காசியும், ஶ்ரீ குமரகுருபர முனிவரும்

 காசியும் குமரகுருபரரும் 

டாக்டர் நா. கணேசன், ஸ்பேஸ் விஞ்ஞானி, ஹூஸ்டன், அமெரிக்கா


Summary: In this brief note, Dravida Vidyabhushanam UVS statement about Tulasidasar listening to Kamba Ramayanam from Kumaragurparar's lecture in Hindusthani is recorded. Tulasidasar (1543? - 1623) predates Kumaraguruparar. So, this traditional account can be about a Tambiran before Kumaraguruparar from Saiva Mutts of Tanjore  district doing pravacanam at Kaashi on Kamban. Paintings from the rare TiruppananthaaL Adheenam's booklet on the life history of Sri Kumaragurupara Swamikal are included. My note as published in Dinamani, 27-11-2022 is given.

 காசி எனப்படும் ஒளிநகரம் வருணா, அசி என்ற நதிகளை எல்லைகளாய் உடையது. எனவே, வாரணாசி என்றும் பெயர் உண்டு. ஹிந்து, சமணம், பௌத்தம் ஆகிய எல்லா இந்திய சமயங்களுக்கும் புனிதமானது. வரலாற்று அறிஞர்கள் காசியை உலகின் மிகப் பழைய நகரங்களில் ஒன்று என்கின்றனர். தமிழகத்திற்கும் காசிக்கும் சங்க கால இலக்கியங்களிலே தொடர்பு பேசப்படுகிறது. வேளாளர்களைக் கங்காபுத்திரர் என்பதும், அவர்களுக்குக் குவளை மாலை என்றும் இலக்கியங்கள் புகழ்கின்றன. சங்கரர், ராமாநுஜர், பாரதியார் எனப் பலர் காசி நகரத்திலே பாரம்பரியக் கல்வி கற்றும், போதித்தும் சில காலம்  இருந்தனர். பின்னர் தமிழ்நாட்டுக்குத் திரும்பிவிட்டனர்.

   பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபர சுவாமிகள் (1615 – 1688) தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இருந்த தொடர்புகளின் உன்னத சிகரம். சைவ சித்தாந்த மடத்தைக் காசியில் நிறுவி, கங்கைக் கரையிலேயே மறைந்தார். அக் காசி மடத்தின் கிளை தான் திருப்பனந்தாள் காசி மடம் ஆகும்.  1888-ம் ஆண்டில் சுவாமி விவேகானந்தர் சிகாகோ சென்று ஹிந்து மதம் பற்றிப் பேருரை ஆற்றினார். அதற்கும் முன்னோடியாக குமரகுருபரர் செயல் அமைந்தது,

   முகலாயப் பேரரசர் ஷாஜகானின் மகன் தாராஷுகோ இந்து சமயத்தை ஆராயக் காசியில் ஒரு மாநாட்டைக் கூட்டினார். அம் மாநாட்டில் கலந்துகொண்டு குமரகுருபரர் சைவ சித்தாந்தம் பற்றி உரையாற்றினார். சிங்க கர்ஜனை போல் இவர் உரை அமைந்ததால், சிங்கத்தின் மீது ஆரோகணித்து வந்தார் எனக் கூறுவது வழக்கம். இளவரசர் தாராஷுகோ வடமொழியின் பால் பற்று மிகுந்தவர். சமய நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்டவர். எனவே, காசி கேதார கட்டத்தில் குமாரசாமி மடம் எனக் குமரகுருபரருக்கு மடம் அமைக்க நிலக்கொடை அளித்தார், சிவபெருமான் அருளால் காசி விசுவநாதர், கேதாரநாதர், பாண்டுரங்கர் கோவில்களில் மீண்டும் பூஜைக்குக் குமரகுருபரர் ஏற்பாடு செய்தார். முகலாயப் பேரரசரின் மகன் ஏராளமான நிலங்களைக் காசியில் நன்கொடையாக ஸ்ரீ குமரகுருபர சுவாமிகளுக்கு வழங்கினார். ‘காசி மகாராஜா பாதி, குமாரசாமி மடம் பாதி’ என்பது அங்கே உள்ள பழமொழி.

துளசி ராமாயணத்தில் கம்பர்:

   ஹிந்துஸ்தானி மொழியைச் சரசுவதியின் மீது சகலகலாவல்லி மாலை பாடிப் புலமை பெற்ற குமரகுருபரர், கம்ப ராமாயணத்தைப் பற்றி தொடர் சொற்பொழிவுகள் செய்துவந்தார். அதில் பலன் பெற்றுத் துளசிதாசர் வட இந்தியாவில் புகழ்பெற்ற பக்திக் காப்பியமாகிய துளசி ராமாயணம் இயற்றினார். குமரகுருபரரின் சொற்பொழிவுகளால், வால்மீகியில் இல்லாத, கவிச்சக்கிரவர்த்தி கம்பர் பாடிய நுட்பமான செய்திகளைத்  துளசிதாசர் பயன்படுத்தி உள்ளார். இது பற்றித் தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதையர் தாம் அச்சிட்ட ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு (1939) நூலில் எழுதியுள்ளார்.

“ஞான தேசிகரிடம் விடைபெற்றுக் காசிக்குச் சென்று தம்முடைய கல்வியறிவினாலும் தவப்பண்பினாலும் டில்லி பாதுஷாவின் உள்ளத்தைக் கவர்ந்தார். அப் பாதுஷாவின் தாய்மொழி ஆகிய ஹிந்துஸ்தானியை விரைவில் அறிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணிச் சகலகலா மாலையென்னும் பிரபந்தத்தை இயற்றிக் கலைமகளை வேண்டினார். கலைமகள் திருவருளால் அம்மொழியிலே சிறந்த அறிவு பெற்றுப் பாதுஷாவிடம் பேசிப் பழகினார். அவர் இவர்பால் ஈடுபட்டு இவருடைய விருப்பத்தின் படியே இவர் காசியில் இருத்தற்குரிய மடம் அமைப்பதற்குக் கேதார கட்டத்தில் இடம் உதவினார். குமரகுருபரர் அதுகாறும் மறைபட்டிருந்த ஸ்ரீ விசுவலிங்கப் பெருமானை வெளிப்படுத்தி அங்கே கோயில் முதலியன நிருமிக்கச் செய்து நித்திய நைமித்திகங்களும் குறைவற நடக்கும்படி செய்தார்.

        குமரகுருபர முனிவர் காசியில் தங்கியிருந்த மடத்திற்குக் குமாரசாமி மடம் என்று பெயர்.  அங்கே இவர் சிவயோகம் செய்துகொண்டு வாழ்ந்துவந்தார். அக்காலத்தில் காசித்துண்டி விநாயகர் பதிகமும், காசிக் கலம்பகமும் இவரால் இயற்றப்பெற்றன. இவர் தாம் வாழ்ந்திருந்த மடாலயத்தில் புராணசாலை ஒன்று ஏற்படுத்தி அங்கே ஹிந்துஸ்தானி பாஷையிலும் தமிழிலும் புராணப் பிரசங்கமும் செய்ததுண்டு. சிறந்த இராமபக்தர் ஆகிய துளஸீதாசர் அந்தப் பிரசங்கங்களைக் கேட்டு உவந்தனர் என்றும், கம்பராமாயணத்தில் உள்ள கருத்துக்களைத் தாம் ஹிந்துஸ்தானியில் இயற்றிய இராமாயணத்தில் அமைத்துக் கொண்டனர் என்றும் கூறுவர்.” (உ. வே. சாமிநாதையர்).

 27 நவம்பர் 2022 அன்று, தினமணியில் வெளியான கட்டுரை:




 





0 comments: