மார்ச் 5, ஞாயிற்றுக்கிழமை, கேட்டி (ஹூஸ்டன்) தமிழ்ப் பள்ளி விழா
வாணி ஜெயராம் - கண்ணதாசன், சந்தித்தேன், சிந்தித்தேன்
பெற்றோர் வைத்த இயற்பெயர் கலைவாணி. கலைவாணியாகவே வாழ்ந்து மறைந்த தாமரைப்பூடணம் வாணி ஜெயராம் பற்றிக் கவிஞர் கண்ணதாசன் ‘சந்தித்தேன் சிந்தித்தேன்’ நூலில் எழுதின கட்டுரை, (1982, வானதி பதிப்பகம்)
12.2.2023, தினத்தந்தியில் ....
Posted by
நா. கணேசன்
at
1
comments
தமிழ்நாடு என்ற பெயர் - 2000 ஆண்டுகளில் தமிழில் முதன்முதலாய்க் கல்வெட்டுகளில்!
தமிழ்நாடு என்ற பெயர் - 2000 ஆண்டுகளில் தமிழில் முதல் கல்வெட்டுகள்
-------------------------------------------------------------------------------------------
பாரத ரத்தினம் சி. சுப்பிரமணியம் சென்னை மாகாண சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு என்ற பெயரை அதிகாரபூர்வமாகப் பயன்படுத்தலாம் என 24 பிப்ரவரி 1961-ல் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அறிவித்தார். 'டூச் லாண்ட்' (Deutschland) என்று ஜெர்மனியில் அழைக்கிறார்கள். ஜெர்மனிக்கு வெளியே டூச்லாண்ட் (Deutschland) என்றால் தெரியாது. ஜெர்மனி என்கிறோம். அதுபோல, தமிழ்நாடு என நம் மாநிலத்திலும், வெளியே ஆங்கில அறிக்கை, கடிதங்கள் போன்றவற்றில் Madras State என்றும் பயன்படுத்தலாம்’ எனச் சட்டமன்றத்தில் பேசினார். இதற்காக, அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டியதில்லை என்றார் சிஎஸ். அதன் பின்னர் தான் தமிழ்நாடு என்ற பெயர் கல்வெட்டுகளில் தமிழ்நாடு மாநிலத்தில் பொறிக்கப்படலாயிற்று. அவ்வகையில் கிடைத்துள்ள இரண்டு கல்வெட்டுப் பற்றிய கட்டுரையில் 20-ம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தமிழ்நாடு என்ற பெயர் ஆவணங்களிலும், கல்வெட்டுகளிலும் பதிவாகும் நிகழ்வுப் பின்புலத்தை - இப்பெயரின் 2000 ஆண்டுக்கால வரலாற்றை - ஆராய்ந்துள்ளேன். இலக்கியங்களிலே தமிழ்நாடு, தமிழகம் என்று இருந்தாலும் தமிழ்நாடு என்ற பெயர் கல்வெட்டில் வர 2000 ஆண்டு ஆனது. தண்டமிழ்நாடன் என்ற சொல்லாட்சியை மூவேந்தர் நாடுகளை ஒருகுடைக்கீழ் ஆண்ட சோழன் மெய்க்கீர்த்தியில் காண்கிறோம். ஆனால், தமிழ்நாடு என்று சிலாலிகிதங்களில் முதன்முதலாய் 1962-ல் இருந்துதான் காண்கிறோம்.
கரூர் சஞ்சய் பொன்னுசாமி என் அரிய நண்பர். நான் கேட்டுக்கொண்டதன் பேரில், தோ. மு. நல்லசாமி குடும்பத்தாரைத் தொடர்புகொண்டு அக் கல்வெட்டு இருக்கும் இடத்தைத் தெரிந்துகொண்டு, நல்ல ஒளிப்படங்கள் எடுத்து அனுப்பியுள்ளார். தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள அலங்காரவளைவு அருகே, இக்கல்வெட்டை தமிழக முதல்வர் திரு. கு. காமராஜை அழைத்துத் திறந்துவைக்கச் செய்துள்ளார் அப்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ தோ. மு. நல்லசாமி. இந்தியாவின் பல்வேறு சமஸ்தானங்களை இணைத்துச் சாதனை புரிந்த சர்தார் வல்லபாய் பட்டேல் ஞாபகார்த்தக் கட்டிடம் எனப் பெயர் வைத்துள்ளார்கள். பல நாடுகளை நாம் அறிவோம். ‘நாடு ஆகு ஒன்றோ? காடு ஆகு ஒன்றோ?’ - ஔவை. தமிழர்கள் அனைவரும் தமிழ்நாடு என்று பயன்படுத்த மதறாஸ் மாகாண அரசாங்கம் அறிவுறுத்திய பின்னர் ஏற்பட்ட முதல் கல்வெட்டு இது. தமிழ் மண்டிலம் ஐந்து என்றார் திருமந்திரத்தில் திருமூலர் (1) சேர நாடு (2) சோழ நாடு (3) பாண்டிநாடு (4) தொண்டைநாடு (5) கொங்குநாடு. கொங்குநாட்டிலே கூட உள் நாடுகளாக 24 நாடுகள் உள்ளன. எல்லா நாடுகளையும் பாரதத்தில் இணைத்த சர்தார் வல்லபாய் பட்டேல் போல், தமிழ் நாட்டின் எல்லா உண்ணாடுகளையும் இணைத்துத் தமிழ்நாடு என வழங்குமாறு 1962-ம் ஆண்டின் தோட்டக்குறிச்சிக் கல்வெட்டு கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. சர்தார் வல்லபபாய் பட்டேல்:
https://en.wikipedia.org/wiki/Vallabhbhai_Patel
https://en.wikipedia.org/wiki/Vallabhbhai_Patel#/media/File:Statue_of_Unity_in_2018.jpg
> அமரர் சி சுப்பிரமணியம் நிதியமைச்சராக இருந்தபோது மெட்ராஸ் என இருந்த வார்த்தைகளை
> அகற்றிவிட்டு நிதிநிலை அறிக்கை முழுக்க தமிழ்நாடு என மாற்றச் சொல்லி உத்தரவிட்டார் என்பதை
> அப்போதைய அரசுப் பணியில் இருந்த அமரர் அறிஞர் அ ச ஞானசம்பந்தன் குறிப்பிட்டு இருக்கிறார்.
> மரபின் மைந்தன் முத்தையா.
தமிழ்நாடு - ஓர் அரிய கல்வெட்டு (16-7-1962), தோட்டக்குறிச்சி (கரூர்)
http://nganesan.blogspot.com/2023/01/tamilnadu-inscription-thottakurichi.html
1960களில் தோட்டக்குறிச்சி (1962) மற்றும் திருநெல்வேலி (1966) கல்வெட்டுகள் போலவே, இன்னும் சில இருக்கும். தமிழ்நாட்டார் தேடினால், தமிழ்நாடு என்ற பெயருடன் 1960களில் வெளியான கல்வெட்டுகள் மேலும் கிட்டும் என்பது திண்ணம். உங்களுக்கு அவ்வாறு கிடைத்தால் அனுப்பவும். நன்றி.
நா. கணேசன்
தமிழ்நாடு எனக் கல்லில் பொறித்த முதற்கல்வெட்டு, 1962
https://images.news18.com/tamil/uploads/2021/08/kalvettu.jpg
https://tamil.news18.com/news/tamil-nadu/karur-district-todays-dilapidated-condition-of-the-school-opened-by-former-cm-kamarajar-aru-539785.html
இக் கல்வெட்டின் முக்கியத்துவம், வரலாறு பற்றி விரிவாகப் பார்க்கலாம்:
http://nganesan.blogspot.com/2023/01/tamilnadu-inscription-thottakurichi.html
This weekend I was reading two Tamil books: (1) T. K. Shanmukam (1912 -1973), *enatu nATaka vAzkkai*, 1972, vAnati patippakam (2) C. Subramaniam, *tamizaal muTiyum*, 1962, vaLLuvar paNNai. Both authors record the beginning and the end of the phase respectively of how the name, Tamil Nadu came to replace Madras State officially in Govt. documents and communications and correspondence from the Govt. When the Govt. announced in the State Legislature that Tamil Nadu can be used, it is official announcement. In the mentioned book written in 1962, CS always uses the name Tamil Nadu, never Madras Rajyam, Chennai Arasangam etc., In February 1961, Finance Minister CS announced in TN assembly that Tamil Nadu name will be used. And, in that year itself, inscriptions started appearing in Official functions where Tamil Nadu ministers attended. For example, PWD minister, Sri. Kakkan's meeting in 1961 at Pukaziyuur. Sincere thanks to Sri. Aravindh, Chennai who has located the historic inscription of 1961 where Tamil Nadu gets inscribed for the first time in epigraphs.
அ. ச. ஞானசம்பந்தன் தமிழக அரசின் பதிப்புத்துறை, செய்தித்துறைகளில் உயர்பதவி வகித்தவர். பேரா. அ. ச. ஞா. 1960களில் காங்கிரஸ் ஆட்சி ஆவணங்களில் தமிழ்நாடு என்னும் பெயர் பயன்படுத்தத் துவங்கியதைப் பதிவு செய்துள்ளார்கள். https://tamil.wiki/wiki/அ.ச.ஞானசம்பந்தன் "சென்னை அகில இந்திய வானொலியில் நாடகத் தயாரிப்பாளராக பணியேற்றார். 1959 முதல் தமிழ்நாடு அரசின் செய்தித்துறையின் மொழிபெயர்ப்புத்துறை இணை இயக்குநராக பணியாற்றினார். தமிழ் வெளியீட்டுத்துறை இணை இயக்குநராகவும் பணியாற்றினார். அ.ச. ஞானசம்பந்தன் 1967 முதல் 1970 வரை தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநராகப் பணியாற்றினார். 1971-ல் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் மதுரை பல்கலை துணைவேந்தரானபோது அவரது அழைப்பின்பேரில் அ.ச. ஞானசம்பந்தன் மதுரை பல்கலை தமிழ்த்துறை தலைவராக பணியில் சேர்ந்தார். 1973-ல் ஓய்வுபெற்றார். " சங்க காலம் தொடங்கி இலக்கியங்களில், பாரதியார் செந்தமிழ்நாடெனும் போதினிலே என்னும் பாடலில் பலமுறை *தமிழ்நாடு* என முன்னரே சொல்லியுள்ளார். நவம்பர் 1921-ல் இருந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்படத் தொடங்கிற்று. கன்மேலெழுத்தாய் *1961-ல் தமிழ்நாடு* முதன்முறையாக எழுதப்படலாயிற்று. திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு (திசம்பர் 16, 1945 - சனவரி 26, 1957[1]) என்பது முந்தைய இந்திய மாநிலமான திருவாங்கூர்-கொச்சி மாநிலத்தின் அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். https://ta.wikipedia.org/wiki/திருவாங்கூர்_தமிழ்நாடு_காங்கிரசு
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே- அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.
- ஔவை அருளின மூதுரை
Let me first give how Ma. Po. Sivagnanam proposed the use of Tamil Nadu in 1948 and Sri. K. Kamaraj opposed it. This seems to be the reason why EVeRaa preferred the use of Tamilakam (1949) as Ma.Po.Si went for Tamil Nadu in 1948. In the 1948 Coimbatore Tamil MaakaaNa Congress, CS, C. P. Subbiah, Ubayathulla ... requested Kamaraj to allow MaPoSi to tell his views. When the time came (1961), it was CS who announced and implemented Tamil Nadu in the then Govt. documents and correspondence. Anna changed the name officially in English also after DMK came to power. For this Indian Constitution had to be changed to drop Madras State to Tamil Nadu. Nowadays, even the Indian Prime Minister often talks of Tamil's antiquity and special position in India and its history. ~NG
------------------
தமிழ் மாகாண 43வது அரசியல் மாநாடு ( டி. கே. சண்முகம், எனது நாடக வாழ்க்கை, 1972, வானதி பதிப்பகம்) 1948 ஜனவரியில் தமிழ் மாகாண 43-வது அரசியல் மாநாடு கோவையில் நடைபெற்றது. அந்த மாநாட்டு நிதிக்காக 17-1-48இல் நாங்கள் உயிரோவியம் நாடகம் நடித்து அதன் வசூல் ரூ. 1448.00 முழுவதையும் மாநாட்டின் தலைவர் திரு காமராஜ் அவர்களிடம் கொடுத்தோம். முதல் அமைச்சராக இருந்த திரு ஒமந்துர் ராமசாமி ரெட்டியார் அன்று தலைமை தாங்கிப் பேசினார். தலைவர் காமராஜ் அவர்களும் பாராட்டினார். நாடக ஆசிரியர் திரு நாரண.துரைக்கண்ணன் அவர்களுக்கும் பொற் பதக்கமும் வழங்கினார்.
*இருபெரும் தலைவர்கள் போட்டி* 19.1-48இல் நடைபெற இருந்த அந்த மாநாட்டுத்தலைவர் தேர்தலிலே தான் திரு ம. பொ. சி. அவர்கட்கும் திரு காமராஜ் அவர்கட்கும் பலத்த போட்டி ஏற்பட்டது. திரு ம. பொ. சி. அவர்கள் பெறும் பதவிக்காகப் போட்டியிடவில்லை. அதை அவரே தமது ‘தமிழ் முரசு’ இதழில் விளக்கமாக எழுதியிருந்தார். வேங்கடமலை குமரி முனைக்குள் அடங்கிய தமிழ் மாகாணம அமைய வேண்டும் என்பதற்காகவே திரு ம. பொ. சி போட்டியிட்டார். ஆனால் அவர் வெற்றி பெறவில்லை. மூன்றில் ஒரு பங்கு வாக்குகளே அவருக்குக் கிடைத்தன. கிடைத்த வாக்குகள் 111. காங்கிரஸ்காரராகிய திரு ம. பொ. சி. தோல்வியடைந்ததிைக், கேலி செய்யும் முறையில் அப்போது நடைபெற்று வந்த ஒரு. காங்கிரஸ் நாளிதழ் ‘கிராமணியாருக்குப் பட்டை நாமம்’ கட்டம் கட்டிப் பிரசுரித்திருந்தது.
*‘கிராமணியாருக்குப் பட்டை நாமம்’* என்ற தலைப்பைப் படித்ததும் என் மனம் வருந்தியது. ஒரு காங்கிரஸ் நாளிதழ் மற்றொரு காங்கிரஸ் ஊழியர் தோல்வி அடைந்ததை இவ்வாறு நையாண்டி செய்திருந்தது எனக்கு வியப்பாகவே இருந்தது.
*பக்தவத்சலனார் தீர்மானம்* 1948 ஜனவரி 18,19இல் தமிழ் மாகாண அரசியல் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அம்மாநாட்டில் நானும் கலந்து கொண்டு துவக்கத்தில் பாடல்கள் பாடினேன். இரண்டாம் நாள் மேடையில் அன்றைய முதல் அமைச்சர் திரு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களும், அன்றையத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும், மாநாட்டின் தலைவருமாகிய திரு காமராஜ் அவர்களும், திரு ஜி. டி. நாயுடு போன்ற உள்ளுர்ப் பிரமுகர்களும், ஏனைய அமைச்சர்கள் சிலரும், திரு ம. பொ. சி. அவர்களும் வீற்றிருந்தார்கள். நானும் மேடையில் அமர்ந்திருந்தேன். மாநாட்டிலே அமைச்சர் பக்தவத்சலம் அவர்கள் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்கள். இந்தியாவில் மொழி வழிப்பட்ட மாகாணங்கள் அமையும் போது தமிழர் பெருவாரியாக வாழும் தொடர்ந்தாற்போலுள்ள பகுதிகளைக்கொண்ட தனி மாகாணம் அமைக்க வேண்டும் என்று அத்தீர்மானம் கூறியது. இது திரு ம. பொ. சி. அவர்களையும் அவரை ஆதரித்த காங்கிரஸ் காரர்களையும் திருப்திப் படுத்துவதற்காகவே கொண்டுவந்த தீர்மானம். ஆனால் தீர்மானம் மொழி வழி மாகாணங்கள் அமைக்க வேண்டுமென்று உறுதியாகச் சொல்லாமல் அமையும்போது என்று சொல்லப்பட்டது குறித்து திரு ம.பொ.சி. அதிருப்தியடைந்தார். அவர் எழுந்து தம்முடைய கருத்தை அறிவித்தார். அத்தோடு, *வடக்கே வேங்கடமலையும் தெற்கே குமரி முனையும் உள்ள தமிழ்நாடு வேண்டும்* என்ற திருத்தத்தைப் பிரேரபித்தார். *ஆம்; பின்னால் நடைபெற்ற வட எல்லைப் போராட்டத்திற்கு அன்றே ம. பொ. சி. வித்திட்டா ரென்றே நினைக்கிறேன்.* மாநாட்டுத் தலைவர் *திரு காமராஜ், திரு. ம. பொ. சி. அவர்களின் திருத்தத்தில் வேங்கடம், குமரிமுனை ஆகிய எல்லைகளைப்பற்றிய பகுதியை ஏற்றுக் கொண்டு தமிழ்நாடு கோரும் பகுதியை நிராகரித்தார். *
*கூச்சலும் குழப்பமும்* இந்தியாவிலிருந்து பிரிந்துபோகக்கூடிய ‘தனித் தமிழ்நாடு’ ம. பொ. சி. கேட்பதாக, அவர் பொருள் கொண்டு விட்டார். *காரணமின்றி இவ்வாறு மாதாட்டுத் தலைவர் தமிழ்நாடு கோரும் பகுதியை நிராகரித்தது எனக்கு மட்டுமல்ல, மாநாட்டில் கூடி யிருந்த பிரதிநிதிகள் யாவருக்கும் வருத்தமாக இருந்தது.* தலைவர் காமராஜ் அவர்களின் தவறான கருத்தைப் போக்குவதற்காக நிராகரிக்கப்பட்ட பகுதிக்கு விளக்கம் தர ம.பொ.சி முனைந்தார். ஆனால், தலைவர் காமராஜ் அவரைப் பேசவிடவில்லை. மேடையில் உட்கார்ந்திருந்த எனக்கு மிகவும் ஆத்திரமாக இருந்தது. என்னைப்போல் பிரதிநிதிகள் பலரும் ஆத்திரமடைந்தனார். ‘கிராமணியார் பேசட்டும், கிராமணியார் பேசட்டும்’ என்று சபையில் ‘பெருங்கூச்சல் எழுந்தது. ஆம், திரு ம. பொ. சி. அவர்களைக் கிராமணியார்’ என்றுதான் காங்கிரஸ்காரர்கள் அழைப்பது வழக்கம். அப்போதும் காமராஜர் அவரைப் பேச அனுமதிக்கவில்லை. ம. பொ. சி ஒலிபெருக்கியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இடத்தை விட்டு நகராமல் சிங்கம்போல் நின்றார். ஒன்றுபட்ட இந்தியாவைப் போற்றி வரும் ம. பொ. சி. தனி நாடு பிரித்துத் துண்டாட விரும்புகிறார் என்று காமராஜர் பொருள்கொண்டதை யாரால்தான் பொறுக்கமுடியும்? சபையில் கூச்சல் அடங்கவில்லை. பதினைந்து நிமிடங்கள் ஒரே குழப்பமாய் இருந்தது. மேடையில் இருந்தவர்கள் சிலரும், குறிப்பாகத் திரு. சி.சுப்பிரமணியம், திரு சி. பி. சுப்பையா, காலம் சென்ற ஜனாப் உபையத்துலலா முதலியோரும் கிராமணி யாரைப் பேச விடுங்கள் என்று தலைவர் காமராஜரைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். முடிவில் ம. பொ. சி. பேச அனுமதிக்கப் பட்டார்.
*கட்டுப்பாட்டைக் காத்த கண்ணியர்!* “நான் கேட்பது இந்தியாவிலிருந்து பிரிந்து போகும் தனி நாடல்ல” என்பதை விளக்கினார். அப்போதும் பிடிவாதமாகத் திருத்தத்தை ஏற்க மறுத்தார் காமராஜர். மீண்டும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதற்குள் விபரீதம் ஏற்படாமலிருக்கப் போலிஸ் லாரிகள் வந்து பந்தலைச் சுற்றி அணிவகுத்து விட்டன. ஆத்திரப்பட்ட பிரதிநிதிகள் கூட்டம் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்ளும் நிலையில் இருந்தது. பலாத்காரத்தில் இறங்கிவிடும் அறிகுறிகள் தென்பட்டன. இது கண்ட ம. பொ. சி. மீண்டும் ஒலிபெருக்கி அருகில் வந்து நின்று “தமிழ்ப் பெரு மக்களே! நான் காங்கிரஸ்காரன். அதன் கட்டுப்பாட்டை விரும்புகின்ற ஒரு படைவீரன். நான் தலைவரின் நிராகரிப்பை ஏற்கவில்லையென்றாலும், அதனைத் தொடர்ந்து எதிர்ப்பதன் மூலம் இந்தமாநாடு குழப்பத்தில் கலைவதை விரும்பவில்லை. என்ன ஆதரிக்கும் அன்பர்கள் இப்போது என் வேண்டுகோளை ஏற்று, அமைதி காக்குமாறு வேண்டுகிறேன். தலைவர் விருப்பம்போல் நடத்திக்கொள்ளலாம்” என்று கெம்பீரமாகக் கூறிவிட்டுத் தம் இடத்தில் வந்தமர்ந்தார். மேடையிலிருந்த பலரும் அவரைப் பாராட்டினார். தலைவர் காமராஜ் அவர்களும் கட்டுப்பாடு காத்த ம.பொ. சி அவர்களைப் பாராட்டினார். அந்த நிலையில் குழப்பத்திற்குக் காரணமாயிருந்த அந்த ஒரு தீர்மானத்திற்கு மட்டும் மறுநாள் காலை ஷண்முகா தியேட்டரில் மாநாட்டைக் கூட்டி அதன் மீது ஒட்டெடுத்து முடிவு கூறப் போவதாகக் காமராஜ் அறிவித்தார். ஆனால் அப்படி ஒரு மாநாடு நடைபெறவே இல்லை. அன்று ம. பொ.சி. அவர்கள்காட்டிய உறுதியும்,கொள்கைப் பற்றும், நாட்டுப் பற்றும் எனக்கு அவர்பால் இருந்த மதிப்பை மேலும் உயர்த்தின. மறுநாள் ஜி. டி. நாயுடு அவர்கள் இல்லத்திற்கு நாங்கள் சென்றிருந்தபோது, “நீங்கள் ஒலிபெருக்கியைப் பிடித்துக் கொண்டு அஞ்சா நெஞ்சுடன் சிங்கம்போல் நின்ற நிலையைக் கண்டு நான் உங்களைக் காதலித்து விட்டேன்” என்று கூறினார் நாயுடு. திரு ம.பொ.சி.க்கு நிதி திரட்ட வேண்டுமென்று 1948இல் திரு சின்ன அண்ணாமலை முயற்சி செய்தார். கோவை தேசபக்தர் திரு சுப்ரி மூலம் 500 ரூபாய்கள் நிதி திரட்டியதாக நினைவு.இதைக் குறித்து திரு ம. பொ. சி. எனக்குக் கடிதம் எழுதினார். “இது என் அனுமதியில்லாமல் நடைபெறுகின்றது. இந்த முயற்சியை நான் விரும்பவில்லை” என்று அறிவித்திருந்தார். இதன் பிறகு திதி திரட்டும் முயற்சி கைவிடப்பட்டது. அப்போது ம. பொ. சி. அவர்களின் ஐம்பதாண்டு நிறைவுநாளில் நானே வரவேற்புக் கழகத் தலைவராயிருந்து நிதி திரட்டிக் கொடுத்துக் கெளரவிக்க வாய்ப்பு ஏற்படுமென்று சிறிதும் எண்ணவே இல்லை. T. K. Shanmukam
ஆக, சென்னை ராஜ்ஜியம் போன்றவைகளுக்குப் பதிலாக, தமிழ்நாடு என்ற பெயரை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தலாம் என்று நிதியமைச்சர் சி. சுப்பிரமணியம் 24-2-1961-ம் தேதி தமிழ்நாட்டுச் சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அறிவித்தார். அது முதல், அரசு உருவாக்கும் தமிழ் ஆவணங்களில், கடிதங்களில் “தமிழ்நாடு” என்ற பெயர் பயன்படலாயிற்று. தமிழ்நாட்டு அரசாங்க மந்திரிகள் பங்கேற்கும் விழாக்களில் தமிழ்நாடு முதலமைச்சர் கே. காமராஜ், அமைச்சர் கக்கன், சபாநாயகர் செல்லப்பாண்டியன், ... என்று அறிவிக்கும் கல்வெட்டுகள் பதியப்பட்டன. 2300 ஆண்டுத் தமிழ்க் கல்வெட்டு வரலாற்றில் தமிழ்நாடு என்று பதிக்கப்பெறுவது முதன்முதலாக 1961-ல் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுகளில் நான்கினை அடுத்த பதிவில் தருகிறேன்.
8-8-1957-ல் காமராஜ் கலந்துகொண்ட வாஞ்சிநாதன் மணிமண்டபக் கல்வெட்டு, இதில் சென்னை அரசாங்கம் என்றுள்ளது.
ஆங்கிலக் கல்வெட்டுகளில், Madras State என்றே உள்ளது. அது Tamil Nadu என்று ஆங்கிலத்திலும் எழுதுமாறு 1967-ல் இருந்து திமுக அரசு முயற்சி எடுத்து வெற்றி கண்டது. டெல்லி பாராளுமன்றத்தில் ஒப்புதல் கிடைத்தது.
Posted by
நா. கணேசன்
at
0
comments
தமிழ்நாடு - ஓர் அரிய கல்வெட்டு (16-7-1962), தோட்டக்குறிச்சி (கரூர்)
தமிழ்நாடு - ஓர் அரிய கல்வெட்டு (16-7-1962)
-------------------------------------------------------------
பொதுவாக, தமிழ்நாடு என்றோ தமிழகம் என்றோ அழைப்பது வழக்கமாகிவிட்டது. Both are synonyms. ஆய்வேடுகளில், கேரளம், தமிழர் வாழும் இலங்கைத் தீவுப் பிரதேசம், தமிழ்நாடு மாநிலம் (இந்தியா) மூன்றையும் சேர்த்து தமிழகம் என அழைப்பதுண்டு. உ-ம்: பேரா. ஆ. வேலுப்பிள்ளை, பீற்றர் ஷல்க் (உப்சாலா பல்கலை, ஸ்வீடன்) ஆய்வு வெளியீடுகள் ...
தமிழகம் எனப் புறநானூற்றில் சொல்லப்பட்டுள்ளது: *வையக வரைப்பில் தமிழகம் கேட்ப* - புறம் 168. தமிழ்நாடு எனப் பரிபாடல் குறிக்கிறது: *தண்தமிழ் வேலி தமிழ்நாட்டு அகம் எல்லாம்* - பரிபாடல். “இமிழ்கடல் வரைப்பின் தமிழகம் அறியத், தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி” - சிலப்பதிகாரம்.
மூவேந்தர்களின் நாடுகளில் வாழ்ந்தாலும், நும் நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல் என உறுதிபட முதலில் சாற்றியவர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரைவரைந்த இளம்பூரண அடிகள் ஆவார். http://nganesan.blogspot.com/2009/11/ilampuranar.html
க. ப. அறவாணன், சைனரின் இலக்கணப் பணி. பக். 135:
“இளம்பூரணர் தொல்காப்பிய உரையாசிரியர்களுள் முதன்மையானவர், தலைமையானவர், சைனர், துறவி. கி.பி. 11-ம் நூற்றாண்டில் தொல்காப்பியத்தைத் தேடிக் கண்டறிந்து ஆராய்ந்து நூல் முழுமைக்கும் உரை இயற்றியவர் இவர் ஒருவரே. சைனராகிய இவர்
“செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்”
என்ற நூற்பாவிற்கு உரை எழுதி எடுத்துக் காட்டும் நல்குகிறார். அவ்வெடுத்துக் காட்டுப் பின்வருமாறு:
நும் நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்.
சைனராய்ப் பிறந்து தலைமை வாய்ந்த தமிழ் நூலிற்கு உரைவகுத்த இளம்பூரணர், அன்று பிரிந்து கிடந்த சேர சோழ பாண்டிய நாடு என்று முப்பிரிவுகளை விடுத்து “என் நாடு தமிழ்நாடு” என்று நெஞ்சுவக்க, உரிமை மணக்க, கை இனிக்க எழுதுகிறார். இவரைப் போலவே சைனராகிய நேமிநாத உரையாசிரியர் (கி.பி. 11-ம் நூற்றாண்டு) நேமிநாத ஆறாம் நூற்பாவுக்கு உரை எழுதும்போது பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
பாலே திணையே வினாவே பகர்மரபே
காலமே செப்பே கருதிடமே போலும்
பிறழ்வும் சினைமுதல் ஒவ்வாப் பிறசொல்
உறழ்வும் சிதைந்த உரை (நேமிநாதம், சொல். 6)
இவ்வெண்பாச் சூத்திரத்திற்கு உரை எழுதுமிடத்து, அதில் “நும் நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்” என்றது ”வினாவாலும் செப்பாலும் வழுவாமல் வந்தது” என்று குறிப்பிடுகிறார்.
சைனராகிய இவ்விருவரது குறிப்புகளும் மிகவும் முதன்மை வாய்ந்தவை.”
20-ம் நூற்றாண்டில், தமிழ்நாடு என அதிகாரப்பூர்வமான வரலாறு
-----------------------------------------------------------------------------------------------
https://www.newindianexpress.com/states/tamil-nadu/2018/jan/20/dravida-nadu-to-tamil-nadu-evolution-of-the-states-identity-1759188.html
https://www.kalaignarseithigal.com/opinion/2019/11/01/who-are-the-backbones-for-origin-of-tamilnadu-state
https://tamilthesiyan.wordpress.com/2018/07/18/தமிழ்நாடு-பெயர்-மாற்ற-தீ/
“29.11.1955இல் ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தின் செயற்குழுவில் “தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தை – மெட்ராஸ் ஸ்டேட்” என்றழைக்கப்படுவதை எதிர்க்கிறது. மத்திய மாநில அரசுகள் ராஜ்ஜியத்தின் பெயரைத் தமிழ்நாடு என்று பெயரிடப்பட வேண்டும் ” என்று அழுத்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு மொழிவழி மாநிலமாக 1956 நவம்பர் 1இல் அறிவிக்கப்பட்டாலும் அவ்வாண்டின் தொடக்கம் முதலே தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கானப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
[...]
முதுபெரும் விடுதலைப் போராட்ட வீரரும், காந்தியவாதி என்று அறியப்பட்ட க.பெ. சங்கரலிங்கனார் அவர்கள் 27.07.1956இல் விருதுநகரில் தமிழ்நாடு பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினார். காங்கிரசு கட்சி அவரின் போராட்டத்தை கண்டுகொள்ள மறுத்தது.
காங்கிரசின் இந்தப்போக்கு குறித்து வேதனைப்பட்ட சங்கரலிங்கனார் அவர்கள் சாகும் தருவாயில், ஜனசக்தி துணையாசிரியர் ஐ. மாயாண்டி பாரதிக்கு கடிதம் எழுதினார். அதில் “காங்கிரஸ் ஆட்சியின் கொடுமை கடுமையாகி விட்டது. காந்தியம் மடிந்து கொண்டு வருகிறது. துரோகிகள் ஆட்சியில் உயிரோடு வாழ மனமில்லை” என்று எழுதினார். அவரை அண்ணா, ஜீவானந்தம், ம.பொ.சி. ஆகியோர் சந்தித்து உண்ணாநிலையை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். அவரோ உண்ணாநிலையை கைவிட மறுத்து 79ஆவது நாளில் உயிர் நீத்தார்.” இன்றைய தமிழ்நாட்டின் எல்லை அமைந்த நாள் நவம்பர் 1, 1956. அதாவது, தமிழ்நாடு பிறந்த நாள் நவம்பர் 1 ஆகும். தமிழகம் தனியரசு ஆகும் நாள் எனக் கொண்டாடினார் சிலம்புச்செல்வர் மபொசி கட்சியினர்.
தமிழ்நாட்டின் அமைச்சர் சி. சுப்பிரமணியம் முதன்முதலாக, 24 பிப்ரவரி 1961 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என ஆங்கிலத்தில் உள்ள இடத்தில் எல்லாம் “தமிழ்நாடு” என எழுதலாம், பேசலாம் என்று அறிவித்தார். அதுவே பின்னர் இந்திய மாநிலப் பேராக நிலைகொண்டது. அறிஞர் அண்ணா தீர்மானம் நிறைவேற்றினார்.
பாரதரத்தினம் சிஎஸ் காமராஜ் கேபினெட் மந்திரி. இருப்பினும், முதலமைச்சர் காமராஜர் தமிழ்நாடு என்பது வெளிநாட்டாருக்குப் புரியுமா என்ற கேள்விகளை பொதுமக்கள் கூட்டங்களில் அவ்வப்போது எழுப்பிக் கோண்டிருந்தார்.
“தமிழ்நாடு என்ற பெயரின் பின்னணி குறித்துப் பேசிய அவர், ”தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை. காங்கிரஸ் கட்சியினர் மெட்ராஸ், மதராஸ், சென்னை என மூன்று பெயர்களைப் பயன்படுத்தி வந்தனர். இதை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னபோது, வேறு நாட்டினர் தவறாகப் புரிந்து கொள்வார்கள் என்று காமராஜர் சொன்னார்.
அந்தக் காலகட்டத்தில் ப்ளீடிங் மெட்ராஸ் என்று ஒரு துணி இங்கிருந்து ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தது. எனவே மெட்ராஸ் என்றால்தான் வெளிநாட்டினருக்குத் தெரியும், தமிழ்நாடு என்று வைத்தால் எப்படி அவர்களுக்கு புரியும், இந்தத் துணி விற்பனை ஆக வேண்டாமா, நமக்கு ஏற்றுமதி, இறக்குமதி நடக்க வேண்டுமென்றால் மெட்ராஸ் என்ற பெயர்தான் சரியாக இருக்கும், தமிழில் வேண்டுமானால் சென்னை என்று வைத்துக் கொள்வோம் என காமராஜர் சொன்னார். ” தோழர் தியாகு https://www.bbc.com/tamil/articles/cl48g45v1jgo
அண்ணாவின் விருப்பமாக, மதறாஸ் ஸ்டேட்/ராஜ்ஜியம் என்பதை மாற்றித் தமிழகம் என்று பெயர் சூட்ட விரும்பியுள்ளார். கலைஞர் மு. க. இதை ஆவணப்படுத்தியுள்ளார்:
“''அண்ணா அவர்கள் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற உடன் சென்னை ராஜ்ஜியம் என்கின்ற பெயரை மாற்றி ''தமிழ்நாடு'' என்கிற பெயரை உருவாக்கி - இருந்த பெயரை அறிமுகப்படுத்தி 'தமிழகம்' என்று பெயரிடலாமா? என்ற சர்ச்சை எழுந்த பொழுது டெல்லியிலே இருந்தவர்கள் 'தமிழகம்' என்று சொன்னால் எங்களால் சொல்ல அவ்வளவு சுலபமாக இருக்காது. எனவே தமிழ்நாடு என்றே இருக்கட்டும் என்று அவர்கள் கேட்டுக்கொள்ள, அதற்கேற்ப, பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்கின்ற பெயரை நம்முடைய மாநிலத்திற்கு சூட்டுகிற நிகழ்ச்சியை கோலாகலமாகக் கொண்டாடி சட்டமன்றத்தில் நிறைவேற்றினார்.'' (ஆதாரம்: கருணாநிதி அவர்கள் எழுதிய பாரதி பதிப்பகத்தின், ஒளி படைத்த கண்ணினாய் வா! வா! வா! புத்தகத்தில் பக்கம் எண்.100)”
https://www.hindutamil.in/news/tamilnadu/929834-karunanidhi-said-tamil-nadu-is-anna-s-wish-narayanan-tirupati-report.html
Note: In The Hindu tamil newspaper, C. Subramaniam's announcement to use Tamil Nadu in State Legislative Assembly is wrongly given as 24-12-1961. The correct date is 24-02-1961.
தமிழ்நாடு பற்றிய முதல் கல்வெட்டு: தோட்டக்குறிச்சி (கரூர்), 1962
-------------------------------------------------------------------------------------------------
இன்றைய தமிழ்நாட்டில் மூவேந்தர்களின் தலைநகரங்கள் அடங்கியுள்ளன. சங்க காலச் சேரர் தலைநகர் வஞ்சி என்னும் கரூர். சோழர் தலைநகர் உறையூர் என்னும் திருச்சி. பாண்டியர்களின் மதுரை. சேரர் தலைநகர் கரூர் அருகே உள்ள தோட்டக்குறிச்சியில் அதன் எம்.எல்.ஏ. ஆக இருந்த டி. எம். நல்லசாமி 1962-ல் தமிழ்நாடு என்று கல்வெட்டுப் பொறித்தார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக் கல்வெட்டு ட்விற்றர் பக்கங்களில் கிடைக்கிறது.
தமிழ்நாடு என்று வருகிற முதல் கல்வெட்டு இதுதான். சங்க காலச் சேரர் தலைநகர் ஆகிய வஞ்சி (கரூர்) அருகே உள்ள தோட்டக்குறிச்சிக் கல்வெட்டு 16-7-1962 தேதியிட்டது. அதன் பின்னர், 1966-ல் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் தமிழ்நாடு என்ற பெயர்காட்டும் கல்வெட்டு. இக் கல்வெட்டுகள் தமிழ்நாடு என்ற பெயர் தமிழகத்தில் நிலைகொண்ட வரலாற்று மைல்கல்களாக விளங்குபவை.
24 பிப்ரவரி 1961-ம் ஆண்டு, தமிழ்நாட்டின் நிதியமைச்சர் சிஎஸ் (பின்னாளில் பாரதரத்தினம்) தமிழ்நாடு என்ற பெயரை எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம் எனச் சட்டமன்றப் பேரவையில் அறிவித்தார். அவரது நண்பரும், சக எம்.எல்.ஏவும் ஆகிய தோட்டக்குறிச்சி மு. நல்லசாமி அவர்கள் தான் “தமிழ்நாடு” என்ற பெயரைக் கல்வெட்டில் பொறித்து, தமிழக முதல்வர் கு. காமராஜை அழைத்து அக் கல்வெட்டைத் தம் ஊரில் திறக்கச் செய்தார். அக் கல்வெட்டின் ஒளிப்படம் இங்கே காணலாகும்,
Posted by
நா. கணேசன்
at
0
comments
அருட்செல்வர் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாட்டு முதல்வர் உரை, 8 ஜனவரி 2023, சென்னை
அருட்செல்வர் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாட்டு முதல்வர் உரை, 8 ஜனவரி 2023, சென்னை
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த நிகழ்ச்சியில் முழுமையாக இருந்து உங்களோடு நான் பங்கேற்க வேண்டும் என்ற உணர்வோடுதான் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். அந்த உணர்வோடுதான் இந்த நிகழ்ச்சிக்கு ஒப்புதலும் தந்தேன். ஆனால் நாளைய தினம் சட்டமன்றம் கூடுகிறது.
கவர்னர் உரையோடு தொடங்குகிற சட்டமன்றம். எனவே, அதற்கான பணிகளில், நான் ஈடுபட வேண்டிய அவசியத்தின் காரணமாக, தொடர்ந்து முழுமையாக இருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத நிலைக்கு ஆளாகி முன்கூட்டியே பேசிவிட்டு, அதுவும் விரைவாக பேசிவிட்டு, விரைவாக செல்லவேண்டும் என்ற அந்த உணர்வோடு வந்திருக்கிறேன். அதற்கு நீங்கள் எல்லாம் அனுமதி தரவேண்டும் என்று உங்களை அன்போடு நான் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
எனக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் தரக்கூடிய நிகழ்ச்சி!
கொங்குநாடு அறக்கட்டளையின் சார்பில் அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதில் எனக்குப் பெருமையாக இருக்கிறது. எனக்குக் கிடைத்திருக்கிற இந்த வாய்ப்பை எண்ணி, எண்ணி நான் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன். பெரியார் என்றால் தந்தை பெரியாரையும், பேரறிஞர் என்றால் அண்ணாவையும், பெருந்தலைவர் என்றால் காமராசர் அவர்களையும், முத்தமிழறிஞர் என்றால் கருணாநிதியையும் குறிப்பதைப் போல அருட்செல்வர் என்றால், அது பொள்ளாச்சி மகாலிங்கத்தை தான் குறிக்கும் என்கிற அளவுக்கு, அவர் சிறப்புக்குரியவராக விளங்கிக் கொண்டிருக்கிறார்.
2014-ம் ஆண்டு மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளன்று நடந்த வள்ளலார் விழாவில் பேசிக்கொண்டு இருந்தபோது, திடீரென்று உடல் நலிவுற்று, மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லக்கூடிய வழியில் அவர் மரணம் அடைந்தார். இதனைக் கேள்விப்பட்ட கருணாநிதி மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளானார். அப்போது தலைவருக்கு உடல்நலமில்லாமல் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். உடனடியாக என்னை அழைத்து, காவேரி மருத்துவமனைக்குச் சென்று அஞ்சலி செலுத்த வேண்டுமென்று எனக்கு கட்டளையிட்டார். நானும் உடனடியாக சென்று அஞ்சலி செலுத்தினேன். பின்னர் கருணாநிதியை சந்தித்து, இந்த தகவலை விளக்கமாக நான் சொன்னேன். அப்போது கலைஞர் கருணாநிதி தனக்கும், அருட்செல்வருக்கும் இருந்த நட்பைப் பற்றி மிக விளக்கமாக பெருமையோடு எடுத்துச் சொன்னார்கள்.
முத்தமிழறிஞர் கலைஞருடனான அருட்செல்வரின் நட்பு!
கருணாநிதி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோதுதான் கிண்டியில் உள்ள ஏ.ஆர்.சி.கட்டடத்தைத் திறந்து வைத்தார்கள். அதுதான் சக்தி சுகர்ஸ், ஏ.பி.டி. அலுவலகமாக இருக்கிறது. 1969-ஆம் ஆண்டு கோவை மாவட்டம் ஆப்பக்கூடலில் சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட சாலை ஒன்றைத் திறப்பதற்காக முதலமைச்சராக இருந்த கருணாநிதியிடம் தேதி வாங்கி இருக்கிறார்கள். அதை பொள்ளாச்சி மகாலிங்கம் தான் அந்தத் தேதியை பெற்றிருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர், கருணாநிதியை அழைக்கலாமா? என்று அந்தக் காலத்தில் விவாதமே நடந்திருக்கிறது. ஏனென்றால் காங்கிரசை வீழ்த்திவிட்டுத்தான் அப்போது திமுக 1967-இல் ஆட்சிக்கு வந்தது. இப்படி அவதூறு கிளப்பியவர்கள் மீது அருட்செல்வர் வழக்கும் போட்டிருக்கிறார். எப்படி கருணாநிதியை அழைக்கலாம்? என்று அந்தக் காலத்தில் விசாரணையே நடந்திருக்கிறது. அதில் தன்னுடைய தரப்பு வாதங்களை எல்லாம் முறையாகக் கேட்கவில்லை என்கிற வருத்தத்தோடு அரசியலை விட்டே அருட்செல்வர் விலகி இருக்கிறார்கள்.
இவை அனைத்தும் தெரிந்துதான், விழா அமைப்பினர் இந்த நூற்றாண்டுக்கு என்னை இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அழைத்தார்களா? என்று எனக்குத் தெரியவில்லை. அந்த ஆப்பக்கூடல் விழாவில் ஒரு பெரிய விபத்து ஒன்றும் ஏற்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து அரசாணை!
பிரமாண்டமான விழா நடந்து கொண்டிருந்தபோது, புயல் அடித்திருக்கிறது. மழை கொட்டியிருக்கிறது. அதன் காரணமாக, பந்தலே சரிந்துவிட்டது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டு விட்டது. மேடையில் முதல்வர் கருணாநிதி மற்றும் சில அமைச்சர்கள், இன்னும் சில நான்கைந்து பேர்கள் இருக்கிறார்கள். கருணாநிதி, அன்றைக்கு ஈரோடு சின்னச்சாமி அப்படியே தூக்கிக் கொண்டு மேடையை விட்டு இறக்க முயற்சிக்கிறார்.
ஒரே இருட்டாக இருந்த காரணத்தால் அங்கிருந்து ஒரு காரை கொண்டு வரச்சொல்லி, அந்த காரை ஸ்டார்ட் செய்து, அதிலிருந்த லைட் அடிக்க சொல்லி, அந்த வெளிச்சத்தில்தான் அனைவரும் மேடையிலிருந்து கீழே இறங்கியிருக்கிறார்கள். எல்லோரும் கீழே வந்தபிறகு அருட்செல்வரை மட்டும் காணவில்லையாம். மேடையில் இருந்த மேசைக்கடியில் அவர் மாட்டிக் கொண்டாராம். பின்னர் தலைவரிடம் வந்து, 'இப்படி ஆகிவிட்டதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று சொன்னாராம். அந்தளவுக்கு மனிதப்பண்பில் சிறந்தவர் என்று கருணாநிதி பெருமையோடு குறிப்பிட்டுச் சொன்னார்.
கொங்கு வேளாளர் மக்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டபோது, அதனை ஏற்றுக்கொண்டு கருணாநிதி தான் அதற்கான அரசாணையை வெளியிட்டார்கள். அப்போது கருணாநிதிக்கு ஒரு மாபெரும் பாராட்டு விழாவை நடத்துவதில் முன்னின்றவர் அருட்செல்வர். அதனால்தான் 'எல்லாக் காலங்களிலும் என் மீது மாறாத அன்பைப் பொழிந்தவர்' என்று கருணாநி தன்னுடைய இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டார்கள்.
அருட்செல்வர் ஆற்றிய பணிக்கு நன்றி செலுத்தும் விழா இது!
அவரிடம் ஆன்மீக அருள் மட்டுமல்ல, செல்வமும் இருந்தது. அத்தகைய செல்வத்தை, அறநெறிக்கும், அறத் தொண்டுக்கும், தமிழ்த் தொண்டுக்கும் பயன்படுத்தினார் நம்முடைய பொள்ளாச்சி மகாலிங்கம் . அதனால்தான் அருட்செல்வர் என்பது அவரது பட்டப் பெயராக மட்டும் இல்லாமல், பண்புப் பெயராக அமைந்திருந்தது. 100 ஆண்டுகள் கழித்தும் அவரை நினைக்கிறோம், வாழ்த்துகிறோம், போற்றுகிறோம் என்றால், அவர் வாழ்ந்த காலத்தில் ஆற்றிய பணிகளுக்காக நமது நன்றியின் அடையாளமாகவே இதனை நாம் செய்து கொண்டிருக்கிறோம்.
நமக்கு நூற்றாண்டு விழாவை இவ்வளவு பிரமாண்டமாக நடத்துவார்கள், எல்லோரும் பாராட்டிப் போற்றுவார்கள் என்பதற்காக அருட்செல்வர் அவர்கள் அப்படிச் செயல்பட்டவர் அல்ல. அவரது இயல்பே அப்படித்தான் அமைந்துள்ளது.
திருக்குறளை ஆங்கிலத்திலும், இந்தியிலும் மொழிபெயர்த்து வெளியிட்டவர் !
திருக்குறளை ஆங்கிலத்திலும், இந்தியிலும் மொழிபெயர்த்து வெளியிட்டவர் மட்டுமல்ல - வடமாநிலங்களுக்குக் கொண்டு சென்று இலவசமாக பள்ளி, கல்வி நிலையங்களில் வழங்கியவர் அருட்செல்வர். திருமந்திரம், பெரியபுராணம், திருவருட்பா ஆகிய நூல்களை அச்சிட்டு வெளியிடுவதற்கு லட்சக்கணக்கான பணத்தை வழங்கியவர் அருட்செல்வர்.
உரைவேந்தர் என்று போற்றப்பட்ட ஒளவை துரைசாமி போன்ற பெரும் தமிழறிஞர்களைத் தனது சொந்த செலவில் தங்க வைத்து, இலக்கியங்களுக்கான உரைகளை எழுதி, அதனை அச்சிடுவதற்கு பணமும் கொடுத்து, அப்படி அச்சிட்ட புத்தகங்களை, மொத்தமாக தானே வாங்கி, இலவசமாகக் கொடுத்தவர் நம்முடைய அருட்செல்வர். எனவே அவரை அருட்செல்வர் - என்பதோடு சேர்த்து தமிழ்ச்செல்வர் என்றுகூட அழைக்கலாம்.
அருட்செல்வர் - என்பதோடு சேர்த்து தமிழ்ச்செல்வர் என்றுகூட அழைக்கலாம்.!
இப்படி எத்தனை பேர் தமிழகத்தில் இருந்திருக்க முடியும்? விரல் விட்டு எண்ணக் கூடிய செல்வந்தர்கள்தான் இத்தகைய தமிழ்த் தொண்டை ஆற்றி இருக்கிறார்கள். அருட்செல்வரைப் போல பலரும் தமிழ்நாட்டில் உருவாக வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அவரது தந்தை நாச்சிமுத்து மாட்டு வண்டிகளில் தொழில் தொடங்கினார். இவர் கார்கள், லாரிகள், பேருந்துகள் என தொழிலை வளர்த்தார். ஒரு தொழில் அல்ல, பல்வேறு தொழில்களை ஒரே நேரத்தில் செய்தார்.
46க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டு இருக்கிறார். வேளாண்மை மாத இதழை தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி இருக்கிறார். ஓம் சக்தி இதழை நடத்தினார். தமிழ் எழுத்துகளை ஒலிவடிவில் உச்சரிப்பதற்கான தொழில்நுட்பம் உருவாக்குவதில் கவனம் செலுத்தி இருக்கிறார்.
பன்முக ஆற்றலைக் கொண்டவர் அருட்செல்வர்!
இந்திய நதிகளை ஒருங்கிணைக்கும் ஒரு திட்டம் வரைந்து அதை வேளாண் பல்கலைக் கழகத்திற்குக் கொண்டு போய்க்காட்டி "இந்த ஆராய்ச்சியை ஏற்றுக் கொண்டு Ph.D பட்டம் தருவீர்களா?" என்று கேட்டவர் அவர். அந்தளவுக்கு அறிவாற்றல் கொண்டவர். இத்தகைய பன்முக ஆற்றலைக் கொண்டவர் அருட்செல்வர் அவர்கள்.
தமிழ்நாட்டின் தொழில் துறையாக இருந்தாலும், ஆன்மீகத் துறையாக இருந்தாலும், அரசியல் துறையாக இருந்தாலும், இலக்கியத் துறையாக இருந்தாலும், கல்வித் துறையாக இருந்தாலும், சமூக சேவையாக இருந்தாலும், பதிப்புத் துறையாக இருந்தாலும், அனைத்திலும் முத்திரை பதித்த பல்துறை ஆற்றலாளர்தான் நம்முடைய அருட்செல்வர். 1952 முதல் 1967 வரை மிகத் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார். தொடர்ந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு வகித்தார்.
காந்தியடிகளையும் வள்ளலாரையும் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டார்!
அப்படியே அரசியல் பணிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, தொழில், ஆன்மீகம், இலக்கியம் என்று தனது பாதையை அவர் மாற்றிக் கொண்டார். தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கினாலும் மக்களுக்கு நன்மை பயக்கும் அரசியல் தொண்டை, தேர்தலில் பங்கெடுக்காமலேயே அருட்செல்வர் செய்து வந்திருக்கிறார்கள். அத்தகைய பணிக்கு மகாத்மா காந்தியடிகள் - அருட்பிரகாச வள்ளலார் ஆகிய இருவரையும் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு, அவர் கடமையை நிறைவேற்றி இருக்கிறார்.
காந்தியடிகளும், அருட்பிரகாச வள்ளலாரும் அவரது இரண்டு கண்களாக இருந்திருக்கிறார்கள். காந்தியடிகள், வள்ளலார் விழாக்களை ஆண்டுதோறும் சென்னையில் தவறாமல் நடத்தி வந்தார். "நான் காந்தியினுடைய சீடன்" என்று சொல்லிக் கொள்வதில் அவர் பெருமை அடைந்தார். காந்தியாரின் பிறந்தநாளில் அவரது சீடரான மகாலிங்கம் அவர்களும் மறைந்தார்.
எளிமையை விரும்பியவர் - மனிதத் தன்மையைப் போற்றியவர்!
காந்தியத்தின் எளிமையை அதிகம் வலியுறுத்தி வந்தார். மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து சொல்லி வந்தார். ''இராமலிங்க வள்ளலாரைப் போன்ற மனிதத் தன்மையுடனும், காந்தியைப் போலக் கொள்கைப் பிடிப்புடனும் வாழ வேண்டும்" என்பதை இன்றைய தலைமுறைக்குத் தொடர்ந்து அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
வள்ளலார் போற்றிய மனிதத் தன்மையும், காந்தியின் மதநல்லிணக்கமும்தான் இன்றைய காலக்கட்டத்திற்கு மிக மிகத் தேவைப்படுகிறது. அவரது ஆன்மீகம் என்பது மதநல்லிணக்க ஆன்மீகமாக - அவரது சமய நெறி என்பது சமரச சுத்த சன்மார்க்க நெறியாக எப்போதும் இருந்தது. இத்தகைய நெறிகளே இன்று தேவையாக இருக்கின்றன.
இங்கு ஒரு கோரிக்கையை என்னிடத்தில் எடுத்து வைத்திருக்கிறார்கள். அதை நான் படித்துப் பார்த்தேன். எனவே அதை மகிழ்ச்சியோடு உங்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன். நம்முடைய பொள்ளாச்சி மண் தந்த மாமனிதராக, அருட்செல்வர் நா.மகாலிங்கம் நூற்றாண்டு விழாவுக்கு சிறப்பு சேர்க்கக்கூடிய வகையில் பொள்ளாச்சி உள்ள கோவை சாலை மற்றும் பல்லடம் சாலையை இணைக்கும் புதிய திட்ட சாலைக்கு “அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம்” பெயர் சூட்டப்படும் என்பதைப் பெருமகிழ்ச்சியோடு இந்த விழாவில், இந்த மேடையில் நான் அறிவிக்கிறேன்.
சமத்துவம், சகோதரத்துவம், மதநல்லிணக்கம் - ஆகியவற்றை உள்ளடக்கிய சமூகநீதிச் சமுதாயத்தை உருவாக்குவதே அருட்செல்வருக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும் என்பதைச் சொல்லி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என்னுடைய இதயபூர்வமான நன்றியை தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்." இவ்வாறு முதல்வர் பேசினார்.
Posted by
நா. கணேசன்
at
0
comments


.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)



















