ஆஷ் கொலை - வாஞ்சிநாதன் - நூறாண்டு நிறைவு

சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேய கலெக்டர் ஆஷ், சுட்டுக் கொல்லப்பட்ட நூறாவது ஆண்டையொட்டி, சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் குடும்பத்துக்கு, அயர்லாந்தில் வசிக்கும் ஆஷ் குடும்பத்தினர் உருக்கமான கடிதம் எழுதியுள்ளனர். "பழையவற்றை மறந்து சமாதானத்துடன் வாழ்வது முக்கியமானது' என்று, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியில் நெல்லைக் கலெக்டராக இருந்த ராபர்ட் வில்லியம் ஆஷை, வாஞ்சிநாதன் 1911 ம் ஆண்டு ஜூன் 17 ல் காலை 10.30 மணிக்கு, நெல்லை மாவட்டம் மணியாச்சியில் சுட்டுக் கொன்றார். சுதந்திரப்போராட்டத்தில் முக்கிய நிகழ்வாக இது பதிவானது. இந்த நிகழ்ச்சிக்குப்பின் ஆஷின் குடும்பத்தினர் சொந்த நாட்டுக்குச் சென்று விட்டனர். கொல்லப்பட்ட கலெக்டர் ஆஷ்க்கு இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்கள். இதில் ஒரு மகன் இரண்டாம் உலகப்போரில் மரணமடைந்தார். இரண்டு மகள்களும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஒரு மகன் அயர்லாந்து நாட்டில் டப்ளின் நகரம் அருகே இக்ளோ என்ற ஊரில் குடும்பத்துடன் வசித்தார். அவரது மகன் அதாவது ஆஷின் பேரன் ராபர்ட் ஆஷ். அயர்லாந்தில் வக்கீலாக பணியாற்றுகிறார். சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் குறித்து, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு செய்த பேராசிரியர் எ.ஆர். வெங்கடாசலபதி கடந்த 2006 ம் ஆண்டு ஆஷின் பேரன் ராபர்ட் ஆஷை சந்தித்து, ஆஷ் கொலை தொடர்பான பல்வேறு ஆவணங்களைப் பெற்றார்.

இன்று ஆஷ் கொலையின் நூறாவது ஆண்டு நினைவுநாள். இதையொட்டி வாஞ்சிநாதன் குடும்பத்துக்கு, சுட்டுக்கொல்லப்பட்ட ஆஷின் பேரன் ராபர்ட் ஆஷ் ஓர் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதம் பேராசிரியர் வெங்கடாசலபதி வழியாக அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

துயரமும், பெருமிதமும் ஒருங்கே அமைந்த இந்த நாளில், ராபர்ட் வில்லியம் ஆஷ் அவர்களின் பேரனும் கொள்ளுபேத்திகளுமாகிய நாங்கள், வாஞ்சி அய்யரின் குடும்பத்துக்கு ஆறுதலையும், நட்பையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த கடிதத்தை எழுதுகிறோம். லட்சிய நோக்கமுள்ள அரசியல் செயல்பாட்டாளர் வாஞ்சிநாதன். அவரது விடுதலை வேட்கை எங்கள் தாத்தா ஆஷைக் கல்லறைக்கு அனுப்பியது. அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டவர்கள், அவர்கள் ஆட்சியாளர்கள் ஆனாலும், ஒடுக்கப்படுபவர்கள் ஆனாலும், பெரும் பிழைகளைச் செய்யும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. இப்போது உயிர் வாழும் வாய்ப்பை பெற்றுள்ள நாம், பழையவற்றை மறந்து சமாதானத்துடன் வாழ்வது முக்கியமானது. அன்புடன், ராபர்ட் ஆஷ் குடும்பத்தினர், அயர்லாந்து.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்டு நூறு ஆண்டுகளுக்குப்பின், இப்படி ஓர் கடிதம் எழுதப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

------------------------------

தொ. மு. சிதம்பர ரகுநாதன், பாரதி காலமும் கருத்தும், 1982, பக். 403.
ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிய ‘ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்’, 1986

இந்தப் புத்தகங்களில் வாஞ்சிநாதன் கலெக்டர் ஆஷைச் சுட்டுக் கொன்றபோது சட்டைப்பையில் வைத்திருந்த கடிதம் வெளியாகியுள்ளது. ஆஷைச் சுட்ட பின்பு நடைமேடையில் ஓடிய அந்த இளைஞர் அங்கிருந்த கழிவறைக்குள் புகுந்துகொண்டார். வெட்டவெளியில் வேனிற்காலக் காற்றின் இரைச்சலில் கைத்துப்பாக்கியின் வேட்டொலி எவருக்கும் கேட்கவில்லை. வாயில் துப்பாக்கி வைத்துச் சுட்டுகொண்டு இறந்தபோன இளைஞரின் சட்டைப் பையில் கீழ்க்காணும் கடிதம் கிடைத்தது. 7.6.1911 அன்று ஆஷ் துரையைக் கொலை செய்து விட்டுத் தன்னையே சுட்டுக்கொண்டு இறந்த வாஞ்சிநாதனின் சட்டைப்பையில் பாரதியின் மறவன் பாட்டும், இக் கடிதமும் இருந்தன. எனவே இக்கொலைக்கு பாரதியாரும் உடந்தை என அரசு குற்றம் சாட்டியது. பாரதியைப் பிடித்துக் கொடுப்பவருக்கு ரூ.1000 பரிசு என அரசு அறிவித்தது. கோமாமிசத்தைப் புசிக்கும் மிலேச்சர்கள் என்று கி. மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் வடமொழி இலக்கியம் முழுக்கப் பரவலாகக் காணக் கிடைக்கிறது. வேளாண்சமுதாயம் இவ்வாறு மேட்டிமைக் குடிகள் பசுமாமிசம் விலக்கக் காரணம் என்று வெள்ளகால் ப. சுப்பிரமணியனார் போன்ற தமிழறிஞர்கள் 19-ஆம் நூற்றாண்டில் விளக்கியுள்ளனர். சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், அப்பர், மாணிக்கவாசகர், காளமேகம், டச்சு, ஒல்லாந்தர் கால யாழ்ப்பாணத் தமிழ் இலக்கியங்கள், தில்லை ஞானப்பிரகாசர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., போன்ற தமிழ் ஆவணங்களிலும் 2000 ஆண்டுகளாய் இக் குறிப்புகளைக் காணலாகும்.7.6.1911 - வாஞ்சிநாதனின் கடைசிக் கடிதம்:

ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக்கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்துவருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்துவருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை (George V) முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும்பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்துகொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும்பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமை.

இப்படிக்கு,

R. வாஞ்சி அய்யர்

R. Vanchi Aiyar of Shencotta

ஆதாரம்:
முனைவர் ஆ. இரா. வேங்கடாசலபதி, ஆஷ் அடிச்சுவட்டில் ...
http://www.kalachuvadu.com/issue-118/page12.asp

வாஞ்சி, ஆஷ், வேங்கடாசலபதி:
http://www.jeyamohan.in/?p=4488

பிபிசி பேரா. சலபதி செவ்வியும், ஆஷ் படங்களும்:
http://www.ndpfront.com/?p=21599

2 comments:

Rathnavel said...

நல்ல பதிவு.
செய்திதாள்களில் வந்தது. எல்லோரும் அறிய கொண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள்.
நன்றி.

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி...