பரம்பரைக் குணம் - உ. வே. சாமிநாதையர்

On Saturday, December 20, 2014 9:47:06 PM UTC-8, இன்னம்பூரான் wrote in MinTamil googlegroup:

காரைக்குடி ஒரரி,
நீங்கள் அய்க்கண் அவர்களில் மேன் மக்கள் படிக்கவேண்டும். காசிஶ்ரீயை கேட்டால் கிடைக்கலாம்.
இன்னம்பூரான்

2014-12-21 4:27 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
இக்கதையைப் படித்ததும் இன்று நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.  கடமையைச் செய்து ஒரு தம்பிடி பார்க்க இயலாத பணி அமெரிக்காவில் ஒன்றில் போஸ்ட் மேன் பணியும் ஒன்று.  எனவே என்று அவருக்கு கிறித்துமஸ் வாழ்த்து உள்ள ஒரு கவரும் பெயர் இடப்படாத ஒரு காசோலையும் என்று எங்கள் வீட்டிற்கு அஞ்சல் கொண்டுவந்த போஸ்ட் மேனிடம் கொடுத்தேன்.

அவர் என்னிடம், "ஐயா, தினமும் வருபவர் வேறு.  எனவே, இந்த வாழ்த்தும், காசோலையும் அவருக்குத்தான் சேரவேண்டும். அவரிடம் அதைச் சேர்ப்பித்து விடுகிறேன்!"  என்று சொன்னார்.  எனவே, நான் இன்னொரு வாழ்த்தும், பணமும் கொடுத்தேன்.  வாழ்த்தை மனமுவந்து பெற்றுக்கொண்ட அவர், "இன்று மட்டும் பணி செய்ய வரும் நான் பணத்தை வாங்குவது முறைமை ஆகாது" என்று பணத்தை வாங்க மறுத்துவிட்டார்.

அவர் வளர்ந்த, வளர்க்கப்பட்ட விதத்தை நினைத்து மனமகிழ்ந்தேன்.  இன்று உங்கள் கதை அதை உறுதிப்படுத்துகிறது.  

தமிழ்த்தாத்தா மணிமேகலையின் நல்ல பிரதி அளித்த மிதிலைப்பட்டிக் கவிராயர் சொன்ன கதையை எழுதியுள்ளார். சந்தவசந்தத்தின் வெண்பாவிரும்பியார் தட்டெழுதித் தந்தது அரிசோனாக்காரரின் மடலைப் பார்த்து நினைவுக்கு வந்தது.

3 மடலாக, உவேசா, பரம்பரைக்குணம்:

நா. கணேசன்

பரம்பரைக் குணம் - உ.வே.சா 

மிதிலைப்பட்டி என்னும் ஊரை நான் எந்தக் காலத்தும் மறக்கமுடியாது. மணிமேகலையின் முகவுரையில் "இவற்றுள் மிகப் பழமையானதும் பரிசோதனைக்கு இன்றியமையாததாக இருந்ததும் மற்றப் பிரதிகளிற் குறைந்தும் பிறழ்ந்தும் திரிந்தும் போன பாகங்களையெல்லாம் ஒழுங்குபடச் செய்ததும் கோப்புச் சிதைந்து அழகுகெட்டு மாசு பொதிந்து கிடந்த செந்தமிழ்ச் செல்வியின் மணிமேகலையை அவள் அணிந்து கொள்ளும் வண்ணம் செப்பஞ் செய்து கொடுத்ததும் மிதிலைப்பட்டிப் பிரதியே" என்று எழுதியுள்ளேன்.  தமிழ்நாட்டில் எவ்வளவோ  புண்ணிய ஸ்தலங்கள் இருக்கின்றன.  சிவஸ்தலங்களும் விஷ்ணுஸ்தலங்களும் 
சுப்பிரமணிய ஸ்தலங்களும் பல உள்ளன.  அவற்றைப் போல் தமிழ்த் தெய்வம்  கோயில் கொண்டுள்ள ஸ்தலங்களுள் ஒன்றாகவே மிதிலைப்பட்டியை நான் கருதியிருக்கிறேன்.  அது சிவகங்கை ஸமஸ்தானத்தைச் சார்ந்தது. புதுக்கோட்டையைச் சார்ந்த திருமெய்யம் என்னும் இடத்திலிருந்து சில மைல் தூரத்தில் உள்ளது.  அங்கிருந்து நான் பெற்ற ஏட்டுச் சுவடிகள் சில.  அவற்றை எனக்கு உதவியவர் அழகிய சிற்றம்பலக்கவிராயர் என்னும் ஓர் அன்பர். 

அவருடைய பரம்பரையானது தமிழ் வித்துவான்களுடைய பரம்பரையாதலின், பல அரிய  தமிழ்ச் சுவடிகள் பல நூற்றாண்டுகளாகச் சேகரித்து அவர் வீட்டிலே  பாதுகாக்கப் பெற்றிருந்தன.  அவருடைய முன்னோர்கள் பல ஸமஸ்தானங்களில் யானை முதலிய பரிசுகளும் மானியங்களும் பெற்றவர்கள்.  அவர் வீட்டின் பக்கத்தில் பழையகாலத்தில் யானை கட்டிய கல்லையும் சிவிகையையும் பார்த்திருக்கிறேன். அங்கே கலைமகளும் திருமகளும் ஒருங்கே களிநடம் புரிந்தனர். 

அழகிய சிற்றம்பலக் கவிராயர் நல்ல செல்வர்.  அவரோடு நான் பழகிய காலத்தில் அவருடைய முன்னோர்களைப் பற்றிய பல வரலாறுகளை எனக்குச் சொல்லியிருக்கிறார்.  தம்முடைய சொந்த அனுபவங்கள் பலவற்றையும் சொன்னதுண்டு.  அவற்றுள் ஒன்று வருமாறு: 

ஒருநாள் எங்கேயோ நெடுந்தூரமுள்ள ஓரூருக்கு ஒரு கலியாணத்திற்கு அவர் போயிருந்தார்.  மீண்டும் ஊருக்குத் திரும்ப எண்ணி ஒரு வண்டிக்காரனிடம் வண்டி பேசி அமர்த்திக் கொண்டார்.  இரவு முழுதும் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது.  வண்டிக்காரன் மூன்று ரூபாய் வாடகை கேட்டான்; அன்றியும், "ஊருக்குப் போகையிற் பொழுது விடிந்து விடுமாகையால், எனக்கு  நாளைக் காலையில் சாப்பாடு போட்டு அனுப்பவேண்டும்" என்றும் தெரிவித்துக்  கொண்டான்.  அவ்வாறே செய்விப்பதாக அவர் உடன்பட்டார். 

இராத்திரியில் வண்டி புறப்பட்டது.  கவிராயர் அதிற் படுத்துக்கொண்டார். நல்ல நிலா வெளிச்சம் இருந்தது.  வண்டிக்காரன் ஆனந்தமாகத் தெம்மாங்கு முதலியவற்றைப் பாடிக்கொண்டே வண்டியை ஓட்டினான்.  காளைகள் வேகமாகச் சென்றன.  பாட்டுக்களைக் கவிராயர் கேட்டுப் பாராட்டிக்கொண்டே வந்தார். பின்பு வண்டிக்காரன் மெல்ல அவருடைய குடும்ப நிலையைப்பற்றி விசாரித்தான். அவர் தம்முடைய குடும்ப வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்தார்:- 

"நான் இருப்பது மிதிலைப்பட்டிதான்.  எங்கள் முன்னோர்களெல்லாம் பெரிய வித்துவான்கள்.  அவர்கள் எவ்வளவோ நூல்களைச் செய்திருக்கிறார்கள்; பல இடங்களில் பரிசுகள் பெற்றிருக்கிறார்கள்.  முதலில் அவர்கள் சேலத்தைச் சார்ந்த ஓரூரில் இருந்தனர்.  அக்காலத்தில் தாரமங்கலம் கோயில் திருப்பணிகள் செய்த கட்டியப்ப முதலியார் என்பவரால் ஆதரிக்கப்பெற்று வந்தனர்.  அவர்களில் ஒருவராகிய அழகிய சிற்றம்பலக் கவிராயருக்கு இந்த மிதிலைப்பட்டி என்னும் கிராமமானது அக்காலத்தில் இந்தப் பக்கத்தில் ஜமீன்தாராக இருந்த வெங்களப்ப நாயக்கரென்பவராற் கொடுக்கப்பட்டது.  அது சம்பந்தமான சாஸனம் எங்கள் வீட்டில் இருக்கிறது.  இராமநாதபுரம் சேதுபதிகளிடமிருந்து பலவகையான பரிசுகளை எங்கள் முன்னோர்கள் பெற்றிருக்கிறார்கள்.  மருங்காபுரி ஜமீன்தரிடமிருந்தும் பலவற்றை  அடைந்திருக்கிறார்கள்.  சிவகங்கையிலிருந்தும் அப்படியே கௌரவம்  பெற்றிருக்கிறார்கள்.  அந்தக் காலத்தில் தமிழருமை அறிந்த அரசர்களும் ஜமீன்தார்களும் இருந்தார்கள்.  அவர்கள் வித்துவான்களை ஆதரித்தார்கள்.  அதனால் வித்துவான்களும் பிரபுக்களைப் போலவே கவலையில்லாமல் வாழ்ந்து வந்தார்கள்.  எங்களுக்கு இப்பொழுது ஜீவனாதாரமாக இருப்பதும் எங்கள் குடும்பத்தில் லக்ஷ்மீகடாக்ஷம் குறையாமல் இருக்கும்படி செய்வதும் அந்த வெங்களப்ப நாயக்கர் கொடுத்த கிராமமே.  அவருடைய அன்னத்தைத்தான் இப்பொழுது நாங்கள் சாப்பிட்டு வருகிறோம்.  என்ன, கேட்கிறாயா?" 

"ஆமாம், சொல்லுங்கள்" என்றான் அவன். 

"வெங்களப்ப நாயக்கர் செய்த பல தர்மங்களும் அவருடைய புகழும் இன்றும் நிலைத்திருக்கின்றன.  அவரால் ஆதரிக்கப்பெற்ற பரம்பரையினராகிய நாங்களும் பிறரும் நல்ல நிலையில் இருக்கிறோம்.  அவருடைய பரம்பரையோ இருந்த இடம் தெரியாமற் போய்விட்டது.  எங்கள் முன்னோர்களைப் போன்ற எவ்வளவோ பேர்களுக்கு  அவர் அளவற்ற செல்வத்தைக் கொடுத்திருக்கிறார்.  அவர் பரம்பரையினர் கொடுத்துக் கொடுத்துப் புகழைச் சம்பாதித்தனர்.  ஆனாலும் பிற்காலத்தில் அக்குடும்பத்திற் பல பிரிவுகள் உண்டாயின;  செல்வமும் குறைந்து விட்டது.  வெங்களப்ப நாயக்கர் பரம்பரையினர் யாரேனும் இப்போது எங்கேயாவது இருக்கிறார்களோ இல்லையோ தெரியவில்லை.  அவர்களுடைய நிலை எப்படி இருக்கின்றதோ!  கால சக்கரமானது இப்படி மாறிக்கொண்டே வருகிறது" என்று சொல்லிக்கொண்டே வந்த அவர் அயர்ச்சி மிகுதியால் தூங்கி விட்டார். 

விடியற்காலையில் வண்டி மிதிலைப்பட்டி வந்து சேர்ந்தது.  வீட்டை அடைந்த கவிராயர் காலைக் கடன்களை முடித்துக்கொண்டார்.  தம்முடைய வேலைக்காரனை அழைத்து வண்டிக்காரனுக்குப் பழையது போடும்படி சொன்னார்.  அப்பொழுது வண்டிக்காரன், "எனக்குச் சாப்பாடு வேண்டாம்.  நான் போய் வருகிறேன். உத்தரவு கொடுங்கள்" என்று சொன்னான்.  அவர், "நீ ஊர்போய்ச் சேர்வதற்கு அதிக நாழிகையாகுமே. சாப்பிட்டு விட்டுப் போ" என்று வற்புறுத்தினார். 

வண்டிக்காரன்: "இல்லை; இப்பொழுது எனக்குப் பசி இல்லை.  போகும் வழியில் தெரிந்தவர்கள் வீட்டில் சாப்பிடுவேன்." 

கவிராயர்: "சரி; இதோ வாடகை ரூபாயை வாங்கிக்கொண்டு போ" என்று சொல்லி ரூபாயைக் கொடுக்க ஆரம்பித்தார். 

"ரூபாய் தங்களிடமே இருக்கட்டும்.  நான் போய் வருகிறேன்" என்று பணிவோடு அவன் சொன்னான். 

கவிராயர் திகைத்துவிட்டார்; அவன் அதிக வாடகை விரும்பக்கூடுமோ வென்று எண்ணினார். 

"நான் பேசினது மூன்று ரூபாய் தானே?" என்று அவர் கேட்டார். 

"இது கிடக்கட்டும் ஐயா!  நான் போய் வருகிறேன்.  தாங்கள் வேறு ஒன்றும் நினைத்துக்கொள்ளக் கூடாது!" என்று கம்பீரமாக வண்டிக்காரன் சொன்னான். 

"ஏனப்பா?  இவ்வாறு சொல்லுவதற்குக் காரணம் ஒன்றும் விளங்கவில்லையே!" என்று இரக்கத்தோடு அவர் கேட்டார். 

"ஐயா!  நேற்று இராத்திரி உங்கள் முன்னோர்கள் கதையைச் சொல்லி வந்தீர்களே! அவர்களை ஆதரித்த வெங்களப்ப நாயக்கர் பரம்பரையிற் பிறந்தவன் அடியேன்.  ஏதோ தலைவிதி இப்படி என்னை வண்டியோட்டச் செய்தது.  'என்ன செய்தாலும் கொடுத்ததை மட்டும் வாங்கக் கூடாது' என்று பெரியவர்கள் சொல்வார்கள்.  எங்கள் முன்னோர்களால் கொடுக்கப்பட்டவைகளில் ஒரு துரும்பையாவது உங்களிடமிருந்து வாங்கிக்கொள்ள என் மனம் சிறிதும் துணியவில்லை.  மன்னிக்க வேண்டும். இவ்வளவாவது தங்களுக்கு நான் உபயோகப்படும்படி கடவுள் கூட்டிவைத்தது என் பாக்கியந்தான்" என்று சொல்லிவிட்டுக் கவிராயர் மேலே பேசத் தொடங்குவதற்குள் வண்டியை அவன் ஓட்டிக்கொண்டே போய்விட்டான். 

கவிராயருடைய மனம் அவனுடைய கம்பீரத்தையும் வெங்களப்ப நாயக்கர் பரம்பரையின் பெருமையையும் அவனுடைய நிலையையும் நினைந்து இரங்கியது.  அவர் கண்களில்  நீர் ததும்பியது. 

இந்த வரலாற்றைப் பிற்காலத்தில் எனக்குக் கூறும் பொழுதுகூட இந்தக் கடைசிச் சந்தர்ப்பத்தைச் சொல்லுகையில் அவர் கண்களில் நீர்த்துளிகள் புறப்பட்டன;  நாத் தழுதழுத்தது. 

உயர்ந்த பரம்பரையில் பிறந்தவர்களுடைய கம்பீரமும் உதார குணமும் எக்காலத்தும் அழியாதவை. "கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே" என்ற அருமையான வாக்கியத்திற்கு இந்த வரலாற்றை விட வேறு சிறந்த உதாரணம் கிடைக்குமோ? 

(முற்றும்) 

நண்பர் காரைக்குடி சுப்புரத்தினம் மகாதேவன் அரிசோனாவில் மகாகணபதி ஆலயம் கட்டியவர்களில் முக்கியமானவர். இஸ்ரோவில் வேலைபார்த்து பின்னர் இண்டெல்/மோட்டரோலா நிறுவனத்தில் பணியாற்றியவர். அப்துல் கலாமுடன் இருக்கும் ஒளிப்படத்தில் பூப்போட்ட வண்ணச்சட்டை அணிந்துள்ளார். இப் படம் 1981-ல் எடுக்கப்பெற்றது. அவரது கிறிஸ்துமஸ் பரிசும், தபால்காரர் பதிலும் உவேசா கட்டுரையை நினைவுக்குக் கொணர்ந்தது.

3 comments:

oru arizonan said...

தங்கள் சுட்டியைப் படித்துப்பார்த்தேன், கணேசன் அவர்களே! உலகெங்கும் உயர்குணம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். கவிராயர் கதையும் மிக அருமை.

Anonymous said...

Iam inspired by this story, i was listening to variyars discourse in youtube i heard of this story and immediately searched it in google, thanks to technology iam grounded and connected sarvam krishnarpanam, harihi Om, jai guru🙏❤️🌹

Anonymous said...

Super