கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் பாரதியார் விழா 2012


மகாகவி பாரதியார் பெயரில் நடக்கும் இலக்கிய, ஆய்வு, கலை விழா!

பாரதி பக்தர்கள் பலரும் தமிழ்நாட்டிலிருந்து கலந்துகொள்கின்றனர்.  தமிழ்நாட்டில் தமிழ் ஆசான்களிடையே கணிமையும், வலைப்பதிதலும் பற்றிச் சில ஆண்டுகளாய் பட்டறைகள் நடத்திக் கற்பித்துவரும் முனைவர் மு. இளங்கோவன், கொழும்பில் வாழும் சர்வேசுவரன் போன்றோர் ஈழத் தமிழரைக் கணினி யுகத்தில் படைப்பாளிகளாகச் செய்யத் துணைபுரிய இவ்விழா போன்றவைகள் மிக உதவும். விழா நிகழ்ச்சிகளை பேரா. வவேசு, மு. இளங்கோ, புதுவை அறிவுநம்பி, ...  விரிவாகப்  பதிவு செய்ய வேண்டுகிறேன். பேரா. கவிஞர் வ. வெ.  சுப்பிரமணியன் கலந்துகொள்கிறார். அவர் தலைமைக் கவிதை வாசிக்கிறார்.

பாரதியார் சங்கத் தலைவர் ரா. காந்தி எங்கள் ஊர்க்காரர். கொழும்புத் தமிழ்ச் சங்க வேண்டுகோளை ஏற்று பாரதியார் தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் விழாக்களை நடத்தலாம். அமெரிக்காவில் பெட்னா, தமிழ்நாடு அறக்கட்டளை, ... போன்றன ஆண்டுதொறும் கலைவிழாக்களை பல லட்சம் $-ல் சினிமா, டிவி தமிழ் அறிஞர்களை அழைத்து எடுத்துவருவதை மாதிரியாகக் கொண்டு இலங்கை நகரங்களில் செயல்படலாம் - கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் போன்ற நகரங்களுக்கு தமிழ்நாட்டுத் தமிழ்ப் பேராசிரியர்கள், அறிஞர்கள், கலைவாணர்கள் வருகைதரப் பெருவாய்ப்பாக இவ்விழாக்கள் அமையும்.

ஈழத் தமிழர்கள் டொராண்டோ பல்கலையில் - பேரா. எம்.ஏ. நுஃமான் நண்பர் மகாகவியின் மகன் சேரன் போன்றோர் சேர்ந்து நடத்தும் ஆய்வு மாநாடுகள் ஆண்டுதொறும் நன்கு நடக்கின்றன.  திராவிட மொழியியல், சிந்து ஆய்வு, சங்க ஆராய்ச்சி போன்றன சிறக்க டொராண்டோ  பல்கலையில் திராவிடாலஜிக்கு ஒரு பேராசிரியர் பீடத்தை தமிழர்கள் அமைத்திடல் வேண்டும். தேவையான பணம் பெட்னா,  டிஎன்எஃப், ஈழ தமிழர் சங்கங்கள் கொடுக்கும் என நம்புகிறேன். தமிழ்நாட்டில் தமிழாய்வுகள் பெரிதாக இல்லை. இருந்த ஆய்வேடுகளும் அனேகமாக இலாது  போய்விட்டன.  இலங்கை நாட்டில் இக்குறைகளுக்கு நிவாரணம் வரும் என எதிர்பார்க்கலாம். ஆண்டுதொறும்  இலங்கைத் தலைநகர் கொழும்பில், யாழில், மட்டக்களப்பில் தமிழ்ச் சங்கத்தார் நடாத்தும் ஆய்வுவிழாவில்  தமிழ்நாட்டு  அறிஞர்கள் கட்டுரை படித்தால் பெருமை என்ற நிலை ஏற்படல் வேண்டும்.
ஆய்வேடுகள் மாநாடு முடிந்தபின் இணையத்தில் ஏற்றப்பட்டால் உலகெங்கும் செம்மொழி ஆய்வு  சிறக்கும்.

இந்தியா போற்றும் ஜனாதிபதி மேதகு. கலாம் அவர்களின் யாழ் விஜயத்தின் போது  தமிழக, ஈழ நாட்டு உறவுகள் மேம்பட ஆலோசனைகள் வழங்கினார்கள். தமிழ்நாடு,  ஈழம் உறவுப்பாலமும், கடற்பாலமும் உருவாக வேண்டும். படகு, கப்பல்  போக்குவரத்தால்  இருபுறமும் வாழும் மக்கள் எளிதில் சென்றுவர வழிகள் பெருகவேண்டும். பேரா. எம். ஏ. நுஃமான் பாரதியை ஆராய்ந்தவர். பாரதியார் சங்கமும்,  கொழும்பு தமிழ்ச்  சங்கமும் அவர் தலைமையில் நடத்தும் முதல் மாநாடு ஆய்வுக்கு உரிய இடம்
அளிப்பதாக! ஐரோப்பா, அமெரிக்கா செல்லுதல் தமிழ்நாட்டு தமிழறிஞர்களுக்கு  சற்றுக் கடினமான செயல் (விசா, செலவு, இன்னபிற). இலங்கை மாநாடுகள்  ஆண்டுதோறும் நிகழ்ந்தால் பங்குபெற்று தங்கள் அரிய ஆய்வுகளை வெளியிட  ஒரு மேடையாக திகழ வாய்ப்புகள் மிகுதி. ஈழத் தமிழர்கள் இந்த முன்னெடுப்பைச் செய்தால் தமிழ்த்தாய் மகிழ்வாள்.

நா. கணேசன்

-------------------

வீரகேசரி, சூன் 1, 2012

சென்னை பாரதியார் சங்கம் இணைந்து
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்ப் பெருவிழா!

பாரதியார் சங்கத்தின் தலைவர் - கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில்!



யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மேதகு அப்துல் கலாம்:


யாழ் சர்வகலாசாலையில் ஜனாதிபதி கலாம்:


ஜூன் 2, 3, 4 ஆம் திகதிகளில் வரலாறு காணாத பெருவிழாவை கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடத்தவுள்ளது. 
இந்தியா, இங்கிலாந்து, டென்மார்க், அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளிலிருந்தும் பேராளர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்கவுள்ளார்கள். பகலில் ஆய்வரங்குகளும், மாலையில் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறவுள்ளன. 
ஆய்வுக் கட்டுரைகளை அரங்கேற்றுவதற்காக பதினேழு ஆய்வரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. “இலக்கியம் சகம் இன்றும் நாளையும்' என்னும் தொனிப் பொருளில் பல்  துறை சார்ந்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றன. கவிதை, புனை கதை, கணினித் தமிழ், ஊடகம், நாட்டாயல், பெண்ணியம், இலக்கியக் கோட்பாடுகளும் திறனாய்வும், நாடகம் , பல்துறை, மொழி பெயர்ப்பு , சிற்றிதழ்கள், சிறுவர் இலக்கியம் என்று துறை சார்ந்து நூற்றிற்கும் மேற்பட்டோர் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கவுள்ளனர். 
பதினேழு அரங்குகள் ஒவ்வொன்றுக்கும் இருவர் இணைத் தலைவர்களாகவும், மேலும் இருவர் மதிப்பீட்டாளர்களாகவும், ஒவ்வொரு அரங்குக்கும் ஒருவர் இணைப்பாளராகவும் இருந்தும் செயற்படுவார்கள். முன்னூறுக்கு மேல் பேராளர்கள் பங்கு கொள்ளும் உலகத் தமிழ் இலக்கிய விழாவில் சுமார் இரு நூறு பேராளர்கள் ஆய்வரங்குகளில் பங்கு கொள்ள இருப்பது பெரும் சாதனையாகும். பேராசியர்கள், கலாநிதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் துறை சார்ந்தோர், ஆய்வாளர்கள் என்று இலக்கிய விழாவில் சங்கமமாக இருப்பது பெருமை என்பதுடன், ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவும், அன்னியோன்னியமான உறவுகளைப் பேணவும் பேருதவியாக அமைந்துள்ளது. 
உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டின் ஒரு அங்கமாக 2, 3, 4 ஆம் திகதிகளில் மாலை 6.00 மணிக்கு “கலையரங்கம்' என்னும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார்கள். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் சங்கமிக்கக் கூடியதாக நிகழ்ச்சிகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. 
02. 06. 2012 சனிக்கிழமை மாலை கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் மு. கதிர்காமநாதன் தலைமையில் நடைபெறும் விழாவில் மூத்த எழுத்தாளரும் மல்லிகை ஆசிரியருமாகிய டொமினிக் ஜீவா மங்கள விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைப்பார். தொடக்கவுரையை பேராசியர் சோ. சந்திரசேகரன் நிகழ்த்துவார். முக்கிய நிகழ்ச்சியாக விஸ்வநாதக் குருக்கள் சிவகுமார் சர்மாவின் மென்டலின் வாத்திய விருந்து அணி சேர் கலைஞர்களுடன் இடம்பெறும். வரவேற்புரையை ஆ. குகமூர்த்தி வழங்க, நன்றியுரையை த. கோபால கிருஷ்ணன் பகருவார். 
கொழும்புத் தமிழ்ச் சங்க துணைச் செயலாளர் தம்பு சிவசுப்பிரமணியம் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க, திருமதி நிலானி கோபிசங்கர் தமிழ் வாழ்த்தினை இசைப்பார். இறுதியாக சங்க கீதத்துடன் முதல் நாள் கலையரங்கம் நிறைவுறும். 
இரண்டாம் நாள் 03. 06. 2012 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்ச்சிகள் திருமதி இராஜமனோகரி புலேந்திரனின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகும். 
தமிழ் வாழ்த்தினை திருமதி சொர்ணலதா பிரதாபன் இசைப்பார். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் நிதிச் செயலாளர் செல்வ திருச்சந்திரன் வரவேற்புரை வழங்குவார். தலைமையுரையினை மு. கதிர்காமநாதன் செப்ப, பேராசியர் ஆசி. கந்தராசா (அவுஸ்திரேலியா) தொடக்கவுரையை வழங்கிச் சிறப்பிப்பார். 
கலையரங்க நிகழ்ச்சியில் “வீணை விருந்து' இடம்பெறும். இந்திர குமார சிவம் அவரது மாணவிகளும் பங்கு கொள்வர். மேலும் பேராசிரியர் சி. மௌனகுரு வழங்கும் “இராவணேசன்' நாடகம் மேடையேற்றப்படும் க. க. உதயகுமார் நன்றியுரை வழங்குவார். திருமதி. சுகந்தி ராஜகுலேந்திரா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவார். சங்க கீதத்துடன் இரண்டாம் நாள் நிகழ்ச்சி கள் நிறைவுபெறும். இன்றைய நாள் நிகழ்ச்சியில் முக்கிய அங்கமாக “கலை இலக்கிய வாதிகள் கௌரவிப்பு இடம் பெறும். 
 சிற்பி. சிவ. சரவணபவன், திருமதி. ந. பாலேஸ்வரி, கல்வயல் வே. குமாரசாமி, சக்தி. பால ஐயா, அன்புமணி இரா. நாகலிங்கம், எஸ். ஆர். எஸ். ஹஸன் மௌலானா, ஆசை இராசையா ஆகியோர் கௌரவம் பெற இருக்கிறார்கள். கௌரவிப்பு உரையினை ஜின்னா ஷரிபுத்தீன் வழங்குவார்கள். கொழும்புத் தமிழ்ச் சங்கக் காப்பாளர் பேராசிரியர் அ. சண்கமுகதாஸ் நிறைவுரையை முன்வைப்பார்கள். 
கலையரங்கம் நிகழ்ச்சியில் சங்கீத வித்துவான் என். எஸ். வாகீசன் அணி சேர் கலைஞர்களுடன் வீணை இசை வழங்குவார். அதைத் தொடர்ந்து நாட்டிய மணி திவ்வியா சிவநேசனும் அவரது அபிநய சேத்ரா நடனப் பள்ளி மாணவர்களும் இணைந்து நாட்டிய விருந்து அளிப்பார்கள். 
கொழும்புத் தமிழ்ச்சங்கப் பொதுச் செயலாளர் அ. இரகுபதி பாலஸ்ரீதரன் நன்றியுரை வழங்க, நிகழ்ச்சித் தொகுப்பினை எஸ். எழில்வேந்தன் வழங்குவார். சங்க கீதத்துடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுபெறும்.   
எழுதியவர்: தம்பு சிவா, வீரகேசரி, சூன் 1, 2012

-------------------------------

கொழும்பைப் புதையுங்கள், பாரதியை வாழவிடுங்கள் - இலங்கை மாநாட்டு சர்ச்சை

 

மக்களைக் கொன்றுவிட்டால், அவர்கள் பேசிய மொழி வாழுமா?- இது அபத்தமான கேள்வி என்றால் கொழும்பில் நடக்கும் மாநாடும் அத்தகைய அபத்தம்தான்!
சென்னையில் உள்ள பாரதியார் சங்கமும், கொழும்பு தமிழ்ச் சங்கமும் இணைந்து இலங்கைத் தலைநகர் கொழும்பில், பாரதி விழாவையும் உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டையும் ஒருசேர நடத்துகின்றன.்

இதில் கலந்து​கொள்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து தமிழறிஞர்கள் சிலர் சென்றதற்கு வைகோ கண்டன அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் தலைமையில் 50 படைப்பாளிகள் கண்டனம் தெரிவித்து, விழாவையும் மாநாட்டையும் புறக்கணிக்கக் கோரி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.

'ராஜபக்சே அரசின் திட்டமிட்ட தமிழினப் படுகொலையையும், தமிழர்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளையும் பெரும்பாலான உலக நாடுகள் கண்டித்து வருகின்றன. இலங்கையைக் காப்பாற்ற இந்தியா தொடர்ந்து முயன்றாலும், உலக அரங்கில் வலுவான எதிர்ப்பு அலை அடிக்கிறது. இந்த நிலையில், 'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவச் செய்வோம்’ என்ற முழக்கத்துடன் ராஜபக்சேவின் தலைநகரில் இந்திய அதிகாரிகளைக் கொண்டு விழா எடுப்பது, பாரதி என்கிற போராளிக் கவிஞனின் புகழுக்கும் பெருமைக்கும் களங்கத்தை ஏற்படுத்தும். இனவெறி இலங்கை அரசின் கீழ் தமிழர்கள் இயல்பான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உலக அரங்கில் ஏற்படுத்துவதைத் தவிர, இந்த விழா வேறு எந்த விளைவையும் ஏற்படுத்தாது. கொல்லப்பட்ட எம் சொந்தங்களுக்கு தாய்த் தமிழகம் ஒருபோதும் துரோகம் செய்யாது என்பதைப் பாரதி அன்பர்கள் நிரூபிக்க வேண்டும். கொல்லப்பட்ட தமிழ்ச் சொந்தங்களுக்கு, மனச்சாட்சியுள்ள எழுத்தாளர்​களாகிய நாங்கள் ஒரு போதும் துரோகம் இழையோம் என உறுதி பூணுகிறோம்’ என்கிறது அறிக்கை.   

இந்த அறிக்கையில் புலவர் புலமைப்பித்தன், இயக்குநர்கள் ஆர்.சி.சக்தி, புகழேந்தி தங்கராஜ், கவிஞர்கள் காசி ஆனந்தன், இன்குலாப், புவியரசு, அறிவுமதி, தாமரை, மணிகண்டன், எழுத்தாளர்கள் பா.செயப்பிரகாசம், தமிழருவி மணியன்,  கோவை ஞானி, அழகியபெரியவன் சந்திரா, தி.பரமேசுவரி ஓவியர்கள் வீர.சந்தானம், டிராட்ஸ்கி மருது உள்ளிட்ட 50 படைப்பாளிகள் கையெழுத்துப் போட்டு இருக்கின்றனர்.

இந்தக் கண்டன அறிக்கையை முன்னின்று தயாரித்த எழுத்தாளர் பா. செயப்​பிரகாசத்தை அணுகினோம்.

''இலங்கையின் மனித உரிமை மீறல்கள், மீள்குடியமர்த்தல், மறுவாழ்வுப் பணிகள் குறித்து வரும் அக்டோபர் மாதம்  ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. கூட்டத்தில் மீண்டும் பரிசீலிக்கப்பட இருக்கிறது. அப்போது, அங்கே எல்லாம் சரியாக இருக்கிறது. இலக்கிய விழாக்கள் நடத்தும் அளவுக்குத் தமிழர்கள் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள் என்று உலகுக்குச் சொல்வதற்காகவே இந்த விழாக்கள் நடத்தப்படுகின்றன. இலங்கை அரசும் இந்தியத் தூதரகமும் இணைந்து இந்த மாநாட்டுக்கு உதவுகின்றன. தமிழ்நாட்டில் இருந்து வழக்கறிஞர் காந்தி சென்றிருக்கிறார். இவர் ஒரு காங்கிரஸ்காரர். இவர்தான் பாரதியார் சங்கத்தின் தலைவரும்கூட. கல்கி தொடங்கிய சங்கம் இது. அதன்பின், ம.பொ.சி., பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோர் இதற்குத் தலைவராக இருந்திருக்கின்றனர். விடுதலை குறித்து பாரதி என்ன கருத்து வைத்திருந்தார் என்பதை அறிந்த பாரதியார் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு, மற்ற நாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? கொழும்பில் உள்ள தமிழ்ச் சங்கத்துடன் இணைந்துதான் இதை நடத்த வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.

இலங்கையில் உள்ள சில எழுத்தாளர்கள், கொழும்பு தமிழ்ச் சங்கம் இலங்கை அரசின் ஆதரவில் இந்த மாநாட்டை நடத்தவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால், இலங்கை அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த நிகழ்வையும் நடத்த முடியாது என்பதுதான் அங்கே உள்ள உண்மை நிலைமை. கவியரங்கம், பாராட்டு விழா போன்றவற்றை வேண்டுமானால் சுதந்திரமாக நடத்த முடியும். இதுபோன்ற மாநாடுகளை இலங்கை அரசின் ஒப்புதல் இல்லாமல் நடத்தவே முடியாது என்பதுதான் நிலைமை.

2010-ல் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நாட்களில் நான் இலங்கை சென்று இருந்தேன். அப்போது அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், 'இலங்கை அரசின் ஒப்புதலோடுதான் இந்த மாநாடு நடக்கிறது’ என்று சொன்னார்கள். ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் சிவத்தம்பியே பின்னாளில், 'இந்த மாநாட்டை வேறு நாட்டில் நடத்தியிருக்க வேண்டும்’ என்று கருத்துக் கூறினார்.

சாக்ரடீஸுக்கு மரண தண்டனை விதிக்கப்​படுவதற்கு முன்னால் நீதிபதி அவரிடம், 'உன் கருத்துக்களைத் திரும்பப் பெற்று உயிரைக் காப்பாற்றிக்கொள்ளப்​ போகிறாயா? அல்லது உன் உயிரைவிட்டு உன் கருத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ளப் போகிறாயா?’ என்று கேட்டார். சாக்ரடீஸின் மனைவி உட்பட சுற்றத்​தார்கள் அனைவரும், 'உயிர் முக்கியம். ஆகவே கருத்துக்களைத் திரும்பப் பெறுங்கள்’ என்றனர். ஆனால், சாக்ரடீஸ் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் 'என்னைப் புதையுங்கள். என் கருத்துக்கள் உயிர் வாழட்டும்’ என்றார். நான் அந்த நீதிபதி போல கேட்க விரும்புகிறேன். 'பாரதியைப் புதைத்துவிட்டு கொழும்பை வாழவைக்​கப்​போகிறீர்களா? அல்லது கொழும்பைப் புதைத்து பாரதியை வாழவைக்கப் போகிறீர்களா?’ என்பது​தான். என்ன செய்யப்போகிறார்கள் பாரதி அன்பர்​கள்?
 

நன்றி: ஜூனியர் விகடன்

 --------------------------------------------------------------------

 

பாரதிக்கு முதன்மை வழங்கும் கொழும்பு தமிழ்ச் சங்கம் போல் வேறெங்குமில்லை. -இந்தியக் கவிஞர் அறிவுநம்பி!

மக்கள் விடுதலைக் கவிஞன் பாரதிக்கும் அவன் படைப்புகளுக்கும் முன்னுரிமை அளித்து, அவனை முதன்மைப் படுத்தி அவனுடைய படைப்புக்களை பொக்கிஷங்களாக பேணிப் பாதுகாக்கும் கொழும்பு தமிழ்ச் சங்கத்தைப் போல, உலகில் வேறெங்கும் ஒரு அமைப்பையோ அல்லது நிறுவனங்களையோ நான் பார்த்ததில்லை என்று, இந்தியாவின் புதுவை பல்கலைக்கழக பேராசிரியரும் கவிஞருமான முனைவர் அ.அறிவுநம்பி தெரிவித்துள்ளார். கொழும்பு தமிழ்ச் சங்கமும், இந்தியாவின் சென்னை பாரதியார் சங்கமும் இணைந்து நடாத்திய பாரதியார் விழா நேற்று காலை கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமாகியது. அவ்விழாவில் பங்கேற்று கருத்துரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எட்டயபுரத்துக் கவிஞன் பாரதிக்கு விழாவெடுக்கும் இந்நிகழ்வில் முனைவர் அறிவுநம்பி மேலும் தனது உரையில், "பாரதி வாழ்ந்த காலங்களில் சங்ககாலப் பாடல்கல்களின் எடுகோள்களான காதல், வீரம் போன்றனவற்றைத் தான் நம்முடைய மூத்த கவிகள் பாடிக்கொண்டிருந்தார்கள். ஆனால், மக்களின் பாடுகளையும் மனித அவலங்களையும் வாழ்க்கைக் கோலங்களையும் எடுத்துரைக்கும் பாடல்களை பாரதிதான் முதலில் கண்டுகொண்டு தன்னுடைய படைப்புக்களில் வெளிப்படுத்தினான். அன்னியரின் ஆதிக்கத்தினும் அமிழ்ந்திருந்த இந்திய நாடும் மக்களும் அனுபவித்த கொடிய துன்பங்களில் இருந்தும், அறியாமைக்குல்லிருந்தும் அவர்களை வெளியில் எடுப்பதற்கு பாரதி தன்னுடைய பாடல்களின் மூலம் முயற்சி செய்து வெற்றி கண்டான். அப்படிப் பட்ட பாரதிக்கு இந்தியர்கள் கொடுத்த முக்கியத்தை விட, இலங்கையில் கொழும்பு தமிழ்ச் சங்கம் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை இங்கு வந்தவுடனேயே நாங்கள் கண்டு பூரித்துப் போனோம். தமிழ்ச் சங்கத்தின் அலுவலகத்தினுள் நுழைந்தவுடனேயே தென்படுவது பாரதியின் இரு கரங்கள் கூப்பிய படம் தான். அப்போது எங்கள் தத்துவ புரட்சிக் கவிஞன் பாரதிக்கு இங்கு கொடுத்துள்ள முக்கியத்துவம் எங்கள் அனைவருக்கும் உள்ளத்தை களிப்பூட்டும் நிகழ்வாக அமைந்தது. அத்தோடு எழுபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழுக்கு பணிசெய்து வரும் தமிழ்ச் சங்கத்தின் பணியினையும் அது பெற்றிருக்கும் முக்கியத்துவத்தையும் பார்த்து வியப்படைந்தோம். இதனை இப்போது நல்வழிப் படுத்தி கொண்டுனகர்த்தும் இப்போதைய கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவர் மு. கதிர்காமநாதன் அவர்களுக்கு எமதி சென்னை பாரதியார் சங்கத்தின் சார்பிலும், இந்திய மக்கள் சார்பிலும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அவருடைய உரையில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த பாரதி விழாவில், இந்தியாவின் சென்னையிலிருந்து வருகை தந்திருந்த கவிஞர்களினால் பார்போற்றும் பாரதி என்னும் தலைப்பில் கவிதாஞ்சலியும், பேராசிரியர் முனைவர் இரா.சேதுவின் தலைமையில் புதியன பாடிய புலவன் எனும் தலைப்பில் கருத்தரங்கமும், இந்திய பெண் கவிங்கர்களால் பாரதியின் கவிதைகளில் உள்ளம் கவர்ந்த ஓர் அடி என்ற மகளீர் முற்றம் நிகழ்வும், இரு எழுத்தாளர்களின் நூல் வெளியீடும் அத்தோடு பாரதியின் புகழ் பரப்புனர்களை கௌரவிக்கும் முகமாக பாரதி விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் வளர்க்கும் நம்மவர்களோடு இந்தியாவைச் சேர்ந்த பல பேராசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் தமிழ்த் துறை ஆர்வலர்களோடு மக்களும் ஊடகத் துறையினரும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments: