சோழன் காசுகள் (தமிழ் கிரந்த எழுத்தில்)

கல்வெட்டு ஆய்வாளர் துரை சுந்தரம் (கோவை) அவர்களிடம் இரண்டு முக்கியமான சோழன் பொற்காசுகளின் ஒளிப்படங்கள் அளித்தேன். அவற்றில் உள்ள விருதுப் பெயர்களை ஒவ்வொரு எழுத்தாக விளக்கினார். அவருக்கு என் நன்றி.

’முடிகொண்டசோழன்’ என எழுதிய காசில், ‘ட’ 11-ஆம் நூற்றாண்டில் தமிழிலும், தமிழ் கிரந்தத்திலும் இருந்த வடிவைப் பார்க்கலாம். அப்படியே, முடிகொண்ட என்ற தமிழ் வார்த்தையை எழுத்துப்பெயர்ப்பாய் (transliteration) வெளியிட்டுளனர். சோழர்கள் தாம் சமணர்கள் உருவாக்கிய வட்டெழுத்தைக் கைவிட்டு, கிரந்த லிபியைத் தமிழுக்கு முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கியவர்கள். சேர நாட்டில் அதற்கப்புறமும் வட்டெழுத்து சில காலம் வாழ்ந்தது. அதனால், இணையம், அச்சு நூல்களில் பயன்பாட்டில் உள்ள ஜ, ஶ, ஷ, ஸ, ஹ ஐந்தெழுத்தையும் வடவெழுத்து எனத் தொல்காப்பியர் வழியில் குறிப்பிடல் முறையானதாகும். தமிழல்லா நூல்களை, சொற்களைத் தமிழ்லிபியில் எழுத இவ்வைந்து வடவெழுத்தும் அவசியம் எனத் தமிழறிஞர் தெரிந்தெடுத்துக் கணிகளிலும், அகராதிகளிலும் தந்துள்ளனர். இவற்றின் விழுக்காடு எவ்வளவு உள்ளது என வடமொழி நூல்களின் தமிழ்லிபிப் பதிப்புகளில் கணிஞர்கள் ஆராய்ந்து தெரிவிக்கலாம். அதே போல, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ... போன்ற நூல்களின் தமிழ்லிபிப் பதிப்புகளில் வடவெழுத்தின் எத்துணைப் பங்கு என ஆராயலாம்.

‘முடிகொண்ட சோழன்’ காசில் பாண்டியன் மீன் சின்னமும், சோழன் புலிச் சின்னமும் உள்ளது. எனவே, “பாண்டியன்” முடிகொண்ட சோழன் என்பது பொருள். பாண்டியநாடு முற்றாக சோழர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டது.

இவைபோல, இன்னும் பல காசுகளின் எழுத்துகளை எழுத்தெண்ணிக் கற்போம்.

நா. கணேசன்

----------

சோழர் கால நாணயம்- முடிகொண்ட சோழந்

வணக்கம்.


நீங்கள் அனுப்பிய சோழர் கால நாணயத்தின் படம் அருமையான எழுத்துப்பொறிப்புகளைக் கொண்டுள்ளது. எழுத்துகள்,  சோழர் காலத்தில் வழக்கிலிருந்த கிரந்த எழுத்து வகையைச் சார்ந்தவை.  ”முடிகொண்ட சோழன்”  என்னும் பெயர் எழுதப்பட்டுள்ளது.   கிரந்தத்தில், தமிழின் சிறப்பு  “ழ”கரமும் ”றன்ன”கரமும் இல்லாமையாலும்,  சோழர் காலத்தில் ஒகர ஓகார இரு உயிர் மெய்யெழுத்துகளுக்கும் பொதுவில் ஒற்றைக்கொம்பு மட்டுமே பயன்பாட்டில் இருந்தமையாலும் , ”முடிகொண்ட சோழன்” என்னும் சொல்  கிரந்தத்தில் ”முடிகொண்ட சொளந்”  என எழுதப்படும். அதுவே, இந்த நாணயத்திலும் எழுதப்பட்டுள்ளது.



முடிகொண்ட சோழந் - நாணயம்

https://thehinduimages.com/details-page.php?id=133226134
Caption : CHENNAI, 18/05/2012: A gold coin belonging to 1014-1-44 CE of Rajendra Chola which was found in Dharmapuri district is on display at Egmore Museum on the occasion of 150th year celebration of the Archaeological Survey of India, on May 18, 2012. Photo: S.R. Raghunathan


மேற்படி நாணய எழுத்துகளில்,  “ண்ட”  ஆகிய இரு எழுத்துகள், தமிழ் எழுத்துப்போல் தனித் தனியே எழுதப்படாமல் கூட்டெழுத்தாக (ஒன்றின் கீழ் ஒன்றாக) எழுதப்பட்டுள்ளது.  ”ண” கரத்தை ஒட்டி வரும் ”ட” கரம் கிரந்த வழக்கில் மெல்லோசையுடைய  வர்க்க எழுத்தான மூன்றாம் ”ட” கர எழுத்தாகவே எழுதப்படுதல் மரபு. இந்த நாணயத்தில், அம்மரபு  காணப்படவில்லை.  மாறாக, வர்க்க எழுத்தில் முதல் “ட”கர எழுத்து எழுதப்பட்டுள்ளது.  அதுபோலவே, ”முடி”   என்னும் சொல்லிலும் வர்க்க எழுத்தில் முதல் “ட”கர எழுத்து எழுதப்பட்டுள்ளது. “சோளந்”   என்னும் சொல்லில்  “சொ”  என்பதை எழுத ஒற்றைக் கொம்பு, சகரம், கால்  என்னும் முறையில் எழுதவேண்டும். ஆனால், கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் சில இடங்களில், ”கால்” என்னும் ஒட்டு, தனியே எழுதப்படாமல்   முதன்மை எழுத்துடன் சேர்த்து எழுதப்படுதல் உண்டு. அவ்வாறே, இந்த நாணயத்திலும் எழுதப்பட்டுள்ளது.

கிரந்த எழுத்துகளின் வரிவடிவம் பல்லவர் உருவாக்கியதாகும்.  பின்னர் சோழர் காலத்தில் அந்த வரிவடிவம் சற்று மாற்றம் பெறுகிறது. அது போலவே, பாண்டியர் காலத்திலும், விஜய நகரர் காலத்திலும்  மாற்றங்கள் ஏற்பட்டன. தற்போது,  நிலை நிறுத்தப்பெற்ற அச்சு வடிவ  எழுத்துகளின் வரிவடிவத்தில், “முடிகொண்ட சொளந்”  என்பது  எவ்வாறு எழுதப்படுகிறது என்பதைக் கீழே காணலாம்.  நான்கு வரிகளில் எழுதப்பட்ட இச்சொல்லின் வரிவடிவங்களில் முதலாவது, இந்த அச்சு வடிவம். திருவனந்தபுரத்தில் இயங்கிவரும் “திராவிட மொழியியல் கழகம்”  (DRAVIDIAN LINGUISTICS ASSOCIATION) என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ள  "THE GRANTHA SCRIPT"  என்னும் நூலை (நூலாசிரியர்: பி.விசாலாட்சி) அடிப்படையாய்க் கொண்டு இந்த அச்சு வடிவம் எழுதப்பட்டுள்ளது. அடுத்து, இரண்டாம் வரியில், நாணயத்தில் எழுதப்பட்ட வரிவடிவம் அமைகிறது. மூன்றாம் வரி இன்றைய தமிழ் எழுத்து வடிவம். நான்காம் வரியில்,  ஆங்கில எழுத்துகளில் உரிய  ஒலிக்குறிப்புடன் எழுதப்பட்ட வடிவம் உள்ளது.


கீழ்வரும் பகுதியில் சோழர் கால கிரந்த எழுத்துகள் சிலவற்றின் வடிவங்கள்  தரப்பட்டுள்ளன. இவை, தொல்லியல் துறையில் (1935-1965)  பணியாற்றிய தொல்லியல் அறிஞர் சி. சிவராமமூர்த்தி அவர்கள் எழுதிய "INDIAN EPIGRAPHY AND SOUTH INDIAN SCRIPTS"  என்னும் நூலையும்,  தஞ்சைக் கல்வெட்டுகளையும்  பார்வையிட்டுப் பெற்ற  எழுத்துச் சான்றுகளாகும்.



1       “ம”   எழுத்தின் வரிவடிவம்

இது தஞ்சைக் கல்வெட்டொன்றில் காணப்படும் வடிவம்.


தஞ்சைக்கல்வெட்டில்  கிரந்த எழுத்து “ம”


கீழுள்ளது  நூலில் குறிப்பிடப்பெறும் வரிவடிவம்.








”ம”  கிரந்த எழுத்தின் மாற்று வடிவங்கள்



2      ”க”   எழுத்தின் வரிவடிவம்



தஞ்சைக்கல்வெட்டில்  கிரந்த எழுத்து “க”







3    “ட”   எழுத்தின் வரிவடிவம்


இராசேந்திர சோழன் கால எழுத்து-திருவாலங்காட்டுச் செப்பேடு


நூலில் குறிப்பிடப்பெறும் வடிவம் 
இந்த “ட”  எழுத்து  (வர்க்க எழுத்துகளில் முதலாவது) ,  நாணயத்தில் எழுதப்பட்டுள்ளது.

4      ”ண்ட”  - கூட்டெழுத்தின் சரியான வடிவம்

மேலே,
”ண” கரத்தை ஒட்டி வரும் ”ட” கரம் கிரந்த வழக்கில் மெல்லோசையுடைய  வர்க்க எழுத்தான மூன்றாம் ”ட” கர எழுத்தாகவே எழுதப்படுதல் மரபு. இந்த நாணயத்தில், அம்மரபு  காணப்படவில்லை.  மாறாக, வர்க்க எழுத்தில் முதலாம்  “ட”கர எழுத்து எழுதப்பட்டுள்ளது - என்று குறிப்பிட்டுள்ளேன்.

மரபுப்படி,   ”ண்ட”  - கூட்டெழுத்தின் சரியான வடிவத்தைக் கீழ்க்கண்ட சான்று மூலம் அறியலாம்.


”ண்ட”  - கூட்டெழுத்தின் சரியான வடிவம்

”ட” கரத்தின் மூன்றாம் வர்க்க எழுத்தின் வடிவத்தைக் கீழுள்ள  எழுத்து காட்டும்.


நூலில் குறிப்பிடப்பெறும் வடிவம் 


”ம”, ”க”, “ட”(ta)  ஆகிய மூன்று கிரந்த எழுத்துகளின் வரி வடிவத்தையும் கீழுள்ள  கல்வெட்டுச் சொல் குறிக்கும்.




மகுடம் -  MAKUTAM

இராஜேந்திர சோழனின் நாணயம்





நீங்கள் அனுப்பிய இராஜேந்திர சோழனின் நாணயத்தின் படத்தில் வட்டச் சுற்றில் எழுதப்பட்ட எழுத்துகளின் நேர் வடிவம்  கீழே தரப்பட்டுள்ளது.






இந்த எழுத்துகளில்,  முதல் எழுத்தான “ர”கர நெடிலுக்குரிய கால் “ர”கர எழுத்துடன் சேர்த்தே எழுதப்பட்டுள்ளது. இது “முடிகொண்ட சொளந்”  நாணயத்தில் உள்ள முறையிலேயே அமைந்துள்ளது. “சொ” எழுத்திலும் அவ்வாறே.  ஒற்றைக்கொம்பு  சற்று மாறுபட்ட தோற்றம் பெறுகின்றது;  எனினும்,  ஒற்றைக்கொம்புதான் என எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் அளவிலேயே எழுதப்பட்டுள்ளது.  ”ஜ”  எழுத்தும்  எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது.  “ந்த்ர”    ("NDRA")   என்பது கூட்டெழுத்து முறையில் எழுதப்பட்டுள்ளது.  


சுந்தரம், கோயமுத்தூர்.

0 comments: