ஸ்ரீபுராணக் கருத்தை வெளிப்படுத்தும் அரிய சமணச் சிற்பம்

கரூர் அரவக்குறிச்சியில்
ஸ்ரீபுராணக் கருத்தை வெளிப்படுத்தும் அரிய சமணச் சிற்பம் கண்டுபிடிப்பு

முன்னுரை
அண்மையில், அரவக்குறிச்சியைச் சேர்ந்த சுகுமார் பூமாலை என்னும் வரலாற்று ஆர்வலர் தம்முடைய ஊர்ப்பகுதியில் சமணர் குகைத்தளம், சமணச் சிற்பம் ஆகியவற்றைக் கண்டறிந்துள்ளார். செய்தியைக் கோவை கலவெட்டு ஆராய்ச்சியாளர் துரை.சுந்தரம் அவர்களுக்குத் தெரிவித்தார். சுகுமார் பூமாலையோடு சேர்ந்து கலவெட்டு ஆராய்ச்சியாளர் துரை.சுந்தரம் ஆய்வு செய்ததில் அறியப்பட்ட செய்திகள் இங்கு தரப்பட்டுள்ளன.
சமணக்குன்றும் முருகன் கோயிலும்
அரவக்குறிச்சி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் கணக்குவேலம்பட்டி. இவ்வூரில் மொட்டையாண்டவர் திருக்கோவில் என்று மக்களால் அழைக்கப்படும் முருகன் கோயில் அமைந்துள்ளது. கோயில் அமைந்துள்ள இடம் ஒரு சிறிய கரட்டுக் குன்று இருக்குமிடம் ஆகும். குன்று நோக்கியுள்ள சிறிய ஏற்றப்பாதையில் மேலே செல்லுமுன் சமதளத்திலேயே  மிகப்பெரியதொரு பாறை காணப்படுகிறது. மதுரை-ஆனைமலை நரசிங்கப்பெருமாள் கோயிலில் அமைந்துள்ள பாறை போலச் சரிந்து பெரிய சுவர் போலத் தோற்றமளிக்கிறது. பாறையில் சற்றேறத்தாழ ஏழு அடி உயரத்துக்கு மூன்று சமணச்சிலைகள் ஒரே இடத்தில் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. மூன்று சிற்பங்களும் நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றன. நடுவில் ஓர் ஆண் உருவமும், அதன் இரு பக்கங்களிலும் இரு பெண் உருவங்களும் வடிக்கப்பட்டுள்ளன. நடுவில் ஆணும், பக்கங்களில் இரு பெண்களும் காணப்படுவதால், சமண வரலாறு அறியாத கிராமத்து மக்கள், இந்தச் சிற்பத் தொகுதியை முருகன், வள்ளி, தேவயானை ஆகிய கடவுள்களாகக் கருதி முருகன் கோயில் எனப் பெயரிட்டு வழிபாடு செய்து வருகின்றனர். 
சமணச் சிற்பங்கள்
சிற்பங்களை ஆய்வு செய்ததில், இச்சிற்பங்கள் சமணச் சிற்பங்கள் என்பது புலப்பட்டது. நடுவில் இருக்கும் ஆண் சிற்பத்தின் தலைக்கு மேல் சமணத்துக்கே உரிய முக்குடை அமைப்புக் காணப்படுகிறது. சமணத் தீர்த்தங்கரர் சிலைகளில் இது போன்ற முக்குடை அமைப்பைக் காணலாம். இங்கு, சிற்பத்தில் ஆடை அணியாத சமணத்துறவியின் நின்ற கோலமும், அவரின் தலைக்குமேல் காணப்படும் முக்குடை அமைப்பும் இச் சிற்பம் ஒரு சமணத் தீர்த்தங்கரரின் சிற்பம் என்பதை உறுதிப்படுத்துகிறது.
சிற்பங்களில் இருப்போர் யார்?
1) பாகுபலியும் அவரின் சகோதரிகள் இருவரும்
சமணத் தீர்த்தங்கரரின் இரு பக்கங்களிலும் இரு பெண்ணுருவங்கள் உள்ளன. சமணத்தில் இரு பெண்கள் குறிப்பிடத்தக்கவர்கள். சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் ஆதி நாதர் என்னும் ரிஷபதேவர் ஆவார். இவர் ஒரு அரசர். இவருக்கு மக்கள் இரு மகன்களும், இரு மகள்களும். பாகுபலி மூத்த மகன்; பரதன் இளைய மகன். பிராமி, சுந்தரி இருவரும் மகள்கள். ஆட்சியை மகன்கள் இருவருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு ரிஷபதேவர் துறவறம் மேற்கொள்கிறார். சக்கரவர்த்தியாகும் எண்ணத்தில் பரதன், பல நாட்டு அரசர்களை வெல்கிறார் உடன்பிறந்த பாகுபலியையும் கொல்ல நினைக்கிறார். மனம் வெறுத்த பாகுபலி, தன் பங்குக்கான ஆட்சிப்பரப்பையும் உடன்பிறந்தானுக்குத் கொடுத்துவிட்டுக் காட்டுக்கு ஏகித் தவத்தில் ஈடுபடுகிறார். சகோதரிகள் பிராமி, சுந்தரி ஆகிய இருவரும், தவத்தைக் கைவிடுமாறு பாகுபலியை   வேண்டிக்கொள்கின்றனர். இந்ந்கழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, நடுவில் பாகுபலியும், அவரது பக்கங்களில் அவரது சகோதரிகளும் நின்றுகொண்டிருப்பது போன்ற தோற்றத்தில், வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் பல்வேறு இடங்களில் சமணச் சிற்பங்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இராஜஸ்தானில் ஜோத்பூர், கருநாடகத்தில் அய்ஹொளெ, எலோராக் குடைவரை, பாதாமிக் குடைவரை, தமிழகக் கழுகுமலை ஆகிய இடங்களைக் குறிப்பிடலாம்.
மேற்குறித்த சமணச் சிற்பங்களின் தோற்ற அமைப்பை ஒப்புநோக்கிப் பார்க்கையில், அரவக்குறிச்சியில் இருக்கும் சமணச்சிற்பத்தின் நடுவில் இருப்பவர்பாகுபலி என்னும் சமணத்துறவி என்பதாகவும், அவருக்கு இரு பக்கங்களிலும் நிற்கும் பெண் சிற்பங்கள் பாகுபலியின் சகோதரிகளான பிராமி, சுந்தரிஆகியோர் என்பதாகவும் கருத நேர்கிறது.. 
சிற்பங்களில் இருப்போர் யார்?

2) ரிஷபதேவரும் அவரின் மகள்கள் இருவரும்
ஆதிநாதர் என்னும் ரிஷபதேவர், சமணத்தில் முதலாம் தீர்த்தங்கரர் எனப்பார்த்தோம். தீர்த்தங்கரர் என்னும் உயர்நிலை பெற்ற இருபத்து நான்கு பேரின் சிற்ப,ஓவிய உருவங்களுக்கு அடையாளமாக அவர்களின் தலைக்கு மேல் முக்குடை அமைப்புக் காணப்படும். பார்சுவ நாதருக்கு மட்டும் முக்குடையும் அதன்கீழே அவரைக் காக்கின்ற நாகமும் தலைமேல் காட்டப்பட்டிருக்கும். பாகுபலி தம் தந்தையாகிய ரிஷபதேவரைப் பின்பற்றித் துறவறம் பூண்டு தனிப்பெரும் சிறப்பைச் சமணத்தில் பெற்றிருப்பதால் அவருக்கு ஒரு குடை காட்டப்படுவதுண்டு. ஆனால், அவர் தீர்த்தங்கரர் அல்லர் என்னும் காரணத்தால் அவருக்கு முக்குடை இராது. பாகுபலியின் நீண்ட தவம் காரணமாக அவர் உடலைச் சுற்றிக் கொடிகள் படர்ந்தமையால், பாகுபலியின் சிற்ப உருவங்களில் ஆடையற்ற அவரது உடலைச் சுற்றிக் கொடிகள் தோன்றுமாறு சிற்ப வேலைப்பாடு  காணப்படும். இந்த அமைப்பு, மாறா அமைப்பு. எனவே, அரவக்குறிச்சியில் இருக்கும் சமணச் சிற்பம், முக்குடையோடு இருப்பதாலும், சிற்பத்தின் உடலில் சுற்றிய கொடிகள் இன்மையாலும் தீர்த்தங்கரரான ரிஷபதேவரே என்று கருத நேர்கிறது. மேலும், ரிஷபதேவர் தம் மகள்களுக்கு எண்ணும் எழுத்துமாகிய கல்வியைப் புகட்டியவர் என்று ஸ்ரீபுராணத்தில் குறிப்பிடப்பெறுகிறது. பெண் கல்வி என்பது சமணர் போற்றும் ஒரு கருத்து. பெண் கல்வியின் மேன்மையையும், அருமையையும் தமிழ்ச் சமணர் போற்றியதன் குறியீடாகவே சமணரான இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் காட்டியுள்ள கவுந்தியடிகளைக் கொள்ளலாம். ரிஷபதேவர், தம் மகள்களுக்குக் கல்வி கற்பிக்கையில், பிராமிக்குத் தம் வலக்கையால் எழுத்தையும், இடக்கையால் எண்ணையும் (கணிதத்தையும்) கற்பித்ததாக ஸ்ரீபுராணம் குறிப்பிடுகிறது.
ஸ்ரீபுராணத்திலிருந்து சில வரிகள்
” பகவான் ....................   ஸ்ரீஅஸ்தமிரண்டுனாலும் ஒரு முறையிலேயே எழுத்தினையும் எண்ணையும் அவர்கட்குக் காட்டியருளினர்.
அங்ஙனம்காட்டி அவருள் பிராம்மியென்னும் பெண்ணிற்கு தக்ஷிண அஸ்தத்தால், ‘சித்தந்நம:’ என்றெடுத்துக் கொள்ளப்பட்ட மங்களத்தையும்........... அக்ஷரமாலையினையும்,சம்யோகாக்ஷரங்களது பிறப்பினையும் உபதேசித்தனர்.
சுந்தரியென்னும் பெண்ணிற்கு வாம அஸ்தத்தினால் ஒன்றுபத்துநூறுஆயிரமுதலாக ஒன்றிற்கொன்று பதின்மடங்காகிய கணித ஸ்தானங்களையும். பெருக்குதல்ஈதல் முதலாகிய ஷோடச பரிகர்மங்களையும் உபதேசித்தருளினார். இங்ஙனம் ஸ்வாமி தமது தக்ஷிண அஸ்தத்தினால் எழுத்துக்களை உபதேசித்ததால் எழுத்துக்கள் வலமாக வளர்ந்தன; வாமஹஸ்தத்தினால் எண்களை உபதேசித்தருளியதால் எண்களது ஸ்தானம் இடமாக வளர்ந்தது. 
தமிழ் எழுத்துகள் இடமிருந்து வலமாக எழுதப்பட்டன;எழுதப்படுகின்றன. தமிழில் எண்கள் வலமிருந்து இடமாகச் சுட்டப்பட்டன. இன்றும் எண்களின் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் ஆகிய பகுப்புகளில், வலப்புறம் முதலிடத்தில் ஒன்று, அடுத்து, வலப்புறத்திலிருந்து இடப்புறமாகப் பத்து, நூறு, ஆயிரம் என எண்கள் எழுதப்படுவது ஆராயத்தக்கது. தொல்காப்பியத்திலும், எழுத்து இடமிருந்து வலப்புறமாகவும், எண்கள் வலமிருந்து இடப்புறமாகவும் படிக்கப்படுதலைப் பற்றிய குறிப்பு உள்ளது. அரவக்குறிச்சியின் சமணச் சிற்பத்தில், தீர்த்தங்கரருக்கு வலப்புறம் நிற்கும் (ஒளிப்படத்தைப் பார்க்கும் நம் பார்வையில் அல்ல) பிராமி தன் வலக்கையை எழுதும் பாணியில் உயர்த்தி வைத்துள்ளதையும், இடக்கையை, எழுதப்படுகின்ற ஏட்டினை ஏந்தும் பாணியில் தாழ்த்தி வைத்துள்ளதையும் காணலாம். இதைப் பிராமி என்பவள் எழுத்தைக் கற்றதைக் குறிப்பால் உணர்த்தும் குறியீடாகக் கொள்ளலாம். தீர்த்தங்கரருக்கு இடப்புறம் நிற்கும் சுந்தரியின் சிற்பத்தில், சுந்தரி தன் இடக்கையை உயர்த்தியும், வலக்கையைத் தாழ்த்தியும் வைத்துள்ளதைக் காணலாம்.
சிற்பத்தொகுதியில் நடுவில் இருப்பவர் ரிஷபதேவரா? அல்லது பாகுபலியா?
கீழ்க்காணும் தரவுகள் ஆய்வுக்குரியன.
1         ஆண் சிற்பத்தில் முக்குடை காணப்படுகிறது.
2      ஆண் சிற்பத்தில் உடலில் கொடிகள் காணப்படவில்லை.
3      பெண்கள் இருவரின் கைப்பாணி அல்லது முத்திரை, ஆதிநாதர்  எண்ணும் எழுத்தும் கற்பித்த மகள்களாகச் சுந்தரி, பிராமி இருவரைக் குறிப்பதாக உள்ளது.
மேற்காணும் தரவுகள், அரவக்குறிச்சியில் இருக்கும் சமணச் சிற்பம் ஆதிநாதருடையது என்னும் முடிவை நோக்கி நம்மை நகர்த்துகின்றன. இரு வேறு கருதுகோள்களையும் ஆய்வறிஞர்கள் சிலர் இன்னும் தொடர்ந்து ஆய்வு செய்துவருகின்றனர். ஆய்வு என்பது ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் முடிந்து போவதல்ல. மீளாய்வுகள் தொடரும் நிலையில், நாம் எட்டிய (அல்லது நாம் எட்டியதாக எண்ணிய ) முடிவுகள் மாறக்கூடும். தமிழகத்தில், ஆதிநாதர், மகள்களான பிராமி, சுந்தரி ஆகியோர்  இணைந்த அரிய சிற்பம் இது ஒன்றே எனக் கருதலாம். இவ்வரிய சமணச் சிற்பம் கொங்குப்பகுதியில் அமைந்துள்ளது என்பது கொங்கு நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாகும்.
சமணச் சிற்பத்தின் காலம்
சமணம், தமிழகத்தில், குறிப்பாகப் பாண்டிநாட்டிலும் கொங்குப்பகுதியிலும் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு வரை செல்வாக்கோடு இருந்துள்ளது என்று வரலாற்றுக் குறிப்புகள் வாயிலாக அறிகிறோம். இதன் அடிப்படையில், இச் சமணச் சிற்பத்தின் காலத்தைக் கி.பி. 12-ஆம் நூற்றாண்டுக்கு முன்னதாகக் கொண்டு செல்லலாம். சிற்பத்தின் பழமையான ஒளிப்படம் ஒன்று, மிகுதியான சிதைவுகளைத் தெளிவாகக் காட்டுகிறது. ஒட்டு மொத்தச் சிற்ப அமைதியையும் சமணத்தின் மறுமலர்ச்சிக் காலத்தையும் கருத்தில்கொண்டால், சிற்பத்தின் காலம் கி.பி. 7 அல்லது 8-ஆம் நூற்றாண்டு எனக் கருதக் கூடுதல் வாய்ப்புள்ளது.
முடிவுரை
தமிழகத் தொல்லியல் துறையினர் இச் சிற்பத்தை மீளாய்வு செய்து மேலும் புதிய செய்திகளை வெளிக்கொணர ஆவன செய்யவேண்டும்.

நன்றி: சுகுமாரன் பூமாலை, புங்கம்பாடி

----------------------------------------------------------------------------
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.