'கோடியர்’ கதிரி கோபால்நாத் (1949 - 2019)

’கோடியர்’ கதிரி கோபாலநாதன்
----------------------------------------------------------

கோடு என்பது கொம்பு. விலங்கு, மரம் இரண்டுக்குமே கோடு உண்டு. மரம், மூங்கில் போன்றவற்றால் செய்யப்படும் காற்றிசைக் கருவிகளை வயிர் என்று சங்க இலக்கியத்தில் காண்கிறோம். வயிர் < வெதிர். மூங்கிலில் உருவாகும் புள்ளாங்குழல்/புல்லாங்குழல், ஆச்சா மரத்தில் உருவாகும் நாதஸ்வரம் இவற்றின் முன்னோடி தான் “வயிர்”. தாவரத்தைக்கொண்டு செய்த காற்றிசைக்கருவிகளை இசைப்போர் வயிரியர் ஆவர்.

மாடு, மான், எருமை, யானை, ... போன்ற விலங்குகளின் கோடுகளை/கொம்புகளை ஊதுவோர் கோடியர் எனப்படுவர். நியோலித்திக் காலத்திலே விலங்குக் கொம்புகளை வைத்து உருவான வடிவங்களில் இன்னும் இசைக்கருவிகளாகப் புழங்குபவை தென்னிந்தியாவில் அதிகம் எனத் தொல்லியலாளர் தெரிவிக்கின்றனர். எருமைக்கு வேதத்தில் வழங்கும் கௌர- என்ற பெயரே கோடு என்ற சொல்லுடன் தொடர்புடையது. கவரி மாவின் பெயர்: கவரி < கவடி << கோடு. http://nganesan.blogspot.com/2017/11/kavarimaa-tirukkural-conference-2017.html

இவ்வாறு, கோடு மாட்டுக்கும், எருமைக்கும் தொடர்புடையது எனினும், கோவினம் என்று ஸம்ஸ்கிருதச் சொல்லால் மாடுகளையும், கோட்டினம் என்று தமிழ்ப் பெயரால் எருமைகளையும் கலித்தொகை குறிப்பிடுகிறது. இந்தியாவின் பழைய சமய் நெறிகளில் எத்தனையோ கடவுளர் உண்டு. எனினும், திணைமாந்தர்கள் கோடுகளை வைத்து, வணங்கும் பெருந்தெய்வங்கள் இரண்டு தான். (1) சுறாக் கோடு கொண்டு பூசிக்கும் வருணன் (2) அவன் மனை கௌரி/கொற்றவை எருமைக்கோட்டை வைத்து புதுமணல் பரப்பி, மணவறை சோடித்து நிகழும் கலியாணச் சீர்களில் வழிபடுவதை முல்லைக்கலிப் பாட்டு அறிவிக்கிறது. முதலாகுபெயருக்குச் சிறந்த உதாரணம் இச்செய்யுள். இந்தப் பாவை வழிபாடு பற்றி ஏனை விவரங்கள் திருமணத்தை விவரிக்கும் இரண்டு அகநானூற்றுப் பாடல்களால் விளங்குகிறது. சைவர், வைணவர், சமணர் பாடிய பாவைப்பாடல்களுக்கு இக் காத்யாயனி வழிபாடே அடிப்படை. திருப்பரங்குன்றில் கிடைத்துள்ள தமிழ் ப்ராமிக் கல்வெட்டு வருணன் - கௌரி ஜோடியைக் குறிப்பிடும் முதல் கல்வெட்டாகும். பிற்கால வருணனுக்கான சிந்துவெளி எழுத்து (மகர விடங்கர்) இப்போது கீழடி பானையோட்டில் கிடைத்துள்ளது. ஏற்கெனவே, செம்பியன் கண்டியூர் (கல் கோடரி), சாணூர், சூலூர், தாய்லாந்து தேசம் - எனத் தமிழர் செய்த கலங்களில் குறியீடாக சங்க காலத்தில் எழுதியுள்ளனர்.

எருமைக்கோடு பலவற்றையும் சேர்த்து S வடிவில் தூம்பு போலச் செய்து கோடியர் ஊதுவர். கொட்டாங்கச்சி வயலின் எனப்படும் ராவணஹஸ்தம் மூலமாகத்தான் முதலில் வில்லை நாணில் தேய்க்கும் நரம்பிசைக்கருவி முதன்முதலாக உலகில் தோன்றியது என்பர். பின்னாளில் மத்தியகிழக்கு நாடுகளில் பரவி, ஐரோப்பாவில் வயோலா, வயலின் என வளர்ச்சி அடைந்தது, அதே போல, ஸாக்சபோன் கருவியும் சங்க இலக்கியம் கோடு, கோடியர் எனப்படும் விலங்குக்கொம்புகளின் பரிணாம வளர்ச்சி ஆகும். விலங்குக் கொம்புகள் மறைந்தாலும், “ஹார்ன்” என்னும் பெயர் ஸாக்சபோன் போன்ற கருவிகளுக்கு இன்றும் நிலைத்துள்ளது, நியூ ஆர்லியான்ஸ் நகரில் கருப்பின மக்கள் வாசிக்கும் ஜாஸ் இசையில் ஸாக்ஸ் என்னும் ஹார்னுக்குப் பெரிய இடம் உண்டு.

நாதசுரக் கலைஞர்கள் இசையில் பாடல்களின் வார்த்தைகளை நாகசுரம் பேசும். குன்னக்குடி வயலினில் தமிழ்ப் பாடல்களின் சொற்கள் கேட்கலாம். அதுபோல, சாக்சபோனை கர்நாடக இசையின் “தொகுசொல்” கருவியாக இசைத்துக்காட்டி வாழ்ந்த பெருங்கலைஞர் கதிரி கோபாலநாதன் மறைந்துவிட்டார். கதிரியின் இசையில், கருநாடக சங்கீத சாகித்தியங்களின் சொற்களை உணரலாம்.

     மழையென மருண்ட மம்மர் பலவுடன்
     ஓய்களி றெடுத்த நோயுடை நெடுங்கை
     தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும் - அகநானூறு

”பட்டத்து யானையானது, தன்மேற் கொண்டிருக்கின்ற துகிற் கொடியினைப் போல, ஓடை என்னும் குன்றத்தேயுள்ள. காய்ந்த தலையினையுள்ள ஞெமை மரத்தின்மீது, சிலம்பியானது வலையினைப் பின்னியது. மேற்காற்றால், அவ்வலையும் அசைந்து கொண்டிருந்தது. அதனை மேகம் எனக் கருதி, ஒருங்கே மருட்சியுற்றன மயக்கத்தினையுடைய இளைத்த களிறுகள் பலவும். வருத்தத்தை யுடையனவாக அவை உயர்த்த நெடுங்கைகள், புகழினைத் திரட்டிக் கூறும் கோடியரின் தூம்பினைப்போலத் தோன்றி ஒலிக்கும்.”

தொகுசொல் கோடியர் தூம்பு - இந்தச் சங்கப்பாட்டின் தொடரை அறிய,
“தொகுசொல் கோடியர் கதிரிகோபாலின் ஸாக்ஸ்” என வைத்து, அவரது இசையைக் கேட்டால் போதும்.
 சில கலியாணங்களிலும் (கோவை, திருப்பூர்) கேட்டிருக்கிறேன். சென்ற முறை அண்ணா பல்கலையில் பேரா. வா. செ. குழந்தைசாமி பரிசில் பெறச் சென்றபோது விமானத்தில் கதிரி கோபாலனின் அருகே இருக்கை. பலர் அவருடன் பேசி “அம்மாவுக்கு அனுப்பணும்”என்று தன்னி (Selfie) எடுத்துக்கொண்டனர், மறக்க முடியாத புதுப் பாட்டை போட்ட இசைவாணர் கதிரி மறைவுக்கு எம் அஞ்சலிகள்.

நா. கணேசன்

சாக்ஸபோனின் தனிமை இரக்கம்!
               -------------

உன்மூச்சும் என்மூச்சும் ஒன்றாய் இணைந்ததை 
ஊர்கேட்டுத் தலையாட்டவும்,

         ஓடிடும் ஸ்வாசத்தை உள்ளே அடக்கியே
         ஒன்றாக நின்றாடவும்,

தன்னாலே தழுவிடும் தனிவிரல் ஸ்பரிசத்தில்
தளிர்த்திட்ட தன்யாசியும்

           சங்கரா பரணமும் சரஸ்வதி தோடியுடன்
           சண்முகப் பிரியராகமும்,

முன்னால் அமர்ந்திடும் குமரியின்  வயலினும்
முகர்சிங்கின் மூர்த்தியழகும்,

            முடியவேமுடியாதென்   றேங்குமிரு தங்கமும்,
            முடங்கிட்ட கடவாத்யமும்,

மின்னாமல் இடித்தெங்கள்  கண்ணீரில் கரைந்ததே!
வேதனை நிலையாச்சுதே!
           வித்துவச் சித்தனே, கதிரிகோ பாலனே
               விட்டெமைப் பிரிந்த தேனோ?  

-ஆழ்ந்த வருத்தத்துடன்
புலவர் இராமமூர்த்தி. 

மவுனித்தது சாக்சபோன் இசை.. கத்ரி கோபால்நாத் காலமானார்!
By Mathivanan Maran

மங்களூரு: சாக்சபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் (69) உடல்நலக்
குறைவால் மங்களூரு தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார்.
கர்நாடகா மாநிலம் பந்த்வால் தாலுகாவில் மிட்டகெரே கிராமத்தில் 1950-ம்
ஆண்டு பிறந்தவர் கத்ரி கோபால்நாத். சாக்சபோன் இசைக் கலையில் உன்னதத்தைத்
தொட்டவர் கத்ரி கோபால்நாத்.

தமிழக அரசின் கலைமாமணி, மத்திய அரசின் பத்மஶ்ரீ உள்ளிட்ட விருதுகளைப்
பெற்றவர். கே. பாலசந்தரின் டூயட் படத்தில் கத்ரி கோபால்நாத்தின்
சாக்சபோன் இசை முழுமையாக பயன்படுத்தப்பட்டது. கடந்த சில மாதங்களாக கத்ரி
கோபால்நாத் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் மங்களூரு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர்
காலமானார்.

கத்ரி கோபால்நாத்தின் 2 மகன்களில் ஒருவரான மணிகந்த் கத்ரி, இசை
அமைப்பாளராக உள்ளார். மற்றொரு மகன் குவைத்தில் இருக்கிறார்.

கர்நாடகாவின் பாதவிங்கடி என்ற இடத்தில் கத்ரி கோபால்நாத்தின் இறுதிச்
சடங்குகள் நடைபெற உள்ளன. குவைத்தில் இருக்கும் மற்றொரு மகனின் வருகைக்காக
குடும்பத்தினர் காத்திருக்கின்றனர். கத்ரி கோபால்நாத்தின் மறைவு
தென்னிந்திய திரை உலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சமூக வலைதளங்களில்
கத்ரி கோபால்நாத் மறைவுக்கு திரைபிரபலங்கள் அதிர்ச்சியையும் ஆழ்ந்த
இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

 https://tamil.oneindia.com/news/mangalore/saxophone-legend-kadri-gopalnath-passes-away-365284.html

0 comments: