெத்தா என்ன கேட்டார் திரு பயற்றூரனாரே - தேவாரம்-அப்:323 /4

தெத்தெனா (1)

தென்னா என்னும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே - தேவாரம்-சுந்:1027/4

தென்னாத்தெனாத்தெத்தெனா என்று பாடி சில் பூதமும் நீரும் - தேவாரம்-சுந்:16/1

தென்ன என்று வரி வண்டு இசைசெய் திரு வாஞ்சியம் - தேவாரம்-சம்:1536/3

தென்னென (2)

தென்னென வண்டு இனங்கள் செறி ஆர் பொழில் - தேவாரம்-சம்:1150/3

தென்னென இசை முரல் சரிதையர் திகழ்தரும் மார்பினில் - தேவாரம்-சம்:3717/3

சங்க காலச் சேரர் தலைநகர் கரூர். இந்த ஆய்வு முடிபு “சேரன் செங்குட்டுவன்”, “வஞ்சி மாநகர்” என்ற இரு புகழ்பெற்ற நூல்களில் சங்க இலக்கியத்தை முழுதும் ஆய்ந்து ஒரு நூற்றாண்டு முன்னரே நிறுவப்பெற்றது. பின்னர் கரூரில் நடந்த தொல்லியல் ஆய்வுகள், நாணயவியல் சங்க காலச் சேரர் தலைநகர் வஞ்சி என்பது கரூர் தான் என உறுதிப்படுத்தின. கொங்கர் கோன், கொல்லி காவலன் என்றெல்லாம் தன்னைக் கூறும் குலசேகர ஆழ்வார் காலம் ஈறாக, கரூர் சேரர் தலைநகராக இருந்தது. பின்னர் சோழர்கள் எழுச்சியால், சேரர் தலைநகர் தாராபுரம், கொச்சிக்கு இடம்பெயர்ந்தது. இந்தியாவின் செம்மொழிகள் இரண்டு: (1) தமிழ் (2) வடமொழி. பன்னிரண்டு ராசிகளில் முதலாவதாக, மேட மாதப் பௌர்ணமியில் சித்திரை விண்மீன் என்பதற்கான வானியலை நிறுவிய சேரன் “ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்” எனப் புகழ்பெற்றான். சேரன் செங்குட்டுவன் வடநாட்டின் மீது போர் தொடுத்து, இமயமலையில் வில் சின்னம் பொறித்தான் எனப் புகழ்கிறார் இளங்கோ அடிகள். கரூரில் இருந்த அரண்மனையில் வளர்ந்த அடிகள் செம்மொழிகள் இரண்டையும் பழுதறக் கற்றார். முத்தமிழ்க் காப்பியத்தில் கதாமாந்தர் பெயர்களை அமைத்த விதம் பற்றி விரிவாய்க் குறிப்பிட்டுள்ளேன் [1]. தம் சமண சமயக் கோட்பாடுகளை விளக்குவதற்காகவே, கவுந்தி அடிகள் பாத்திரத்தைப் படைத்து நாடுகாண் காதை பாடியுள்ளார்.

இளங்கோ அடிகள் தம் வடமொழி அறிவால், தமிழ்ச் செய்யுள் யாப்பின் அசை, சீர், தளை அடுக்கின் மேல் அடுக்காக, சந்தம் என்னும் கணக்கையும் சேர்த்து அமைத்தார். இதனைச் சிலப்பதிகாரத்தில் இசைப்பாக்களாக உள்ள வரிப்பாடல்களில் காண்கிறோம். சந்தப் பாக்களின் இலக்கணம் சமணர்கள் இயற்றிய யாப்பருங்கல விருத்தி, பௌத்தர் செய்த வீரசோழியம் இரண்டிலும் முதன்முதலாக விளக்கம் பெறுகிறது.

வடமொழி யாப்பிலக்கணம், விருத்தங்களுக்கு எழுத்துக்களையும் மாத்திரைகளையும் கணக்கிடும் வகையால் கூறும் அடிப்படைகள் இலகுவும் குருவும் ஆகும். லகு (< இளகு), குரு விருத்த பேதங்களை உண்டாக்குபவை. சந்த இலக்கணத்தின் வேரான இந்த அடிப்படை கொண்டு, சந்தக்குழிப்பினை அமைத்துள்ளனர். தத்த, தாத்த, தந்த, தாந்த, தன, தான, தன்ன, தய்ய என அடிப்படைச் சந்தம் எட்டு. சிலம்பின் வரிப்பாட்டுகளுக்குச் சந்தக் குழிப்பு இட இயலுகிறது. திருப்புகழில் சந்தக் குழிப்பு அசைகளைப் பாடியுள்ளமை போற்றத்தக்கது.

அடிப்படைச் சந்த வாய்பாடு எட்டின் பெயர்களுக்கும் அடிப்படையாக, அளிவழக்கம் என்று அளிகள் (தேனீ, தும்பி, வண்டு, மதுகரம், ...) முரலும் இசையின் அசைகள் அடிப்படையாக அமைந்துள்ளன. இசைத்தமிழுக்கு எழுத்தில் சந்தக் குழிப்பு அமைத்துத்தந்த இலக்கணிகளின் மேதமை வியக்கத்தக்கது. வேறெந்த மொழியிலும் இந்தத் தாள உறழ்வு (தாளப் பிரஸ்தாரம், Rhythmic pattern) விளக்கம் பெறவில்லை. ஷ்வா’ (ə, Schwa) எனப்படும் எழுத்தாக, பல பழைய சொற்களில் தமிழ் மொழியில் இயங்கியிருக்கிறது. ரங்கநாதன் ரெங்கநாதன் ஆகிவிடுவது இந்த  ə (Schwa) ஒலிப்பால் தான். சயசய/செயசெய, ஜயந்தி/ஜெயந்தி, தைவம்/தெய்வம், கல்லு/கெல்லு, கங்கை/கெங்கை இவை போல ‘ஷ்வா’ மாற்றம் எனக் கொள்வர். அளிவழக்கம் என்னும் இயற்கை இசை தென்னா, தெனா, தெத்தா, ...  என்பதை மாற்றி, தன, தான, தன்ன, தத்த, தந்த எனக் கொண்டு, சந்த வாய்பாடுகள் அமைத்தனர். சந்தப் பாவலர் பெருமான் அருணகிரிநாதர் இச்சொற்களைப் பாடியுள்ளார். ராக மாலிகை பாடுவது ராகப் பிரஸ்தாரம். சரிகமபதநி எனும் ஏழிசைத் தான உறழ்வு (தானப் பிரத்தாரம்) மட்டுமல்லாது திருப்புகழ்  எட்டுச் சந்த அசைகொண்டு தாள உறழ்வுக்கு இலக்கியமாக, தாளமாலிகையாய் வண்ணப்பாடல்களைத் தருகிறது.

3.        சந்தக் கோலாகலம் திருப்புகழ்

தெய்வத் தமிழ் இலக்கிய வரலாற்றில் "சந்தம்' என்னும் பேராறு பாய்ந்து ஓசையும் இசையும் இணைந்து வளப்படுத்திய பெருமை அருணகிரிநாத சுவாமிகளுக்கு உரியது. பட்டினத்தார் கோயில் நான்மணி மாலையில் பாடிய வண்ண விருத்தங்களுக்குத் தொங்கல் என்னும் சொல்லையும் சேர்த்துத் திருப்புகழின் புதுவடிவம் தருகிறார். பேரா. இ, அங்கயற்கண்ணி “திருப்புகழ்ப் பாடல்களைத் தாள இலக்கணத்தோடு தொடர்புபடுத்தி ஆராய்ந்ததன் மூலம், மொத்தமாக 857 சந்தங்களும், அவற்றிலிருந்து 178 தாள அமைப்புகளும் கிடைத்துள்ளன” என்று திருப்புகழிசை ஆய்வுநூலில் முடிபு தந்துள்ளார். ஒட்டக் கூத்தரின் தக்கயாகப் பரணியின் சந்தங்களை ஆழக் கற்றவர் அருணகிரி.

   “தமது இசைப்பாடலுக்கு அருணகிரிநாதர் ஒட்டக்கூத்தரால் பெரும் பயனடைந்தார் என்று உறுதியாய்ச் சொல்லலாம். ஒன்று, மேலே காட்டியவாறமைந்த விஸ்தாரமான சந்த அமைப்பு. இந்த அமைப்பை இவர் அவரிடமிருந்து பெற்றார் என்று கருதுவதற்கு மற்றொரு சிறந்த சான்று சம்பந்தர் வரலாறு. ஒட்டக்கூத்தர் தான் சம்பந்தரை முருகன் அவதாரம் என்று வைத்து அவருடைய மதுரை வாதத்தைப் பரணியுள் ஒரு சிறப்புக் கிளைக்கதையாக, வலிந்து, ஆனால் மிகவும் சுவையும் நயமும் பொருந்த அமைத்திருக்கிறார். இதனால் அருணகிரிநாதர் தமது நூல்கள் அனைத்திலும் சம்பந்தரை முருகன் அவதாரம் என்று பாடுவது ஒட்டக்கூத்தரைப் பின்பற்றியது என்று தெளிவாக நாம் காண இயலுகிறது.” (மு. அருணாசலம், தமிழ் இசை இலக்கிய வரலாறு).

   சந்தப் பாடல்களுக்கு ஆதியான சமணர் செய்த சிலப்பதிகாரம், இலக்கண நூல் யாப்பருங்கலம், வடமொழியில் இலக்கணமாக உள்ள பார்சுவதேவர் செய்த சங்கீத ரத்னாகரம் போன்றவை, சைவர்களான சம்பந்தர், பட்டினத்தார், ஒட்டக்கூத்தர், அருணகிரிநாதர் பாடல்களுக்கு அடிப்படையாய் இருந்துள்ளன. திருப்புகழ்ப் பாடல்களுக்கு இலக்கணத்தை, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் "வண்ணத்தியல்பு" என்ற நூல்செய்து தமிழன்பருக்கு உதவியுள்ளார். வண்ணச்சரபம் செய்த அறுவகை இலக்கணம், வண்ணத்தியல்பு நூல்கள் அச்சானபின், வண்ணப் பாக்களுக்குச் சந்தக் குழிப்புடன் பதித்து வெளியிடுவது வழக்கமாயிற்று.  சந்தக் குழிப்பு என்ற பெயரை வண்ண விருத்தங்களுக்கு ஏற்படுத்தியவர் வண்ணச்சரபம் ஆவர்.

1898-ம் ஆண்டில், மாயூரம் வித்வான் கிருஷ்ணய்யர் இயற்றிய தில்லை ஸ்ரீ நடராஜர் திருப்புகழ்ச் சந்தவிருத்தமும், அழகுமுத்துப் புலவரின் ஸ்ரீ மெய்கண்ட வேலாயுத சதகம் திறப்புகழ் 1900-ம் ஆண்டிலும்  சந்தக் குழிப்புடன் அச்சாகியுள்ளது. இதன் பின்னர் பல நூல்கள்: மதுரை மீனாட்சியம்மை மீது சந்தத் திருவடி மாலையும் திருவடிப்பத்தும்,  சோழவந்தான் சிதம்பரவிநாயகர் மாலையும் (அரசஞ் சண்முகனார், மதுரை : விவேகபாநு அச்சியந்திரசாலை , 1914). இதன் பதிப்பாசிரியர் மு. ரா. கந்தசாமிக் கவிராயர். அவரே திருப்புகழ்ப் பாடல்களைச் சந்தக் குழிப்புடன் வெளியிட்டார். எல்லாத் திருப்புகழ்ப் பாக்களுக்கும் சந்தக்குழிப்புடன் பதிப்பித்தவர் தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை ஆவர்.  தாள இலக்கியமாக, இந்தியாவின் எந்த மொழிகளிலும் இல்லாத அளவு இலக்கியங்கள் உருவாக இளங்கோ அடிகள் மூலவர். சம்பந்தர் விரித்தார். தமிழ்க் கடவுள் முருகனின் அடியார்களில் அருணகிரிநாதர் ராஜபாட்டை போட்டு நடந்தார். தண்டபாணி சுவாமிகளும், பாம்பன் சுவாமிகளும் தொடர்ந்துள்ளனர்.

4.        ஆய்வுத்துணை

(1)   இளங்கோ அடிகள் புகழும் காவேரிநாடு

https://karanthaijayakumar.blogspot.com/2017/10/blog-post_18.html

(2)  V.N. Muthukumar, Beyond Tālaprastāra in Indian Music: Prosody as a Generating Function of Rhythmic Complexity in Aruṇakirinātar's Tiruppukaḻ. Asian Music, 41, 1, 2010, pp. 60-88.





அரங்கநாதன் சீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு எழுதிய பிரணய பத்திரிகை (1454 CE கல்வெட்டு)

தமிழ்க் கல்வெட்டுகளில் ஓர் அழகிய காதல் கடிதம் இருக்கிறது. சீவில்லிபுத்தூரில் இருக்கும் ஆண்டாளுக்குக் கி.பி. 1454-ம் ஆண்டு திருவரங்கம் பெரியபெருமாள் எழுதிய பிரணய பத்திரிகை. ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவிலில் இந்த அரிய கல்வெட்டினைக் கண்டறிந்து உலகுக்கு வெளிப்படுத்தியவர் தமிழறிஞர்  கோவைகிழார் ஆவார். பல ஆண்டுமுன், கோவையில் அச்சாகும் ஓம்சக்தி இதழில் கட்டுரை எழுதினேன். கல்வெட்டுப்படி, சாசனமாலை (1960: எஸ். ராஜம்) இங்கே.
   இன்றோ திருவாடிப் பூரம்! எமக்காக
   அன்றோஇங்கு ஆண்டாள் அவதரித்தாள்! – குன்றாத
   வாழ்வான, வைகுந்த வான்போகம் தன்னைஇகழ்ந்து,
   ஆழ்வார் திருமகளா ராய்!
                                       - மணவாள மாமுனிகள்
கோதையின் தரிசனம்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ஐந்து வடிவங்களில் அருள் பாலிக்கிறாள். மூலவருக்கு சூடிக்கொடுத்தாள் என்பது திருப்பெயர்.

கௌதுக பேரம் எனப்படும் (செல்வ) ஆண்டாளின் திருப்பெயர் மல்லி வளநாடி. முற்காலத்தில் இந்த பகுதிக்கு 'மல்லி வளநாடு’ என்பது பெயர். இந்த நாட்டை ஆள்பவள் எனும் பொருளில் இப்பெயர் வழங்குகிறது. இந்தத் திருமேனி வெள்ளியால் செய்யப் பட்டது. இவளை மல்லிநாடாண்ட மடமயில் என்பர்.

ஸ்நான பேரம் எனப்படும் திருமஞ்சனத் திருமேனிக்கு புதுவை ஆண்டாள் என்பது பெயர். புதுவை என்பது ஸ்ரீவில்லிபுத்தூரின் பெயர்களில் ஒன்றாகும்.

வீதி கண்டருள்வாள் எனும் உற்ஸவத் திருமேனிக்கு 'திருப்பாவை பாடினாள்’ என்பது பெயர்.

நித்தியோற்ஸவராக (பலிபேரம்) உள் வலம் வந்து ஸ்ரீபலி சாதிக்கும் ஆண்டாளுக்கு, 'வேயர் பயந்த விளக்கு’ என்பது பெயர்.

----------------------------
தமிழ் இந்தியாவின் பழமையான செம்மொழி. பாரத பார்லிமெண்ட்டால் செம்மொழி என்று முதன்முதலாக அறிவித்த மொழி. எப்பொழுதுமே, ஒரு மொழியின் பரப்பளவு விசாலமாகிக்கொண்டே இருக்கவேண்டும். இந்தியாவின் பக்தி இலக்கியங்களிலே, இந்தியாவின் செம்மொழி ஆகிய ஸம்ஸ்கிருதத்தில் உள்ள ஆகச் சிறந்த பக்தி இலக்கியம் ஸ்ரீமத் பாகவதம். இதன் அடிப்படையாக, தமிழ் ஆழ்வார்களின் பாசுரங்கள் திகழ்கின்றன. ஒரு மொழியின் அழிவு, சொல்வளத்தை இழப்பதால் ஏற்படும். ஆழ்வார்கள், ஸ்ரீதர என்னும் வடசொல்லைச் சீதரன், சிரீதரன் என்று மொழிபெயர்ப்பர். என் முன்னோர் ஒருவர் பெயர் சீரங்கசாமி. சீரங்கம், சீவைணவம், சீவில்லிபுத்தூர், சீகத்தம் (< ஸ்ரீஹஸ்தம், திருமந்திரம்), சீகாரியம் (ராஜராஜீசுவரம் உடையார்கோயில் சீகாரி யஞ் செய்வானுக்கும் (S. I. I. ii, 311)), சீதனம், சீதாளி (தாளிப்பனை), சீதேவி, சீபாதம், சீமங்கலி (பாணன், நாவிதன்), சீமான், சீபலி, சீபண்டாரம்,, சீமத்து (செல்வம்), சீமந்தம் (சீர்), சீமுகம் (கடுதாசி) சீவலி (ஸ்ரீபலி), ... என்றெல்லாம் எழுத்திலும் சொல்லிலும் தமிழிலும் பயன்படுத்துவது வழக்கம்.

சீவில்லிபுத்தூர் என இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் பல நூற்றாண்டுகளாக உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரை மக்கள் சீலத்தூர் (அ) சீலுத்தூர் என்று பேச்சில் சொல்லுவது வழக்கம்.
தமிழின் சில முக்கியமான கல்வெட்டுகளைச் சாசனமாலையில் (1960) கற்கலாம்:
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0021978_சாசன_மாலை.pdf

சீவில்லிபுத்தூர்க் கல்வெட்டு, வாணாதிராயர்கள் ஆட்சிக் காலத்தில் எழுதப்பெற்றது. முனைவர் வெ. வேதாசலம், தொல்லியற்றுறை நூல் (1987):
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0009492_வாணாதிராயர்கள்.pdf
Here is a rare Tamil inscription, dated 1454 CE. A Love Letter from Ciivilliputtuur to Tiruvarangam. சீவில்லிபுத்தூர்ச் சிலாலிகிதத்தை வாசிப்போம்.  வெள்ளுரையாக (Plain-text) இணையத்தில் முதல்முறை:
உறங்காவில்லி தாசனான மாவலி வாணாதிராயன் (கி.பி. 1454)

     ஏதத் த்ரைலோக்ய நிர்மாண த்ராண ஸம்ஹார காரணம், 
    ஸ்ரீமன் ஸ்ரீரங்கநாதஸ்ய சாசனம் சாஸ்வதம் பரம்.  
ētat trailōkya nirmāṇa trāṇa saṁhāra kāraṇam |
śrīman śrīraṅganāthasya śāsanaṁ śāśvataṁ param ||

   'பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும்
           புதுவையர் கோன் விஷ்ணுசித்தன்'[1]
   கோதைக்கு நாம் வரக்காட்டின ப்ரணய பத்திரிகை :

'பக்தர்களும் பகவர்களும் பழமொழிவாய்
       முனிவர்களும் பரந்து, நாடும்
சித்தர்களும் தொழுதிறைஞ்ச, திசை விளக்காய்
       நிற்கின்ற' [2]

'நல்லார்கள் வாழும் நளிர் அரங்கப் பெரு நகருள்,' நம் வீட்டில், சேரனை வென்றான் மண்டபத்துச் சுந்தர பாண்டியன் பந்தல்கீழ், அரிய ராயன் கட்டிலில் இருந்து, உம்பரும் தும்புரு நாரதர் வந்து முகம் காட்ட, அவர்களுக்கு அழகு ஒலக்கம் கொடுத்து இருக்கச் செய்தே. நம் வீட்டில் - குடவர், கோவணவர், பூவிடுவர், தழை விடுவர், தண்ணீர் சுமப்பார், தண்டெடுப்பார், அணுக்கர், கணக்கர், மற்றும் நம் காரியத்துக்குக் கடவர் எல்லோரும் வந்து, - நம் கோதை வீட்டினின்றும் அர்ச்சகர், குடவர், கோவணவர், தண்டெடுப்பார், 'ஸ்ரீ ராமாநுஜ உடையார் வந்தார்கள்' என்று, நாமும் சர்வ பரிகரமும் அனைத்துக் கொத்துள்ளாரையும் எதிரே போகவிட்டு, தம் வீட்டில் உள்ளாரையும் கூட்டிக் காண்பித்துக் கொள்ளும் அடைவிலே காண்பித்துக் கொண்டு, தாம் வரக்காட்டின சம்மானமும் சுவீகரிக்கும் அடைவிலே சுவீகரித்தோம். தாம் வரக் காட்டின சாசனமும் வாசித்துக் காட்ட அறிந்து கொண்டோம். தாம் சொல்லிவரக் காட்டின படியாவது: 'நாம் பதினாறாமாயிரவர் தேவிமாருடனே, பெரிய மண்டபத்திலே, விநோதித்திருந்தோம்' என்று, தம் சுற்றத்துத் தோழிமார் தமக்குச் சொல்ல, அப்பொழுது தாம் புண்ணிற் புளி பெய்தாற் போலேயும், வேலால் துன்னம் பெய்தாற் போலேயும், நெஞ்சு ஊடுருவ வேவுண்டு, நிலையும் தளர்ந்து,

                 'கொள்ளும் பயன் ஒன்று இல்லாத
                        கொங்கை தன்னைக் கிழங்கோடும்
                அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில்
                        எறிந்து என் அழலைத் தீர்வேனே'[3]

என்றும் உள்ளே உருகி நைந்து, தாம் நம்மைப் பொருத்தமிலி என்றும், புறம்போல் உள்ளும் கரியான், பெண்ணின் வருத்த மறியாத பெருமான், 'வஞ்சக்கள்வன் மாமாயன்,' 'பாம்பணையார்க்கும் தம் பாம்புபோல் நாவும் இரண்டுள வாய்த்து நாணிலி'[4] என்றும், தாய் சொல்லிவரக் காட்டினது தாம், மாமிமார் மக்களாகையாலும், நாம் மாமனார் மக்களாகையாலும், நந்திறத்து ஊடல் கண்டு உவப்ப வேண்டிச் சொன்னதாயிருக்கும். நாம் 'முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்ப்பது' காரியம் ஆகவும், தேவரகசியமாகவும், பெரிய மண்டபத்தில் இருந்தோம். தாம் மணவாளர் வைத்த பரிசிலே இருந்தோம் என்றும், நாங்கள் எம்மில் இருந்து ஒட்டி அகச்சங்கம் நானும் அவனும் அறிந்தும் என்றும்.

              'பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்கு, பண்டு ஒரு நாள்
              மாசு உடம்பில் நீர் வாரா மானம் இலாப் பன்றி ஆம்
              தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
              பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே[5]
என்றும்,
            'திண் ஆர்ந்திருந்த சிசுபாலன் தேசு அழிந்து,
            அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்த 
             பெண்ணாளன்'[6]

என்றும், 'செம்மையுடைய திருவரங்கர்[7] என்றும் சொன்னபடியே - நாம் தம்மை அல்லது வேண்டுவதில்லை. தம் வீட்டில் உள்ளவர்களைத் தாட்க நிறுத்தி நில்லாமல் வரக் காட்டச் சொன்னபடியே, அவர்களுக்கு வேண்டும் சத்காரங்களும் செய்து, தமக்கு நாம் என்றும் பல்லக்கும், நாம் இருக்கும் குடையும், நாம் பூணும் கண்டமாலை ஆபரணங்களும், பட்டு பருத்தி ஸுகந்த திரவியங்களும் வேண்டுமதும் கொடுத்து, தமக்கு அடுக்களைப் புறமாக நமக்குப் பூர்வம் நடந்து வருகிற சீர்மையில் விட்ட சகாப்தம் 1375 மேல் செல்லாநின்ற ஸ்ரீமுக வருஷம், மீன ஞாயிற்று, பூர்வ பக்ஷத்து, ஏகாதசியும் புதவாரமும் பெற்ற உத்திரத்து நாள், உறங்கா வில்லிதாஸன் ஆன மஹாபலி வாணாத ராயர்— சீர்மையான மதுரை மண்டலத்து, முட்டநாட்டுத் திடியன் ஆன திருவரங்க நல்லூர் எல்லையாவது : மேல் எல்லை, புத்தூர் மலைக்கும் வயிரவன் பற்றுக்கும் கிழக்கு; வட எல்லை, வாரந்தூர்ப் பற்றுக்குத் தெற்கு; கீழ் எல்லை, கருமாத்தூரில் குளத்துக்கு மேற்கு; தென் எல்லை புளியஞ்சோலைக்கும் குத்துக்கல்லுக்கும் வடக்கு; இந் நான்கு எல்லைக்கும் உள்பட்ட, மாவடை, மரவடை, பட்டடை, பதிமுதல் மற்றும் எப்பேற்பட்ட சமஸ்தப் பிராப்திகளும் கைக்கொண்டு, கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்ளவும். இப்படிக்குத் திருவாய் மொழிந்தருளினமைக்கு அருளால் திருமந்திர ஓலை நாயகம் ஸ்ரீரங்கநாதப் பிரியன் எழுத்து.
 [இராமநாதபுரம் ஜில்லா, ஸ்ரீவில்லிபுத்தூர், சூடிக் கொடுத்த நாச்சியார் கோயிலில் உள்ளது.]
 
(சாசனத்தில் குறித்த மேற்கோள்: 1. நாச்சியார் திருமொழி 1:10; 2. பெரியாழ்வார் திருமொழி 4, 9, 6; 3. நாச்சியார் திருமொழி 13, 8; 4. நாச்சியார் திருமொழி 10,3; 5. நாச்சியார் திருமொழி 11, 8; 6. நாச்சியார் திருமொழி 11:9; 7. நாச்சியார் திருமொழி 11: 10.)
---------------------------------------------
தெரிவு:
நா. கணேசன்

ஹூஸ்டனில் ஒரு தமிழ்ப் புத்தாண்டு - கனலி (Tamil professor at UH, USA)

ஹூஸ்டனில் ஒரு தமிழ்ப் புத்தாண்டு

Govt. of India has established the ICCR Chair of Indian Studies at University of Houston. The first visiting professor is Dr. T. Vijayalakshmi, Professor of Tamil, University of Kerala.
https://www.uh.edu/class/news/archive/2023/may/class-welcomes-visiting-professor-and-first-iccr-chair-of-indian-studies-to-promote-cultural-exchange/

https://www.whitehouse.gov/briefing-room/statements-releases/2023/06/22/joint-statement-from-the-united-states-and-india/
"56. The Leaders welcomed the establishment of the Tamil Studies Chair at the University of Houston and reinstating the Vivekananda Chair at the University of Chicago to further research and teaching of India’s history and culture."

https://twitter.com/ANI/status/1672400408722153472
"This is the best time to invest as much as possible in India. The research centre of Google's AI in India will work on more than 100 languages. With the help of the Indian Govt, Tamil Studies chair will be established here at University of Houston" Indian PM

India is funding the establishment of a Tamil Studies Chair at the University of Houston.
https://twitter.com/nsitharamanoffc/status/1672945593831034883
 

பேரா. த. விஜயலட்சுமி தமிழ்ப் புத்தாண்டு பற்றிய நல்ல கவிதை எழுதியுள்ளார்:

ஹூஸ்டனில் ஒரு தமிழ்ப் புத்தாண்டு
============================

மழைக்கால இரவின் சிலிர்ப்பு
மரங்களின் இலைகளில் .
அடித்துச் செல்லப்பட்ட வருட
அழுக்குகளின் எச்சங்கள்
ஓடை இடுக்குகளில்.

கார்மேகத்தை விரட்டிய களிப்பில்
வெள்ளை மேக வீரர் கூட்டம்
கண்ணாமூச்சியாடி
சூரியன் வரவு.

மழை ஓய்ந்ததின் மகிழ்ச்சியில்
வானம் எங்கும் விமானங்கள்.
சக்கரத்தைக் களைந்து
அவசரத்தைப் பூண்ட வாகனங்கள்.

மழைக்கு எதிராய் மாநாடு நடத்தும்
மின் கம்பி பறவைக் கூட்டங்கள்.
மழைக்கு நன்றி சொல்லி  
ஓக்கு மரக் கொட்டைகள் பொறுக்கும் அணில் பிள்ளைகள்.

ஆமையாய் நகரும்
சரக்குப் புகைவண்டிகள்.
அடிவானத்தில் ஓவியமாய்
பரவும் ஆலைப் புகைமூட்டங்கள்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை
கண்ணில் படாத மனிதர்கள்.
கார்களாக மட்டும் தென்படும் நடமாட்டம்.

மனிதர்கள் நிறைந்த குடியிருப்பு;
மயான அமைதி நிலை நிற்பு.
என்றும் இல்லாமல் இன்று..... தூரத்தில்...... யார் அது.?

பயணக் களைப்பு முகத்தில்....
ஓ......இது அரை நாள் தாமதித்து
அமெரிக்கா வந்த சித்திரைப் பெண்ணா?
தாமதிப்பினும் தலைகாட்டிய மகிழ்ச்சியில் தமிழர்...

கோவில் கொண்டாட்டங்களையும்
மாலை மரியாதைகளையும்
பொங்கல் ருசிகளையும்
கை நீட்டக் களிப்புகளையும்

நினைவுக் குவியலில் தோண்டி எடுத்து
துடைத்துக் கழுவி தேனொழுகப் பிள்ளைகளிடம்
அசைபோடும் அப்பாக்கள்...
அறுபட்ட கழுத்தை
அசையாமல் பிடித்துப் பிள்ளைகள்.

ஜிபே கை நீட்டங்கள்
அலையடித்து கோவில்கள்
ஆங்கில வேண்டுதல்கள்
பதாம் பருப்பு பிரசாதங்கள்...!

சரவணபவாக்களில் சலசலப்பு
குமார்சுகளின் கொண்டாட்டம்
உடுப்பிகளின் உற்சாகம்
அப்பப்பா கலைத்து நகர்ந்த சித்திரைப் பெண்

ஆச்சரியமாய் திரும்பிப் பார்த்தாள்
மழலை மொழித் தமிழ் கேட்டு.....
அமெரிக்காவில் தமிழ் இருக்கையா......!

இங்கு என்ன சத்தம்.....
ஓ... ஓ.. இது பாப்பையாவா?
பட்டிமன்றம் இன்றிப் புது வருடமா?

இத்தனை நினைவுகளை
இனிதே சுமக்கும் தமிழர்களின் மன எஞ்சினை
உலுக்கி முடுக்கி
அடுத்த வருடத்திற்காய் ரீபூட் செய்தாள்.

போன வருடம் போயிட்டு வரட்டும்
இந்த வருடம் இனிதே இனி வரட்டும்

மங்களம் பொங்க
மனங்கள் குளிர
மனிதம் வளர  
மலரட்டும்  இனிதே இப்புத்தாண்டு.

    வாழ்த்துக்களுடன்
    கனலி’ விஜயலட்சுமி
    ஹூஸ்டன் பல்கலைக்கழகம்