வதரியாற்றுப்படை, ஆசிரியர்: மகாவித்துவான் வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர், 30 ஜூலை 1967

 வதரியாற்றுப்படை

ஆசிரியர்: பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர்

தற்சிறப்புப் பாயிரம்



முன்னுரை
-------------------


கொங்குநாட்டிலே ஏடுகள் தேடி மிக உழைத்தோர் திருச்செங்கோடு அ. முத்துசாமிக் கோனாரவர்களும், மகாவித்துவான் வேலம்பாளையம் ரா. தெய்வசிகாமணிக் கவுண்டரும் ஆவர். தமிழ்நாட்டில் பல இடங்களில் பானை ஓடுகளில் கிடைக்கும் தமிழி அல்லது தமிழ்பிராமி எழுத்துகள் அசோகருக்கு முந்தியே தமிழ் எழுதப்பெற்றிருத்தலைச் சின்னஞ்சிறு பெயர்களால் காட்டுகின்றன. இந்தியாவில் எழுத்து தோன்றிய காலத்தைக் கணிப்பதில் கொங்குநாடு தந்துள்ள வெளிச்சம் பெரிது. தமிழ்நாட்டுப் பானை எழுத்துகளில் மிகப் பெரும்பான்மை கொங்குநாட்டிலே தான் அகப்படுகின்றன. பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணியார் மாணவர் புலவர் செ. ராசு. அவர்தான் கொடுமணல் அகழாய்வு இடத்தைக் காட்டியவர். அங்கே தொல்லியல் ஆய்வுகளைப் பல்லாண்டு நடாத்தியவர் பேரா. கா. ராஜனும், மாணவர்களும் ஆவர்.

கொங்கு நாட்டில் பாடல் பெற்ற சிவ தலங்கள் ஏழு. கொங்கேழு தலங்களில் பவானிகூடல் சங்கமம் வேதநாயகி உடனாய சங்கமேசுவரர் திருக்கோயில். பவானி யாறும், காவேரி யாறும் கூடுதுறை ஆனதால், நீத்தார் வழிபாட்டில் காசிக்கு நிகரானது என்பது கொங்குநாட்டுப் பழைய மரபு. இதனால் தெட்சிணகாசி என்றும் பெயருண்டு. வானியாறு வானில் இருந்து மழைவரும் காலங்களில் நீர் மிக்கு இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த 800 ஆண்டு முன்னர் காலிங்கராயன் மிக நீண்ட கால்வாய் வெட்டினார். வானி காவிரியை வவ்வுமிடம் வவ்வானி. பின்னாளில் பவானி எனப் பேராயிற்று. சிந்துவெளி நாகரீகத்தின் நூற்றுக்கணக்கான கிராமங்கள் சரசுவதி நதிக்கரையிலே உள்ளன. மகாபாரதத்தில் மணலில் புதைந்துள்ள இவ்வாற்றின் கூடுதுறை பவானியில் பாண்டவர்கள் தர்ப்பணம் செய்வதாக இருக்கிறது. ‘வைசம்பால்ய’ என ரிக்வேதம் குறிப்பிடும் நதி விசும்பாள்/வானி என்ற பெயர் கொண்டதாக இருந்திருக்கும் எனத் தோற்றுகிறது. வானத்துக்கு விசும்பு எனப் பெயர்.  கிரகண காலங்களில் இக் கூடுதுறையில் நீராடுதல் புண்ணியம் என்பது கொங்குமண்டல சதகம். குமரகுருபரர் 17-ம் நூற்றாண்டில் திருமடம் நிறுவியதும், நாட்டுக்கோட்டை நகரத்தார் 200 ஆண்டுகளாய் காசி விசுவநாதருக்கு ’சம்போ’ என்ற அர்த்தஜாம பூஜையை நடத்துவதும் நிகழ்கிறது. வாரணாசியை ஒத்த தலமாக, பவானிகூடல் ஈசன் தமிழ்நாட்டிலே விளங்குகிறார்.

பவாநித் தலபுராணம் காவிரி, வானி, அமுத நதி என மூன்றும் கலக்கும் திரிவேணி சங்கமம் எனப் புகழ்கிறது. காசியிலும் அமுதநதி கலப்பதாக ஐதீகம் உண்டு. வாரணாசி விசுவநாதர் கோவிலில் அம்பிகை பவானி, அன்னபூர்ணியைப் பவானி என்று அழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

   பொன்னியே கங்கை யமுனையே பவானி பொருவரும் பராசரன் வகுத்த
   மின்னவிர் அமுத நதியதே வானி யல்லது வேறல விந்தத்
   தன்னிகர் பிறிதில் தலந்திரி வேணி சங்கமம் ஆதலாற் தென்பாற்
   கன்னிமா மதில்சூழ் காசியின்  மேலாய்க் கவினுமிக் கடிநக ரன்றே.

கூகலூர் கே. சுப்பண கவுண்டர் அனைத்து சமூகங்களின் மேம்பாட்டிற்குப் பல புரட்சிகளை மேற்கொண்டவர். பவானி முக்கூடல் குடமுழுக்கு நடத்த ஏற்பாடுகள் நடந்துபோது வித்துவான் வே.ரா.தெ. அவர்களைப் பிரபந்தம் பாடித் தர வேண்டும் என வேண்டியிருக்கிறார். தற்சிறப்புப் பாயிரத்தால் 30 ஜூலை 1967 தேதி அன்று வதரியாற்றுப்படை பாடப்பட்டது எனத் தெரிகிறது. சங்க இலக்கியம் கூறும் சேரர் காலத் தலைநகர் கடற்கரையில் இல்லை. இன்றைய கரூரே சங்கச் சேரர் தலைகர் வஞ்சி மாநகர் ஆகும் என மதுரைத் தமிழ்ச் சங்கம் இரு அரிய ஆராய்ச்சி நூல்களை ஒரு நூற்றாண்டு முன்னர் வெளியிட்டது. பின்னர், வாதப் பிரதிவாதங்கள் சில ஆண்டுகள் நிகழ்ந்தன. தொல்லியல் ஆய்வுகள், நாணயவியல் போன்றவற்றால் அறிஞர்கள் மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர்கள் கூறிய முடிபுகள் சரி தாம், சங்க காலத்தில் சேரர் தலைநகர் வஞ்சி என்பது இன்றைய கரூர் என விளக்கினர். அதற்கான கட்டுரைகளைப் பவானிகூடல் கும்பாபிடேக மலரில் காணலாம். ஆக, பாண்டியர்க்கு மதுரை, சோழர்க்கு உறந்தை என்பது போல, சேரர்க்குத் தலைநகர் வஞ்சி (கரூர்) என ஒரு நூற்றாண்டு ஆராய்ச்சி நிரூபணம் தொல்லியல் வாயிலாக 1960-களில் நிறுவப்பட்டது. கடற்கரையில் உள்ள முசிறிப்பட்டினமும் தொல்லியல் கண்டுபிடித்துவிட்டது. பாலைக்காட்டுக் கணவாய் வழியாக, கரூருக்கும், முசிறிப் பட்டினத்திற்கும் வணிகம் சிறப்பாக நடந்துள்ளது. வேளிர்கள் சேர மன்னர் ஆதற்குச் சான்றாக, சங்கச் சேரர்கள் வெளியிட்ட காசுகளில் ஏர்க் கலப்பை உள்ளது. ‘ஆ கெழு கொங்கர்’ என்று சங்கச் சான்றோரும், இளம்பூரணரால் ‘கொங்கத்து உழவு’ என்றும், பேரூரில் பட்டீசுவரர், பட்டியாவுடைத் தாய் என்றும், வஞ்சி மாநகர் கரூரில் ஆநிலையப்பர் பசுபதீசுவரர் என்னும் வழக்கங்கள் கொங்குநாட்டு முல்லைத் திணை வளத்தை விளக்குகின்றன. சிந்துவெளியின் கம்பீரமான காளையை, காங்கேயம் காளை இனத்தில் காண்கிறோம். தக்கை என்னும் தாளக்கருவிக்கு ஏற்ப இசைக்கும் ‘கபிலை கதை’ என்னும் இசைநூல் 100 பாடல்களுடன் பரவலாகக் கொங்குநாட்டிலே உள்ளது. தக்கை ராமாயணம் கம்பனை வரிக்கு வரி சுருக்கிப் பாடிய இசைராமாயணம் இருக்கிறது.

வதரி என்றால் இலந்தை மரம். வதரி மரம் தான் சங்கமேசுரர் கோயிலில் தல விருட்சம்.  பவானியைத் திருநணா, நண்ணாவூர் என்ற பெயரில் ஞானசம்பந்தர் தேவாரத்தில் பாடியுள்ளார். இப்பெயர் சங்க காலச் சேரர் வரலாற்றில் தொடர்புடையது. நன்றா என்பது நண்ணா/நணா என மாறும் மாற்றம் மொழியியலில் நிகழ்வதாகும். சம்பந்தர் காலத்திலேயே, சங்க கால ‘நன்றா’  நண்ணா என மாறிவிட்டது. பிள்ளைப்பெருமாள் சிறைமீட்டான் கவிராயர் என்னும் பழம்புலவர் பாடிய கபிலமலைக் குழந்தைக் குமாரர் வருக்கக்கோவையை வித்துவான் வே. ரா. தெய்வசிகாமணிக்கவுண்டர் 1973-ல் ஓலைச்சுவடியில் இருந்து பதிப்பித்தார்கள். அதில் நணா என்னும் பெயர் வானிகூடலுக்கு வருவதை விளக்கியுள்ளார்.  “நன்றா என்னும் பெயர்: கபிலரென்னும் கடைச்சங்கப் புலவர் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்னும் சேர மன்னனிடம் நூறாயிரங் காணம் பொன்னும் நாடும் பெற்றபின், அந்தணர் ஆகலின் அம்மலையில் தங்கிப் பெருவேள்வி செய்து வாழ்ந்திருக்கலாம் என்றும், அச்சேரமன்னன் கபிலருக்குக் கொடுத்த நாட்டைக் காட்ட ஏறிநின்ற நன்றாவென்னும் குன்றம் நல்ல ஆவாகிற கபிலைப் பசுவாற் பெயர் பெற்ற இக் கபிலைக் குன்றமே ஆகலாம் என்றும் தோன்றுகிறது.  இவ்வாறு தோன்றுவதற்கு இடமாயிருப்பது கபிலைமலையை அடுத்து விளங்கும் ஆறுநாட்டான் மலையில் கடுங்கோ வாழியாதன் என்னும் சேரலாதன் கல்வெட்டமைந்திருப்பதும், பதிற்றுப்பத்து என்னும் சங்க நூலின் கபிலர் பாடிய பத்துப் பாடல்களையும் கேட்டு மகிழ்ந்து  “சிறுபுறமென நூறாயிரங் காணங் கொடுத்து, நன்றாவென்னுங் குன்றேறி நின்று தன் கண்ணிற்கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ” எனக் கூறப்பட்டிருப்பதுமாம்.”

பவானிகூடல் மறைக்கொடி (வேதாம்பிகை) சமேத வதரிமூலலிங்கர் (திருநணா உடையார்) மீதான ஆற்றுப்படை இலக்கியம் இயற்றி 55 ஆண்டு சென்றபின் அச்சாகின்றது. அச்சிட இதன் கையெழுத்துப் படியை எனக்களித்த நீதிபதி ஆர். செங்கோட்டுவேலன் அவர்கள் நினைவு மேலிடுகிறது. திருப்பையூர் (திருப்பூர்) புலவர் சுந்தர கணேசன் அவர்களுக்கு என் நன்றி. சைவ உலகம் இந்நூலை வாசித்துப் பயன்கொள்ளுமாக.

முனைவர் நா. கணேசன்
ஹூஸ்டன்/பொள்ளாச்சி  
1 - 12 -2022

பஞ்சமரபு நூல் சிறப்பு

2 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தொடர்ந்து உங்கள் பதிவுகளை வாசித்துவருகிறேன். அரிய தகவல்களைத் தருகின்ற உங்களின் பணி போற்றத்தக்கது. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

சோழ நாட்டில் பௌத்தம் என்ற என்னுடைய நூல் அச்சேற்றப்பணி காரணமாக சில மாதங்களாக வலைப்பூக்களின் பக்கங்கள் வர இயலா நிலை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். அண்மையில் இந்நூல் வெளியாகியுள்ளது. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம்.

Anonymous said...

பவானி, வதரி, நன்றா போன்ற பல செய்திகளை, பல கருத்துகளை உஙகள் பதிவின் மூலம் அறிய முடிகின்றது. நன்றி.
பணி மேன்மேலும் சிறக்கட்டும்.
பொற்செல்வி ஜெயப்பிரகாஷ்.